காலையில் கைப்பேசி வாயிலாக அவனிடம் அவள் பேசும் போது பயந்து போனவளாகத்தான் பேசியிருந்தாள். வர வேண்டாம் என அவள் சொல்லியிருந்தால் கூட கண்டிப்பாக வந்திருப்பான்.
“தெரியலை பார்த்தி, பழையபடி நல்லா நடந்திடுவானா நிவாஸ்?” எனக் கேட்டாள்.
நிவாஸின் நிலை என்னவென அவனுக்கு ஏதும் தெரியாது. ஆனாலும், “கண்டிப்பா நடந்திடுவாங்க ஆச்சி!” என உறுதியாக சொன்னான்.
தலையாட்டிக் கொண்டவள், “இந்த ரிலேஷன்ஷிப் எல்லாம் ரொம்ப கஷ்டம் போல. நிவாஸுக்கு எந்த கெட்ட பழக்கமும் இருந்தது இல்லை, டிரிங்ஸ் பண்ணிட்டு டிரைவ் வேற பண்ணிருக்கான். நல்ல வேளை வேற யாரையும் இடிச்சு வைக்காம போனான்” என்றாள்.
போலீஸ் கேஸ் ஆகவில்லையா என விசாரித்தான் பார்த்திபன். அதையெல்லாம் அப்பா பார்த்துக் கொண்டதாக சொன்னாள்.
இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்ட ஆஷுதோஷுக்கு எரிச்சலாக இருந்தது. இவ்வளவு தூரம் பார்த்தியும் அவளிடம் பேசியதில்லை, இன்று இக்கட்டான நிலையில் அவள் நிற்க, அவளின் ஆறுதலுக்காகவும் ஓரளவாவது அவளை இயல்பாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே பேசிக் கொண்டிருந்தான்.
பார்த்திபன் பற்றி ஆஷுதோஷுக்கு தெரியும் என்றாலும் முன் எப்போதோ அவனை பார்த்ததோடு சரி. இப்படி நெடு நெடுவென ஆஜானுபாகுவாக மிடுக்கான தோற்றத்துடன் இருப்பான் என அவர் நினைத்திருக்கவில்லை. அதுவும் சுஹானாவுடன் சேர்ந்து நிற்கும் போது அவருக்கு மிகவும் உறுத்தியது.
ஏற்கனவே மகன் காதல் கொண்டு அதனால் இப்படி ஆகியிருக்க, மகள் விஷயத்தில் சுதாரிப்பாக இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டார். காதலித்து மணம் புரிந்து கொண்ட அவருக்குமே வாழ்க்கை அவர் எதிர் பார்த்த படி அமையவில்லை, ஆதலால் காதல் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது என்பதை விட, காதல் மீதான பயம் அதிகமாகியிருந்தது என சொல்லலாம்.
நிவாஸ்க்கு இரத்தம் ஏற்றப் பட வேண்டும் என சொல்லப் பட்டது. ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்தான். அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒரே இரத்த வகை என்பதால் சுஹானாதான் இரத்த தானம் செய்யவிருந்தாள்.
நேற்று இரவிலிருந்து உறக்கமில்லாமல், அழுது, சரியாக சாப்பிடாமல் என அவளின் பெற்றோர் ஓய்ந்து போயிருந்தனர். மனைவியை பார்த்த ஆஷுதோஷ் மகளுடன் துணைக்கு செல்லுமாறு பார்வையால் அறிவுறுத்தினார்.
காயத்ரிக்கும் நல்ல அலுப்பு, ஆகவே தான் செல்கிறேன் என பார்த்திபன் சொல்லவும் மறுப்பு சொல்லவில்லை. சுஹானாவும் அவனுடன் சென்று விட்டாள். ஆஷுதோஷ் கைப்பேசி அழைப்பில் இருந்ததால் இதை கவனித்திருக்கவில்லை.
சுஹானா இரத்தம் கொடுக்கும் அறைக்குள் செல்லும் முன் அவளின் கைப்பை, கைப்பேசி எல்லாம் பெற்றுக் கொண்டான் பார்த்திபன்.
தைரியமான பெண்தான், முதல் முறை இரத்த தானம் செய்வதால் கொஞ்சம் போல பதற்றம் இருக்கத்தான் செய்தது.
அவள் கலக்கமாக தலையாட்ட, அவனுக்கு என்னவோ போலானது. அவளை காத்திருக்க சொன்னவன் அங்கிருந்த பணியாளரிடம் தான் தானம் செய்யலாமா என கேட்டான்.
நிவாஸ்க்கு உரிய இரத்த வகை அரிது என்பதால் அந்த வகைதான் தானம் செய்யப் பட வேண்டும் என உறுதியாக சொல்லி விட்டார் பணியாளர்.
“பார்த்தி! நானே டொனேட் பண்றேன், ஏற்கனவே உங்களை தொந்தரவு செஞ்சிட்டேன்னு ஃபீலிங்ஸ்ல இருக்கேன், இன்னும் அதிக படுத்தாதீங்க, பேசாம போய் உட்காருங்க” என கடிந்து கொண்டாள் சுஹானா.
அவன் வெளியில் அமர்ந்திருந்தாலும் அடிக்கடி அவளை எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.
முதலில் புன்னகைத்தவள் பின் கண்டமாக பார்த்தாள். சமாளிப்பாகவும் கெஞ்சுதலாகவும் பார்த்து அவளை அமைதி படுத்தினானே ஒழிய, அவளை காண்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
மகள் பார்த்தியுடன் சென்ற விவரம் அப்போதுதான் ஆஷுதோஷுக்கு தெரிய வந்தது. மாமனார் மாமியார் முன்னிலையிலேயே மனைவியை வெளிப்படையாக கடிந்து கொண்டவர் மகளை தேடிக் கொண்டு வந்து விட்டார்.
செயல்முறை முடிந்த பிறகு சோர்வாக இருப்பதாக கூறி அங்கேயே அமர்ந்து விட்டாள் சுஹானா. அங்கே கொடுக்கப் பட்ட பழச்சாறை வேண்டாம் என அவள் சொல்ல, பருகுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தான் பார்த்திபன்.
பார்த்தியின் தோளில் மகளின் கைப்பை, இன்னொரு கையில் பழச்சாறு, குழந்தைக்கு சொல்வது போல அவளிடம் கெஞ்சி கெஞ்சி பருக சொல்லிக் கொண்டிருந்தான். அந்தக் காட்சி ஆஷுதோஷுக்கு பயத்தை வரவழைத்தது.
இறுகிய முகத்துடன் அவர்களின் பக்கத்தில் சென்றார். அவரை பார்த்த பார்த்தி எழுந்து நின்றான்.
பழச்சாறை தான் வாங்கிக் கொண்ட ஆஷுதோஷ், “மெடிசின்ஸ் வாங்கி வர சொல்றாங்க, போ மேல போய் காயத்ரிகிட்டு கேட்டு என்ன ஏதுன்னு பாரு” என உடைந்த தமிழிலில் அவனை விரட்டினார்.
உதவியாக கேட்டிருந்தால் தவறாக தெரிந்திருக்காது. அதிகாரமாக வேலை ஏவும் தொனியில் பேசியிருந்தார். பார்த்திபனுக்கும் முகம் மாறத்தான் செய்தது, ஆனாலும் சரியென தலையாட்டியவன் சுஹானாவின் கைப்பையை அவளிடம் ஒப்படைத்து விட்டு அகன்றான்.
“இது சரி கிடையாது டாட், பார்த்திகிட்ட இவ்ளோ மோசமா நடந்துகிட்டீங்களே, நீங்களா இப்படி?” என இந்தியில் ஆதங்கப் பட்டாள் சுஹானா.
“எப்படி நடந்துகிட்டேன்? உன் தாத்தா பாட்டிக்கு உதவியா வந்திருக்கிறவன் அவன். நம்மகிட்ட வேலை பார்க்கிறவன் கூட இவனை விட அந்தஸ்த்தா இருக்கான். ரொம்ப ஈஸியா உன் பக்கத்துல உட்கார்ந்திருக்கான், ஒரு மரியாதை வேணாம்” என்ற தந்தையை திகைப்பாக பார்த்தாள் சுஹானா.
“ஜுஸ் குடி!” என அவர் அதட்டவும் இறுகிப் போன முகத்துடன் மறுத்தவள், “ரொம்ப மாறிப் போயிட்டீங்க டாட்” என குறை பட்டாள்.
“எல்லாரும் சேர்ந்து மாற வைக்குறீங்க” என அவரும் வேதனையாக சொன்னார்.
பிள்ளைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர், நிவாஸ் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர் சொல்லும் வரை அவரின் உடலில் ஒரு வித நடுக்கம் இருந்து கொண்டேதான் இருந்தது. இரவெல்லாம் அவரின் தவிப்பை அருகிலிருந்து பார்த்திருந்தாள் சுஹானா.
தற்போதைய அவரின் மனநிலையை கருத்தில் கொண்டவள் சற்றே இயல்பாகி, பழச்சாறை பருகினாள்.
வலி ஏதும் இல்லையே என அக்கறையாக கேட்டவருக்கு பதில் சொன்னாள். மகளின் தலையை தடவிக் கொடுத்தவர், “கொஞ்ச நேரத்துல தாத்தா பாட்டியோட வீட்டுக்கு போ, நல்லா ரெஸ்ட் எடு, அம்மாவையும் அழைச்சிட்டு போ, இங்க நான் பார்த்துக்கிறேன்” என்றார்.
சம்மதமாக தலையாட்டிக் கொண்டாள் மகள்.
காயத்ரியிடம் வந்து என்ன மருந்து வாங்க வேண்டும் என கேட்டிருந்தான் பார்த்திபன். எதுவும் வாங்க வேண்டாமே என அவர் சொன்னதிலேயே ஆஷுதோஷின் மனக் கிடங்கை புரிந்து கொண்டான் அவன். என்னை தவறாக நினைக்கிறாரா என கொஞ்சம் வருத்தமாக கூட இருந்தது.
பெரியவர்கள் இருவரும் நிவாஸை பார்த்து வந்தனர். தன் செயலுக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டானாம். விரைவில் குணமாகி விடுவான் என மகள், மருமகனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
அப்பா பேசியதற்காக பார்த்தியிடம் மன்னிப்பு கேட்க சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் சுஹானா. வாய்ப்பு அமையவே இல்லை. அந்த இடத்தை விட்டு நகரவே இல்லையே ஆஷுதோஷ். அப்பாவின் கோவத்தை கிளறி விட விரும்பாதவள் அடிக்கடி பார்த்திபன் பக்கம் திரும்பி பார்வையால் மன்னிப்பை வேண்டினாள். எங்கே அவன் அவள் முகத்தை பார்த்தால்தானே?
சொன்னது போல ஆஷுதோஷ் அங்கே தங்கிக் கொள்ள, மற்றவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். இரவில் தனக்கு உதவி தேவை என சொல்லி பார்த்திபனையும் தன்னுடனே நிறுத்திக் கொண்டார்.
அவனுக்கும் பயணக் களைப்பு இருக்குமே என பெரியவர்கள் நினைத்தார்கள், ஆனால் இந்த நேரம் மாப்பிள்ளையிடம் அவர்களால் ஏதும் சொல்ல முடியவில்லை.
உதவிக்கு ஆட்கள் வேண்டுமென்றால் அவரிடம் வேலை செய்பவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அப்பா ஏன் பார்த்தியை தொல்லை செய்கிறார் என நினைத்த சுஹானாவாலும் அந்த நேரம் அதை வெளிப்படையாக கேட்க முடியவில்லை.
ஆஷுதோஷ் இருக்கையில் அமர்ந்திருக்க, கைகளை கட்டிக் கொண்டு அவர் இடப் போகும் கட்டளைக்காக காத்துக் கொண்டிருப்பது போல நின்றிருந்தான் பார்த்திபன்.
அப்பாவையும் அவனையும் மாறி மாறி பார்த்த சுஹானா, “நின்னுட்டே இருக்க போறீங்களா பார்த்தி? ப்ளீஸ் உட்காருங்க” என்றாள்.
அவள் பக்கம் திரும்பாமலே, சரி என தலையசைத்து அமர்ந்து கொண்டான்.
அப்பாவின் உடல்மொழியும் முக இறுக்கமும் அவளுள் நெருடலை உண்டாக்கியது. அவரின் அருகில் சென்றவள், அவருக்கு மட்டும் கேட்கும் சின்ன குரலில், “பார்த்தி யாரோ இல்லப்பா, ஃபேமிலில ஒருத்தர், ஏதாவது சொல்லி ஹர்ட் பண்ணிடாதீங்க ப்பா” என்றாள்.
அப்படி அவள் சொல்லாமலே இருந்திருக்கலாம், அவன் மீதான அவளின் அக்கறையை அவர் ரசிக்கவில்லை. தாடை இறுக, “லேட் ஆகுது பார், கிளம்பு” என்றார்.
பார்த்திபனை சங்கடமாக பார்த்துக் கொண்டே வெளியேறினாள் சுஹானா.
என்னதான் என் மாமனார், மாமியார், மகள் உன்னை கொண்டாடினாலும் நீ எங்களுக்கு ஒரு வேலைக்காரன் மட்டுமே என்பதை அந்த ஒற்றை இரவில் தன் செயல்கள் மூலமாக பார்த்திபனுக்கு உணர்த்தி விட்டுத்தான் ஓய்ந்தார் ஆஷுதோஷ்.
வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு மிகவும் காயப்பட்டு போனான் பார்த்திபன்.