இதய கிளையில் பூத்தவளே -2

அத்தியாயம் -2

பட்டுச்சேலை காத்தாட 

பருவமேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே 

என்னைக் காதல் வலையில் அடைத்தவளே…

டி எம் சௌந்தரராஜன் குரலில் லயித்திருந்தார் தனசேகரன். அடுத்து சுசீலா அம்மா காதை இறகால் வருட ஆரம்பித்தார். பட்டென பாட்டை நிறுத்தி கணவரை கோவப் படுத்தினார் பத்மாவதி. 

“போதும் நீங்க சரோஜா தேவியோட டூயட் பாடினது, எந்திரிங்க, நாளைக்கு சுஹா வர்றாங்கிறது மறந்து போச்சா?” என சத்தம் போட்டார் பத்மாவதி. 

“அதுக்கும் நான் எந்திரிக்கறதுக்கும் என்ன பத்து சம்பந்தம்?” என அங்கலாய்த்துக் கொண்டேதான் எழுந்தார் தாத்தா. 

வேலை செய்யும் பெண் வளர்மதிக்கு பாட்டி கண் காட்ட, மோப் போட ஆரம்பித்தாள் அவள். 

“ஐயா கோச்சுக்காதீங்க, பாப்பா வர்றப்போ வீடு பள பளப்பா இருக்கணுமாம் அம்மாக்கு” என்றாள் வளர்மதி. 

“வழுக்கி விட்ர போவுது, நான் கிளம்பறேன்” என சொல்லி நடையை கட்டி விட்டார் தாத்தா. 

சுஹானாவுக்கு பிடித்த  சோமசாவும் அதிரசமும் செய்யப்பட்டிருக்க, பாத்திரங்களில் பத்திர படுத்த ஆரம்பித்தார் பத்மாவதி. 

செக்யூரிட்டியுடன் பேசிக் கொண்டிருந்த தாத்தா, இந்த நேரம் பார்த்திபன் பைக்கில் வருவதை பார்த்து குழப்பமானார். 

“என்ன… சார் திரும்ப வந்திட்டாங்க, காலேஜ்ல ஏதும் ஸ்ட்ரைக்கா?” எனக் கேட்ட செக்யூரிட்டிக்கு பதில் தராமல் பார்க்கிங் பக்கம் நடந்தார் தாத்தா. 

பாதி வழியிலேயே தாத்தாவை எதிர் கொண்ட பார்த்திபன் ஆதரவாக அவரது கையை பற்றினான். அதிலேயே மனிதருக்கு பதறி விட்டது. 

“நிவாஸ்க்கு ஆக்சிடென்ட் தாத்தா, உயிருக்கு பயமில்லை, தொடைல கைல ஆபரேஷன் ஆகியிருக்கு, அதனால சின்ன ஆச்சி இங்க வரலை இப்போ” என பார்த்திபன் சொல்ல, அவரின் கண்கள் கலங்கிப் போயின. 

தாத்தாவை சமாதானம் செய்தவன் அவரை அழைத்துக் கொண்டு  லிஃப்ட் வழியாக வீட்டுக்கு வந்தான். 

சுஹானாதான் பெரியவர்களுக்கு நேரடியாக சொல்லாமல் பார்த்திபனுக்கு அழைத்து சொல்லியிருந்தாள். தாத்தா பாட்டியை அழைத்துக் கொண்டு உடனடியாக மும்பை வந்து சேருங்கள் எனவும் கூறியிருக்க, அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தான் பார்த்திபன். 

பாட்டி ஒரே அழுகை. காணொளி அழைப்பில் சுஹானாவை பேச வைத்து, உடனே பயணப் பட வேண்டும் என்பதை எடுத்து சொல்லி, உடைமைகளை பேக் செய்து, அவர்களை சாப்பிட வைத்து என பார்த்திபனுக்கு நேரம் ஓடியது. 

விமானப் பயணத்தின் மூலமாக மூவரும் மும்பை வந்தடைய மாலையாகி விட்டது. 

இவர்களை அழைத்து வர வீட்டு டிரைவரை விமான நிலையம் அனுப்பி வைத்திருந்தாள் சுஹானா. மருத்துவமனை வந்தடைந்ததுமே அவளுக்கு தகவல் சொன்னான் பார்த்திபன். 

தரை தளம் வந்த சுஹானா தாத்தா பாட்டியை காணவுமே ஓடிச் சென்று பாட்டியை அணைத்துக் கொண்டாள். சத்தமில்லாமல் அவள் அழவும் பார்த்திபனுக்கு வருத்தமாகி விட்டது. 

“ஆச்சி… அழக்கூடாது, அப்புறம் அவ பயந்துக்குவா” என தாத்தா கூறவும் அழுகையை நிறுத்தி விட்டு விலகினாள் சுஹானா. 

நிவாஸ் எப்படி இருக்கிறான் என விசாரித்தார் தாத்தா. 

நன்றாக இருப்பதாக சொன்ன சுஹானா, “இப்ப பார்க்க விட மாட்டாங்க, இன்னும் டைம் இருக்கு, ஸாரி… உங்களை இவ்ளோ தூரம் வரவழைச்சு கஷ்டம் கொடுத்திட்டேன், ரொம்ப ஸாரி தாத்தா” என்றாள். 

எந்த கஷ்டமும் இல்லை என சமாதானம் சொன்னார் பாட்டி. 

“சின்ன ஆச்சி ரொம்ப டயர்டா இருக்காங்க போல தாத்தா, அவங்க குடிக்க ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்றான் பார்த்திபன். 

அவன் பக்கம் திரும்பிய சுஹானா, “ஹாய் பார்த்தி, பாருங்க ஃபர்ஸ்ட் டைம் எங்க ஊர் வர்றீங்க, ஒரே அழுகை சீன் ஆகிப் போச்சு!” என வருத்தப் பட்டாள். 

அதெல்லாம் ஒன்றுமில்லை என்பதாக  தலையசைத்து நகரப் போனான். 

“எல்லாருமே போலாம்” என சுஹானா சொல்லவும், பாட்டி தன் மகள் எங்கே என தேடினார். 

“மெதுவா அம்மாவை பார்க்கலாம் ஆச்சி, அதுக்கு முன்ன உங்கள்ட்ட பேச வேண்டியது இருக்கு” என சொல்லி அவர்களை  மருத்துவமனை வளாகத்திலேயே இருக்கும் உணவகம் ஒன்றுக்கு அழைத்து சென்றாள். 

நிவாஸும் யாமினி எனும் பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் என்ன நடந்ததோ பிரேக் அப் ஆகி விட்டது. அந்த வருத்தத்தில் குடித்து விட்டு கார் ஓட்டியிருக்கிறான் நிவாஸ். அதில் விபத்து ஏற்பட்டு இப்போது மருத்துவமனையில் படுத்துக் கிடக்கிறான்.

மகனின் காதல் விவகாரம் எல்லாம் ஆஷுதோஷுக்கு தெரியவில்லை,  தன் மனைவிக்கு தெரிந்து அவர்தான் மறைத்து விட்டார் என அவராகவே நினைத்துக்கொண்டார். 

பிள்ளையை சரியாக கவனிக்கவில்லை என நிவாஸின் அப்பாவும் அம்மாவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொண்டு ஒரே சண்டை. அண்ணனை பார்ப்பதா பெற்றோரின் சண்டையை தீர்ப்பதா என திண்டாடிப் போய் விட்டாள் சுஹானா. 

நள்ளிரவில் ஐ சி யூ வாயிலில் வைத்து வாக்குவாதம் முற்றிப் போயிருக்கிறது. தன் மனைவி காயத்ரியின் கன்னத்தில் அறைந்து விட்டாராம் ஆஷுதோஷ். நேரில் பார்த்த சுஹானா பயம், அதிர்ச்சி, குழப்பம் என எல்லாம் சேர்ந்த மன நிலையில் தாத்தா பாட்டியை வர வழைத்து விடலாம் என முடிவு செய்திருக்கிறாள். 

பேத்தி சொன்னதையெல்லாம் கேட்டு பெரியவர்களுக்கும் அதிர்ச்சிதான். பாட்டியின் கையை பற்றிய சுஹானா, “ஒரு மாதிரி ஹெல்ப்லெஸா ஃபீல் பண்ணினேன் ஆச்சி, அதுதான் உங்களுக்கு சிரமம்ங்கிறது யோசிக்காம வரவழைச்சிட்டேன்” என்றாள். 

“அதையே திரும்ப திரும்ப சொல்லாதடா, இப்படி சமயத்துல நாங்க இங்கதானே இருக்கணும்” என்றார் தனசேகரன். 

சுஹானாவுக்கு அவளது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. பேசி விட்டு வைத்தவள், “உங்களை காணோம்னு கேட்டாங்க. அவங்க ஃபைட் பத்தி நான் சொன்ன எதையும் தெரிஞ்சுகிட்ட மாதிரி காட்டிக்க வேணாம்” என்றாள். 

“நிவாஸ் லவ் பண்றது உனக்கு தெரியுமா?” எனக் கேட்டார் தாத்தா. ஆறு மாதங்களுக்கு முன்பே அவளுக்கு தெரியும், அந்தப் பெண்ணை சந்தித்து பேசவும் செய்திருக்கிறாள். 

பின் ஏன் அம்மாவிடம் சொல்லவில்லை என கடிந்து கொண்டார் பாட்டி. 

“அவன் விஷயத்தை அவன்தானே சொல்லணும்?” என பாவமாக கேட்டவள், “சொல்லியிருந்திருக்கணுமா ஆச்சி, ஆனா அப்படி ரிலாக்ஸா பேச டைமே இல்லை, எப்பவும் பிஸியா இருக்கிறவங்கள்ட்ட எப்படி சொல்லியிருப்பேன்?” எனக் கேட்டாள். 

பெரியவர்களுக்கு மகள், மருமகன் மீது கோவமாக வந்தது. சரி விடு, பார்த்துக் கொள்ளலாம் என பேத்தியை சமாதானம் செய்தனர். 

இவர்கள் பேசிக் கொண்ட எதிலும் தலையிட்டுக் கொள்ளவில்லை பார்த்திபன். சாப்பிட்டதற்கு பணம் செலுத்த சுஹானா எழுந்த போது, அவளை தடுத்து அவனே செலுத்தினான். 

நிவாஸை பார்க்க கிளம்பினார்கள். 

ஆஷுதோஷ் கல்லூரி படிப்பு முடித்தது சென்னையில்தான். அப்போதுதான் காயத்ரியுடன் காதல் ஏற்பட்டது. ஒரே மகளின் விருப்பத்துக்கு தனசேகரன் தம்பதியினர் மறுப்பு சொல்லவில்லை. ‘வேறு மாநிலத்து பெண்ணா?’ என ஆஷுதோஷின் பெற்றோர் முதலில் தயங்கினாலும் மகனின் உறுதியில் இந்த திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டனர். 

திருமணம் முடிந்து மும்பையில் ஈவண்ட் மேனேஜமெண்ட் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். முழு நேர உழைப்பையும் தொழிலில் போட்டு தங்களுக்கென தனித்த பெயரையும் உருவாக்கிக் கொண்டார்கள். 

ஆரம்பத்தில் அவர்களின் வாழ்க்கை இனிமையாகவே சென்றது. ஆனால் அந்த இனிமை அப்படியே தொடரவில்லை. 

தொழிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தங்கள் துணைக்கு கொடுக்க தவறி விட்டனர். இருவருக்கும் இடையில் அளப்பறிய அன்பு இருந்து என்ன பிரயோஜனம்? அவ்வப்போது ஏற்படும் மனக் கசப்புகளை பேசித் தீர்க்க நேரம் இல்லாமல் அல்லது நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாமல் இத்தனை வருடங்களை கடந்திருந்தனர். 

காயத்ரியின் பெற்றோர் சென்னையில் இருக்க, ஆஷுதோஷின் பெற்றோர் அவரது தம்பியுடன் வசித்தனர். ஆகவே தனிக் குடும்பத்தில் அவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளை சரி செய்ய ஆள் இல்லாமல் விரிசல் அதிகமாகிக் கொண்டே போனது. 

பிள்ளைகள் இருவரும் பெற்றோரின் சண்டைகளை பார்த்து பார்த்தே வளர்ந்திருந்தனர். அதன் பாதிப்போ என்னவோ தனக்கு துணையாக வரப் போகும் பெண்ணை நிவாஸுக்கு சரியாக கையாளத் தெரியவில்லை. 

மகளை கண்ட பத்மாவதி அவரின் கன்னங்களை ஆராய்ச்சியாக பார்த்தார். அதில் தன் மகளை முறைத்து வைத்தார் காயத்ரி. தான் அடி வாங்கியது பற்றி அம்மா ஏதும் விசாரிக்காமல் போனதில் நிம்மதி கொண்டவராக நிவாஸ் பற்றி புலம்பலாக ஏதோ பேசினார். 

மனைவியை அடித்து விட்டதில் குற்ற உணர்ச்சியில் இருந்த ஆஷுதோஷுக்கு மாமனாரிடம் இயல்பாக பேச வரவில்லை. தனசேகருக்கு வருத்தம் இருந்த போதிலும் காட்டிக் கொள்ளாமல் சகஜமாக பேச முற்பட்டார். 

பார்த்திபன் ஓரமாகவே நின்றிருந்தான். அவனருகில் வந்த சுஹானா, “நீங்களும் காலேஜ்க்கு லீவ் போட்டுட்டீங்கல்ல பார்த்தி? நானே மேனேஜ் பண்ணியிருக்கணும், ப்ச்…” என இயலாமையோடு சொன்னாள்.