சுஹானா எத்தனை முயன்றும் நிவாஸை அவளால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனது இருப்பிடமும் அவளுக்கு தெரியவில்லை. அவளது நண்பனுக்கு பதிவு திருமணம் செய்ய போவது பற்றி தெரிந்திருந்ததே தவிர, எங்கு இருக்கிறான் என்பதெல்லாம் தெரியவில்லை.
யாமினியுடன்தான் இருக்க வேண்டும் என பார்த்திதான் சொன்னான். அவளது கைப்பேசி எண் சுஹானாவிடம் இல்லை.
என்ன செய்வது என குழம்பிய சுஹானா கணவனிடம் புலம்பித் தள்ளி விட்டாள். நானே பெங்களூரு செல்கிறேன் என்றான் பார்த்தி.
யாமினி முன்னர் தங்கியிருந்த இடத்துக்கு சுஹானாவுடன் இவனும் சென்றிருந்தானே, அங்கேயே போய் பார்க்கிறேன், இல்லையென்றாலும் யாமினியின் அலுவலகம் செல்கிறேன் என்றான்.
வார இறுதியில் பார்த்திக்கு அவனது ஆராய்ச்சி படிப்பு சம்பந்தமான வேலைகள் நிறைய இருக்கும், என் குடும்ப பிரச்சனையால் உங்களுக்கும் சிரமமாகிறதே என அவனிடம் கவலை பட்டாள் சுஹானா.
“ஓஹோ உங்க குடும்ப பிரச்சனையா ஆச்சி?” என அதிருப்தியோடு கேட்டான் பார்த்தி.
“அச்சோ பார்த்தி! அப்படி மீன் பண்ணல, தாராளமா போய் உங்க மச்சானை கண்டுபிடிங்க” என அவள் சொல்லவும், ஒரு விரல் காட்டி “அது!” என வேடிக்கையாக சொன்னான் அவன்.
பார்த்திக்கு மிகுந்த சிரமம் தரவில்லை நிவாஸ். யாமினி முன்னர் இருந்த இடத்தில் அவளுடன்தான் தங்கியிருந்தான். தன்னை சந்திக்க தங்கையின் கணவன் நேரில் வருவான் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மரியாதையாகவே உபசரித்தான். யாமினிக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.
சுஹானாவிடம் தொடர்பில் இருந்தால் தன் செயலுக்கு அவளையும் காரணம் காண்பித்து அப்பா அவளிடம் கோவம் கொள்ள கூடும் என்பதாலேயே அவளின் அழைப்புகளை நிராகரித்து விட்டதாக காரணம் சொன்னான் நிவாஸ்.
அதை அவளிடம் சொல்லவாவது ஒரு முறை பேசியிருக்கலாம் எனதான் பார்த்திக்கு தோன்றியது. ஆனால் கேட்டுக் கொள்ளவில்லை. இப்போது சுஹானாவிடம் பேசுங்கள் என மட்டும் சொன்னான். அடமாக மறுத்து விட்டான் நிவாஸ். ஆகவே பார்த்தியே அவனிடம் பேச வேண்டியதாகி விட்டது.
அப்பாவிடம் நிறைய காலம் போராடிக் கொண்டிருக்க முடியாது என்றான் நிவாஸ். யாமினியின் பெற்றோர் விவாகரத்து ஆகி வேறொரு துணையை தேடிக் கொண்டவர்கள். ஹாஸ்டல் வாழ்க்கை வாழ்ந்து இப்போதும் தனியாக இருக்கிறாள். தங்களின் கடமையை முடிக்க திருமணம் செய்து கொள்ளும் படி அவளின் பெற்றோர் கெடுபிடி செய்கின்றனர்.
‘எங்கள் காதலை அவர்களிடம் சொல்லி, அவர்களின் சம்மதத்தையும் பெற்று விட்டோம். அவர்கள் வைக்கும் கண்டிஷனே ஒரு மாதத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்பதுதான். அவர்களுக்காக இல்லையென்றாலும் யாமினியை இன்னும் தனியாக விட எனக்கு மனமில்லை’ என தனது தரப்பை சொன்னான் நிவாஸ்.
“உங்க அம்மா தாத்தா பாட்டி சிஸ்டர் இவங்களையும் கன்ஸிடர் பண்ணுங்க நிவாஸ்” என பார்த்தி சொல்ல, வேறு பக்கம் பார்த்தான் நிவாஸ். என் முடிவில் மாற்றமில்லை என்பது போலவே இருந்தது அவனின் செய்கை.
இவனிடம் பேசுவது வேலைக்கு ஆகாது என உணர்ந்து யாமினியிடம் பேசிப் பார்த்தான் பார்த்தி. தாத்தாவிடம் சொன்னால் அவரே நடத்தி வைப்பார், உங்கள் திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்படாது, நீங்கள் இருவர் மட்டுமே தனியாக வாழ்க்கையை நடத்த நினைக்கிறீர்களா? உறவுகள் வேண்டாமா என அவன் கேட்க, நிவாஸை பார்த்தாள் யாமினி.
“அவர் உன்னை பிரைன் வாஷ் பண்றார்” என்றான் நிவாஸ்.
“இருக்கட்டுமே நிவாஸ், தப்பொன்னும் இல்லையே. என் சிஸ்டர் இடத்துல இவங்கள பார்க்கிறேன், அப்படி நினைச்சுதான் பேசிட்டு இருக்கேன்” என்றான் பார்த்தி.
“என் அப்பா பத்தி உங்களுக்கு தெரியும்தானே? யாமினிய ஹர்ட் பண்ற மாதிரி ஏதும் சொல்லிடுவார், இவ தாங்க மாட்டா, நானும் அதை விரும்பல” என்றான் நிவாஸ்.
“அப்படி அவர் ஏதும் சொல்லாத அளவுக்கு தாத்தா பார்த்துக்குவாங்க” என்றான் பார்த்தி.
“உங்களால உத்திரவாதம் கொடுக்க முடியுமா?” என கோவமாகவே கேட்டான் நிவாஸ்.
“கண்டிப்பா முடியாது நிவாஸ்” என்றான் பார்த்தி.
“அப்ப உங்க வேலைய பார்த்திட்டு போங்க!” என நிவாஸ் சொல்ல, அவனை அதட்டி அடக்கினாள் யாமினி.
“யாரோட பெர்சனல் லைஃப்லேயும் தலையிட எனக்கு ஆசையில்லை நிவாஸ், சுஹா பத்தின அக்கறை கவலை எல்லாம் உங்களுக்கு இல்லாம போகலாம், என்னால அப்படி இருக்க முடியாது. அவ கூட பொறந்துட்டீங்க, உங்க நல்லது கெட்டது அவளையும் பாதிக்குதே, அதை வேடிக்கை பார்க்க முடியாமதான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன்” என பார்த்தியும் குரல் உயர்த்தியே பேசினான்.
அந்த சூடான சூழலை எப்படி கையாள என தெரியாமல் விழித்தாள் யாமினி.
பார்த்தியே தணிந்தவனாக, “உங்க அப்பா எப்படி நடப்பார் என்ன பேசுவாருன்னுலாம் என்னால சொல்ல முடியாது. அதுக்காக இப்படி நீங்க கல்யாணம் பண்ணிக்கிறத சரின்னும் என்னால சொல்ல முடியாது” என்றான்.
பின் யாமினியை பார்த்து, “நிவாஸ் அப்பா பேசுறதையெல்லாம் பொறுத்துகிட்டு அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்ல வரலை நான். குடும்பத்தை ஒதுக்கி வச்சிடாம, யார் மனசையும் உடைச்சிடாம உங்க காதல்ல ஜெயிக்கிறது எப்படின்னு பாருங்கன்னுதான் சொல்றேன். உங்களுக்கு சப்போர்ட் பண்ண நானும் சுஹாவும் இருக்கோம், அப்புறம் உங்க இஷ்டம்” என்றான்.
பார்த்தியை காத்திருக்க சொல்லி விட்டு நிவாஸை பால்கனி பக்கம் அழைத்துக் கொண்டு சென்றாள் யாமினி. சிறிது நேரத்தில் இருவரும் ஹால் வந்தார்கள். பார்த்தி சொல்வதற்கு ஒப்புக் கொள்வதாக சொன்னான் நிவாஸ்.
இப்படி சொல்வான் என எதிர்பார்த்தே இருந்த பார்த்தி, யாமினிக்கு நன்றி சொன்னான்.
“நான் ஏதும் ஹார்ஷா பேசிட்டேனா பார்த்தி, ஸாரி” என சங்கடமாக மன்னிப்பு கேட்டான் நிவாஸ்.
பரவாயில்லை என பார்த்தி சொல்ல, “சுஹாகிட்ட சொல்லிடாதீங்க, அவ கூட பேசாம இருந்ததை கூட மன்னிச்சிடுவா, உங்கள்ட்ட கோவப்பட்டேன்னு தெரிஞ்சா மாசக் கணக்குல பேசாம பனிஷ்மென்ட் கொடுத்திடுவா எனக்கு” என்றான் நிவாஸ்.
புன்னகைத்த பார்த்தி, “கண்டிப்பா சொல்ல மாட்டேன்” என உறுதி தந்து, இப்போதே சுஹானாவுடன் பேசுங்கள் எனவும் கேட்டுக் கொண்டான்.
அது அண்ணன் தங்கை விவகாரம், நான் தனியாக பேசிக் கொள்கிறேன், உங்கள் முன்னிலையில் மாட்டேன் என நிவாஸ் சொல்ல, பார்த்தியும் வற்புறுத்தவில்லை.
அவர்களிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்ட பார்த்தி, வழியில்தான் மனைவிக்கு அழைத்து எல்லாம் சொன்னான். தாத்தாவை பார்க்க நிவாஸை வர சொல்லியிருக்கிறேன், அங்கே உன் பெற்றோரிடம் நீ பேசிக் கொள் எனவும் சொன்னான்.
இது இத்தனை எளிதாக சுமூகமாக முடியும் என நினைத்திராத சுஹானாவுக்கு நிம்மதியாக இருந்தது.
பார்த்தி அன்றே சென்னை திரும்ப இரயிலில் டிக்கெட் போட்டு விட்டான். இரவில் பயணித்து வந்தவனும் அறை எடுதெல்லாம் தங்கவில்லை, இரயில் நிலையத்திலேயே ரெஃப்ரெஷ் ஆகியிருந்தான்.
“உங்களுக்கு நல்ல அலைச்சல் பார்த்தி” என வருத்தப் பட்டாள்.
“அவ்ளோ பெரிய விஷயம் இல்லை சுஹா, இப்ப நீ ஓகேதானே?” எனக் கேட்டான் அவன்.
அவளுக்கு தெரியும், இத்தனை மெனெக்கெடுதலும் அவளுக்காகத்தான், நன்றி சொல்லி அவனை தள்ளி நிறுத்த விரும்பவில்லை அவள்.
“சுஹா… ஆச்சி… என்ன பேச்சையே காணோம்?” எனக் கேட்டான்.
“எனக்கு பார்த்திய ஹக் பண்ணிக்கணும்” என நெகிழ்ந்து போன குரலில் சொன்னாள்.
“ம்ம்… இங்கேருந்து அப்படியே மும்பை வரவா?” எனக் கேட்டான்.
அவள், “ம்” என்க, திகைத்தவன் பின், “என் பட்ஜெட் தாங்காது ஆச்சி” என சொல்லி சிரித்தான். சிக்னல் சரியாக இல்லாமல் போகவும் இரயில் ஏறி விட்டு அழைப்பதாக சொல்லி வைத்து விட்டான்.
தாத்தா தலையிட்டால் அப்பாவை சரி கட்டி விடலாம் என சுஹானாவுக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஆகவே அண்ணனின் கல்யாணம் பற்றிய கவலையெல்லாம் அகன்று விட்டது. இப்போது முழுக்க முழுக்க கணவன் பற்றிய சிந்தனைகள்தான்.
“பார்த்தி…” என உற்சாகமாக வாய் விட்டு அழைத்தவள் காற்றிலேயே கற்பனையாக அவனை கட்டியணைத்துக் கொண்டாள்.