மீண்டும் இருவரும் அழைப்பில் இணைந்த போது அவள் முகம் பதற்றத்தில் சிவந்து போயிருந்தது.
“நெனச்சேன், ஒன்னும் ஆகல பாரு” என கையை காண்பித்தான்.
“இனி சமைக்கறப்போ பேசிக்க வேணாம்” என்றாள்.
“அப்போ நான் சமைக்கவே இல்லை” என்றான் அவன்.
“பின்ன கடைல சாப்பிடுவீங்களா?”
“உன்னை பார்க்காம அந்த நாளை ஓட்டுறது விட கடை சாப்பாடு அவ்ளோ கொடுமை இல்லை”
“அப்படினா கவனமா சமைக்கணும்ல வாத்தி?” என கடிந்தாள்.
“நான் உனனை கவனிக்கணும்னுதானே பளிச்னு வந்து நிக்கிற? சமையல் மேல எப்படி போகும் கவனம்?”
“நாளையிலேருந்து தூங்கி எழுந்த மூஞ்சோட வரேன்” என்றாள்.
“அப்ப மட்டும் உன்னை பார்க்க மாட்டேனா?” எனக் கேட்டுக் கொண்டே தயார் செய்த எலுமிச்சை சாதத்தை பேக் செய்து, சிப்ஸ் எடுத்து வைத்துக் கொண்டான்.
“ஏன் பார்த்தி வீட்லேயே உருளைக்கிழங்கு செய்யலாம்ல?” எனக் கேட்டாள்.
“ப்ச், சைட் டிஷ் எல்லாம் செய்ற மூட் இல்லை ஆச்சி. நீ வந்தப்புறம் செய்றேன், இப்போ டைம் ஆச்சு, நான் கிளம்பணும்” என சொல்லி அவளை ஏக்கமாக பார்த்தான்.
கைப்பேசியை படுக்கையில் வைத்தவள் அவனை கட்டியணைப்பது போல சைகை செய்தாள்.
நெற்றியில் புரண்ட தலை முடியை பின்னால் ஒதுக்கி விட்டுக் கொண்டே அவளைப் பார்த்தவன், “பை ஆச்சி” என்றான்.
அழைப்பு முடியவும் கணவனுடன் இருந்த நாட்களை அசை போட்டுக் கொண்டு அப்படியே படுத்து விட்டாள் சுஹானா. அந்த நேரம் பார்த்துதான் தன் மன ஆறுதலுக்காக மகளிடம் வந்தார் காயத்ரி.
கணவர் பேசியதை எல்லாம் சொல்லி மகளிடம் அழுது விட்டார். ஏதாவது இனிமையான விஷயங்களை பற்றி பேசாமல் எங்கள் பேச்சை ஏன் எடுத்தீர்கள் எனக் குறையாக கேட்டாள் சுஹானா.
“எங்க கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு இனிமையா ஏதாவது நடந்துச்சுன்னா அது நீங்க ரெண்டு பேரும் பொறந்ததுதான்” என மகளிடம் கோவமாக சொன்னார் காயத்ரி.
அம்மாவின் கையை ஆறுதலாக பிடித்துக் கொண்டவள், “உங்களுக்குள்ள டெர்ம்ஸ் நல்லாருக்கணும்னுதானேமா உன்னை டாடி கூட வாக் போக சொன்னேன். இந்த நேரம் இதை பேசியிருக்க வேணாம்னு தோணினதால சொன்னேன். ஆனா டாடி பேசினதும் தப்புதான். அதுக்காக காலையிலேயே மூட் அவுட் ஆகாதீங்க, லஞ்ச் வெளில போலாமா?” என பேச்சை மாற்றினாள்.
“டாடியை விட்டுட்டு நாம மட்டுமா! வேணாம், நீங்க ரெண்டு பேரும் ஏதாவது மூவிக்கு போய்ட்டு வாங்க. உங்களுக்குள்ள இருக்க டிஃபரன்ஸஸ் பத்தி ஏதும் பேசாம, மூவிய என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என மகள் சொல்ல, விருப்பமில்லை, வேண்டாம் எனதான் சொன்னார் காயத்ரி. அவள் விடவில்லை, அம்மாவை சம்மதிக்க வைத்து அப்பாவிடமும் பேசி அவரையும் ஒத்துக் கொள்ள செய்து விட்டாள்.
மாலையில் பார்த்தி அழைப்பில் வந்த போது, பெற்றோர் திரைப்படம் பார்க்க போயிருப்பதை சொன்னாள்.
“ம்… தாத்தாவும் ஆச்சியும் கூட கோயிலுக்கு போயிருக்காங்க, வரும் போது தாத்தாவோட ஃபிரெண்ட் வீட்டுக்கு போயிட்டுதான் வருவாங்க. நாமதான் ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி விட்டு உட்கார்ந்திருக்கோம்” என குறை பட்டான்.
“சும்மா இப்படியே பேசிட்டு இருந்தா உடனே புறப்பட்டு வந்திடுவேன்”
“ஹேய் அப்படிலாம் பண்ணிடாத, அவங்கள கொஞ்சம் சரி பண்ணிட்டே வா. நிவாஸ் பேசினாரா?” என விசாரித்தான்.
அவனிடம் சொல்ல வேண்டும் எனதான் இருந்தாள். நிவாஸ் யாமினியுடன் பதிவுத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான், தங்கையிடம் கூட பகிர்ந்திருக்கவில்லை. சுஹானாவின் நண்பன் மூலமாக அவளுக்கு விஷயம் தெரிய வந்திருக்கிறது.
“உறுதியா தெரியுமா?” என பார்த்தி கேட்டதற்கு ஆம் என்றாள்.
நிவாஸ் செய்வது முற்றிலும் தவறு, உன் அப்பா கோவமாக பேசியிருக்கிறார்தான், அவரை சம்மதிக்க வைக்கவென என்ன மெனெக்கெட்டார், உன் அம்மாவின் நிலை பற்றி யோசிக்க மாட்டாரா? உன் காதலில் கூடத்தான் உன் அப்பாவுக்கு விருப்பமில்லை, ஆனாலும் உன் உறுதியை பார்த்து சம்மதித்தார்தானே? தாத்தாவிடம் சொன்னால் அவரே உன் அப்பாவிடம் பேசி நடத்திக் கொடுப்பாரே, நீதான் எடுத்து சொல்ல வேண்டும் என மனைவிக்கு சொன்னான்.
“என்கிட்ட அண்ணா பேசாம இருக்கும் போது நானா பேசவா?” எனக் கேட்டாள் சுஹானா.
“என்ன ஆச்சி, உனக்கு உன் அண்ணாகிட்ட ஈகோவா?”
“ஈகோ இல்லை பார்த்தி, நான் தலையிட்டு அவன் லவ்க்கு திரும்ப பிராப்லம்னா நான் என்ன செய்வேன்?”
“அதுக்காக வீட்டுக்கு தெரியாம மேரேஜ் செய்ய போறார்ங்கிறது தெரிஞ்சும் அமைதியா இருப்பியா சுஹா? உன் அப்பாக்கு பிபி எகிறிடும், அக்காவும் வேதனை படுவாங்க. தாத்தா ஆச்சிக்கெல்லாம் அவர் மேரேஜ் பார்க்க ஆசை இருக்காதா? எனக்கு அவர் ரொம்ப பழக்கம் இல்லை, இல்லைனா நானே பேசுவேன். இப்ப நீதான் பேசியாகணும்” என அவன் அறிவுறுத்த, அவளும் சரி என்றாள்.
கையோடு நிவாஸிடம் பேசவும் சொன்னான். ஆனால் சுஹானாவின் அழைப்பை நிவாஸ் ஏற்கவில்லை.
உடனே கணவனை கூப்பிட்டு, “அவன் எடுக்கல பார்த்தி, நீங்க சொன்னதுக்கப்புறம்தான் அவன்கிட்ட கண்டிப்பா பேசியாகணும்னு புரியுது, என்ன செய்ய நான்?” என கலக்கமாக கேட்டாள்.
“ரெஜிஸ்டர் மேரேஜ்னா இன்னிக்கு நினைச்சி நாளைக்கு செய்ய முடியாது, நீ கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணிட்டே இரு. இல்லைனா வேற யோசிக்கலாம்” என தைரியம் சொன்னான்.
“டாடிகிட்ட இதை சொல்லணுமா சொல்லக்கூடாதா பார்த்தி?”
“டென்ஷன்ல இப்படி கேட்குற, ரிலாக்ஸ் ஆனதும் யோசி உனக்கே தெரியும்” என சொல்லி விட்டான்.
அப்பாவிடம் சொன்னால் இன்னும் சிக்கலாகும், இதை சரி செய்யும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது என புரிந்து தானாகவே தெளிந்து கொண்டாள் சுஹானா.
ஆஷுதோஷும் காயத்ரியும் வீடு வந்து சேர நேரமாகி விட்டதுதான், அப்போதும் மகளை காண வந்து விட்டார் ஆஷுதோஷ்.
“தூங்க போகாம என்ன டாடி என்னை பார்க்க வந்திருக்கீங்க?” எனக் கேட்டாள் சுஹானா.
“என் பொண்ணை பார்க்க காரணம் இருக்கணுமா?” எனக் கேட்டார் ஆஷுதோஷ்.
சரிதான் என்றவள் “அம்மாவோட சமாதானம் ஆகிட்டீங்களா டாடி?” என விசாரித்தாள்.
புன்னகைக்க மட்டும் செய்தவர் இன்று பார்த்த படம் நன்றாக இருந்தது என்றார். நாம் குடும்பமாக இப்படியெல்லாம் சென்று பல வருடங்களாகி விட்டன எனவும் சொன்னார். குடும்பத்தின் மீது மிகுந்த அன்புடையவர், அவருக்கு சாதகமாக விஷயங்கள் அமையாமல் போனதில் நல்ல மன வருத்தத்தில் இருக்கிறார் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
அவரும் மாற வேண்டியது இருக்கிறது என நினைத்துக்கொண்டவள் அறிவுரை என எதுவும் சொல்லவில்லை, இப்போதைய அவருடைய மன நிலை ஓரளவு நன்றாக இருக்க, அது அப்படியே இருக்கட்டும் என கருதி அவர் பேசியதை மட்டுமே கேட்டுக் கொண்டாள்.
ஆஷுதோஷ் வெளியில் செல்லவே இல்லை. உங்கள் பணிகளை பார்க்க சென்றால் மாறுதலாக இருக்கும் என சொல்லிப் பார்த்தாள் சுஹானா. யாருக்காக ஓடிக் கொண்டே இருக்கிறேன் என தெரியவே இல்லை, இப்போது எதிலும் நாட்டமில்லை, உன்னுடன் நேரம் செலவழிக்கிறேன் என சொல்லி விட்டார். ஆகவே காயத்ரிதான் அவர்களது நிறுவனத்தை வழி நடத்தினார்.