இதய கிளையில் பூத்தவளே -18

அத்தியாயம் -18

சுஹானாவுக்கு நேரமாகவே விழிப்பு வந்து விட்டது. அயர்ந்து உறங்கும் கணவனை ஆசையாக பார்த்துக் கிடந்தவள், இப்படியே இருந்தால் எந்த வேலையும் நடக்காது என புரிந்து மென்மையாக அவனுக்கு முத்தமிட்டு எழுந்து கொண்டாள்.

தலைக்கு குளித்து ஷார்ட்ஸ், டி ஷர்ட் என அணிந்து கொண்டவள் சமையலறை சென்று விட்டாள்.

மதியத்திற்கு தேங்காய் சாதம், காலைக்கு சேமியா கிச்சடி என செய்து முடித்து விட்டு படுக்கையறையை எட்டிப் பார்த்தாள். அப்போதும் உறக்கத்தில்தான் இருந்தான் பார்த்தி.

இன்னும் கூட சற்று நேரம் உறங்கட்டும் என நினைத்தவள் மற்ற வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தாள்.

தாத்தாவின் வீட்டில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த சுஹானா, “ரொம்ப சீக்கிரம் எழுந்திட்டீங்களா?” எனக் கேட்ட பார்த்தியின் குரலில் திரும்பினாள்.

 வெட்கமும் பூரிப்புமாக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். அவளை லேசாக அணைத்துக் கொண்டவன், “நைட் தூங்க நேரமானதால இப்ப டயர்ட்ல தூங்கிட்டுல்ல இருந்திருக்கணும், மாறா ரொம்ப சுறு சுறுப்பா எல்லா வேலையும் செஞ்சு வச்சிருக்கீங்க?” எனக் கேட்டான்.

“நீங்கதான் என்னை விட டயர்டா இருப்பீங்க, அதான் உங்களுக்கு எந்த வேலையும் வைக்க வேணாம்னு நானே செஞ்சிட்டேன்” என அவனது முகம் பாராமல் சொன்னாள்.

“இன்னிக்கு நைட் எனக்கு நிறைய வேலை வைக்க கூடாது சரியா?” என குறும்பாக கேட்டவன் அவளிடம் அத்து மீறிக் கொண்டிருந்தான்.

அவளும் அவனுக்கு இசைந்து கொடுத்தாள். சில நிமிட நெருக்கத்திலேயே இருவருக்கும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாத நிலை. ஆனால் வேலைக்கு செல்ல வேண்டுமே, இறுக்கமாக அணைத்து பின் அவளை விடுவித்தான்.

கலைந்திருந்த முடியை ஒதுக்கி விட்டு தலை குனிந்து நின்றாள். இரவின் நினைவும் இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமுமாக அவளை பார்த்திருந்தான் அவன்.

இரண்டு கைகளை கொண்டும் தன்னிடமிருந்து அவனை திருப்பியவள், அவனது முதுகில் கை வைத்து தள்ளிக் கொண்டே, “ஈவ்னிங் வீட்டுக்கு வரத்தானே போறோம், கிளம்புங்க” என்றாள்.

“ஈவ்னிங் வரை வெயிட் பண்ணனுமா?” என செல்லமாக சிணுங்கிக் கொண்டேதான் அவனும் தயாராக சென்றான்.

மாலையில் அவளின் வரவுக்காக நிறுத்தத்தில் காத்திருந்தான். அவன் இருப்பான் என அவளும் எதிர்பார்த்தே இருந்தாள். ஒருவரை ஒருவர் எதிர் கொள்ளவும் அன்றைய நாளின் சோர்வெல்லாம் விலகி ஓடி, மலர்ச்சி வந்து ஒட்டிக் கொண்டது.

வீட்டுக்குள் நுழைந்த மறு நொடியே அவளை தூக்கிப் பிடித்து இறுக அணைத்துக் கொண்டான். அவளும் அவனை அணைத்துக் கொண்டவள், “பார்த்தி, அர்ஜென்ட்டா எனக்கொரு ஹெல்ப் வேணும்” என்றாள்.

“இப்படி கைக்குள்ள இருந்துகிட்டு எது கேட்டாலும் முடியாதுன்னு சொல்ல முடியாதே, என்ன வேணுமாம் என் ஆச்சிக்கு?”

“என் நேம் தமிழ்ல எழுத கத்து கொடுங்க” என அவள் சொல்ல, அவளை விலக்கி நிறுத்தி திகைப்பாக பார்த்தான்.

அவளது பள்ளியின் சக ஆசிரியை ஒருவர் ‘இதற்கு முன் மும்பை பெண்ணாக நீ இருந்திருக்கலாம், இப்போது இந்த ஊர் மருமகள் வேறு, தமிழில் பெயர் கூட எழுத வராது என்றால் மிகவும் தவறு’ என கிண்டலாக சொல்லி விட்டாளாம்.

“உங்களுக்கு தமிழ் எழுத படிக்க வராது சரி, நிஜமாவே உங்க பேர் கூட எழுத தெரியாதா?” என ஆச்சர்யமாக கேட்டான்.

உதடுகள் பிதுக்கியவள், “அம்மா சின்ன வயசுல கத்து கொடுக்க ட்ரை பண்ணினாங்க, அதெல்லாம் மறந்து போயிடுச்சு பார்த்தி” என்றாள்.

“நாளைக்கு லீவ்தானே கத்து தர்றேன்”

“ஏன் இப்ப என்னவாம்? இப்பவே கத்து கொடுங்க, நான் எழுதி அவளுக்கு அனுப்பி வைக்கணும், ரொம்ப டீஸ் பண்ணிட்டா” என்றவளின் இடை வளைத்தவன், “இப்ப வேற வேலை இருக்கு நமக்கு” என்றான்.

“ச்சீ… இப்ப பகல்,  வெளிச்சத்துல போய்… போங்க!” என அவள் சொல்ல, முகத்தை சின்னதாக்கினான் அவன்.

“ஸார் கொஞ்ச நேரம் வெயிட் பண்ண மாட்டீங்களா? வாங்க ரெஃப்ரெஷ் ஆகுங்க, நான் மசாலா டீ போட்டு தர்றேன்” என்றவள் ஆடை மாற்ற அறைக்கு சென்று விட்டாள்.

அவளுக்கு வேலை வைக்காமல் அவனே தேநீர் போட்டு வைத்து விட்டு, பின்னர்தான் ஆடை மாற்றிக் கொண்டான்.

பால்கனியில் நின்று கொண்டு தேநீர் பருகினார்கள். அப்படியே மணி வாழைக்கு தண்ணீர் விட்டான் பார்த்தி. அந்தப் பூவை செடியிலிருந்த படியே கையில் பிடித்து, “மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குதானே…” என ராகம் இழுத்தான்.

“இப்படி பாட்டு இருக்கா பார்த்தி?” எனக் கேட்டாள்.

“ம்ம்… அப்படி பாட்டு பாட வேண்டிய டைம் இது, அ’னா ஆ’வன்னா படிக்க வந்து உட்கார்ந்திருக்க” என சலித்தான்.

“உங்க சின்ன வயசுல இந்த பூ பிடிச்சுதானே உங்க கேர்ள் ஃபிரெண்ட்ஸ்கிட்ட பாடுவீங்க?” எனக் கேட்டாள்.

“அது சும்மா ஏதாவது ரைம்ஸ் சொல்லிருப்பேன்” என சமாளித்தான்.

அவனது இடுப்பில் கிள்ளியவள், “அடுத்த முறை மருது  அண்ணாகிட்ட கேட்டா உண்மை தெரிஞ்சிட போகுது, பொய் சொல்லி பார்த்தி” என்றாள்.

“அவன் என்ன வேணா சொல்லட்டும், என் ஒரே பெண் தோழி நீங்கதான் ஆச்சி” என்றவன், அவளை மையலாக பார்த்துக் கொண்டே, “முத்தங்கள் சங்கீதம் பாடாதோ, உன் கூந்தல் பாய் ஒன்று போடாதோ…” என பாடினான்.

“நல்லாதான் இருக்கு லிரிக்ஸ், சீக்கிரம் எழுத கத்துக்கிட்டா சீக்கிரம்… அந்த பாய்… ம்ஹூம்… பெட் விரிக்கலாம், வாங்க பார்த்தி” என்றாள்.

“எவ்ளோ பிட்டு போட்டாலும் உன் வேலையிலேயே குறியா இருக்க, போ வர்றேன்” என அலுத்தான்.

ஒருமையில் அழைப்பதும் பின் மரியாதையாக விளிப்பதுமாக  அவன் இருக்க, அதையும் ரசித்தாள் அவள்.

 நோட்டு பேனா எடுத்து வைத்துக் கொண்டு ஹாலில் தரையில் அமர்ந்தாள் சுஹானா. தன் திட்டம் பாழாக காரணமான மனைவியின் தோழியை திட்டிக் கொண்டேதான் சென்றான் பார்த்தி.

அவளை உரசிக் கொண்டு அமர்ந்தவனிடம் தீவிர பாவனையோடு அவள் நோட்டை எடுத்துக் கொடுக்க, “இப்படி தள்ளி தள்ளி உட்கார்ந்தெல்லாம் சொல்லி தர முடியாது சுஹா” என்றான்.

“தள்ளி தள்ளித்தான் உட்கார்ந்திருக்கோமா பார்த்தி?” என கிண்டலாக கேட்டாள்.

“அப்புறம் பொய்யா சொல்றேன்? வா இப்படி உட்கார்” என்றவன் கால்களை நீட்டிக் கொண்டு அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

“இப்படி இருந்தா எப்படி கத்துப்பேன் பார்த்தி?” என செல்லமாக கோபித்தாள்.

நோட்டை அவளின் மடியில் வைத்தவன் ஒரு கையால் அவளின் வயிற்றை சுற்றி அணைத்துக் கொண்டான். அவளின் தோள் வளைவில் தன் நாடியை பதித்துக் கொண்டே நோட்டில் அவளது பெயரை பெரிதாக எழுதினான்.

பேனாவை வாங்கியவள் அவன் எழுதியதற்கு கீழேயே எழுதிப் பார்க்க, அவனோ அவளது காதோரம, கழுத்து வளைவு, தோள் வளைவு என வாகான இடங்களில் எல்லாம் முத்தங்களிட்டான். கையும் அவனிஷ்டம் போல அவள் மீது பயணித்தது.

“பார்த்தி! எப்படி எழுதுவேன் நான்?” என கடிந்து கொண்டாள்.

“இந்தளவு உன்னை விட்டதே பெரிய விஷயம், இப்படியே அட்ஜஸ்ட் பண்ணி எழுது, இல்லைனா நோட்டை தள்ளி வை” என்றவன் அவளை தரையில் சரிக்க பார்க்க, சமாளித்து அவனை அமர வைத்தவள் எப்படியோ எழுதி விட்டாள்.

“கரெக்ட்டான்னு பாருங்க பார்த்தி” என அவள் சொல்ல, அவன் அதை கவனிக்கும் நிலையிலா இருந்தான்?

அவனிரு கைகளையும் இழுத்து அசைய விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டவள், “ஒழுங்கா நோட்டை பார்த்து சொல்லுங்க!” என்றாள்.

சரியாகத்தான் எழுதியிருந்தாள்.