“அவங்க ரெண்டு பேரும் சாதாரணமாவே அப்படித்தான் பேசிக்குவாங்க ஆச்சி. அவர் நல்லா திருந்திட்டார், இனி மாற மாட்டார், சீக்கிரம் ஏதாவது வேலைக்கும் ஏற்பாடு செஞ்சு தரணும்” என்றான் பார்த்தி.
தான் வேலை செய்யும் பள்ளியிலேயே செக்யூரிடி வேலைக்கு கேட்டு பார்க்கலாம் என அவள் சொல்ல, அவனும் சரி என்றான்.
அண்டை வீட்டார்களை எல்லாம் அழைத்திருக்கவில்லை வளர். மகனின் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு. பதினைந்து சிறார்கள் வந்திருந்தனர். வளரின் அம்மா சுஹானாவின் விரித்து விடப் பட்டிருந்த கூந்தலில் மல்லி சரத்தை சூட்டி விட்டார்.
அவளது தோள் வரை மட்டுமே முடி இருக்க, தோள் தாண்டி வழிந்தது மலர் சரம். பூவை கையால் தொட்டுப் பார்த்த சுஹானா கணவனை பார்த்து, “அடிக்கடி என்னை இப்படி ஜோக்கர் ஆக்கி விட்டிடுறாங்க, இதுக்காகவே நான் முடி வளர்க்கணும் போல” என்றாள்.
“இதும் பார்க்க நல்லாத்தான் இருக்கு, அப்படியே விடுங்க” என்றான்.
அப்பாவும் அம்மாவும் அருகருகில் நின்று கேக் வெட்டவும் வளரின் மகனுக்கு அத்தனை மகிழ்ச்சி. அவனது கள்ளமில்லா சிரிப்பை கண்ட சுஹானாவுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
“என்னை படிக்க வைக்கிற அங்கிள் இவங்கதான்” என சொல்லியே பார்த்தியை தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் வளரின் மகன்.
அப்போது ஒன்றும் சொல்லாத பார்த்தி, விழா முடிந்து புறப்படும் போது வளரின் பையனை தன்னருகில் அமர வைத்துக் கொண்டான்.
“கண்ணா… அம்மா கேட்டுகிட்டதால அங்கிள் ஏதோ செய்றேன், அம்மாதான் உன்னை படிக்க வைக்கிறாங்க, அங்கிள் இல்லை. புரிஞ்சுதா?” என தன்மையாக சொன்னான்.
“ஃபீஸ் நீங்கதானே அங்கிள் கட்டுறீங்க?” எனக் கேட்டான் குழந்தை.
“அம்மா அங்க வேலை செய்றாங்க இல்லையாடா கண்ணா, அவங்க பணம்தான் அது” என பார்த்தி சொல்ல, அந்த குழந்தையும் சரி என சொல்லி நண்பர்களுடன் விளையாட வெளியில் சென்று விட்டான்.
மற்றவர்களிடமும் ‘நான் உதவி செய்கிறேன் என அவனிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டாம்’ என அறிவுறுத்தி விட்டே புறப்பட்டான் பார்த்தி.
வளரின் வீட்டில் அமைதியாக இருந்த சுஹானா வழியில்தான் காரணம் கேட்டாள்.
இப்போது அத்தனை விவரம் இல்லாத குழந்தை, வயது கூட கூட தன் பெற்றோர் தன்னை படிக்க வைக்கவில்லை என நினைக்க கூடும், பெரியவன் ஆனதும் அந்த மனநிலை நீடித்தால் சரியாக வராது, உண்மையில் என் உதவி கூட வளர் அக்காவை வைத்துதானே? அம்மா படிக்க வைக்கிறார் என அவன் அறிந்து கொள்வதே நல்லது என விளக்கினான் பார்த்தி.
எந்தளவு யோசிக்கிறான் என கணவன் மீது பிரமிப்பும் பெருமையும் பொங்க, அவனது இடுப்பை வளைத்திருந்த கையை இறுக்கிக் கொண்டாள்.
“ஹ்ம்ம்… பரவாயில்லை பார்த்தி ஸாருக்கு என் முகம் பார்க்காட்டி நல்லா பேச வருது” என கிண்டல் செய்தாள்.
“அதென்னமோ நிஜம்தான், உன் முகம் ஆச்சியாதான் எனக்குள்ள பதிஞ்சு போயிருக்கு”
“ஓஹோ! அதுதான் ஸார் அப்பப்ப என் முகத்தை அவாய்ட் பண்ணிட்டு கண்ட மேனிக்கு கண்ணா அலைய விடுறீங்களே”
“ஹையோ அப்படிலாம் இல்லை, நீங்க தப்பா…” என அவன் சமாளிக்க, அவனது தோளில் தட்டி, “பொய் பேசக்கூடாது பார்த்தி!” என கண்டிப்போடு சொன்னாள்.
“பொய் எல்லாம் இல்லை, தப்பாதான் புரிஞ்சுருக்கீங்க, முகத்தையும் அவாய்ட் பண்றதெல்லாம் இல்லை, கண்ணு மூக்கு லிப்ஸ்னு எதையும் விட்டு வைக்காம நல்லாவே பார்க்கிறேன்” என்றான்.
சுஹானா அதிர்வாக வாய் பிளக்க, “என்ன பேச்சை காணோம்?” எனக் கேட்டு திரும்ப போனான் பார்த்தி.
“ரோட் பார்த்து ஓட்டுங்க பார்த்தி, ஃபைவ் மினிட்ஸ்ல வீடு வந்திடும், சாவகாசமா என் முகத்தை பார்க்கலாம்” என்றாள்.
பைக் கண்ணாடி வழி அவளது முகத்தை பார்த்து ரசித்து விட்டுத்தான் சாலையில் கவனம் வைத்தான்.
வீடு வந்த பிறகு முதல் வேலையாக கதவை அடைத்தவன் அவளை பிடித்து கையணைவில் வைத்துக் கொண்டான்.
நாடியை நிமிர்த்தி அவளை தன்னை பார்க்க செய்தவன், வெட்கத்தால் அவளது முகத்தில் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் அணு அணுவாக ரசித்தான்.
கண்களை மூடி நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டான்.
“என்ன பூ வாசம் பிடிக்கிறீங்களா பார்த்தி?” என மெல்லிய குரலில் கேட்டாள்.
“எனக்கு இந்த பொண்ணோட வாசத்தைத்தான் அனுபவிக்கனும்” என சொல்லி அவளது மூக்கோடு மூக்கு உரசினான்.
“ஆசைதான், அவ்ளோ சீக்கிரம் எல்லாம் நடக்காது பார்த்தி” என செல்ல குறும்போடு சொன்னாள்.
“ஏன் சுஹா?” என அவன் கேட்ட விதமே அவளை மயக்கியது.
“ரொம்ப நாள் வெயிட் பண்ண வச்சிட்டீங்க”
“நான் செய்த தப்பை நீயும் செய்யக் கூடாது” என்றவன் அவளது இதழ்களில் ஆழ்ந்து மீள முடியாமல் மீண்டான்.
அவனது தோளில் கை வைத்து தள்ளியவள், “இப்ப டின்னர் செய்ய ஸ்டார்ட் பண்ணினாதான் நேரத்துக்கு செஞ்சு முடிச்சு தூங்க முடியும்” என்றாள்.
“ஆர்டர் பண்ணிக்கலாம்”
“அதெல்லாம் வேணாம், சிம்பிலா ஏதாவது செய்யலாம்” என சொல்லி ஆடை மாற்ற சென்று விட்டாள்.
ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை இயல்புக்கு மீட்டெடுத்துக் கொண்டான். அவனை ஒரு வழி படுத்துவது என முடிவு கட்டியிருந்தாள் போலும் அவள். சுஹானா அணிந்திருந்த கையில்லாத டி ஷர்ட் இடைக்கும் மேலே ஏறியிருந்தது. இரண்டு சாண் அளவுக்கும் குறைவாக இருந்த குட்டி ஸ்கர்ட்’டும் சேர்ந்து கொண்டு அவனை சோதனை செய்தது.
அவனுடன் இருக்கும் போது அவளது இரவு உடை அவளுக்கு வசதி போலத்தான் என்றாலும் இன்றைய உடை அளவுக்கு இருந்ததில்லை.
எச்சில் கூட்டி விழுங்கியவன், “ஏன் ஆச்சி… இந்த ட்ரெஸ் நீங்க குழந்தையா இருந்தப்போ எடுத்ததா, பத்திரமா வச்சிருந்து இப்ப போட்டுக்கிறீங்களா?” எனக் கேட்டான்.
தைரியமாக அவளை அளவிட்டவன், “நல்லா இல்லாம என்ன? கண்ணுக்கு குளிர்ச்சியாவே இருக்கு” என்றான். மயங்குவது போல அவன் கண்களை சுழற்றி காட்ட, அவளும் தலை குனிந்து சிரிப்பை அடக்கினாள்.
“ம்ம்… வெட்கம் வேறயா ஆச்சி!”
“நீங்களா நினைக்காதீங்க, அதென்ன அப்பப்ப சுஹானா நடு நடுவுல ஆச்சி?” என நொடிப்பாக கேட்டவள், “இதுல வாத்திக்கு எல்லாம் இன்னிக்கே நடக்கணுமாம்!” என சொல்லிக் கொண்டே சமையலறை சென்றாள்.
மந்தகாச சிரிப்பை சுமந்து கொண்டே இலகுவான ஆடைக்கு மாறினான் பார்த்தி.
அவள் சட்னிக்கு வதக்கிக் கொண்டிருக்க, அவளின் பின் பக்கம் வந்து நின்று கரண்டி பிடித்த அவளின் கையை பிடித்துக்கொண்டு அவனும் சேர்ந்து வாணலியில் வதக்கினான்.
அவனது நெருக்கத்தில் தடுமாறி விடக்கூடாது என்ற முடிவோடு அவள் சமாளித்து நிற்க, அவளின் தோள் தொட்டவன், “எவ்ளோ ஸாஃப்ட் சுஹா நீ?” என்றான்.
முகத்தை மட்டும் திருப்பி அவனது விழிகளை சந்தித்தவள், “எங்க இப்ப சொல்லுங்க” என்றாள்.
அவன் பாவமாக பார்க்க, செல்ல கோவத்தோடு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“உன் கண் நீலமா இருந்தாதான் பிடிக்கும், கோவத்துல சிவக்க விட வேணாம்” என கொஞ்சினான்.