மதியம் தேர்வுப் பணிகள் பார்க்க சென்றால் மாலை புறப்பட தாமதமாகி விடும் என்பதால் அவனது பணியை வேறொருவருக்கு மாற்றம் செய்து கொடுத்து, விடுப்பு எடுத்துக் கொண்டு அவனும் கிளம்பி விட்டான்.
வீட்டில் கணவனை எதிர்பார்க்காதவள், “என்னாச்சு பார்த்தி? அங்கேயும் ஏதும் பார்ட்டி மீட்டிங்’கா?” என வியப்பாக கேட்டாள்.
பதில் தராதவனது முகம் கலக்கமாக இருக்கவும் அவனை நெருங்கி நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.
“உடம்பெல்லாம் நல்லாருக்கு ஆச்சி” என்றான்.
“அப்போ மனசு சரியில்லையா? என்னாலதானே? காலைல ஏதோ மூட்ல அப்படி பேசிட்டேன் பார்த்தி, அதை யோசிச்சு யோசிச்சு எம்மேலயே எனக்கு கோவம்”
“குரு ஸார் வைஃப் என்ன பேசினாங்க உங்ககிட்ட?” என அவன் நேரடியாக கேட்கவும் துணுக்குற்றாள்.
“சொல்லுஙக ஆச்சி!” என சற்று அதட்டலாகவே கேட்டான்.
அவள் அப்படியே சொன்னாள். அதனால் எனக்கு உங்கள் மீது கோவம் என்பதையும் மறைக்காமல் சொன்னாள்.
“வெளில சொல்லாம உள்ளுக்குள்ளேயே வச்சு என்னை சுத்தல்ல விடுவீங்களா?”
“என்ன சுத்தல்ல விட்டேன்?”
“எதுக்கு அப்படி அப்நார்மலா நடந்துக்குறீங்கன்னு தெரியாம என் மண்டைய காய விட்டீங்க”
“அது… உங்களால எனக்கு என்ன பதில் சொல்ல முடியும்? நீங்க எம்பாரஸிங்’கா ஃபீல் பண்ண கூடாதுன்னுதான் கேட்டுக்கல”
“இனி நமக்குள்ள ஒரு பிரச்சனைனா தயவு பண்ணி ஓபனா கேட்ருங்க”
“ம்ம்…”
“என்ன ம்ம்ம்? நம்ம பெர்சனல் விஷயத்தை குரு ஸார்கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்கேன்னுதானே உங்களுக்கு கோவம்?” என அவன் கேட்க, ஆம் என்பதாக தலையாட்டினாள்.
திருமணத்துக்கு முன் தன் மனக் குழப்பத்தை சரி செய்து கொள்ள அவரிடம் பேசியதை சொன்னவன், “கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நம்ம பெர்சனல் நமக்குள்ள மட்டும்தான் இருக்கு ஆச்சி” என்றான்.
தவறாக புரிந்து கொண்டோமே என அவள் பார்க்க, “மேரேஜ்க்கு முன்னாடி நான் உங்களை ஏன் வேணாம்னு சொன்னேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்தானே ஆச்சி? அது ரொம்ப டெலிகேட்’டான விஷயம் இல்லையா? எனக்கு புரிதல் வேணுமா இருந்தது, ஸார் என்கிட்ட பேசினது என்கிட்ட ஓரளவு தெளிவையும் ஏற்படுத்திச்சு. இப்ப கூட அது எனக்கு தப்பா தெரியலை ஆச்சி.
அவர் அவரோட வைஃப் கிட்ட சொல்லி, அவங்க உங்கள்ட்ட கேட்பாங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. இன்னிக்கு அவரே என்கிட்ட வந்து சொன்னார், ஆனா என்கிட்ட சொல்லியிருக்க வேண்டிய நீங்க அதைப் பத்தி வாயே திறக்காம என்னை அவாய்ட் பண்ணி ரெண்டு நாளா மூஞ்ச தூக்கி வச்சுகிட்டுன்னு எவ்ளோ படுத்தி வச்சிட்டீங்க? உங்களை என்ன பண்ணலாம்?” எனக் கேட்டான்.
அவள் மன்னிப்பாக தன் காதுகளை பிடித்துக்கொண்டாள். அவள் கைகளை விலக்கி விட்டவன், “இனி இப்படி நடக்காதீங்க” என அழுத்தமாக சொல்லி அறைக்கு நடந்தான்.
அவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவள், “ஸாரி பார்த்தி” என கெஞ்சலாக சொன்னாள்.
அவளை முன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டவன், “காலைல என்ன சொன்ன? என் பார்வையும் பாடி லாங்வேஜும் என்ன பேசிச்சு உன்கிட்ட?” எனக் கேட்டான்.
அவள் அதிர்வோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது விழிகளை சந்தித்த நொடி அவனுள் சிறு தடுமாற்றம். ஒருமையில் பேச வர மாட்டேன் என்றது. பட்டென அவளது முகத்தை தன் மார்பில் வைத்து அழுத்திக் கொண்டவன், “சொல்லு சுஹானா, என் பார்வைல என்ன கண்டுபிடிச்ச நீ?” எனக் கேட்டான்.
“மூச்சு முட்டுது பார்த்தி” என அவள் சொல்லவும் அவளை இலகுவாக விட்டான்.
அவ்வளவுதானே என்பது போல பார்த்தவனுக்கு அது அத்தனை எளிதாக இல்லை.
“அப்போ அதெல்லாம் சொல்ல முடியாது” என கிண்டலாக சொன்னாள்.
“ஆச்சி!” என கெஞ்சினான்.
“உங்க கிராமத்துல யாரும் அவங்க வைஃபை இப்படி வாங்க போங்கன்னு மரியாதையா கூப்பிடுறது இல்லை, நீங்க மட்டும் என்ன ஸ்பெஷல்? போங்க வேலை இருந்தா போய் பாருங்க” என்றாள்.
அவன் அங்கேயே நிற்க, கண்டுகொள்ளாமல் சென்று விட்டாள் அவள்.
வளரின் மகனுக்கு வாங்கிய பரிசுப் பொருட்களை தயாராக பையில் எடுத்து வைத்து, அணிய வேண்டிய ஆடையையும் எடுத்து வைத்து என அவள் வேலையாக இருக்க, “சொல்லுங்க ஆச்சி” என கெஞ்சிக் கொண்டு அவளின் பின்னாலேயே சென்று கொண்டிருந்தான் அவன்.
கணவன் தன்னை சுற்றி வருவதை மனதிற்குள் ரசித்துக் கொண்டே இன்னும் சுற்றலில் விட்டாள் அவள்.
மாலை விழாவுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்க, தரையில் படுக்கையை விரித்து படுத்து விட்டாள். அவனும் அவளின் பக்கத்தில் படுத்துக் கொண்டான்.
இரண்டு தினங்களாக இருந்த மன பாரம் குறைந்திருக்க இருவரும் உறங்கி விட்டார்கள். மாலையில் குளியல் போட்டு தயாராகி வளரின் இல்லத்துக்கு புறப்பட்டார்கள்.
வளரின் கணவன்தான் அவர்களை வரவேற்றது. இன்னும் மறுவாழ்வு மையத்தில்தான் இருக்கிறான், இப்போது நல்ல முன்னேற்றமாம் அவனிடம், மகனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வீட்டுக்கு வந்திருக்கிறானாம்.
பார்த்தியின் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்ட வளரின் கணவன், “நான் பழைய படி மனுஷனா ஆவேன்னு நினைச்சதே இல்லை, நீ எனக்கு சாமி மாதிரி சார்” என்றான்.
“யாரும் யாருக்கும் கடவுள் இல்லை, நானும் சாதாரண மனுஷன்தான்” என்றான் பார்த்தி.
“நீங்க சொல்லுங்கமா, இவர் என்ன சாதாரண மனுஷனா? எனக்கு வாழ்க்கை கொடுத்தவரு” என சுஹானாவிடம் சொன்னான் வளரின் கணவன்.
“இந்த கடவுள் மனுஷன் டாபிக்’கை விட்ருவோம், உங்க வைஃப் நம்பிக்கையை பொய் ஆக்காம நல்லா வாழ வைங்க அவங்கள” என்றாள் சுஹானா.
“கண்டிப்பாங்க” என உண்மையாக சொன்னான் அவன். வளரின் முகத்திலும் மகிழ்ச்சி காணப் பட்டது. வளரின் அம்மாவுக்கு இன்னும் மாப்பிள்ளையின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை, பேரனை அவன் பக்கத்தில் விடாமல் வைத்துக் கொண்டார்.
“ஐய அத்தை அது என் மவன்” என வளரின் கணவன் வம்பாக சொல்வதும், “இத்தினி நாளா உன் கண் அவிஞ்சு கெடந்துச்சுதானே? அப்பால போ” என வளரின் அம்மா பேசுவதும் என இருந்தார்கள்.
அவர்களை வேடிக்கை பார்த்திருந்த சுஹானா, “அச்சோ பார்த்தி! இதென்ன நல்லா இருக்கிறவரை இவங்களே கோவ படுத்தி விட்ருவாங்க போல” என கவலையாக சொன்னாள்.