கைப்பேசியை தள்ளி வைத்தவள் முழங்காலில் முகம் புதைத்துக் கொள்ள போக, “ஆச்சி…” என்ற பார்த்தியின் அழைப்பில் திரும்பி பார்த்தாள்.

எல்லாம் அவனும் கேட்டிருக்கிறான் என்பது அவனது முகத்தை பார்க்கவுமே அவளுக்கு புரிந்தது. அப்பா தன் கணவனை பேசியதில் அவளுக்கு ஏற்பட்டிருந்த வேதனை,  அது அவனுக்கும் தெரிந்ததே என்பதில் இரட்டிப்பாகி விட்டது.

பார்த்திக்கு ஆஷுதோஷ் மீது கோவத்தை கடந்து வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அவர் அப்படித்தான் எனும் போது,  அவர் சொல்லும் வார்த்தைக்கு மதிப்பு தந்து வருத்தம் கொள்வதால் நன்மை என்ன கிடைக்க போகிறது என நினைத்து அவர் பேசியதை தள்ளி வைத்து விட்டான்.

ஆனால் சுஹானாவால் அப்படி எடுத்துக் கொள்ள முடியாது என அவனுக்கு தெரியும்.

எழுந்து தன்னிடம் வந்தவளின் கையை ஆறுதலாக பிடித்துக்கொண்டான். அவளோ அவனை அணைத்துக் கொண்டு தேம்பினாள்.

“அவர் பேசினதை எல்லாம் மனசுக்கு ஏத்தக் கூடாது ஆச்சி. உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு வந்தேன், அவர் சொன்ன ஒரு வார்த்தை நம்மளோட இனிமையான நேரத்தை ஸ்பாயில் ஆக்குறதை நான் அனுமதிக்க மாட்டேன்” என்றான்.

“எனக்கு என் மேலதான் வருத்தம் பார்த்தி. பழைய விஷயத்துக்கே அவர் உங்கள்ட்ட மன்னிப்பு கேட்காதப்போ என் கோவத்தை ரொம்ப ஸ்ட்ராங்கா அவர்கிட்ட காட்டியிருக்கணும்”

“அப்போ ஆறு மாசத்துகிட்ட அவர் கூட பேசாமதானே இருந்தீங்க ஆச்சி?”

“ஆனா பேசினது தப்புன்னு அவர் ரியலைஸ் பண்றதுக்கு முன்னாடியே பேசிட்டேனே, நான் இறங்கி போனதாலதான் உங்களுக்கான மரியாதையை அவர் தர மாட்டேங்குறார்”

“உங்கப்பா பத்தின பேச்சையும் அவர் பேசினதையும் விடுவோமா ஆச்சி?” என சற்றே எரிச்சலுடன் கேட்டான்.

கலக்கத்துடன் அவள் அவனை  நிமிர்ந்து பார்க்க, “ப்ச்… உங்க மேல இல்லை இரிடேஷன்” என சமாதானம் சொன்னான்.

அவளும் கண்களை துடைத்துக் கொண்டு, “வெளில போலாமா?” எனக் கேட்டாள்.

“ஹையோ அவ்ளோ டைம் இல்லை எனக்கு, கண்டிப்பா அடுத்த வாரம் போலாம். இப்ப… வாங்க உங்களுக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் பண்ணலாம்”  என்றான்.

“கிடைக்கிறதே கொஞ்ச நேரம்தான், அதிலேயும் சமைக்க போறீங்களா?”

“பேசிட்டு இருந்தா திரும்ப திரும்ப உங்க அப்பாகிட்டேயேதான் பேச்சு வந்து நிக்கும், நீங்க வாங்க” என அவளை இழுத்துக் கொண்டு சமையலறை சென்றான்.

மசாலா பொறி செய்ய எல்லாம் எடுத்து வைத்ததவன் தேநீரும் போட்டான். என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு அவளும் உதவினாள். பின் சேர்ந்து சாப்பிட்டார்கள், அவளும் ஓரளவுக்கு தன்னை மீட்டுக் கொண்டாள்.

“எனக்கு வேலை இருக்கு ஆச்சி, நீங்க வேணா தாத்தா வீட்டுக்கு போங்களேன்” என்றான்.

“இல்லை பார்த்தி, நீங்க பாருங்க, நான் இங்கேயே இருக்கேன்” என்றவள் அவனை இறுக அணைத்து பின் விட்டாள்.

அவளை விடாமல் இழுத்து அணைத்துக் கொண்டவன், அவளது தலையை தடவிக் கொடுத்து, “நீங்க பக்கத்துல இருக்கும் போது எதுவும் என்னை அஃபெக்ட் பண்ணாது. நீங்க என்ன நினைக்கிறீங்கங்கிறதுதான் எனக்கு முக்கியம், புரிஞ்சுதா?” என்றான்.

 சரி என்பதாக தலையாட்டிக் கொண்டவள், “நான் டாடிக்காகலாம் எதுவும் சொல்லலை பார்த்தி, நிஜமா உங்க பக்கத்துல நான் ஹேப்பியா இருக்கேன்” என்றாள்.

அவளது முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன், “தாத்தா வீட்டுக்கு போகலைனா வாங்க, எனக்கு பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டியிருக்கு, எடுத்து கொடுங்க” என வேலை சொன்னான்.

அவளும் மகிழ்ச்சியோடு அவனுக்கு உதவினாள்.

அன்றிலிருந்து அப்பாவிடம் பேசுவதை விட்டு விட்டாள். பேசிக் கொண்டிருக்கும் போதே எப்படி அழைப்பை துண்டித்தாள் என மகள் மீது கோவம் கொண்ட ஆஸுதோஷும் அவளுக்கு அழைக்கவில்லை.

அவர் என்ன பேசினார் என்பது பார்த்தி சுஹானா இருவருமே வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. அப்பாவும் மகளும் பேசிக் கொள்வதில்லை என்பது காயத்ரிக்கு தெரிய வரவே இல்லை.

நிவாஸ் தன் காதலியின் இருப்பிடம் தேடி சென்று அவளை சமாதானம் செய்திருந்தான். அவனை மறக்க முடியாத யாமினியும் அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பதாக முடிவு செய்து விட்டாள். தாங்கள் இணைந்த விஷயத்தை முதலில் தங்கையிடம்தான் பகிர்ந்து கொண்டான் நிவாஸ்.

அண்ணனுக்கும் வருங்கால அண்ணிக்கும் வாழ்த்துகள் சொல்லி தன் மகிழ்ச்சியையும் தெரியப்படுத்தினாள் சுஹானா.

யாமினிக்கு அதிக நெருக்கடி தராமல் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என அண்ணனுக்கு அறிவுரை சொல்லவும் மறக்கவில்லை சுஹானா.

அடுத்து வந்த வார இறுதியில் மனைவியுடன் மகாபலிபுரம் சென்று வந்தான் பார்த்தி. ஒருவருக்கு மற்றவரின் அருகாமை மனதில் தித்திப்பை கொடுத்தது.

அவனது ஆராய்ச்சி வேலைகளின் போது தன் நேரத்தை உபயோகமாக மாற்ற புதிய வழியை கண்டறிந்து கொண்டாள் சுஹானா. ஆர்வத்தோடு செய்யும் அந்த வேலை அவளுக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது.

தாத்தாவும் பாட்டியும் ஆன்மீக சுற்றுலா கிளம்பினார்கள். வருடந்தோறும் அவர்கள் செல்வதுதான். இருவரையும் சுற்றுலா செல்லும் குழுவினரோடு இரயிலில் ஏற்றி விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர் பார்த்தி, சுஹா இருவரும்.

வளர்மதியின் மகனுக்கு இன்னும் இரண்டு நாட்களில் பிறந்தநாள் வருகிறது. சின்னதாக வீட்டில் விழா வைத்திருக்கிறாள். பார்த்தி, சுஹா இருவரையுமே அழைத்திருந்தாள்.

கணவனுக்கு நினைவு படுத்திய சுஹானா ஏதாவது பரிசுப் பொருள் வாங்கலாம் என்றாள். ஆடை, பொம்மை, ஸ்டேஷனரி பொருட்கள் என வாங்கிக் கொண்டு வழியில் பார்த்தியின் கைடு குருமூர்த்தியின் இல்லத்திற்கு சென்றனர்.

“எப்போலேருந்து கூப்பிட்டிட்டு இருக்கேன், இப்பதான் டைம் கிடைச்சுதா உனக்கு?” என பார்த்தியிடம் கேட்ட குரு, சுஹானாவை அன்பாக வரவேற்றார். அவரின் மனைவியும் இன்முகத்துடன் பேசினார்.

உடனே புறப்படலாம் என நினைத்துதான் வந்திருந்தனர், இரவு உணவை முடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தி இருக்க வைத்து விட்டனர்.

குருவின் மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கிறார்கள். இப்போது வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே. குருவின் மனைவி சமைக்க, அவருக்கு உதவி செய்தாள் சுஹானா.

பேச்சு வாக்கில் ‘உன்னை திருமணம் செய்ய பார்த்திக்கு நிறைய தயக்கம், என் கணவர்தான் தைரியப் படுத்தி சம்மதம் சொல்ல வைத்தார்’ என்பதை சொல்லி விட்டார் திருமதி குரு. அப்படியே, “உன்னை வைஃபா நினைச்சு வாழ முடிய மாட்டேங்குதுன்னு பார்த்திக்கு கவலை, எனக்கும் அவருக்கும் கூட அதை நினைச்சு வருத்தம், உங்களுக்குள் எல்லாம் சரியாகிடுச்சா?” என வேறு கேட்டார்.

குருவின் மனைவி கெட்டவர் என்றில்லை, அடுத்தவர் விஷயங்களை தெரிந்து கொள்வதில் அதிகப் படியாகவே  ஆர்வம் காட்டுபவர்.