பார்த்தியின் கனவில் கடல் கன்னி உருவத்தில் சுஹானா நீந்திக் கொண்டிருக்க, அவளை கையில் பிடிக்க அவனும் நீந்தினான். கடல் குளமாக மாறியது, கடல் கன்னிக்கு நீச்சல் தெரியாமல் தத்தளிக்க ஆரம்பித்தாள். அவளைப் பிடித்து விட்ட பார்த்தி தன்னோடு அணைத்துக் கொண்டான்.
கடல் கன்னி மூர்ச்சையாகியிருக்க அவளுடன் கரையை நோக்கி நீந்த முற்பட்டான். கரையே தென் படாமல், நான்கு பக்கமும் நீர், என்ன இது என குழம்பிப் போனவன் கடல் கன்னியின் முகத்தை பார்க்க, அவள் குறும்பாக சிரித்தாள்.
முத்தமிட அவனை நெருங்கியவள் முத்தமிடாமல் விலகிச் செல்ல, ஏமாற்றம் தாளாதவனாக அவளைப் பற்றி இழுத்து அவளின் இதழ்களில் முத்தமிட்டான்.
கண்களை மூடி அந்த இனிமையை அனுபவித்துக் கொண்டிருந்தவன் இமைகளை திறக்க, அவனது பிடியில் சுஹானா. இருவருக்குமான நெருக்கம் சொன்னது அந்த முத்தம் வெறும் கனவல்ல என்பதை.
“பார்த்தி என்னாச்சு உங்களுக்கு?” என அவள் பேசியதில் எழுந்த உஷணக் காற்று அவனது முகத்தை தொட்டது.
“இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல வேணாம், தூங்குங்க” என்றவள் உரிமையாக அவனது அணைப்பில் தன்னை வைத்துக் கொண்டாள்.
அதற்கு மேல் அவன் உறங்கின மாதிரிதான்! ஆனால் அவனுக்கு அப்படி உறக்கம் வராமல் அவளின் நெருக்கத்தில் தவிப்பது பிடித்திருந்தது.
அவளது சருமத்தின் மென்மையை அனுபவித்துக் கொண்டே விழித்துக் கிடந்தான்.
அடுத்த நாள் காலையே அஸ்வினி தன் குடும்பத்துடன் வந்து விட்டாள். புது அண்ணியுடன் சகஜமாக பழக அவள் கூச்சப் பட்டாலும் இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு இயல்பாக்கினாள் சுஹானா. “த்தை த்தை…” என அஸ்வினியின் மகளும் சுஹானாவையே சுற்றி வந்தது.
மதியமே மகன் மருமகளை தயாராக சொல்லி விட்டார் சரஸ்வதி.
கரும்பச்சை வண்ண பட்டு உடுத்தி ஜொலித்தாள் சுஹானா. பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தான் பார்த்தி. வந்தவர்கள் அனைவருமே தனித் தனியாக அவர்களுக்கு நலங்கு செய்து வாழ்த்து சொன்னார்கள்.
ஊர்க் காரர்களும் மருதுவுமே பந்தியை பார்த்துக் கொண்டனர். இறுதியாகத்தான் புது மண மக்கள் சாப்பிட வந்தனர். ஒருவரை மற்றவருக்கு ஊட்டி விடச் சொல்லி படுத்தினான் மருது.
பார்த்தி அவனை முறைக்க, “நேத்து அன்னாசி ஊட்டி விட்டவனுக்கு இப்ப அல்வா ஊட்ட மட்டும் வெட்கமோ?” என அவனது காதில் கேட்டு வைத்தான் மருது.
“பார்த்த மாதிரி பேசாத போடா!” என்றான் பார்த்தி.
“வாங்கின கத்திய அப்படியே போட்டுட்டு வந்தவன் ஒரு நிலைல இருந்திருக்க மாட்டேன்னு தெரியாதா எங்களுக்கு, நான் கல்யாணம் கட்டி ரெண்டு புள்ளைக்கு அப்பன்டா” என ரகசியமாகவே சொன்னான் மருது.
“என்னடா உன் பிரச்சனை?” என பார்த்தி பல்லை கடிக்க, “ஊட்டி விடுடா தங்கச்சிக்கு” என அதட்டினான் மருது.
இனிப்பு எடுத்து மனைவிக்கு ஊட்டப் போனான் பார்த்தி, “அவன் விரலை நல்லா கடிச்சி விடுமா தங்கச்சி!” என தீவிர தொனியில் சொன்னான் மருது.
சுஹானா குழப்பமாக பார்க்க, “இங்க அது சடங்குமா, ம்ம்…” என்றான் மருது.
நிஜமென நம்பிய சுஹானாவும் பார்த்தியின் விரல்களை கடித்து விட்டாள். அவன் ஆ என அலற, மற்றவர்கள் சிரிக்க, நடந்ததை புரிந்து கொண்ட சுஹானாவும் சிரித்தாள்.
“விளையாட்டு பேச்சுக்கும் வினைப் பேச்சுக்கும் வித்தியாசம் தெரியாத புள்ளடா தங்கச்சி, நல்லா பார்த்துக்க, ம்ம்… இன்னும் ரெண்டு வாய் ஊட்டு” என்றான் மருது.
“ஹையோ அண்ணா! அவ்ளோ இன்னொசன்ட்லாம் இல்லை நான், நீங்க பேசின தொனில ஏமாந்திட்டேன்” என்ற சுஹானா, கணவனிடம், “ஸாரி பார்த்தி” என்றாள்.
“என்ன ஆச்சி நீங்க, அவன் சொன்னா என்னை பார்க்க மாட்டீங்களா?” எனக் கேட்டான் பார்த்தி.
“இவ்ளோ பேர் மத்தியில உங்க பக்கம் திரும்பவே ஷையா இருக்கு பார்த்தி” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னாள்.
“சும்மா பார்க்கிறதுக்கு போய் அப்படியொன்னும் கிண்டல் செஞ்சிட மாட்டாங்க ஆச்சி”
“ம்ம்… உங்க பக்கம் திரும்பினா கண் எடுக்க முடியாம போயிடும், அப்போ கிண்டல் செய்வாங்கதானே?” என அவள் கேட்க, “ஆச்சி!” என சிரித்தான்.
“என்னப்பா ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிட்டே இருக்காங்க, என்னவா இருக்கும்?” என சத்தமாக ஒருவன் சந்தேகம் கேட்க போய்தான் இவர்கள் பேசிக் கொள்வதை நிறுத்தி விட்டு சாப்பிடுவதில் கவனம் வைத்தனர்.
“ஓஹோ! ஒருத்தர் சொன்னா எடுபடாது, ரெண்டு பேரும் சொன்னாதான் எடுபடும், அந்த கதையைதானே பேசிக்கிறாங்க?” என அந்த மாமாவும் நையாண்டி செய்தார்.
புரியாத சுஹானா என்னவென கணவனிடம் கேட்க, அவனுக்கே தெரியவில்லை.
“அட காதல்… அதைத்தான் சொல்றாரு மாமா” என்றாள் ஒரு பெண்.
“லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்க லவ் கதையை பேசாம உங்க கொட்டாயில நிக்கிற காளை மாட்ட பத்தியா மாமா பேசுவாங்க?” எனக் கேட்டான் மருது.
எல்லாரும் கொள் என சிரிக்க, வெட்கம் சுமந்த விழிகளோடு கணவனை பார்த்தாள் சுஹானா. அவனும் வெட்கம் துளிர்க்க புன்னகை செய்தான்.
அந்த இடம் கல கலவென இருக்க, எப்படி ஆட்கள் கூடினார்கள் என தெரியவில்லை. இளையவர்களும் முதியவர்களும் புதிர் போடுகிறோம் என ஆளாளுக்கு ஆரம்பித்து விட்டனர்.
“புதுசா தோட்டத்துல நட்டு வச்ச மரிக் கொழுந்து, இனி தோட்டதுக்கே நாட்டாமையாம், அது என்ன?” எனக் கேட்டார் ஒரு பாட்டி.
சுஹானாவின் பின் பக்கம் வந்து அவளை பிடித்துக்கொண்ட மருதுவின் மனைவி, “பொண்டாட்டிதான்” என்றாள்.
மருது விசில் அடித்து தன் மனைவியை பாராட்டினான்.
“டேய் ஈஸியான புதிர், உன் சம்சாரம் பதில் சொன்னதால ஆடாதடா” என அவனை அடக்கினான் பார்த்தி மற்றும் மருதுவின் இன்னொரு நண்பன்.
“எப்பவும் அவன் ஆமாம்னுதான் சொல்லணும், வேற ஆப்ஷனே இருக்காது. அவன் யாரு, அவன்தான் டா புருஷன்” என புதிரையும் அதற்கான விடையையும் சொன்ன மருது, பார்த்தியின் தோளில் தட்டி, “நல்ல புருஷனா இருக்கணும், இல்லை விளைவுகள் மோசமா இருக்கும்!” என மிரட்டினான்.
“அதுக்கு முன்னாடி ராத்திரில பேசலைனா அவஸ்தை, அதுக்கு அப்புறம் ராப் பொழுதுல பேசிட்டே இருந்தா அவஸ்தை, அது என்ன?” எனக் கேட்டார் மாடு வளர்க்கும் மாமா.
யாரும் பதில் சொல்லாமல் ஒரே சிரிப்பு, யோசித்த பார்த்தி கூட என்னவென புரிந்து, தன்னை கிண்டலாக பார்ப்பவர்களின் பார்வையை தண்ணீர் குடித்து சமாளித்தான்.
“என்னதிது யாரும் ஆன்சரே சொல்லாம இப்படி சிரிக்கிறீங்க?” என அனைவருக்கும் பொதுவாக கேட்டாள் சுஹானா.
“ஆச்சி… சும்மா இருங்க” என பார்த்தி சின்னக் குரலில் சொல்ல, “ஆமாம், பேராண்டி எல்லாத்தையும் அப்புறம் விளக்கி சொல்லுவான்” என்றார் ஒரு பாட்டி.
“இன்னுமா சொல்லி தராம இருக்க போறான்?” என இன்னொரு பாட்டி கேட்க, மீண்டும் சிரிப்பலை.
சுஹானா ஒன்றும் புரியாமல் தன் கணவனை பார்த்து விழித்தாள். அவன் தன் நண்பனை கெஞ்சலாக பார்க்க, மருதுதான் மனது வைத்து கூட்டத்தை கலைத்து விட்டான்.
வந்தவர்கள் புறப்பட, அவர்களை வழியனுப்பி வைப்பதிலேயே நேரம் சென்றது. அஸ்வினியும் தன் குடும்பத்துடன் கிளம்பி விட்டாள். விடியற்காலையில் பார்த்தியும் சென்னை புறப்பட வேண்டும் என்பதால் தாமதம் செய்யாமல் உறங்க சென்றனர்.
மாலையில் நடந்ததை மறக்காமல் அந்த புதிருக்கு அப்படியென்னதான் விடை என கணவனிடம் கேட்டாள் சுஹானா.
விடை சொல்லாத பார்த்தி, அந்த புதிரை நினைத்துப் பார்த்து சிரித்தான்.
“சொல்லிட்டு சிரிங்க பார்த்தி” என சிணுங்கினாள்.
“எங்கேஜ்மெண்ட் ஆனவங்க கல்யாணத்துக்கு முன்னாடி ராத்திரியெல்லாம் பேசிட்டே இருப்பாங்க, ஒரு நாள் பேசிக்கலைனா கூட அவங்களுக்கு கஷ்டம்” என்றான்.
“ம்ம்… கல்யாணத்துக்கு அப்புறம் நைட்ல பேசிட்டே…” என சந்தேகமாக கேட்க ஆரம்பித்த சுஹானாவுக்கும் விளங்கி விட, வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.
“லிமிட் தாண்டி பேசுறதா நினைக்க வேணாம் ஆச்சி, மனசுல ஏதும் வச்சுக்காம இப்படி கேலி பேசுவாங்க” என விளக்கம் சொன்னான் பார்த்தி.
“யாரையும் நான் தப்பா நினைக்கல பார்த்தி, ஆனா நாம கல்யாணம் முன்னாடி அப்படி நைட் முழுக்க பேசிகிட்டோமா என்ன? இப்ப கல்யாணம் முடிஞ்சுதான் பேசிட்டே இருக்கோம், அவங்க புதிர் நமக்கு செட் ஆகாது” என்றாள்.
“பிற்பாதி சீக்கிரம் நமக்கும் பொருந்தும்தானே?” என கேட்டு விட்டவன் பின் நெற்றியை தட்டிக் கொண்டு சிரித்தான்.
“எஸ் எஸ் பார்த்தி, கல்யாணத்துக்கு முன்ன அனுபவிக்க வேண்டிய முற்பாதி இப்போ, பிற்பாதி அப்புறம்” என்றாள் அவள்.
தயக்கமாக ஏறிட்டவன் பின் துணிந்து அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
“பார்த்தி…” என காதல் நிறைந்த குரலில் அவனது பெயரை சொல்லிய படியே அவனுள் ஒன்றிக் கொண்டாள் சுஹானா.