“நான்… அங்க… கரைல இருக்கேன்” என பட படப்பாக சொல்லி கரையேறி விட்டான்.
அப்படியே படியில் அமர்ந்து விட்டாள் சுஹானா. எந்த எண்ணத்தில் தன்னை நெருங்கினான் என்பது அப்பட்டமாக அவளுக்கு புரிந்தது. அவளுள்ளும் இனிய பட படப்பு.
ஈரம் சொட்ட சொட்ட கரையில் நின்றிருந்தவனோ கைகளால் தன் உடலை கட்டிக் கொண்டான். தன்னை கட்டுப்படுத்த இயலாமல் குளப் பக்கம் பார்த்தவனுக்கு அவள் தென்படவில்லை. படிகளில் இறங்கினால் அன்றி அவள் தெரிய மாட்டாள். அதில் அவனது மனம் ஏமாற்றம் கொண்டதோ? கண்டிப்பாக ஏமாற்றம்தான்!
சட்டையை கழற்றி, பிழிந்து, உதறி, பின் போட்டுக் கொண்டவன் வேஷ்டியையும் கீழப் பக்கம் பிழிந்து விட்டுக் கொண்டான்.
காலை உணவுக்காக வீடு வந்திருந்த மருது வீட்டின் பின் பக்கம் எட்டிப் பார்த்தான். நண்பனின் கோலத்தை கண்டு விட்டு உல்லாசமாக விசில் அடித்தான்.
மருதுவை எதிர் பாராதவன், “உன் கண்ணுலயா படணும் நான்?” என அலுத்துக் கொண்டே அவனிடம் சென்றான்.
“கரடியா வந்திட்டேனா நான்? அப்புறம் பேசிக்கிறேன் இப்ப என்ஜாய் பண்ணுடா” என சொல்லி நகரப் போன மருதுவை, நீ நினைப்பது போலவெல்லாம் இல்லை என சொல்லி நிறுத்தினான். பாம்பு கதை சொல்லி விளக்கம் கொடுத்த பார்த்தி, “அன்னாசி அறுக்க கத்தி ஏதாவது கொடு” என்றான்.
“ஆமாம் ஆமாம் நீ போட்ட ஆட்டத்துக்கு இந்நேரம் பசி எடுக்காம போனாதான் ஆச்சர்யம்டா” என நக்கலடித்து விட்டே சென்ற மருது, “அப்படியே கொஞ்சம் மிளகா தூளுடா” என்ற பார்த்தியின் வேண்டுகோளில் செல்ல முறைப்போடு அகன்றான்.
நண்பன் கேட்டதையெல்லாம் கொடுத்த மருது, “பார்த்துடா, இங்கேயே படுத்து தூங்கிட போறீங்க, வெயில் உச்சிக்கு வரும் முன்ன வீடு போய் சேரு” என சொல்லி சென்றான்.
மஞ்சள் செடியின் இலை பறித்து தன் சட்டையின் ஈரத்தில் அதை சுத்தம் செய்து கொண்டான். அன்னாசியின் தோலை நீக்கி அதில் வைத்தான்.
அதிக நேரம் நீரில் ஆடியதில் கண்கள் சிவந்திருக்க, ஒரு கையில் ஈர ஆடைகள் இருந்த பையிருக்க, மறு கையால் தலையின் ஈரத்தை துடைத்துக் கொண்டே வந்தாள் சுஹானா.
பூவரசம் மரத்தினடியில் அமர்ந்திருந்தவனின் கண்களை பறித்தாள் எனதான் சொல்ல வேண்டும். தன்னை அவன் ரசிக்கிறான் என்பதில் மகிழ்ச்சி, வெட்கம், பெருமை என எல்லாம் கலந்த உணர்வுடன் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவன் தந்த அன்னாசி பழத்துண்டை வாங்கி ஒரு வாய் சாப்பிட்டாள். இனிப்பு, புளிப்பு, உரைப்பு என எல்லா சுவையும் சுர் என சுவை நரம்பு வழி மூளைக்கு ஏற, வாயை குவித்து கண்களை மூடிக் கொண்டாள்.
மூன்று பழங்கள் அறிந்து வைத்திருந்தான். காலையில் காபி பருகியது, இப்போது மள மளவென சாப்பிட்டார்கள். கடைசி துண்டை சாப்பிட்டவளுக்கு காரம் அதிகமாக தெரிந்தது. மிளகாய் தூள் உதடுகளிலும் ஈசியிருக்க காரம் தாளாமல் தவித்தாள்.
“அச்சோ ஆச்சி! இருங்க தண்ணி வாங்கிட்டு வர்றேன்” என வேகமாக எழப் போனான் பார்த்தி. அதுவரைக்கும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என அவளுக்கு தோன்றி விட, காரம் கொடுத்த வேதனையில் புறங்கையால் உதடுகளை அழுத்திக் கொண்டாள்.
அவளது கண்களில் கண்ணீரை கண்டவனுக்கு நெஞ்சம் பதறியது. பையிலிருந்த ஈரத் துணியை எடுத்து அவளின் உதடுகளை துடைத்து விட்டு, பின்னரும் துணியை எடுத்து விடாமல் உதடுகளில் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டான். சில நிமிடங்களில் சரியாகி விட்டதாக அவள் சொல்ல, பெரு மூச்சு விட்டவனாக தளர்ந்து அமர்ந்தான்.
மிச்சமிருந்த அன்னாசி பழத்துண்டை என்ன செய்வது என்பது போல் அவள் பார்க்க, “ஆச்சி போதும், இதுக்கு மேல முடியாது என்னால” என்றான் அவன்.
“அப்படியா?” என அவள் கேட்க, அவனே அதை சாப்பிட்டு முடித்து, “கிளம்புங்க ஆச்சி, வீட்ல எதிர் பார்த்திட்டு இருப்பாங்க” என்றான்.
இருவரும் வீட்டை நோக்கி நடந்தனர். திடீரென, “எனக்கொரு டவுட் பார்த்தி” என்றாள்.
“ம்ம்…”
“என் லிப்ஸ் எரியுதுங்கிறப்போ கிஸ் பண்ணி சரி செய்யலாம்னு தோணலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
நடையை நிறுத்தி விட்டவன் அதிர்வாக அவளை பார்க்க, குறும்பாக பார்த்திருந்தாள் அவள்.
“பதில் இல்லையா? வேற கேள்வி கேட்கவா?” என சீண்டினாள்.
அவன் அமைதியாகவே இருக்க, “அந்த குளத்துல நான் உங்களை ஹக் பண்ணி நின்னப்போ கூட ஏதும் தோணலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.
அவன் சுற்றம் பார்த்து விட்டு திரும்பி நடக்க, “சொல்லுங்க பார்த்தி, உங்களுக்கு தோணவே இல்லையா, இல்லை அப்படிலாம் தோணி… பயத்துல வேணாம்னு விட்டுட்டீங்களா?” எனக் கேட்டாள்.
இப்போது அவளை விட்டு தள்ளி வேகமாக நடந்தான். மாடு பிடித்துக்கொண்டு சென்றிருந்த ஒருவர், “என்ன பார்த்தி ஈரமா இருக்க? புதுசா கல்யாணம் ஆன ஜோருல ஒன்னும் புரி படலையா உனக்கு?” என கிண்டல் செய்தார்.
“அட ஏன் மாமா நீங்க வேற” என சலித்தவனாக முன்னே சென்றான் அவன்.
அப்போதுதான் சுஹானாவை கவனித்தவர், “அட உன் சம்சாரமும் இருக்குதே? நீ ஏன் தள்ளி நடக்குற?” எனக் கேட்டார்.
அந்த மாமாவுக்கு என்ன பதில் சொல்லவென தெரியாமல் அவன் விழிக்க, அவனை காப்பாற்ற எண்ணி, “அது… நான் அன்னாசி பழம் கேட்டேன், தொண்டை அரிக்கும்னு வேணாம்னு சொல்லிட்டார், அதுல…” என ஆரம்பித்தவள் முடிக்க தெரியாமல் திணறினாள்.
“சண்டையா?” என அவளிடம் கேட்ட மாமா, பார்த்தியை பார்த்து, “எலேய் கோச்சுக்கிட்டு போறியா என்ன? பொண்டாட்டி ஆசை பட்டு கேட்டா செஞ்சு தரணும், அத வுட்டுட்டு சடைச்சிகிட்டு போறியே, ஆம்பளைங்க மானத்த காவுந்து பண்ணுடா” என சிரிப்புடன் சொல்லி சென்றார்.
விடு விடு என வீட்டுக்கு வந்து விட்டான். மற்றவர்கள் பின் பக்கம் இருக்க, நேராக அறைக்குள் நுழைந்தான். அவளும் “பார்த்தி பார்த்தி…” என அழைத்துக் கொண்டே அறைக்குள் வந்தாள்.
ஈர சட்டையை அவன் கழற்றிக் கொண்டிருக்க, அவன் தோள் தொட்டு தன் பக்கம் திருப்பினாள்.
“என்ன பார்த்தி கோவமா? ஜஸ்ட் ஃபன்தானே? கடைசி வரைக்கும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாம தப்பிச்சிட்டீங்களே… இனிமேலாம் அப்படி…” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, வேகமாக அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டவன் அவளது இதழ்களில் முத்தமிட்டான்.
முதலில் அதிர்ந்தாலும் மெல்ல அவள் அவனுக்கு இசைந்து கொடுத்தாள். நொடி நேரம் அவனுள் ஏற்பட்டு விட்ட தாக்கத்தில் அவனை மீறி ஆரம்பித்த முத்தம்தான். இப்போது இருவரும் ஆழ்ந்து போயிருந்தனர்.
அழகாய் அரங்கேறியிருந்த அவர்களின் முதல் முத்தம் முற்று பெற்றிருக்க, இரண்டாவது முற்றுகையையும் உடனே துவங்கி அவளை திக்கு முக்காட வைத்தான் பார்த்தி.
இப்போது அவசரமில்லாமல் தன் இணை இதழ்களிலிருந்து விலகியவன் அவளை தன் கைகளில் வைத்திருந்த படியே பார்த்தான். அவனை ஏறிடத் தயங்கியவளின் பார்வை தழைந்திருக்க, அவளை விட்டு முழுதும் விலகி நின்றான்.
“ஆச்சி… அது… நான்… உங்களுக்கு தப்பா படலையே?” எனக் கேட்டான்.
அதி வேகமாக அவனை நெருங்கியவள் இட்ட முத்தங்கள் அவனது முகமெங்கும் சிதற ஆரம்பித்தன.