இதய கிளையில் பூத்தவளே -14

அத்தியாயம் -14

பர பரப்பில்லாமல் இதமாக விடிந்தது காலை. சுஹானாவும் பார்த்திபனும் எழுந்து வரும் போது தாத்தா, பாட்டி இருவரும் பின்பக்கம் சரஸ்வதியுடன் சேர்ந்து அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தனர்.

நேற்று பகலில் அணிந்திருந்த சுடிதாருக்கு மாறியே வந்திருந்தாள் சுஹானா. மனைவிக்கு பிரஷ்’ஷில் பற்பசை வைத்து பார்த்தி நீட்ட, “அடே ரொம்ப ஓவர்டா, எம்புள்ளைய இவ்ளோ வேலை வாங்குறாளேன்னு சரசு கோச்சுக்க போவுது பார்த்துக்க” என்றார் பாட்டி.

“ஹையோ அம்மா அதெல்லாம் இல்லைங்க” என அவசரமாக மறுத்தார் சரஸ்வதி.

“இப்ப என்ன ஆச்சி… பதிலுக்கு நானும் பார்த்திக்கு செஞ்சிட்டா ஓகேவா உனக்கு?” என பாட்டியிடம் கேட்ட சுஹானா, “எங்க பார்த்தி உங்க பிரஷ்?” என விசாரித்தாள்.

“பெரிய ஆச்சி சும்மா விளையாடுறாங்க. பேஸ்ட் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியாதுன்னு…” அவன் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, “அதுக்கு இடத்தை சொன்னா போதாதாடா?  நாங்க கூடத்தான் புதுசா ஊருக்கு வந்திருக்கோம், எங்களுக்கெல்லாம் இப்படி செஞ்சியா? தாத்தாவும் ஆச்சியும் சீக்கிரம் எந்திரிச்சிடுவாங்களே, என்ன ஏதுன்னு பார்ப்போம்னு யோசிச்சியா நீ? சாவகாசமா ஏழு மணிக்கு நெட்டி முறிச்சிகிட்டு வந்து நின்னு பொண்டாட்டிக்கு மட்டும் சேவகம் செஞ்சிட்டு கதை வுடுறியா?” என வம்பு செய்தார் பாட்டி.

“கரெக்ட்டா சொன்ன, செய்றதும் செஞ்சிட்டு முழிக்கிறத பாரு!” என தாத்தாவும் தன் பங்குக்கு அவனை ஓட்டினார்.

உண்மையாகவே பார்த்தி சகஜமாக செய்ததுதான் இது, இப்படி கிண்டலுக்கு உள்ளாவோம் என அவன் நினைத்திருக்கவில்லை.

தாத்தா பாட்டியின் கிண்டலையும் பார்த்தி விழி பிதுங்கி நிற்பதையும் அதை மாமியார் சிறு சிரிப்புடன் பார்த்திருப்பதும் என சுஹானாவுக்கு வேடிக்கையாக இருந்தது.

“ஈஸி ஈஸி பார்த்தி! அவங்கள கண்டுக்காதீங்க. எங்க பிரஷ் பண்றது? பாத்ரூம் போகவா?” எனக் கேட்டாள்.

குவளையில் தண்ணீர் பிடித்து சற்று தள்ளியிருந்த இடத்தை காட்டினான்.

“ஓபன் பிளேஸ்லயா?” எனக் கேட்டாள்.

“நடைபாதை இல்லைல ஆச்சி, இங்க இப்படித்தான், சும்மா வேடிக்கை பார்த்திட்டே பிரஷ் பண்ணுங்க” என்றான்.

அவனும் அவளுடன் நின்று பல் துலக்கியவன் ஊரில் சிலர் இன்னும் சாம்பல், வேப்பங்குச்சி வைத்துதான் பல் துலக்குகிறார்கள், சிறு வயதில் நானும் அப்படித்தான் என்றான்.

“பார்த்தீங்களா அங்க? கல்யாணம் பண்ணிக்க அவ்ளோ பேச வேண்டி இருந்துச்சு, இப்ப பல் விளக்கறது கூட சேர்ந்துதான்” என கணவரிடம் மகிழ்ச்சியாக குறை சொன்னார் பாட்டி.

மகன் மருமகளுக்கு காபி கலக்க சென்றிருந்தார் சரஸ்வதி.

“இவங்க லைஃப் எப்படி இருக்குமோனு உனக்குத்தான் பயம், எனக்கு நல்லா தெரியும் இவனை பத்தி” என பெருமையாக சொன்னார் தாத்தா.

“நாம ரெண்டு பேருமே அவனை கூட இருந்து பார்த்தவங்கதான், ஆனா அவனை பத்தி எனக்கு தெரியாதது கூட உங்களுக்கு தெரிஞ்சிருக்குங்க” என்றார் பாட்டி.

“பின்ன நானும் அவனும் ஒரே இனம் ஆச்சே” என்றவரை பாட்டி குழப்பமாக பார்க்க, “நாங்கல்லாம் பாய்ஸ் பத்து!” என்றார் தாத்தா.

“ம்க்கும்! வாய்ல அஞ்சு பல்லு கொட்டிப் போய் புதுசா கட்டியிருக்கீங்க, அதை மறந்திட வேணாம், பாய்ஸாம் பாய்ஸ்!” என நொடித்தாலும் பாட்டியால் சிரிப்பை அடக்க முடியவில்லைதான்.

அண்ணியின் குடும்பம் இன்னும் வரவில்லையா என கணவனிடம் விசாரித்தாள் சுஹானா. வீட்டில் இடவசதி இருக்காது என்பதால் நாளை காலைதான் வருகிறாள் அஸ்வினி என்பதை சொன்னான்.

“இதுக்காக வரலையா? என்ன பார்த்தி நீங்க, அட்ஜஸ்ட் பண்ணிருந்திருக்கலாம்” என்றாள்.

“அடுத்த முறை நாம வர்றப்போ வர சொல்லலாம் ஆச்சி, ஊர் பக்கம்தான் காலைல வந்திடுவாங்க” என சமாதானமாக சொன்னான்.

‘என்னை சும்மாவே அமர வைக்காதே’ என சொல்லி காய்கறிகள் எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு நறுக்க ஆரம்பித்து விட்டார் பாட்டி. தாத்தா வெளிப்பக்க திண்ணைக்கு சென்று விட்டார்.

தாத்தாவுக்கு படிக்க ஏதாவது வாங்கலாம் என நினைத்து பார்த்தி கிளம்ப, தானும் வருவதாக சொல்லி சுஹானாவும் புறப்பட்டாள்.

தார் சாலையில் நெல் கொட்டி காய வைத்திருந்தார்கள்.

“வெஹிக்கில்ஸ் வர இடைஞ்சல் இல்லையா பார்த்தி?” என சந்தேகம் கேட்டாள்.

காலை பேருந்து வந்து சென்றிருக்க, அடுத்த பேருந்து மாலைக்குத்தான். இரு சக்கர வாகனம் என்றால் ஒதுங்கி செல்வார்கள், ஒன்றும் பிரச்சனையில்லை என விளக்கம் சொன்னான்.

பக்கத்து ஊரில்தான் பள்ளி, பிள்ளைகள் ஆறாம் வகுப்பு செல்லும் போதே சைக்கிள் ஓட்டி செல்ல ஆரம்பித்து விடுவார்கள், நான் படித்த போது நடந்தே செல்வோம் என கதை சொல்லிக் கொண்டே நடந்தான்.

முள் வேலியால் சூழப்பட்ட இருப்பிடங்கள், ஆட்டுக் குட்டியை மடியில் வைத்துக் கொண்டு பாட்டிலில் பால் புகட்டும் பெண்மணி, சுவரில் வறட்டி தட்டிக் கொண்டிருக்கும் கோவணம் கட்டிய தாத்தா என அவள் கண்ட காட்சிகள் எல்லாமே அவளுக்கு புதியவைகளாக இருந்தன.

வழியில் இவர்களை பார்த்தவர்கள் எல்லாம் இரண்டு வார்த்தைகள் பேச மறக்கவில்லை. கடைக்கும் சற்று தூரமாக இவர்கள் வந்து கொண்டிருக்கும் போதே ஓடி வந்து வரவேற்றான் மருது.

கோலிசோடா எடுத்து திறக்க போனவனை தடுத்து விட்டான் பார்த்தி. சுஹானாவும் இப்போதுதான் காபி பருகியதாக சொன்னாள். கடலைமிட்டாய் எடுத்து உண்ணக் கொடுத்தான்.

 கைப்பேசியை எடுத்து மனைவிக்கு அழைத்த மருது, அவள் எடுக்காமல் போகவும், “உங்க ரெண்டு பேரையும்  பார்க்க கடைக்கு வர சொல்லலாம்னு கூப்பிட்டேன், துணி துவைக்க புள்ளைங்களையும் இழுத்துகிட்டு போயிட்டா போல, சாமான்யமா குளத்த விட்டு ஏற மாட்டாங்க” என்றான்.

“ஊர் எல்லைல இருக்க குளமா?” எனக் கேட்டாள் சுஹானா.

“அம்புட்டு தூரம் ஏன் போயிகிட்டு? நம்ம வீட்டடிக்கு பின்னால இருக்கே குளம். நெதம் அங்கதான் குளியல், தண்ணி சும்மா பன்னீர் மாதிரி இருக்கும்ல” என்றான் மருது.

“ஆமாடா, அதையும் பாட்டில்ல அடைச்சு வச்சு வியாபாரம் செய்யேன், சீக்கிரம் இன்னும் ரெண்டு கடை போட்றலாம்” என கிண்டல் செய்த பார்த்தி, தினசரியும் வார இதழ்களும் வாங்கினான்.

அங்கிருந்து திரும்புகையில் அந்த குளத்தில் குளிக்கலாமா என ஆசையாக கேட்டாள் சுஹானா.

“ஏன் ஆச்சி? வீட்ல பைப்ல தண்ணி அடிச்சு தர்றேன், அதுவும் குளு குளுன்னு இருக்கும்” என்றான்.

“ஆறு குளம்னு இருக்க ஊருல பைப் தண்ணில குளிக்க சொல்றீங்களே பார்த்தி?”

“ஆத்துல இப்ப முட்டிக்கால்  அளவு தண்ணிதான் இருக்கும், குளிக்க வசதி படாது”

“ம்ம்ம்… அப்போ குளத்துக்கு அழைச்சிட்டு போங்க, உங்க ஃப்ரெண்ட் வைஃப்லாம் அங்க குளிக்கும் போது நான் குளிக்க கூடாதா?”

“அது…” என தயங்கியவன் அவளின் கெஞ்சலான பார்வையில் சரியென சொல்லி விட்டான்.

அவளது பாட்டியும் மாமியாரும் கூட குளத்தில் குளிக்க மறுப்பு சொல்லாமல் போக, பார்த்திபனுக்கு வேறு வழியிருக்கவில்லை. குளித்து விட்டு மாற்ற ஆடைகள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுஹானா.