மதிய உணவெல்லாம் இவர்கள் வருவதற்கு முன்னரே தயார் செய்திருந்தார் சரஸ்வதி. வேஷ்டிக்கு மாறியிருந்த பார்த்தி வாழையிலைகள் பறித்து வந்தான்.

பெரியவர்களுக்கு முதலில் உணவு பரிமாறினான். சாப்பிட்டதும் அவர்கள் திண்ணைக்கு சென்று விட்டனர். அம்மா மற்றும் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட்டான் பார்த்தி.

மகனுக்காக தனியாக மொச்சைக்காய் போட்டு குழம்பு வைத்திருந்தார் சரஸ்வதி. எனக்கும் போடுங்கள் என கேட்டு வாங்கி ஆசையாக சாப்பிட்டாள் சுஹானா.

நாளை மறுநாள் வரவேற்பு இருக்க, பெரியவர்களையும் மனைவியையும் ஓய்வெடுக்க சொல்லி விட்டு அம்மாவோடு வெளியில் கிளம்பி விட்டான் பார்த்தி.

குட்டித் தூக்கம் போட்டு எழுந்து விட்டாள் சுஹானா.

மாலையில் வீட்டின் பக்கவாட்டில் பந்தல் போட ஆட்கள் வந்து விட்டனர். அங்கேதான் உணவு பரிமாறப்பட இருந்தது.

பார்த்தியின் குரல் கேட்டு வெளியில் வந்தாள் சுஹானா.

பந்தல் போடுமிடத்தில் பார்த்தி நிற்க, இரண்டு பைகளில் சாமான்களோடு உள்ளே வந்தார் சரஸ்வதி. அவரிடமிருந்த சுமைகளை ஒரு இளைஞன் உரிமையாக வாங்கி உள்ளே கொண்டு வந்து வைத்தான்.

அவன் பார்த்தியின் நண்பன் மருதய்யன். தானே அவளிடம் அறிமுகம் ஆகிக் கொண்டான்.

கற்பனையில் இருந்த சின்ன வயது மருது இப்படி நெடு நெடுவென நிற்பதை கண்டு திகைப்பாக பார்த்தாள்.

“வாடா எப்ப வந்த?” என கேட்டுக் கொண்டே வந்தான் பார்த்தி.

“என்னை பத்தி நல்லதா ஏதும் தங்கச்சிகிட்ட சொல்லி வைக்கலையாடா? வில்லனை பார்க்கிற மாதிரில்ல பார்த்து நிக்குது” என்றான் மருது.

“நீ பண்ணாத எதையும் சொல்லலடா” என சொல்லி சிரித்த நண்பனை முறைத்து வைத்தான் மருது.

“அப்படிலாம் இல்லங்க அண்ணா, நல்லதாதான் சொல்லிருக்கார் பார்த்தி” என்ற சுஹானா, அவனுக்கு பருக ஏதாவது எடுத்து வரலாம் என உள்ளே சென்றாள்.

“என்னடா உம் பேரையெல்லாம் சொல்லுது தங்கச்சி?” என நண்பனிடம் கிசு கிசுப்பாக கேட்டான் மருது.

“சொல்லி கூப்பிடதானேடா பேரு?”

“ம்ம்ம்… நடத்து நடத்து. கல்யாணத்துக்கு கூப்பிடல என்னைய, போனா போவுதுன்னு நான்தான் பார்க்க ஓடியாந்திருக்கேன்”

“உன்னை கூப்பிட்டா ஊருல உள்ள மத்தவங்க கோச்சுக்க மாட்டாங்களாடா?”

“எது மத்தவங்களும் நானும் ஒன்னா உனக்கு?” என கோவப் பட்ட மருதுவை சமாதானம் செய்தான் பார்த்தி.

அவர்களுக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள் சுஹானா.

“நீங்க சாப்பிட்டீங்களா ஆச்சி?” எனக் கேட்ட கணவனுக்கு பதில் சொல்லி, நண்பர்களுக்கு தனிமை கொடுத்து மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.

“என்னடா… தங்கச்சிய வாங்க போங்கன்னு பேசுற நீ?” என கிண்டல் செய்தான் மருது.

“மனைவிக்கு மரியாதை!” என கண்கள் சிமிட்டி சொன்னான் பார்த்தி.

“போடா வெளக்கெண்ணெய்! இதையெல்லாம் எம் பொண்டாட்டி பாத்தா என் கதை என்னாகுறது? அவளை வாடி போடின்னு பேசலைனா பேசின மாதிரியே இருக்காது எனக்கு” என்றான்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டே பந்தல் போடுமிடம் வந்து விட்டனர்.

அப்பாவின் மளிகை கடையை இப்போது மருதுதான் பார்க்கிறான். அந்த ஊரில் உள்ள ஒரே மளிகை கடை. சின்ன வயதில்தான் பார்த்தியுடன் சண்டையெல்லாம், அவன் சென்னைக்கு சென்ற பிறகு எப்போது ஊருக்கு வந்தாலும் உடனே நண்பனை பார்க்க ஓடி வந்து விடுவான்.

தாத்தாவும் பாட்டியும் மாலையில் தெருவில் இறங்கி காற்றாட நடந்தார்கள். ஏதாவது செய்கிறேன் என மாமியாரிடம் போய் சுஹானா நின்றாலும் அவளை எந்த வேலையும் செய்ய விடவில்லை சரஸ்வதி.

இருளத் தொடங்கவுமே துரைக் கண்ணு வீடு வந்து விட்டார். அவர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. குளியல் போட்டவர்  மருதுவின் மளிகை கடைக்கு சென்று விட்டார். அங்கே அவரின் நண்பர்கள் வருவார்கள், அவர்களுடன் நேரம் செலவிட்டு விட்டு சாப்பிடும் நேரம்தான் வீட்டுக்கு வருவார்.

மசாலா ராகி தோசைக்கு தயார் செய்திருந்தார் சரஸ்வதி. கையில் எடுத்து செல்லும் படியான மண்ணால் செய்து சுட்ட அடுப்பை வீட்டின் முன் பக்கம் கொண்டு வந்து வைத்து விட்டார்.

திண்ணையில் கால்களை தொங்க போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தனர் பெரியவர்கள்.

“தோசை வேக நேரமாவும், வெப்பத்துல ரொம்ப நேரம் நிக்க முடியாது, கேஸ்’ம் அதிகம் செலவாகும், அதனால அம்மா இதெல்லாம் இப்படி காத்தோட்டமா மண் அடுப்புல செஞ்சிடுவாங்க ஆச்சி” என மனைவிக்கு விளக்கம் சொன்னான் பார்த்தி.

விறகு அடுப்பை அனாயாசமாக கையாளும் மாமியாரை வியப்பாக பார்த்தாள் சுஹானா. தானும் தோசை ஊற்றுகிறேன்  என அவரின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.

“ஹையையோ ஆச்சி! இந்த அடுப்பு உங்களுக்கு பழக்கமில்ல, கை சுட்டுக்குவீங்க” என மறுப்பு சொன்னான் பார்த்தி.

“அட பக்கத்துல சரசு இருக்கும் போது பார்த்துக்காதா? விடு விடு செய்யட்டும், எல்லாம் கத்துக்கட்டும்” என்றார் பாட்டி.

“இதை கத்துக்கிட்டு என்ன செய்ய போறாங்க ஆச்சி? அம்மாவையே அதிகம் யூஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்லிருக்கேன், எனக்கே  இந்த அடுப்புல ஏதும் சமைக்கன்னா கஷ்டம்” என பாட்டியிடம் சொன்னவன், மனைவியிடம், “சொன்னா கேட்டுக்கணும் ஆச்சி, என்னை டென்ஷன் பண்ண கூடாது” என்றான்.

“போங்க பார்த்தி!” என செல்லமாக சலித்துக் கொண்டே தள்ளிப் போய் அமர்ந்து கொண்டாள்.

பெரியவர்கள் சாப்பிடவும் மனைவிக்கும் தட்டில் சாப்பாடு வைத்துக் கொண்டு போய் கொடுத்தான். அவள் முகம் திருப்ப, “சரி நீங்களும் செய்யலாம், முதல்ல சாப்பிடுங்க” என்றான்.

“நிஜமாதானே, அப்புறம் பேச்சு மாறக் கூடாது” என கணவனிடம் சொன்னவள், மற்ற மூவரிடமும் நீங்கள்தான் சாட்சி என சொல்லி விட்டே சாப்பிட ஆரம்பித்தாள். அவள் மெதுவாக சாப்பிடுவதற்குள் தனக்கும் தன் கணவருக்கும் சேர்த்து தோசை ஊற்றி எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டார் சரஸ்வதி.

பேரன் பேத்திக்கு தனிமை கொடுத்து பெரியவர்களும் உள்ளே சென்று விட்டனர்.

அடுப்பின் பக்கம் அவளுடனே அவனும்  அமர்ந்து கொண்டான். விறகை  வெளியில் இழுத்து தீயை குறைத்து, “விறகையெல்லாம் டச் பண்ணக்கூடாது, தோசை ஊத்திட்டு தள்ளி உட்கார்ந்துக்கணும் ஆச்சி” என இன்னொரு முறை அவளுக்கு ஜாக்கிரதை சொன்னான்.

“பார்த்துக்கிறேன் பார்த்தி” என்றவள் தோசை ஊற்றி விட்டு, மாமியார் செய்தது போலவே விறகை உள்ளே தள்ளி, அங்கேயிங்கே நகர்த்தி, நன்றாக எரிகிறதா என்றெல்லாம் பார்த்தாள்.

“சொல்றதே கேட்கிறது இல்லை” என முணு முணுத்தவனின் கண்ணும் கருத்தும் அவள் மீதுதான் இருந்தது.

தோசை வட்ட வடிவில் வராமல் போனாலும் கையை சுட்டுக் கொள்ளாமல் செய்து விட்டாள் சுஹானா. ஆனாலும் அவனிடம் விளையாட நினைத்தவள், கையில் சூடு பட்டு விட்டதை போல அலறி கையை இழுத்துக் கொண்டாள்.

பதறிப் போனவன் உடனே அவளின் கையை பிடித்திழுத்து பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் அமிழ்த்தி வைத்தான்.

 “எவ்ளோ சொன்னேன், இப்ப பார்த்தீங்களா? ஏன் ஆச்சி இப்படி இருக்கீங்க? அதென்ன அப்படி அடம் உங்களுக்கு?” என கோவமாக கடிந்தான்.

“ஹேய் பார்த்தி நீங்க என்கிட்ட கோவ படுறீங்க!” என அதிசயித்து சொன்னாள்.

“அப்புறம் கொஞ்சுவாங்களா?” எனக் கேட்டுக் கொண்டே கையை வெளியில் எடுத்து ஆராய்ந்து பார்த்தான்.

“எந்த இடம் ஆச்சி? இப்ப ஒன்னும் தெரியலை, நேரம் ஆவ ஆவ கொப்புளிச்சு போனாலும் போகும்” என்றான்.

பதில் தராதவள் அவனையே பார்த்திருக்க, “மருந்து ஏதும் இருக்கான்னு பார்த்திட்டு வர்றேன்” என சொல்லி எழப் போனான்.

“சும்மா சொன்னேன் பார்த்தி, சூடே படல” என சொல்லிக் கொண்டே தோசையை திருப்பிப் போட்டாள்.

அவள் சொன்னதை நம்பாமல்அவன் பார்க்க, “நிஜமா விளையாடினேன் பார்த்தி” என்றாள்.

“என்ன ஆச்சி நீங்க?” என சலித்தான்.

தலையை சாய்த்து அவனை பார்த்தவள், “பார்த்தியோட ஆச்சி!” என்றாள்.

சில நொடிகள் பேச்சிழந்தவன் பின், “போதும் ஆச்சி நீங்க தோசை சுட்டது, தள்ளுங்க” என்றான்.

“நான் கரெக்ட்டாதான் செஞ்சேன், நான்தான் செய்வேன், ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடுங்க” என அவள் அடமாக சொல்லவும் அவனும் அமர்ந்து விட்டான்.