இதய கிளையில் பூத்தவளே -13

அத்தியாயம் -13

ஊரில் நடைபெறும் வரவேற்புக்காக தாத்தா பாட்டி மனைவியோடு காரில் புறப்பட்டான் பார்த்திபன். அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பி வழியில் காலை உணவு முடித்துக் கொண்டவர்கள் பனிரெண்டு மணிக்குள் ஊர்ப் பக்கம் வந்து விட்டனர்.

கிராமப் புறத்தின் அழகை விழிகள் விரித்து ரசித்தாள் சுஹானா. தார் சாலையின் பக்கவாட்டில் சறுகலாக இருந்த மண் சாலையில் காரை விட்டான் பார்த்திபன். அங்கிருந்துதான் அவனது ஊர் தொடங்குகிறது.

காரை மெதுவாக ஓட்டும் படி கேட்டுக் கொண்டாள் சுஹானா. பழமையான ஐய்யனார் கோயில் எல்லையில் இருந்தது. யாரோ வயதான மனிதர் அருகிலிருந்த குளத்தில் நீராடி விட்டு ஈரத் தூண்டுடன் கோயில் வாசலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி நெற்றி நிறைய விபூதி வைத்துக்கொண்டு கையிலும் கொஞ்சம் விபூதி அள்ளிக் கொண்டு வந்தார்.

கார் மெதுவாக வந்ததால் உள்ளே எட்டிப் பார்த்து விட்டு, “ஆரு… துரை மவனா? வா வா…” என வரவேற்பாக சொன்னார். பார்த்தி காரை நிறுத்தி விட்டு அவரை பெரிய தாத்தா என அழைத்து நலம் விசாரித்தான்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுஹானாவின் நெற்றியில் அவர் பட்டையாக விபூதி இட்டு விட, பார்த்தியும் தலையை நீட்டி அவரிடம் விபூதி வைத்துக் கொண்டான். பெரியவர்களும் வாங்கிக் கொண்டனர். கார் புறப்பட்டது.

“ஊருக்குள்ள நுழையும் போதே நம்மள வெல்கம் பண்றாங்க  பார்த்தி!” என உற்சாகமாக சொன்னாள் சுஹானா.

“பின்ன கிராமத்துல எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும் ஆச்சி” என்றார் தாத்தா.

மாந்தோப்பும் அதையடுத்து புளிய மரங்களும் காணப் பட்டன. வரிசையாக இல்லாமல் தள்ளி தள்ளி இருந்தன வீடுகள். மூங்கில் படல் அரணாக நிற்க, உள்ளே அழகாய் வீற்றிருந்தது பார்த்தியின் ஓட்டு வீடு.

முருங்கை மரத்தில் இலைகளுக்கு சமமாக காய்த்து தொங்கிக் கொண்டிருந்த முருங்கைக்காய்களை வியப்பாக பார்த்துக் கொண்டே காரிலிருந்து இறங்கினாள் சுஹானா. இன்னொரு பக்கம் சரக்கொன்றை மரம் நின்றது.

மகன் மருமகளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் சரஸ்வதி. பெரியவர்களை கை கூப்பி வணங்கி வரவேற்பு கொடுத்தார் துரைக்கண்ணு.

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் அப்படி பராமரித்து வைத்திருந்தார் சரஸ்வதி. ஹாலில் மெத்தையுடன் இணைந்த சின்னக் கட்டில் கிடந்தது. பார்த்ததுமே புதிது என விளங்கியது.

கீழே அமர படுக்கவெல்லாம் தாத்தாவுக்கு மிகவும் சிரமம், அவருக்காக பார்த்திதான் வாங்கிப் போட சொல்லியிருந்தான்.

நீண்ட தூர பயணம் என்பதால் தாத்தாவுக்கு ஓய்வு தேவைப் பட்டது. கட்டிலில் படுத்து விட்டார். பாட்டி கூட பாயில் கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்து விட்டார்.

பெற்றோரை பெரியவர்களிடம் பேசியிருக்க சொல்லி விட்டு சமையலறை சென்றான் பார்த்தி, சுஹானாவும் அவனை வால் பிடித்துக்கொண்டு சென்றாள்.

“என்ன ஆச்சி, நீங்க பேசிக்கிட்டு இல்லையா?” எனக் கேட்டுக் கொண்டே கொல்லைப்புறம் சென்றான்.

துணி துவைக்க பாத்திரங்கள் கழுவ என சிமெண்ட் போடப் பட்ட இடம் மேற் கூரையில்லாமல் இருந்தது. அங்கிருந்து செல்லும் தண்ணீர் பூச்செடிகளுக்கும் மரங்களுக்கும் செல்லும் படியாக பாத்தி அமைக்க பட்டிருந்தது.

பேண்ட்டை கணுக்கால் வரை மடித்து விட்டுக் கொண்டவன் கைப் பிடி பம்ப்பை அடித்து வாளியில் நீர் நிறைத்து கை கால்கள் சுத்தம் செய்து கொண்டான்.

“ஓ பார்த்தி இதெல்லாம் இன்னும் இருக்கா என்ன?” எனக் கேட்டவளும் அடிகுழாயை அடித்து தண்ணீர் வரச் செய்தாள்.

“தண்ணிக்கு இங்க கஷ்டம் இல்லை ஆச்சி, இப்பல்லாம் கார்ப்பரேஷன் தண்ணி தினம் வரும், முன்னாடி குடி தண்ணிக்கு ரொம்ப கஷ்டம், ஊத்துத் தண்ணி, இல்லைனா அங்கங்க இருக்கிற பொது அடி குழாய் மூலமாதான் தண்ணி பிடிப்போம். அக்கா இருந்தப்போ அவங்க சேர்த்து வச்ச பணத்துல வீட்ல போட்டது இது. இப்ப நிறைய பேர் வீட்ல இதெல்லாம் இல்லை, ஆனா இங்க இன்னும் இருக்கு. எங்கேயும் குழாய் உடைஞ்சு போய் தண்ணி வராம போனா கூட நமக்கு கஷ்டம் இல்லை, அக்கம் பக்கத்துல உள்ளவங்களும் வந்து தண்ணி எடுத்துப்பாங்க” என்றான்.

அப்படியா அப்படியா எனக் கேட்டு அவள் வியந்ததற்கு அளவே இல்லை.

“அட பார்த்தி! செம வைப்ரண்ட் கலர்ல இருக்கே இந்தப்பூ?”  வாடாமல்லி பூக்களை சுட்டிக் காண்பித்து சொன்னாள்.

வாடா மல்லி, பவழ மல்லி, அந்திமந்தாரை, கோழிக்கொண்டை பூ, மருதாணி செடி என வகை வகையாக இருந்தது. அனைத்திற்கும் பெயர்கள் சொல்லி அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

எலுமிச்சை மரத்திலிருந்து பழங்கள் பறித்தவன், “இதை புடிங்க ஆச்சி” என்றான்.

இரண்டு கைகளும் நிறைந்து போய் விட சுடிதார் துப்பட்டாவை விரித்து எலுமிச்சைகளை சேகரித்துக் கொண்டவள், “ஜுஸ் போட போறீங்களா? எதுக்கு இவ்ளோ?” எனக் கேட்டாள்.

“நாம இங்க வரும் போது வீட்டுக்குள்ள நாலு பேர்தானே இருந்தாங்க, இப்ப உள்ள போகும் போது பாருங்க, உங்களுக்கே புரியும்” என்றான்.

உண்மைதான், அக்கம் பக்கத்து வீட்டினர் இவர்களின் வருகையை அறிந்து கூடியிருந்தனர்.

கூட்டத்தை அவள் மிரட்சியாக எட்டிப் பார்க்க, “இந்த ஊர் மருமக பொண்ணை பார்க்க வந்திருக்காங்க ஆச்சி, நான் பானகம் போட்டுத் தர்றேன், எல்லாருக்கும் கொடுத்திட்டு பொதுவா வாங்கன்னு சொல்லுங்க போதும்” என்றான்.

எலுமிச்சை சாறில் வெள்ளம், சுக்கு, மிளகு, ஏலக்காய் போட்டு டம்ளர்களில் ஊற்றி பெரிய தட்டில் வைத்து அவள் கையில் கொடுத்தனுப்பியவன் அவளின் பின்னால் சென்றான்.

கிராமத்து சாயலே இல்லாமல் கொஞ்சம் வட இந்திய பெண்களின் முகவெட்டோடு இருந்த சுஹானாவை மோவாயில் கை வைத்து பார்த்தனர் வயதான மூதாட்டிகள். சுஹானா பார்த்தியை பார்க்க, கண்களால் அதெல்லாம் ஒன்றுமில்லை என சொன்னான் அவன்.

“பானக்கம் தித்திக்குதே…” காதில் தண்டட்டி  ஆட, சப்பு கொட்டிக் கொண்டு பருகினார் வயதான மூதாட்டி ஒருவர்.

ரவிக்கை அணிந்திராத அவரது தோள் பட்டையில் வேலுசாமி என பச்சை குத்தப் பட்டு, வேல் ஒன்றும் வரைய பட்டிருந்தது.

ஊரிலேயே அவர்தான் வயதில் மூத்தவராம், “ஏய் ஆத்தா! இன்னும் வேணுமா?” என சத்தமாக கேட்டாள் ஒரு பெண்.

“போதும்டி…” என்ற மூதாட்டி, “எங்க சரசு மருமவ?” என கண்களை சுருக்கிக் கொண்டு தேடினார். மூப்பின் காரணமாக அவருக்கு பார்வையில் கோளாறு.

சுஹானாவை இழுத்துப் பிடித்து அவரின் முன் நிறுத்தினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி. அவளை ஆசையாக தொட்டுத் தடவி பார்த்தவர், விரல்கள் குவித்து அவளின் தாவாய்க்கு முத்தம் கொஞ்சினார். தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த  ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவளின் கையில் திணித்து, “வச்சிக்க ஏதாவது வாங்கி சாப்பிடு” என்றார்.

இரண்டு இருபது ரூபாய் நோட்டுகளும் ஒரு பத்து ரூபாய் தாளும் என மொத்தம் ஐம்பது ரூபாய் இருந்தது.

மடித்து வைத்திருந்ததில் வெகுவாக கசங்கிப் போயிருந்த அந்த பணத்தின் மதிப்பை யாராலேயும் அளவிடவே முடியாது என்றே  சுஹானாவுக்கு தோன்றியது.

அவர்கள் எல்லாம் சென்ற பிறகு, மதிய உணவை கட்டி எடுத்துக் கொண்டு துரைக்கண்ணும் வெளியில் கிளம்பி விட்டார். இங்கே தோப்புகள் வாங்கிப் போட்டிருக்கும் ஒருவர் டவுனில் வசிக்கிறார். மாத சம்பளம் பெற்றுக் கொண்டு அதையெல்லாம் பராமரிக்கும் வேலை செய்கிறார் துரைக்கண்ணு.

பார்த்திபன்தான் முயற்சி எடுத்து அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து குடியிலிருந்து மீட்டிருந்தான்.