இதய கிளையில் பூத்தவளே -12

அத்தியாயம் -12

நட்சத்திர விடுதியில் பார்த்திபன், சுஹானா இருவரின் திருமண வரவேற்பு விழா நடந்து கொண்டிருந்தது. 

வழக்கமாக திருமண நாளில் மணமக்களுக்கு ஏற்படும் சோர்வு ஏதுமின்றி, கிளிப் பச்சை வண்ண டிசைனர் புடவையில் சுஹானாவும் பிஸ்தா பச்சை வண்ண குர்தாவில் பார்த்தியும் எடுப்பாக, நேர்த்தியாக, அதை விட அடுத்தவரின் கண்களை பறிக்காத மலர்ச்சியோடு நின்றிருந்தனர். 

காயத்ரி பயந்தது போல உறவுகளிடமிருந்து ஆஷுதோஷ் பற்றிய  கேள்விகள் வந்தனதான். ஆனால் சங்கடம் தரும் வகையில் ஏதும் நாடகங்கள் நிகழவில்லை.

காதல் திருமணம் என்றால் இதெல்லாம் சகஜம்தானே என்று அவர்களே காயத்ரிக்கு ஆறுதல் சொன்னார்கள், அவரே காதலித்து மணந்து கொண்டு இப்படி நடப்பது சரியில்லைதான் என தங்களின் மனத் தாங்கலை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான். 

மற்றபடி சத்தமான இசை என ஏதுமின்றி காதுகளை வருடம் மெல்லிசை, கண்களை உறுத்தாத ஒளி, யார் மனதையும் நெருடச் செய்யாத, இதம் கூட்டும் நேர்மறை ஆற்றல் என இனிமையாகவே சென்றது விழா. 

சுஹானாவின் நண்பர் பட்டாளம்தான் ‘ரெபேக்காவின் திருமணத்தன்றே எங்களுக்கு தெரியும், என்னவெல்லாம் சொல்லி சமாளித்தாய்’ என அவளை கிண்டல் செய்தார்கள். 

என்னவென்று புரியாமல் பார்த்திபன் விழிக்க, “இப்போதைக்கு சிரிச்சு சமாளிச்சு வைங்க, அந்தக் கதையெல்லாம் நான் அப்புறமா சொல்றேன்” என அவனிடம் சொல்லி வைத்தாள் சுஹானா. 

 விரைவாகவே சாப்பாடும் தொடங்கியது. 

மணமக்களை நெருக்கமாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தனர். பார்த்திக்கு மட்டுமில்லை சுஹானாவுக்குமே சங்கோஜமாக இருந்தது. அவள் கை பிடித்து முத்தமிடு, கன்னத்தில் முத்தமிடு என்றெல்லாம் அவர்கள் சொல்ல, இப்படியெல்லாம் வேண்டாம் என மறுத்தான் பார்த்தி. 

“என்ன சார் கல்யாணம் நல்லா நடக்குதோ இல்லையோ ஃபோட்டோஷூட் அமர்க்கள படுத்திடணும்னுதான் எல்லாரும் எதிர்பார்ப்பாங்க, நீங்க டென் மினிட்ஸ் டைம் கொடுங்க, உங்க வெட்கத்தை எல்லாம் விரட்டியடிச்சு சூப்பரா ஸ்டில்ஸ் எடுத்து தரேன்” என்றான் புகைப்படக்காரன். 

“இல்லை வேணாம் எடுத்த வரை போதும்” என உறுதியாக பார்த்தி சொல்ல, “சார் சார்… நீங்க ரெண்டு பேரும் ஃபிரேம்ல சும்மா அப்படி இருக்கீங்க! உங்க ஸ்டில் பெருசு பண்ணி என் ஷாப் ரிஷப்ஷன்ல வச்சுக்க உங்கள்ட்ட பெர்மிஸன் கேட்கணும்னு எல்லாம் யோசிச்சிட்டேன், ப்ளீஸ் சார்” என்றான் புகைப்படக்காரன். 

“எங்களுக்கு கம்ஃபர்டபிளா இல்லைங்க, விடுங்க” என பார்த்தி சொல்ல, அவன் வேலைக்கு ஆக மாட்டான் என சுஹானாவை பாவமாக பார்த்தான் புகைப்படக்காரன். 

“ரொம்ப க்ளோஸா இல்லாம நார்மலா எடுத்துக்கலாமே பார்த்தி” என சுஹானா கேட்க, பார்த்தியும் சம்மதிக்க வேண்டியதாகி விட்டது. 

முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் நாகரீகமாக கூட ரசிக்கும் வகையில் மணமக்களை  படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்தான் புகைப்படக்காரன். 

அதற்கே பார்த்திக்கு தொண்டை உலர்ந்து விட்டது. அவளை சாதாரணமாக கூட தொட முடியவில்லை. அவளை அவன் தொட நேரும் போதும் அவள் அவனை தொடும் போதும் இருவரின் மூச்சுக் காற்று உரசும் நெருக்கத்தில் நிற்கும் போதும் என பல முறை அவனுக்குள் பதற்றம் ஓடி மறைந்தது. 

அவளை தூக்கி வைத்துக்கொண்டு நிற்கும் படி புகைப்படக்காரன் சொல்ல, சுஹானாவே வேண்டாம் என சொல்லி கணவனை காப்பாற்றி விட்டாள். 

இவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது போல பார்த்துக் கொண்டே சாப்பிட சென்றனர் புகைப்படக்காரர்கள். 

ஒன்பது மணிக்கெல்லாம் விழா நல்ல படியாக முடிந்து விட்டது. அன்றைய இரவு மணமக்கள் மட்டும் தங்க விடுதியிலேயே அறை ஏற்பாடு செய்திருந்தார் தனசேகரன். 

பார்த்தியின் வீட்டிலோ தன் வீட்டிலோ அன்று இரவுக்கு தங்க வைப்பது வசதியாக இருக்காது என்பதால் இப்படி செய்திருந்தார். 

அதிக அலங்காரம் இல்லாத காரணத்தால் வேறு உடைக்கு மாறி இயல்புக்கு திரும்ப சுஹானாவுக்கு அதிக நேரமெடுக்கவில்லை.

குளியலறையிலிருந்து வெளிப்பட்ட சுஹானா கையில்லாத டி ஷர்ட், முட்டிக்கும் மேல் ஏறியிருந்த ஷார்ட்ஸ் என இருக்க, சற்றே திகைத்துதான் போனான் பார்த்தி. 

இரண்டு கைகளையும் உயர்த்தி என்ன என சைகையாக கேட்டாள். வேக வேகமாக ஒன்றுமில்லை என தலையாட்டிக் கொண்டே குளியலறை சென்று விட்டான். 

பருத்தி வேஷ்டி, அரைக் கை டி ஷர்ட் என ஆடை மாற்றம் செய்து கொண்டு வந்தான் அவன். 

சிகையலங்காரத்தை கலைத்து விட்டு முடியை தூக்கி க்ளிப் செய்திருந்தவள் முகத்திற்கு எதுவோ க்ரீம் பூசிக் கொண்டிருந்தாள். 

இரவு நேரத்தில் என்ன பூசுகிறாள் என மனதில் தோன்றினாலும் அவளிடம் எதுவும் கேளாமல் கைப்பேசியை கையில் எடுத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்து விட்டான். 

“என்ன செய்றீங்க பார்த்தி?” எனக் கேட்டுக் கொண்டே அவனிடம் வந்தாள். 

“வெளியூர்ல இருக்க சில ஃபிரெண்ட்ஸ் விஷஸ் அனுப்பிருக்காங்க, அவங்களுக்கு தேங்க்ஸ் மெசேஜ் அனுப்பலாம்னு…” என அவன் சொல்லிக் கொண்டிருக்க, பட்டென கைப்பேசியை பறித்து ஓரமாக வைத்து விட்டாள்.

“என்ன ஆச்சி?” 

“இப்ப வேணாம், நாளைக்கு அனுப்புங்க” என அவள் சொல்லவும் எதனால் சொல்கிறாள் என புரிந்து தன் நெற்றியை தட்டிக் கொண்டு அசடு வழிய சிரித்தான். 

அவளும் சின்னதாக சிரித்தாள். 

நினைவு வந்தவனாக அவளது நண்பர்களின் கிண்டல் பேச்சு பற்றி கேட்டான். பெங்களூருவில் அவர்கள் இருவரையும் இணைத்து வைத்து அவர்கள் பேசியதை சொன்னாள்.

“இந்த பசங்களே இப்படித்தான்” என்றான். 

“அப்படியா! உங்களுக்கு வேற ஏதும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா என்ன?” எனக் கேட்டாள். 

அவனது கல்லூரியில் சில பெண் பிள்ளைகள் அவனையே ஸைட் அடிப்பார்கள், உன் ஆளு என் ஆளு என பேச்சுக்கள் கூட இருக்கும். அவனுக்கு தெரிந்தாலும் தெரியாதது போலவே அமைதியாக இருந்து கொள்வான். அதை சொன்னான். 

“அதெல்லாம் நார்மல்தானே பார்த்தி? நான் படிக்கும் போதும் ஒரு கெஸ்ட் லெக்சரர் வருவார், ஒரு ஜாடைக்கு வருண் தவான் போல இருப்பார், வீக்லி ட்வைஸ் அவர் கிளாஸ் இருக்கும், ரெண்டு கிளாஸ்லேயும் கேர்ள்ஸ் மட்டும் ஃபுல் அட்டெனன்ஸ் இருக்கும்” 

“யார் ஆச்சி அந்த ஆக்டர், எனக்கு தெரியலையே”

“ஓ தெரியாதா? இருங்க” என்றவள் கைப்பேசியில் அந்த கதாநாயகன் படத்தை காண்பித்தாள். 

பின், “ஏன் பார்த்தி சௌத்ல உள்ள ஆக்டர்ஸ் மட்டும்தான் உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்டாள். 

“அப்படி இல்லை ஆச்சி. நார்த் சைட் அதிகம் தெரியாது” 

“ம்ம்… இந்த நைட் பத்தி மூவீஸ்ல நிறைய காட்டிருக்காங்கல? இப்ப நினைச்சா சிரிப்பா வருது” 

“கொஞ்சம் ஓல்டு மூவீஸ் பரவாயில்லை, இப்ப மோசம் ஆகிடுச்சு” 

“ஏன் பார்த்தி?” 

“ரொமான்ஸ் சீன்ஸ் பார்க்கும் போது மனசு சில்லுனு ஆகணும்…” என்றவன் அடுத்து ஏதும் சொல்லாமல் நிறுத்தினான். 

“அப்புறம் வேற எப்படி ஆகுது பார்த்தி உங்களுக்கு?”

“ஹையோ எனக்கு எப்படியும் ஆகல, நான் ஜெனரலா சொன்னேன் ஆச்சி” என்றான். 

இப்படியாக இவர்களின் பேச்சு விலைவாசி ஏற்றம், அரசியல், அவனது ஆராய்ச்சி படிப்பு, அவளது பள்ளி, மும்பையின் வெப்பநிலை என தாவி தாவி சென்று கொண்டேயிருந்தது. 

உறக்கம் வருவது போலிருக்கவும் இயல்பாக படுக்கைக்கு சென்று படுத்துக் கொண்டாள் அவள்.

“ஏசி குறைக்கவா ஆச்சி?” எனக் கேட்டான்.

“எனக்கு ஓகேதான், உங்களுக்கு வேணும்னா குறைச்சிடுங்க” என அவள் சொல்ல, அறையை மட்டும் இருட்டாக்கினான்.  

படுக்கையில் சற்று உள்ளே தள்ளிப் படுத்து அவனுக்கு தாராளமாக இடம் கொடுத்து என்ன செய்கிறான் என பார்த்தாள். அவனும் அமைதியாக அவளருகில் படுத்துக் கொண்டான். 

அதில் திருப்தியடைந்தவளாக, “குட் நைட் பார்த்தி!” என்றாள். அவனும் பதிலுக்கு இரவு வணக்கம் சொல்லி கண்களை மூடிக் கொண்டான். 

அந்த அமைதியான இரவில் ஆசை கொண்ட பார்த்தியை கணவனாக்கிக் கொண்டதை உள்வாங்கி மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டாள் சுஹானா. 

இனிய மனநிலையில் விரைவாகவே அவள் கண்ணயர்ந்து விட, அவனுக்குத்தான் உறக்கத்தை வரவழைப்பது சிரமமாக இருந்தது. 

தன் வீடு இவளுக்கு வசதி படுமா? ஆச்சி வாயை திறந்து ஏதும் சொல்லப் போவதில்லை, நானே கவனித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே அவளின் பக்கம் திரும்பிப் படுத்தான். 

ஒரு மாதிரியாக இருக்கத்தான் செய்தது. ‘ஆச்சியின் அருகாமைக்கு பழகிக் கொள் பார்த்தீபா!’ என தனக்கு தானே கட்டளையிட்டுக் கொண்டான்.

மனைவிக்கு பழக தனக்கு தானே சொல்லிக் கொள்ளும் கணவன், நல்ல முதலிரவு! என எண்ணியவனுக்கு சிரிப்பு வந்தது. 

உறக்கமே வராமல் புரண்டு கொண்டேயிருந்தான். சற்று நேரத்தில் அவனுக்கு குளிரத் தொடங்கி விட்டது. அவளோ சாதாரணமாக உறங்கிக் கொண்டிருந்தாள். 

மிகுந்த தயக்கத்துக்கு பின் அவளின் புறங்கையை தொட்டுப் பார்த்தான். அப்படியொன்றும் சில்லிட்டிருக்கவில்லை. ஆனாலும் அவளுக்கு இடை வரை போர்த்தி விட்டான். சில நிமிடங்களில் உறக்கத்திலேயே போர்வையை விலக்கி விட்டு உறங்கினாள். 

சரிதான் இவளுக்கு இத்தனை குளிர் தேவை போல என நினைத்தவன் தனக்கு நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டான். 

நள்ளிரவை தாண்டிய பிறகு அவனும் உறங்கி விட்டான். 

காலையில் எழுந்ததும் தயாராகி கேப் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். 

காலை உணவுக்கு பின் தன் உடைமைகளை தாத்தா வீட்டிலிருந்து பார்த்தியின் வீட்டுக்கு மாற்றும் வேலையை செய்ய ஆரம்பித்தாள் சுஹானா. 

ஊரில் பார்த்தியின் வீடும் சின்னதுதான் என்றாலும் சுற்றிலும் நிறைய இடம் இருக்கும். உறங்க உண்ண எனதான் வீட்டுக்குள் வருவார் துரைக்கண்ணு. அவருக்கும் அஸ்வினியின் கணவன், மாமனார் ஆகியோருக்கும் இங்கே மூச்சு முட்டுவது போலிருந்தது. 

அடுத்த வாரத்தில் ஊரில் வரவேற்பு இருக்க சரஸ்வதிக்கும் அங்கு வேலைகள் இருந்தன. ஆகவே மதிய உணவுக்கு பின் பார்த்தியின் குடும்பத்தினர் ஊருக்கு புறப்பட்டு விட்டனர். 

காயத்ரியும் நிவாஸும் கூட அன்றைய இரவே மும்பைக்கு கிளம்பி விட்டனர். 

இரவு உணவை தாத்தாவின் வீட்டில் முடித்துக் கொண்டு தங்கள் வீட்டுக்கு திரும்பினர் இருவரும். அறையில் மெத்தையை தட்டி தரையில் விரித்தவன், “இந்த மன்த் சேலரி வரவும் ஏசி ஃபிட் பண்ணிடுறேன் ஆச்சி” என்றான். 

“அடுத்த சம்மர் வரை ஏசி தேவைப்படாது பார்த்தி” 

“உங்களுக்காக ஏசி தவிர வேற எதுவும் வாங்க போறதில்ல ஆச்சி,  வேணாம்னு சொல்லாதீங்களேன்”

“உடனே வேணாம் பார்த்தி, என்னால இருக்க முடியுதான்னு பார்க்கலாம்,  முடியாதுன்னா அப்புறம் யோசிக்கலாம், என் பேச்சை கேளுங்க” என அவன் மறுக்க முடியாதபடி சொல்லி விட்டாள். 

பார்த்தி உபயோகித்து  வந்த மெத்தை சற்று சின்னது. தம்பதிகள் படுத்துக் கொள்ள கூடியதுதான் என்றாலும் இவர்கள் இப்போதிருக்கும் நிலையில் கொஞ்சம் கடினம்தான். 

மெத்தைக்கு விரிப்பெல்லாம் போட்டு விட்டவன், “நீங்க படுத்துக்கோங்க ஆச்சி” என்றான். 

“அப்போ நீங்க?” எனக் கேட்டாள்.

“இது நமக்கு பத்தாது, பாய் போட்டுக்கிறேன் எனக்கு”

“ஏன் பத்தாது, எல்லாம் போதும்” 

“ஆச்சி…” பாவமாக அழைத்தான். 

கல கலவென சிரித்தவள், “நாளைக்கே வேற மேட்ரஸ் வாங்கணும் சரியா?” எனக் கேட்டாள். 

அவன் சரியென சொல்ல, “இதை என்ன பண்றதாம் பார்த்தி? எங்க போடுறது, ரெண்டு மேட்ரஸ் இடத்தை அடைக்கும்” என்றாள். 

“என்ன செய்யலாம்?”

“பேசாம இதையே நாம ஷேர் பண்ணிக்கலாம் பார்த்தி. நான் படுத்தா படுத்த இடத்தை விட்டு அசையாம தூங்குவேன், தைரியமா ரிஸ்க் எடுக்கலாம் நீங்க” என்றாள். 

இப்போது அவன் சிரித்தான். 

படுக்கையில் அந்த நெருக்கம் அவளைப் போல அவனுக்கு அத்தனை இலகுவாக இல்லைதான், ஆனால் ஏற்றுக்கொண்டான். 

ஜன்னல்களை திறந்து வைத்திருந்தான் பார்த்தி. படுக்கையறையின் ஜன்னலுக்கு அடுத்து கட்டிடம் ஏதுமில்லாமல் திறந்த வெளியாக இருந்ததால் வெட்கையெல்லாம் உணரவில்லை சுஹானா. வசதியாகவே உறங்கினாள். 

முந்தைய நாள் போல் அல்லாமல் பார்த்தியும் விரைவாகவே உறங்கி விட்டான். 

அடுத்த நாளில் வார இறுதி தொடங்கியதால்  மணமக்களுக்கு வேலைக்கு செல்ல தேவையிருக்கவில்லை. 

இருவருமே வேலைக்கு செல்கிறீர்கள், ஆகவே உணவு இங்கேதான் என உறுதியாக சொல்லியிருந்தனர் தாத்தா பாட்டி இருவரும். உடனே சரி என சொல்லி விடாமல் பார்த்தியிடம் அபிப்ராயம் கேட்டு, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கும் மகிழ்ச்சிதானே, இந்த ஏற்பாடு நல்லதுதான் என அவனது வாய்மொழியை பெற்றுக் கொண்டுதான் சம்மதம் சொன்னாள் சுஹானா.

ஒரு நாள் தாத்தா பாட்டியை அழைத்துக் கொண்டு கோயில், பீச் என சென்று வந்தனர். அடுத்த நாள் அவர்கள் இருவர் மட்டுமாக  போய் வீட்டுக்கு தேவையானவை வாங்கி வந்தனர். 

திங்கட்கிழமை இருவரும் நேரத்துக்கு எழுந்து தயாராகிக் கொண்டனர். பள்ளியும் கல்லூரியும் எதிரெதிர் பக்கம் என்றாலும் மெயின் சாலை வரை அவளை பைக்கில் அழைத்து சென்று விட்டான். அவளுக்கு நிறைய ஷேர் ஆட்டோக்கள் கிடைக்கும். அவளுக்கு ஆட்டோ கிடைக்கும் வரை அவளுடன் நின்றான். 

அவள் அவனை கிளம்ப சொல்லியும் கேட்கவில்லை அவன். தனக்கு நேரம் இருப்பதாக அவன்  சொல்ல, அவளும் சரியென விட்டு விட்டாள். 

மாலையில் அவள் வரும் நேரம் வழக்கமாக அவள் இறங்கும் இடத்தில் நின்றிருந்தான். வேலை முடித்து கிளம்பியவன் வீட்டுக்கு செல்லாமல் நிற்கிறான் என்பதை புரிந்து கொண்டவள், “இதெல்லாம் அவசியமா பார்த்தி, ஃபைவ் மினிட்ஸ் வாக் பண்ணினா வீடு வந்திடும்” என்றாள். 

“நானும் ரொம்ப நேரம் வெயிட் பண்ணலையே ஆச்சி, நான் இங்க வந்து கரெக்ட்டா எட்டு நிமிஷம் ஆச்சு, இதோ நீங்க வந்திட்டீங்க” என்றான். 

பள்ளியில் வகுப்புகள் முடிந்த பிறகும் சில குழந்தைகளை அழைக்க தாமதமாகத்தான் பெற்றோர் வருவார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோரின் நேர மாறுபாடு காரணமாக அந்த ஏற்பாடு அங்கு உண்டு. 

அதை சொன்னவள், “எப்பவும் இந்த நேரம் வருவேன்னு சொல்ல முடியாது பார்த்தி, நீங்க இங்க வெயிட் பண்றதா இருந்தா அதுவே எனக்கு டென்ஷன் ஆகும். வேணாமே பார்த்தி” என தன்மையாக சொன்னாள். 

அவனும் எதிர்த்துப் பேசாமல் ஒத்துக் கொண்டு விட்டான். 

வீடுகளுக்கு வெளியே பொதுவாக இருந்த காரிடாரின் இறுதியில் ஏதோ பேசிக் கொண்டு நின்றிருந்தனர் தாத்தாவும் பாட்டியும். 

லிஃப்ட் உபயோகிக்காமல் படிகள் வழி ஏறிய படி, பேசிக் கொண்டே முதல் தளம் வந்து விட்ட பார்த்தியும் சுஹானாவும் தாத்தா பாட்டியை கவனித்திருக்கவில்லை. 

பார்த்தி ஏதோ சொல்வதும் சுஹானா வாயை பொத்திக் கொண்டு சிரிப்பதும் என பார்த்திருந்த பெரியவர்களுக்கு நிறைவாக இருந்தது. 

எளிதாக விரைவாக அந்த வாழ்க்கையில் பொருந்திப் போய் விட்டனர்.