மனதின் மகிழ்ச்சியெல்லாம் முகத்தில் பிரதிபலிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

திருமணத்திற்கு முழு சம்மதம் என்ற செய்தியை தாங்கி அவளைப் பார்த்திருந்தான். 

“இதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல தோணல பார்த்தி, சொல்ல கூடாதுதானே? அந்த ஃபார்மாலிட்டி நமக்குள்ள இனி தேவையில்லைதானே?” எனக் கேட்டாள். 

ஒத்துக் கொண்டவன், “உங்க அப்பா சம்மதிக்கிறது கஷ்டம் ஆச்சி” என்றான். 

“தாத்தா பேசி சரி பண்ணிடுவாங்க பார்த்தி, உங்க வீட்ல…” என இழுத்தாள். 

“நான் பேசிக்கிறேன் ஆச்சி” என அவன் சொல்லவும் நிறைவான புன்னகையோடு அங்கிருந்து  புறப்பட்டாள் சுஹானா. 

இந்த திருமணத்துக்கு பார்த்திபனின் வீட்டில் எளிதாக சம்மதித்து விட்டனர். பெரிய இடத்துப் பெண்ணா என்ற மருட்சி மட்டும் இருக்கத்தான் செய்தது. சுஹானாவுடன் பழக பழக சரியாகி விடும் என அதை அப்படியே விட்டுவிட்டான் பார்த்தி. 

சுஹானாவின் கல்யாண விஷயத்தில் குடும்பத்தினரை படுத்தித்தான் எடுத்து விட்டார் ஆஷுதோஷ்.  ஒரு கட்டத்தில் என்ன செய்தும் தன்னால் இதை தடுத்து நிறுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டார். வேறு வழியின்றி திருமணத்தில் பங்கெடுக்க சென்னை வந்தார். அப்போதும் மாமனார் வீட்டில் தங்காமல் விடுதியில்தான் தங்கினார். 

நிவாஸ் இப்போது நன்றாகவே நடக்க ஆரம்பித்திருந்தான். தங்கையின் திருமணத்தில் பொறுப்பாக எல்லா வேலைகளையும் செய்தான். 

பார்த்தியின் பெற்றோரும் தங்கையின் குடும்பமும் சென்னைக்கு வந்திருந்தனர். ஒரு வாரத்திற்கு பின் சொந்த ஊரில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் சரஸ்வதி. 

பார்த்தியின் வீட்டில் இத்தனை பேர் தங்க சிரமமாக இருக்கும் என்பதால் விடுதியில் அறை எடுக்கிறேன் என்றார் தனசேகரன். இதுவே போதும் என சொல்லி விட்டார் சரஸ்வதி. 

குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு கோயிலில் திருமணம், தனசேகரன் பக்கத்து உறவுகள் மற்றும் மணமக்களின் நண்பர்களுக்கு என அன்று மாலையே நட்சத்திர விடுதியில் வரவேற்பு என திட்டமிட்டிருந்தனர். 

மொத்தமாக நூறு அழைப்பிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. 

சுஹானாவுக்கு பார்லர் அலங்காரம் ஏதுமில்லை, வேண்டாம் என மறுத்திருந்தாள். தனக்கு தானே நேர்த்தியாக ஒப்பனை செய்து கொண்டாள். பார்த்தியின் குடும்ப வழக்கப் படி கூரைப் புடவை அணிந்து, முதல் முறையாக கூந்தலை பின்னலிட்டு, அளவாக நகைகள் அணிந்து  பார்ப்பவரை வசீகரிக்கும் வண்ணம் தயாராகியிருந்தாள் சுஹானா. 

‘சுஹானாவுக்கு ஏற்ற மணமகன்தான் நான்’ என பறை சாற்றுவது போல மிடுக்கான தோற்றத்தில் வந்து நின்றான் பார்த்திபன். 

சுஹானாவின் குட்டி பின்னலை தாண்டி வழிந்த மல்லிச் சரத்தைப் பார்த்து விட்டு வெள்ளந்தியாக சிரித்தாள் பார்த்தியின் தங்கை அஸ்வினி. 

பார்த்தியின் அப்பா துரைக்கண்ணு சவரம் செய்யப் படாத தாடியும் சற்றே இறுகிய முகமுமாக காணப் பட்டார். 

அஸ்வினியின் கணவன் அவளின் மாமனார் மாமியார் என அனைவரும் கிராமத்து தோரணையில் எளிமையாக இன்முகத்துடன் இருந்தனர். 

தன் சகோதரனின் குடும்பத்தை கூட அழைத்திருக்கவில்லை ஆஷுதோஷ். பார்த்தியின் உறவுகளை பார்க்க பார்க்க அவருக்கு எரிச்சலாக இருந்தது. இறுதி நொடியில் ஏதாவது நடந்து இந்த திருமணம் தடை பட்டு ஒரேயடியாக நின்று போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என சிந்தித்துக் கொண்டிருந்தது  அவரின் மனம். 

தன் கணவனாக வரப் போகிறவன் உறவுகளையெல்லாம் தன் உறவாகவும் ஸ்வீகரித்துக் கொண்டாள் சுஹானா. அஸ்வினியின் மாமனார் மாமியாரை என்ன உறவுமுறையில் அழைக்க வேண்டும் என பாட்டியிடம் கேட்டு அவர் சொல்லித் தந்த படியே பெரியம்மா பெரியப்பா என அழகாக அழைத்தாள். 

அவர்களுக்கெல்லாம் சுஹானாவை மிகவும் பிடித்து விட்டது. 

வடபழனி முருகன் கோயிலில் திருமணம் நடந்தேறியது. மல்லிகை மாலைகளை மாற்றிக் கொண்ட மணமக்கள் இருவரும் எழில் மிகுந்து காணப் பட்டனர். 

அருகிலுள்ள உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு வழியில் திருமண பதிவையும் செய்து விட்டே வீடு வந்து சேர்ந்தார்கள். 

இரவு வரை எனக்கென்ன வேலை, இப்போதே கிளம்புகிறேன் என நின்றார் ஆஷுதோஷ். 

“என் பக்க ரிலேட்டிவ்ஸ் எல்லாரும் ரிஷப்ஷன் வருவாங்க, உங்களை கேட்டா என்ன சொல்வேன் நான்?” என கோவப் பட்டார் காயத்ரி. 

“நாம கம்பெனி ஆரம்பிச்ச புதுசுல ரொம்ப சின்ன லெவல்ல நடந்தி தந்த மேரேஜ் கூட இன்னிக்கு நடந்த மேரேஜ் விட சிறப்பா இருந்தது. ஏழைய கட்டிக்கிட்டாளா உன் பொண்ணுன்னு இளக்காராமா எல்லாரும் பார்க்கிற பார்வையை நீயே சகிச்சுக்க, என்னால முடியாது” என்றவரை என்ன சொல்லவென, அவர் விருப்ப படியே மும்பை செல்ல அனுமதித்து விட்டார் காயத்ரி. 

மாலையில் இவரைப் பற்றி கேட்டால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் பெரும் சங்கடம் என்பதை அறிவார் காயத்ரி. ஆனால் அதை விட இவரை சமாளிப்பது கடினம் என தோன்றியதால் அனுப்பி வைத்து விட்டார். 

பெண்ணின் தகப்பனாருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது பார்த்திபனின் குடும்பத்தினருக்கு நன்றாகவே தெரிந்தது. இந்த நேரம் மகனிடம் என்னவென விசாரிப்பது என மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டார் சரஸ்வதி. 

மணமக்கள் மாப்பிள்ளையின் வீட்டுக்குத்தான் சென்றனர். காலையில் அனைவரும் திருமணத்துக்கு புறப்பட்ட அவசரத்தில் போட்டது போட்ட படி இருந்தது வீடு. 

மணமக்களுக்கு பால் பழம் கொடுத்த  அஸ்வினியின் மாமியார், “ஏம்மா உங்கப்பாவுக்கு ஏதும் கோவமா?” என சுஹானாவிடம் கேட்டார். 

“அங்க அம்மா கூப்பிடுறாங்க போல அத்தை” என சொல்லி அவரை அப்புற படுத்த பார்த்தான் பார்த்தி. 

“எல்லா லவ் மேரேஜ்லேயும் பேரெண்ட்ஸ்க்கு இருக்க கோவம்தான் பெரியம்மா, சீக்கிரம் சரியாகிடுவாங்க” என பதில் சொல்லியே அவரை அனுப்பி வைத்தாள் சுஹானா. 

“ஸாரி ஆச்சி, அவங்க உங்களை சங்கட படுத்த நினைச்சு கேட்கலை, சரி பண்ண முடிஞ்ச பிரச்சனைனா சரி செய்யலாமேங்கிற எண்ணத்துலதான் கேட்ருப்பாங்க”  என்றான் பார்த்தி. 

“எஸ் எஸ் பார்த்தி, என்னால அவங்க இன்டென்ஷன் என்னன்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. நான் தப்பா எடுக்கல” என இலகுவாக சொல்லி விட்டாள் அவள். 

பார்த்தியின் அம்மாவும் சகோதரியும் வீட்டை ஒதுங்க வைத்துக்கொண்டிருக்க, மதிய சமையல் செய்ய வாருங்கள் என சொல்லி அனைவரையும் தன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார் பத்மாவதி. உண்மையில் அங்கே எந்த சமையலும் நடக்கவில்லை. 

“என்னங்க ம்மா, இன்னும் ஏதும் ஆரம்பிக்கவே இல்லையா? காயெல்லாம் எங்க?” எனக் கேட்டார் சரஸ்வதி. 

அவரின் கையை பிடித்து சிரித்த பத்மா, “எல்லாம் ஆர்டர் சொல்லியிருக்கு சரசு, நேரத்துக்கு வந்திடும். வர்ற வரை நல்லா ரெஸ்ட் எடுங்க. அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி இருக்கட்டும்னுதான் உங்களை இங்க வரவச்சிட்டேன்” என்றார். 

“அதுவும் சரிதாங்க ம்மா” என்றார் சரஸ்வதி. 

அவர்கள் ஓய்வெடுக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார் காயத்ரி. 

 தனிமையில் விடப் பட்டிருந்தனர் மண மக்கள். 

“ரூம் போய் ரெஸ்ட் எடுக்குறீங்களா ஆச்சி?” எனக் கேட்டான் பார்த்திபன்

“ஏன் நீங்க என்ன செய்றதா இருக்கீங்க?” எனக் கேட்டாள் சுஹானா. 

“வீடு ரொம்ப மோசமா கெடக்குல்ல, நீட் பண்றேன் நான், நீங்க ரூம் போங்க. இல்யில்லை இங்கேயே இருங்க… ரூமும் அப்படித்தான் இருக்கு, டென் மினிட்ஸ் டைம் தாங்க, ரூம் ரெடி பண்ணிடுறேன்” என சொல்லி அறைக்கு விரைந்தான். 

ஹாலில் ருந்த படியே எட்டிப் பார்த்தாள் அவள். பட்டு வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டவன் தரையில் விரிக்க பட்டிருந்த மெத்தையை சுருட்டி ஓரமாக வைத்தான். ஊரிலிருந்து வந்திருந்தவர்களின் உடைமைகளையும் ஓரம் செய்து அறையை கூட்டிப் பெருக்கி விட்டு அவன் நிமிர, ஹாலை ஒழுங்கு செய்து கொண்டிருந்தாள் சுஹானா. 

“ஹையையோ ஆச்சி, விடுங்க விடுங்க நான் பார்த்துக்கிறேன்” என சொல்லிக் கொண்டே துடைப்பமும் கையுமாக அவளிடம் ஓடி வந்து நின்றான். 

“ஹையோ பார்த்தி! சின்ன சின்ன வேலை செய்றதால நான் என்னவாகிட போறேன், நாம சேர்ந்தே க்ளீன் பண்ணலாம்” என்றாள். 

“ஆச்சி…” சங்கடமாக அழைத்தான். 

“பார்த்தி…” என கெஞ்சலும் சிணுங்கலுமாக ஒலித்தது அவளது குரல். 

அவளின் உரிமையான அழகான அழைப்பில் கையிலிருந்த துடைப்பத்தை நழுவ விட்டான் அவன். 

கீழே பார்த்துக் கொண்டே, “என்ன பார்த்தி?” எனக் கேட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்

அடர்த்தியாக அஞ்சனம் தீட்டப் பட்டிருந்த அவளின் நீல விழிகளை மிகவும் அருகில் கண்டதில் சட்டென ஸ்தம்பித்து வார்த்தை ஏதும் வராமல் அப்படியே நின்றான். 

“பார்த்தி… என்ன?” அவள் விழிகளை இன்னும் பெரிதாக்கினாள். 

மனதின் கற்பனையை கட்டுப்படுத்தி சுதாரித்து பின் வாங்கி நின்றான். 

அவள் குழப்பமாக அவனை பார்க்க, அவளை காண இயலாமல் தடுமாறினான். என்ன செய்யவென புரியாமல் துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு வாயில் நோக்கி சென்று “ஹையோ!” என தலையில் தட்டிக் கொண்டு அறைப் பக்கம் செல்ல நடந்தான்.

அவனை எங்கும் போக விடாமல் நிறுத்தி விட்டவள், எதனால் இத்தனை தடுமாற்றம், உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என அடமாக கேட்டாள். 

அவள் விடமாட்டாள் என புரிந்தவன், வாயை திறக்க அத்தனை சங்கடம் கொண்டான். 

கைகளை கட்டிக் கொண்டு கண்டனம் நிறைந்த பார்வையோடு, “நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுதானே பார்த்தி?” எனக் கேட்டாள். 

அவன் ஆம் என பாவமாக சொல்ல, “மறைக்காம உள்ளதை சொல்லுங்க!” என்றாள். 

“அது… உங்க கண்ணை ரொம்ப கிட்டத்துல பார்த்தேனா?”

“ம்ம்… அதுக்கு?”

“மை சூழ்ந்த நீல நிற கண்கள், ராத்திரி நேரத்துல நீருக்குள்ள பூத்திருக்க நீலாம்பல் மலர் பார்த்த மாதிரி ஃபீல் ஆச்சு, அது… நான் போய் அப்படி…” என சொல்லிக் கொண்டிருந்தவன், அவளின் வெட்கமும் கிண்டலும் நிறைந்த பார்வையில், “ஆச்சி…” என வெட்கப்பட்டான். 

என்ன எதிர்வினை ஆற்ற என தெரியாமல் தரையைப் பார்த்தவள் தொண்டைக்குழியை நீவி விட்டுக் கொண்டு, “அதுக்கு ஏன் பார்த்தி இவ்ளோ டென்ஷன்?” எனக் கேட்டாள். 

“ம்?” புரியாதவன் போல கேட்டான். 

“உங்களுக்கு… ம்க்கும்… அப்படின்னு இல்லை எப்படியும் என்னை கற்பனை செய்துக்க… ஹஸ்பண்ட் வைஃப்னா இதெல்லாம் நார்மல்தானே?” ஒரு வழியாக அவளும் விளக்கினாள். இதெல்லாம் புரியாதவனா என்ன அவன்? 

இதழ்களை மடித்து சிரிப்பை அடக்கியவன் அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டான். நான்தான் நானேதான் அவளின் விழிகளின் அழகை இப்படி ரசித்தது என்பதை கிரகித்துக் கொண்டவன், தன் இதழ்கள் நன்றாக மலர சிரித்தான். 

சுஹானாவின் விழிகள் மட்டுமின்றி அவனுடன் அவளது வாழ்க்கை பற்றிய அவளுக்கான கனவுகளும் சேர்ந்து விரிந்து கொண்டன.