இதய கிளையில் பூத்தவளே -11

அத்தியாயம் -11

‘தனசேகரன் ஐயாவிடம் சொல்லி விட்டு வந்தேனே, உன்னிடம் பேசினாரா, பெண் பார்க்க தொடங்கவா?’ என பார்த்திபனை நச்சரிக்க ஆரம்பித்திருந்தார் சரஸ்வதி.

தாத்தா கெடு கொடுத்து நான்கு நாட்கள் ஆகி விட்ட பின்னரும் அவனை பார்க்கும் போதெல்லாம்என்னடா?” என்பாரே தவிர, அவன் பதில் தர வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை

பார்த்திபனால் எதிலுமே கவனம் வைக்க முடியவில்லை. சுஹானாவை மனைவியாக பார்க்க முடியாது என சந்தேகம் கொள்பவனுக்கு தன்னை நினைத்துக்கொண்டு ஆச்சி திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டால் என்ற கேள்வி பயத்தைக் கொடுத்தது. 

அவனுடைய கைடாக உள்ள பேராசியர் குருமூர்த்தியும் அதே கல்லூரிதான். ஏதோ சந்தேகம் கேட்க வந்தவனை உற்றுக் கவனித்தவர், “என்னப்பா ஆள் சரியில்லையே?” என விசாரித்தார். 

இவன் படித்ததும் இதே கல்லூரிதான், அப்போதிருந்தே அவர் நல்ல பழக்கம். இவனது சொந்த வாழ்க்கை பற்றியும் நன்கறிந்தவர். தனசேகரன் கூட இவருக்கு பழக்கம்தான். 

“ரொம்ப குழம்பி போயிருக்கியே, சொல்லலாம்னா சொல்லு” என்றார் குருமூர்த்தி. 

தன் பிரச்சனையை பகிர்ந்து கொண்டான். 

அவனிடம் இன்னும் பேசி அவன் அறியாமலேயே அவன் ஆழ் மனதில் உள்ள சில விஷயங்களை அறிந்து கொண்டார். 

“காதலோட உச்சபட்ச படிநிலைதான் பக்தி. நீ கொஞ்சம் இறங்கி வரணும் அவ்ளோதான் பார்த்தி, தைரியமா அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க, உங்களுக்கு நெருங்கி பழகுற சந்தர்ப்பம் கிடைக்கும் போது தானா எல்லாம் சரியாகும்” என்றார். 

“இவ்ளோ ஈஸியா சொல்லிட்டீங்க சார், என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுவே ஆச்சிக்கு தண்டனையா மாறிடக் கூடாதுன்னு பயமா இருக்கு” என்றான் பார்த்தி. 

“அதிகமா கற்பனை பண்ற பார்த்தி, நீ சாதாரண மனுஷன், உன்னை விரும்புற பொண்ணும் சாதாரண மனுஷிதான். நீ அவங்களுக்கு கடமைப் பட்டவன்ங்கிற நினைப்பை விட்டொழி, அப்படித்தான் அவங்க யாரோ டெமிகாட் அப்படிங்கிற ரேஞ்சுக்கு உனக்குள்ள இருக்கிற பிம்பத்தை மாத்து. மனசுல பதிஞ்சு போனது உடனே மாறாட்டாலும் மெல்ல மெல்ல அந்த மாற்றம் உனக்குள்ள வரும்” என்றார் குருமூர்த்தி. 

அவன் அப்போதும் முடிவெடுக்க தயங்க, “மேரேஜ் பண்ணி ரிலேஷன்ஷிப் உள்ள போனாதான் இது ஒர்க் அவுட் ஆகுமா ஆகாதாங்கிறது உனக்கு தெரியும். எப்படியும் அந்த பொண்ணு உன்னை தவிர யாரையும் மேரேஜ் பண்ணிக்க போறது இல்லைங்கிற பட்சத்துல ஒர்க் அவுட் ஆகாம போனா கூட அந்தப் பொண்ணுக்கு பிடிச்சவனை மேரேஜ் பண்ணிட்டேன்ங்கிற திருப்தியோட போயிடும். உனக்குத்தான் கஷ்டம், வேற பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கலாம்னு உனக்கு வேணும்னா தோணலாம்” என்றார். 

“சேச்ச… ஆச்சி எனக்கு வைஃபா இருக்க அபப்டிலாம் எப்படி நினைப்பேன் சார்?” என வேகமாக கேட்டான் பார்த்திபன். 

“ஹ்ம்ம்… உனக்குள்ள இருக்கிறது தேவையில்லாத சந்தேகம், அர்த்தம் இல்லாத பயம். உங்க மேரேஜ் லைஃப் சக்ஸஸ்ஃபுல்லா இருக்கும், ப்ரொஸீட் பண்ணு மேன்” என அவர் சொல்லவும், இன்னும் நம்பிக்கை வராமல் விழித்தான். 

“சரி ரிஸ்க்ன்னே வை, ரிஸ்க் எடு. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு” என சொல்லி அனுப்பி வைத்தார். 

அடுத்த நாள் மாலையே அவனை தேடிக் கொண்டு வந்த தாத்தா வேறு ‘இரண்டில் ஒன்று இப்போதே பதில் சொல்’ என கிடுக்குப் பிடி போட்டார். 

“ஆச்சிய கல்யாணம் பண்ணிக்கிறேன் தாத்தா, ஆனா அதுக்கு முன்னாடி அவங்கள்ட்ட பேசணும், அப்புறமும் அவங்க சரின்னா பண்ணிக்கிறேன்” என சின்னக் குரலில் அவன் சொல்லவும் தாத்தாவுக்கு அவ்வளவு சந்தோசம். 

“தெரியும்டா நீ சம்மதிப்பேன்னு, என்ன இக்கு வச்சாலும் இந்த கல்யாணம் நடக்கத்தான் போகுது. நான் ஆச்சிய வர சொல்றேன், அவகிட்ட என்ன பேசணுமோ பேசிக்க” என்றவர், இன்று வேண்டாம் என அவன் சொன்னதை காதில் வாங்காதது போல சென்று விட்டார். 

தாத்தா சொன்னதை சுஹானாவால் நம்பவே முடியவில்லை. அவர் நிதானமாக விளக்கி சொல்லவும், “அவருக்கு பிரஷர் கொடுத்து ஓகே சொல்ல வச்சீங்களா தாத்தா?” எனக் கேட்டாள். 

“அடுத்து நீ ஏதாவது ஸ்டார்ட் பண்ணாதடா, போ நீயே போய் அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க, அவனுக்கும் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்”  என்றார். 

அவள் அங்கு செல்ல தயாராக, “அவன் கோக்கு மாக்கா பேசி உன் வாயால வேணாம்னு சொல்ல வைக்க ட்ரை பண்ணுவான், சுதாரிப்பா பேசு” என்றார். 

“அப்படிலாம் ட்ரிக் பண்ணி அவரை கல்யாணம் செய்துக்க வைக்க கூடாது தாத்தா”

“ட்ரிக் பண்றது அவனா இருந்தா நீ மாட்டாத, அவன் என்ன சொன்னாலும் சமாளிச்சிடலாமா, சரி பண்ணிக்கலாமான்னு உன்னை நீயே கேட்டு தெளிவு பண்ணிக்கிட்டா போதும், அவன் பேசுறதுல கன்ஃப்யூஸ் ஆகிடாத” என்றார். 

“திடீர்னு வந்து பார்த்தி ஒத்துக்கிட்டாருன்னு சொல்லிட்டு குவிஸ் காம்படீஷன் போறதுக்கு ரெடி பண்ற மாதிரி பண்ணாதீங்க தாத்தா, நான் வர்றேன்” என சொல்லி பார்த்தியின் வீட்டுக்கு புறப்பட்டாள். 

அவளின் வரவை எதிர்பார்த்து தன்னை தயார் படுத்தியிருந்தான் பார்த்திபன், ஆகவே எந்த பதற்றமும் இன்றி இயல்பாகவே அவளை வரவேற்றான். 

எடுத்தவுடன் “தாத்தா சொன்னாங்களே பார்த்தி, நிஜம்தானா?” எனக் கேட்டாள் சுஹானா. 

“இதுல போய் தாத்தா பொய் சொல்வாங்களா ஆச்சி?” என சிறு புன்னகையுடன் கேட்டான். 

“என்கிட்டல்ல ஃபர்ஸ்ட் சொல்லணும் நீங்க?”

“என் கூட வாங்க ஆச்சி” என்றவன் பால்கனி பக்கம் செல்ல, அவளும் சென்றாள். 

அவள் அவனுக்கு வாங்கிக் கொடுத்த மணி வாழைச் செடியில் சிவப்பு நிறத்தில் பூக்கள் மலர்ந்திருக்க அதில் பார்வையை பதித்தபடி நின்றிருந்தாள். 

“நீங்க உங்க விருப்பத்தை சொன்னப்போ என் மனநிலை எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்பவும் இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடும்ங்கிற நம்பிக்கைலதான் இந்த கல்யாண பேச்சை எடுக்கிறேன், உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கணும் ஆச்சி, இருக்குமா?” எனக் கேட்டான். 

“பதில் சொல்றேன் பார்த்தி, அதுக்கு முன்ன நீங்க சொல்லுங்க, தாத்தா ஆச்சியெல்லாம் சொல்றாங்கன்னு இல்லாம, உங்களை விட்டா நான் இப்படியே தனியா இருந்திடுவேங்கிற பயம் இல்லாம, உங்க கல்யாண பேச்சுல ஏதோ சின்ன டாட் போலவாவது என்னை வச்சு பார்க்க முடியுதா உங்களால?” எனக் கேட்டவள், சில நொடி தயக்கத்துக்கு பின், “இண்டிமேசியெல்லாம் விடுங்க பார்த்தி, உங்க லைஃபை என் கூட ஷேர் பண்ணிக்க உங்களுக்கு ஈஸியா இருக்குமா? உங்களுக்கு நல்ல துணையா இருப்பேன்னு நீங்க நம்புறீங்களா?” எனக் கேட்டாள். 

தான் பேசத் தயங்குவதை இத்தனை எளிதாக புரிந்து கொண்டு அவளே கேட்டதில் அவனுக்கு இலகுவாகவே இருந்தது. 

“கண்டிப்பா ஆச்சி!” என்றான். 

“ஹ்ம்ம்… இனியும் ஏதாவது கேட்கணுமா உங்களுக்கு?” எனக் கேட்டாள். 

“கேட்க ஒன்னுமில்ல, சொல்ல சில விஷயங்கள் இருக்கு” என்றான். 

என்ன என அவள் பார்க்க, அவனுடைய சம்பளம், லோன், குடும்ப சொத்தாக ஊரில் இருக்கும் ஒரே ஒரு ஓட்டு வீடுதான், அது கூட அப்பாவின் பெயரில்தான் இருக்கிறது என எல்லாம் சொன்னான்.

“ம்ம்…  அதுக்கு?” எனக் கேட்டாள். 

“பணம் சொத்து இதெல்லாம் ஆச்சிக்கு பொருட்டு இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும், ஆனா என்னோட உங்க லைஃப் எப்படி இருக்கும்னு உங்களுக்கு சொல்லணும்தானே ஆச்சி?” 

“அப்படியா? இப்போ எல்லாம் சொல்லிட்டீங்கதானே?” என அவள் கேட்க ஆம் என்றான். 

மணி வாழைச் செடியிடம் போய் நின்றாள். சிலும்பியிருந்த தலைமுடியை காதோரமாக பின் தள்ளி சரி செய்து விட்டுக் கொண்டே குனிந்தவள், “உண்மையான ரிச்னெஸ் ஒருத்தரோட குணம்தான், அப்படி பார்க்கும் போது ரிச்செஸ்ட் பெர்ஸனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். உங்க பாஸோட நிழலை தொட்டுப் பார்க்கிற தூரத்துல உட்கார்ந்துகிட்டு அவர்கிட்ட கதை பேசிக்கிட்டே இருந்தா… அது போதும் எனக்கு, அதை தவிர வேற எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லைன்னு அவர்கிட்ட சொல்லிடு” என சொல்லி பூவை லேசாக தட்டி விட்டாள். 

பூ அசைந்து ஆடியது அவள் சொன்னதற்கு சரி என பதில் தருவது போலவே இருந்தது. 

“சின்னதுல இந்த பூவை என் குட்டி ஃபிரெண்ட்ஸ் காதோரம் சொருகி விளையாடுவேன். மருதும் அப்படி பண்ணும் போது பொம்பள புள்ளைங்கலாம் அவனை போடான்னு சொல்லிட்டு ஓடியே போயிடும், ‘இந்த பூ உன் பக்கம்தான் இருக்குடா’ன்னு சொல்லி ரொம்ப கிண்டல் பண்ணுவான், இத்தனை வருஷம் கழிச்சு இப்ப இந்தப் பூ கட்சி மாறி உங்க பக்கம் நிக்கும்னு நெனச்சதே இல்லை” என்றான்.