“ஆச்சிக்கு அவ்ளோ சீக்கிரம் எது மேலயும் விருப்பம் வந்திடாது, வந்தா மாறவே மாறாதுன்னு உனக்கு தெரியாதா? அவ அப்படியே இருக்கட்டும். அவனே இறங்கி வருவான்” என சாதாரணமாக சொல்லி விட்டார் தாத்தா. பாட்டிக்குதான் கவலை அகலவே இல்லை.
சுஹானா தன் சொல்படி பார்த்தியிடம் காதல் பற்றி ஏதும் பேசுவதில்லை, ஆனால் அவளின் எண்ணம் மாறவே இல்லை என்பதை உணர்ந்தே இருந்தான் பார்த்தி. அது குறித்து அவனுக்கும் கவலையே.
இரண்டு முறை சொந்த ஊருக்கு சென்று வந்தான். பின் சேர்ந்தார் போல் விடுமுறை வந்தால் கூட இங்கேயேதான் இருந்தான். ஊருக்கு போகவில்லையா என பாட்டி கேட்டதற்கு, ஆராய்ச்சிப் படிப்புக்கான வேலையை காரணம் சொன்னான்.
தான் காதல் கொண்டவன் அருகிலேயே இருந்து கொண்டு கண்ணியம் தவறாமல் பழகி வந்தால் அவன் மீதான காதல் பெருகுமே தவிர எப்படி குறையும்? பார்த்திபனை மறக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இன்னும் தீவிரமாக அவனை காதலித்தாள் சுஹானா.
மனதுக்கு நிறைவு தரும் வேலை, கண் எதிரில் தன் மனதின் நாயகன், பாசமாக பார்த்துக் கொள்ளும் தாத்தா பாட்டி, எனக்கு எந்தக் குறையும் இல்லை என நேர்மறையாகவே தனக்கு சொல்லிக் கொண்டாள்.
இப்படியே ஆறு மாதங்கள் கடந்து விட்டன.
அந்த சனிக்கிழமை காலை பார்த்திபனின் அம்மா சரஸ்வதி மகனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவனது அம்மா வந்தால் எல்லாம் அங்கே வீட்டிலேயேதான் சமைத்து சாப்பிடுவார்கள். அம்மாவும் மகனும் தனியாக இருக்கட்டும் என பாட்டியும் இங்கு சாப்பிட வரச் சொல்லி கட்டாயப் படுத்த மாட்டார்.
பதினோரு மணி போல சரஸ்வதியே தாத்தாவின் வீட்டுக்கு வந்தார். சுஹானாவுக்கு அன்று பள்ளி இருந்ததால் அவள் சென்றிருந்தாள்.
பார்த்திபனின் அப்பா குரு மூர்த்தி உடல்நலமில்லாதவர், அவர் இருக்கும் போதே மகனுக்கு திருமணம் செய்ய நினைக்கிறாராம் சரஸ்வதி. தங்கையின் திருமணம், அவளின் பிரசவம் என எல்லாமே பார்த்திதான் பார்த்திருந்தான். அவர்களின் ஓட்டு வீட்டை கூட புணரமைத்திருந்தான்.
முன்னர் திருமண பேச்சு எடுத்த போது லோனை காரணம் காட்டி மறுத்தான். இப்போது லோன் எல்லாம் நெருங்கி வந்து விட்டது, திருமணத்தையும் அதிக செலவில்லாமல் எளிமையாக செய்து விடலாம், இவனோ இப்போதைக்கு வேண்டாம் என தீர்மானமாக நிற்கிறான்.
எல்லாம் சொன்ன சரஸ்வதி, “நீங்க சொன்னா கேட்டுப்பான், அவன்கிட்ட பேசி சம்மதம் வாங்குங்க” என்றார்.
“பொண்ணு கூட பார்த்து வச்சிட்ட போல” என போட்டு வாங்கினார் தாத்தா.
“இவன் சரின்னு சொல்லாம எப்படி பார்ப்பேன், ஆனா சொந்தத்திலேயே நிறைய பொண்ணுங்க இருக்கு, படிப்பு ஜாதகம்னு எல்லாம் பார்த்து ஏதாவது ஒரு பொண்ணை பேசி முடிச்சிடலாம்” என்றார் சரஸ்வதி.
“அது சரி, பார்த்திக்கு புடிக்க வேணாமா?” எனக் கேட்டார் பாட்டி.
“நல்ல கதை, அவனுக்கு பிடிச்ச பொண்ணாதான் பார்ப்பேன். வேலை செய்ற இடத்துல யாரையும் பிடிச்சிருக்கான்னு கூட கேட்டேனே, அதெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டான். அவன் சந்தோசம்தான் எங்களுக்கு முக்கியம்” என்றார் சரஸ்வதி.
நான் அவனிடம் பேசுகிறேன், விரைவில் நம் பார்த்திக்கு திருமணம் என சரஸ்வதிக்கு உறுதி தந்து விட்டார் தாத்தா.
சரஸ்வதியும் நம்பிக்கையோடு ஊருக்கு புறப்பட்டு விட்டார். அவர் சென்ற பின்தான் சுஹானாவுக்கு அவரின் வரவு பற்றியே தெரிய வந்தது.
“பார்த்தி அவரோட அம்மாவை எனக்கு இன்ட்ரோ கொடுக்கவே இல்லை, நீங்க கூட சொல்லலை ஆச்சி” என தன் பாட்டியிடம் கோவித்துக் கொண்டாள்.
“அதுக்கென்ன இன்னொரு முறை வரும் போது பார்த்துக்க” என எளிதாக சொல்லி விட்டார் பாட்டி.
ஆனால் பார்த்தியிடம் இதே கேள்வியை சுஹானா கேட்ட போது, அவனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அம்மாவிடம் இவள் ஏதும் சொல்லி விடுவாளோ அல்லது எப்படியோ அம்மாவுக்கு சுஹானா தன் மீது விருப்பம் கொண்டிருப்பது தெரிந்து போகுமோ என அவனுக்குள் அச்சம்.
சுஹானா அப்படியொன்றும் சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்ள போவதில்லை, என்னவோ அவனுள் பயம்.
“உங்கள்ட்டேருந்து இப்படி எதிர்பார்க்கல பார்த்தி!” என அவனிடமும் கோவம் கொண்டு தாத்தா வீட்டிற்கு சென்றாள்.
அவளை சமாதானம் செய்யவென அவளின் பின்னாலேயே வந்தான் பார்த்தி. அவள் அறைக்குள் சென்று விட, அவனை பிடித்து வைத்துக்கொண்டார் தாத்தா.
“எதுக்காக கல்யாணம் வேணாம்னு உன் அம்மாகிட்ட சொல்ற?” எனக் கேட்டார்.
தன் அம்மாவிடம் சொன்ன காரணங்களையே சொன்னான் அவன். நம்பாத பார்வை பார்த்தவரரிடம், “பி ஹெச் டி முடிக்க வேணாமா? இப்ப போய் கல்யாணம்னா எப்படி ஒத்துக்கிறது?” எனக் கேட்டான்.
“யோசிச்சு யோசிச்சு புதுசு புதுசா காரணம் சொல்லாத, உன்னை உன் பதினைஞ்சு வயசிலிருந்து பார்க்கிறேன், உன் மன ஓட்டத்தை என்னால கணிக்க முடியும்” என்றார் தாத்தா.
“நீங்க என்ன வேணா நினைங்க தாத்தா, கல்யாணம் பண்ணிக்கதான் போறேன், கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொன்னா கேட்க வேண்டியதுதானே?” என்றான்.
“உன் அம்மா சொல்றதுல உள்ள லாஜிக் புரியலையா உனக்கு?”
“அதான் சொல்றேனே தாத்தா, அடுத்த வருஷம் பார்க்கலாம்”
“ஹ்ம்ம்… அடுத்த வருஷம் மட்டும் சுஹானா வேற யாரையும் கல்யாணம் பண்ணிப்பான்னு நினைக்கிறியா?”
“தாத்தா!”
“தெரியும் டா, சுஹானா அவ லைஃப்ல செட்டில் ஆகுற வரை கல்யாணம் பண்ணிக்க மனசில்லாம ஏதோ காரணத்தை சொல்லிட்டு இருக்க” என அவன் நினைப்பை தாத்தா வெளிப்படுத்த, பிடிப்பட்டு விட்டோமே என அவரை பார்த்தான் அவன்.
“எப்படியும் அம்மா பார்க்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற, ஏன் டா என் பேத்தி அவ்ளோ குறைஞ்சு போயிட்டாளா உனக்கு?” என சற்றே கோவப்பட்டார் தாத்தா.
“பூச்சாண்டி காட்டாதடா! அவ்ளோ சீக்கிரம் அவ உன்னை மறப்பான்னு நினைக்கிறியா? முட்டாள்! அவ மறக்கவே போறதில்லை உன்னை. ஒன்னு அவளைப் பத்தி யோசிக்காம உன் அம்மா சொல்படி கேட்டு நட, இல்லை என் பேத்தி ஆசையை நிறைவேத்தி கொடு. ரெண்டும் இல்லாம சும்மான்னு இருந்த… நான் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என கண்டிப்போடு சொன்னார் தாத்தா.
சற்று தள்ளியிருந்து இவர்கள் பேசிக் கொண்டதை கேட்டிருந்த பாட்டி, அவனிடம் வந்தார்.
அவன் முகம் வெளிறிப் போயிருக்க, “நீ கொண்டு வந்த காசித் தும்பைக்கு தண்ணி விட்டு வளர்க்கிறவ உம் மேல உள்ள விருப்பத்தையும் சேர்த்து வளர்த்திட்டு வர்றா பார்த்தி. கட்டிக்கடா, நல்லாருப்பீங்க ரெண்டு பேரும்” என்றார் பாட்டி.
“ஹையோ ஆச்சி…” என ஏதோ சொல்ல வந்தவன் தோளில் தன் கைப்பிடி கொண்டு தட்டி அவனை பேச விடாமல் செய்தார் தாத்தா.
அவன் அடி விழுந்த தன் தோளை தடவிக் கொண்டே தாத்தாவை முறைத்தான்.
“நான்தான் தெளிவா சொல்லிட்டேன்ல டா, வேற ஏதும் பேசாத. ரெண்டு நாள் கழிச்சு வந்து உன் முடிவை சொல்லு, இப்ப கிளம்பு” என்றார் தாத்தா.