“பிரிஞ்சு போயிட்டேங்கிறதுக்காக எப்படியோ போன்னு நினைக்கல, நல்லா இரு” என சொல்லி கிளம்பத் தயாரானாள்.
பதினைந்து நிமிடங்களை கூட தொட்டிருக்கவில்லை அவள் வந்து, அதற்குள் கிளம்பிச் செல்கிறாளே என வேதனை கொண்டாலும் அவளை தடுக்காமல் விடை கொடுப்பது போலத்தான் பார்த்தான்.
பழகும் போதே அவனது குணத்தை மாற்றியமைக்க நிறைய போராடியிருந்தாள் யாமினி. அதில் அவளும் அவளது கனவுகளும் மூழ்குவது தெரிந்து, மூச்சு முட்டும் இந்த உறவு வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்தாள்.
அந்த முடிவு அப்படியே இருக்கும் பட்சத்தில் குறைந்தது என் காதல் நினைவுகளாக என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கும், அதை சாகடிக்க விரும்பவில்லை எனதான் சுஹானா தன்னை காண வந்த போது சொல்லியிருந்தாள் யாமினி.
இப்போதும் அந்த முடிவு அப்படியே இருக்க, உடம்பை பார்த்துக் கொள் என இன்னொரு முறை அழுத்திச் சொல்லி வெளியேறி விட்டாள்.
சற்று நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட நிவாஸ், தங்கைக்கு அழைத்துப் பேசினான்.
அண்ணன் சொன்னதை கேட்டுக் கொண்ட சுஹானா, “என்ன செய்யலாம்னு இருக்க நிவாஸ்?” எனக் கேட்டாள்.
“இது இப்படி ஆக நான்தான் சுஹா காரணம், சரி பண்ணிக்க ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்” என்றான்.
“அவங்கள கஷ்ட படுத்த கூடாது” என கட்டளையாக சொன்னாள்.
“அவ இன்னும் என்னை லவ் பண்ணிட்டுதான் இருக்கா சுஹா, அதனாலதான் தைரியமா இந்த முடிவை எடுத்தேன். என்னை தேடி வந்தா இல்லையா? நானும் அவளை தேடிப் போவேன், என் மிஸ்டேக்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு அவ பார்க்க ஆசைப்பட்டவனா அவகிட்ட போவேன்” என உணர்வுப் பூர்வமாக சொன்னவன், “ஆனா என்னால இன்னும் தனியா நடக்க முடியலை” என வருத்தப் பட்டான்.
“சீக்கிரம் சரியாகிடுவ ண்ணா. உன் வில் பவர் உன் பழைய ஹெல்த்தை மீட்டு தரும்” என நம்பிக்கையாக சொன்னாள் சுஹானா.
“தேங்க்ஸ் சுஹா!”
“ஹேய் எதுக்கு, கண்டிப்பா குணமாகத்தான் போற”
“இல்லை, யாமினிய போய் மீட் பண்ணினதுக்கு தேங்க்ஸ்!”
“ஸாரி அண்ணா, அவங்க பாசிட்டிவா ஏதும் சொல்லாததாலதான் உன்கிட்ட அதை பத்தி சொல்லல நான்” என விளக்கம் சொன்னாள்.
இன்னும் சில நிமிடங்கள் நன்றாக பேசிக் கொண்ட பின்னரே பேச்சை முடித்தனர்.
அதன் பின் தான் சரியாக வேண்டும் என்ற உத்வேகத்தோடு தன்னை கவனித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான் நிவாஸ்.
வளர்மதியின் கணவனை மீண்டும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விட்டிருந்தான் பார்த்திபன். அதை சுஹானாவிடம் சொன்னாள் வளர்.
“இப்படி கேட்கிறேன்னு தவறா எடுக்க கூடாது” என பீடிகை போட்டாள் சுஹானா.
“அட என்ன வேணா கேளு பாப்பா, அப்படியென்னதான் தப்பா கேட்கிறேன்னு பார்க்கிறேனே” என சொல்லி சிரித்தாள் வளர்.
“லவ் மேரேஜா இருந்தாலும் அவர் அடிக்கலாம் செய்யும் போது விட்டுட்டு வந்திடணும்னு தோணவே இல்லையா உங்களுக்கு?”
“தோணாம என்ன?”
“அப்புறம் ஏன் க்கா…”
“ஏன் சேர்ந்து வாழ்ந்து கஷ்ட படுறேன்னு கேட்கிறியா பாப்பா?” என வளர் கேட்க, ஆமாம் என்றாள் சுஹானா.
வளருக்கு முதல் குழந்தை பிறந்து ஓராண்டுக்கு பின் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தாள். அவளின் கணவனுக்கு கூலி வேலைதான், உடல் அலுப்பு தீர மருந்து போல மது அருந்தவான். அன்று அதிகப்படியான வேலையால் அவனுக்கு அதீதமான உடல்வலி.
நன்றாக குடித்து விட்டு வந்தவன் தன்னை மறந்த நிலையில் படுத்து விட்டான். ஈரத்தில் கால் வைத்து வழுக்கி விழுந்து விட்டாள் வளர். அவளின் நிலை தெரியாமல் போதையின் மயக்கத்திலேயே இருந்திருக்கிறான் அவன்.
வளரின் அம்மா வந்து மகளை கண்டு பதறி மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார். அவளுக்கு கரு கலைந்து போனது மட்டுமில்லாமல் இரத்தப் போக்கு நிற்காமல் போனதும் கர்ப்பப் பையை அகற்றும் நிலையாகி விட்டது.
சரியான நேரத்தில் தான் கவனித்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்ற குற்ற உணர்விலேயே மதுவுக்கு அடிமையாகும் நிலையை ஏற்படுத்திக் கொண்டான்.
“நல்லவனா இருந்தவரு இப்படி மாறிப் போவாருன்னு கனா கூட கண்டதில்லை. பழைய மனுஷனா மாத்திடணும்னு வைராக்கியமா இருக்கேன் பாப்பா” என்றாள் வளர்.
“அதெப்படிக்கா, குற்ற உணர்ச்சின்னா கூட உங்களை இன்னும் நல்லா பார்த்துக்கணும் இல்லையா? உங்களுக்கு ஒரு பையன் இருக்கிறத மறந்திட்டாரா? உலகத்துக்கு வராத சிசு போனத நினைச்சு இந்த உலகத்துக்கு வந்திருக்க குழந்தையை பார்க்காம விடுவாரா?”
“உன் கோவம் எல்லாம் எனக்கும் இருக்கு கண்ணு, என்ன பண்ண சொல்ற, பாவி மனசு அந்த மனுஷனை விட்டுக் கொடுக்க முடியாம தவிக்குதே” என்ற வளர்மதியை சலிப்பாக பார்த்தாள் சுஹானா.
“நீ சொல்லு பாப்பா, நீ ஆசைப்பட்டு கட்டிக்கிட்டவர் இப்படி அவர் அறியாம தப்பு பண்ணினா என்ன செய்வ?” எனக் கேட்டாள் வளர்.
இவர்களின் உரையாடலை தள்ளியிருந்து கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, தன் காதை தீட்டி வைத்துக்கொண்டார்.
“சரி என் புருஷனை விடு, பொதுவா கேட்கிறேன் நீ என்ன செய்வ?”
“கஷ்டம்தான் க்கா, ஒரு முறை ஒருத்தர் மேல வர்ற அந்த ஃபீலிங்ஸ் வேற ஒருத்தர்கிட்ட கண்டிப்பா வராதுதான். அந்த லவ் அப்படியே பத்திரமா வச்சிட்டே வேற ஒன்னுல ஃபோகஸ் பண்ண ஆரம்பிச்சிடுவேன்” என்றாள்.
அப்படியே அவர்களின் பேச்சு வேறு திசைக்கு மாறி விட்டது. பேத்தியின் பேச்சை கேட்டு பாட்டிக்குதான் கவலையாகி விட்டது. தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டவர், “அவன் இவளை வேணாம்னு சொல்லிட்டான், இவ அவனை மறந்த மாதிரியே தெரியலை, கல்யாணமே பண்ணிக்க மாட்டாளா சுஹானா?” எனக் கேட்டார்.
“இவளை உயரத்துல வச்சே பார்த்திட்டான் பார்த்தி, அதனாலதான் பக்கத்துல துணையா நிறுத்திக்க பயப்படுறான். கட்டாய படுத்தி நிறுத்தி வச்சா என்ன பண்ணுவான், ஆச்சியோட கையை புடிக்க முடியாதுன்னு சொல்லிடுவானா? ஆச்சி நல்லா வாழணும்னு நம்மள மாதிரியே அவனுக்கும் அக்கறை இல்லாம போயிடுமா?” எனக் கேட்டார் தனசேகரன்.
“புரியுற மாதிரி பேசுங்களேன்” என நொடித்தார் பத்மாவதி.