சுஹானா தன் காதலை அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படுத்தி இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. இன்று வரை தாத்தாவின் வீட்டிற்கு வராமலே இருந்தான் பார்த்திபன்.
சுஹானா பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து விட்டாள். முதல் நாள் அவள் புறப்படும் போது அபார்ட்மெண்ட் வாயிலில் வைத்து அவளை சந்திக்க நேர்ந்து விட்டது. அவள் அவனருகில் வருவதற்குள் அவளை காணாதது போலவே வேகமாக கிளம்பிச் சென்றிருந்தான்.
அடுத்த நாள் எல்லாம் அவளின் முன் எதிர்படவே இல்லை அவன்.
ஆதங்கப் பட்ட சுஹானா நேராக அவன் முன் போய் நின்று விட்டாள். தடுமாற்றத்துடனே “வாங்க ஆச்சி” என்றான் அவன்.
“என்ன பார்த்தி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்?” என அவள் கேட்கவும் பதறிப் போனான்.
“ஹையையோ ஆச்சி! நீங்க எந்த தப்பும் செய்யல”
“அப்போ ஏன் என்னை கண்டு ஓடுறீங்க? என்னை விடுங்க, தாத்தா ஆச்சி பத்தி நினைச்சி பார்த்தீங்களா, எதிர்வீட்ல இருந்துகிட்டே வீட்டுக்கு வராம இருந்தா அவங்களுக்கு எப்படி இருக்கும்?”
ஆமாம் அவன் அப்படித்தான் இருந்தான், தாத்தாவோ ஆச்சியோ என்ன வெளி வேலை சொன்னாலும் செய்து தருவான், வீட்டிற்குள் ஏதேனும் வேலை என்றால் ஆள் அனுப்பி வைப்பான், கைப்பேசி வாயிலாக வேலை நடந்ததா எனக் கேட்டுக் கொள்வான், இரண்டு நாட்களுக்கு முன் தாத்தாவை மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும் என்ற போதும் அவன்தான் கார் எடுத்தான், ஆனால் வீட்டுக்குள் மட்டும் வரவில்லை.
உண்மையில் சுஹானாவை எதிர்கொள்ள அவனுக்கு பயமாக இருந்தது. ஏமாற்றம் நிறைந்த பார்வை அவள் பார்த்து விட்டால் அதை அவனால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியும் போல தோன்றவில்லை.
தாத்தாவோ அவன் விருப்பப் படி இருக்கட்டும், அவனே தெளிந்து வீட்டுக்கு வருவான், நீயாக ஏதும் பேசக்கூடாது என தன் மனைவிக்கு கட்டளை போட்டிருந்தார்.
“சொல்லுங்க பார்த்தி, எதுக்காக அந்த வீட்டுக்கு வர மாட்டேங்குறீங்க?”
“வேலை இருந்தது ஆச்சி”
“பொய் கூட சொல்ல வருமா உங்களுக்கு?”
“ஆச்சி…” பாவமாக அழைத்தான்.
“என்னாலதான் அங்க வர மாட்டேங்குறீங்கன்னு எனக்கு தெரியும், நான் ஹாஸ்டல் போய்டலாம்னு இருக்கேன்”
“ஹையோ ஆச்சி!”
“அதுக்கப்புறம் நீங்க அங்க போங்க போகாம இருங்க, என்னாலதான்னு எனக்கு கில்ட் இருக்காது”
“அப்படிலாம் ஏதும் பண்ணிடாதீங்க ஆச்சி, நான் வர்றேன் இப்பவே வர்றேன், வாங்க”
“நீங்க போங்க, எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு” என சொல்லி புறப்பட்டு விட்டாள்.
சில நாட்களுக்கு பின் அவன் அங்கு செல்ல போகிறான், தாத்தா பாட்டியிடம் மனம் விட்டு பேசட்டும், தான் அங்கிருந்தால் தயக்கம் கொள்ளலாம் என நினைத்தே அவள் வெளியில் சென்று விட்டாள்.
அவன் வீட்டுக்கு வரவுமே தாத்தா முறைப்பாக பார்க்க, பாட்டியோ அவன் கையை பிடித்துக்கொண்டு அழுது விட்டார்.
‘என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறாய், இங்கு வராமல் இருந்ததற்கு உருப்படியான காரணம் ஒன்று சொல் பார்க்கலாம்’ என தாத்தா கோவமாக கேட்க, அவன் அமைதி காத்தான்.
“கிச்சன் டேப் லீக் சரி பண்ண ஆள் வந்தானே, இப்ப பிரச்சனை இல்லையே?” எனக் கேட்டுக் கொண்டே சமையலறை சென்று பரிசோதித்து பார்த்தான்.
“நிறைய திட்டாத, விடு, இனி பழைய படி வர போக இருப்பான்” என தன் மனைவியிடம் சொன்னார் தாத்தா. பாட்டியும் இயல்பாக இருந்து கொண்டார். மறந்தும் இருவரும் சுஹானாவின் காதல் பற்றிய பேச்சை அவனிடம் எடுக்கவில்லை.
அன்றிலிருந்து வழக்கம் போல அங்கு வர போக இருந்தான். அவன் வீட்டிற்கு வரும் போது அறைக்குள் அடைந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டாள் சுஹானா. உணவு நேரத்திலும் ஒன்று முன்னரே சாப்பிட்டு விடுவாள், அல்லது பிறகு சாப்பிடுகிறேன் என ஏதாவது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்து விடுவாள்.
இப்போது அவளிடம் போய் நிற்பது பார்த்தியின் முறையானது.
“இப்ப நீங்க ஏன் என்னை அவாய்ட் பண்றீங்க ஆச்சி, இப்படி செஞ்சா நான் எப்படி இங்க ஃப்ரீயா வந்து போக முடியும்?” எனக் கேட்டான்.
“என் கூட நார்மலா பழகுவீங்கன்னு எனக்கு தோணல, அதனாலதான்…” என்றவள் தொடர்ந்து, “அன்னிக்கு நடந்த விஷயத்தை மறந்து போயிடலாம் பார்த்தி, அந்த ஒரு நாள் நம்ம லைஃப்ல இல்லவே இல்லைனு நினைச்சுக்குவோம். பழைய படி ஃப்ரெண்ட்லியா இருக்கலாமே” என அவளே ஒரு உடன்படிக்கையும் முன் வைத்தாள்.
அதெப்படி மறக்க முடியும்? என்ற கேள்வியை விழுங்கி விட்டு அவனும் சம்மதம் சொன்னான்.
மகள் மீது கோவம் கொண்டு ஆஷுதோஷ் கிளம்பி சென்றதில் காயத்ரிக்கு அவர் மீது நல்ல கோவம். ஆனால் முழுதாக குணமடையாத மகன் அங்கிருக்க அவனுக்காக மும்பை சென்று விட்டார்.
ஆஷுதோஷும் சுஹானாவும் பேசிக் கொள்வதில்லை. அவரது இரத்த அழுத்தம் உயர்ந்து போய் மாத்திரைகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார் என தெரிய வரவும் காயத்ரியால் அவர் மீதான கோவத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
ஒரு நாள் நிவாஸை காண வந்திருந்தாள் யாமினி. நல்ல வேலையாக ஆஷுதோஷ் வீட்டில் இல்லை. இதை எப்படி எடுத்துக் கொள்ளவென காயத்ரிக்கு தெரியவில்லை, ஆனால் தடை சொல்லாமல் மகனைப் பார்க்க அனுமதித்தார்.
அவளின் வரவு நிச்சயமாக நிவாஸ்க்கு பெரிய அதிர்ச்சிதான். அவனுக்கு விபத்து நேர்ந்தது தெரிந்து பார்க்க வந்திருப்பதாக சொன்னாள்.
அவனுக்கு என்ன பேசவென தெரியவில்லை, தங்களின் காதலை சொல்லிக் கொள்வதற்கு முன் எப்படி இருந்தார்களோ அது போன்ற நிலையில் அவள் பேசினாள்.
‘சுஹானா சொல்லித்தான் உனக்கு இப்படி ஆனது தெரியும்’ என அவள் சொல்லவும்தான், தங்கை இவளை சந்தித்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டான் நிவாஸ்.
இனி ஒரு போதும் இத்தகைய தவறை செய்யாதே என்றவளை என்னவென பார்த்தான்.
‘இப்படி மது போதையில் கார் ஓட்டுவது’ என அவள் குறிப்பிட்டு சொல்லவும் சரியென தலையாட்டிக் கொண்டான்.
“ட்ரிங்ஸ் பண்ணிட்டு டிரைவ் பண்றது மட்டுமில்ல, ட்ரிங்ஸ் எடுக்கிறத கூட செய்யாத” என்றாள்.