இதய கிளையில் பூத்தவளே -1

அத்தியாயம் -1

கன்னம் மின்னும் மங்கை வண்ணம் 

உந்தன் முன்பு வந்த பின்னும் 

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா…

இனிமையாக பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, கண்களை மூடி ரசித்துக் கொண்டிருந்தார் தனசேகரன். பெரும்பாலான பழைய பாடல்களின் எல்லா வரிகளும் அவருக்கு மனப்பாடம். 

பால் வண்ணம் பருவம் கண்டு 

வேல் வண்ணம் விழிகள் கண்டு… என அவரும் சேர்ந்து பாட, வீட்டின் உள்ளே வந்த பார்த்திபனின் முகத்தில் சன்னமான சிரிப்பு. 

அவரை தொந்தரவு செய்யாமல் உள்ளே செல்ல பார்த்தவனை கண்டு கொண்டவர், “என்னடா இந்த நேரம், வேலைக்கு போகலையா?” என விசாரித்தார். 

“அடடா உங்களை யார் என்னை பார்க்க சொன்னது? யாரை நெனச்சி பாடுனீங்களோ அவங்கள அழைச்சிட்டு வரத்தான் கிச்சன் பக்கம் போனேன், நீங்க கண்டினியூ பண்ணுங்க, இதோ வந்திடுறேன்” என சொல்லி திரும்பினான் பார்த்திபன். 

கைத்தடி எடுத்து செல்லமாக அவனது தோளில் தட்டியவர், “போடா இவனே! நீயென்ன உன் ஆச்சிய நெனச்சி பாடினதா தப்பா நெனச்சிட்டியோ? அதெல்லாம் இல்லை” என சொல்லி குறும்பாக கண்களை சிமிட்டினார். 

“ஓஹோ கதை அப்படி போகுதா?” என கிண்டலாக கேட்டவன், “ஆச்சி ஆச்சி…” என சத்தமிட்டுக் கொண்டே பத்மாவதியை தேடிக் கொண்டு சென்றான். 

பால்கனியில் பேத்தியுடன் காணொளி அழைப்பில் இருந்த பத்மாவதி, “ஏன் பார்த்தி, என்னாச்சுடா?” எனக் கேட்டார். 

கைப்பேசி திரையை ஆக்ரமித்துக் கொண்டிருந்த சுஹானாவும் நெற்றி சுருக்கி ‘என்ன?’ என்பது போல அவனை பார்த்தாள். அவளை காணவுமே பார்த்திபனிடம் பவ்யம் வந்து ஒட்டிக் கொண்டது. 

“சின்ன ஆச்சி கூடவா பேசிட்டு இருக்கீங்க, பேசுங்க நான் அப்புறம் வர்றேன்” என சொல்லி அங்கிருந்து சென்று விட்டான். 

“என்னவாம் உங்க பார்த்திக்கு?” தன் நீளமான நீல நிற விழிகளை பெரிதாக்கிக் கொண்டு கேட்டாள் சுஹானா. 

“தெரியலைடி, என்னவோ சொல்ல வந்தான் போயிட்டான்” என்றார் பத்மாவதி. 

அவளும் அவன் பேச்சை விடுத்து அவள் வைத்த ரோஜா செடியில் மொட்டு விட்டிருப்பதை ஆசையாக தன் அம்மம்மாவுக்கு காண்பித்தாள். 

கையில்லாத டாப், முட்டி வரை உள்ள குட்டி பாவாடை, தோள் தொட முயன்று தோற்கும் முடிக்கற்றை, பால் வண்ண மேனி,  ரோஜா மொட்டை பார்த்திருந்த கண்களில் ஏதோ அதிசயத்தை கண்டு விட்டது போன்ற பாவம் என பத்மாவதியின் பார்வைக்கு இன்னும் சிறு குழந்தையாகவே தெரிந்தாள் சுஹானா. 

தாத்தா பாட்டிக்கு பேத்தி என்றால் எப்படி உயிரோ, அப்படித்தான் அவர்களின் மீது அவளுக்கும் அலாதியான பிரியம். எல்லா விடுப்புக்கும் இங்கு வந்து விடுவாள். எந்நேரமும் வேலை நிமித்தமாக ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோரிடம் காண முடியாத அன்பையும் அரவணைப்பையும் தாத்தா பாட்டியிடம்தான் பெற்றாள். குழந்தைப் பருவத்தில் கூட இங்கே இவர்களுடனே தங்கி விட அவளுக்கு சம்மதமே. 

ஆனால் சுஹானாவின் அப்பா ஆஷுதோஷ் அதற்கு சம்மதித்திருக்கவில்லை. 

“பத்துமா சொல்லு, ரோஸ் எப்படி?” என ஆசையாக கேட்டாள் சுஹானா. 

“உன்னை போலவே இருக்குடா” என மனதிலிருந்து சொன்னார் பத்மாவதி. 

உதடுகள் குவித்து தன் அம்மம்மாவுக்கு முத்தம் வைத்த சுஹானா, அங்கிருந்த கூடை ஊஞ்சலில் வாகாக அமர்ந்து கொண்டே இன்னும் ஏதோ கதை வைத்துக் கொண்டிருந்தாள். 

அடிக்கும் வெயிலுக்கு இதமாக மோரை தாளித்து இஞ்சி கொத்தமல்லி எல்லாம் போட்டு மூன்று குவளைகளில் ஊற்றிய பார்த்திபன் பால்கனியை எட்டிப் பார்த்தான். இன்னும் பத்மாவதி கைப்பேசி அழைப்பில்தான் இருந்தார். 

தனசேகரனுக்கு ஒரு குவளை கொடுத்தவன் பத்மாவதிக்கும் எடுத்து சென்று நீட்டினான். 

“என்ன பத்துமா உனக்கு மட்டும் ஏதோ ஸ்பெஷலா வருது?” என விசாரித்தாள் சுஹானா. 

“இந்தா அவன்கிட்டேயே கேளு” என கைப்பேசியை பார்த்திபனிடம் கொடுத்தார் பத்மாவதி. 

இதை எதிர்பார்க்காதவன் அவளிடம் என்ன பேசுவதென விழித்தான். 

“ஹையோ வெக்க பட ஆரம்பிச்சாச்சா?” எனக் கேட்டு சிரித்தாள் சுஹானா. அவன் இன்னும் வெட்கி புன்னகைத்தான். 

அப்படி ஒன்றும் கூச்ச சுபாவி இல்லை பார்த்திபன். பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டே பி ஹெச் டி செய்து கொண்டிருப்பவன், வகுப்பை கட்டுக்குள் வைத்து தடங்கல் இல்லாமல் அத்தனை லாவகமாக பாடம் எடுப்பவன், மாணவனாக இருந்த போது கல்லூரி நிகழ்ச்சிகளை கூட இவன்தான் தொகுத்து வழங்குவான். 

பெரும் கல கலப்பு ரகம் என சொல்ல முடியாதென்றாலும் அமைதியும் கிடையாது. 

ஆனால் சுஹானா என்றால் எங்கிருந்துதான் இந்த உணர்வு வருமோ, அவனுக்கே தெரியாது. அவளும் கூட அவனை விட ஐந்து வயது சின்னவள், அந்தஸ்து பிற பாகுபாடு என எதையும் பாராமல் இலகுவாக இனிமையாக பழகுபவள். 

“அட அப்படி என்னதான் பார்த்தி அந்த கிளாஸ்ல?” எனக் கேட்ட சுஹானா, “என்ன ஏதும் நாட்டு சரக்கா?” என ரகசியக் குரலில் கேட்டாள். 

அதிர்ந்து விழித்தவன் பாட்டி கேட்டு விட்டாரா என பார்த்தான். அவர் ஈரத் துணிகளை உலர்த்தும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இங்கு கவனித்திருக்கவில்லை. 

“என்ன ஆச்சி இப்படி கேட்குறீங்க? அதெல்லாம் இல்லை, நீர் மோர், பட்டர் மில்க்” என்றான். 

“ஹோய் என்ன பார்த்தி… என்னை இவ்ளோ மோசமா நினைச்சிட்டீங்க? மோருன்னு சொன்னாலே எனக்கு புரியும்” என்றாள். 

“சொன்னா புரியும், எழுதி காட்டினாதான் புரியாது” என சிரிப்புடன் சொன்னான். சுஹானாவின் பள்ளி கல்லூரி படிப்பெல்லாம் மும்பையில்தான். தமிழ் பேச மட்டும்தான் வரும். ஆனால் குறை சொல்ல முடியாதபடி நன்றாக பேசுவாள். 

“பார்டா, பார்த்திக்கு ஜோக் அடிக்கலாம் வருதே, காலேஜ்ல நீங்க  சகவாசம் வச்சிருக்க அந்த கலகல பார்ட்டி யாரோ?” எனக் கேட்டாள். அவளை பொறுத்த வரை பார்த்தி என்றால் அமைதியோ அமைதி, அவனுக்கு இப்படியெல்லாம் பேச வராது. 

சிரிக்க மட்டும் செய்தவன், “ஆச்சி இந்தாங்க நீங்க பேசுங்க, துணி நான் காய போடுறேன்” என பாட்டியிடம் சொன்னான். 

“முதல்ல அந்த மோரை குடிடா” என அதட்டினார் பாட்டி. 

ஒரே மூச்சில் மோரை குடித்தவன் கைப்பேசியை பாட்டியின் கையில் திணித்து உள்ளே அனுப்பி வைத்து விட்டான். இப்போதுதான் அவனால் ஆசுவாசமாக மூச்சு விட முடிந்தது. 

சுஹானா இல்லையென்றால் இப்போதிருக்கும் இந்த கெளரவமான வாழ்வு தனக்கு கிட்டியிருக்காது எனதான் அவனது மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. அவள் மீது மரியாதை என சொல்வதை விட பக்தி எனதான் சொல்ல வேண்டும். 

தாத்தா பாட்டியிடம் கூட சிரிக்க சிரிக்க பேசுவான், அவளிடம் இலகுவாக பேச வேண்டும் என அவனே விரும்பினால் கூட கடினம்தான். 

சிறு பெண்ணாக இருந்தவள் விரைவாகவே குமரியாகி விட தன்னால் ஒரு ஒதுக்கம் வந்து விட்டது. 

மாறாக சுஹானாவோ அவனுக்கும் சேர்த்து பேசி விடுவாள். 

“இந்தாடா உங்கிட்ட என்னமோ பேசணுமாம்” என சொல்லி மீண்டும் அவனிடமே கைப்பேசியை தந்து விட்டு சென்றார் பாட்டி. 

பார்த்திபன் என்ன என்பது போல பார்க்க, “உங்க ஷர்ட் சைஸ் என்ன பார்த்தி?” எனக் கேட்டாள் சுஹானா. 

“ஹ்ஹான்… ஏன் எதுக்கு?” 

“ம்ம்ம்… உங்க பக்கத்து வீட்டுக் காரருக்கு ஷர்ட் எடுக்கலாம்னு இருக்கேன்” என சாதாரணமாக சொன்னாள். 

“ப்ச், எனக்கு எதுவும் வேணாம் ஆச்சி” என்றான். 

லேசாக சிரித்தவள், “முன்னல்லாம் இந்த ஆச்சி ரொம்ப இரிடேட் பண்ணும் பார்த்தி, இப்ப என்னமோ அழகா தெரியுது, ஸ்வீட்டா இருக்கு” என்றாள். 

என்ன சொல்வதென அவன் பார்க்க, கண்களால் அவனை அளவிட்டவள், “எக்ஸ் எல் ஓகேவா இருக்கும்தானே? நிவாஸ்க்கும் அதான் சைஸ்” என்றாள். நிவாஸ் அவளது அண்ணன். 

அவன் ஆமோதிப்பாக தலையாட்ட, “நெக்ஸ்ட் வீக் அங்க வர்றேன், தாத்தா சொல்லலையா?” எனக் கேட்டாள். 

தெரியாமல் என்ன, அதற்குத்தானே கல்லூரிக்கு செல்லாமல் இங்கு வந்திருக்கிறான். 

“ஓகே பை, எனக்கு வெளில கிளம்பணும்” என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள் அவள். 

பார்த்திபன் ஹால் வர, இன்று விடுமுறையா என விசாரித்தார் பத்மாவதி. விடுப்பு எடுத்துக் கொண்டதாக சொன்னவன், “கார்டன் போடணும்னு சொன்னீங்களே தாத்தா?” என தனசேகரை பார்த்தான். 

“இடம் சின்னது, வேணாம்னு சொல்லிட்டா உன் ஆச்சி” என முகத்தை தூக்கினார் தாத்தா. 

“ஏன் ஆச்சி? அந்த இடம் தாராளமா போதுமே” என்றான் பார்த்திபன். 

“அவரோட சேர்த்துகிட்டு நீயும் பேசாத, அதெல்லாம் பத்தாது, ஒரு மாசத்துல வந்திட்டு போக போறா, அவளுக்கு பிடிக்கும்னு நிரந்தரமா இங்க செட் பண்ண நினைக்கிறார் இவர். ஆமாம் அதுக்கா லீவ் போட்ருக்க?” என வியப்பாக கேட்டார் பத்மாவதி.

“அப்புறம் சின்ன ஆச்சி ஒரு விஷயம் ஆசை படறாங்கன்னா அத நடத்தி வைக்கிறது விட வேற என்ன வேலை?” எனக் கேட்டான் பார்த்திபன். 

பாட்டி தன் கணவரை முறைக்க, “நான் ஏதோ சொன்னேன்டி, அவன் லீவ் போட்டுட்டு வருவான்னு எனக்கென்ன ஜோசியமா தெரியும்?” எனக் கேட்டார் தனசேகர். 

“ஏதாவது சொன்னா செய்யாம போவானா அவன்? தேவையில்லாம ஒரு நாள் லீவ் வேஸ்ட்டா போச்சு, உங்களாலதான்” என கோவப்பட்டார் பாட்டி. 

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் சின்ன வாக்குவாதம். “எனக்கு நிறைய லீவ் இருக்கு, இது ஒரு பிரச்சனையா? விடுங்க, அப்புறம் கார்டன் போட வேணாம், ரெண்டு மூனு பூந்தொட்டி வாங்கி வைக்கலாம். என்ன வைக்கலாம்னு ஐடியா சொல்லுங்க” என அவர்களை சமாதானம் செய்தான் பார்த்திபன். 

பாட்டியும் தாத்தாவும் எந்த செடி வைப்பது என தர்க்கம் செய்து கொள்ள, இடுப்பில் கை வைத்து முறைத்த பார்த்திபன், “ரெண்டு பேரும் ரிலாக்ஸா இருங்க, நானே பார்த்துக்கிறேன்” என சொல்லி புறப்பட்டான். 

“கார் எடுத்துக்கடா” என தாத்தா சொல்ல, பூந்தொட்டிகள் வைத்து எடுத்து வர வசதியாக இருக்கும் என்பதால் அவனும் மறுக்காமல் கார் சாவி எடுத்துக் கொண்டே கிளம்பினான். 

திருச்சியில் பிறந்து வளர்ந்த பார்த்திபன் தன் பதினாறு வயதில் சென்னைக்கு வந்து சேர்ந்தான். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக தூரத்து உறவினரின் மளிகை கடையில் வேலை செய்யவென வந்திருந்தான். 

மளிகை சாமான் கொடுக்கவென தனசேகரின் வீட்டுக்கு ஓரிரு முறை வந்திருக்கிறான். அப்படியொரு முறை வந்த போதுதான் சுஹானாவும் விடுப்பை கழிக்கவென இங்கு வந்திருந்தாள். 

டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தவளின் தொண்டையில் எதுவோ சிக்கிக் கொண்டு விட்டது. மூச்சு விட முடியாமல் திணறியவளை கண்டு தாத்தாவும் பாட்டியும் பயந்து விட்டனர். 

பார்த்திபன் சாரணர் இயக்கத்தில் இருந்தவன், அவனுக்கு இப்படியானால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என தெரிந்திருக்க, வேகமாக செயல்பட்டான். 

ஹெய்ம்லிக் முறை (பாதிக்க பட்டவரின் பின்னால் நின்று கைகளால் அவரின் அடிவயிற்றில் உள்நோக்கியும் மேல் நோக்கியும் பலமாக அழுத்திக் கொடுத்து, சிக்கிய பொருளை வெளியேற்றும் முறை) மூலமாக சுஹானாவின் தொண்டையில் சிக்கியிருந்த முருங்கைக்காய் துண்டை வெளி வரச் செய்தான். 

சுஹானா அழுது கொண்டே அவனுக்கு நன்றி சொன்னது இன்னும் அவனுக்கு நினைவில் நிற்கிறது. 

எதையும் எதிர்பார்க்காமல் அவன் செய்த உதவிதான் அது. பணமோ அல்லது வேறு ஏதாவது பரிசையோ கொடுத்து அவனுக்கு நன்றி சொல்லத்தான் தாத்தாவும் பாட்டியும் நினைத்தனர். 

பார்த்திபனை பற்றி கேட்ட சுஹானாதான், அவன் ஏன் படிக்கவில்லை என்ற கேள்வியை முன் வைத்தாள். அவன் வீட்டில் வசதியில்லை என பாட்டி சொல்ல, நம்மிடம் வசதி இருக்கிறதே என உடனே சொல்லி விட்டாள். 

சார் பதிவாளராக இருந்த தனசேகர் ஒரு பிள்ளையை படிக்க வைப்பதால் தங்களிடம் எதுவும் குறையப் போவதில்லை என எண்ணி பேத்தியின் உத்தரவுக்கு உடனே கட்டுப்பட்டு விட்டார். 

ஒரு வரியில் பார்த்திபனின் வாழ்க்கையை மாற்றிய சஹானா விடுமுறை முடிந்து மும்பை சென்று விட்டாள்.

சொந்த ஊரில் பார்த்திபனை அனுப்பி படிக்க வைக்க நினைத்தாலும் அவனது பெற்றோர் வேறு ஏதேனும் வேலைக்கு  அனுப்பி விடுவார்களோ என நினைத்த தனசேகர் அவனை தன்னுடனே வைத்துக்கொண்டார். 

மளிகை கடை மூலமாக பார்த்திபன் என்ன சம்பாதித்து அவன் வீட்டுக்கு அனுப்பி வந்தானோ அதையும் அவரே செலுத்தி, அவனை சென்னையிலேயே படிக்க வைத்தார். 

தங்கள் ஒரே மகள் வட நாட்டை சேர்ந்த ஆஷுதோஷ் என்பவரை காதல் மணம் புரிந்து அங்கேயே சென்று விட்டதால் பார்த்திபனை தங்களுடன் வைத்துக்கொள்வது அவர்களுக்குமே பிடித்தமானதாக இருந்தது. 

சுஹானாவை செல்லமாக ஆச்சி எனதான் அழைப்பார் தனசேகர். பார்த்திபனும் அவரை பின்பற்றிக் கொண்டான். 

வீடு பழமையாகி விட்ட போதுதான் அதை விற்று விட்டு அப்பார்ட்மென்ட்டில் ஃபிளாட் வாங்கி குடியேறினார்கள் பெரியவர்கள். பார்த்திபனும் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்க, அவர்களின் வீட்டுக்கு எதிர் வீடு காலியாகவும் அங்கேயே வாடகைக்கு வந்து விட்டான். 

எதற்கு தனி வாடகை, உனக்கு கல்யாணம் ஆகும் வரையிலாவது எங்களுடனே இருக்கலாம், பணம் மிச்சம் பிடிக்கலாம் என பெரியவர்கள் சொல்லிப் பார்த்தார்கள். 

இரண்டு படுக்கையறை கொண்ட அவர்களின் வீட்டில் இனியும் தான் தங்கினால் அவர்களுக்கு தொந்தரவு, தன் பெற்றோர் இங்கு வந்து போக போகவும் தனி வீடுதான் வசதியாக இருக்கும் என சொல்லி மறுத்து விட்டான். 

ஆனால் தினம் ஒரு முறை வந்து இவர்களை பார்த்து விட்டுத்தான் செல்வான். 

சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் காசித்தும்பை பூச்செடிகள் இருந்த தொட்டிகள் வாங்கி வந்திருந்தான் பார்த்திபன். 

“இது சின்ன ஆச்சிக்கு பிடிக்கும்ல ஆச்சி?” என ஆசையாக கேட்டான். 

“பின்ன பிடிக்காம கூட போகுமா?” எனக் கேட்டார் தாத்தா. 

“ஆக நான் சொன்ன மல்லி முல்லை செம்பருத்தின்னு ஏதும் கிடைக்கல உனக்கு?” எனக் கேட்டு முறைத்தார் பாட்டி. 

பாட்டி ஆசைப்பட்டதை வாங்கதான் சென்றான். என்னவோ இந்த மலர்களை பார்க்கவும் சுஹானாவுக்கு இந்த வகை பிடிக்கும் என மனதில் தோன்ற, இதையே வாங்கி விட்டான். 

“நல்லாதான் இருக்கு பத்து, ஏதாவது சொல்லாத, அவனுக்கு பசிக்கும், வா சாப்பிடலாம்” என்றார் தாத்தா. 

“வர வர எங்க என் பேச்சை கேட்குறீங்க?” என அலுத்துக் கொண்டே சென்றார் பாட்டி.

இஷ்ட தெய்வத்திற்காக மலர்களை கொண்டு வந்து விட்ட திருப்தியுடன் நடந்தான் பார்த்திபன்.