Advertisement

கசாட்டா 3:

வெண்ணிலா வெளிச்சம்

போகும் இடமெல்லாம்

தொடர்வதைப் போல உனை

எப்போதும் தொடரும் என் காதல்..!

ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் பொன்னொளியை வீசி அதிகாலை பொழுதை ஆதவன் ஆக்கிரமித்த நேரம் “வேதகி “இல்லத்தில் அனைவரும் மனதில் நிறைவோடு கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

வேதா “கிருஷ்ணா கோவிலுக்குத் தேவையான பூ, பழம், தேங்காய் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்… வேற எதும் எடுத்து வைக்கணுமா”

“சாமிக்கு சாத்தனும்னு வாங்கி வச்ச புடவை, வேஷ்டி எடுத்து வச்சிருங்க….” என கிருஷ்ணா சொல்லவும்,

“நல்ல வேளை நியாபகப்படுத்துன இதோ எடுத்து வைக்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சிதம்பரம், வெற்றியும் தயாராகி ஹாலில் ஆஜரானார்கள்.

வேதா சிதம்பரத்திடம் “தம்பி கார்லயே போயிரலாம்…ரெண்டு வண்டி போதும்” என்றார்

சிதம்பரமும் சரி என்று ஆமோதித்துத் தன் தம்பியிடம் “ வெற்றி…! நீ, மீனாட்சி தாமரை,அத்தான் பிள்ளைங்க எல்லாரும் உன் கார்ல கிளம்பி போங்க… நான் அம்மா அப்பாவை கூடிட்டு வாரேன்…” என்று கூற வெற்றி தன் தங்கை குடும்பத்தை அழைக்கச் சென்றார்.

“தாமாரை கிளம்பிட்டீங்களா நாம முன்னாடி போவோம்” என வெற்றி தாமரை அறைக்கு சென்று அழைக்க,

“கிளம்பியாச்சு இதோ வர்றோம்ண்ணா…“ என அண்ணனுக்குப் பதில் அளித்தவாறே,

“மதி கிளம்பிட்டியா…? சீக்கிரம் வாடி… மாமா கூப்பிடுறாங்க” என்றவாறே திரும்ப அழகிய ஊதா நிறப் பட்டில் தேவதை போல் ஜொலித்த மகளைக் கண்டு உள்ளம் பூரித்தார் தாமரை.

ஒரு காரில் வெற்றி குடும்பமும் ,தாமரை குடும்பமும் கிளம்பினர்.

சிதம்பரம் “ஜானு..! சீக்கிரம் வாங்க நேரம் ஆகுது…” எனக் குரல் கொடுக்க “வந்துட்டோம்” என்றவாறே இறங்கினர் ஜானகியும், கவிதாவும்.

“என்ன ஜானகி..? நேரம் ஆகிட்டே இருக்கு இன்னும் கௌதம் ரெடி ஆகலையா..?” என கேட்டுக் கொண்டிருக்க,

தன் முழுக்கை சட்டையை மடக்கி விட்டவாறே “கௌதம் இஸ் ஹியர்” என்றபடி வந்து நின்றான் கௌதம்.

கிருஷ்ணாவும் , வேதாவும் வந்துவிட அனைவரும் கிளம்பினர். காரில் அமர்ந்ததும் தான் நியாபகம் வந்தவனாய் “அப்பா..! சித்தப்பா அத்தை எல்லாரும் கிளம்பிடாங்களா..?” என்றான் கௌதம்.

“அவங்க இன்னொரு காரில கிளம்பிட்டாங்க.. “என்று கூறியதும் நிம்மதி பெரு மூச்சு விட்டவனாய்,

‘ஹப்பா தப்பிச்சோம்டா சாமி’ என முணு முணுத்து விட்டு வெளியில் வேடிக்கை பார்க்கலானான்.

அங்குக் கோவிலில் தாமரையும், மீனாட்சியும் பொங்கலிடுவதற்குத் தேவையானதை தயார் செய்து கொண்டிருந்தனர்.அவர்களோடு ஜானகியும் இணைந்து கொள்ளக் கிருஷ்ணா பிரகாரத்தைச் சுற்றி வருவதாகக் கூறிச் சென்றார். ஆண்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர்.

“மதி,சந்தியா எல்லாம் எங்க போனாங்க தாமரை..?”  என ஜானகி வினவ

“குடிக்கத் தண்ணீர் எடுக்கக் கிணத்தடிக்கு போயிருக்காங்க அண்ணி…” என்று கூறியதும் கவிதா தானும் போவதாகச் சொல்லிக் கொண்டு கிணற்றடி நோக்கி ஓடினாள்.

பிரகாரத்தைச் சுற்றி வந்த கிருஷ்ணா மூலவரை வணங்கி கொண்டிருக்கும் போது அப்படியே மயங்கி சரிந்தார்.

அதை கண்டு விட்ட வேதாச்சலம் “கிருஷ்ணாஆஆஆஆ..!” என்று அலற அனைவரும் திடுக்கிட்டு கிருஷ்ணாவை நோக்கி ஓடினர். அவரைக் தன் மடியில் ஏந்தியவாறே கிருஷ்ணாவின் கன்னத்தைத் தட்டிக் கொண்டிருந்தார் வேதா. கணவரின் ஸ்பரிசத்தில் கண்களைச் சிரமப்பட்டுத் திறந்த கிருஷ்ணா முடியாமல் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தார்.

இதற்கு மேலும் தாமதிக்க வேண்டாம் என எண்ணிய வேதா “சிதம்பரம் காரை எடு..!” கண்ணீர் குரலில் வேண்ட,

“அத்தான்..! நான், வெற்றி , கௌதம் அப்பா கூட ஹாஸ்பிட்டல் போறோம்… நீங்க மித்தவங்களைக் கூப்பிட்டுட்டு வீட்டுக்கு போங்க… நான் அங்க போயிட்டு உங்களுக்குப் போன் பண்றேன்..” எனச் சிதம்பரம் சொல்ல ராகவனும் சரி என்றார்.

வீட்டு வாயிலில் அனைவரும் கிருஷ்ணாவிற்காகக் காத்துக் கொண்டிருக்க இரண்டு மணி நேரம் கழித்துக் காரில் வந்து இறங்கினார் கிருஷ்ணா ஆச்சி. அவரைக் கைத் தாங்கலாக உள்ளே அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தார் வேதா.

அந்நேரம் சிதம்பரத்தின் போன் ஒலிக்க “சொல்லு கௌதம்..! நாங்க வீட்டுக்கு வந்துட்டோம்… ஒன்ணும் பிரச்சனையில்லை நீ ரிப்போர்ட்ஸ் வாங்கிட்டு வா…” என்று கூறி வைத்தார்.

மதி பிரசன்னா கவிதா சந்தியா ,சந்தோஷ் அனைவரும் கிருஷ்ணாவின் கையைப் பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தனர்.

“செல்லங்களா ஆச்சிக்கு ஒண்ணும் இல்லடா..!” எனப் பேரன் பேத்திகளைச் சமாதனப்படுத்த

சிதம்பரம் “அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்… நாம ஹால்ல போய் உட்காருவோம்… “ எனக் கூற

“செல்லங்களா நீங்க போங்க…! ஆச்சி பெரியவங்க கிட்ட கொஞ்சம் பேசணும்… “ என்றார் கிருஷ்ணா.

பெரியவர்கள் மட்டும் குழுமியிருந்த அந்த அறையில் அசாத்திய அமைதி நிலவியது.

கிருஷ்ணா ராகவனையும் சிதம்பரத்தையும் அருகில் அழைத்து “நீங்க ரெண்டு பேரும் என் பேரன் கௌதமுக்கு என் பேத்தி மதியை கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சம்மதிப்பீங்களா..?” என்றார்.

உடல்நிலை சரியில்லாத இந்நேரத்தில் கிருஷ்ணா கல்யாணம் பற்றிப் பேசியதும் சிதம்பரமும், ராகவனும் குழப்பம் அடைந்தனர். வேதா தன் மனைவியின் இந்தத் திடீர் முடிவுக்கு வலுவான காரணம் இருக்கும் என்று முழு மனதாக நம்பினார்.

“இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்மா…?” என சிதம்பரம் கேட்க

“என் மனசு கிடந்து சஞ்சலப்படுதுயா… அதுக்குக் காரணம் என்னனு சொல்ல தெரியல…. ஆனா கௌதம்-மதி கல்யாணம் நடக்குறது மூலமா நம்ம குடும்பத்துல சந்தோஷம் நிலைச்சு இருக்கும்னு நான் நம்புறேன்…ஏன்யா உனக்கு மதி மருமகளா வரதுல விருப்பம் இல்லையா..?”

“என்னம்மா இப்டி சொல்லிட்டீங்க என் தங்கச்சி பொண்ணு மருமகளா வந்தா சந்தோஷப்படுற முதல் ஆளு நான் தான்மா… நீங்க அத்தான், தாமரைகிட்ட சம்மதமானு கேளுங்க…? எனக்கும் சரி ஜானகிக்கும் சரி இதுல பரிபூரணச் சம்மதம் தான்…” என்று கூறி ஜானகியை பார்க்க அவரின் மலர்ந்த முகமே இதில் சம்மதம் என்பதை உறுதிபடுத்தியது.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தாமரை ஏதோ சொல்ல வாயெடுக்க ராகவன் “அத்தை உங்களை மறுத்து பேசுறேனு நினைக்காதிங்க… சொந்தக்காரங்களா இருக்குறது வேற… ஆனா சம்மந்தம் பண்ணனும்னு நினைக்கும் போது நாலு விஷயத்தையும் யோசிக்க வேண்டியிருக்கு… எனக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணலை…”  என்று சொல்ல,

“மாப்பிள்ளை..! நீங்க எத மனசுல வச்சு இப்பிடி சொல்றீங்கனு எனக்குப் புரியுது… சிதம்பரமும் வெற்றியும் தங்கச்சி பாசத்துல அப்பிடி சொல்லிடாங்க… இருபது வருஷதுக்கு முன்னாடி நடந்ததை வச்சு இப்போ நடக்கப் போற நல்ல விஷயத்தை வேண்டாம்னு சொல்லாதிங்க… “ எனக் கெஞ்ச

“அத்தை…! இருபது வருஷதுக்கு முன்னாடி நடந்ததா இருந்தாலும் அது ஏற்படுத்துன வலி இன்னும் ஒரு ஓரமா இருக்கத்தான் செய்யுது…“ என ராகவன் கண் கலங்க

சிதம்பரம் “அத்தான் என்னை மன்னிச்சுருங்க நான் அப்பிடி பேசியிருக்கக் கூடாது தான் அந்த நேரத்துல தங்கச்சி பாசம் கண்ண மறைச்சிருச்சு…”

வெற்றி “நானும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் அதெல்லாம் மறந்துடுங்க “ என ராகவனிடம் மன்னிப்பை வேண்ட,

ராகவன் ‘ம்ம்’ என்று வலியுடன் கூடிய புன்முறுவலை உதிர்த்து விட்டு கிருஷ்ணாவிடம் திரும்பி “அத்தை உங்களையும் மாமாவையும் நான் என் அப்பா அம்மா ஸ்தானத்துல தான் வச்சுருக்கேன்… நீங்க என்ன சொன்னாலும் அது எனக்கும் சரி தாமரைக்கும் சரி நல்லதுக்குத் தான் அப்பிடிங்கிறதுல நிறையவே நம்பிக்கை இருக்கு… இருந்தாலும் நீங்க தப்பா நினைக்க மாட்டீங்கனு நினைச்சுக் கேட்கிறேன் எனக்கு யோசிக்கக் கொஞ்சம் டைம் வேணும்.. “

கிருஷ்ணா வேதாவிற்குக் கண்களால் சைகை செய்ய அதை வேதாவும் புரிந்து கொண்டு ராகவனின் அருகில் வந்து அவர் தோளை அணைத்தவாறே “மாப்பிள்ளை..!நீங்க பழயதை பற்றி நினைக்காம இந்தக் கல்யாணத்துல இருக்கச் சாதகப் பாதகங்களைப் பற்றி மட்டும் யோசிங்க ஆனா நல்ல முடிவா சொல்லுங்க “ என்று சொல்ல, ராகவனும் சரி என்பதாய் தலையசைத்தார்.

“காலையிலருந்து அலைஞ்சதுல களைப்பா இருப்பீங்க போய் ரெஸ்ட் எடுங்க…“ என வேதா கூற அனைவரும் ஒருவித மனக்கலக்கதுடன் அவரவர் அறைக்குச் சென்றனர்.

அறையினுள் நுழைந்ததும் சிதம்பரம் தலையைப் பிடித்தவாறே அமர்ந்துவிட்டார். அதைக் கண்ட ஜானகி பதறியவராய் குவளையில் நீர் கொண்டு அவர் முன் நீட்ட அவருக்கும் தேவைப்பட்டதால் சத்தமில்லாமல் வாங்கிக் கொண்டார்.

அவர் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த ஜானகி அவர் கையைத் தன் கைக்குள் வைத்து அழுத்தி கொடுத்தார்.

“ஜானு நான் தப்பு பண்ணிட்டேன்மா… நான் பேசின வார்த்தை எவ்ளோ காயப்படுத்தினா இருபது வருஷம் கழிச்சு இப்போ அதைப் பற்றிப் பேசும் போதும் அன்னைக்குப் பார்த்த அதே வலி இன்னைக்கும் அவன் கண்ணுல தெரிஞ்சுருக்கும்…“ எனக் கண்களில் கண்ணீர் வழிய பேசிக் கொண்டிருந்தவரை எதைச் சொல்லி தேற்றுவது என்றறியாமல் விழி பிதுங்கி நின்றார் ஜானகி.

வெற்றியின் அறையில் மீனாட்சியோ “ஏங்க..! ராகவன் அண்ணன் இவ்ளோ வருத்தப்படுற அளவுக்கு அப்பிடி என்ன நடந்துச்சு..? நீங்க இதைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொன்னது இல்லையே..? “ என்று அங்கலாய்க்க

“சொல்லகூடாதுனு இல்ல மீனு… மறக்கணும்னு நினைச்ச விசயம் அது… அதை மறக்க முடியாட்டாலும் மறுபடியும் கிளற வேண்டாம்னு தான் சொல்லலை.. “

“ராகவன் அண்ணன் கண்ணுல இருந்த வலி… அதுமட்டும் இல்ல சிதம்பரம் மாமா முகத்துல குற்ற உணர்வு அப்பட்டமா தெரிஞ்சுது… அப்பிடி என்ன தான் நடந்துச்சு“

இருபது வருடத்திற்கு முன்:

“ஏங்க… தாமரைக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி தரகர்கிட்ட சொன்னோம்ல அவர் தகவல் ஏதும் உங்ககிட்ட சொன்னாரா..?” எனக் கிருஷ்ணா வேதாவிடம் கேட்க

“நேத்து கடைவீதியில பார்த்தேன்… நாளைக்கு வீட்டுக்கு வந்து பேசுறேன்னு சொன்னார்…”

“அப்பிடியா சரி… முதல்ல பெரிய அண்ணனுக்கு முடிங்க அப்புறம் எனக்குப் பாருங்கனு சொன்னா அந்தா இந்தானு அவனுக்கும் ஐந்து வயசுல மகன் இருக்கான்…. இவ இன்னும் பிடி குடுக்க மாட்டேங்கிறா இந்தத் தடவை நல்ல வரனா வந்தா சட்டுனு முடிச்சுரணும்…”

“ஆமா நாளைக்குத் தரகர்கிட்ட விசாரிச்சு வர்ற தையில கல்யாணம் வைக்கிற மாதிரி பேசி முடிவு பண்ணுவோம்…”

அடுத்த நாள் தரகர் கொண்டு வந்த வரன்களை அலசிக் கொண்டிருக்கும் போது வேதாவின் கைகளில் பட்டது ராகவனின் புகைப்படம். பரிச்சயமான முகமாக இருக்கத் தரகரிடம் ராகவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்.

“ஐயா இது நம்ம பரமசிவன் – பார்வதி அவங்க பையன்…“

“யாரு அந்த மிலிட்டரில இருந்த பரமசிவன்ஆ?? “

“ஆமா கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி கூடக் கார் ஆக்ஸிடண்ட்ல இறந்து போனாங்கல அவங்க தான்… அவங்க இறந்து போனதும் சொந்தம் எல்லாம் விட்டு போயிட்டாங்க அந்தப் பையன் கிடைச்ச உதவி தொகையில படிச்சு இப்போ பேங்கல வேலை பார்க்கிறான்… ரொம்பத் தங்கமான பையன். ஆனா உறவுக்காரங்க யாரும் வரமாட்டாங்க… எல்லா விஷேசமும் நீங்க தான் முன்ன நின்னு பண்ண வேண்டியிருக்கும். பையனுக்கு நான் கேரண்டி…”

“அவங்க குடும்பத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருக்கேன்…பரமசிவன் – பார்வதி பெயருக்கேற்ற மாதிரி குணம் உள்ளவங்க… ஏன் கிருஷ்ணா இந்தப் பையன நம்ம தாமரைக்குப் பார்க்கலாமா??”

“அவங்க குடும்பத்தைத் தெரியும்னு சொல்றீங்க… பையன் நல்லவனா தான் தெரியுறான்…. நல்ல வேலையில இருக்கான்… நாளைக்கு அந்தப் பையன வீட்டுக்கு வர சொல்லுவோம்… சிதம்பரமும் நாளைக்கு வந்துருவான்… நேர்ல பேசிட்டு முடிவு பண்ணுவோம்…” என்ற கிருஷ்ணா தன் மருமகள் ஜானகியை அழைத்து விபரத்தை கூறினர்.

அடுத்த நாள் காலை சிதம்பரத்திடமும் வெற்றியிடமும் ராகவனைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. வேதா, கிருஷ்ணா, சிதம்பரம், வெற்றி, ஜானகி, தாமரை சகிதம் வரவேற்பறையில் குழுமி இருந்தனர்.

“சிதம்பரம், வெற்றி..! என்னப்பா ஒண்ணும் சொல்லாம அமைதியா இருக்கீங்க” என வேதா தன் மகன்களிடம் வினவ

“அந்தப் பையன் வேண்டாம்பா….வேற நல்ல இடம் பாக்கலாம்…” என ஒரே குரலில் சிதம்பரமும் , வெற்றியும் கூறினர்.

“ஏன்யா… அப்டி சொல்ற தரகர் அந்தப் பையன பற்றியோ, இல்ல அவங்க குடும்பத்தைப் பற்றியோ நல்ல விதமா தான் சொல்றாரு. உங்க அப்பாவுக்கும் அவங்களைத் தெரியுமாம் அப்புறம் என்னப்பா???”  என்று கிருஷ்ணவேணி கேட்கவும்,

“நான் அவங்களைத் தப்பா நினைச்சு வேண்டாம்னு சொல்லலைம்மா… நான் விசாரிச்ச வரைக்கும் நல்ல விதமா தான் சொல்றாங்க…ஆனாலும் இந்தச் சம்மந்தம் வேண்டாம்…”

“நல்ல விதமா தான் கேள்விப்பட்டேன்னு சொல்ற அப்புறம் என்ன..? நீ என்ன நினைக்கிறீயோ அத உடைச்சு சொல்லுப்பா..?” என வேதா கேட்க

“அப்பா அவனுக்குச் சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லைனு உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?” என சிதம்பரம் தந்தையின் புறம் கேள்வியை திருப்ப,

“அதுக்கும் நீ சொல்றதுக்கும் என்னப்பா சம்மந்தம்..? அப்பிடி சொந்தம் இல்லைனா என்ன நம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா நாம அவனுக்குச் சொந்தமாகிட்டு போறோம்… “ என வேதா சொன்னதும்

“உங்க அப்பா சொல்றது தான் எனக்கும் சரின்னு படுதுயா… சொந்தம் இல்லைன்ற ஒரு காரணத்துக்காக ஒரு நல்ல பையன ஏன் வேண்டாம்னு சொல்லனும்..?” என கிருஷ்ணாவும் சொல்ல,

“அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் புரியாம பேசுரீங்க சொந்தம் இல்லாம அனாதையா வாழ்ந்த அவனுக்குத் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணி அவளும் சொந்தம் இல்லாம போகணுமா..?” என சிதம்பரம் சற்று குரல் உயர்த்த,

“என்னப்பா..? அப்போ அவ கல்யாணம் ஆனதும் உங்க கடமை முடிஞ்சுதுனு விட்டுருவீங்களா..?”

“அப்பா நான் அந்த அர்த்ததுல சொல்லலை.. கடைசி வரைக்கும் என் தங்கச்சிக்கு ஒண்ணுனா நான் அங்க இருப்பேன்… ஆனா அவன் இதுவரைக்கும் தனியா இருந்திருக்கான்… அவனுக்குச் சொந்தத்தை ஏத்துக்குற பக்குவம் இருக்குமா..? அவன் தங்கச்சியை நம்மகிட்ட இருந்து பிரிச்சுட்டானா என்ன பண்ண..?”

“நீ சொல்றது வேடிக்கையா இருக்குயா..? சொந்ததுல உள்ளவன் மட்டும் பிரிக்க மாட்டானு நினைக்கிறீயா..? அவனுக்குச் சொந்தம் இல்லைனு நீ சுலபமா சொல்லிட்ட…. ஆனா சொந்தம் இல்லாம அவன் பட்ட கஷ்டம் நமக்குத் தெரியாது…கொஞ்சம் யோசிச்சு பாருயா..? தாமரையைக் கடைசிவரை கண்கலங்காம வச்சுப்பாருனு தான் தோணுது… அந்தப் பையன் வர நேரம் அவங்க முன்னாடி இப்பிடி பேசாத…!“ எனக் கூறியபடி திரும்பிய கிருஷ்ணா அதிர்ந்துவிட்டார்.

அங்கே கலங்கிய கண்களோடு ராகவன் நின்றிருந்தார். அவர் நின்றிருந்த கோலமே அனைத்தையும் கேட்டுவிட்டார் என்பதைப் பறைசாற்றியது.

சுதாரித்த கிருஷ்ணா “வாங்க தம்பி..! என்ன அங்கேயே நின்னுட்டீங்க உள்ள வாங்க…“ என அழைக்க,

கிருஷ்ணாவின் குரலில் அனைவரும் திரும்ப அங்கு ஒரு தர்ம சங்கடமான சூழல் நிலவியது.

ராகவன் உள்ளே வந்து அமர அங்கு நிலவிய அமைதியை முதலில் கலைத்த வேதா ராகவனிடம் அவருடைய படிப்பு , வேலை பற்றிய விபரங்களைக் கேட்டு சூழலை சகஜமாக்கினார்.

அரைமணி நேர உரையாடலின் முடிவில் ஒரு முடிவுக்கு வந்த வேதா அனைவரையும் ஒருமுறை நோட்டம் விடத் தனக்கு இருக்கும் தெளிவு மனைவியிடமும் பிரதிபலிப்பதை கண்டு, திருப்தி அடைந்தார்.

பின் ராகவனிடம் “எங்களுக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுருக்கு… என் மகன் பேசுன எதையும் மனசுல வச்சுக்காதிங்க… அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்… தங்கச்சி மேல உள்ள பாசத்துல அப்பிடி பேசிட்டான்…தப்பா நினைக்காதீங்க…”

ராகவன் “அய்யோ..! பெரியவங்க நீங்க போய் என்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு விடுங்க…அவங்க தன் தங்கச்சி மேல உள்ள பாசத்துல தானே அப்படி பேசியிருக்காங்க….சொந்தம் தான் எனக்கு இல்லையே தவிரச் சொந்தத்தோட பாசத்தை என்னால புரிஞ்சுக்க முடியும்.. “ எனச் சொல்ல

சிதம்பரம் சடாரெனத் திரும்பி ராகவனைப் பார்த்தார். சிதம்பரத்தின் கண்களில் குற்ற உணர்வு தலை விரித்தாடியது.

வேதாவும், கிருஷ்ணாவும் ஒரே குரலில் “போட்டோ பாத்திங்களா..? உங்களுக்கு எங்க பொண்ண பிடிச்சுருக்கா..?” எனக் கேட்க

சிறிது தயங்கிய ராகவன் “எனக்குப் பிடிச்சுருக்கு… நீங்க உங்க வீட்டுல இன்னொரு முறை கலந்து பேசிட்டு சொல்லுங்க… “என்று கிளம்பிவிட்டார்.

அவர் கிளம்பியதும் சிதம்பரத்திடம் கேட்க அவரும் தனக்குச் சம்மதம் என்றார்.அதன் பின்பு ஒரு நல்ல நாளில் சுற்றம் சூழ பெரியோர்களின் நல்லாசியுடன் ராகவன் – தாமரை திருமணம் நடந்தேறியது.

வெற்றி “ இது தான் நடந்தது மீனு “ என்று கூறி பெரு மூச்சு விட்டார்.

Advertisement