Advertisement

கசாட்டா 4:

நம்மில் வேற்றுமை பல

இருந்தாலும் ஒற்றுமையாய்

கைகோர்க்க வைக்கும்

உணர்வே காதல்..!

ராகவன் அமைதியை தத்தெடுத்துக் கொண்டு பலவித யோசனைகளின் பிடியில் தத்தளித்துக் கொண்டிருக்கத் தாமரையோ எப்படி தொடங்குவது..? என்ன சொல்வது..? என்று புரியாமல் கைகளைப் பிசைந்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

சில மணி நேரம் இதே நிலை நீடிக்க , மௌனத்தைத் தன் செருமல் மூலம் முதலில் கலைத்த ராகவன் “ தாமு..! மதி – கௌதம் கல்யாணம் பற்றி நீ என்ன நினைக்குற..? “ என்றார்.

தாமரையோ “நீங்க என்ன சொல்றீங்களோ அது படியே செய்யலாம்ங்க..“ என்று சொல்லிவிட

“அய்யோ… தாமரை எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு… அதான் உன்கிட்ட கேட்குறேன்…இந்த விசயத்துல உன் விருப்பம் என்னனு சொல்லு. அதுக்கப்புறம் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம்…” என்றதும்,

“உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்ல… கௌதம் நான் தூக்கி வளர்த்த பையன்… அது மட்டும் இல்ல நல்ல பையனும் கூட…அண்ணன் வீட்டுக்கு நம்ம பொண்ண மருமகளா அனுப்புறதுல சந்தோஷம் தான்… ஆனாலும் இதுல உங்க முடிவும் எனக்கு முக்கியம்… நீங்க எனக்காகப் பார்க்காதிங்க… நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம் தான்… “

“நான் யோசிச்சுட்டேன் தாமு… எனக்கும் இந்தக் கல்யாணத்துல சம்மதம்…“ எனக் கூற

அதிர்ச்சியும், ஆனந்தமும் கலந்த குரலில் “நிஜமா… நிஜமாதான் சொல்றீங்களா?? ” தாமரை கணவனிடம் வினவினார்.

“ஆமா தாமு..! அத்தை என்கிட்ட கேட்கும் போது உன் அண்ணன் மேல இருக்க மனஸ்தாபத்துல தான் வேண்டாம்னு சொன்னேன்… அதன் பிறகு அத்தை, மாமா சொன்னதை யோசிச்சு பார்க்கும் போது நடந்து முடிஞ்ச கசப்பான விசயத்தை நினைக்குறதுல யாருக்குச் சந்தோஷம் கிடைக்கப் போகுது… அது மட்டும் இல்ல அன்னைக்கு நடந்ததுக்குப் பின்னாடி ஒரே ஒரு காரணம் தான் இருக்கு… அது சிதம்பரம் உன் மேல வச்சிருக்கப் பாசம். மத்தபடி அவன் ஒண்ணும் கெட்டவன் இல்லையே…“ என்று கூறி தாமரையைப் பார்க்க அவரோ எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

“தாமு என்ன யோசனை..?” என அவரை உலுக்கத் தாமரை நினைவிற்கு வந்தார்.

“இல்லை அம்மா கேட்கும் போது நீங்க அந்த விசயத்தை மறக்க முடியலைனு சொன்னீங்களே இப்போ..??” என இழுக்க

“தாமு..! அந்த வருத்தம் கூட எதனால வந்ததுனா சொந்தங்கள் தான் என்னை நிராகரிச்சாங்களே தவிர நான் அவங்களை நிராகரிக்கலை… அப்படிபட்ட சொந்தங்கள் இல்லைங்கிற காரணத்தால இன்னொருத்தரும் நம்மள நிராகரிக்கிறாங்கன்ற வேதனையில தான்… இதுக்குச் சம்மதிக்கிறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு… நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மாமாவும், அத்தையும் எனக்கு அப்பா அம்மா மாதிரி தான்… அவங்களால மட்டும் தான் நீ எனக்கு மனைவியா கிடைச்ச…  இந்தச் சொந்தங்களும் கிடைச்சது… இப்போ நாம செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான் மதிகிட்ட பேசி அவ விருப்பம் கேட்கணும்…“

“ரொம்பச் சந்தோஷம்ங்க… இந்த விசயத்தை முதல்ல பெரியவங்ககிட்ட சொல்லுவோம்… உங்க முடிவை தெரிஞ்சுக்கக் கார்த்திருப்பாங்க… அதுக்குப் பிறகு மதி, கௌதம் ரெண்டு பேருகிட்டயும் அவங்க விருப்பத்தைக் கேட்போம்…”

அடுத்தச் சில நிமிடங்களில் பெரியவர்கள் அனைவரும் வேதா மற்றும் கிருஷ்ணா அறையில் ஒவ்வொருவரும் மற்றவரது முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

வேதாவும், கிருஷ்ணா ஆச்சியும் ஒரே நேரத்தில் “ மாப்பிள்ளை..! என்ன முடிவு பண்ணிருக்கீங்க??” எனக் கேட்க

ராகவன் எல்லோரையும் நோக்கி தன் பார்வையைச் சுழலவிட்டு வேதா மற்றும் கிருஷ்ணாவிடம் தன் பார்வையை நிலை நிறுத்தி “ மாமா… அத்தை..! மதியை கௌதமுக்குக் கல்யாணம் பண்ண பரிபூரணச் சம்மதம்…“ என்று அனைவரையும் சந்தோச கடலில் ஆழ்த்தினார்.

சிதம்பரம் எழுந்து வந்து ராகவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “ ரொம்ப சந்தோசம் அத்தான்… எங்க நீங்க வேண்டாம்னு சொல்லிருவீங்களோனு பயந்துட்டேன்… அன்னைக்கு நடந்த விஷயத்துக்காக மறுபடியும் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்…“

“பழைய விசயத்தை மறந்துருங்க…  நானும் மறக்க முயற்சி பண்றேன்… நாம அடுத்துச் செய்ய வேண்டியதை பார்க்கலாம்…“ என ராகவன் கூறவும் சிதம்பரம் ராகவனை அணைத்துக் கொண்டார். இதை அனைவரும் கண்களில் நீர் தழும்பப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ரொம்பச் சந்தோஷம்… இனி கௌதம், மதிகிட்ட பேசணும்…அவங்க சம்மதமும் கேட்கணும்…“ என்று கிருஷ்ணா சொல்ல

ஜானகி “அத்தை…! நான் மதிகிட்ட கேட்கிறேன்… தாமரை கௌதம்கிட்ட கேட்கட்டும்…” என்றார்

இதைக் கேட்ட வேதா “ஏன்மா..? தாமரை கேட்டா மறுக்க மாட்டான்… நீ கேட்டா வேற எதாவாது சொல்லி வேண்டாம்னு சொல்லிருவான்னு இப்படி சொல்றீயா? “எனப் புன்னகைக்க

“ஆமா மாமா நான் கேட்டா செல்லம் கொஞ்சியே அவன் காரியத்தைச் சாதிச்சுருவான். அதான் தாமரை மேல அவனுக்கு ரொம்பப் பிரியம் அவ சொன்னா கண்டிப்பா மறுக்க மாட்டான் அதான்“ என விளக்க அவரும் அதைச் சரி என்றார்.

“இன்னும் ஒரு வாரம் கழித்து நல்ல முகூர்த்த நாள் இருக்கு… அன்னைக்குக் கல்யாணத்தை நம்ம குல தெய்வம் கோவில்ல வச்சுக்கலாம்… அதுக்கு முன்னாடி நிச்சயம் சிம்பிளா வீட்டில பண்ணிக்கலாம்…” என்று கிருஷ்ணா தடாலடியாகக் கூற

இப்படி ஒரு அவசரத்தை வேதா உட்பட யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதை அனைவரின் முகப் பாவனைகள் தெள்ளத் தெளிவாய் உணர்த்தியது.

அனைவருடைய குழப்பமான பாவனைகளைக் கண்ட கிருஷ்ணா “ எதற்கு இந்த அவசரம்னு தான நினைக்குறீங்க..? அவசரம் இல்ல அவசியம்… கொஞ்ச நாள் கழித்து வச்சுக்கலாம் தான்… ஆனா என்னால பார்க்க முடியுமோ முடியாதோனு ஒரு எண்ணம் என் மனச அரிச்சுட்டு இருக்கு… அதனால நான் நல்லா இருக்கும் போதே என் பேரன் – பேத்தி கல்யாணத்தைப் பார்க்கணும்…“ கண்களில் நீர் திரையிட கூற,

அதைக் கேட்ட அனைவரும் உணர்ச்சியின் பிடியில் நிற்க வேதாவும் அதிர்ந்துவிட்டார்… ஆனாலும் நல்ல விஷயம் பேசும் போது இது என்ன தேவையில்லாத பேச்சு என்று பார்வையால் தன் துணைவியிடம் கேள்வி தொடுக்க,

அதைக் கண்ட கிருஷ்ணா தன் கண்களை ஒரு முறை மூடி திறக்க வேதாவும் ஏதோ ஒரு காரணம் இருப்பதை அறிந்ததற்கு அடையாளமாய்த் தலையசைத்தார்.

“அம்மா உங்களுக்கு ஒண்ணும் ஆகாது… நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க… உங்க விருப்ப படியே பண்ணலாம்… அத்தான் உங்களுக்கு இதுல சம்மதமா..?”

“அத்தை நான் ஏற்கனவே சொன்னது தான்… அத்தை ஒரு முடிவு எடுத்தா அது எங்க நல்லதுக்காகத் தான் இருக்கும்… எனக்கு இதுல சம்மதம் தான்… “ என்றார்.

“சரி கௌதம், மதிகிட்ட பேசுன பிறகு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்…“ என்று வேதா கூற அனைவரும் சரி என்பதாய் தலையசைத்து விடை பெற்றனர்.

அவர்கள் சென்ற பிறகு வேதா கிருஷ்ணாவே ஆரம்பிக்கட்டும் என்பதாய் அமைதி காத்தார். தன் கணவரின் அமைதியை புரிந்தவராய் கிருஷ்ணா தன் செயலுக்கான காரணத்தைச் சொல்ல தொடங்கினார்.

அன்று கோவிலில் பிராகரத்தை சுற்றி வந்து கொண்டிருந்த கிருஷ்ணாவின் கண்களில் முருகன் சன்னிதியில் கவலையே உருவாய் அமர்ந்திருந்த தன் குடும்பத் தோழியான நீலா தென்பட்டார்.

அவர் அருகில் சென்று “ என்ன நீலா எப்போ ஊரிலிருந்து வந்த? ஒரு எட்டு வீட்டுக்கு வந்துருக்கலாம்ல…“  எனக் கேட்டு அவர் முகத்தைப் பார்க்க அவரோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

“நீலா என்ன பிரச்சனை..? உன் முகம் ஏன் இப்படி வாடி போய் இருக்கு. என்ன்னு சொல்லு..? என்னால முடிஞ்சதை செய்றேன்…“ என ஆதரவாக அவர் கைகளை அழுத்திக் கொடுக்க

யாரிடம் சென்று தன் மனக் குறையை இறக்கி வைக்க என்றறியாமல் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்த அந்த முதியவள் கிருஷ்ணாவின் ஆறுதல் மொழியைக் கேட்டு அழத் தொடங்கினார்.

பதறிய கிருஷ்ணா “நீலா என்ன ஆச்சு..? ஏன் அழற வீட்டுல யாருக்கும் உடம்பு சரியில்லையா..? “

“இல்ல வேணி எனக்குதான் மனசே சரியில்லை… என் மக வயித்துப் பேத்தி பெரிய பொண்ணாயிட்டா… அதான் கொஞ்ச நாள் அவ கூட இருந்துட்டு போலாம்னு வந்தேன். வந்து நாலு நாள் ஆச்சு…”

“சந்தோஷமான விஷயம் தான..? அதுக்கு ஏன் இப்பிடி உட்கார்ந்துருக்க..?”

அத ஏன் கேட்குற வேணி ரெண்டு நாள் முன்ன தான் பேத்திக்கு விஷேசம் வச்சிருந்தோம்… என் பையனும் மருமகளும் யாரு வீட்டுக்கோ வந்த விருந்து மாதிரி நேரத்துக்கு வந்துட்டு போயிட்டாங்க… தாய் மாமானு அவன் ஒருத்தன் தான இருக்கான்… அந்தக் கடமையைக் கூடவா ஒழுங்கா செய்யக் கூடாது..? இதுல போகும் போது நீயும் வானு கூப்புடுறான்… நானும் போயிட்டா என் மக வேதனைப்படுவாளேனு ஒரு வாரம் இருந்துட்டு வாரேனு அவன்கிட்ட சொல்லிட்டேன்…

மாப்பிள்ளை என் மகளை இதை சொல்லியே திட்டிக்கிட்டு இருக்காரு… அதைத் தடுக்கவும் முடியாம என் மகனை பேசுறத கேட்டுகிட்டு இருக்கவும் முடியாம கோவிலுக்கு வந்து புலம்பிகிட்டு இருக்கேன். இப்போலாம் உறவுகளோட மதிப்பு யாருக்கும் தெரியுறது இல்ல.

நம்ம காலத்துல இப்படியா இருந்தோம்? சந்தோஷத்துல கலந்து, துன்பம் வந்தா அதுல பங்கெடுத்து அனுசரனையா இருக்கதை விட்டு இப்போ சந்தோஷம் வந்தா அதைப் பார்த்து வயிறு எரியவும், துன்பம் வந்தா எங்க நம்ம கிட்ட உதவிக்கு வந்துருவாங்களோனு ஓடவும் தான் நினைக்குறாங்க. அதை விடு நீ எப்பிடி இருக்க..? வேதா அண்ணன், பிள்ளைங்க எல்லாம் சௌக்கியமா..?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க… பிள்ளைங்க லீவுக்கு வந்துருக்காங்க… அதான் கோவில்ல பொங்கல் வைக்கலாம்னு வந்தோம்… வாயேன் எல்லாரையும் போய்ப் பார்க்கலாம்…”

“இல்ல வேணி மனசு சரியில்ல… கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போறேன். நாளைக்கு வீட்டுக்கு வந்து பார்க்குறேன்…” என்று விட,

கிருஷ்ணாவிற்கு அவரது மனநிலை புரிய “சரி அதையே நினைக்காத எல்லாம் சரி ஆகிவிடும்“  என்று ஆறுதல் சொன்னாலும் அவரின் மனதிலும் ஒருவித பாரம் தொற்றிக் கொண்டது. இது தான் நடந்தது எனச் சொல்லி முடித்தார் கிருஷ்ணா.

இதைக் கேட்ட வேதா “கிருஷ்ணா நம்ம பிள்ளைங்களும் அப்படி நடந்துக்குறாங்கனு நினைக்குறீயா??”

“ச்ச்ச அப்பிடியெல்லாம் நினைக்கலை. அப்படி நினைக்கும்படி நம்ம பிள்ளைங்க ஒரு காரியமும் இது வரைக்கும் செஞ்சது இல்ல”

“அப்போ இந்தத் திடீர் கல்யாண பேச்சு எதற்கு?”

“காரணம் இருக்குங்க. நம்ம மாப்பிள்ளை என்ன தான் நம்ம கிட்ட சகஜமா பேசினாலும் சிதம்பரம் இன்னும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லையோ என்று அவருக்குள்ள ஒரு வருத்தம் இருந்துகிட்டே தான் இருக்கு… இப்போதைக்கு இந்த விசயம் பெருசா தெரியாது தான்… ஆனா நாளைடைவில் விரிசல் விழுந்துருமோனு தான் என் மனசு கிடந்து அடிச்சுகுது “

“கிருஷ்ணா நீ சொல்றது சரி தான்… ஆனா மாப்பிள்ளை இத வெளிக்காட்டினது கிடையாதே..? அதைப் பெரிசு படுத்தாம தான இருக்காரு . அப்புறம் என்ன..?”

“இதை இந்தக் கோணத்துல யோசிங்க… மாப்பிள்ளை நம்ம மேல அன்பும் மரியாதையும் வச்சுருக்கார்… நம்ம பையனா தான் சிதம்பரத்தை பார்க்குறார். நாம இருக்கும் வரை இங்கு வந்து போய் இருப்பாங்க அப்போ வரும் போது சந்தோஷம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். ஆனால் நம்ம காலத்துக்குப் பிறகு அப்பிடி இருக்குமா? அதுக்காக நான் அவரைக் குறை சொல்லலை அவரிடத்தில் யாரா இருந்தாலும் அப்படி தான் தோணும். அதைச் சரி செய்ய ஒரு வாய்ப்பு அமையும் போது ஏன் அதைச் செய்யக் கூடாதுனு தோணுச்சு. அதான் உங்ககிட்ட கூடக் கேட்காமல் முடிவு பண்ணிட்டேன்… என்னை மன்னிச்சுருங்க..!”

“என்னம்மா..? நீ மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு…. நீ காரணம் இல்லாம எதுவும் சொல்ல மாட்டேனு எனக்குத் தெரியும்… அது என்னனு தெரியாமல் தான் குழம்பி போயிருந்தேன்… இப்போ தெளிவாயிட்டேன்…”

“ஹம்ம் கௌதம் – மதி கல்யாணம் மூலம் உருவாகிற புது உறவுல பழைய கசப்பான நினைவுகள் கொஞ்ச கொஞ்சமா மறையும்னு நான் நம்புறேன்… அது மட்டும் இல்ல மதி விளையாட்டுத்தனமா இருந்தாலும் கௌதம் பொறுப்பானவன்…. அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான் ( அந்தப் பொறுப்பான கௌதமுக்குள்ள ஒரு குறும்புக்காரன் ஒழிஞ்சுக் கிடக்குறானு பாவம் கிருஷ்ணா ஆச்சிக்குத் தெரியாது. ஹி ஹி).

கௌதம் அறையில் தாமரை கிருஷ்ணா ஆச்சியின் ஆசையைக் கூறி கௌதமின் சம்மதத்திற்காகக் காத்திருக்க அங்கே கீழ் அறையில் மதியின் சம்மதத்திற்காக ஜானகி காத்திருந்தார்.

கௌதமோ “அன்னைக்கு மேல மோதினதுக்காக நான் திட்டினதுக்குத் திருப்பித் திட்றதுக்காகக் கூட என்கிட்ட பேச விருப்பபடாத அவளா என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கப் போறா..? எப்பிடியும் அவ வேண்டாம்னு தான் சொல்லப் போறா…?“  என்று மனதுக்குள் பேசிக் கொண்டிருக்க

மதியோ “சின்ன வயசுல இருக்கும் போது எப்பிடி எரிஞ்சு விழுவான்…  மேல மோதுனதுக்கே அந்தக் குதி குதிச்சான்… இவனாவது என்னைக் கல்யாணம் பண்ண சம்மதம் சொல்றதாவது…?“  என முணுமுணுத்துக் கொண்டு

“எனக்குச் சம்மதம்…“  என்று கௌதம் அங்குத் தாமரையிடம் சொல்வதற்கும் இங்கு மதி ஜானகியிடம் சொல்வதற்கும் சரியாய் இருந்தது.

அவன் வேண்டாம் என்று சொல்லி விடுவான் என இவளும் , இவள் வேண்டாம் என்று சொல்லி விடுவாள் என அவனும் தங்களை அறியாமல் திருமணத்திற்குச் சம்மதித்து விட்டிருந்தனர்.

Advertisement