Advertisement

கசாட்டா 5:

கண்ணாம்பூச்சி ஆட்டம்

கட்டவிழ்ந்ததும் முடிந்துவிடும்

உன் மேல் நான் கொண்ட காதல்

கட்டையில் எரியும் போதும்

நீங்காதடி..!

கௌதமும் மதியும் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதில் வீடே மகிழ்ச்சியில் திளைத்தது. கிருஷ்ணா ஆச்சியோ மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் இருந்தார். இனி எந்தப் பிரிவும் உறவுக்குள் ஏற்படாது என நம்பினார். நினைப்பதெல்லாம் நடந்து விடுமா??

கௌதமும் மதியும் வெவ்வேறான எண்ணங்களில் மிதந்து கொண்டிருந்தனர். கௌதமிற்கு அடிப்படையில் மதியை பிடிக்கும்… அவர்களுக்குள் நடந்த மோதல்களுக்குக் காரணம் தாமரையிடம் கௌதமிற்கு இருந்த அதீத பாசம் தான். ராகவனால் தான் அத்தை தன்னை விட்டுச் சென்றுவிட்டார் எனக் கௌதமிற்கு ராகவனின் மேல் சிறு கோபம் உண்டு. கௌதம் எப்போதும் தாமரையின் அருகில் இருப்பது மதிக்கு ஒரு வித பொறாமையை ஏற்படுத்தியது. அந்த விஷயம் தான் கௌதம் மதி இருவருக்கும் இடையே ஒரு வித பிரிவை ஏற்படுத்தியது.

மதி ராகவனிடம் தான் அதிகச் செல்லம். தன் மகள் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றி குடுப்பார். கௌதமை தன் தந்தையிடம் எதையாவது சொல்லி மாட்டிவிடுவாள். அவரும் அவள் சொல்வதை நம்பி கௌதமை வறுத்தெடுப்பார். ஒரு முறை கௌதமும் மதியும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் சண்டை வந்துவிட, கௌதமின் பொம்மை காரை தண்ணியில் போடுவதற்காக ஓடிய மதி கால் தவறி அங்கிருந்த கல் மீது மோதி விட்டாள்.

அந்நேரம் அங்கு வந்த ராகவன் ஏற்கனவே கௌதம் அடிக்கடி தன்னிடம் வம்பிழுப்பதாக மதி சொல்லியிருப்பதால் அவன் தான் தள்ளி விட்டிருப்பான் என நினைத்து ஜானகியிடம் சொல்ல, அதைக் கேட்ட சிதம்பரம் அவனை அடித்து விட்டார்.ஏற்கனவே அவரின் மேல் இருந்த சிறு கோபத்திற்கு இது தூபம் போட்டது போல் ஆனது. அதன் பின் அவரின் மேல் உள்ள வெறுப்பை அவ்வப்போது மதியிடம் காட்டி விடுவான். ஆனால் அவளை ஒரு போதும் வெறுத்ததில்லை. என்ன தான் வளர்ந்து விட்டாலும் ராகவனிடம் அவனால் ஒட்ட முடியவில்லை.

அந்த ஒரு காரணத்திற்காகக் குடும்பம் மொத்தமும் சந்தோஷமாக எடுத்திருக்கும் இந்தத் திருமண விஷயத்தைத் தடுக்கவும் விருப்பமில்லை. குடும்பத்திற்காக மட்டும் தான் சரி என்று சொல்லியிருக்கிறோம் மற்றபடி தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லாமல் தான் சம்மதம் சொல்லி இருக்கிறோம் என நினைத்தாலும் ஆழ் மனதில் அவள் மேல் விருப்பம் இருப்பதை அவன் உணரவே செய்தான்.

எதுவாயினும் இனி தன் வாழ்க்கை அவளுடன் தான் என்பதில் மாற்றம் இல்லாத போது அதைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதில் தவறு இல்லையே என நினைத்துக் கொண்டிருக்க அவன் மனசாட்சியோ,

“அட பாவி…! இவ்ளோ பேசுற நீ?? அன்னைக்கு அவ தெரியாம மோதுனதுக்கு ஏன்டா அந்தப் பேச்சு பேசுன..?” என நேரம் காலம் தெரியாமல் கேட்டு வைக்க

“நான் திட்டாம வேற யாரு என் ஹனியை திட்ட போறாங்க… இதுகெல்லாம் சேர்த்து வைத்து ரொமான்ஸ் பண்ணி என் ஹனியை சமாதான படுத்திக்குறேன்… “ என்று ப்ளேட்டை திருப்பி விட,

“அடபாவி..! உன்னைலாம்…. அவ மேல ரொம்பக் கோபமா இருக்க மாதிரி பில்டப் குடுத்துட்டு இப்போ என்னடானா ரொமான்ஸ் வரைக்கும் போய்ட்ட…” என கடுப்படிக்க,

“அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா… “எனக் கௌதம் சொல்ல

“பார்க்கவே இல்லை… அதுக்குள்ள இந்தப் பேச்சு பேசுற…“ மனசாட்சி கேலி செய்ய,

“அதெல்லாம் அப்படிதான்… டிஸ்டர்ப் செய்யாம போ…“ என மனசாட்சியைத் துரத்தி விட்டு மியூசிக் பிளேயரை ஆன் செய்து விட்டுக் கட்டிலில் விழுந்தான்.

அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே

பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே

பட்டாம்பூச்சி பிடித்தவள்

தாவணிக்கு வந்ததெப்போ

மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ

மெளனத்தில் நீ இருந்தால்

யாரை தான் கேட்பதிப்போ……

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒலிக்கத் தன்னை அறியாமல் கௌதம் இதழ்க்கிடையில் புன்னகை தவழ்ந்தது. இந்தப் புன்னகை தொலைந்து போகப் போகிறது என்று தெரிந்தால்??

மதி தனது அறையில் மிகுந்த யோசனையில் இருந்தாள்.

“எப்படி அவன் சம்மதிச்சான்..? அவனுக்கு நம்மள பிடிக்காத மாதிரி தான நடந்துகிட்டான்…. அப்புறம் இது எப்படிச் சாத்தியம்..?“ என இல்லாத மூளையைக் கசக்கி பிழிந்து கொண்டிருந்தாள்.

“அப்போ உனக்குச் சம்மதம் தான்… அவன் எப்படி சம்மதிச்சாங்கிறது தான் உன் பிரச்சனையா..?” உள்மனம் கேள்வி கேட்க,

“நான் சொல்ல என்ன இருக்கு… எல்லாருக்கும் இதுல சம்மதம். முக்கியமா அப்பாக்கும் சம்மதம்…  ஆனால் கௌதம் என்கிற பெயர் மட்டும் என் வாழ்க்கையை விட்டு போகாது போல..?!” புலம்பிக் கொண்டிருக்க அவளது யோசனையைத் தடை செய்யவென்று அங்குப் பிரசன்னா, கவிதா, சந்தோஷ், சந்தியா ஆஜரானார்கள்.

“ஹேய் மதி…! நாளைக்கு உனக்கும், அத்தானுக்கும் நிச்சயதார்த்தம்னு இப்போ தான் வெளிய எல்லாரும் பேசிக்கிட்டு இருக்காங்க…” எனப் பிரசன்னா குதுகலிக்க மதியோ எனக்கென்ன என்பது போல் அமர்ந்திருந்தாள்.

“நீங்களும் அண்ணனும் உடனே கல்யாணத்திற்கு ஓகே சொல்லிட்டீங்களாமே..?  எங்களுக்குத் தெரியாம உங்களுக்குள்ள எதும் சம்திங் சம்திங்கா..?” கவி தன் கேலியை தொடங்க,

“இருக்கும்…! இருக்கும்..!” சந்தோஷும் சந்தியாவும் கவிதாவின் கூற்றை வழி மொழிந்தனர்.

“இவங்க கண்ணாமூச்சி ஆடும் போதே எனக்கு டவுட் தான்…“ எனப் பிரசன்னா அவன் பங்குக்கு மதியை கிண்டல் செய்ய,

மதியோ “ அய்யோ இந்தக் கொசுங்க தொல்லை தாங்கலயே… இதுங்க விடாது கருப்பு மாதிரி என்னை ஒரு வழியாக்காம போகாதுங்க போலயே…“ பல்லை கடித்துக் கொண்டிருக்க

அங்கு வந்த தாமரை “எல்லாரும் சீக்கிரம் படுங்க… நாளைக்கு நிறைய வேலை இருக்கு…“  என அதட்டல் போட மதி தன் அன்னைக்கு மனதில் நன்றி கூறிக் கொண்டாள்.

யாருக்கும் காத்திராமல் ஆதவன் தன் வேலையை மிகக் கம்பீரமாக நிறைவேற்றி புதியதொரு நாளை தொடங்கி வைத்தான்.

வேதகி இல்லம் என்றும் இல்லாத உற்சாகத்தோடும், ஒரு வித பரபரப்போடும் இயங்கி கொண்டிருந்தது.

ஆண்கள் அனைவரும் வெளி வேலைகளைக் கவனித்துக் கொள்ளப் பெண்கள் தங்கள் சாம்ராஜ்ஜியமான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

கௌதம் மதியை பார்க்க போகும் நேரத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்தான்… அவன் நினைத்திருந்தால் நிச்சயத்திற்கு முன் அவளைப் பார்த்திருக்கலாம் தான் ஆனால் முயற்சிக்கவில்லை அதற்குக் காரணம் உண்டு.

அவர்கள் குடும்ப வழக்கப்படி நிச்சயத்தின் போது இன்றிலிருந்து நீ என்னவள் என்பதை உறுதி செய்வதற்கு அடையாளமாய் மணமகன் மணமகளுக்குத் தன் கையால் குங்குமத்தை வைப்பது வழக்கம்.

அந்தத் தருணத்தில் தான் மதியை பார்க்க வேண்டும் என மனதிற்குள் சொல்லி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

நேற்று வரை அவளைப் பார்க்க கூடாது எனச் சபதமெடுத்தென்ன? இன்று அவளைக் காண காத்திருப்பதென்ன ? அவன் எந்த மாதிரி உணருகிறான் என அவனுக்கே புரியவில்லை… ஒருவித பரவசம் மனம் முழுவதும் நிறைந்திருக்கக் காத்திருப்பது முள்ளோடு இருக்கும் ரோஜா இதழ்களைப் போலச் சுகமா..? சுமையா..? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

இதற்கு நேர் மாறாக மதியின் நிலை இருந்தது…  ஏதோ ஒரு நெருடல் மனதை அரித்துக் கொண்டிருக்க அதை இனம் காண முடியாமல் குழம்பியிருந்தாள்.

“ஒருவேளை இவன் அவனா இருக்குமோ..? அய்யோ எனக்கு என்ன ஆச்சு எதுக்கு இப்போ அவன் நியாபகம் வருது. தலையைப் பிச்சுக்கலாம் போல இருக்கு… மதி ரிலாக்ஸ் கூல் இதைப் பத்தி யோசிக்காத… இன்னும் கொஞ்ச நேரத்துல அவனை பார்க்க போற..? அப்புறம் என்ன..? முதல்ல நாம ரெடி ஆவோம்…“ தன்னைத் தானே சமாதான படுத்திக் கொண்டாள்.

நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருந்தனர்… அனைவரும் வந்ததும் நிச்சயதார்த்தம் ஆரம்பமானது… சிதம்பரம் – ஜானகி தம்பதியரும், ராகவன் – தாமரை தம்பதியரும் நிச்சய தாம்பூலத்தை மாற்றிக் கொண்டனர். பத்து நாள் கழித்து வரும் முகூர்தத்தில் திருமணமும் அதெயடுத்து வரவேற்பு வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

முதலில் கௌதமை அழைத்து அவனுக்குரிய உடைகளைத் தந்து அணிந்து வருமாறு கூறினர்… அடுத்து மதிக்கும் நிச்சயதார்த்த பட்டுத் தரப்பட்டது.

பர்பிள் நிற முழுக்கை சர்ட்டும்,  பேர்ள் வெண்மை நிற பேண்டும் அணிந்து தனக்கே உரிய கம்பீரத்தோடு இருந்தான் கௌதம்… கௌதம் வந்த சில நிமிடங்களில் மதியை அழைத்து வந்தார்கள்.

பர்பிள் நிற டிசைனர் சேலையில் ஆங்காங்கே தங்க சரிகை கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்க அதற்கேற்றவாறு கழுத்திலும், காதிலும் அமெரிக்க டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் அணிந்து ஒரு அப்சரஸ் போலத் தோற்றமளித்தாள் மதி.

தலையைக் குனிந்து கொண்டே வந்து அமர்ந்த அவளைக் கௌதம் பார்க்க அவளோ கீழே தரையை அப்போது தான் பார்ப்பது போல ரசித்துக் கொண்ருந்தாள்.

இப்போதைக்கு அவள் நிமிரப் போவதில்லை எனத் தெரிந்து கௌதம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

கிருஷ்ணா குங்கும சிமிழை கௌதமிடம் தந்து “ மதிக்கு வைச்சு விடுப்பா…!”

கௌதமும் மதியும் நேருக்கு நேராக நிறுத்தி வைக்கப்பட்டனர். கௌதம் குங்குமத்தை எடுத்து வைக்கப் போக மதியோ இன்னும் குனிந்த நிலையிலேயே இருந்தாள்.

தாமரை அவளருகில் வந்து “ மதி நிமிருடி..! கௌதம் குங்குமத்தை கையில வச்சுட்டு நின்னுட்டு இருக்கான்…” எனவும் மெல்ல தலையை நிமிர்ந்து பார்த்த மதியின் கண்களில் அதிர்ச்சி, ஆச்சர்யம், எனப் பல்வேறு உணர்ச்சிகளைப் பிரதிபளித்தது.

கௌதமின் பார்வையில் அனல் கொழுந்து விட்டுக் கொண்டிருந்தது… ‘ச்சீ நீயா????’  என அவன் வாய் அவளுக்கு மட்டும் கேட்குமாறு வார்த்தைகளைக் கடித்துத் துப்பியது.

கையில் குங்குமம் ஏந்தியது ஏந்தியபடி இருக்கக் கண்களிலோ மதியை எரிக்கும் அளவுக்கு அனல் வீசிக் கொண்டிருந்தது.

“கௌதம் வச்சு விடுப்பா… நேரம் ஆகுதுல…” என வேதா கூற அப்போதும் கௌதம் அசையாமல் நின்றிருந்தான்.

“தம்பி…! என்னய்யா என் பேத்தியை ஆற அமர அப்புறம் பாரு… முதல்ல குங்குமத்தை வை…” எனக் கிருஷ்ணா அவனை உலுக்கியதில் உணர்வுக்கு வந்தான் கௌதம்.

அனைவரும் அவனை வைக்குமாறு கூற குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் பட்டும் படாமல் பூசினான். அனைவரும் நிச்சயம் நல்லபடியாய் முடிந்த சந்தோஷத்தில் சல சலத்துக் கொண்டிருக்கக் கௌதம் விறு விறுவென்று மாடியிலிருக்கும் அறைக்குச் சென்று விட்டான்.

“ச்ச எவ்ளோ சந்தோஷமா இந்த விழாவை எதிர்பார்த்தேன்… கடைசியில இவளா? இவள நினைச்சா நான் கனவு கண்டேன்… இதற்கு மேல் இதைக் கொண்டு போக விருப்பம் இல்லை…“ அவன் மனமோ கொதித்துக் கொண்டிருந்தது…. என்ன நினைத்தும் அது அடங்குவதாகத் தெரியவில்லை. ஒரு முடிவுடன் கீழே சென்றான்.

நேராக மதியிடம் சென்றவன் “ மது உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. “ என்றான்.

மதி அவனுடன் போவதா வேண்டாமா எனத் தெரியாமல் திருத் திருவென முழித்து வைக்கக் கௌதமின் கோபம் மேலும் எகிறியது.

மற்றவர்கள் இவர்களைப் பார்த்து “ மதிகிட்ட பேச அவ்ளோ அவசரமா..?” என சூழ்நிலை புரியாமல் கேலி செய்ய

முயன்று வரவழைத்த புன்னகையை மற்றவர்களை நோக்கி செலுத்தி விட்டு மதியிடம் “ இப்போ வர்றீயா..? இல்ல எல்லார் முன்னாடியும் பேசட்டுமா..?” எனக் கடுப்புடன் கூற

எல்லார் முன்னாடியும் பேசவா..? என அவன் கேட்ட ஒற்றை வார்த்தையில் சர்வமும் நடுங்கி அவன் பின்னால் சென்றாள் மதி.

 

Advertisement