Advertisement

கசாட்டா 2:

காத்திருந்து எதிர் பார்த்திருந்து

பெறுவதல்ல காதல்!

பெற்ற பின்பு காத்திருப்பதும்

கடைபிடிப்பதுமே காதல்!

“ஏங்க என்ன இன்னும் பிள்ளைங்க வரக் காணோம்” என்று வாசலுக்கும் வீட்டுக்கும் நடை பயின்று கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி.

”வந்துருவாங்க..! முதல்ல நீ ஒரு இடத்துல உட்காரு…“என வேதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார் வரும் சத்தம் கேட்டதும் வேதாவும், கிருஷ்ணாவும் வாசலுக்கு விரைந்தனர்.

வரிசையாக நின்ற இரு கார்களில் ஒன்றில் சிதம்பரம் குடும்பமும், மற்றொன்றில் வெற்றியின் குடும்பமும் வந்து இறங்கியது. ஆச்சி, தாத்தா எனக் கூவி கொண்டு கட்டிபிடித்த பேரப் பிள்ளைகளைக் கண்டு முதியவர்கள் இருவருக்கும் பாசத்தில் நெஞ்சு விம்மி துடித்தது.

பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் குசலம் விசாரித்து ஆரத் தழுவிக் கொண்டனர் வேதாவும், கிருஷ்ணாவும்.

முதலில் சுதாரித்த வேதா “ கிருஷ்ணா பிள்ளைகளை உள்ள வரவிடு ” என்று சொல்ல,

“நான் ஒரு மடச்சி…! வெளிய வச்சே பேசிட்டு இருக்கேன்…”

உள்ளே வந்ததும் ஆச்சி தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய கௌதமை காணும் போது அனைவரின் மனமும் பெருமிதம் கொண்டது… இது தான் கௌதம்..! ஒழுக்கமும் மரியாதையும் நிறைந்தவன். பாசத்திற்குக் கட்டுபட்டவன்.

(மீதியை நம்ம ஹீரோயின் வந்து சொல்வாங்கங்கோ.. )

“எல்லாருக்கும் களைப்பா இருக்கும்… போய்க் குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்…”

“ஏன்யா சிதம்பரம்…! தாமரை இன்னும் வரக் காணோம் அவளுக்குப் போன் போட்டு கேளுயா…” எனக் கிருஷ்ணா தன் மகனிடம் வினவினார்.

சிதம்பரம் தன் தங்கை தாமரைக்கு அழைக்க அதுவோ ர்ரிங் போய்க் கொண்டிருந்ததே தவிர எடுக்கவில்லை.

“அம்மா ரிங் போய்ட்டே இருக்கு எடுக்க மாட்டேங்குறா…” என்று சிதம்பரம் சொன்னதும்,

“அப்போ மாப்பிள்ளைக்குப் போட்டு கேளுப்பா” என்று கிருஷ்ணவேணி வற்புறுத்த,

“அய்யோ…! காலையிலயே அந்த முசுடு கிட்ட வாங்கிக் கட்டணுமா” என்று மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

“போன் போடாம என்னப்பா யோசனை…?” அன்னையின் குரலில் நினைவுக்குத் திரும்பினார்

ராகவனை அழைக்க “ஹலோ” என்றார் ராகவன்.

“ஹலோவை கூடக் கத்தி வச்சு குத்துற மாதிரி கேட்கிறான்… இவங்கிட்ட என் தங்கச்சி எப்பிடி தான் குப்பை கொட்றாளோ..?”

“என்ன போன் பண்ணிட்டு நாளைக்குப் பேசுறதா உத்தேசமா..?” என ராகவன் எகிற

“ஹி ஹி..! இல்ல அத்தான் நாங்க எல்லாம் வீட்டுக்கு வந்துட்டோம்… நீங்க இப்போ எங்க வந்துட்டு இருக்கீங்க..?” என்று ராகவனிடம் கேட்க,

“மதி ட்ரெயின்ல வரா அவளை கூப்பிடுறதுக்கு செங்கோட்டை ஸ்டேசனுக்குப் போய்ட்டு இருக்கோம்… நாங்க வர ஒரு மணி நேரம் ஆகும்” என்று சொல்லவும்,

“சரிங்க அத்தான்…! சொல்லியிருந்தா மதிக்குட்டியை எங்க கூடவே கூட்டிட்டு வந்துருப்போம்…” என சிதம்பரம் சொல்ல

“கார்ல வந்தா அலுப்பா இருக்கும்… அதான் உங்ககிட்ட சொல்லலை“

“இல்லாட்டாலும் விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான்…மதி சென்னைல படிக்கிறான்னு தான் பேரு ஒரு நாள் வீட்டுக்கு விட்ருப்பானா என்ன மனுசனோ” என முணு முணுத்துக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

“சரிங்க அத்தான்…! சீக்கிரம் வாங்க…“ என போனை வைத்து விட்டு

“அம்மா அவங்க வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம்” என்று தன் அன்னையிடம் சொல்ல,

“சரிப்பா நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க…” என்று சொல்லவும் எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர்.

“அண்ணே…! முசுடு என்ன சொல்லிச்சு” என்று வெற்றி சிதம்பரத்தின் காதை கடிக்க,

“நீ வேற அவன் கடிச்ச கடியில என் காதுல ரத்தமே வந்துருச்சு…” என சிதம்பரம் சலித்துக் கொள்ள,

“இப்பவே இப்பிடி சொன்னா எப்படி..? வந்த பிறகு தான் கச்சேரி ஆரம்பமே…“ என்று வெற்றி நமட்டுச் சிரிப்புச் சிரிக்கச் சிதம்பரம் வெற்றியை முறைத்து வைத்தார்.

சாப்பிட்டு முடிந்ததும் அவரவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.கௌதமோ தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

அய்யோ இப்படி ஆகிடுச்சே… ஆச்சி தாத்தாவை பார்த்தது சந்தோசம் தான்..! ஆனா அந்த மனுசன வேற சமாளிக்கணுமே… சும்மாவே ஆடுவாரு இதுல மகளை வேற கூட்டிட்டு வராரு…. அவ என்னமோ உலக அழகி மாதிரியும் அவளைப் பார்த்துட்டா கடத்திட்டு போயிருவோம்னு கண்ணுல காட்டாம வச்சுருக்காரு… சின்ன வயசுல பார்த்தது ஹீம் அவ எப்பிடியோ?? “

“அவ எப்பிடி இருந்தா உனக்கு என்னடா? ரொம்பத் தேடுற போலயே” என மனசாட்சி அவனை வம்பிழுக்க, அந்த முட்டைக்கோஸ் பத்தி எனக்கென்ன என்று மனசாட்சியிடம் முறுக்கி கொண்டான் கௌதம்.

அந்நேரம் தாகம் எடுக்கவே தண்ணீர் குடிக்கக் கீழே வந்தான்… குடித்துக் கொண்டிருக்கும் போதே ஹாரன் ஒலி கேட்டதும் அவனுக்குப் புரையேற “கௌதம் விடு ஜூட்” என ஒரே ஓட்டமாகத் தன் அறைக்கு ஓடி விட்டான்.

“ஆச்சி தாத்தா எங்க இருக்கீங்க…!“ எனக் கேட்டபடி ஓடி வந்தனர் மதியும் அவளது தம்பி பிரசன்னாவும்.

அவர்களது குரல் கேட்டு கிருஷ்ணவேணியும், வேதாவும் வெளியே வந்தனர். வந்தவர்கள் மகளையும் மருமகனையும் முறைப்படி வரவேற்று நலம் விசாரித்தனர்.

“குளிச்சுட்டு வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்…“என்றார் வேதா.

அனைவரும் குளித்து ரெடியாகி உணவு மேஜைக்கு வந்தனர்.அவர்களுடன் வேதாவும் அமர்ந்து கொண்டார்.

“ஏன் மாமா…! இவ்வளோ நேரம் சாப்பிடாம இருக்கீங்க..?” ராகவன் வினவ

“எங்க வீட்டு மாப்பிள்ளை சாப்பிடாம நாங்க எப்பிடி சாப்பிட முடியும்…” என்றார் வேதா.

“பார்த்தியா இவங்களுக்கு இருக்கப் பாசமும் மரியாதையும் உன் அண்ணன்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது… “ மனைவியிடம் சிடுசிடுத்தார் ராகவன்.

“என் அண்ணன்களைக் குறை சொல்லாம உங்களால இருக்க முடியாதா..? வந்த இடத்துல வாய வச்சுட்டு சும்மா இருங்க…” எனக் கணவனைக் கடிந்து கொண்டார் தாமரை.

இவர்கள் சாப்பிட்டு முடிக்கவும் மற்றவர்கள் வரவும் சரியாய் இருந்தது ஒருவொருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்… பெரியவர்கள் ஒருபுறம் பேசிக் கொண்டிருக்க , இளையவர்களோ தங்கள் சங்கத்தை ஒரு புறம் கூட்டினர்.

“ஹாய் அண்ணி…! ஹாய் அத்தான்..!” வழக்கடித்தபடி வந்தனர். சந்தோஷூம், சந்தியாவும்.

“ஹாய் சங்கி மங்கிஸ்” என மதி அவர்களை வம்பிழுக்க,

“அப்பிடி கூப்பிடாதனு சொன்னா கேட்க மாட்டியா..?” அவர்கள் சிணுங்க,

“ஹேய் மதி..! பாவம்டி சின்னப் பிள்ளைங்களைப் போய்க் கிண்டல் பண்ணிக்கிட்டு…“ என பிரசன்னா அவர்களுக்குச் சப்போர்ட் செய்ய,

“அப்பிடி கேளுங்க அத்தான்..! மதினி ரொம்பத் தான் கிண்டல் பண்றாங்க…” என்றாள் கவி

“டேய் பிரசாதம்..! உனக்கு இந்தக் கவ்வி சப்போர்ட்டா” என அவர்களையும் விடாமல் கேலி செய்ய,

“ஏய் மதி பிரசாதம்னு சொல்லாத… “ என பிரசன் னா பல்லைக் கடிக்க,

“பாருங்க அத்தான்… கவினு அழகாக இருக்கப் பெயரை கவ்வினு சொல்றாங்க…” என புகார் வாசிக்க,

“அப்பிடித்தான் சொல்லுவேன்” என்று கூறிய மதியை அடிக்கத் துரத்தினர் பிரசன்னாவும், கவியும்.

இது தாங்க நம்ம மதி சரியான அறுந்த வாலு.

அப்போது தான் அங்குக் கௌதம் இல்லாததைக் கவனித்த தாமரை “மதினி…!கௌதம் எங்க கண்ணுலயே படலை,” ஜானகியை பார்த்து கேட்டார்

“அவன் தான் காரை ஓட்டிட்டு வந்தான்…அதான் களைப்பா இருக்குனு மேல் ரூம்ல ரெஸ்ட் எடுக்குறான் தாமரை…” என்றார் ஜானகி.

“ஓ அப்பிடியா…! சரி புள்ள தூங்கட்டும் அப்புறம் பார்க்குறேன்…” எனத் தாமரை சொல்ல,

அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராகவனோ “அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்துருக்கான்…அத்தையும் மாமாவும் வந்துருக்காங்க ஒரு மரியாதைக்காவது வாங்கனு சொல்லிட்டு போனா என்ன? அவனை சொல்லி குத்தமில்ல இப்பிடி வளர்த்துருக்க… அவன் அப்பன் இந்தத் தடி தாண்டவராயன சொல்லணும்” மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தார்.

மதியோ “இவரு பெரிய மகாராஜா..! துயில் களைஞ்சதும் நாம போய் இவரை நலம் விசாரிச்சுச் சேவகம் செய்யனும்… கடவுளே இங்க இருந்து போகுற வரைக்கும் அவன பார்க்கவே கூடாது”என முணு முணுத்துக் கொண்டிருக்க,

‘இதுக்கு முன்னாடி மட்டும் அவன பார்த்து இருக்கியா’ என்று அவள் மனசாட்சி இடித்துரைத்தது.

அங்குக் கௌதமோ ‘முடிஞ்ச அளவுக்கு அந்த முட்டைகோஸை பார்க்காம அவாய்ட் பண்ணனும்..’ தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

இதமான குளிர் காற்று வீசும் அந்த ஏகாந்தமான மாலை வேளையில் கிருஷ்ணவேணி ஆச்சியின் கைப்பக்குவத்தில் தயாரான மிளாகாய் பஜ்ஜி மற்றும் இஞ்சி டீயின் வாசனை அனைவரையும் ஹாலில் ஒன்று கூடச் செய்தது. இரு ஜீவன்களைத் தவிர….?!

மதி குறுக்கம் நெடுக்குமாய் அறையை அளந்து கொண்டே கௌதமை திட்டிக் கொண்டிருந்தாள். “ச்ச இவனால வெளிய கூடப் போக முடியலயே பஜ்ஜி வாசனை வேற மூக்க துளைக்குது…இவன் மட்டும் வராம இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்… வெளிய அவன் இருந்தா என்ன பண்றது..?” பஜ்ஜி சாப்பிட முடியாத கடுப்பில் மதி புலம்பிக் கொண்டிருக்க,

புலம்பலுக்குக் காரணமான கௌதமோ தன் அறையில் இருக்கும் பால்கனியில் உள்ள ஈசி சேரில் படுத்தபடியே ‘கீழே போனா அந்த முட்டைகோஸ பார்க்க வேண்டி வரும்.அத்தையை வாங்கனு கூடச் சொல்லலை அதுக்காவது போய்த் தான் ஆகணும்…. கீழே போவோமா வேண்டாமா..? ‘என குழப்பத்தில் இருந்தான்.

பரிமாற எழுந்த மருமகள்களையும் மகளையும் உட்காரும்படி கட்டளை விடுத்து எல்லோருக்கும் தன் கையால் பரிமாறிக் கொண்டிருந்த கிருஷ்ணவேணி வேதாவிடம் “ ஏங்க கௌதமையும் மதியையும் கூப்பிடுங்க…!” என்றார்.

வேதா குரல் கொடுக்க மதியோ “ஹப்பா..! அவன் இன்னும் கீழ வரலையா..? அவன் வரதுக்குள்ள பஜ்ஜியை ஒரு புடி புடிச்சுட்டு வந்துரனும்…” எனத் திட்டம் வகுத்தபடி அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

கௌதமோ இதுக்கு மேல போகாம இருக்க முடியாது என முடிவெடுத்தவாறே “ஒரு அஞ்சு நிமிசம் தாத்தா வந்துடுறேன்…” என்று மேலே இருந்து குரல் கொடுக்க வேதாவும் சரி என்றார்.

வெளியே வந்த மதியிடம் டீ டம்ளரை நீட்ட நெருப்பு கோழி நெருப்பை விழுங்குவது போல் அவசர அவசரமாகக் குடித்தாள்.

அவளைக் கண்ட பிரசன்னா “ஏய் மதி..! டீ சூடா இருக்கு… எதுக்குடி இவ்ளோ அவசரம் உனக்கு… கொஞ்சம் மெதுவா தான் குடியேன்… யாரும் புடுங்கி குடிக்க மாட்டாங்க…” என்று சொல்ல

“டேய் பிரசாதம்..! என் இஷ்டம் எப்பிடி வேணாலும் குடிப்பேன்… உன் வேலையைப் பாருடா…” எனக் கௌதம் மேல் உள்ள கடுப்பில் தமயனிடம் பாய,

“உன்கிட்ட போய்ச் சொன்னேன் பாரு… நாக்கு வெந்து கிட… எனக்கென்ன வந்துது… “பிரசன்னா சலித்துக் கொள்ள

அதைக் கண்டு கொள்ளாத மதி அடுத்து பஜ்ஜியை கபளீகரம் செய்யும் வேலையில் மும்மரமானாள்.

மூன்றாவது பஜ்ஜியை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் போது மாடிப்படிகளில் இருந்து கௌதம் இறங்கும் சத்தம் கேட்டது…வாயில் அடைக்கப்பட்ட பஜ்ஜியை மென்றவாறே அங்கிருந்து நகன்றாள் யாருக்கும் சந்தேகம் வராமல்..!

கௌதம் வந்ததும் நேராகத் தன் அத்தையிடம் சென்று “அத்தை எப்படி இருக்கீங்க..?” என்று பாசமழை பொழிந்தான்

தாமரையும் “கௌதம் கண்ணா..! நான் நல்லா இருக்கேன்… நீ எப்பிடி இருக்கத் தங்கம்..?” வாஞ்சையாக வினாவினார்.

கௌதமுக்கு தன் அத்தை என்றால் மிகவும் இஷ்டம்…தாமரைக்கும் கௌதம் மீது பிரியம் அதிகம்…தன் வீட்டின் முதல் வாரிசு அல்லவா..? சிறு வயதில் கௌதம் அதிக நேரம் தாமரையுடன் தான் கழித்து இருக்கிறான்…அவருக்குத் திருமணமாகி கோவை செல்லும் போது அழுது ஆர்பாட்டம் பண்ணிவிட்டான்…அப்போது அவனுக்கு ஐந்து வயது…அனைவருக்கும் அவனைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

அத்தையிடம் விசாரித்து முடிந்ததும் ராகவனிடம் திரும்பிய கௌதம் “நல்லாருக்கிங்களா..?” என்றான்.

“ம்ம் நல்லா இருக்கேன்…” வாய் வார்த்தையாகக் கூறிய ராகவன் மனதில் ‘மாமானு’ கூப்பிட்டா துரைக்கு முத்து உதிர்ந்துடுமோ…? எனக் கௌதமை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

கௌதம் அவரிடம் நலம் விசாரித்ததும் ராகவன் என்ற ஒருவர் இருப்பதாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தன் செல்ல அத்தையிடம் அளவலாவி கொண்டிருந்தான்.

கௌதம், பிரசன்னா, கவி, சந்தோஷ்,சந்தியா அனைவரும் கேலி கிண்டலில் லயித்திருக்க அவர்களது சிரிப்புச் சத்தம் வீட்டையே நிறைத்திருந்தது…ஆனால் ஒரு காதில் மட்டும் புகை வந்து கொண்டிருந்தது…நீங்க நினைச்சது சரி தான் அது நம்ம மதிகுட்டி தான்..!

“பாவி..! ஒரு இடத்துல நிக்காம ஓடியாடி திறியிர என்ன இப்படி கூண்டுக் கிளி மாதிரி ஆக்கிட்டு… நீ எல்லார் கூடவும் கும்மாளம் போட்டுட்டு இருக்கியா..?என்கிட்ட வசமா மாட்டுவ தானே.. அன்னைக்கு இருக்கு உனக்கு” என்று கறுவிக் கொண்டிருந்தாள்.

இரவு உணவுக்காக அனைவரும் மாடியில் கூடினர். இது அவர்களது வீட்டுப் பழக்கம். அந்த நிலவொளியில் அமர்ந்து கிருஷ்ணா ஒரு பாத்திரத்தில் சாதம் போட்டு பிசைந்து ஒவ்வொருவருக்கும் உருண்டை பிடித்துக் கொடுப்பார்… சிறியவர் பெரியவர் பேதம் இன்றி அனைவரும் போட்டி போட்டு உண்பர்… எல்லோரும் வட்டமாக அமர்ந்திருக்க மதி அவள் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டாள்…கௌதம் அப்போது தான் வந்து சேர்ந்தான்…ராகவனைக் கண்டாலே எட்டடி ஓடுபவன் மறந்தும் அவர் பக்கம் திரும்பவில்லை…அவர் பக்கத்தில் இருந்த மதியையும் பார்க்கவில்லை…மதியும் கடிவாளமிட்ட குதிரையைப் போல நேர் பார்வையில் நிலைத்திருந்தாள்.

அனைவரும் ஒருவாறாக உண்டு முடிக்க, கை கழுவிய படி பேச ஆரம்பித்தார் கிருஷ்ணவேணி.

“காலையில சீக்கிரம் எழுந்து கிளம்பிருங்க…நாளைக்கு எல்லாரும் நம்ம கோவிலுக்குப் போயிட்டு வரலாம்… பூஜைக்குச் சொல்லி இருக்கேன்…” என்றார்.

அனைவரும் சம்மதமாகத் தலையசைத்துக் கீழே சென்றனர். கௌதமோ அங்கேயே நின்று கொண்டான்… வேதா அப்போது தான் நியாபகம் வந்தவராய் மதியை அழைத்து,

“மதிக்குட்டி..! தாத்தா கண்ணாடிய மாடியில் கைப்பிடி சுவர் கிட்ட வச்சுட்டு வந்துட்டேன் எடுத்துட்டு வர்றீயா..?”  என்றார்.

“ம்ம்ம் இதோ போய் எடுத்துட்டு வர்றேன் தாத்தா…” என்று அங்கு நடக்கப் போவதை அறியாமல் மாடிப்படி ஏறினாள் மதி.

குளிர் காற்று வீசும் அந்த இரவு பொழுதை கௌதம் ரசித்துக் கொண்டிருந்தான்… அந்நேரம் காற்றில் கதவு படாரென அடிக்க அதில் நினைவு கலைந்தவனாய் கதவை நோக்கி முன்னேற அதே நேரம் மதியும் மாடிப் படியேறினாள்… இருவரும் கதவை ஒரே நேரத்தில் திறக்க முற்படக் கௌதம் வேகமாக இழுத்ததில் மதி தன் பிடி வலுவிழந்து முன்னோக்கி சாய்ந்து கௌதம் மேல் மோதி நின்றாள்… கௌதம் மேல் மோதி நிற்கவும் கரண்ட் கட் ஆகவும் சரியாய் இருந்தது.

மோதிய பயத்தில் மதி அலற கீழிருந்து வேதா “மதிக்குட்டி..! பயப்படாதடா தாத்தா டார்ச் எடுத்துட்டு வரேன்…” என்றார்.

அவர் குரல் கேட்டதும் தான் மோதியது மதி என்று சுதாரித்த கௌதம் அவளைப் பார்த்து பொரிய தொடங்கினான்…

“ஏய்..! இப்படித் தான் கண்முண் தெரியாம வந்து மோதுவியா அறிவில்லை..?“ என்று கத்த

படபடப்பில் இருந்து மீளாத மதியோ மௌனமாய் நின்று கொண்டிருந்தாள்.

“ஒரு சாரி கூடக் கேட்காம எவ்வளவு திமிரா நிக்கிறா பாரு…?” என அவளுக்குக் கேட்கும்படி முணுமுணுக்க

மதியோ “ இந்தக் குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே எங்க..?“ சுய அலசலில் ஈடுபட்டிருந்தாள்…அவளது மௌனம் கௌதமை மேலும் கடுப்பேற்ற விருவிருவென்று கீழே சென்று விட்டான்.

சிறிது நேரம் கடந்து வேதா வந்து மதியை அழைக்க நினைவிற்கு வந்த மதி “அவன் வேகமா இழுத்ததால தான நான் மோதினேன்…அதுக்கு என்ன போய்த் திட்டுறான்…நான் வேற எதயோ யோசிச்சுட்டு அவனுக்குப் பதிலடி குடுக்காம போயிட்டேனே..? ச்ச எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா ஒரு நாள் இருக்கு அவனுக்கு என்கிட்ட…“பொருமிக் கொண்டிருக்க,

வேதா “மதிக்குட்டி வா போகலாம்” என்றழைக்க இருவரும் கீழே சென்றனர்.

கௌதம் தனது அறையில் படுக்கையில் வீழ்ந்தவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

“ச்ச தெரியாம மோதுனதுக்கு ரொம்பத் திட்டிட்டோமோ..? என்னடா நீ அவ அப்பா மேல இருக்கக் கோபத்தை அவகிட்ட காமிச்சு என்ன பிரயோஜனம்..?” எனத் தன்னையே கடிந்து கொண்டவன் தன்னையும் அறியாமல் உறங்கியும் போனான்.

Advertisement