Advertisement

கசாட்டா 15:

உனது இரு விழி

திறந்திடும் நொடியில்

கண்டேன் இரு

கதிரவனின் விடியல்!

எந்த ஒரு பிரச்சனைக்குமே தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் உண்டு… இதை யாரும் மறுக்கவும் முடியாது தவிர்க்கவும் முடியாது… ஆதியும் அந்தமும் அடங்கியது தானே வாழ்க்கை… அதைப் பறைசாற்றும் வகையில் இருள் மெல்ல விலகி பொழுது புலர்ந்து விடியல் ஆரம்பமாகி அந்நாளை இனிதே தொடங்கி வைத்தது.

இரவில் மகிழ்ச்சியுடன் படுத்ததாலோ என்னாவோ மதுவிற்குச் சீக்கிரம் முழிப்பு வர, எழ முயன்றவள் ஏதோ தன்னை நெறிப்பது போல் இருக்கக் கண்களைத் திறந்து பார்த்தாள்… கௌதமின் கைகள் அவளது கழுத்தை சுற்றி கிடக்கத், தாயின் கழுத்தை கட்டிக் கொண்டு தூங்கும் சிறுவன் போல இருந்தான் கௌதம்.

அதைப் பார்த்தவள் அப்போது தான் நேற்று வெகு நேரம் அன்று நடந்ததைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்ததில் தன்னை அறியாமல் கட்டிலில் வந்து படுத்தது நினைவுக்கு வர தரையில் அவளுக்காக விரிக்கப்பட்டு இருந்த விரிப்பு கேட்பாரற்று தனியே கிடந்தது.

திருமணம் ஆன நாள் தொட்டு இதுவரை இருவரும் தனித் தனியே தான் படுத்திருந்தனர். இரவு முழுவதும் அவனது அருகில் அந்த நினைவே அவளுக்கு வெட்கத்தைத் தர மெல்ல எழுந்து அவனது முகத்தையே இமைக்காமல் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிமிடங்கள் கடந்து கொண்டிருக்க ஆதவனின் வெப்பம் ஜன்னல் வழியே வந்து முகத்தில் விழ நேரம் ஆகி விட்டதோ எனச் சடாரென்று எழுந்த கௌதம் மதுவின் தலை மீது மோதி நின்றான்.

அவன் தீடிரென்று எழுவான் என எதிர்பார்க்காத மது என்ன சொல்ல போகிறானோ என முழித்துக் கொண்டிருந்த நேரம் கௌதமோ, மோதியதில் வலி எடுக்க வேகமாக எழுந்துது வேறு சோர்வை தர அவளைக் கண்டு முறைத்தவன் திட்டுவதற்கு வாயை திறக்க அதற்குள் சுதாரித்த மது “குட் மார்னிங்” என்று புன்னகையோடு கூறிவிட்டு ஒடிவிட அதிர்வது கௌதமின் முறையாயிற்று…!

என்னாச்சு இவளுக்கு நடவடிக்கையெல்லாம் வித்தியாசமா இருக்கே என எண்ணிய வண்ணம் தன் காலை வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான்.

குளித்து முடிந்து வந்தவன் கண்களில் டேபிளின் மீதிருந்த அவனது உடை கண்ணில் பட்டது… என் டிரஸ் இங்க எப்படி வந்துச்சு நான் வைக்கலையே என யோசனையில் இருக்க அந்நேரம் அங்கு வந்த மது,“

“நான் தான் எடுத்து வச்சேன்… இதைப் போடுங்க..!” எனச் சொல்லிவிட்டு குளியலைறைக்குள் புகுந்து கொண்டாள்.

‘என்னடா இது..? அவளா வரா.. பேசுறா போறா.. என்ன நடக்குது இங்க ஒண்ணும் சரி இல்லையே… சம்திங் ராங்க்..!’ நினைத்தபடி கிளம்பி கீழே சென்றான்.

செய்தித்தாளில் மூழ்கி இருந்தவனைச் சாப்பிட வருமாறு ஜானகி அழைக்கச் சிதம்பரம், கௌதம் ,கவிதா என அனைவரும் ஆஜரானார்கள்.

“மதி எங்க..? அவளையும் கூப்பிடு… சேர்ந்தே சாப்பிடுவோம்…” எனச் சிதம்பரம் சொல்லி கொண்டிருக்க மது அங்கு வந்து சேர்ந்தாள்.

வந்தவளை சாப்பிட அமருமாறு ஜானகி கூற, அவளோ “நீங்க உட்காருங்க… நான் பரிமாருறேன் அத்தை…” என ஜானகியையும் வலுக்கட்டாயமாக அமர வைத்து அனைவருக்கும் பரிமாறக் கௌதம் ஏதோ மொழி தெரியா படம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜானகியும் சிதம்பரமும் மருமகளின் முகத்தில் தெளிவுடன் கூடிய மகிழ்ச்சி தெரிய அதில் அவர்களின் மனம் நிறைந்து இருந்தது…  அதன் பின் மது காலை உணவை முடித்து விட்டு கல்லூரியை அடைந்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது… மறுநாள் அவர்களின் பிரிவு உபசார விழா என்பதால் அன்று வகுப்புகள் எதுவும் எடுக்கப்படாமல் விழாவினை பற்றிய கலந்துரையாடல்களே நடந்து கொண்டிருந்தது.

மது அவர்கள் வழக்கமாக அமரும் மரத்தடியில் அமர்ந்து ஸ்வேதாவிடம் தன் ரிஷப்ஷன் போட்டோக்களைக் காட்டிக் கொண்டிருக்க அந்தப் பக்கமாய் வந்த அவர்கள் வகுப்பு தோழி ஸ்ரீஜா அதைப் பார்த்துவிட்டாள்.

பார்த்ததும் ஓரே ஓட்டமாய் அனிதாவை தேடி வகுப்பிற்குள் சென்றாள் அங்கு அனிதா மட்டுமே இருக்க, வேகமாக அவளருகில் சென்றவள் “ஹே அனி உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி?”

“என்ன விஷயம்னு சொல்லாம தெரியுமானா என்னடி அர்த்தம்..? கடுப்படிக்காம என்ன்னு சொல்லு…” என அனிதா அவளிடம் பாய

“சொல்றேன் டி…! நம்ம மது… “ என ஆரம்பிக்கவும் அனிதா முறைத்த முறைப்பில்,

“சரி கோபப்படாத… மது இருக்காள அவளுக்குக் கல்யாணம் ஆயிடுச்சாம்டி…”

“அதுக்கு என்ன பண்ணனும்..? ஆரத்தி எடுத்து அவளை வரவேற்க போறீயா..?”

“என்னடி..? சும்மா சும்மா என்னைத் திட்டுற….” எனச் சலிப்படைய

“ரொம்பச் சலிச்சுக்காத…. விஷயம் என்னனு சொல்லு..?” என அனிதா அவளை ஊக்க

“அவ ஹஸ்பண்ட் யாருனு தெரியுமா..? கௌதம் சார் டி… “

“அவரா..? அப்படி ஒரு விஷயம் நடந்த பிறகும் எப்படிக் கல்யாணம் நடந்துச்சு..?“ மனசுக்குள் பேசுவதாக நினைத்துச் சத்தமாகச் சொல்லிவிட

“என்னடி நடந்துச்சு சொல்லுடி..? என்கிட்ட சொல்லமாட்டியா?” என அவளை நச்சரிக்கத் தொடங்க,  காலேஜ் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இதனால் என்ன பிரச்சனை வரப் போகிறது என்று நினைத்தவள் நடந்தவற்றைச் சொல்ல தொடங்கினாள்.

அன்று இன்ட்ரா காலேஜ் காம்படிஷனில் கலந்து கொள்வதற்காகச் சென்னையின் மற்றொரு புகழ் பெற்ற கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல அதற்குக் கௌதம் பொறுப்பேற்றான்.

ஸ்வேதா பேப்பர் பிரஷன்டேசனில் கலந்து கொள்ளச் சென்றிருக்க அவளுக்குக் கம்பெனி குடுக்கவென்று மதுவும் உடன் சென்றிருந்தாள்… அனிதாவும் அதே பிரஷன்டேசனில் பங்கேற்க சென்றிருந்தாள்… எப்போதும் அவளுக்கும் ஸ்வேதாவுக்கும் படிப்பில் விஷயத்தில் போட்டி உண்டு…  ஸ்வேதா அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளாவிட்டாலும் அனிதா அதைப் போட்டி என்று நினைப்பதை விட வெறியாகவே நினைப்பாள்… எந்த இடத்திலும் தான் தான் முதலில் இருக்க வேண்டும் என நினைப்பவள்… சுருக்கமாகச் சொன்னால் சென்டர் ஆப் அட்ராக்ஷன் என்பார்களே அதை எதற்கும் விட்டு கொடுக்காதவள்.

பிரஷன்டேசனை நினைத்து ஸ்வேதா சற்றுப் பதட்டமாக இருக்க, அதைப் பார்த்த மது “ஹே ஏன்டி டென்சன் ஆகுற..? தைரியமாக இரு பக்கி…”

“இல்லடி… அங்க போய்ச் சொதப்பிருவனோனு பயமா இருக்கு…”

“அப்படியெல்லாம் ஆகாது… ரிலாக்ஸா இரு. அப்படியே சொதப்புனாலும் என்ன தலையவா எடுக்கப் போறாங்க..?  ஃப்ரீயா விடு மச்சி…!”

அந்தநேரம் அவர்களைக் கடந்து சென்ற அனிதா “ஹே..! மது சொல்ற மாதிரி ஏன் டென்சன் ஆகுற..? எப்படியும் நான் தான் வின் பண்ணப் போறேன்… சோ டென்சன் ஆகி டைம் வேஸ்ட் பண்ணாம என்ஜாய் தி மொமண்ட்…” நக்கலாய் கூற

“ஹேய்..! சப்பமூக்கி நாங்க உன்கிட்ட அட்வைஸ் கேட்டோமா..? மூடிகிட்டு போ… காம்படீஷன் முடிஞ்சதும் தெரியும் யார் ஜெயிக்குறாங்கனு..? இப்போ சீன் போடாம நகரு… காத்து வரட்டும்..”

“அவள் எப்படி ஜெயிக்குறானு நானும் பார்க்குறேன்… அப்புறம் ஒரு விஷயம்… ஸ்வேதா நீ மது கூட இருக்கவரைக்கும் விளங்கிருவ…!” எனச் சொல்லி விட்டு நகர,

ஏதோ சொல்ல வாயெடுத்த ஸ்வேதாவை அடக்கிவிட்டு மது ”ஆமாடி…! இந்தச் சைனீஸ் சப்பமூக்கிட்ட சேரு… விம் போட்டு விளக்கோ விளக்குனு விளக்கி உன்னை விளங்க வச்சுருவா….” அனிதா காதில் படுமாறு சத்தமாக உரைக்க அனிதா முறைத்துக் கொண்டே சென்றாள்.

ஒரு மணி நேரம் கழித்து அனைவரும் ஆடிட்டோரியத்தில் ஓன்று கூட அனிதா தன் காதலன் ரிஷியோடு அமர்ந்து கொண்டாள்…. ரிஷி அந்தக் கல்லூரியின் ஐகான் என்று சொல்ல கூடிய அளவுக்குப் படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி முதன்மையாய் திகழ்பவன்…. அனிதாவை போலவே சென்டர் ஆப் அட்ராக்ஷனாக இருக்க நினைப்பவன்…. சில பல போட்டிகளில் சந்தித்துக் கொண்ட இருவரும் இந்தக் குணம் ஒத்துப் போக நாளைடைவில் காதலர்கள் ஆயினர்.

அனிதா மற்றும் ரிஷி ஒருவர் மேல் ஒருவர் விழாத குறையாகப் பேசுவது சிரிப்பதுமாய் இருந்த காட்சி அருகிலிருந்த மாணவர்களை முகம் சுழிக்க வைத்தது…. இதைக் கவனித்த மது அனிதாவின் திமிருக்குப் பாடம் புகட்ட நினத்தவள் ஸ்வேதாவை அழைத்துக் கொண்டு திரும்பத் தூரத்தில் கௌதம் நிற்பது தெரிந்தது.

அந்தப் பக்கம் எதார்த்தமாகச் செல்வது போல் சென்று ஸ்வேதாவிடம் “ஏன்டி..! இந்த அனிதா நம்ம காலேஜ் பெயரையே கெடுத்துருவா போலயே..? இப்படியா பிகேவ் பண்றது” எனக் கௌதமிற்குக் கேட்கும் வண்ணம் சொல்லி விட்டு நகர அதைக் கேட்ட கௌதம் அனிதா இருக்கும் திசையில் பார்வையைச் சுழல விட்டான்.

பார்த்த அவனுக்குமே அது சங்கடத்தைத் தர நேராக அனிதாவை நோக்கி சென்றவன் அவளை அழைத்து “வாட் ஸ் திஸ் நான்சென்ஸ் அனிதா? ப்ப்ளிக் பிலேஸ்ல இப்படித் தான் பிகேவ் பண்றதா? இந்த மாதிரி விஷயங்களில் கவனத்தைச் சிதறவிட்டு படிப்புல கோட்டை விட்டுறாத?” என அவளின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையில் கண்டிக்க

அவளை மட்டம் தட்டுவதாக நினைத்து அனிதா” சார்..! நான் படிப்புல கோட்டை விட்டதை எப்போ பார்த்தீங்க…? இதுவரைக்கும் எதிலயும் புவரா பெர்ஃபாம் பண்ணினதே கிடையாது…. சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறீங்க…” எனச் சொல்ல

அவளின் பதிலில் கோபமடைந்த கௌதம் “லுக்..! நீ பிரில்லியன்ட் ஸ்டூடண்டா இருக்கலாம்… ஏன் கோல்ட் மெடல் கூட வாங்கலாம்..? ஆனால் அது எல்லாம் ஒழுக்கம் இல்லைனா சுத்த வேஸ்ட்…. நாம படிக்குற படிப்பு மட்டும் மதிப்பு இல்லை ஒழுக்கமும் வேணும் அப்போ தான் அது முழுமை அடையும்… காட் இட்..! நாளைக்கு என்னை ஸ்டாப் ரூம்ல வந்து பாரு…!” எனச் சொல்லிவிட்டு செல்ல, இவ்ளோ நேரம் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மது சிரிக்க அனிதாவின் முகம் அவமானத்தில் கன்றியது.

அந்தப் பிரசன்டேஷனில் ஸ்வேதா முதல் பரிசை வெல்ல நடந்ததை அவமானமாக நினைத்துக் கொண்டே இருந்ததில் ஒழுங்காகப் பிரசன்ட் செய்யாமல் அடுத்த இரண்டு இடங்களில் கூட அனிதாவால் இடம் பெற முடியாமல் போனது.

அடுத்த நாள் அனிதாவிடம் கௌதம் “இங்க பாரு..! உன் பர்ஷனல் விஷயத்துல தலையிட விரும்பலை…. பட் அஸ் எ டீச்சரா நல்லதை சொல்ல வேண்டியது என் கடமை… நல்லபடியா ஸ்ட்டீஸ முடிக்குற வழியைப் பாரு…. இன்னொரு தடவை இந்த மாதிரி மிஸ்பிகேவ் பண்ணினது தெரிய வந்தா நான் உன் பேரண்ட்ஸ்கிட்ட பேச வேண்டிய வரும்…. அப்படி ஒரு சந்தர்பத்தைக் கொடுக்க மாட்டேன்னு நம்புறேன் யூ மே கோ நவ்” என்றுவிட ,

முதல் தோல்வி தந்த அவமானம், மதுவின் கேலிக் கிண்டல்கள் அதற்கும் மேலாக அறிவுரை என்ற பெயரில் இருந்த கௌதமின் எச்சரிக்கைகள் அனிதாவின் மனதில் பழி உணர்ச்சியைத் தூண்டியது.

யோசித்துக் கொண்டே வந்தவள் மது ஸ்வேதாவிடம் “எத்தனை தடவை ரெக்கார்ட் நோட் எழுதுறது…? கடுப்பா இருக்குடி… அவனை இனி எழுத குடுக்காத அளவுக்கு ஏதாவது பண்ணனும் மச்சி…” என விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்தது காதில் விழ தன் திட்டத்தைத் தீட்ட தொடங்கினாள்.

மது ஸ்வேதாவை தேடி கேன்டீன் செல்லும் வழியில் அனிதா தன் தோழியிடம் “ஹேய்..! உனக்கு ஒண்ணு தெரியுமாடி..? என் கசின் போன வருஷம் நம்ம காலேஜ்ல படிச்சா நியாபகம் இருக்கா..?”

தோழியோ “ஹான் இருக்குடி. அதுக்கு என்னடி இப்போ?”

“அவ நேற்று எங்க வீட்டுக்கு வந்திருந்தாடி… அவ ஒரு விஷயம் சொன்னா..? அது என்னனா..? அவ கிளாஸ்ல ஒரு மேடம் எப்போ பாரு எதாவது அசைன்மென்ட், இம்போஷிஷன் அப்படிக் குடுத்து டார்ச்சர் பண்ணினாங்களாம்… அது பொறுக்க முடியாம இவ அவங்க மேல கம்ப்லைண்ட் பாக்ஸ்ல லெட்டர் எழுதி போட்டுட்டாளாம்… அதுக்குப் பிறகு கொஞ்சம்தான் அசைன்மென்ட் குடுக்குறதை குறைச்சுருக்காங்க… மறுபடியும் இவ இப்படிக் குடுக்குறதால எனக்கு ரொம்ப டிப்ரஷனா இருக்கு அப்படி எழுதி போட்டுருக்கா இரண்டு டைம் கம்ப்லைண்ட் வந்ததால அந்த மேடம்மை வேற இயர் ஸ்டூடண்ட்ஸ்கு போட்டுட்டாங்களாம்…. இதுவரைக்கும் அப்படிப் பண்ணுனது யாருனு அந்த மேடம்க்கும் தெரியாது…. மேனேஜ்மென்ட்க்கும் தெரியாதாம்…!” என மது கேட்குமாறு சொன்னாள்.

இதைக் கேட்ட மதுவின் முகம் யோசனையில் மூழ்க அனிதா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

அன்று கல்லூரி முடிந்ததும் லெட்டரை போட்டு விட்டு மது சென்றுவிட அவளையே கண்காணித்துக் கொண்டிருந்த அனிதா அந்த லெட்டரை எடுத்து படித்தாள்…அதில் கௌதம் தன்னையே கார்னர் செய்து பனிஷ்மென்ட் குடுப்பதாகவும், இதனால் தான் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் எழுதி இருந்தாள்… மதியின் கையெழுத்தை போல அச்சு அசலாக இமிடேட் செய்து அந்தக் கடிதத்தில் ஒரு சில மாறுதல் செய்து போட்டு விட்டாள்.

அடுத்த நாள் கல்லூரியின் முதல்வர் அறையில் இருந்தான் கௌதம். முதல்வர் “மிஸ்டர்.கௌதம் இந்தக் கல்லூரியில் சேர்ந்த என்னோட ஐந்து வருட அனுபவத்தில் இது மாதிரி ஒரு கம்ப்லைண்ட் வந்ததே இல்லை… அனானிமஸ் லெட்டர் தானேனு ஒதுக்கவும் முடியலை…. அதே சமயம் உண்மைனு ஏத்துக்கவும் முடியலை..? ஏன் சொல்றேனா நேற்று சாயங்காலம் இதைப் படிச்சதுமே உங்க பெர்ஷனல் ஃபைல்ல இருந்த ரெபெரன்ஸ் மெம்பர்ஸ், நீங்க படிச்ச காலேஜ்ல விசாரிச்சுட்டேன் எல்லாருமே உங்க கேரக்டருக்குச் சென்ட் ப்ர்ஷன்ட் கேரண்டி குடுக்குறேனு சொல்றாங்க…. அதுக்காக இதை இப்படியே விடவும் முடியாது…. ஐம் சாரி டூ சே திஸ் இன்னொரு தடவை இது ரிபீட் ஆனா மேனேஜ்மென்ட் எடுக்குற நடவடிக்கைக்கு நீங்க அக்ஷப்ட் பண்ணிதான் ஆகணும்….”

தனது கேரக்ட்ரை கிராஸ் செக் செய்திருக்கிறார்கள் என்பதே கௌதமிற்குக் கசப்பை தர  “சார்…! அந்தக் கம்ப்லைன்ட் லெட்டரை நான் பார்க்கலாமா..?”

முதல்வர் அதை நீட்டவும் அதை வாங்கிப் பிடித்தவன் முகம் உச்சக்கட்ட கொந்தளிப்பில் இருக்க ஆனால் அதில் இருக்கும் கையெழுத்தோ மிகப் பரிச்சயம் ஆனது போல் இருந்தது…

அந்த மாத அசைன்மென்ட் சப்மிட் செய்வதற்காகக் கௌதமின் அறைக்கு வந்த அனிதா சப்மிட் செய்துவிட்டுத் திரும்புகையில் கோபத்திலும் யோசனையிலும் உள்ளே வந்த கௌதமை கண்டவள் தன் திட்டம் பாதி நிறைவேறியதை நினைத்து உற்சாகம் அடைந்தவள் நேரே மதுவிடம் சென்று ரெக்கார்ட் நோட் சப்மிட் செய்யச் சொல்லி கௌதம் சொன்னதாகக் கூறினாள்.

மதுவும் தன் ரெக்கார்ட் நோட்டை எடுத்துக் கொண்டு கௌதமின் அறைக்குச் செல்ல கௌதம் ஏதோ யோசனையோடு அதைச் சரிபார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் அதிர்ச்சியைக் காட்ட இதுவரை கௌதமை பார்த்துக் கொண்டிருந்த மது அவனது முகம் மாறியதை உணர்ந்து “ஹைய்யோ கடவுளே இன்னைக்கும் நான் ஸ்கிப் பண்ணி எழுதுனதை கண்டுபுடிச்சுட்டானோ? சரியான லென்ஸ் கண்ணுடா இவனுக்கு “எனப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

நோட்டை மூடி வைத்தவன், “இந்தக் கம்ப்லைன்ட் லெட்டரை எழுதினது நீதான..?” எனக் கேட்க

அய்யோ யாருக்கும் தெரியாதுனு சொன்னாங்களே இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது என எண்ணியவள் “சார்..! அது… வந்து… அது வந்து “ என இழுக்க

“ஜஸ்ட் சே எஸ் ஆர் நோ டேமிட்…” எனக் கர்ஜிக்க அதில் மிரண்ட மது,  “எஸ்” என்றாள்.

அதில் வெகுண்ட கௌதம் “என்ன எழுதியிருக்க..? அசிங்கமா இல்லை இப்படி எழுதுறதுக்கு?”

அவனது கேள்வியில் சீண்டபட்ட மது “சார்…! அப்படி என்ன தப்பா எழுதிட்டேன்… நான் என்ன ஃபீல் பண்ணினேனோ அதைத் தான் எழுதிருக்கேன்….”

“என்ன ஃபீல் பண்ணுனீயோ அதைத் தான் எழுதியிருக்கீயா…? என் கேரக்டரையே அசிங்க படுத்திட்டு என்ன தப்பா எழுதிருக்கேனா கேட்குற? ச்ச அதைத் திரும்பக் கிளறி அசிங்கப்பட விரும்பலை…. என் கண்ணு முன்னாடி நிற்காத போயிடு” என்றதும் அங்கிருந்து நகன்றாள்.

அந்தக் கடிதத்தில் எழுதியிருந்ததின் சராம்சம் இது தான் “ கௌதமின் பார்வை சரியில்லை… என்றும் அடிக்கடி தன்னையே கார்னர் செய்து பனிஷ்மென்ட் என்னும் பெயரில் தொந்தரவு செய்வதாகவும் இதனால் தான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறேன் என்று இருந்தது….”

இனி இங்கு வேலை செய்வது தனக்கு இழுக்கு என நினைத்த கௌதம் அன்றே தன் ராஜினாமாவை குடுத்து சென்று விட்டான்.

மது எனத் தெரிந்ததும் கௌதம் அவளைக் காட்டி குடுப்பான் என நினைத்திருந்த அனிதா சற்றே ஏமாற்றம் அடைய அவன் கல்லூரியிலிருந்து நீங்கியது சந்தோஷத்தையே குடுத்துது…. இது தான் நடந்தது என அனிதா ஸ்ரீஜாவிடம் சொல்லி முடிக்க இவை அனைத்தையும் தனது பேக்கை எடுப்பதுற்காக வந்த ஸ்வேதா கேட்டுவிட்டாள்.

அதிர்ச்சி அடைந்த ஸ்வேதா மதுவிடம் சென்று நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற ஆத்திரத்தில் உச்சமடைந்த மது “அந்தக் குள்ள கத்திரிக்கா இவ்ளோ வேலை பண்ணிருக்காளா..? இன்னைக்கு என்ன பண்றேன் பாரு அவளை..?” என வேகமெடுக்க

“ஹேய் வேணாம்டி…! எதாவது பெரிய பிரச்சனை ஆகிட போகுது…”

“என்னடி பிரச்சனை ஆகப் போகுது..? இன்னைக்கு அந்தச் சப்ப மூக்கி மூஞ்சியையும் சப்பை ஆக்கல… என் பேரு மது இல்லை…” தன்னைப் பிடித்திருந்த ஸ்வேதாவின் கைகளை உதறிவிட்டு செல்ல

“அய்யோ இவகிட்ட அப்புறம் சொல்லிருக்காலாமோ…? இப்போ என்ன பண்றது..?” என யோசித்தவளுக்கு ராகுலின் நியாபகம் வர அவனுக்குப் போன் செய்தாள்.

முதல் ரிங்கிலேயே எடுத்தவன் “ஹே ஹனி…! நேத்து தான் பார்த்தோம்…. இன்னைக்குக் கால் பண்ணிட்டீயே… குட் இம்ரூவ்மென்ட்… சொல்லு ஹனி..! “

“இவன் வேற நேரங்காலம் தெரியாம ஜொல்லு விட்டுட்டு இருக்கான்… ஹலோ ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” எனச் சொல்ல

அவளது பதட்டமான குரலில் ஏதோ பிரச்சனை போலயே என நினைத்தவன் கேலியை விட்டு, “என்ன ஆச்சு..?” எனச் சீரீயஸாகக் கேட்க நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவள் கௌதமை வர சொல்லுமாறு கூறி போனை வைத்தாள்.

ராகுல் தன் கம்பெனியிலிருந்து கிளம்பியவன் வரும் வழியில் கௌதமை அழைத்து விபரத்தைக் கூற ஒரு நிமிடத்தில் மனதில் இருந்த பாரம் கரைந்தது போல் மனம் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க அதே நேரம் அய்யோ என்ன பண்ணி தொலைக்குறாளோ தெரியலையே..? என மதுவை பற்றி நினைத்தவன் அவளது கல்லூரியை நோக்கி விரைந்தான்.

கௌதம் கல்லூரியை அடையவும் ராகுல் அங்கு வந்து சேரவும் சரியாய் இருந்தது. வாட்ச்மேனிற்கு கௌதமை தெரியும் ஆதலால் எவ்வித ஃபார்மாலிட்டியும் இல்லாமல் உள்ளே விட நான்காம் வருட வகுப்புறைக்குச் சென்றான்… அங்கு மதுவும் அனிதாவும் கட்டி உருண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கௌதம் அவர்கள் விலக்கி மதுவை இழுத்தான்….அதற்குள் மேனேஜ்மென்ட்டிற்கும் தகவல் பரவியது.

மது தன்னை யாரோ இழுக்கவும் திரும்பியவள் கௌதமை பார்க்கவும் “கௌஸ் இவ என்ன பண்ணிருக்கானு தெரியுமா..? விடுங்க என்னை இன்னைக்கு அவளை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்… “ என அவன் கைப்பிடியில் இருந்து திமிர

“அவ தான் அப்படிச் சில்லியா பிகேவ் பண்ணிருக்கானா..? நீயும் அப்படித் தான் பண்ணனுமா..? ஜஸ்ட் ஸ்டாப் இட் “

அவன் சொல்வதை மீறியும் மது அவனது கைகளில் இருந்து விடுபட முயறிசிக்க “ஏன்டி சொல்லிட்டே இருக்கேன்… சொர்ணாக்கா ரேஞ்சுக்கு அடிப்பேன் உதைப்பேன்னுட்டு இருக்கப் பேசாம இங்க நில்லு…”

“ஆளைப் பாரு ஒரு ஜாக்கிஜான் இல்லை புரூஸ்லி சிஸ்டர் மாதிரினு சொல்லாம அது என்ன சொர்ணாக்கா…? உன் கம்பேரிஷன்ல தீயை வைக்க…!” என அந்த ரணகளத்துலையும் மனதிற்குள் கௌதமிற்குக் கவுண்டர் குடுத்து கொண்டிருந்தாள்.

இங்கு நடப்பதை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வேதாவின் கைகளோடு ராகுல் தன் கைகளைக் கோர்க்க, அவனது ஸ்பரிசத்தை உணர்ந்த ஸ்வேதா சட்டென்று திரும்பி பார்க்க ராகுலோ எதுவும் தெரியாதது போல் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைக் கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டவள் அவனது கைகளை அழுத்திக் கொடுக்க ஆச்சர்யமடைந்த ராகுல் ஸ்வேதாவை ஆராய்ச்சி பார்வை பார்க்க ஸ்வேதா ‘தனக்குச் சம்மதம்’ என்பது போல் தன் கண்களை மூடி திறந்தாள்.

அதில் சந்தோஷமடைந்த ராகுல் “யாகூ…!” என்று வெற்றிக்குறிச் செய்ய ஸ்வேதா கலகலத்து சிரித்தாள்.

கல்லூரி முதல்வரின் அறையில் கௌதம், மது அனிதா மற்றும் அவள் பெற்றோர் அமர்ந்திருக்க முதல்வர் “கௌதம்…! நீங்க கம்ப்லைன்ட் லெட்டர் எதும் குடுக்குறீங்களா?” எனக் கேட்க

“நோ சார்…! அதெல்லாம் எதுவும் வேண்டாம்….நல்லா படிக்குற பொண்ணு… இதுனால அவ கேரியர்ல பிளாக் மார்க் ஆகிட கூடாது” எனச் சொல்ல

ஏற்கனவே இதுவரை தன்னை ஒரு சுடுசொல் கூடப் பேசாத தன் பெற்றோர் அடித்ததில் தான் செய்த தவறின் ஆழத்தை உணர்ந்திருந்தவள் கௌதம் இப்போதும் தன் எதிர்காலத்தை நினைத்து பேசவும் குற்ற உணர்ச்சி அடைந்தவள் அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

“உங்களுக்குக் கொடுத்துருக்கச் சுதந்திரத்தை மட்டும் எப்போதும் மிஸ்யூஸ் பண்ணாதிங்க….! உங்களுக்கு நாங்க ஸ்ட்ரிக்டா இருந்தா ஹிட்லர்னு சொல்லுவீங்க.. இதே ஸ்டூடண்டோட மனநிலைமைக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் ஃப்ரீயா நடந்துகிட்டா சரியா ஓபி அடிக்குறானு சொல்லுவீங்க… அந்த மனநிலையைக் கொஞ்சம் மாத்திக்க ட்ரை பண்ணுங்க… மாணவர்களோட பிரச்சனைகளைத் தீர்க்குறதுக்காக இருக்குற கம்ப்லைன்ட் பாக்ஸை உங்களோட சொந்த விருப்பு வெறுப்புகளுக்குப் பயன்படுத்தாதீங்க…. இது உனக்கும் தான் மது…” எனச் சொல்ல இருவரும் மனதார மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

“ஐ அம் சாரி மிஸ்டர். கௌதம்..! நடந்தது தெரியாம நானும் உங்களைத் தப்பா நினைச்சுட்டேன்…”

“இட்ஸ் ஓகே சார் உங்க இடத்துல நான் இருந்திருந்தா நானும் அதைப் போலத் தான் நடந்திருப்பேன்”

“உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் பீல் ஃப்ரீ டு அஸ்க் மீ”

“ஸ்யூர் சார்… எனிவே தேங்க்ஸ் ஃபார் ஆஸ்கிங்க்…” என்று விட்டுக் கிளம்பினான்.

கௌதம், மது ,ராகுல், ஸ்வேதா அனைவரும் உணவகம் சென்று மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கக் கௌதமும் , மதியும் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் உணவை சாப்பிடுவதுமாய்க் கழிய அதன் பின் வீடு வரும்வரை இருவரிடமும் ஒருவித அமைதியே நிலவியது.

இரவு உணவை முடித்துக் கொண்டு தங்கள் அறைக்குள் வந்த இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருக்கப் படுப்பதற்காகத் தலையணையை எடுக்கச் சென்றவளின் கையைக் கட்டிலின் நுனி பதம் பார்க்க “ஸ்ஸ் அம்மா” என முனகினாள்.

“என்ன ஆச்சு மது..?” என அவள் கைகளை ஆராய தோல் பிளந்து சிறிது ரத்தம் வந்து கொண்டிருந்தது… ஃப்ர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து முதலுதவி செய்தவன்,

“பார்த்து பண்ணக்கூடாதா..? “என்றவன்

“மது உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்…“ எனவும்

“என்ன சொல்ல போகிறான் ப்ரோபோஸ் பண்ணுவானோ..? அய்ய்யோ அப்படிப் பண்ணுனா நான் என்ன சொல்றது..? பிரபேர் கூடப் பண்ணலையே…” என நினைக்க

மனசாட்சியோ “அவன் சொல்லவே இல்லை… அதுக்குள்ள ப்ரோபோஸ் தான் பண்ண போறானு கன்ஃபார்ம் பண்ணிட்டீயா..? இதுல பிரபேர் பண்ணலைனு கவலை வேற…” என நக்கலடிக்க

“ஆமா…! ப்ரோபோஸ் பண்ணாம நாட்டோட வளர்ச்சி பத்தியா பேசப் போறான்… பேசுனாலும் பேசுவான்… பட் இன்னைக்கு ப்ரோபோஸ் தான் பண்ணுவானு எனக்குத் தெரியும் நீ போய் உன் வேலையைப் பாரு… “என அதைத் துரத்தியவள்

“சொல்லுங்க…! “எனக் கௌதமிடம் சொல்ல

கௌதம் ஒரு நிமிடம் தயங்கியவன் “ஷல் வீ ப்ரெண்ட்ஸ்…” என்றானே பார்க்கலாம் மதுவிற்குச் சப்பென்று ஆகிவிட்டது.

“ப்ரெண்ட்ஸாம் ப்ரெண்ட்ஸ்… விட்டா மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லுனு சொல்வான் போலயே…? இவனுக்குக் கௌஸ்னு பேர் வச்சதுக்குப் பதிலா புண்ணாக்குனு வச்சிருக்கலாம்…. ஜானகி புள்ளையை ரொம்ப அழகா வளர்த்திருக்கம்மா..? ரொம்ப அழகா வளர்த்திருக்க… “ என மனதிற்குள் பேசி கொண்டிருந்தவள் கௌதம் இன்னும் தன் கைகளை நீட்டியபடி நின்றிருக்க வேறு வழியில்லாமல் “ ஓகே” என்றும் மட்டும் சொல்லி கை குழுக்கினாள்.

காதலை யாரடி முதலில் சொல்வது

நீயா இல்லை நானா

நான் சொன்னால் நீ வெட்கத்தில் சிவப்பாயா

இல்லை அடிப்பாயா?

நீ சொன்னால் நான் வானத்தில் பறப்பேனா.. இல்லை மிதப்பேனா?

நீ இல்லையேல் நான் மண்ணிலே இருப்பேனா தொலைவேனா… மறிப்பேனா?

Advertisement