Advertisement

கசாட்டா 14:

தூரத்தில் உன்னைக் கண்டு

துள்ளி குதிக்கும் அருவியான நான்!

என்னருகில் நீ வரும் போது ஏனோ

விளக்கொளியில் உயிர் விடும் விட்டில் பூச்சியாகிறேன்!

கௌதம் மற்றும் மதுவின் வாழ்வில் இந்த ரிஷப்ஷன் விழா அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியை ஏதோ ஒரு விதத்தில் சற்றுக் குறைத்தது என்று தான் சொல்ல வேண்டும்… அவளிடம் முன் போல் வம்பிழுக்கவும் இல்லை…. அதே நேரம் சிரித்துப் பேசவும் இல்லை…. தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த அவனின் அமைதி மதுவின் மனதை ஏதோ செய்ய அவளறியாமல் கௌதம் அவள் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான்…. நாட்கள் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க ராகுலின் காதல் பார்வைகளும் ஸ்வேதாவை தொடர்ந்து வண்ணம் இருந்தது…. வாய் விட்டு சொல்லாது இருந்தாலும் அவன் கண்கள் பேசும் காதல் பாஷையில் ஸ்வேதா மயங்கித்தான் போனாள்.

கல்லூரி முடிய இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில் அன்று ப்ராஜக்ட் முடிப்பதற்கான கடைசி நாள் என்பதால் ஸ்வேதாவும் மதுவும் ராகுலின் கம்பெனிக்கு சென்றிருந்தனர்…. ராகுலோ இனி ஸ்வேதாவை அடிக்கடி பார்க்க முடியாது என்பதால் இன்று தன் மனதில் இருப்பதை எப்படியாவது ஸ்வேதாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து அதற்கான சரியான நேரத்தை எதிர்பார்க்கலானான்… ராகுலைப் போல் அங்கு மற்றொரு ஜீவனும் மதுவிடம் தன் காதலை உரைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.

ஸ்வேதா ப்ராஜக்ட் பற்றிய தன்னுடைய சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொண்டிருக்க, ராகுல் ஸ்வேதாவை பார்ப்பதும் விளக்கம் சொல்வதும் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் இருக்க அதைக் கவனித்து விட்ட மது, தான் கேன்டீன் சென்றுவிட்டு வருவதாகக் கூறிக் கொண்டு வெளியில் சென்றாள்.

மனதிற்குள் மதுக்கு நன்றி கூறிவிட்டு இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட மனமில்லாத ராகுல் “ ஹனி..! “ என அழைக்க அதில் விதிர்விதிர்த்தவள், சுற்றும் முற்றும் கண்ணை உருட்டிக் கொண்டு பார்க்க அதைக் கண்டவன் புன்னகையைச் சிந்திவிட்டு ஸ்வேதாவின் கையைப் பற்றிக் கொண்டான்.

“ஹனி நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை… ஐ லவ் யூ ஹனி..! உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு… உனக்கும் என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியும்… “ எனச் சொல்ல

“யாரு சொன்னா..? அப்படிலாம் ஒண்ணும் இல்லை… “எனப் பதட்டத்தில் படப் படக்க

“ஹே கூல் கூல் இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா..? கண்டுபிடிக்கக் கஷ்டமா இருக்குறதுக்கு… உனக்கு என்னைப் பிடிச்சுருக்குங்கறதை உன் கண்ணே சொல்லுதே..! அப்புறம் என்ன வாய் வேணும்னா பொய் சொல்லலாம் கண் பொய் சொல்லாது டார்லிங்…! உனக்கு எக்ஸாம் முடிஞ்தும் என் அப்பா அம்மாவை கூட்டிட்டு உங்க வீட்டுல வந்து பேசுறேன்…. அதுவரைக்கும் நாம கொஞ்சம் லவ் பண்ணலாம் சரியா..?”

“என்ன நீங்க இப்படியெல்லாம் பேசுறீங்க..?”

“ஹே இது என்ன வம்பா இருக்கு..? உன்கிட்ட என் லவ்வ சொல்லிட்டு இருக்கேன்… நீ என்னடானா பொதுக்கூட்டம் போட்டு எதிர்கட்சி தலைவரை தாக்கி பேசிட்டு இருக்க மாதிரி ஏன் இப்படிப் பேசுறீங்கனு கேட்குற..? இது சரிபடாது… உனக்கு நிறைய ட்ரெயினிங் குடுக்கணும்…“ என அவள் கையில் இருந்த மொபைல் போனை பிடுங்க,

ஸ்வேதா “என்ன பண்றீங்க..? குடுங்க என் போனை…” என அவன் கையில் இருந்த பறிக்க முயன்றாள்.

அவள் கையை ஒரு கையால் தடுத்து பிடித்தவன் அவளுடைய போனில் இருந்து தனது போனுக்குக் கால் செய்து அவன் எண்ணை அதில் பதிந்து வைத்தான். பதிந்து முடிந்ததும் அவள் கையில் போனை தந்தவன் “தேங்க்யூ ஹனி. பேசணும்னு தோணுச்சுனா போன் பண்ணுவேன் அட்டன்ட் பண்ணனும் ஒகே” என்றான்.

அதெல்லாம் முடியாது என மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் அறியவில்லை. தான் தான் முதலில் அவனுக்கு அழைக்கப் போகிறோம் என்று.

மதுவும் வந்துவிட இருவரும் கிளம்பினர். போகும் ஸ்வேதாவை ராகுல் பார்த்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு உந்துதலில் ஸ்வேதா திரும்பி ராகுலை பார்க்க அவனோ அவளைப் பார்த்துக் கண்ணடித்துப் பறக்கும் முத்தம் ஒன்றை விட்டான். ஸ்வேதாவோ ஒரு விரலை நீட்டி பத்திரம் என்பது போல் எச்சரிக்கை செய்து விட்டு செல்ல அவளது சைகையில் மயங்கியவன் சிரித்துக் கொண்டே தன் அறைக்குச் சென்று விட்டான்.

இத்தனை நாளும் மதுவை யாருக்கும் தெரியாமல் காதல் பார்வையால் வருடிக் கொண்டிருந்த விக்ரம் மது உடன் படிப்பவன் தன் மனதை மதியிடம் இப்போது கூறாவிட்டால் எப்போதும் முடியாது என நினைத்து கல்லூரியை விட்டு சென்று கொண்டிருந்த மதுவை நோக்கி சென்றான்.

கல்லூரியை விட்டு மது வெளிவந்ததும் “மது ஒரு நிமிஷம் “என விக்ரம் அழைக்கத் தன் பெயரை கேட்டதும் திரும்பிய மது அங்கே விக்ரம் நிற்பதை கண்டவள் ஒரு நிமிடம் இவன் எதுக்குக் கூப்பிடுறான் என யோசனை செய்ய அதற்குள் மதுவின் அருகில் வந்திருந்தான் விக்ரம்.

“என்ன விக்ரம் எதுக்குக் கூப்பிட்ட..?”

“மது உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…. “

“என்கிட்ட பேச என்ன இருக்கு . எதுவா இருந்தாலும் கிளாசில் வச்சு கேட்டிருக்கலாமே இப்படி வெளிய வந்து பேச என்ன அவசியம் “எனக் கேட்க

“சொல்றேன் மது..! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்… எங்கேயாவது உட்கார்ந்து பேசலாம்…” எனக் கல்லூரிக்கு எதிரில் நான்கு கடை தள்ளியிருந்த காபி ஷாப்பை காட்ட

ஏனோ இது சரியில்லை எனத் தோன்ற “இல்லை எதுவா இருந்தாலும் இங்க வச்சே சொல்லு “

“ப்ளீஸ் மது..! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் பேசிட்டுப் போய்டலாம்… “ என கெஞ்ச

“விடமாட்டான் போலயே..? சரி என்னனு தான் கேட்போம்…. ஏதாவது தகிடு தத்தம் பண்ணட்டும்… மவனே செத்த என்கிட்ட..! “என முணு முணுத்துக் கொண்டவள் ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் அதுக்கு மேல ஒரு செகன்ட் இருக்க மாட்டேன் போய்ட்டே இருப்பேன் என்றாள்.

“ஓகே தேங்க்ஸ் மது…!” இருவரும் காபி ஷாப்பை நோக்கி நடந்தனர்.

அப்போது அந்த வழியாகத் தன் தோழியுடன் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த கவியின் கண்களில் காபி ஷாப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்த மது தென்பட “என்ன அண்ணி மட்டும் போறாங்க..? ஸ்வேதா அக்காவை காணோம்…” எனச் சொல்லிக் கொண்டவள்,

‘ஓ காலேஜ் முடிஞ்சுருக்கும் ஸ்வேதா அக்கா ஹாஸ்டல் போயிருப்பாங்க’ என நினைத்துத் தோழியிடம் “ஹே வண்டியை நிறுத்து டி என் அண்ணி இங்க இருக்காங்க நான் அவங்க கூடவே வீட்டுக்கு போயிக்குறேன்… நீ போ… “ என அவளை அனுப்பி விட்டு காபி ஷாப்பை நோக்கி நடந்தாள்.

விக்ரம் இருவருக்கும் கோல்ட் காபியை ஆர்டர் செய்து விட்டு அமைதியாய் இருக்க மது “என்ன பேசணும்..? சொல்லு விக்ரம்… டைம் ஆகுது வீட்டுக்கு போகணும்”

“மது உங்கிட்ட கேட்கணும்னு இருந்தேன்… நீ ஹாஸ்டல்ல தான இருந்த இப்போ உங்க கார்டியன் வீட்டுல தங்கி இருக்கதா கேள்வி பட்டேன்..? என்ன திடீர்னு அங்க இருந்து வர்ற..?”

“அது வந்து ஹாஸ்டல் ஃபுட் ஒத்துக்கலை அதான்… இதைக் கேட்க தான் வர சொன்னியா..? இதை அங்கேயே கேட்டிருக்கலாமே…? சரி நான் கிளம்புறேன்…” என எழ

“ஹே மது..!  உட்காரு ப்ளீஸ் சொல்றேன்..”

“சொல்லித் தொலையேன்டா சீக்கிரம்… “ எனச் சொல்ல

“இவ்ளோ நாள் ஒண்ணும் தெரியலை… இப்போ நாம பிரிய போறோம்னு நினைச்சா மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு… அதான் இன்னைக்கு உங்கிட்ட பேசலாம்னு முடிவு பண்ணேன்“ எனச் சொல்ல

மது ஒ காலேஜ் லைஃப் மிஸ் பண்றத பத்தி சொல்றான் போல என எதார்த்தமாக நினைத்து ஆமாம் எனக்கும் கஷ்டமாதான் இருக்கு என்ன பண்றது என்றாள்.

இதைக் கேட்ட விக்ரம் அவளும் தன்னைப் போலவே எண்ணுகிறாள் எனத் தவறாய் புரிந்து கொண்டவன் தன் பையில் இருந்த காதலைப் பற்றிய கவிதை பொறிக்கப்பட்டு ராப் செய்யப்பட்ட கீரிட்டிங் கார்டை அவளிடம் தன் பரிசாய் கொடுக்க மதுவும் அதைச் சாதாரணமாக நினைத்து வாங்கி விட்டுத் தேங்க்ஸ் என்று சொல்லி புன்னகைத்து விக்ரம் பரிசளித்த கார்டை திறந்து பார்த்தாள் மது. இவ்ளோ நேரம் இவர்களின் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த கவி மதுவை தவறாக நினைத்துவள் ஒன்றும் பேசாமல் வெளியேறினாள்.

வீட்டிற்கு வந்த கவி தன் அறைக்குள் போய் முடங்கியவள் “இதை யாரிடம் சொல்லுவது அண்ணி ஏன் இப்படிப் பண்ணினாங்க அண்ணாக்கு தெரிஞ்ச எவ்ளோ வருத்தப் போடுவான்“ எனப் புலம்பிக் கொண்டிருந்தவள்,

‘ அம்மா அப்பாகிட்ட சொன்னா என்ன நடக்குமோ..? சரி எதுவா இருந்தாலும் நேரடியா அண்ணிக்கிட்டயே கேட்டுவிடுவோம்….’என முடிவெடுத்தவள் மதுவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அரைமணி நேரம் கழிந்து வீட்டிற்குள் வந்த மது ஒருவித உற்சாகத்தோடு வர அவளையே பார்த்துக் கொண்டிருந்த கவி மது தன் அறைக்குச் செல்லும் வரை பொறுமையாய் இருந்தவள் அதன் பின் மதுவின் அறைக்குள் நுழைந்தாள்.

“ஹேய் கவி..! நீ எப்போ வந்த..? நான் உன்னைப் பார்க்கவே இல்லை…”

“ஹால்ல தான் இருந்தேன்… எங்க நீங்க தான் நிதானத்துலயே இல்லையே..? கனவுல மிதந்துட்டுல இருக்கீங்க…”

“ஹா ஹா..! அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது..? “எனச் சிரிக்க

“அண்ணி..! ப்ளீஸ் சிரிக்காதிங்க… காபி ஷாப்ல உங்க கூட இருந்தது யாரு..?”

“உனக்கு எப்படித் தெரியும்..? நீ அங்க இருந்தியா..? சொல்லிருந்தா சேர்ந்தே வந்திருக்கலாம்ல… செம காமெடி நீ தான் மிஸ் பண்ணிட்ட…“

“பார்த்தேன் கீரிட்டிங் கார்டு கொடுத்ததையும் பார்த்தேன்… நீங்க தேங்க்ஸ் சொன்னதையும் பார்த்தேன்…” என சொல்ல, மதுவுக்கோ கீரிட்டிங் கார்டு என்றது சிரிப்பு பொத்துக் கொண்டு வர அங்கு நடந்ததை அசை போடலானாள்.

கீரிட்டிங் கார்டை பிரித்துப் பார்த்த மதி வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கவும் விக்ரம் “ஏன் மதி சிரிக்குற உனக்குப் பிடிக்கலையா..?” எனச் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

மறுபடியும் அந்தக் கவிதையை வாசித்தவள் குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கினாள்.அதில் இருந்த கவிதை இது தான்

மதி என்கிற மதுமதி…

நீ தான் என் வாழ்வின் முழுமதி..

நீ என் திருமதி ஆனால் அது தான்..

எனக்குக் கிடைத்த வெகுமதி வெகுமதி வெகுமதி!!!! என்று முடிந்திருந்தது அந்தக் கவிதை.

“என்ன மதி ஒண்ணும் சொல்ல மாட்டேங்குற..?”

“என்ன சொல்லணும்..? இதுக்குப் பதில் அவர்கிட்ட தான் கேட்கணும்…”

“எவர்கிட்ட கேட்கணும் உங்க அப்பாகிட்டயா..?”

“என் அப்பாகிட்ட இல்லை என் புள்ளைங்களோட அப்பா கிட்ட ஐ மீன் என் புருஷன் கிட்ட கேட்கணும்…”

காபியை குடித்துக் கொண்டிருந்தவனுக்கு மதியின் பதிலை கேட்டதும் புரையேற “மதி பொய் தான சொல்ற..? “

“ஹே..! செகன்ட் இயர் பிடிக்கும் போது கௌதம்னு ஒரு சார் நமக்குக் கிளாஸ் எடுத்தார் தெரியுமா..? அவர் தான் என் ஹஸ்பண்ட்..” எனச் சொல்ல விக்ரமிற்கு இரண்டாம் முறையாகப் புரையேறியது.

“இனிமே இப்படி லூசு மாதிரி பிணாத்திட்டு இருந்த மவனே கொன்னுடுவேன்..! போ… போய்ப் படிக்குற வேலைய பாரு… வந்துட்டான் கவிதையைத் தூக்கிகிட்டு காதலை சொல்றதுக்கு…. போடா இந்தா போகும் போது நீ வாங்கிக் குடுத்துக் கோல்ட் காபிக்கான ரூபாயை எடுத்துட்டு போ…” எனச் சொன்னவள் மனதிற்குள்

“ஹேய் கௌஸ்..! பாருடா… புரோபோஸ் பண்ண வேண்டிய உன்னைத் தவிர மத்தவங்க எல்லாம் சொல்றாங்க.. என்ன கொடுமை இது..?” கௌதமை திட்டிக் கொண்டிருந்தவள் அவளது எண்ண போக்கை கண்டு அவளே ஆச்சரியம் அடைய மனமோ,

“ஆமா..! இதுல என்ன இருக்கு ஆச்சர்யப்பட என் ஹஸ்பண்ட் எனக்கு ப்ரோபோஸ் பண்ணனும்னு நினைக்குறதுல என்ன தப்பு இருக்கு…“ தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் கௌதம் தன் காதலை சொல்வது போல் கற்பனை செய்து கொண்டு அந்த உற்சாகத்தோடு வீடு வந்து சேர்ந்தாள்.

“அண்ணி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… நீங்க ஒண்ணுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்…” எனக் கேட்க அதில் நினைவு வந்தவள்

“என்ன கவி..? நீ நினைக்குற மாதிரி ஒண்ணும் இல்லை..” என்க

“நான் தான் என் கண்ணாலயே பார்த்தேனே…!“ எனச் சொல்லிக் கொண்டிருக்கக் கௌதம் அங்கு வந்து சேர்ந்தான்.

“என்ன பிரச்சனை..? கவி உன் சத்தம் ரூம்க்கு வெளிய வரை கேட்குது… எதுவா இருந்தாலும் அண்ணன்கிட்ட சொல்லு…“ எனக் கேட்டது தான் தாமதம் அனைத்தையும் அவனிடம் கூறி முடித்தாள்.

மது “இல்லை.. கவி தப்பா… “ என ஆரம்பிக்க நிறுத்து என்பது போல் சைகை செய்தவன் கவியிடம் திரும்பி

“எனக்குப் போன் பண்ணி சொல்லிட்டாடா… எனக்கும் தெரியும் ஒண்ணும் பிரச்சனை இல்லை… நீ இதை மனசுல போட்டு குழப்பிக்காம போய்ப் படிடாமா.. “ என்றான் கௌதம்.

“ஹோ..! அப்படியா நான் பயந்தே போயிட்டேன்… சாரி அண்ணி..! லூசு மாதிரி பிகேவ் பண்ணிட்டேன்… என்னை மன்னிச்சுருங்க…”

“நான் எதுவும் நினைக்கலை ஃபிரீயா விடு..! “

“தேங்க்ஸ்..!“எனச் சொல்லிவிட்டு சென்றாள்.

அதன் பிறகு அந்த அறையில் அமைதியே நிலவ கௌதம் குளியலைறைக்குள் சென்றான்.

மதுவிற்கு அவன் ஒன்றும் சொல்லாமல் இருப்பது குறு குறுப்பை ஏற்படுத்த அவன் வெளியே வந்ததும் “நீங்க அங்க நடந்ததைப் பற்றி என்கிட்ட ஒண்ணுமே கேட்கலையே”

“கேட்க வேண்டிய அவசியம் இல்லை… “ மதுவோ ஏன் என்பது போல் பார்க்க

“நீ அன்னைக்குச் செய்த தப்பை நினைச்சு நான் உன்மேல கோபமாதான் இருக்கேன்… ஆனால் உன்னைச் சந்தேகப்படுற அளவுக்கு நான் கீழ்த்தரமானவன் இல்லை… எனக்குத் தெரியும்… கவி சின்னப் பொண்ணு அவதான் தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசியிருப்பா… உன்மேல எனக்குச் சந்தேகம் இல்லை அதனால அங்க நடந்ததைப் பற்றிக் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படலை… புரிஞ்சுதா..? போ… வேற வேலை ஏதாவது இருந்தா போய்ப் பாரு..!”

அவனது பதிலை கேட்டவளின் மனம் சந்தோஷத்தில் சிறகடிக்க அவன் சந்தேகம் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம் அந்த அளவுக்கு என்னை நேசிக்கிறான் என்று தானே அந்த நினைப்பே அவளுக்கு ஒரு வாளி தேனை தன் மேல் வாரி இறைத்ததைப் போலத் தித்திக்க அவனைக் கட்டிக் கொண்டு ஐ லவ் யூ கௌஸ் ஐ லவ் யூ சோ மச் கௌஸ் டார்லிங் என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

ஆனாலும் அவன் அன்று நடந்ததை இன்றும் நினைத்து கோபத்தோடு இருக்கிறானே..? இவ்வளவு கோபம் இருக்கும் அளவுக்கு ஒன்றும் செய்யவில்லையே..? எண்ணிய மது தனக்கும் கௌதமிற்கும் இடையே இடைவெளியை உண்டாக்கிய நாளிற்குப் பயணமானாள்.

அன்று காலேஜ் முடிந்து அனைவரும் சென்ற பின் தனது பேக்கிலிருந்து பேப்பரை எடுத்தவள் அதில் கௌதமை பற்றிய புகார் கடிதம் ஒன்றை எழுதியவள் கல்லூரியின் முகப்பு வளாகத்தில் அமைந்திருந்த புகார் பெட்டியை நோக்கி விரைந்தாள்.

அவர்கள் கல்லூரியில் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டுப் புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் தங்கள் குறைகளை எழுதி போடலாம் என்றும் அதில் பெயர் குறிப்பிட தேவையில்லை என்றும் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

புகார் பெட்டியின் அருகில் வந்தவள் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாருமில்லை என்பதை உணர்ந்தவள் பெட்டியில் அந்தக் கடிதத்தைப் போட்டு விட்டு விடுதிக்கு சென்றாள்.

 

Advertisement