Advertisement

கசாட்டா 13:

விழியோடு விழி தீண்டி

எழுதினாய் ஒரு ஓவியம்

அது உயிர் பெற தீட்டிடு

வண்ணம் உன் இதழ் என்னும்

தூரிகை கொண்டு…….!

அன்று வழக்கம் போல் கல்லூரி சென்று வீடு திரும்பிய மது கௌதமிடம் பேசுவதற்கு மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டவள் கௌதமின் வருகைக்காகக் காத்திருக்க, இருபது நிமிடம் அவளைக் காக்க வைத்துவிட்டு வந்து சேர்ந்தான்.

வந்தவன் மது என்ற ஒருத்தி இருப்பதாகவே காட்டிக் கொள்ளாமல் தன் வேலைகளைத் தொடர்ந்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த மது நேராக அவன் முன்பு சென்று “ஹீக்கும்” எனச் செருமி தன் இருப்பதை அவனுக்கு உணர்த்த கௌதம் அவளைப் பார்த்தான்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல,

கௌதம் மனதிற்குள் ‘மவனே மாட்டுனடா..! நேற்று நடந்தது அவளுக்கு நியாபகம் இருக்குமோ..? இல்லையே நான் முத்தம் குடுக்கும் போது மயக்கத்துல தான் இருந்தா..’ என நினைத்துக் கொண்டிருக்க

மது “நேற்று….“என இழுக்க ,

“டேய்..! கன்பார்மா அதைப் பத்தி தான் கேட்கப் போறா.. சமாளி..!” என முணு முணுக்க,

“நேற்று நீங்க பண்ணுனதுக்கு இன்னைக்கு எனக்கு ஒரு ஹெல் பண்ணனும்” என்றாள்.

‘இவ என்ன இப்படிச் சப்னு முடிச்சுட்டா…. அப்போ நான் தான் தேவையில்லாம குழப்பிக் கிட்டேனோ..? பேசாமா கூட ஒரு முத்தம் குடுத்துருக்கலாம்…’ என நினைக்க,

அவன் மனசாட்சியோ “அடப்பாவி..! பெரிய இவன் மாதிரி அவகிட்ட கோபப்பட்டு அவளை இம்சை பண்ணிட்டு இப்படி ஒரு கிஸ்ல பிளாட் ஆயிட்டியே த்தூ…” என அவனைக் கழுவி ஊத்த, அதில் தன்னிலை அடைந்து மீண்டும் தன் பழைய ஃபார்மிற்கு வந்தவன் “என்ன பண்ணனும்..?” என்றான் சற்று கெத்தாகவே…

“அது வந்து உங்க ப்ரெண்ட் ராகுல்னு அவர் சொந்தமா சாப்ட்வேர் கம்பெனி வச்சுருக்கார்னு அத்தை சொன்னாங்க..?”

“ஆமா…! இப்போ அதுக்கு என்ன..?”

“அந்தக் கம்பெனியில நானும் ஸ்வேதாவும் ப்ராஜக்ட் பண்ண பெர்மிஷன் வாங்கித் தரணும்… அப்படி வாங்கித் தந்திங்கன்னா நேற்று நீங்க…” எனத் தொடங்க

‘அய்யோ..! விட்டா நேற்று நான் பண்ணதை எல்லாருக்கும் டெலிகாஸ்ட் பண்ணிடுவா போலயே’ என நினைத்தக் கௌதம்,

“ஹே.. நிறுத்து..! நிறுத்து..! இப்போ என்ன ப்ராஜக்ட் பண்ணனும்… அவ்ளோ தான..? சரி..! நான் அவன்கிட்ட பேசிட்டு சொல்றேன்…” என்றதும்,

அவன் ஒத்துக் கொண்டதில் சந்தோஷம் அடைந்த மது “தேங்க்ஸ்..! உங்களால தான் மயக்கம் போட்டு விழுந்தேன் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்… ஓகேயா..” எனச் சொல்லியபடி கீழே செல்ல

“அடக்கடவுளே..! மயக்கம் போட்டதை தான் நேற்று நடந்தது நேற்று நடந்ததுனு பீதியை கிளப்புனாளா..?“ எனத் தன்னையே நொந்து கொண்டவன் ராகுலின் எண்ணை தன் மொபைல் போனில் அழுத்தினான்.

அடுத்த நாள் பெசன்ட் நகரில் இருக்கும் ராகுலின் சாப்ட்வேர் கம்பெனியான ஆர்.எஸ் சொலியூசனின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மதுவும் ஸ்வேதாவும் ஐந்து நிமிடம் கழித்து ராகுலின் கேபினிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உள்ளே நுழைந்ததுமே மது “என்ன பாஸ் நீங்க..? இவ்ளோ நேரம் வெயிட் பண்ண வச்சுட்டீங்க…. நீங்களெல்லாம் எப்படி தான் கஸ்டமரை சடிஸ்பை பண்றீங்களோ..? அய்யோ.. அய்யோ..! சரி அதை விடுங்க நாங்க உள்ள வந்து இவ்ளோ நேரம் ஆச்சு… காபி வேணுமா..? இல்ல ஜூஸ் வேணுமானு..? ஒண்ணுமே கேட்கலை… விருந்தோம்பல் தமிழர் பண்பாடு பாஸ் அதைக் கூட மறந்துட்டீங்களா..?” என அவனைப் பேச விடாமல் சரமாரியாக விலாச,

ஸ்வேதா“ஹேய் மது..! கொஞ்சம் சும்மா இருடி… இங்க தான் நாம ப்ராஜக்ட் பண்ணனும்… அதை நியாபகம் வச்சுக்கிட்டு பேசு…” என அவளை அடக்க,

அவள் மதுவிடம் பேசும் போது கவனித்த ராகுல் ‘அய்யோ..! இந்த ஊசி பட்டாசு தான் மதுவா..? கௌதம்..! பாவம் மச்சான் நீ..’ என நினைத்தவன் அப்போது தான் ஸ்வேதாவை கவனித்தான். அவளது ஆர்பாட்டமில்லாத அமைதி அவனைக் கவர அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கவனித்து விட்ட மது “ஹீம்கும் அப்புறம் அண்ணா..?” எனக் கூற

“அய்யோ..! பார்த்துட்டா போலயே… பாஸ்னு சொல்லிட்டு இருந்தவத் திடீர்னு அண்ணானு பொடி வச்சு பேசுறாளே..? அசைன்மென்ட் குடுத்த கௌதமுக்கே அந்த நிலைமை… இதுல இவ ப்ரெண்ட் சைட் அடிச்சத வேற பார்த்துட்டா என்ன வெடியை கொளுத்தி போட போறாளோ ஆண்டவா காப்பாத்து…” முணு முணுத்துக் கொண்டிருந்தான்.

பின்னர் ப்ராஜக்ட் பற்றிய தகவல்களை வாங்கிக் கொண்டாள் ஸ்வேதா ஆமாம் ஸ்வேதா மட்டும் தான் மது ஏதோ பார்க்-க்கு வந்திருப்பதைப் போலச் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ப்ராஜக்ட் பற்றிய விபரத்தை கேட்டுக் கொண்டிருக்கும் போது ராகுல் அடிக்கடி தன்னை உற்று கவனிப்பதை ஸ்வேதாவும் அறிந்தே இருந்தாள்.ஒரு வழியாக இருவரும் விடைப்பெற ராகுல் நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.

ராகுல் கௌதமிற்கு அழைத்து இங்கு நடந்தவைகளை விவரிக்கக் கௌதம் சிரிக்கத் தொடங்கினான். அதில் கடுப்பான ராகுல் “ஏன்டா..! புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து என்னைக் கிண்டல் பண்றதையே குலத் தொழிலா வச்சுருக்கீங்களா..? இருடா… எனக்கும் ஒரு ஆள் வரும்… அப்போ நாங்க ரெண்டு பேரும் உங்களைக் காலாய்க்காம விடமாட்டோம்… “எனச் சொல்ல

“ஹா ஹா ஹா…! சபதம் விடுறதை பார்த்தா உனக்கான ஆளை பார்த்துட்ட போலயே… யாருடா மச்சான் அது எனக்குத் தெரியாம..?”

“அது வந்து….” என இழுக்க

“ஹேய்…! என்னடா வந்து போயினு இழுத்துட்டு இருக்க…. இப்போ சொல்ல போறியா இல்லையா..?”

“ஸ்வேதா… எனக்கு அவளைப் பிடிச்சுருக்குடா…”

“எந்த ஸ்வேதா?”

“ஹே அதான்டா மது ப்ரெண்ட் ஸ்வேதா… “எனச் சொல்ல

“ஏன்டா…? அவ ப்ரெண்ட்னு தெரிஞ்சுமா இப்படி ஒரு முடிவு எடுத்துருக்க”

“ஹேய் மச்சான் என்னடா இப்படிச் சொல்ற” சோகமே வடிவாய் கேட்க

“ஹே சும்மா சொன்னேன்டா ஸ்வேதா ரொம்ப நல்ல பொண்ணுடா… உனக்கு அவ லைப் பார்ட்னரா வரதுல எனக்குச் சந்தோஷம் தான்டா… பட் அவ என்ன நினைக்குறானு தெரிஞ்சுக்கணும்…. இப்போ இதைப் பற்றி நீ எதுவும் பேச வேண்டாம் அவ டிஸ்டர்ப் ஆக வாய்ப்பு இருக்கு… ஸ்டடிஸ் முடிஞ்சதும் அவகிட்ட பேசு… “ என அறிவுரை வழங்க

“ஓகே டா நீ சொல்றதும் கரெக்ட் தான்… அதுக்குள்ள நான் எங்க வீட்டுலயும் பேசி பெர்மிஷன் வாங்கிடுறேன்…”

“ஆல் த பெஸ்ட் மச்சி….” எனப் போனை வைத்தான்.

ஒரு மாதம் கழித்துத் தாமரை தன் அண்ணனை தொடர்பு கொண்டு கௌதம்-மதியின் வரவேற்பு நிகழ்ச்சி குறித்துப் பேச அம்மாத இறுதியில் நாள் குறிக்கப்பட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன… ஜவுளிகள் எடுப்பது மண்டபம் பிடிப்பது, சமையல் ஆர்டர் வரவேற்பு பத்திரிக்கை கொடுப்பது என்று ஓடும் நதியென நாட்களும் விரைந்தோட வரவேற்பு நாளும் வந்தது… மது ஸ்வேதாவை மட்டும் அழைத்திருக்கக் கௌதம் ராகுலையும் அவனுடன் பணிபுரியும் சில நண்பர்களையும் அழைத்திருந்தான்.

ராகவன் குடும்பம் இரண்டு நாட்களுக்கு முன்னரே வந்திருக்க வெற்றிவேல் குடும்பமும், கிருஷ்ணா ஆச்சி, வேதா தாத்தாவும் வரவேற்பின் முதல் நாள் சென்னை வந்திறங்கினர்…உறவினர்களும் நண்பர்களும் நிரம்பி வழிந்து கொண்டிருந்த அந்த மண்டபம் அழகிய பூக்களாலும், அலங்கார விளக்குகளாலும் ஜொலித்துக் கொண்டிருந்தது.

கௌதம் மணமகனுக்கே உரிய கம்பீரமான அழகுடன் மேடையில் நின்று கொண்டிருக்க அப்போது கௌதமை கண்ட மதுவின் விழிகள் அவனது முகத்திலேயே நிலை பெற்று விட அவள் அங்கேயே நின்று கொண்டு சுற்றுபுறம் மறந்து இமைக்காமல் அவனை விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதி தன்னுடன் வராமல் இருப்பதை உணர்ந்த கவிதா “அண்ணி..! என்ன இங்கேயே ப்ரீஸ் ஆகி நின்னுட்டீங்க..? வாங்க ஸ்டேஜ்க்குப் போகலாம்…” அழைக்க,

“ச்ச் பட்டிகாட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த மாதிரி இப்படிப் பார்த்துட்டு நின்னுட்டு இருந்திருக்கோம்…” என அசடு வழிந்தவாறே கவியுடன் மேடை ஏறிக் கொண்டிருந்தாள்.

வானத்தில் உள்ள விண்மீன்கள் தோற்றுவிடுமோ என எண்ணும் வகையில் ஒரு தேவதை போல ஜொலித்துக் கொண்டிருந்தாள்… பார்ப்பவர் மனதை கொள்ளை அடிக்கும் அழகுடன் இருப்பவளை பார்க்க கௌதமிற்குக் கசக்குமா என்ன? தன் விழியால் அவளைப் படமெடுத்து தன் மனப் பெட்டகத்தில் ஒட்டி வைத்துக் கொண்டிருந்தது.

இங்குக் கௌதம் மதுவை காதல் பார்வை பார்த்துக் கொண்டிருக்க, வேறு நான்கு கண்களும் தங்கள் இணையை அவர்களுக்குத் தெரியாமல் காதல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் ஒன்று ராகுல்..! கடல் நீல வண்ண சல்வாரில் தனக்கே உரிய அமைதியான அழகில் மதுவின் அருகில் நின்று கொண்டிருந்த ஸ்வேதாவை பார்வையால் வருடிக் கொண்டிருந்தான்.

மற்றொன்று பிரசன்னா..! அழகிய பிங்க் நிறத்தில் கற்கள் பதிக்கப்பட்ட காக்ரா ஜோலியில் ரோஜா மொட்டு போல இருந்த கவிதாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைவரும் மணமக்களை வாழ்த்தி விடைப் பெற வீட்டினர் மட்டுமே எஞ்சியிருந்தனர்…. வேதா தாத்தாவும், கிருஷ்ணா ஆச்சியும் மேடையேற அவர்களிடம் கௌதமும், மதுவும் ஆசிர்வாதம் பெற்றனர்.

“எப்போதும் சந்தோஷமா எல்லா வளத்துடன் வாழ வேண்டும்…!” என வேதா வாழ்த்த கிருஷ்ணாவோ, “அடுத்த வருஷம் கொள்ளு பேரனோ, பேத்தியோ வந்திருக்கணும்…” எனச் சொல்ல

இதுவரை தனக்கும் கௌதமிற்கும் நடந்த திருமணத்தைக் குழந்தை என்ற அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காத மது கிருஷ்ணாவின் இந்த வாழ்த்தில் அவள் முகம் வெட்கத்தில் ரத்த நிறம் பூசிக்கொள்ள ஒரக்கண்ணால் கௌதமை பார்த்தாள்.

அவனின் முகமோ பளிச்சென்று மின்ன உதடுகளோ க்ளோசப் விளம்பரத்தில் வருவது போல் வசீகரப் புன்னகையை வீசிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மதுவின் மனம் அவன்பால் சாய்ந்தது.

நெருங்கி வருவாய் நெருங்கி வருவாய் நெருங்கிய வருவாயே…! என வழக்கம் போல் குறும்புத்தனம் தலை தூக்கி க்ளோசப் விளம்பர பாடலை முணு முணுக்க மனமோ இது இல்ல சுட்சுவேஷன் சாங் இப்போ போடுறேன் பாரு எனச் சன் மியூசிக்கில் போடுவது போல் பந்தா காட்டி பாடலை மனதில் ஒலிக்கவிட்டது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ

பூமி எதிர்பார்த்து மழை தூறல் விழுமோ

காதல் வந்தால் கால் விரல்கள் கோலமிடுமோ

கை நகத்தைப் பல் கடிக்க ஆசைப்படுமோ??

ஆம் காதல் யாருக்கு யாரிடத்தில் எப்போது வரும் என எவராலும் சொல்ல முடியாது. சில விஷயங்கள் சரி விகிதத்தில் நடந்தால் தான் காதல் வரும் என்பதற்குக் காதல் ஒன்றும் கெமிக்கல் ரியாக்ஷன் அல்லவே? ஒரு குடுவைக்குள் நடைபெறும் நிகழ்வோடு காதலை ஒப்பிட முடியாது. காதல் எனும் உணர்வு அதற்கெல்லாம் அப்பாற்பட்டது அதை உணரத்தான் அவகாசம் தேவைப்படுமே தவிர இவை நடந்தால் தான் காதல் வரும் என அதற்கு எந்த வரைமுறையும் இல்லை. நாம் ஒருவரை நேசிக்கிறோம் என்பதை விட நாமும் அவரால் நேசிக்கபடுகிறோம் என்பதை உணரும் போது தான் அந்தக் காதல் வாழ்வை இன்பத்தின் உச்சிக்கு இட்டுச் செல்லும். வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் ஆசிர்வாதத்தையும் வாழ்த்துக்களையும் கூறினர். சாப்பிட்டு முடிந்ததும் ஆளுக்கொரு புறமாய் அமர ராகுலும் கௌதமும் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தனர்.

“என்னடா இந்த வழி வழியுற சிஸ்டரை பார்த்து ஹா ஹா” எனச் சிரிக்க

“சிஸ்டரா இது எப்போதுல இருந்து..?”

“அதெல்லாம் அப்படித்தான்..! நீ முதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு”

“அப்படிலாம் ஒண்ணும் இல்லையே…”

”டேய்..! இவ்ளோ லவ் வச்சுக்கிட்டு ஏன்டா ஒண்ணும் இல்லாத மாதிரி உன்னை நீயே ஏமாத்திக்குற…? சிஸ்டர் கூட ப்ராஜக்ட் டைம்ல பழகுனத வச்சு சொல்றேன் அவங்ககிட்ட விளையாட்டுத்தனம் தான்டா அதிகமா இருக்கு… அன்னைக்கு உனக்கு வந்த பிரச்சனை கூட அப்படித் தான் நடந்திருக்கும்… அதை மறந்து மன்னிச்சு நீ ஏன் உன் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணக் கூடாது..?”

“டேய்..! எந்த ஒரு விளையாட்டுத்தனமும் மத்தவங்களைப் பாதிக்காத வரை தான்டா ரசிக்க முடியும்… அப்படி அது பாதிச்சா அந்தப் பாதிப்பு தான் பெருசா தெரியும்… எனக்கு அவளைப் பிடிச்சுருக்கு… அதை நான் மறுக்கலை அதே சமயம் அவ இன்னும் தான் பண்ணுன தப்பை உணரலையேனு கவலையா இருக்கு… என்னைக்கு அவ அதை உணருகிறாளோ அன்னைக்கு என் மனசுல இருக்கிறதை அவகிட்ட சொல்லுவேன்… அதுக்குப் பிறகு எல்லோரும் சந்தோஷப்படுற அளவுக்கு வாழ்வோம்…”

“அந்த நாள் சீக்கிரம் வரணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்… “நண்பனின் மனமறிந்தவனாய் கௌதமின் தோளை தட்டினான்.

Advertisement