Advertisement

நெஞ்சம் 8:

 

இரவு எட்டு மணியளவில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய துவாரகேஷ் இரட்டையரைப் போலத் தன்னை ஒட்டிக் கொண்டிருந்த பார்மல்ஸ் உடையைக் களைந்துவிட்டு இலகுவான எலுமிச்சை நிற வட்ட கழுத்துடைய டீசர்ட்டும் அதற்குப் பொருத்தமாய்ச் சீ ப்ளு நிற த்ரி போர்த் ஜீன்ஸும் அணிந்து கொண்டான்.

 

எப்போதும் தனக்குத் தேவையான உணவை அவனே வீட்டில் செய்து கொள்வான். பெரிதாக ஒன்றும் சமைக்கத் தெரியாவிட்டாலும் பேச்சுலர் சமையல் வகைகளில் ஓரளவு கை தேர்ந்தவனாகவே இருந்தான் துவாரகேஷ்.

 

ஆனால் இன்று ஏனோ சமைத்து சாப்பிடும் அளவிற்குப் பொறுமை இல்லாமல் போக அதுமட்டுமின்றி வேலை செய்த களைப்பும் கூட்டு சேர்ந்து கொள்ள வெளியில் சென்று இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என எண்ணியவன் அலைப்பேசியை எடுத்துப் பேன்ட் பாக்கெட்டில் தள்ளி விட்டுவிட்டுப் பைக் கீயை எடுத்தவன் கதவை பூட்டி விட்டு கிளம்பி விட்டான்.

 

அவன் தங்கியிருக்கும் தெருவில் இருந்து இரண்டாவதாக இருந்த தெருவின் முனையில் ஒரு நடுத்தரமான மெஸ் ஒன்று உண்டு. வீட்டு சாப்பாட்டின் மணத்தையும், ருசியையும் ஓரளவிற்கு ஈடு கட்டுவது போலான ருசியில் இருக்கும்.

 

இரண்டு சப்பாத்தியை ஆர்டர் செய்து வாங்கி விட்டு அங்கிருந்த மேஜை ஒன்றில் சென்று அமர்ந்து உண்ண தொடங்கிய சில நொடிகளில் அலைப்பேசி ஒலிக்க ஆரம்பித்தது… அவனது அன்னை கீதா தான் அழைத்திருந்தார்.

 

சுந்தரம் – கீதாவிற்கு இரண்டு பிள்ளைகள்… மூத்தவன் துவாரகேஷ்.. இளையவள் வர்ஷினி. சுந்தரம் போக்குவரத்துத் துறையில் ஓட்டுனராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். மனைவி கீதா குடும்பத் தலைவி.. பெயரில் மட்டுமல்ல வீட்டில் எடுக்கும் முடிவுகளுக்கும் தலைவி அவரே… வர்ஷினிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்திருந்தது. ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இப்போது அவர்களது ஆசையெல்லாம் மகனுக்கும் நல்ல இடத்தில் மணமுடித்துக் குடும்பமாய் வாழ்வதைக் காண வேண்டும் என்பது மட்டுமே..

 

அழைப்பை ஏற்றவன் , ” சொல்லும்மா..?” என்றதும்,

 

“ஆபிஸ்ல இருந்து வந்துட்டியா..? என்ன பண்ற” என்றவரிடம்,

 

“கொஞ்ச நேரம் முன்னாடி தான்மா வந்தேன்.. இப்போ சாப்பிடலாம்னு மெஸ்க்கு வந்திருக்கேன்”

 

“அப்படியா.. நீ சாப்பிடு .. வீட்டுக்குப் போனதும் அம்மா அப்புறம் கூப்பிடவா..?”

 

“இல்ல நீங்க பேசுங்க… சாப்பிட்டு முடிக்கப் போறேன்.. கொஞ்சம் ஷாப்பிங்க் இருக்கு முடிச்சுட்டு வீட்டுக்கு போக டைம் ஆகிடும்” என்று சொல்லவும்,

 

“நம்ம அப்பாவோட ப்ரெண்ட் சதாசிவம் அங்கிள் இருக்கார்ல அவரோட தம்பி பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்களாம்.. அப்போ அங்கிள் உன்னைப் பத்தி சொல்லியிருப்பார் போல… அவங்க கையோட போட்டோவும் ஜாதகமும் ஒரு காபி சதாசிவம் அங்கிள் கிட்ட குடுத்து விட்டிருக்காங்க.. பொண்ணும் பார்க்க நல்ல லட்சணமா இருக்கா.. நீ என்னப்பா சொல்ற” என்று சொன்னதும்,

 

“அம்மா…! இப்போ எனக்குக் கல்யாணம் பண்ற ஐடியா இல்லை.. கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பார்க்கலாம்” என்று மறுத்து பேச,

 

“இல்லடா… குடும்பமும் நல்ல மாதிரியா இருக்காங்க… பொண்ணும் பார்க்க அம்சமா இருக்கா… இன்னும் என்ன கொஞ்ச நாள் கொஞ்ச நாளுன்னுட்டு இருக்க” கெஞ்சலில் ஆரம்பித்தவர் முடிக்கையில் கோபம் கலந்த சலிப்பில் சொல்ல,

 

“அதான் சொல்றேன்ல இப்போ எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லனு… இன்னும் ஒன் வீக்ல ஆன்சைட் போற மாதிரி இருக்கும்.. நாளைக்கு மீட்டிங்க்ல கன்பாஃர்ம் ஆகிடும்… போயிட்டு வந்ததுக்குப் பிறகு எதுனாலும் பேசிக்கலாம்..”

 

“அப்போ ஆறு மாதம் கழிச்சு பேசுவோம்னு சொல்லி வைக்கவா…?” என்றவரிடம்,

 

“அய்யோ..! அதெல்லாம் நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. இப்போதைக்கு அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லனு மட்டும் சொல்லுங்க போதும்..!”

 

“அதது கால காலத்துல நடந்தா தானே நல்லது… அதைச் சொன்னா இப்போ உள்ள பிள்ளைங்க எது கேட்குதுங்க” எனத் தன் புலம்பலைத் துவங்க,

 

“சரி அதை விடுங்க.. அப்பா எங்கே..? சத்தத்தையே காணோம்” என்று கேட்டு அவரைத் திசை திருப்ப,

 

“ரிடயர்ட் ஆனதுல இருந்து பத்து மணிக்கு முன்னாடி என்னைக்கு உங்கப்பா வீட்டுக்கு வந்திருக்காரு…பக்கத்துல இருக்கப் பார்க்ல அவர் கேங்கோட நாட்டோட பொருளாதாரத்தை எப்படித் தூக்கி நிறுத்தலாம்னு பேசிட்டு இருப்பாரு” இருந்த கடுப்பெல்லாம் கணவன் மேல் திரும்பி விட,

 

“ஹப்பா மீ எஸ்ஸ்ஸ்” என மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்”சரி ம்மா…நாளைக்குப் பேசுறேன்” என்று வைத்து விட, “சரிடா ..! பார்த்து மெதுவா வண்டியில போ” என்றதோடு முடித்துக் கொண்டார்.

 

அடுத்த நாள் கம்பெனி மீட்டிங்கில் ஆன்சைட் செல்லும் குழுவில் துவாரகேஷ் செல்வதும் முடிவு செய்யப்பட்டு விட, அன்று மாலை வீட்டிற்கு அழைத்து விஷயத்தைச் சொன்னவன்… நிகழினிக்கும் தெரிவிக்க வேண்டி போன் செய்ய,

 

அப்போது தான் ” பொண்ணு பார்க்க வந்திருக்காங்க DK..! நான் ஃப்ரீ ஆகிட்டு கூப்பிடுறேன்” என்றதும், ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியாமல் துடித்துப் போனான் துவாரகேஷ்.

 

மணித்துளிகள் கடந்திருந்தும் வேறு எந்தச் சிந்தனையுமின்றி, ஏதோ ஒன்று மனதை பிசையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான். தனக்கு நிகழினியை பிடிக்கும் என்பதில் அவனுக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் வேறொருவருக்குச் சொந்தமாவதை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கான பிடித்தம் அவள் மேல் என்பதை இப்போது தான் முதல் முறையாக உணர்கிறான்.

 

சொல்லப்போனால் இது இரண்டாவது முறை என்று இப்போது புரிகிறது அவனுக்கு.. முதல் முறை இந்த மாதிரியான உணர்வு தோன்றுகையில் இதனால் தான் அப்படியான உணர்வு எழுந்தது என்பது அவனது கருத்தில் இல்லை..இப்போது ஒன்றையொன்று முடிச்சிட்டுப் பார்க்கையில் குழப்ப ரேகைகள் விலகி மெல்ல காரணக் காரியம் புலப்படத் தொடங்கியிருந்தது துவாரகேஷிற்கு.

 

அன்றொரு நாள் நிகழினியும், துவாரகேஷூம் ஹோட்டலில் அமர்ந்து உணவு ஆர்டர் செய்து கொண்டிருந்த நேரம் ” ஹாய் நிகி…!” என்று குரல் கொடுத்தபடி அவர்களை நோக்கி வந்தான் ஆனந்த்.

 

“ஹே ..! ஆனந்த் … வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்… எப்படி இருக்கீங்க??” அவனை அங்குக் கண்டதில் ஏற்பட்ட உண்மையான சந்தோஷத்தில் அக்கறையாய் கேட்ட நிகழினியை நினைக்கும் போது அவன் எப்படி உணர்ந்தான் என்பதை வார்த்தையில் விவரித்து விட முடியாது.

 

“நானும் உங்களைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல நிகி… நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்க,

 

“ஐம் ஃபைன் ஆனந்த்… மீட் மிஸ்டர். துவாரகேஷ் ….துவாரகேஷ் ஹி இஸ் மிஸ்டர். ஆனந்த்” என இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்க, ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொள்ள,

 

“கம் லெட் ஜாயின் வித் அஸ் ” என்று நிகழினி அழைத்ததும், மறுப்பேதும் இல்லாமல் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

 

அதற்குள் ஆர்டர் செய்யப்பட்டிருந்த உணவும் வந்துவிடச் சாப்பிட்டு முடித்ததும் டெஸர்ட் ஒன்றை மூவருக்கும் சொல்லி விட, தாய்மை விவசாயக் குழுமத்தில் இருந்து நிகழினிக்கு அழைப்பு வரவும்,

 

“ஒரு நிமிஷம் நீங்க பேசுங்க” என்றவாறு சற்று தள்ளி சென்று விட, துவாரகேஷூம், ஆனந்தும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.முதலில் மௌனத்தை உடைத்தது ஆனந் தான்.

 

“நிகி மேம் கூட வொர்க் பண்றீங்களா…?” என்று கேட்டதும்,

 

“இல்ல… நான் சென்னையில நெட்பிக்ஸ்ல பி.எம்மா இருக்கேன்.. நிகியை இப்போ ஒரு நாலு மாதமா தெரியும்.. வெரி குட் ப்ரெண்ட் ஆஃப் மைன். ஒரு காமன் ப்ரெண்ட் மேரேஜ்ல தான் மீட் பண்ணோம்”

 

“ஓஒ தட்ஸ் நைஸ்… யா ஷி இஸ் டாம் குட்..நான் இங்க சிபிடில ஹைடெக் சொலியுஷன்ல டீம் லீட்டா இருக்கேன்” என்று தன்னைப் பற்றிச் சிறிய அறிமுகம் செய்து விட,

 

“நீங்க காலேஜ் ப்ரெண்ட்டா..?” என்று துவாரகேஷ் கேட்டதும்,

 

“நான் நிகி ப்ரெண்ட் ஆன கதை ரொம்ப வித்தியாசமானது..” எனப் புன் முறுவல் செய்தவன் மேலும் அவனே தொடர்ந்தான்.

 

“எனக்கும் நிகிக்கும் ஒன் இயர் ஃபிபோர் மேரேஜ் பிக்ஸ் ஆகியிருந்தது” எனச் சொல்லவும் துவாரகேஷிற்கோ இது புதிய செய்தி அதிர்ச்சியானதும் கூட . . .

 

ஆனந்த் நடந்தவற்றைக் கூற, “ஷி இஸ் டூ போல்ட். அன்னைக்கு இருந்த கலவரத்துல வேற யாராச்சும் இருந்திருந்தா அழுது கரைஞ்சு போயிருப்பாங்க.. நான் ரெகவர் ஆகி வந்ததும் நிகிகிட்ட மன்னிப்பு கேட்குறதுக்காக நேர்ல போய் மீட் பண்ணேன்…

 

அப்போதான் இஷ்டப்படி இருக்கிறதுக்குப் பேர் சுதந்திரம் இல்ல.. நம்மளை யார் கவனிக்காம விட்டாலும் நமக்குனு ஒரு ஷெல்ஃப் டிகினிட்டி வேணும்… இனிமேலாச்சும் உங்களை நம்பி வர்றவங்களையும் நம்பி இருக்குறவங்களையும் ஹேப்பியா வச்சுக்கணும்னு உண்மையாவே ஆசைப்பட்டீங்கன்னா இந்த அட்ரெஸ்க்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோங்கனு சொல்லி அட்ரெஸ் கொடுத்தாங்க…

 

உங்களுக்கு எந்தவித கில்டி கான்ஷியஷூம் வேண்டாம்…ப்ரெண்ட்டா நினைச்சு உங்களுக்கு என்ன ஹெல்ப்னாலும் கேளுங்க செய்றேன்னு சொல்லி அனுப்பி வச்சாங்க… அவங்க என் மேல கோபப்படுவாங்க … திட்டுவாங்கனு எதிர்பார்த்துக் கொஞ்சம் தயங்கி தான் பார்க்க போனேன்..

 

நான் நினைச்சதுக்கு நேர் மாறா எல்லாம் நடந்துச்சு.. அவ்வளோ மெச்சூர்டா ஹேன்டில் பண்ணாங்க .. ஷி சிம்ப்ளி சூப்பர்ப் .. ” என்று கூறிய வண்ணம் தூரத்தில் நின்று கொண்டிருந்த நிகழினியை பார்த்தவனின் கண்கள் கனிவை காட்டியதென்றால்,

 

இது வரை ஆனந்த் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த துவாரகேஷிற்கோ “என்ன பொண்ணுடா … இப்படியும் ஒருத்தியால பிகேவ் பண்ண முடியுமா..?” எனப் பிரமிப்போடு பார்த்திருந்தான் .

 

“என்ன ரெண்டு பேரும் மிங்கிள் ஆகிட்டீங்க போல.!” எனப் புன்னகைத்தபடி வந்தமர்ந்த நிகி ஆனந்திடம்,

 

“அப்புறம் லைஃப்லா எப்படிப் போகுது..?” என்று வினவ,

 

“நல்லா போகுது… நெக்ஸ்ட் வீக் மேரேஜ் டேட் பிக்ஸ் பண்றதா இருக்காங்க… மாமா பொண்ணு தான்… ஆக்ச்சுவலி மாமா வீட்டுல முன்னாடியே கேட்டிருந்தாங்க… கொஞ்சம் வசதி குறைவுன்றதால அம்மா பிடி கொடுத்து எதும் பேசவே இல்லை..இப்போ இப்படி நடந்த பிறகு எல்லாரும் பேசி சரிகட்டி ஒத்துக்க வச்சுருக்காங்க” என்று சொன்னான்.

 

“எல்லாரும் சொல்றது இருக்கட்டும்.. உங்களுக்கு விருப்பம் தானே..?”

 

“ம்ம் இஷ்டம் தான்… சின்ன வயசிலருந்தே எனக்கு அவளைப் பிடிக்கும்..” என்றவனின் இதழ்களில் தேங்கி நின்ற புன்னகையே அவன் விருப்பத்தைச் சொல்லி விட, “ஹா ஹா… நல்லா ப்ளஷ் ஆகுறீங்க.. எனிவே மை ஹார்ட்டி விஸ்ஷஸ்” என்று வாழ்த்தினாள்.

 

இவர்களின் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த துவாரகேஷ் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், உள்ளுக்குள்ளோ வாய் பிளந்து வியப்பின் உச்சியில் நின்று கொண்டிருந்தவனின் மனமோ நிகழினியின் புறம் மொத்தமாய்ச் சரிந்திருந்தது.

 

அன்றைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனை வாட்ஸப்பில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒசை நிகழ்வுக்கு இழுத்து வர, நிகழினியிடம் இருந்து தான் வந்திருந்தது.

 

“சாரி DK..! லேட் நைட் ஆகிட்டதால கால் பண்ணலை..ஈவ்னிங்க் பக்கத்து வீட்டு பொண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருந்தாங்க… ஹெல்ப்க்கு என்னைக் கூப்பிட்டிருந்தாங்க.. சோ கொஞ்சம் பிஸியாகிட்டேன்..சாப்பிட்டாச்சா?” என்று வந்திருக்க,

 

அதை படித்ததும் துவாரகேஷ் என்ன மாதிரி உணர்ந்தான் என்பதை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது… கைகள் அதன் போக்கில் “ம்ம் சாப்பிட்டேன்… ஃபீலிங்க் டயர்ட்.. டெக் ஸ்ட் யூ லேட்டர்.. ப்ளீஸ் டேன்ட் மிஸ்டேக்.. குட் நைட்” என்று டைப் செய்து அனுப்பி விட

 

“ஹே..! சில்… நோ ப்ராப்ஸ் ..டே கேர் ..குட் நைட்” என்றவள் ஆஃப் லைன் சென்றிருந்தாள்.

****************************************

 

அடுத்த நாள் நிகி வேலையாகத் தோட்டத்தில் இருக்கையில் துவாரகேஷ் அவளை அழைத்தான்.

 

எடுத்த வாக்கிலேயே, ” எங்க இருக்க நிகி…?” என்று கேட்க,

 

“ஏன் Dk..? தோட்டத்துல தான் இருக்கேன்.. என்னாச்சு வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்கு?” என்றவளிடம்,

 

“நான் ஊர்ல தான் இருக்கேன்… உன்னைப் பார்த்துக் கொஞ்சம் பேசணும்..” என்றதும்,

 

“அப்படியா…? இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போய்டுவேன்… வாங்க ” என்று சொல்ல,

 

“வீட்டுக்கு வேண்டாம் நிகி… நீ அங்கேயே இரு… நான் டூவீலர்ல தான் வந்திருக்கேன்.. நேரா அங்கேயே வர்றேன்” என்றவன் அவளது பதிலை எதிர்பாராது கட் செய்துவிட்டான்.

 

என்னாச்சு..? குரல்ல ஒரு பதட்டம் தெரிஞ்சுதே … என்னவா இருக்கும்?? என நிகழினி சிந்தித்த வண்ணம் இருக்க அடுத்த ஐந்தாவது நிமிடம் அவள் முன் பிரசன்னமாகியிருந்தான் துவாரகேஷ்.

 

சொல்லி விட வேண்டும் என்ற வேகத்தில் முடுக்கிவிடப்பட்ட பந்தாய் சீறிப்பாய்ந்து வந்தவனுக்கு, அவளை நேராய் கண்ட பின் ஒரு வித தயக்கம் சூழ்ந்து கொண்டது.

 

அதை வெளிக்காட்டாமல் பைக்கை நிறுத்தியவன் கையில் பூங்கொத்தை ஏந்திக் கொண்டு, ஒரு கையைப் பேன்ட் பாக்கெட்டில் நுழைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தவனை ஏதோ அதிசயம் போல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிகழினி.

 

அவளின் வியப்பிற்குக் காரணம்… போனில் பேசும் போது இருந்த பதட்டத்திற்கும் நேரில் அவன் முகம் காட்டும் பாவனைகளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் …

 

அவளருகே வந்தவன் “ஹாய் நிகி!” என்றவனின் புன்னகையில் என்றுமில்லாத வசீகரம் இருப்பதாகத் தோன்றியது நிகழினிக்கு..

 

“ஹாய் DK! ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க..?? திடீர் விசிட் வேற… என்ன விஷயம்?” என்று கேட்க,

 

“இன்னும் ஃபோர் டேஸ்ல ப்ராஜெக்ட்க்காக ஆன்சைட் போறேன்… சிக்ஸ் மன்த் கழிச்சு தான் வருவேன்” என்றதும்,

 

“வாவ்வ்வ்வ்… கங்கிராட்ஸ்” என்றவளிடம்,

 

“தேங்க்ஸ்..” என்றவன் அவளிடம் கையில் இருந்த பூங்கொத்தை நீட்ட,

 

“நான் தான் உங்களுக்கு விஷ் பண்ணி பொக்கே கொடுக்கணும் DK! எனக்கெதுக்கு?” என்றவளிடம்,

 

“ஃபர்ஸ்ட் வாங்கிக்கோ… என்ன விஷயம்னு அப்புறம் சொல்றேன்” என்று சொன்னதும், மறுப்பேதும் இல்லாமல் வாங்கிக் கொண்டவளிடம்,

 

“ஐ லவ் யூ நிகி…!“ பட்டென்று அவள் விழிகளை நேராய் நோக்கி சொல்லியே விட்டிருந்தான்.

Advertisement