Advertisement

நெஞ்சம் 7:

 

சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் காலை ஒன்பது மணி அளவில் கோவையை வந்தடைய, கீழிறங்கினாள் நிகழினி… அவளுடைய ஊருக்கு செல்ல பஸ் பிடித்து தான் செல்ல வேண்டும்… தந்தைக்கு அழைத்துக் கோவை வந்து விட்டதைச் சொல்லி விட்டு ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தாள். பஸ் ஸ்டாண்டில் மகளின் வரவை எதிர்பார்த்து கொண்டிருந்தவரை அரை மணி நேரம் காத்திருக்க வைத்து விட்டு வந்து சேர்ந்தாள் நிகழினி.

 

“என்னடாம்மா…! அப்போவே கோயம்புத்தூர் வந்து சேர்ந்துட்டேன்னு சொன்ன.. இவ்வளோ லேட் ஆகிடுச்சு” என்று கேட்டுக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய,

 

“வந்து ரொம்ப நேரம் ஆச்சாப்பா… அசோலா தீர்ந்து போச்சு.. அதான் அக்ரிகல்சர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வந்தேன்.. நீங்க அழைச்சுட்டு போக வர்றேன்னு சொல்லவே இல்லை.. சொல்லியிருந்தா இன்பாஃர்ம் பண்ணியிருப்பேன்” என்றவாறே வண்டியின் பின்னால் அமர்ந்து கொள்ள,

 

“அதானல என்னடா..?? அப்பா இப்போ ஃப்ரீயா தானே இருக்கேன்… எனக்கும் நேரம் போகணும்ல” என்றவர் வண்டியை வீடு நோக்கி செலுத்த , நிகியோ மடை திறந்த வெள்ளமாய் மூன்று நாட்கள் நடந்த கதையைச் சொல்ல, சந்திரனோ ஸ்வாரசியமாகக் கேட்டுக் கொண்டே வந்தார்.

 

வீட்டின் உள்ளே நுழைந்தவுடனேயே, “அம்மா…. நான் வந்துட்டேன்.. எங்க இருக்கீங்க..” என்று பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தையின் குதுகலத்தோடு சத்தமிட, சந்திரனோ மகளிடம் அவ்வப்போது மட்டுமே வெளிப்படும் மழலைத் தனத்தை ரசித்துப் புன்னகைத்தபடி அவளின் ட்ராவல் பேக்கை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

 

மகளின் வரவை வண்டி சத்தம் தெருமுனையில் கேட்கும் போதே அறிந்து கொண்ட சாரதா, அவளுக்கெனத் தாயாரித்த காபியை எடுத்துக் கொண்டு சமயலறையை விட்டு வெளிய வர முற்படுகையில் மகளின் அறிவிப்பை கண்டு இதழ் புன்னகையில் விரிந்தது.

 

வெளியே வந்தவர் தன்னை எதிர் கொண்ட மகளிடம், “இங்க இருக்கச் சென்னை போயிட்டு வந்ததுக்கு இப்படி அலப்பறையாடி..ஹ்ம்ம் இந்தா களைச்சுப் போய் வந்திருப்ப காபியை குடி” என அவள் கையில் கோப்பையைத் திணிக்க,

 

“அதை நீ சொல்றியாம்மா..?? நான் போகும் போது உனக்குச் சென்னை அவ்வளோ தூரமா இருந்துச்சு… இப்போ வீட்டுக்கு வந்ததும் இங்க இருக்கச் சென்னையா…? பார்த்தீங்களாப்பா அம்மா பண்ற லொல்ளை” என அன்னையைச் சீண்ட,

 

“அதெல்லாம் அப்படித் தான்… நீயும் அம்மாவா ஆகும் போது என்னோட தவிப்பு புரியும்” என்று சொன்னதும்,

 

அவருக்குப் பதில் கொடுக்கும் நோக்கில் யோசியாது “நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்” என வாய்விட்டவள் காபிக் கோப்பைக்குள் மூழ்கி விட, நேற்று நடந்ததையே மனதில் வைத்து புழுங்கிக் கொண்டிருந்தவர் இப்போது மகளின் பேச்சில் பொங்கி வரத் துடித்த அழுகையைக் கட்டுக்குள் கொண்டு வர முயல,

 

மனைவியின் நிலையைப் புரிந்து கொண்ட சந்திரன், ” சாரும்மா…! என்னோட பேங்க் பாஸ் புக்கை வந்து கொஞ்சம் தேடிக் கொடு” என்று அறைக்குள் அழைத்து விட,

 

கணவனின் பின்னே சென்று அறைக்குள் திரும்பியவரிடம் , “நேத்து உங்கிட்டே என்ன சொன்னேன் சாரும்மா?? இப்படி நிகி முன்னாடி உடையாதேனு சொன்னேனா இல்லையா… ” என்று கேட்க,

 

“நானும் முடிஞ்ச அளவு அப்படி இருக்கணும்னு தான் முயற்சி பண்றேனுங்க மாமா… ஆனா நிகி சொன்னதைக் கேட்டீங்க தானுங்களே… அதைக் கேட்டும் எப்படிங்க மாமா நான் அடக்கிட்டு நிற்க முடியும் … என்னால முடியலைங்க மாமா” என்று சத்தம் வெளியே கேட்காத வண்ணம் கேவ,

 

கலங்கி நின்ற மனைவியவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவர்,

“த்ச்சு அழாதடா… நீ இப்படிக் கலங்கிப் போய் நிற்குற அளவுக்கு ஒண்ணும் ஆகிடலை… நான் முன்னாடியே சொன்னதைத் தான் இப்போவும் சொல்றேன் நேரம் வந்தா எதுவும் நிற்காது” என்று சொல்ல, அப்போதும் சமாதனம் ஆகாமல் தழு தழுத்தவரை கண்ட சந்திரன்,

 

“இப்போ அழுது எதை நிரூபிக்க நினைக்குற சாரு…? மத்தவங்க சொல்ற மாதிரி தப்பு நம்ம பொண்ணு மேல தான்னா…? “என்ற பிரம்மாஸ்திரம் இலக்கை சரியாய் குறி வைத்து அடித்திருக்க,

 

“என்ன உளர்றீங்க மாமா… எவனோ குடிச்சு கூத்தடிச்சதுக்கு என் பொண்ணைத் தப்பா சொன்னா அது சரினு ஆகிடுமா…? நரம்பில்லாத நாக்கு நாலு விதமா பேசினா அதெல்லாம் சத்திய வாக்காகிடுமா..” என்று பொரிந்தவரைக் கண்ட சந்திரனின் இதழ்கள் சிறு புன்னகையில் வெடித்துச் சிதற,

 

“இவ்வளோ தெளிவா யோசிக்குற தானே..? அப்புறம் எதுக்கு இந்த அழுகை… முதல்ல கண்ணைத் துடை”

 

“நான் என்னனுங்க பண்றது… நிகியை பத்தி நினைக்கும் போதெல்லாம் மூளை வேலை நிறுத்தம் செஞ்சு மனது கிடந்து அடிச்சுக்கிடுதுங்க மாமா” என்று சொல்ல,

 

மனைவியவளின் கலைந்த முடிக்கற்றையைக் காதோரமாய் ஒதுக்கி தள்ளியபடி, “எல்லாம் நல்லதா நடக்கும்.. கவலையை விடு… நீ இப்படி வேதனைப்பட்டது தெரிஞ்சுது… நிகி நேரா ராமசாமி மாமா வீட்டுக்கே போய் அவரை வாங்கு வாங்குனு வாங்கிடுவா” என்றவரின் குரலில் மகளின் துணிச்சலை நினைத்து அனிச்சையாகப் பெருமிதமும் , கீற்றான புன்னகையும் உற்பத்தியாக..

 

“ஆமா…! கழுதை செஞ்சாலும் செஞ்சிடுவா… பையன் இல்லாத குறைக்கு அசல் பையனாவே வளர்ந்திருக்கா” என வழக்கம் போல் மகளைச் சாட, அதிலிருந்தே இயல்புக்கு திரும்பியதை சந்திரன் உணர்ந்து கொண்டார்.

 

எப்போதும் மனைவி இப்படிச் சொல்கையில் திருப்பிச் சொல்லும் வசனத்தைக் கூடச் சொல்லாது இந்த அளவிற்கு மனைவி தன்னைத் தேற்றிக் கொண்டதே போதும் என்ற எண்ணத்தில் அமைதியாய் நின்றிருந்தார்.

 

“அம்மா…!” என்று குரல் கொடுத்தபடி அறைக்குள் வந்த நிகழினி, ” நான் கழனி வரைக்கும் போய்ட்டு வர்றேன்ம்மா” எனக் கூறி புறப்படத் தயாராக,

 

“வந்ததும் வராததுமா எங்க ஓடுற… குளிச்சிட்டு வா .. சாப்பிட்டுட்டு அப்புறமா போய்க்கலாம்.. கொஞ்ச லேட்டான போனா ஒண்ணும் ஓடிப் போகாது” என்று கடிந்து கொள்ள,

 

“கொஞ்சம் வேலை இருக்கும்மா… முடிச்சுட்டு வந்து குளிச்சுட்டு நல்லா தூங்கணும்…புது இடம்னால மூன்று நாளா சரியா தூக்கமே இல்லை…” என்றவள் தன்னை முறைத்தபடி நின்றிருந்த அன்னையின் கன்னம் கிள்ளி கொஞ்சியவள்,

 

“ஜஸ்ட் ஒரு மணி நேர வேலை தான்மா .. சீக்கிரம் வந்துடுறேன்.. அப்பா நீங்க வெளிய எங்கேயும் போறீங்களா..?? வண்டியை நான் எடுத்துட்டு போகவா?” என்று கேட்கவும்,

 

“இல்லடா… நான் எங்கேயும் போகலை.. நீ எடுத்துட்டுப் போ” என்று விட,

 

“ஒகேப்பா…! நான் வர்றேன்…” என்றவள் வெஸ்பாவை முடுக்கி விட்டுத் தோட்டம் நோக்கி சிட்டாய் பறந்திருந்தாள்.

 

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முத்து, நிகழினியை கண்டதும் , ” வாங்க பாப்பா…! எப்போ வந்தீங்க…? போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுங்களா..? “என்று வினவ,

 

“காலையில் தான் வந்தேன் முத்தண்ணா..! எல்லாம் சூப்பரா போச்சு” என்று கூற,

 

“இப்போ தான் வந்தீங்களா.. அப்போ நல்லா ஓய்வெடுத்துப்போட்டு சாவகசமா வரலாமில்லிங்க பாப்பா..! இங்க எல்லாம் பார்த்துக்கத் தான் நான் இருக்கேனுங்களே..? நான் பார்த்துக்க மாட்டேனுங்களா..?” என்று சொன்னதும்,

 

“இந்த மூணு நாளும் நீங்க தானுங்களே முத்தண்ணா பார்த்துக்கீட்டிங்க .. நான் அதுக்கு வரலை.. ஊருக்கு போறப்போவே மாடுகளுக்கு, கோழிக்கெல்லாம் தீவனம் கம்மியா தானே இருந்துச்சு.. அதான் வேலையைக் கையோட முடிச்சுட்டு போகலாம்னு வந்தேன்… நான் வாங்க சொன்ன தார்ப்பாய் எல்லாம் வாங்கி வச்சுருக்கீங்க தானே?” என்று கேட்கவும்,

 

“அதெல்லாம் நீங்க சொன்ன அடுத்த நாளே வாங்கி வச்சுட்டேனுங்க பாப்பா..! இருங்க நான் போய் அதை எடுத்துட்டு வர்றேன்” என்றவர் பம்ப்செட் அருகில் இருந்த சிறிய அறைக்குள் சென்று விட, நிகழினியோ அதற்குள் தேவையான மற்றவைகளைத் தயார் செய்யத் தொடங்கினாள்.

 

தென்னை மரத்தின் நிழல் விழும் பகுதியை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் முப்பதுக்கு இருபது என்ற கணக்கில் தன்னிடமிருந்த இயந்திரத்தின் உதவியால் செவ்வக வடிவில் நிலத்தைச் சமன் செய்து அதைச் சுற்றிலும் செங்கற்களை அடுக்கி வைத்து பாத்தி போல் கட்டிவைத்தாள்.

 

முத்து எடுத்து வந்திருந்த தார்ப்பாயை விரித்து அதன் மேல் ஒரு சுற்றுச் செங்கற்களை அடுக்கி நழுவி விடாமல் இருக்கப் பாதுகாப்புச் செய்து விட்டு, ஒரு விரல் அளவிற்குத் தண்ணீர் குளம் கட்ட தேவையான நீரை முத்து அந்தப் பெட்டில் நிரப்பிக் கொண்டிருக்க,

 

இடைப்பட்ட சமயத்தில் ஒரு வாளியில் இரண்டு நாட்களாய் சேகரித்து வைத்திருந்த மாட்டுச் சாணம், போர் மண் இரண்டையும் ஒரு பெரிய தண்ணீர் கால்வாசி நிரப்பப்பட்ட பக்கெட்டில் கொட்டி கைகளால் நன்றாகக் கரைத்து விட்டாள்.

 

நாங்கு கிலோ செம்மண்ணைச் சிறு கல் கூட இல்லாமல் சலித்துத் தயார் செய்த பெட்டில் தூவி, அதோடு கரைத்து வைத்திருந்த கரைசலை ஊற்றி ஒரு முறை தரவாகக் கலந்தாள்.

 

பின் வாங்கி வந்திருந்த அசோலா விதைகளை அந்த நீர்ப்படுகையில் தூவி மீண்டும் ஒரு முறை கலக்கி விட, அதற்குள் முத்து நாலா புறமும் சிறு கம்பை ஊன்றி பச்சை நிற வலையை அந்த நீர்ப் படுகைக்கு மேலே டென்ட் அமைப்பது போல் செய்து இழுத்து கட்டி விட்டிருந்தார்.

 

அசோலா எனப்படுவது பெரணி வகையைச் சார்ந்த ஒரு நீர் வாழ்த் தாவரம். இது கம்மல் செடி என்றும் ஊர்ப்பக்கங்களில் பரவலாகச் சொல்லப்படும் கால் நடைகளுக்கான புரோட்டீன் நிறைந்த அடர் தீவனம். தவிடு, புண்ணாக்கின் விலையைக் காட்டிலும் இதை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு மிகச் சொற்பமே..! நிகழினி அமைத்திருக்கும் இந்தப் படுகையில் நாளொன்றுக்கு ஏழு முதல் எட்டு கிலோ வரை தீவனம் கிடைக்கும். ஆடு, மாடுகளுக்கு மட்டுமின்றிக் கோழித் தீவனமாகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்… அவ்வாறு தரும் போது சற்று நீர் விட்டு அலசிய பின் தான் கொடுக்க வேண்டும்.

 

ஒரு வாறாக வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேருகையில் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

 

இப்படியே நாளொரு பொழுதும், பொழுதொரு வேலையுமாய் நாட்கள் ஓடி விட, முழுதாய் மூன்று மாதங்களைக் கால நாட்காட்டி ஒரு நொடியில் கடந்திருந்தது.. இந்த மூன்று மாத கால இடைவெளியில் துவாரகேஷிற்கும், நிகழினிக்கும் இடையே நட்பு அடிப்படையிலான ஒரு வித நெருக்கம் ஏற்ப்பட்டிருந்தது. சுய விருப்பங்கள் பற்றிய பகிர்வுகள், சில நேரங்களில் சூடான விவாதங்களும், கருத்து மோதல்களும் அதன் காரணமாய் எழும் சண்டைகளும், அதற்கான சமாதானங்களும் எனச் சென்று கொண்டிருந்தது.

 

காலை வணக்கத்தோடு ஆரம்பிக்கும் நாளானது அன்றைய பொழுதின் சுவாரசிய சம்பவங்களின் பகிர்தலோடு இரவு வணக்கத்தோடு ஒவ்வொரு நாளும் முடியும். இந்த ஒரு வாரமாக இருவரின் நேரத்தையும் அவரவர் வேலைகள் மொத்தமாய் முழுங்கிக் கொண்டிருக்க, பேசிக் கொள்ள நேரம் அமையவே இல்லை.

 

காலையில் வழக்கம் போலக் கிளம்பி தன்னுடைய ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனிக்கு சென்றவள் அங்கிருந்த வேலைகளைப் பார்க்க தொடங்கி ஒரு மணி நேரம் கழித்து அவளது அலைப்பேசி ஒலித்து அவள் கவனத்தைத் தன் புறம் திருப்பியிருந்தது.

 

எடுத்துப் பார்க்க துவாரகேஷ் தான் அழைத்திருந்தான். எப்போதும் அழைப்பவனில்லை.. ஏதேனும் முக்கியமாக இருந்தால் மட்டுமே அதுவும் வேலை நேரத்தில் அழைப்பது இதுவே முதல் முறை…

 

“ஹலோ.. Dk! எப்படி இருக்கீங்க..? “என்று கேட்க,

 

“ஐம் ஃபைன் நிகி.. நீங்க எப்படி இருக்கீங்க.. என்ன ஒரு வாரமா பேசிக்கவே முடியலை ரொம்பப் பிஸியாகிட்டீங்க.. இப்போ பேசலாமா அப்பாயின்மென்ட் கிடைக்குமா முதலாளி..? “அவளைக் கேலி செய்ய,

 

“அங்க மட்டும் என்ன..?? நீங்களும் தானே பிஸி.. என்ன கேட்டீங்க அப்பாயின்மென்ட் தானே இப்போ ரொம்பக் கஷ்டம் தான்.. ஏதோ தெரிஞ்சவரா போயிட்டதாலே போனாப் போகுதுனு ஒரு டென் மினிட்ஸ் டைம் கொடுக்குறேன்” என்று அவன் பாணியிலேயே பதில் கொடுக்க,

 

“ஹா ஹா டென்ட் மினிட்ஸ்..ம்ம்ம்ம் ரொம்பப் பெரிய மனசு தான்…ப்ராஜெக்ட் ஒன்னு டெலிவரி பண்றதுக்கு டெட் லைன் இருந்துச்சு.. சோ அந்த வொர்க்ல கொஞ்சம் பிஸி”

 

“ஓஒ … அதான் இன்னைக்கு ரெஸ்டா… ஜாலியா வெளிய சுத்த கிளம்பியாச்சு போல” என்று கேட்க

 

“சுத்தலாம்னு தான் கிளம்புனேன்…உங்க ஊர்ல தான் வெயில் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு வாட்டுதே…” என்று சொல்லவும்,

 

அவன் சொல்வதைக் கவனிக்காது, “ஓஒ அப்போ சார் இருக்கச் சென்னை ஐஸ்ல வச்சது போல.. எனச் சொல்லிக் கொண்டே வந்தவள் நிறுத்தி விட்டு,

 

“ஹே …! எங்க இருக்கீங்க இப்போ..? ஊருக்கு வந்திருக்கீங்களா..” என்று கேட்கவும்,

 

“ஹா ஹா..! முதலாளி மேடம்க்கு பல்ப் இப்போ தான் எரியுது போல..யெஸ் யெஸ் உங்க கம்பெனி என்ட்ரன்ஸ்ல தான் நிற்கிறேன்” என்றதும்,

 

“அட லூசா நீங்க…! உள்ள வர்றதுக்கு என்ன?” என அன்பாய் கடிந்து கொண்டவள் பேசியபடி வெளியே வந்திருந்தாள்.

 

வெளியே வந்து பார்த்த போது, செக்யூரிட்டி இருக்கும் சிறிய அறைக்கு வெளியே ஒரு காலை தூக்கி சுவருக்கு முட்டுக் கொடுத்து மறு காலை தரையில் ஊன்றியபடி மொபைல் போனால் தன் கைகளைத் தட்டியபடி சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனருகில் சென்றவள் “வாங்க போகலாம்…!” என்று அழைத்துவிட்டு முன்னே செல்ல, துவாரகேஷ் அவளைப் பின் தொடர்ந்தான்.

 

அவளது அறைக்கு அழைத்துச் சென்றவள் துவாரகேஷ் அமர்ந்ததும், ” என்ன சாப்பிடுறீங்க Dk..! “என்று உபசரிக்க,

 

“இல்ல ஒண்ணும் வேண்டாம் நிகி… மார்னிங்க் ப்ரேக் ஃபாஸ்ட்டே லேட்டா தான் ஆச்சு” என்று மறுக்க,

 

“அதெப்படி ஃபர்ஸ்ட் டைம் வந்துருக்கீங்க… சாப்பிடாம எப்படி..? இருங்க ப்ரெஷ் ஜூஸ் எதாச்சும் வாங்கிட்டு வர சொல்றேன்” எனத் தன் அலைப்பேசியை எடுக்க முற்பட,

 

“இல்ல நிகி… இப்போ எதும் வேணாம்…கொஞ்ச நேரம் போகட்டும்” என்று சொன்னதும் அவனை மேலும் வற்புறுத்த முயலாமல், கம்பெனியில் இருந்த ஒவ்வொர் யூனிட்டையும் அவனுக்குச் சுற்றிக் காண்பித்தவள், ” வாங்க DK! வீட்டுக்கு போயிட்டு வரலாம்.” என்று அழைக்க,

 

திடீரென்று ஒரு ஆடவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றால், அவளுடைய அப்பா, அம்மா என்ன நினைப்பாங்க… நிகி ஒரு மரியாதைக்காக அழைப்பதை ஏற்று நாம போய் எவ்வித தர்மசங்கடத்தை நிகழ்த்தி விடக் கூடாது என நினைத்தவன், “பராவாயில்லை இருக்கட்டும் நிகி… இன்னொரு நாள் வர்றேன்” என நாசூக்காய் தவிர்க்க நினைக்க,

 

அவளோ, “ஏன் இன்னொரு நாள்?? இன்னைக்கு நாள் நல்லாயில்லயா” என்றவள் அவன் முகம் பார்க்க ,

 

“அதில்ல..” என்றவனின் தயக்கத்திலேயே அவனின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டவள், சும்மா வாங்க பாஸ்…! உங்களைப் பார்த்தா அப்பா அம்மா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க..” என அந்த ஒரு வார்த்தையிலேயே நீ என் வீட்டிற்கு அறிமுகமில்லாதவன் இல்லை…உன்னைப் பற்றித் தெரியும் என்பதைக் கோடிட்டு காட்டி விட, துவாரகேஷூம் திருப்தியுற்றவனாய், ” சரி போகலாம்” என்று விட்டான்

 

வீட்டின் உள்ளே நுழைந்தவள் வரவேற்பறை ஷோபாவில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்த தந்தையை நோக்கி, “அப்பா….! நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்கானு பாருங்க..?” எனக் குரல் கொடுக்க,

 

மகள் அழைத்ததும் கையில் இருந்த புத்தகத்தை மேஜையின் மேல் மூடி வைத்துவிட்டு, தன் மூக்குக் கண்ணாடியை “யாருடாம்மா வந்திருக்காங்க..?” என்றபடி திரும்பி பார்த்தவரின் விழி வட்டத்தில் அங்கு நின்று கொண்டிருந்த துவாரகேஷ் விழுந்தான்.

 

“அடடே..! துவாரகேஷ் தம்பியா?? வாங்க வாங்க” என்று அழைக்க, துவாரகேஷிற்கோ நிகி தான் யாரென்று சொல்லும் முன்னரே நான் தான் துவாரகேஷ் என்று எப்படித் தெரிந்தது என்ற ஆச்சர்ய பாவத்தோடு,”வணக்கம் அங்கிள்..! எப்படி இருக்கீங்க…??” என நலம் விசாரிக்க,

 

“நான் நல்லா இருக்கேன் தம்பி… ஏன் நின்னுட்டே இருக்கீங்க வாங்க வந்து இப்படி உட்காருங்க” என அவனைத் தன்னருகில் அமர்த்திக் கொள்ள,

 

நிகி சிரித்துக் கொண்டே எதிரே கிடந்த ஷோபா சீட்டரில் அமர்ந்து கொண்டவள், “என்ன DK..! அப்பா எப்படி உங்களை அடையாளம் கண்டு பிடிச்சார்னு பார்க்குறீங்களா..?? எக்ஷ்பிஷன்ல நாம க்ரூப் போட்டோ எடுத்தோம்ல அதைப் பார்த்துட்டு தான்” என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க,

 

கையில் மோர் நிரப்பிய குவளைகளை ஏந்தியபடி வந்த சாரதா, “வாங்க தம்பி..! எடுத்துக்கோங்க..” என ஒரு குவளையை அவனுக்குக் கொடுக்க,

 

“தேங்க்ஸ் ஆன்ட்டி..!” என்று அதை வாங்கிக் கொள்ள, புன்னகையால் அவனது நன்றியை ஏற்றுக் கொண்டவர், கணவருக்கும் ஒன்றை கொடுத்தார்.

 

அன்னை தனக்கும் ஒன்றை கொடுக்க முற்பட, “அம்மா..! எனக்கு இப்போ வேண்டாம்.. நீங்க குடிங்க” எனச் சொல்லி விட்டு,

 

“அம்மா எப்போதும் இப்படித் தான்…! யார் வீட்டுக்கு வந்தாலும் சாப்பிட எதாச்சும் எடுத்துட்டு வந்துதான் பேசவே ஆரம்பிப்பாங்க” தாயின் செய்கைக்கு விளக்கம் கொடுக்க, எல்லாவற்றையும் சிறு புன்னகையோடே கேட்டுக் கொண்டிருந்தான் துவாரகேஷ்.

 

“பேசிட்டு இருங்க… சாப்பிட்டு தான் போகணும் தம்பி…நான் போய்ச் சமையல் வேலையைப் பாக்குறேன்…” என்று சொன்னவரிடம்,

 

“அம்மா…! நம்ம தோட்டத்தை DK பார்க்கணும்னு சொன்னாங்க… நான் கூட்டிட்டுப் போய்க் காமிச்சுட்டு வர்றேன்”

 

அவனுக்குமே அங்கிருப்பது சங்கோஜமாய் இருக்க, நிகழினி அவ்வாறு கூறியதும் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவன், “வர்றேன் அங்கிள்.. வர்றேன் ஆன்ட்டி” என்று விடைபெற,

 

அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவள், “இருங்க DK..! வண்டி கீ எடுக்காம வந்துட்டேன்.. எடுத்துட்டு வர்றேன்” என்று உள்ளே சென்றவள்,

 

“அம்மா….! நீங்க உங்களுக்கும் அப்பாக்கும் மட்டும் சமைச்சுக்கோங்க..நான் தோட்டத்தைச் சுத்தி காமிச்சுட்டு எதாச்சும் நல்ல ரெஸ்ட் ராரன்ட்ல சாப்பிட்டுக்குறோம்..” என்றதும்,

 

“நல்ல ஹோட்டல்ல போய்ச் சாப்பாடு வாங்கிக் கொடுக்கப் போறியா..?அப்போ என் சமையலை கேவலமா இருக்குன்னு சொல்றியா…எதாச்சும் செஞ்சு குடும்மானு வருவல்ல அப்போ பார்த்துக்குறேன்”

 

அப்போது தான் சொல்ல வந்ததின் அர்த்தம் மாறிப்போனதை உணர்ந்தவள், “ஹா ஹா… அம்மா ..! நான் அப்படிச் சொல்ல வரலை… DK கொஞ்சம் சங்கோஜப்படுற மாதிரி தெரியுது… சரியா சாப்பிடமாட்டாங்க… நம்ம வீட்டுக்கு வந்துட்டு வயிறு நிறையாம போனா நல்லா இருக்குமா… அதான் சொன்னேன்” என்றுவிட்டு தந்தையின் முகம் நோக்க,

 

“என் பொண்ணுன்னா பொண்ணு தான்… ஒருத்தர் முகபாவனையை வச்சே அவங்க தேவையைப் புரிஞ்சுப்பா…” என்று மனதிற்குள் வியந்து கொண்டவர்,

 

“உனக்கு எது சரினு படுதோ அப்படியே செய்டா” என்று அனுமதி கொடுத்து விட

 

“தேங்க்யூப்பா…! போயிட்டு வர்றேன்” என்று கிளம்பி விட,

 

“ஏனுங்க மாமா…! அந்தப் பையனுக்கு ரொம்பப் பார்க்குறா.. ஒரு வேளை நம்ம நிகிக்கு அந்தத் தம்பியை பிடிச்சுருக்குமோ?” சாரதா கணவனிடம் கேட்கவும்,

 

“நாமளா ஒரு முடிவுக்கு வரக்கூடாது சாரு.. அது தப்பும் கூட… நம்ம கற்பனையா ஒன்னை உருவகப்படுத்திக்கவும் கூடாது…ஒன்னு மட்டும் நல்லா தெரியுது நிகிக்கு பிடிச்சிருக்கானு தெரியலை.. ஆனா அந்தப் பையனுக்கு நிகியை பிடிச்சிருக்கு… இதுவரை நிகி தான் எடுத்த முடிவுகளை யோசிச்சு சரியா தான் எடுத்திருக்கா..அப்படியே நிகிம்மா இந்தத் தம்பியை தேர்ந்தெடுத்தாலும் அதுவும் சரியா தான் இருக்கும்.. ” என்று நகர்ந்துவிட,

 

“ரெண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கு… கடவுள் சித்தம் என்னவோ..சீக்கிரம் அவளுக்கு ஒரு நல்லது நடக்கட்டும் ஆண்டவா” மானசீகமாக வேண்டுதல் ஒன்றை வைத்து விட்டு வேலையைப் பார்க்க சென்று விட்டார்.

 

தோட்டத்தைப் பார்த்த துவாரகேஷ் பார்த்தது பார்த்தபடி நின்று விட்டான். வழக்கமான வயல்வெளியை எதிர்ப்பார்த்து வந்தவனுக்கு, சிறு இடம் கூட வேஸ்டாக விடாமல் பிரிவு பிரிவாகப் பிரித்துப் பயிர் செய்திருந்தாள்.

 

ஒரே பயிராக விதைக்காமல் ஊடு பயிராகப் பல்வகைப் பயிர்கள் பயிறப்பட்டு இருந்தது. அதற்கு நீர் பாய்ச்சவெனக் கிரிஸ் கிராஸ் துளைகள் இடப்பட்ட ரப்பர் ட்யூப் இரு பிரிவுகளுக்கு நடுவே போடப்பட்டிருக்க நீர் பாயும் போதெல்லாம் ஃபௌன்டைன் போல நாலாபுறமும் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தது.

 

ஒரு புறம் தென்னை மரங்கள் தலை சாய்த்து ஆடிக் கொண்டிருக்க ஆங்கே ஒரு மூலையில் வட்ட கிணறுடன் கூடிய பம்புசெட் இருந்தது.. அவ்விடத்திற்குச் சென்றதுமே CFC-ஐ வெளியிடாத சில்லென்று காற்றில் முகத்தைத் தொட்டு தலைமுடி கலைத்து விளையாடிச் சென்றது.

 

சுமார் ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தவன்,அந்த குளுமையை ரசித்தபடி அவ்விடத்தில் நின்று யோசித்துக் கொண்டிருந்தான் துவராகேஷ்.

 

“வந்து ரொம்ப நேரமாச்சு DK…. கிளம்பலாமா??” என்ற நிகியின் குரலில் சிந்தனை கலைந்தவன், “ம்ம் போகலாம் நிகி…” என்று வாய் சொன்னாலும் அந்த இடத்தை விட்டு கிளம்ப மனமே இல்லாமல் சென்றான்.

 

வந்த வழியாக அல்லாமல் வேறு வழியில் சென்று கொண்டிருந்ததைக் கண்டவன், ” நிகி நாம வரும் போது வந்த வழி மாதிரி இல்லை” என்றதும்,

 

“ஆமா…! வேற வழி தான்..! சாப்பிட ஹோட்டல்க்கு போறோம்”

 

“ஹோட்டல்க்கா…? அம்மா நமக்கும் சேர்த்து சமைக்குறேன்ல சொன்னாங்க”

 

“இல்ல DK..! வீட்டில் இருந்தப்போவே நீங்க கொஞ்சம் அன் ஈசியா ஃபீல் பண்ணது போலத் தோணுச்சு ..அதான் ஃப்ரீயா சாப்பிடலாம்னு அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்”

 

எப்படித் தன்னைக் கண்டு கொண்டாள்?? தனக்காக யோசித்து அவள் செய்ததை நினைக்கையில் நிகியை இன்னும் பிடித்துப் போனது துவாரகேஷிற்கு…

 

கோவை டூ அன்னூர் ஹைவேஸில் இருந்த உயர்தர ஹோட்டலின் முன்பு வண்டியை நிறுத்தி லாக் செய்துவிட்டு இருவரும் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தனர். இருவருக்குமான உணவை ஆர்டர் செய்து கொண்டிருந்தவளை “ஹாய் நிகி!” என்ற குரல் திரும்பி பார்க்கவைக்க அங்கே நின்றிருந்தான் ஆனந்த்.

*****************************************

 

இந்தக் குட் நியூஸ்ஸை நிகிக்கும் சொல்லணும் என நினத்தவன், நிகழினிக்கு அழைக்க அழைப்பு சென்று கொண்டே இருந்ததே எடுப்பதாய் இல்லை… மேலும் ஓரிரு முறை அழைத்தவன் எடுக்கப்படவில்லை என்றதும் வேலையாக இருப்பாளாயிருக்கும் சிறிது நேரம் கழித்து அழைப்போம் என்று நினைத்தபடி விட்டு விட்டான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவனது அலைப்பேசி ஒலிக்க, எடுத்து பார்த்த போது அவள் தான் அழைத்திருந்தாள்.

 

“ஹாய் நிகி..! என்ன பிஸியா??” என்று கேட்க,

 

“ஹாய் DK..! சாரி கொஞ்சம் வேலையா இருந்தேன் நீங்க கூப்பிட்டதைக் கவனிக்கலை.. சொல்லுங்க இவ்வளோ டைம் கூப்பிட்டிருக்கீங்க… எதும் இம்பார்டன்டா” என்று கேட்கவும்,

 

“எஸ் … இம்பார்டென்ட் தான்… அது என்னனா” என்று அவன் சொல்ல தொடங்கும் முன்னரே,

 

“நிகி …! ரெடி தானே…? மாப்பிள்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க” என்ற குரல் பேக்ரவுண்டில் இருந்து சத்தமிட,

 

“இதோ ரெடி தான்…! ஒரு நிமிஷம்” என்றவள்,

 

“சாரி DK..! பொண்ணு பார்க்க வந்திருக்காங்க… நான் அப்புறம் ஃப்ரீ ஆகிட்டுக் கூப்பிடுறேன்..பை” என்று அழைப்பை துண்டித்து விட,

 

நடப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்த துவாரகேஷோ தன் அங்கங்கள் துண்டாடப்பட்டது போல் துடித்துப் போனான்…!

Advertisement