Advertisement

நெஞ்சம் 6:
நிகழினிக்கு நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளையின் பெயர் ஆனந்த். பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜீனியராக வேலை பார்க்கிறான். அவனுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும்,ஒரு தங்கையும்.. தந்தை இவனின் பதின்ம வயதில் தவறிவிடத் தாய் தான் எல்லாமும் என்றாகிப் போனார்.
அவனது தாய் கமலம் கறார் பேர்வழி.. தன் மூத்த மகன் மோகன் வேறு சாதியில் காதலித்த விகாரம் தன் காதிற்கு எட்டியதும் முடிந்த மட்டும் தன்னாலான எதிர்ப்பை காட்ட,ஒரு சமயத்தில் தன் தாய் சம்மதிக்கப் போவதில்லை என்ற உண்மை அறிந்த பின் அவரை மீறி காதலியை அவள் வீட்டாரின் சம்மதத்துடன் கரம் பிடித்துக் கொண்டான்.
வருடங்கள் ஓடியும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு நிலைக்கு மேல் தன் மனைவியைத் தாய் பேசுவதைப் பொறுக்க முடியாமல் அவராய் புரிந்து கொள்ளும் போது புரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டான். மூத்த மகனை வைத்து நடத்திக்க முடியாத அனைத்தையும் இளைய மகனை வைத்து ஈடுகட்ட நினைத்துக்  கொண்டிருந்தார் கமலம்.
எங்கே இவனும் அண்ணனை பின்பற்றிக் காதல் கத்திரிக்காய் என்று யாரையேனும் இழுத்துக் கொண்டு வந்துவிடுவானோ என்று நினைத்தவர் முன் ஜாக்கிரதையாக தன் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டார். ஆனந்திற்கும் அன்னையின் மேல் சற்றுப் பயம் இருக்கவே செய்தது..நண்பர்களுடன் ஒரு சினிமாவிற்குச் செல்வதென்றால் கூடப் போவதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னமே அவர் காதில் போட்டு வைக்க வேண்டும்.. பல நேரங்களில் அவனது கோரிக்கைகள் நிராகரிக்கவே பட்டிருக்கின்றன. பத்தில் ஒன்றாய் ஏதேனும் ஒன்றிரண்டுக்கு அத்தி பூத்தாற் போல் அனுமதி கிடைக்கும்.இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கல்லூரி படிக்கும் வரை மட்டுமே செல்லுபடியாகிக் கொண்டிருந்தது.
என்றைக்குக் கல்லூரி வாசம் முடிந்து வேலைக்காகச் சென்னையில் காலடி எடுத்து வைத்தானோ அன்றோடு அது வரை இருந்த அன்னையின் கட்டுப்பாடுகள் திவாலாகி விட, பிடிமானமாய் இருந்த கம்பில் இருந்து கழன்று கொண்ட காளையைப் போல் திக்கற்றுத் திரிந்தான். கூடா நட்பு, ஸ்மோக்கிங்க், ட்ரிங்கிங்க் எனத் தேவையற்ற ஃபீச்சர்களைத் தன்னுள் இன்ஸ்டால் செய்து அப்டேட் செய்து கொஞ்ச கொஞ்சமாய் அடிமையாகி விட்டிருந்தான். ஆனால் இது எல்லாம் சென்னையின் எல்லை முடிவு வரை மட்டுமே..
தன் ஊரின் எல்லைக்குள் நுழைந்து விட்டால் அக்மார்க் முத்திரையிடப்படாத புத்திரனாக மாறிவிடுவான். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது தீபாவளி, பொங்கல் விடுமுறைகளிலோ வீட்டுக்கு வருகை தருகையில் மட்டும் அம்மாவின் பிள்ளையாகத் தன்னை ரீஸ்டோர் செய்து கொள்வான்..அதனால் கமலத்திற்குத் தன் மகனின் தகிடு தத்தம் தெரியாமலேயே போயிற்று..
கடந்த மூன்று வருடங்களாக ஆன்சைட் ப்ராஜெக்ட்க்காக ஜோர்டன் சென்று விட்டான்..இன்னும் சில மாதங்களில் நாடு திரும்புவதாக இருக்கையில் அவனுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து விட்டால் வரப் போகும் மருமகளின் உபயத்தால் பெண்ணை நல்ல இடத்தில் மணமுடித்துக் கரை சேர்த்து விடலாம் எனச் சீரியல் மாமியரைப் போல் கணக்கிட்டு வைத்திருந்தார்.
இந்த நிலையில் தான் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த திருமணத் தகவல் நிலையம் மூலம் நிகழினியின் ஜாதகம் கமலத்தின் கைவரப் பெற்றது. ஜாதகப் பலன் திருப்தியாக அமையவே, நிகழினியின் பின்புலத்தை அக்கு வேர் ஆணி வேராக அலசி ஆராய்ந்து தன் மகனுக்கும், குடும்பத்திற்கும் ஏற்றவள் இவள் தான் என்ற முடிவுக்கு வந்திருந்தார். நிகழினியை பற்றி ஆராய்வதில் காட்டிய அக்கறையைத் தன் மகனை ஆராய்வதில் காட்டியிருந்தால் பின்னாளில் நடக்கவிருந்த விபரீதத்தைத் தடுத்திருக்கலாம்.. என்ன சொல்லி என்ன ??? விதியின் ஆட்டம் அதன் வேலையைச் செய்யாமல் போகுமா…?
மகனுக்கு நிகழினியின் புகைப்படத்தை வாட்ஸப் மூலம் அனுப்பி “பிடித்திருக்கிறதா??” என்று கேளாமல் இவள் தான் உனக்குப் பார்த்திருக்கும் பெண் எனத் தகவலாய் சொன்ன அம்மாவை நினைத்து பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது ஆனந்தால்… அதுவும் பல ஆயிரம் மைல்களைத் தாண்டி அப்பால் இருந்து கொண்டு..
“என்னடா… பதிலை காணோம்..?? உங்க அண்ணன் மாதிரி எதுவும் செய்ய ப்ளான் பண்றியா…? அப்படி எதும் நடந்துச்சு.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…. ஒரு தடவை ஏமாந்துட்டேன் அதே போல இப்பவும் இருப்பேன்னு நினைக்காத” என்று போனில் எச்சரித்த அன்னையிடம்,
“உங்களுக்கு எது விருப்பமோ..?? அப்படியே செய்ங்கம்மா” என்று விட,
“எனக்குத் தெரியும்டா கண்ணு… நீதான்டா என் புள்ள” என்று சிலாகித்தவர், கிடைத்த சந்தர்பத்தில் மூத்தவனை வார்த்தைகளால் விலாசி விட்டு கணவன் இறந்த பிறகு இவர்களை வளர்க்க அவர் பட்ட கஷ்டத்தை மீண்டும் ஒரு முறை சொல்லி முந்தானையில் மூக்கை துடைத்துக் கொள்ள, இக்காட்சி அப்படியே ஆனந்தின் கண்களில் விரிந்தது.
“அம்மா … அழாதீங்க… அதான் உங்க விருப்பம்னு சொல்லிட்டேன்ல” என்று அன்னை வருத்தப்படுவது தாங்காமல் கூறினானா இல்லை அவர் சொல்வதைக் கேட்க பிடிக்காமல் சொன்னானா என்பது அவனுக்கே வெளிச்சம்.
அதற்கு அடுத்து வந்த நல்ல நாளிலே நெருங்கிய சொந்தங்களை அழைத்துக் கொண்டு பெண் பார்க்கும் படலமும் முடிந்து விட்டது. சந்திரனும் தன் பங்குக்கு ஆனந்தின் ஊரில் நம்பகமான ஆட்களை வைத்து விசாரிக்க, அடக்கமான அமைதியான பையன்.. அம்மா கிழிச்ச கோட்டை தாண்டாத பையன் என ஏகப்பட்ட நற்சான்றிதழ்கள் கிடைக்கப் பெற நடுத்தர வர்க்கமாய் இருந்தாலும் நல்ல வேளையில் இருக்கும் அதுமட்டுமின்றிப் பெரியவர்களின் சொல் கேட்டு நடக்கும் பையனை நினைக்கையில் அவருக்குமே திருப்தியாய் இருந்தது. தாய்க்கே மகனின் மறுப்பக்கம் தெரியாத போது ஊரார்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்..!
நிகழினியின் விருப்பத்தைச் சந்திரன் கேட்ட போது அவளது கோரிக்கை இதுவாகத்தான் இருந்தது… “அப்பா…! உங்களுக்கும் அம்மாக்கும் பிடிச்சிருந்தா ப்ரசீட் பண்ணுங்க..எனக்கு ஒரே ஒரு கண்டீஷன் தான்… கல்யாணத்துக்குப் பிறகும் நான் விவசாயம் பார்ப்பேன் அதுக்கு எதும் சொல்ல கூடாது… இது மட்டும் ஒகேவானு கேட்டிருங்க”
“மாப்பிள்ளை வேலை பார்க்குற கம்பெனி ப்ரான்ச் கோயம்புத்தூர்ல இப்போ ஸ்டார்ட் பண்ணிருக்காங்களாம்.. சோ பையன் ஆன்சைட் முடிச்சு வந்ததும் இங்க ட்ரான்ஸ்பர் வாங்கிடுவான்னு அவங்க சொல்லிட்டாங்க” என்று சொல்ல,
“அப்போ ஒகே” என்று ஒரு தோள் குலுக்கலோடு சென்று விட்டாள் நிகி..
இவர்கள் இப்படி எண்ணியிருக்க, கமலமோ வேறு நினைத்திருந்தார். இதற்கிடையில் மகனை அழைத்து ஒரு முறை நிகழினியின் வீட்டிற்குப் பேசி சம்மதத்தைச் சொல்லி விடும்படி அறிவுறுத்தி இருந்தார். வேறு வழியின்றி அவனும் நிகழினியின் தந்தையின் எண்ணுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.
“ஹலோ..! சந்திரன் அங்கிள் தானே??” என்று கேட்க,
“ஆமா … நீங்க” என்றவரிடம்,
“வணக்கம் அங்கிள்… நான் ஆனந்த் பேசுறேன்..” என்று சற்றே தயக்கமான குரலில் கூற,
“ஹான்.. சொல்லுங்க தம்பி… எப்படி இருக்கீங்க??. பாப்பா போட்டோ பார்த்தீங்களா… உங்களுக்கு இதுல விருப்பம் தானே?” என மாப்பிள்ளையாய் வரப் போறவனின் விருப்பத்தை அறியும் ஆவலில் கேட்டு விட,
இதுவரை முன் பின் அறிந்திராத மூன்றாவது மனிதர் அவர் கூட என்னுடைய விருப்பத்தைப் பற்றிக் கேட்கிறார்… அவரோடு தன் அன்னையை ஒப்புமை செய்து பார்த்தவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு, ” எனக்கு ஒகே அங்கிள்… உங்க பொண்ணுக்கும் ஒகே தானே??” என்று கேட்க,
“ஒரு நிமிஷம்… அவகிட்டயே கேட்டிருங்க..” என்று தன்னைக் கடந்து சென்று கொண்டிருந்த மகளிடம்,
“நிகிம்மா..! இங்க வா” என்று அழைத்துப் போனை அவள் புறம் நீட்ட, யார்? என யோசனையாய் தந்தையை ஏறிட அவளது கேள்வி புரிந்தாற் போல், “மாப்பிள்ளை பேசுறார்… பேசு” என்க,
“அய்யோ… என்னப்பா இதெல்லாம் நான் என்ன பேச” என முணு முணுத்தவளின் கைகளில் அலைப் பேசியைத் திணித்தவர் தனிமை தந்து விலகிவிட,
அலைப் பேசியைக் காதிற்குக் கொடுத்தவள் “ஹலோ” என்று தன் இருப்பை உணர்த்தியதும், சம்பிரதாயமாய் ஒருவொருக்கொருவர் நலம் விசாரித்துக் கொள்ள, அதன் பின் இருவரும் தங்களது சம்மதத்தைப் பற்றியும் நிகி தனது கண்டீசன் பற்றியும் பேசி தெளிவு படுத்திக் கொண்டனர். அது தான் அவர்களிருவரும் முதலும் கடைசியுமாய்ப் பேசிக் கொண்டது.. ஒரு வழியாக ஆனந்த் இல்லாமலே, உறவினர்கள் படை சூழ ஆனந்த் – நிகழினியின் நிச்சயதார்த்தம் இனிதே நிறைவேறியிருந்தது.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது மறைமுகமாகக் கேட்டுக் கொண்டே தான் இருந்தார் கமலம்.நிச்சயம் முடிந்துவிட்டது என்பது அவருக்குக் கூடுதல் அதிகாரம் கிடைத்துவிட்டது போல் தோன்றியது போலும்..! ஆனால் நிகழினியை பற்றி அவருக்குத் தெரியவில்லை.. இந்த அதிகார தோரணையை உடைத்தெறிய ஒரு நொடி போதும் அவளுக்கு…ஆனால் கமலத்தின் சுரண்டல்களைப் பற்றி அவள் காதிற்குச் சென்றிருக்கவில்லை என்பதை விடச் செல்ல விடவில்லை சந்திரனும், சாரதாவும் என்பது தான் சரியாய் இருக்கும்.
நிச்சயதார்த்தம் பெண் வீட்டார் பொறுப்பு என்றும், திருமணம் இரு வீட்டாரும் கலந்து செய்வது என்பதாகப் பேச்சு… கமலமோ தன் வீட்டில் எடுத்து நடத்த பெரியவர்கள் யாரும் இல்லை என்று சொல்லி ” எங்க பங்கு பணம் தந்துடுறோம்… நீங்களே நடத்தி கொடுத்திடுங்க” என்று கோரிக்கை வைக்க,
சந்திரனும் அவர்களின் நிலை புரிந்து சரி என்பதாய் சொல்லி விட, ஆனால் கமலமோ பணம் பற்றி மூச்சு விடவில்லை. அவர்களுக்காய் தெரிய வேண்டும்… தான் எப்படிப் பணம் பற்றி அடிக்கடி கேட்பதென்று சங்கோஜப்பட்டுக் கொண்டு, கல்யாணம் முடிஞ்சு செட்டில் பண்றப்போ கணக்கு பார்த்துப் பாதிப் பாதிப் பிரிச்சுக்கலாம் என முடிவெடுத்து விட்டு வேலைகளைத் தொடங்கிவிட்டார். திருமண நாளும் வந்தே விட்டிருந்தது.
“நிகி… உன்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டியா..?? அப்புறம் அதைக் காணோம் இதைக் காணோம்னு அங்க வந்து சொல்லிட்டு இருக்காதே.. இருக்குற வேளையில யாரையும் வீட்டுக்கு அனுப்ப முடியாது பார்த்துக்கோ” எனக் கண்ணாடியை பார்த்து தலை வாரிக் கொண்டிருந்த தங்கையிடம் இலக்கியா சொல்லவும்,
“எல்லாம் வச்சாச்சு கியா… அம்மா ஜூவல் பாக்ஸ் எடுத்துத் தந்ததும் அதையும் வச்சுட்டா லாக் பண்ணி கீயை அப்பாகிட்ட கொடுத்துடலாம்” என்று சொல்ல,
“அப்போ நான் போய் அம்மாவை கூட்டிட்டு வர்றேன்..” என்றவள் அறையின் வாசல் வரை செல்லவும் சாரதா உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
“இன்னும் கிளம்பலையாடி நீங்க… நேரம் ஆகிட்டே இருக்கு…” என்றபடி உள்ளே வந்தவரிடம்
“அம்மா…! நிகியோட ஜுவல் பாக்ஸ் எடுத்து கொடுத்தீங்கன்னா அதையும் பேக்ல வச்சு லாக் பண்ணிடலாம்.” என இலக்கியா கேட்கவும்,
“இதோ போய் எடுத்துட்டு வர்றேன்.. அதுக்குள்ள மண்டபத்துக்கு எடுத்துட்டு போக வேண்டிய பேக் எல்லாம் ஒரு இடத்துல அடுக்கி வைங்க” என்று கூறி விட்டுச் சென்றதும்,
மெத்தையின் மேல் இருந்த பேக்குகளை எடுக்க முயன்ற இலக்கியாவை கண்ட நிகி “ஹேய்… லூசு என்ன பண்ற?? வெயிட் தூக்க கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க தானே.. நீ வை.. மாமா வந்து தூக்கிட்டு போவாங்க” என்று ஐந்து மாத சிசுவை சுமந்த மேடிட்ட வயிறுடன் நின்று கொண்டிருந்த அக்காவிடம் சொல்லவும்,
“ஒய் ..! என் புருஷனை பார்த்தா உனக்கு லக்கேஜ் தூக்குறவர் மாதிரி இருக்கா??” எனக் கணவனுக்காய் வரிந்து கட்டிக் கொண்டு வர,
“நேத்து நடந்த சீனைப் பார்த்தா எல்லாருக்கும் அப்படித் தான் தோணும்” என நேற்று எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையிலேயே இலக்கியாவிற்குக் கண்கள் சுழட்டி விட அப்படியே ஷ்யாமின் மடியில் தலை வைத்து தூங்கி விட்டிருந்தாள். பிறகு ஷ்யாம் தான் அவள் தூக்கம் கெடாதவாறு தூக்கி சென்று அறைக்குள் படுக்க வைத்திருந்தான். அதை வைத்து தான் நிகழினி ஷ்யாமை இலக்கியாவிடம் கேலி செய்கிறாள். காலையில் எழுந்ததும் தான் மெத்தையில் இருப்பதைப் பார்த்ததுமே இலக்கியாவிற்குப் புரிந்து போனது இது கணவனின் செயல் என்று…!
அந்நேரம் அங்கே வந்த ஷ்யாம் இலக்கியா பேக்கை தூக்க முற்படுவது போல் நின்றிருந்த விதத்தைக் கண்டவன் அருகில் வந்தவன், “ ஹேய்..! நீ ஏன் தூக்குற… நான் தான் இருக்கேன்ல… ஒரு வார்த்தை கூப்பிட வேண்டியது தானே” என்று சொல்ல, இலக்கியா வாயை பொத்தியவாறு சிரிக்க நிகழினியோ வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் சிரிப்பதைக் கண்டவன் “ராங்க் டைம்ல கரெக்டா என்ட்ரி கொடுத்து என்னைக் கலாய்க்க நானே சான்ஸ் கொடுத்துட்டேன்னு நினைக்குறேன்… சரியா?? என்று பொதுவாய் பார்த்துக் கேட்க, இருவரின் தலையும் ஆமென்பதாய் ஆடியபடி முகமோ புன்னகையைச் சிந்தியது..
காலை ஒன்பது மணிக்கு மேல் முகூர்த்தம் குறிக்கப்பட்டிருக்க, அதற்கு முன் நலங்கு வைப்பதுற்காக மகனை அழைக்க வந்த கமலம் அவன் அறையில் இல்லாத்தை கண்டு அவரது புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன.
சிறிது நேரத்தில் மாப்பிள்ளையைக் காணவில்லை என்ற செய்தி மண்டபம் முழுதும் ப்ராட்கேஸ்டிங் சிஸ்டம் இன்றியே ஒளிபரப்புப்பட்டு அங்கிருந்த அனைவரின் காதுகளுக்கும் எட்டியிருந்தது நிகழினி உட்பட.
மாப்பிள்ளயை காணவில்லை என்ற செய்தியால் மண்டபமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்க, இதெற்கெல்லாம் காரணமானவனோ தீர்த்த யாத்திரையின் விளைவால் இன்டன்ஸிவ் கேர் யூனிட்டில் கிடத்தப்பட்டிருந்தான்.
முன்னிரவு நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுவதற்காக அமர்ந்திருந்தனர். பாட்டில்களை ஓபன் செய்து அவரவர் பங்கை எடுத்து மெல்ல மெல்ல கொள்ளும் விஷம் என்பதை அறிந்து போதையின் பிடிக்குள் இருந்து வெளி வர விரும்பாமல் திராவகத்தை உள்ளே சரித்துக் கொண்டிருக்க, ஆனந்தோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஹே..! என்னடா எப்போதும் ஸ்டார்ட் பண்ணதும் பாட்டில் உள்ளே தலையை விடுறவன் முடியுற வரை தூர்வாரிக்கிட்டு இருப்ப.. இன்னைக்கு என்ன சைலன்ட்டா வேடிக்கை பார்த்துட்டு இருக்க?? ம்ம்” என்று நண்பர்களில் ஒருவருன் கேட்க,
“வேண்டாம்டா… ஆரம்பிச்சா நிறுத்த முடியாது.. நீங்க என்ஜாய் பண்ணுங்க. அதுமட்டுமில்லை அம்மாக்கு மட்டும் தெரிஞ்சுது தொலைஞ்சேன் நான்” என்று சொல்ல
“நீ என்ன கின்டர் கார்டன் பிள்ளையா..?? சும்மா சும்மா அம்மா அம்மான்னுட்டு இருக்க…விட்டா அம்மா சொன்னா தான் குடும்பம் நடத்துவேன்னு சொல்லுவ போல” என ஏகத்துக்கும் உசுப்பேற்றி விட, ஏதாவது சாக்கு கிடைக்குமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தும் நண்பனின் கேலியில் பொங்கிய மனதை நீர் ஊற்றி அணைத்தான்.
விடிய விடிய நடந்த கூத்து முடிந்து விடிவதற்குச் சில மணி நேரங்களே மிச்சம் இருந்த நேரத்தில் தான் தூங்க சென்றனர். திடீரென்று நெஞ்சில் எரிச்சல் உணர்வு எடுக்க, கேஸ் ட்ரபிளாக இருக்குமோ எனப் பொறுத்துக் கொண்டு கிடந்தவன் ஒரு நிலைக்கு மேல் எரிச்சலோடு கூடிய வலி ஏற்படவே நண்பர்களை எழுப்பினான்.
அவன் கிடந்த நிலை கண்டு கதி கலங்கியவர்கள் “மருத்துவமனை செல்வது தான் சரி” என்று முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் பின் பக்க கதவு வழியாக அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருந்தனர்.
“என்னம்மா..? உங்க பையன் எங்க போனாரு…?” என்று சந்திரன் கமலத்திடம் கேட்க,
“அதான் தெரியலைங்க சம்மந்தி..! அவன் போனும் சுவிட்ச் ஆஃப்னு வருது… கூட இருந்த ப்ரெண்ட்ஸ்களையும் காணோம்.. அவங்க நம்பரும் என்கிட்ட இல்லை” எனச் சொல்ல்,
“என்னது இது… கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம இப்படித் தான் சொல்லாம கொல்லாம போறதா..? அப்படி என்ன தலைபோற விஷயம்” என்று கடிந்து கொள்ள, என்ன சொல்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றவரிடம்,
“அம்மா..! ஏதோ புது நம்பர்ல இருந்து கால் வருது..” என ஆனந்தின் தங்கை அலைப்பேசியை நீட்ட,
“ஹலோ..! ஆன்ட்டி.. நான் ஆனந்தோட ப்ரெண்ட் பேசுறேன்..” என்றதும்,
“ஏன்ப்பா எங்க போய்த் தொலைஞ்சீங்க… ஆனந்த் எங்க..?? அவனை வர சொல்லுங்க சீக்கிரம்… இருக்கு அவனுக்கு.. எல்லோரையும் டென்சன் பண்ணிட்டு எங்க போய்த் தொலைஞ்சான்?” என்று போனில் வறுத்தெடுக்க,
“ஆன்ட்டி..! ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க.. ஆனந்துக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை.. **** ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம் கொஞ்சம் கிளம்பி வாங்க” என்று சொல்ல,
“அய்யோ…! என்னாச்சு என் பிள்ளைக்கு…? நைட் வரைக்கும் நல்லாத்தானே இருந்தான்..” என்று கதறியவரிடம் இருந்து மொபலை வாங்கிய ஷ்யாம் விபரம் கேட்க, அவனது நண்பன் நடந்தவற்றைக் கூறி “சாரி சார்..!” என்று சொல்லவும்,
“எல்லாமே ஈசியா போச்சுல்ல உங்களுக்கு..!“ என்று கோபமாகக் கத்தியவன் விஷயத்தைச் சந்திரனிடம் சொல்ல, அவருக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனதளவில் இடிந்து போனவராய் நொடியில் கலையிழந்து போனார்.
சந்திரன் எதும் பேசும் முன்னரே “எல்லாம் இவளால வந்தது… கல்யாணமே இன்னும் முடியலை அதுக்குள்ள என் பையனை ஹாஸ்பிட்டல் படுக்க வச்சுட்டாளே..! வசதியை பார்த்து ஆசைப்பட்டு நானே என் பையனை படுகுழியில தள்ள இருந்திருக்கேனே..!” என்று அப்போதும் மகன் செய்ததைப் பெரிதாக எண்ணாமல் பழியை நிகியின் மேல் போட்டு அழத் தொடங்க,
அதுவரை நடப்பதை பொறுமையாய் பார்த்துக் கொண்டிருந்த நிகி, கமலத்தின் பேச்சில் கடுப்படைந்து “என்ன என்ன சொன்னீங்க…? எல்லாம் என்னால வந்துச்சா… நான் தானே உங்க பையனுக்குச் சரக்கு ஊத்தி கொடுத்தேன்.. தன்னை நம்பி ஒரு பொண்ணு வரப்போறா… புது வாழ்க்கைக்குள்ள அடியெடுத்து வைக்கப் போறோம் அதை நல்லபடியா கொண்டு போகணும்ன்ற பொறுப்புக் கொஞ்சம் கூட இல்லாம நைட்டெல்லாம் குடிச்சு கூத்தடிச்சுட்டு இப்போ ஹாஸ்பிட்டல்ல படுத்துகிடக்குற உங்க பையன் மேல கோப்படாம அதையும் ஒரு பொண்ணு மேல பழி போட நினைக்குற இந்தச் சீப் மென்டாலிட்டியை முதல்ல சேஞ்ச் பண்ணுங்க.. அடுத்தவீட்டு பொண்ணு மேல சேறை வாரி இறைக்குறதுக்கு முன்னாடி உங்க வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்குன்றதை மறந்துறாதீங்க… பட் நான் இப்போ ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன் இது போலப் பணத்தாசையும், நம்ம தப்புக்கு அடுத்தவங்களைக் குற்றம் சொல்ல கூடாதுன்ற தார்மீக எண்ணம் கூட இல்லாத உங்களுக்கு மருமகளா நிச்சயம் என்னால இருக்க முடியாது…” என்று சொல்ல,
“இப்படி ஒரு நிலைமையில் இருக்கும் போதே இந்த வாய் பேசுற… உனக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நல்லது நடந்தா என்ன ஆட்டம் ஆடுவ…” என்று அப்போதும் நடந்த தவறை உணர்ந்து கொள்ளும் எண்ணம் துளியும் இல்லாது அவளைக் காயப்படுத்தும் எண்ணமே மேலோங்கி இருக்க,
“இனி ஒரு வார்த்தை என் பொண்ணைப் பத்தி பேசுனீங்க… நான் சும்மா இருக்க மாட்டேன்… கிளம்புங்க இங்கே இருந்து”என்று எப்போதும் அமைதியாய் பேசும் சந்திரனே சூரியனாய் சுட்டெரிக்க,
“கல்யாண மேடை வரைக்கும் வந்து தாலி வாங்காம போற இவளை இனிமே யார் கட்டுவா?” எனக் கேலி இழையோட கூறியபடி அங்கிருந்து கிளம்பியவரிடம்,
“உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி..! எங்க பொண்ணைப் பத்தி நாங்க கவலை பட்டுக்குறோம் நீங்க உங்க விஷயத்தைப் பாருங்க” என்று விட்டு,
சற்றும் கலங்காமல் அந்நேரமும் நிமிர்வாய் நின்றிருந்த நிகழினியின் கைகளைத் தன் கைக்குள் எடுத்துக் கொண்டு, “அப்பாவை மன்னிச்சுடுடா..! நான் இன்னும் கொஞ்சம் விசாரிச்சு ஏற்பாடு பண்ணிருக்கனும்.. இப்படி ஒரு தர்ம சங்கடத்தை நானே கொடுத்துட்டேன் .. இந்த அப்பாவை மன்னிப்பியாடா??..”
“என்ன வார்த்தைப்பா சொல்றீங்க…? மிருகங்கள்ள கூட இது எல்லாம் மனுஷனுக்குத் தீங்கு செய்யும்.. இதெல்லாம் செய்யாதுனு பிரிக்க முடியும்.. ஆனா மனுஷங்க அப்படி இல்லப்பா.. எல்லாரும் நல்லவங்க தான்… ஆனால் நேரம் வரும் போது தான் அவங்ககிட்ட மறைஞ்சுகிடக்குற வக்கிரம், வன்மம்னு எல்லாச் சுயரூபமும் வெளிய வரும்…இதுக்கெல்லாம் போய்க் கலங்கிகிட்டு ரிலாக்ஸ்ப்பா” என்று ஆறுதல் சொல்லியவள் “இதோ வர்றேன்ப்பா” என்று அறைக்குள் சென்றவள் அடுத்த ஐந்தாவது நிமிடம் சல்வார் கமிஸில் வெளியே வந்தாள்.
“அங்கிருந்த உறவினர் கூட்டத்திடம் எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்” என்று கூற,
“ஏன் சந்திரா..! உன் பொண்ணு தான் விவரம் இல்லாம பேசுறான்னா நீயும் அமைதியா இருக்க… கல்யாண மேடை வரை வந்துட்டுக் கன்யாதானம் பண்ணாம போகக்கூடாது.. சொந்தத்துல எதாச்சும் முறைப் பையன் இருந்தா பேசி கல்யாணத்தை முடிச்சுட வேண்டியது தானே”
சந்திரனோ திரும்பி மகளைப் பார்க்க, நிகழினியின் பார்வையில் என்ன கண்டாரோ “இல்லை! சூழ்நிலையைச் சமாளிக்க இப்படி ஒரு முடிவு எடுக்குறது சரியா வராது.. நாளைக்கு எதாவது ஒரு சந்தர்பத்துல உனக்கு வாழ்க்கை கொடுத்துத் தியாகம் செஞ்சேன்ற எண்ணம் வந்துச்சுன்னா என் பொண்ணு மனசு என்ன பாடுபடும் … அழைப்பை ஏத்துக்கிட்டு வந்த எல்லாருக்கும் நன்றி..“ என்று கை கூப்ப,
“சொல்றதை சொல்லிட்டோம்..! அப்புறம் உன் இஷ்டம்..” எனச் சாப்பிடாமல் அத்தனை உறவுகளும் கிளம்பிவிட,
“மாமா..! நீங்க அம்மா.. அக்காவை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்புங்க… நானும் அப்பாவும் இங்க செட்டில் பண்ணிட்டு வந்துடுறோம்” என்று வற்புறுத்தி அவர்களை அனுப்பி வைத்தவள், சமையல் கான்ட்ராக்டரிடம் உணவை பக்கத்திலிருக்கும் ஆசிரமங்களுக்கெல்லாம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அவருக்குச் செட்டில் செய்து விட்டு, மற்ற செலவுகளையும் செட்டில் செய்து விட்டு கிளம்ப ஒரு மணி நேரத்திற்கும் மேலாகி இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்தவளை அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த அன்னையும், கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்த தமக்கையுமே வரவேற்றவனர்.
“த்ச்சு இப்போ எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கீங்க… அக்கா நீயுமா??? இந்த மாதிரி டைம்ல இப்படி இருக்கவே கூடாது… என்ன மாமா நீங்களாச்சும் சொல்ல கூடாதா??” என்று கடிந்து கொண்டவள்,
“நைட்டெல்லாம் தூக்கமே இல்லை.. நான் கொஞ்ச நேரம் தூங்கி எழும்புறேன்” என்று தன் அறைக்குள் சென்று விட்டாள்.
“என்ன பொண்ணுடா இது..? மனுஷியா இல்ல இரும்பால செஞ்சுருக்கானா இவளை” என்ற எண்ணம் எல்லோர் மனதிலு எழவே செய்தது.
மாலையில் குளித்து ரெடியாகி வந்தவளிடம், “இப்போ எங்கடி வெளிய போற..?” என்று சாரதா மகளிடம் கேட்க,
“ஹாஸ்பிட்டல்க்கும்மா..! ஆனந்தை போய்ப் பார்த்துட்டு வர்றேன்” என்று சொல்ல,
‘இவளுக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா’ என்ற லுக்கோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அன்னையிடம்,
“ரெண்டு நாள் பார்த்துப் பழகுனவங்களுக்கு உடம்பு சரியில்லைனாலே போய்ப் பார்ப்போம் தானே..? அது போல் தான்” என்றவளிடம்,
“அந்தப் பொம்பளை மண்டபத்துலேயே அப்படிப் பேசுச்சு.. நீ தனியாக எல்லாம் போக வேண்டாம்” என்று கூற,
“சரி..! அப்போ மாமா நீங்க கொஞ்சம் என் கூட வாங்க” என ஷ்யாமை அழைத்துக் கொண்டு சென்று விட,
“என்னங்க… இவ இப்படிச் செய்றா.. பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க… “ என்று கணவனிடம் முறையிட,
“எனக்கு நம்ம நிகியை நினைச்சு பிரமிப்பாவும் பெருமையாவும் இருக்கு சாரு..!” என்ற ஒற்றை வரியை கூறிவிட்டு நகர்ந்து விட, சாரதாவோ என்ன சொல்வது என்று அறியாமல் அமைதியாய் நின்று கொண்டார்.
கடந்த கால நினைவுகளில் மூழ்கிக் கிடந்த சந்திரனை மகளிடம் இருந்து வந்த அலைப்பேசி அழைப்பு நிகழ்வுக்குத் திருப்பிக் கொண்டு வந்தது.

Advertisement