Advertisement

நெஞ்சம் 5:
“சாரு..! வீட்டை இப்படி திறந்து வச்சுட்டு எங்க போன??” என குரல் கொடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரன்.
கணவர் தன்னை அழைக்கும் குரல் செவிப்பறையில் விழுந்தாலும், அதற்கு பதில் குரல் கொடுக்க வேண்டும் என்ற பிரயக்ஞை கூட இல்லாமல் பார்வை எங்கோ நிலைக் குத்தியபடி இருக்க சூன்யத்தை வெறித்து கொண்டிருந்தார் சாரதா.
ஒவ்வொரு அறையாக தேடி கடைசியில் வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கே வந்துவிட்டிருந்த சந்திரனின் விழி வட்டத்தில், அங்கிருந்த தென்னை மரத்தின் அடியில் துணி துவைப்பதற்கென போடப்பட்டிருந்த சலவைக் கல்லில் அமர்ந்திருந்த மனைவி தெரிந்தார்.
“சாரும்மா..! என்ன இங்க வந்து உட்கார்ந்திருக்க???” என கேட்டுக் கொண்டே மனைவியின் அருகில் செல்ல, அப்போதும் பதில் வராது போகவே.. “கூப்பிட்டது கூட காதில் விழாத அளவுக்கு என்ன யோசனை??” என்று சாரதாவின் தோள் தொட்டு தன் வருகையை உணர்த்த,
கணவனின் தொடுகையில் தன் சிந்தனை வலை அறுந்து விழ, திரும்பியவரின் முகம் கண்ட சந்திரன் ஆடிப் போனார். தலைமுடி கலைந்து கண்கள் சிவப்பேறி சற்று முன் வரை அழுததற்கான தடத்தை கண்ணீர் இரு கன்னங்களிலும் பதித்து சென்றிருக்க, வீங்கிய முகத்தோடு அமர்ந்திருந்த மனைவியை கண்டு பதைப்புற்றவர்,
“சாரு..! என்னடா என்னாச்சு??? உன் முகம் ஏன் இப்படி இருக்கு… அழ வேற செஞ்சுருக்க” என்று மனைவியின் தலை கோத,
எதுவும் பேசாமல் தன் தலை கோதிக் கொண்டிருந்த கணவனின் கைகளின் மேல் தன் கை வைத்து அழுத்தியபடி அமர்ந்திருக்க,
“சொல்லுடா?? என்னனு சொன்னாதானே எனக்கு தெரியும்.. இப்படி இருந்தா நான் என்னனு நினைக்குறது” என்று கேட்டதும் தான் தாமதம் அதுவரை அணை போடப்பட்டிருந்த கண்ணீர் உடைப்பெடுக்க,
“என்னனுங்க மாமா நான் சொல்றது..? நடக்குறதை எல்லாம் பார்க்குறப்போ நம்ம நிகியோட எதிர்காலத்தை நினைச்சா எனக்கு ரொம்ப்ப்ப பயம்மா இருக்குங்க மாமா” என தேம்பியபடி கூற
“அவளுக்கென்ன??? நம்ம பொண்ணோட குணத்துக்கும் திறமைக்கும் அவ ராணி மாதிரி வாழப் போறா..!” என்று சொல்ல,
“என்ன இருந்து என்ன ப்ரயோஜனமுங்க மாமா.. இந்த உலகம் அவளை வாழ விடாது போலயே…” என்று கண்ணீர் வழிந்தோட சொல்லவும்,
“இப்போ எதுக்கு இப்படி பேசிட்டு இருக்க சாரு..! என்ன நடந்துச்சு அதை முழுசா சொல்லு “ என்று குரல் உயர்த்த,
“நம்ம ராமசாமி மாமா ஒரு வரன் தகைஞ்சு வந்துருக்குனு சொன்னாரு இல்லீங்க… இன்னைக்கு பையன் வீட்டுல இருந்து கூப்பிட்டு விட்ருக்காங்க போலிருக்கு.. மாமாவும் தகவல் எதும் சொல்வாங்களா இருக்கும்னு போயிருக்காருங்க.. பையனோட அம்மா மாமாவை ரொம்ப பேசிட்டாங்க போல… எங்க பையன் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா?? அது மட்டுமில்லாம அவ்வளோ பேருக்கு முன்னாடி பெரியவங்கனு மட்டு மரியாதை இல்லாம பேசுனது எல்லாம் நாங்க கேள்வி பட்டோம்.. இந்த பொண்ணு எங்க குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டா அப்படி இப்படினு… ராமசாமி மாமா இப்போ தான் போன் செஞ்சு எல்லா விஷயமும் சொல்லிட்டு வேற தாக்கல் வந்தா சொல்றேனு சொல்லிட்டு வைச்சுட்டார்.. அந்த பையன் இப்படி இழுத்து வச்சதுக்கு எல்லாரும் நம்ம பொண்ணை இப்படி பேசுறாங்களே மாமா… எனக்கு மனசே ஆறலை” என்று நடந்ததை சொல்லி முடிக்க,
“இதுக்கு போய் நீ ஏன் இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்க சாரு..? நம்ம பொண்ணு அவங்க குடும்பத்துல போய் வாழ அவங்க கொடுத்து வைக்கல அவ்வளோ தான்..! ஒன்னு தட்டி போகுதுன்னா இதை விட பல மடங்கு நல்ல விஷயம் நமக்காக காத்திட்டு இருக்குனு அர்த்தம்”
“இன்னும் எவ்வளவு நாளுங்க… நிகிக்கும் வயசு ஏறிட்டே போகுதுல.. இவ கூட சேர்ந்த பொண்ணுங்க எல்லாம் குடும்பமா இருக்குறதை பார்க்கும் போது ஒரு அம்மாவா என் மனசு படுற பாடு எனக்கு தான் தெரியுமுங்க மாமா..”
“இங்க பாரு சாரு..! எனக்கு மட்டும் அந்த கவலை இல்லைனா நினைக்குற??? அவளுக்கான நேரம் வரும் போது யார் தடுத்தாலும் நல்லது நடந்தே தீரும்… நிகி குட்டிக்குனு இனிமே பொறக்கவா போறான்… ஏற்கனவே பொறந்து இருப்பான்.. நேரம் வரும் போது எல்லாம் அது போக்குல நடக்கும்”
“அது இல்லீங்க மாமா” என்றவரை இடை மறித்த சந்திரன், “நம்ம பொண்ணோட தைரியத்தை நாமளே இப்படி அழுது உடைக்க கூடாது…அவ முன்னாடி இப்படி செய்து வைக்காதே.. முதல்ல கண்ணை துடை.. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு..” என்று மனைவிக்கு ஆறுதல் கூறியவர்,
“கம்பெனியில இன்னைக்கு லோட் ஒன்னு வருதுப்பா. கொஞ்சம் சூப்பர்வைஸ் பண்ணிக்கோங்கனு பாப்பா சொன்னா.. நான் போயிட்டு வந்துடுறேன்” என்று விடை பெற,
“நேரம் ஆகிடுச்சுங்களே மாமா… சாப்பிட்டு போயிடுங்க” என்று கூற, “பசியில்லடா… காலையில சாப்பிட்டதே வயிறு டொம்னு இருக்கு… நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. நான் வந்து சாப்பிடுறேன்” என்றபடி கிளம்பி சென்றார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அந்த பெரிய மைதானம் முழுதும் சாமினாக்களால் போர்த்தபட்டு பல பிரிவுகளாய் தடுப்புகள் மூலம் தடுக்கப்பட்டு சிறு சிறு அறைகளாய் பிரிக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் நுழைவு வாயிலில் ‘அக்ரி இன்டெக்ஸ் -2k18’  என பொன்னிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தெர்மகோல் ஆர்ச் அழகுற வடிவமைக்கப்பட்டு ஆங்காங்கே வண்ண பலூன்களால் அலங்கரிப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பிரிவிலும் வித விதமான விவசாயம் சார்ந்த தகவல் அடங்கிய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. பல தரப்பட்ட வெளிநாட்டு கம்பெனிகள் முதல் உள்நாட்டு குறு விவசாயிகளின் சங்கங்கள் வரை அனைத்து தரப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இயற்கை உரங்கள் பற்றிய தகவல் தரும் பிரிவு, ஆர்கானிக் பாஃர்மிங் என்று சொல்லப்படுகிற கரிம வேளாண்மையினால் விளைவிக்கப்பட்ட பொருட்களின் விற்பனை கூடம், தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் கடல் உணவுகளின் உற்பத்தி பற்றிய விளக்க மாதிரிகளின் பிரிவு, தேங்காய் நெட்டி மற்றும் நார், இதர பொருட்களின் கழிவுகளில் இருந்து செய்யப்படும் கலைநயமிக்க அழகு சாதன பொருட்களின் அணிவகுப்பு அதுமட்டுமின்றி பிரபல இயந்திர கம்பெனிகளின் விவாசயத்திற்கு பயன்படும் இயந்திரங்களின் காட்சி பிரிவு என அந்த இடமே திருவிழா கோலமாய் அல்லோகலப்பட்டிருந்தது.
இது போன்ற விவசாயம் சார்ந்த கண்காட்சிக்கு முன்பெல்லாம் அவன் வந்ததில்லை… அங்கிருக்கும் பிரிவுகளில் விளக்கப்பட்ட ஒவ்வொரு தகவலும் புதியதாய் இது வரை கேள்விபடாததாய் இருந்தது. அதை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டு என்ற ஆர்வத்தையும் தூண்டி விட்டது. இவ்வாறு ஒவ்வொரு பிரிவாய் வேடிக்கை பார்த்தபடி வந்த துவாரகேஷ் கடைசியாய் நிகழினி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
நிகழினியின் பிரிவும் இயந்திர உபகரணங்களின் காட்சி பிரிவு தான்.. ஆனால் எல்லாமே கையடக்க இயந்திரங்கள்… ஸ்மார்ட் விவசாயம் என்பார்களே அதற்கு தேவையான இயந்திரங்கள். அவளுடன் இருந்த நான்கைந்து பையன்கள் அங்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு உபகரணத்தை பயன்படுத்தும் முறையை டொமோ செய்து சொல்லிக் கொடுத்து கொண்டிருக்க, நிகழினியோ அதை வாங்கும் ஆர்வமுள்ளவர்களிடம் ஏதோ பாஃர்ம் கொடுத்து நிரப்ப சொல்லி பேசிக் கொண்டிருந்தாள். அவளருகில் சென்றவன் “ ஹாய்..!” என்று விழிக்க, அதுவரை குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தவள் துவாரகேஷின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹே வாங்க வாங்க…! ஏன் நின்னுகிட்டு இருக்கீங்க… இப்படி வந்து உட்காருங்க.. ப்ளீஸ் ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க..“என்று தனக்கு இட்து புறம் கிடந்த நாற்காலி யை காட்டி அமர சொல்லி விட்டு , தன் முன்னால் அமர்ந்திருந்தவரிடம் விபரங்கள் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்த கையடக்க இயந்திரங்களின் மேல் பார்வையை ஓட விட்டவாறு அமர்ந்திருந்த துவாரகேஷின் புறம் திரும்பியவள், “நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்லைங்க… டைம் கிடைச்சா வர்றேன்னு ஏதோ ஒரு பேச்சுக்கு சொல்றீங்கனு நினைச்சேன்.. எனிவே தேங்ஸ் பாஃர் கம்மிங்” என்று சொல்ல,
“இதுக்கு எதுக்குங்க தேங்க்ஸ்… நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. இங்க வர்ற வரைக்கும் கூட எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல.. சரி உங்களோட செக்ஷன் மட்டும் பார்த்துட்டு போகலாம்னு நினைச்சேன்.. பட் ஒவ்வொரு செக்ஷன்லயும் கேட்ட விஷயங்கள் எல்லாம் ஆச்சர்யமாகவும் சில விஷயமெல்லாம் ரொம்ப ஷாக்கிங்காவும் இருந்துச்சு… கண்டிப்பா இன்னைக்கு வராம இருந்திருந்தா நிறைய விஷயம் தெரிஞ்சுக்காம மிஸ் பண்ணியிருப்பேன்னு இப்போ தோணுது” என அவன் உண்மையாக உணர்ந்ததை கூற,
“அப்போ உங்க டைம் வேஸ்ட் ஆகலை … கேட்கவே ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்றவள் தன் மேஜைக்கு அடியில் இருந்த பிளாஸ்க்கை எடுத்து அதில் இருந்த காபியை சிறிய பேப்பர் கப்பில் ஊற்றி அவனிடம் நீட்டியவள், அவனுக்கு கம்பெனி கொடுப்பதற்காக தானும் ஒன்றை எடுத்து கொண்டாள்.
“ஆக்ச்சுவலி நான் அக்ரிகல்சர் பத்தின வொர்ர்கிங் மாடல் இல்லைனா பெர்ட்டிலைசர் பத்தி எதாச்சும் எக்ஸ்பிஷனுக்கு வச்சுருப்பீங்னு நினைச்சேன்.. ஆனா நீங்க ஃபுல் அன்ட்ஃபுல் மெஷினரி ஐட்டம்ஸ் வச்சுருக்கீங்க” என்றான் தெரிந்து கொள்ளும் ஆவல் நிறைந்த குரலில்…
“நம்ம நாட்டுல விவசாயத்தோட நிலைமை இப்போ எந்த நிலையில இருக்குனு நமக்கு நல்லாவே தெரியும்… நிறைய பேர் விவசாயம் பண்றதையே விட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டாங்க… தன்னை மாதிரி தன்னோட பசங்களும் கஷ்டப்படக் கூடாதுனு இதை பற்றி சொல்லித் தரதே இல்லை.. இதுல அவங்க மேல நாம தப்பு சொல்ல முடியாது… ஒரு வேளை சாப்பாட்டுக்கே போராட்டம் பண்ண வேண்டி இருக்கும் போது அவங்களும் தான் என்ன செய்வாங்க… விவசாயம் செய்யணும்னு நினைக்குற ஒரு சிலருக்கு வேலைக்கு ஆள் கிடைக்குறது இல்லை… அதனால தான் இந்த மாதிரி செல்ஃப் வொர்க்கிங் மஷின்ஸ் செய்யலாம்னு தோணுச்சு.. நிறைய வெளிநாடுகள்ல இதைப் போல யூஸ் பண்றதை பார்த்திருப்போம்… நாமளும் ஏன் இந்த மாதிரி எபஃக்ட்டிவ் மெத்ட்ஸ் யூஸ் பண்ண கூடாதுனு யோசிச்சு இதை ட்ரை செய்தோம்… எக்ஸ்பிஷன்ல இதை காட்சிப்படுத்துனா நிறைய பேருக்கு போய் சேருமேனு தான் கொண்டு வந்தோம்” என்று சொல்ல,
காபியை ஒரு மிடறு அருந்தியபடி “வாவ் சூப்பர்ங்க… கன்ஸ்ட்ரெக்ட்டிவ் தாட்ஸ்… எல்லா மிஷின்ஷூம் ரொம்ப சின்னதா அடக்கமா இருக்கு… நைஸ்.. எந்த கம்பெனி ப்ராடெக்ட்ஸ்ங்க இதெல்லாம்.. சாரானு நேம் போட்டிருக்கு” என்று கேட்க,
“ஹா.. எங்களோட கம்பெனி ப்ராடெக்ட்ஸ் தான் இதெல்லாம்…” என்று சொல்லவும்,
“என்ன சொல்றீங்க??  நிஜமாவா..” என்றான் வியப்பு மேலிட… அவனுக்கு அவள் விவசாயம் செய்வது தெரிந்திருந்தது… ஆனால் கம்பெனியின் ஓனர் என்பது அவனுக்கு புது தகவல்..
“ஏங்க எங்களை எல்லாம் பார்த்தா கம்பெனி வச்சுருக்க மாதிரி தெரியலையா??”
“அய்யோ நான் அந்த அர்த்தத்துல கேட்கலைங்க..” என்று கூறியவனின் விழிகளில் முன்னர் இருந்த ஆர்வத்தோடு தற்போது சுவாரஸ்யமும் கூடி விட்டிருந்தது.
சிறு புன்னகையை அவனை நோக்கி எய்து விட்டு ‘சாரா ஆட்டோ மொபைல்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்’ தான் எங்க கம்பெனி நேம்… கோயம்புத்தூர் டூ அன்னூர் போற வழியில அவுட்டர் ஏரியால இருக்கு… சின்ன லெவல்ல தான் பண்ணிட்டு இருக்கோம்.. கம்பெனி ஸ்டார்ட் செய்து ஜஸ்ட் ஒரு வருஷம் தான் ஆகுது” என்று சொல்லிக் கொண்டே, இவர்கள் அமர்ந்திருந்த திசைக்கு எதிர் திசையில் இருந்த நால்வரை அழைத்தாள் நிகழினி.
“நீங்க பார்த்த இந்த மிஷின்ஸ் எல்லாம் டிசைன் பண்ணது இவங்க தான்…! வெரி டேலன்டட்…” என்று பெருமை மிகுந்த குரலில் நின்றிருந்த நால்வரையும் துவாரகேஷூக்கு அறிமுகம் செய்து வைக்க,
“ரியலி சூப்பர் வொர்க் கைய்ஸ்… கீப் இட் அப்” என்ற படி அவர்களின் கை குலுக்கி வாழ்த்து சொல்லி விட்டு தன்னையும் அவர்களிடத்தில் அறிமுகம் செய்து கொண்டான்.
தங்களின் நன்றியை அவனுக்கு தெரிவித்து விட்டு “அக்கா..! லன்ச் டைம் ஆகிடுச்சு… நீங்க போய் சாப்பிட்டு வாங்க… அதுக்கு பிறகு நாங்க போறோம்” என்று நால்வரில் ஒருவன் கூற
“மார்னிங்க்ல இருந்து வந்த எல்லாருக்கும் எக்ஸ்ப்ளைன் பண்ணி பண்ணி நீங்க தான் ட்யர்டா தெரியுறீங்க… பர்ஸ்ட் நீங்க போய் சாப்பிடுங்க தென் நானும், சாரும் போறோம்” என்று துவாரகேஷை கை காட்டி சொல்லி விட்டு அவர்களை அனுப்பி வைக்க, அதன் பின் தான் ஏதோ நினைவு வந்தவளாய் “ சாரிங்க.. உங்களுக்கு ஓகேவானு கேட்காம நான் வெயிட் பண்றேன்னு சொல்லிட்டேன்… உங்களுக்கு பசிக்குதா.. அப்படின்னா நீங்களும் பசங்க கூட போய் சாப்பிடுங்க..” என்று கேட்க,
“இல்ல இருக்கட்டும்.. இப்போ தானே காஃபி குடிச்சேன்… கொஞ்ச நேரம் கழித்து நாம சேர்ந்தே போய் சாப்பிட்டுக்கலாம் நோ ப்ராப்ளம்” என்றான் இன்னும் அவளைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில்..
வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மகளின் அலுவலகத்தில் அமர்ந்திருந்த சந்திரனின் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது… என்ன தான் மனைவியை சமாதனப்படுத்தி இருந்தாலும் ஒரு தந்தையாக மகளின் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்ற அலைப்புறுதல் அவருக்கு எழாமல் இல்லை
“ஹலோ சார்! திருமகள் மண்டபம்ங்களா???… வர்ற 25-ம் தேதி மண்டபம் புக்கிங் வேணும்… கிடைக்கும்ங்களா??” என்று சந்திரன் கேட்டதும்,
“25-ம் தேதியா… இருங்க சார் லெட்ஜர் பார்த்துட்டு சொல்றேன்.. லைன்ல வெயிட் பண்ணுங்க” என்று சொல்ல,
இடைப்பட்ட நேரத்தில் அங்கு வந்த சாரதா “என்னங்க என்ன சொல்றாங்க?? கிடைக்கும்ங்களா..??” என்று கேட்க,
“வெயிட் பண்ணுங்க.. பார்த்து சொல்றேன்னு சொல்றாங்க” என்றதும், “கடவுளே…! இது கண்டிப்பா கிடைச்சுடணும்” என்று மனதிற்குள் வேக வேகமாக ஒரு வேண்டுதலை செலுத்தி விட்டு, கணவனின் பதிலுக்காய் காத்திருக்க தொடங்கினார்.
“சார்..! லைன்ல இருக்கீங்களா..?” என அந்த திருமண மண்டபத்தின் மேலாளர் கேட்க,
“சொல்லுங்க சார்…. அன்னைக்கு ஃப்ரீ தானா???” என்று சந்திரன் ஆவலாய் கேட்க,
“உங்க நல்ல நேரம் சார்… நேத்து ஈவ்னிங் தான் ஒருத்தங்க புக்கிங் கேன்சல் பண்ணியிருக்காங்க… நீங்க இப்போ வந்தா ரசீது போட்டுக்கலாம்” என்று சொன்னதும்,
“ரொம்ப நன்றி சார்… இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என்று விட்டு, மனைவியிடம் விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்க… அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் நிகழினி.
“என்னப்பா..புக்கிங் ரெசீப்ட்னு பேசிட்டு இருக்கீங்க.. என்ன விஷயம்” என்று கேட்க, இதை சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாளோ என நினைத்த சந்திரனும் சாரதாவும் அமைதியாய் இருக்க,
“என்ன ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்கீங்க…சொல்லுங்க என்ன புக் பண்ண போறீங்க?” என்று கேட்கவும்,
“இல்லடா.. நிச்சயதார்த்தம் பண்றதுக்கு மண்டபம் புக் பண்ணியிருந்தோம்ல அது சின்னதா இருக்காம்.. அவங்க வீட்டு சைட்ல இருந்து நிறைய பேர் இன்வைட் பண்ணியிருக்காங்க போல…அதான் வேற மண்டபம் பாருங்கனு நேத்து மாப்பிள்ளை வீட்டுல இருந்து போன் பண்ணினாங்க” என்று சொன்னதும் பொரியத் தொடங்கினாள் நிகழினி.
“என்ன நினைச்சுட்டு இருக்காங்க அவங்க…?? அன்னைக்கு அவங்களும் பார்த்து ஓகே சொன்ன பிறகு தானே பிக்ஸ் பண்ணினோம்.. இப்போ வந்து அது நொள்ளை இது நொட்டைனு சொன்னா என்னப்பா அர்த்தம்… எனக்கு என்னவோ இது எல்லாம் சரியாபடலப்பா” என்று கோபமாக பேச,
“இல்லடா… நிறைய பேர் இன்வைட் பண்ணலாம்னு இருக்கோம்.. இப்போ பார்த்திருக்கிறது கன்வினியன்டா இருக்காதுனு சொல்றாங்க… அப்படி சொல்லும் போது என்ன பண்றதுடாம்மா… “ என்று சொல்லவும்,
“ஏன்ப்பா அன்னைக்கே இரண்டு பக்கமும் பேசி எஸ்டிமேட் போட்டு தானே மண்டபம் பிக்ஸ் பண்ணோம்… இப்போ வந்து அவங்க இஷ்டத்துக்கு பண்ணினா என்ன அர்த்தம்??? இப்போ கேன்சல் பண்ணா 25% நமக்கு தானேப்பா லாஸ்… எவ்வளோ ஈசியா சொல்றாங்க…பணத்தை விடுங்க இப்படி உறுதியே இல்லாம ஒண்ணுல இருந்து இன்னொன்னுக்கு தாவிக்கிட்டே இருந்தா எப்படி?” என்று கடுப்பாக,
“நிகி… கல்யாணம் பேசி முடிக்குறதுனா சும்மாவா…இந்த மாதிரி சில சில முரண்பாடுகள் வரத்தான் செய்யும்… இதுக்கெல்லாம் கோபப்பட்டு கத்துனா சரியாகாது… கல்யாணமாகி அந்த வீட்டுக்கு வாழப் போறவ நீ… இப்போவே அவங்க மேல் நெகட்டிவ் தாட்ஸை வளர விடாதே… நானும் அம்மாவும் இதெல்லாம் பார்த்துக்குறோம்.. நீ ரிலாக்ஸ்டா இருடாம்மா” என்று சந்திரன் மகளிடம் எடுத்துரைக்க,
“இனிமேலாச்சும் பேசும் போது கட் அன்ட் ரைட்டா பேசிடுங்க… நான் சொல்றதை சொல்லிட்டேன்…அப்புறம் உங்க இஷ்டம்” என்று விட்டு நகர்ந்து விட,
“என்னங்க மாமா … இப்படி பேசிட்டு போறா..” என்று சாரதா அங்கலாய்க்க,
“அவ சொல்றதும் சரி தானே சாரு…நாமளும் பேசுனா இன்னும் கொஞ்சம் கோபப்படுவானு தான் அவளை சமாதனப்படுத்துற மாதிரி பேசினேன்… இனி அந்த அம்மாகிட்ட தெளிவா பேசிடணும்.. சரி நான் போய் மண்டபம் புக் பண்ணிட்டு வந்துடுறேன்.” என்றுவிட்டு கிளம்பி விட்டார்.

Advertisement