Advertisement

நெஞ்சம் 1:
“முத்தண்ணா என்னோட வண்டியில சீட்டுக்கு அடியில் மூன்று பை இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க” என்று குரல் கொடுத்துக் கொண்டே, அந்த அகன்ற தொட்டியில் நீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்தாள் நிகழினி.
கரைத்து வைக்கப்பட்டிருந்த சாணப் பால், கோமியம் கலந்த கலவையை தொட்டியில் ஊற்றி, அதோடு நாட்டு சர்க்கரையையும் அதில் கொட்டி, ஒரு கலக்கு கலக்க அதற்குள் முத்துவும் வந்திருக்க, அவர் கொண்டு வந்த தழைச்சத்து பைகளை வாங்கி அதையும் தொட்டிக்குள் போட்டாள்.
மீண்டும் ஒரு முறை அந்த கலவையை கலக்கியவள், “முத்தண்ணா தினமும் ஒரு தடவை இப்படி நல்லா கலக்கி விட்ருங்க” என்று சொல்ல, “சரி கண்ணு” என்று தலையாட்டியவரிடம், “மூன்று நாளுக்கு ரெண்டாவது தொட்டியில் இருக்க அமிர்த கரைசலை மட்டும் யூஸ் பண்ணிக்கலாம்” என்றவள்,
வென்ச்சுரி மற்றும் வால்வு மூலம் திறந்து விடும் முறையை அவருக்கு விளக்கி கூற, அவரும் புரிந்தற்கு அடையாளமாய் தலையசைத்து விட்டு “நீ கவலைப்படாம போயிட்டு வா கண்ணு! நான் பார்த்துக்குறேன்” என்று சொன்னதும் சிறு புன்னகையோடு “சரிண்ணா! நீங்க கிளம்புங்க நான் தோப்புல போய் குளிச்சுட்டு அப்புறம் கிளம்புறேன்” என்று சொல்ல,
“சரி கண்ணு..! குளிச்சுட்டு நேரமா வீட்டுக்கு போங்க” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொள்ள, நிகழனியோ தங்கள் தோப்பில் இருந்த வட்டக் கிணற்றை நோக்கி நடை போட்டாள்.
எப்போதும் வெயில் சற்று தழைந்து இருக்கும் மாலை வேளையில் தென்னை மரங்களின் காவலுக்கு  நடுவே இருக்கும் அந்த வட்ட கிணற்றில் குளிப்பது அவளுக்கு பிடித்தமான ஒன்று. இன்றும் அந்த இன்பக் குளியலுக்கு மனம் ஏங்க இதோ கிணற்றில் குதித்தும் விட்டாள்.
சிலு சிலுவென்ற தென்னங்கீற்றின் இசை மழையில் நனைந்தபடி, கிணற்றுக்குள் முங்கு நீச்சல் அடித்தபடி நீரோடு விளையாடிக் கொண்டிருந்தவளை, மேற்பகுதியில் வைத்துவிட்டு வந்திருந்த அலைப்பேசி குரலெழுப்பி அழைத்தது.
அப்போது தான் வெகு நேரமாக இங்கேயே இருந்துவிட்டோம் என்பது புரிய  ஈரமாகியிருந்த பாவாடை தாவணியை பிழிந்து விட்டு படியேறி மேலே வந்தாள்.
ஏற்கனவே அடித்து ஓய்ந்திருந்த அலைப்பேசி மீண்டும் ஒலிக்க துவங்கியிருக்க அதை எடுத்தவள், “இதோ கிளம்பிட்டேன் சந்துப்பா” என்று தந்தைக்கு தகவல் சொல்லி விட்டு, அலைப்பேசியை எடுத்து கொண்டு தன் வண்டிக்கு அருகில் வந்தவள், அதில் இருந்த டவலை எடுத்து மேலே போர்த்திக் கொண்டபடி, வீடு நோக்கி தன் வெஸ்பாவை முடுக்கினாள்.
வீட்டின் உள்ளே நுழைந்து வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தியவளை எதிர்கொண்ட அவளது தந்தை சந்திரன், “என்னம்மா! ஊருக்கு கிளம்புற அன்னைக்குமா தோட்டத்துக்குப் போன?”
“அமிர்த கரைசல் ஏழு நாள் ஆகிடுச்சுலப்பா… இப்போ அதுல நுண்ணுயிரி எதுவும் இருக்காது… ஸ்டாக்ல இருக்க கரசைல் ஒரு மூணு நாளுக்கு வரும்.. அதுக்கு பிறகு வேணும்ல எப்படியும் நான் ஊருக்கு வர மூன்று நாள் ஆகிடும்..அதான் புது கரைசல் ரெடி பண்ணிட்டு வந்தேன்..” என்று சொன்னதும்,
“என்னவோம்மா ஏதோ புதுசா சொல்ற.. அப்பாக்கு ஒண்ணும் புரிபடலை” என்றதும், 
“இயற்கை விவசாய முறையில பயிர்கள் நல்லா வளர்றதுக்கு தயாரிக்கிற கரைசல்ப்பா… அதோட வீரியம் ஏழு நாளுக்கு மேல இருக்காது” என்று அதை பற்றி சொல்லிக் கொண்டே தன் அறைக்குள் சென்றாள்.
ஊருக்கு செல்வதற்கு தேவையான துணிமணிகளை தனது கபோர்டில் இருந்து வெளியே எடுத்து மெத்தையில் வைத்தவள், ஷெல்பில் இருந்த ட்ராவல் பேக்கை எடுத்துக் கொண்டிருக்க, “ஒழுங்கா நேரா நேரத்துக்கு சாப்பிடுறதே கிடையாது.. எப்போவும் வேலையே கதினு கிடக்க வேண்டியது. சின்னப் பிள்ளையா இடுப்புல தூக்கி வச்சு ஊட்டி விடுறதுக்கு.. கொஞ்சமாச்சும் உடம்பை பார்த்துக்க வேணாமா???” என முணு முணுத்தப்படி கையில் கேரட் ஜூஸ் நிரம்பியிருந்த கண்ணாடிக் குவளையோடு மகளின் அறைக்குள் நுழைந்தார் சாரதா.
“உனக்கு நூறு ஆயுசும்மா… இப்போதான் என்னடா வீட்டுக்குள்ள நுழைஞ்சு ஐந்து நிமிஷத்துக்கு மேல ஆகுதே! இன்னும் ரேடியோ ஆன் ஆகலையேனு நினைச்சேன்.. கரெக்ட்டா  ப்ரிக்வென்சி( அலைவரிசை) செட் பண்ணி கத்துறதுக்கு ரெடியாகிட்டமா “ என அன்னையை பார்த்து புன்னகைத்தபடி மெத்தையில் வந்து அமர,
“ஏன்டி..! உன் நல்லதுக்கு சொன்னா அது கத்துற மாதிரி இருக்கா உனக்கு… எல்லாம் உங்கப்பா கொடுக்குற செல்லம். மதியமும் சரியா சாப்பிடலை.. இந்தா இந்த ஜூஸையாவது குடி “ என்று அவள் தலையில் மெலிதாய் குட்டியவாறு கையில் குவளையை திணிக்க,
“ஹ்ம்ம் இப்படி தலையில தட்டி கொடுங்க… அப்புறம் எப்படி உடம்புல ஒட்டும்” என்றபடி பழச்சாறை ஒரு மிடறு அருந்தியவள் அன்னையிடம் இருந்து எந்த பதிலும் வராது போகவே திரும்பியவளின் கண்களில் கலங்கிய முகமாக அமர்ந்திருந்த தாயின் முகமே தெரிந்தது.
அந்த ஃபேன்டா ஆரஞ்சு நிறத்தில் நுணுக்கமான தங்கநிறப்பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டு மெரூன் வண்ண ஜரிகை நெய்யப்பட்ட பட்டுப்புடவையை மெதுவாக தடவியவரின் கைகள் நடுங்கிற்று. சில மாதங்களுக்கு முன்னால் கல்யாணத்திற்கு புடவை எடுப்பதற்காக கடைக்கு சென்றிருந்த போது நடந்தவை எல்லாம் சாரதாவின் கண் முன்னே வலம் வரத் தொடங்கியது…
நிகழினி தன் வாழ்வில் எத்தனையோ முடிவுகளை தெளிவாக எடுத்தாலும் அவளுக்கு உடை தேர்வில் மட்டும் ஏனோ அன்னையின் முடிவு மட்டுமே திருப்தியாக இருக்கும்..  “நானா உடுத்தப் போறேன்… உனக்கு பிடிச்சதை எடு” என்று சாரதா சொன்னாலும், “ப்ச் அது இருக்கட்டும்… நீ சொல்லும்மா இது எனக்கு நல்லா இருக்கா” என்று அவரிடம் தான் அபிப்ராயம் கேட்பாள்.
 இவள் துணிக்கடையில் சாரதாவை படுத்தும் பாட்டை காண்கையில் அங்குள்ள பணியாளர்களுக்கு ஸ்வாரசியமாக இருக்கும்… இவளை விட சிறு பிள்ளைகள் தனியே வந்து தேவையானதை எடுத்து செல்வதை பார்த்தவர்களுக்கு, கல்யாண வயது இருக்கும் பெண் தன் அன்னையின் விருப்பத்தை சொல்ல சொல்லி நச்சரிப்பது அவர்களுக்கு ஸ்வாரசியமாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அன்றும் அப்படி தான் முகூர்த்தப்புடவை எடுக்கும் போதிலும் அன்னையின் விருப்பத்திற்கிணங்க இந்த ஆரஞ்சு வண்ண புடவையை எடுத்திருந்தாள்.. எந்த நேரத்தில் அதை வாங்கினார்களோ??? அதை உடுத்தும் பாக்கியம் அமையாமலே போயிற்று..
பழைய நினைவில் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள புடவையை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவரை கண்ட நிகழினி புடவையை அன்னையின் கண்ணில் படுமாறு வைத்த தன் மடத்தனத்தை நொந்தவாறு “அம்மா கஷ்டப்பட்டு அயர்னிங் பண்ணி வச்சுருக்கேன் கசக்கி விட்றாத” என சூழ்நிலையை சகஜமாக்க கேலி செய்தபடி அதை எடுத்து தனது பேக்கிற்குள் திணித்தாள்.
தன்னை தேற்ற மகள் முயலுகிறாள் என புரிந்தாலும் அவளது முகத்தில் கலக்கம் ஏதும் தெரிகிறதா என அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவரது எண்ணத்தை சொல்லாமலே படித்தவளாய், “சந்தோஷமான நினைவுகளை நியாபகப்படுத்துற பொருட்கள் தான்ம்மா அடையாளமாய் பத்திரப்படுத்தணும்… இதெல்லாம் எனக்கு ஒரு ட்ரெஸ் எக்ஸ்ட்ரா கிடைச்சிருக்கு அவ்வளவு தான்… இன்னும் நீ அதையே நினைச்சு மனசை ரணமாக்கிக்காதே… கடந்து போன விஷயத்தை வரவேற்க நினைக்காதேம்மா!” என்றவள் எழுந்து, மாற்று உடையை எடுத்துக் கொண்டு அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
என்ன பெண் இவள்?? என்று தான் சாரதாவிற்கு தோன்றியது… இப்போது கூட புடவையை வெறும் உடை அதோடு தொடர்புடைய எந்த சம்பவமும் எனக்கு நியாபகமும் இல்லை.. அதை நியாபகம் வைக்க வேண்டிய தேவையும் இல்லையென எவ்வளவு எளிதாய் கடந்து போகிறாள்… இவளிடத்தில் வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் அழுது கரைந்து போயிருப்பாள்… அவளை தேற்ற மிகுந்த சிரமப்பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.. இவளாகையால் நொடியில் சுதாரித்து தன் முடிவில் எவ்வளவு உறுதியோடு தன்னையும் தன் கணவனையும் தேற்றி அழைத்து வந்தாள்… மகளது மன முதிர்ச்சியை காண்கையில் பெருமையாக இருந்தாலும், சில நேரங்களில் ஒரு அன்னையாய் சாரதாவிற்கு மகளின் முடிவு கோபத்தை ஏற்படுத்தும்.
“நைட் என்னை பட்னி போடலாம்னு முடிவு பண்ணிட்டியாம்மா? இன்னும் நைட் டிபன் பேக் பண்ணி தரலை… நேரமாகுது” என்ற மகளின் குரலில் நினைவுக்கு வந்தவர், “அய்யோ.! சப்பாத்திக்கு மாவு ரெடி பண்ணி வச்சேன்… உன்கிட்ட பேசிட்டு இருந்ததுல மறந்தே போய்ட்டேன்… ஒரு பத்து நிமிஷம் இரு! பேக் பண்ணிடுவேன்” என்றபடி அறையை விட்டு வெளியேறிய அன்னையை கண்டவளின் முகத்தில் குறுநகை படர்ந்தது.
லைட் பிங்க் நிற த்ரீ போர்த் சட்டை அதற்கு பொருத்தமாய் அடர் ஊதா நிற ஜீன்ஸ் பேன்ட்… உயரே தூக்கி போடப்பட்ட போனி டெயிலோடு அறையில் இருந்து வெளிப்பட்டவளை கண்ட சந்திரன் புன்னகைக்க, “இப்போ எதுக்கு உங்களுக்கு இந்த சிரிப்பு சந்துப்பா?”என்று கேள்வி கேட்டபடி, ஷோபாவில் அமர்ந்திருந்தவரின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள் நிகழினி.
“இல்லம்மா… தென்னை மரம் கொஞ்சம் காத்துல சாஞ்சிடுச்சு போல அதான்…”என்று சொல்ல,
“என்னதுப்பா??? எங்க நம்ம தோப்புலயா??? யார் சொன்னா??? முத்தண்ணா போன் பண்ணினாரா?? காத்து ஒண்ணும் அவ்வளவு பலமா அடிக்கலையேப்பா..அது சரி  இதுல என்ன சிரிப்பு உங்களுக்கு?” என்று மூச்சு விடாமல் கேட்டுக் கொண்டிருந்தவளின் குரலில் கோபம் தெரிய, சந்திரனோ அடக்கப்பட்ட புன்னகையில் உதடுகள் துடிக்க, மகளது கோபத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.
“அப்பா! இப்போ என்னாச்சுனு சொல்லப் போறிங்களா?? இல்லையா??” என்று மிரட்ட,
“அது வந்தும்மா… நீ சின்னப் பிள்ளையா இருக்குறப்போ உங்க அம்மா உச்சியில் குடுமி போட்டு விடுவா… அது பார்க்க தென்னை மரம் போல இருக்கும்… இப்போ நீ வளர்ந்துட்டல்ல அதான் தென்னை மரத்துக்கும் வயசாகி சாஞ்சிடுச்சு போல” என்று சொல்லி சிரிக்க,
அப்போது தான் தனது போனி டெயிலை பார்த்து தந்தை கிண்டல் செய்வது புரிய அவரை முறைத்தவள், “என் ஹேர் ஸ்டைலை பார்த்தா உங்களுக்கு தென்னை மரம் சாஞ்சது போல இருக்கா??? உங்களை!!” என கழுத்தை நெறிப்பது போல கைகளை கொண்டு சென்றவள்,அவரது இரு கன்னத்தையும் பிடித்து கிள்ளி வைத்தாள்.
“ஆஆஆ அம்மா” என்று வலியில் முனகியதும் அவரது கன்னத்தை விடுவித்தவள் “வயசாகிடுச்சுப்பா உங்களுக்கு… மெலிசா கிள்ளுனதை கூட தாங்க முடியலை” என்று கேலி செய்து புன்னகைக்க,
 “உங்கப்பாக்கு மட்டும் வயசாகலை! உனக்கும் தான்… அது புரியுதா இல்லையா??” என்று கேட்டபடி அங்கிருந்த டீபாயில் இரவு உணவு பார்சலை வைத்தார் சாரதா. 
“நம்ம ராமசாமி பெரியப்பா ஒரு வரன் சொல்லிருக்காரு… நல்ல பையனாம்… கோயம்புத்தூர்ல கன்ஷ்ட்ரெக்ஷன் கம்பெனி வச்சுருக்கானாம்… நாளைக்கு அதை பத்தி பேச வரேன்னு சொல்லியிருக்காரு…” என்று சொல்லிக் கொண்டே போக, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… கொஞ்ச நாள் போகட்டும் பார்த்துக்கலாம்…”என்றவளை இடைமறித்த சாரதா,
“இன்னும் எவ்வளோ நாள் இதையே சொல்லிட்டு இருக்க போற…எங்களுக்கும் உனக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கணும்னு ஆசை இருக்காதா?? நாங்க கதியா இருக்கும் போதே உனக்கு செய்ய வேண்டியதை செய்துடணும்னு நினைக்குறது தப்பாடி…” சாரதாவின் குரலில் மகள் சம்மதம் சொல்லவில்லையே என்ற எரிச்சல் அப்பட்டமாய் தெரித்தது.
“அம்மா! நான் ஒண்ணும் கல்யாணமே பண்ணிக்காம இப்படியே இருக்கப் போறேன்னு சொல்லலை… ஒரு தடவை அவசர அவசரமா முடிவு செய்து நடந்தது எல்லாம் போதும்… கொஞ்ச நாள் போகட்டும்னு தான் சொல்றேன்…”என்றவள் எழுந்து கொள்ள, ஏதோ சொல்ல வாய் திறந்த சாரதாவை கை நீட்டி அமைதியாய் இருக்கும்படி சைகை செய்த சந்திரன்,
“சாரு! எதுக்கு இப்போ அவசரப்படுற… எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துக்கு நடக்கும்… அதான் நிகி கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்றால…அவ சொல்ற மாதிரி அப்புறம் பார்த்துக்கலாம்… ராமசாமி அண்ணன்கிட்ட நான் பேசிக்குறேன்” என்று சொன்னதும்,
“தேங்க்யூப்பா! என்னை புரிஞ்சுகிட்டதுக்கு” என்று அவர் நெஞ்சில் சாய்ந்தபடி தந்தையை கட்டிக் கொள்ள, சந்திரனும் மகளது தலையை வருடிக் கொடுக்க, “ஏற்கனவே சாஞ்ச தென்னை மரம்னு கிண்டல் பண்ணிங்க…இப்போ தலையை தடவி கொடுத்து ஹேர்ஸ்டைலை டேமேஜ் பண்ணாதீங்க” என்று சிணுங்கிக் கொண்டே தந்தையிடம் இருந்து விலகியவள் புன்னகைக்க, அவரும் புன்னகைத்தார்.
தந்தையும், மகளும் புன்னகைப்பதை கண்ட சாரதா “எல்லாம் நீங்க கொடுக்குற இடம்ங்க மாமா … பொம்பளை பிள்ளையை ஆம்பிளை பிள்ளை மாதிரி வளர்த்து வச்சுருக்கீங்க…சொல்ற எதாச்சும் கேட்குறாளானு பாருங்க…”என சிடுசிடுக்க,
“அதென்ன?? ஆம்பிளை பிள்ளை மாதிரினு சொல்ற… பொண்ணை தைரியமா வளர்த்துருக்கேன்னு சொல்லு…” என்று சொன்னதும் தந்தைக்கு ஹை-பை கொடுத்துக் கொள்ள, மேலும் தாயை கோபம் கொள்ள வைக்காது, இருவரிடமும் சொல்லிக் கொண்டு சிங்கார சென்னையை நோக்கி புறப்பட்டாள் நிகழினி.
சந்திரன் – சாரதா தம்பதியரின் இரண்டாவது மகள் தான் நம் நாயகி… சந்திரன் தமிழாசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்… மூத்தவள் இலக்கியா… திருமணமாகி திருச்சியில் வசிக்கிறாள்… அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகன் பெயர் அனுஷ். அவளது கணவன் ஷ்யாம் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றுகிறான்.. நிகழினி பொறியியல் பட்டதாரி… ஆயினும் இயற்கை விவசாயித்தின் மீது இருந்த ஆர்வத்தால், பெரிய நிறுவனங்களில் கிடைத்த வேலைவாய்ப்பை எல்லாம் உதறி விட்டு தனது ஊரில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டாள்…
மிக விரைவில் இம்முடிவை எடுத்திருந்தாலும், அதை செயல்படுத்துவது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை… பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்தவர்களே நிலங்களை வீட்டு மனைக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு ஒதுங்கி கொண்டு இருக்கையில் விவசாயம் செய்ய போகிறேன் என்று பெற்றோர் முன் போய் நின்றாள் நிகழினி.
சந்திரன்  மறுப்பேதும் தெரிவிக்காது மகளின் முடிவிற்கு இன்முகமாகவே சம்மதம் தந்தார்… ஆனால் ஆரம்பத்தில் சாரதாவிற்கு சிறு மனத்தாங்கல் இருக்கவே செய்தது… தன் ரிடையர்மென்ட்டிற்கு கிடைத்த பணத்தில் நிகழினியின் பங்கில் நிலம் வாங்கி கொடுக்கலாம் என்று நினைத்த போது, இலக்கியாவின் பங்கையும் நிகழினிக்கே கொடுத்து உதவும்படி ஷ்யாம் கூறிவிட, பத்து ஏக்கர் நிகழினியின் பெயரில் பதிவு செய்யப்பட்டது… நிகழினியின் திருமணத்திற்கென்று ஒன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் நிலத்தில் போட்டது பற்றி சாரதா கேட்ட போது சந்திரனிடம் இருந்து வந்தது ஒரு பதில் தான் “நம்ம நிகி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு” என்பது தான் அது…
அந்த நம்பிக்கை தந்த உத்வேகம் நிகழினியின் வெற்றிக்கு தூண்டு கோலாய் அமைந்தது… முதல் வருடம் தட்டு தடுமாறியவளுக்கு இரண்டாவது வருடத்தில் அதில் இருக்கும் நெளிவு சுழிவுகள் புலப்பட்டது… ஒரே பயிரை விளைவிக்காமல் பல வகைகளை வேளாண்துறை பேராசியர்களின் அறிவுரைப்படி, இயற்கை விவசாய முறையில் செய்ய தொடங்கினாள்… நல்ல லாபம் கிடைத்தது…தந்தை தனக்காக செலவு செய்த பணத்தை ஒரே ஆண்டில் திருப்பி கொடுத்தாள்.
 ஆனால் சந்திரன் அவளது திருமணத்திற்கென கொஞ்சத்தை மட்டும் எடுத்து கொண்டு மீதியை அவளிடமே தந்து பயன்படுத்திக் கொள்ள சொல்ல, தான் மிகவும் விரும்பி தேர்ந்தெடுத்து படித்த படிப்பிற்கு நியாயம் செய்ய நினைத்தவள் அன்னையின் பெயரில் கம்பெனியை ஆரம்பித்தாள்…இன்னும் இரண்டு மாதங்களில் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது “சாரு ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ்”. இந்த ஐந்து ஆண்டுகளில் அவளது வளர்ச்சி அசூர வேகம் தான்… அதனால் தான் என்னவோ அதற்கு திருஷ்டி பொட்டு வைத்தாற் போன்று ஒரு வருடத்திற்கு முன் அந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது.
நிகழினி தற்போது கிளம்பி சென்று கொண்டிருப்பது சென்னையில் இன்றிலிருந்து மூன்றாம் நாள் நடைபெறவிருக்கும் வேளாண் கண்காட்சிக்கு தான்… அங்கு நடக்கும் செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவிருக்கிறாள்… ஆனால் அதற்கு முன் அவளது தோழி சுகன்யாவின் திருமணம் நடக்கவிருப்பதால் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காய் இரண்டு நாட்களுக்கு முன்னமே தன் பயணத்தை தொடங்கிவிட்டாள்.

Advertisement