Advertisement

நெஞ்சம் 3:
என்ன கோபம் உங்களுக்கு என் மேல??? நான் உங்க வண்டியில ஏற மாட்டேன்னு சொன்னதா??? இல்லை நாம வேண்டாம்னு சொல்றதுக்கு முன்னாடி இவ முந்திக்கிட்டாளேன்ற கோபமா???” நிகழினியின் கேள்வியை எதிர்பாராது ஒரு நொடி அதிர்ந்தவன் பின் பதிலேதும் கூறாது அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
 
என்ன பாஸ்? கேள்வி கேட்டா பதில் சொல்லணும் அதை விட்டுட்டு இப்படி முறைக்கக் கூடாது!என்றவளிடம்,
 
நீ கேட்டா நான் பதில் சொல்லணுமா? அப்படியெல்லாம் சொல்ல முடியாது போ இங்கே இருந்து…” என்று சீற,
 
ஓஓ பதில் சொல்ல முடியாதா? இல்லை என்ன பதில் சொல்றதுனு தெரியலையா?” என்று கேட்டதும்,ஏதோ சொல்ல முற்பட,
 
அந்நேரம் அங்கு வந்த விஷ்ணு டேய் நீ இங்க இருக்கியா? நான் உன்னை வெளிய தேடிட்டு இருந்தேன்.. கிருஷ்ணா கூப்பிட்டான் வா போகலாம்என்று அவனை அழைத்ததும் வேறு வழியின்றி நண்பனுடன் செல்ல,
 
பாஸ்! ஒண்ணும் அவசரம் இல்லைநாளைக்கு வரை இங்க தான் இருப்பேன்…பொறுமையா பதில் சொல்லுங்கஎன்று புன்னகைக்க, அதைக் கண்டு துவாரகேஷ் பல்லை கடிக்க, விஷ்ணுவோ இருவரையும் ஒருவித ஸ்வாரஸ்யத்தோடு பார்த்திருந்தான்.
 
ஹேய் DK! என்னடா பதில் வேணும்னு அந்தப் பொண்ணு கேட்குறா? என்ன எதும் லவ் ப்ரொபோஸல்லா?” என்று துவாரகேஷை பார்த்துக் கண் சிமிட்ட,
 
மண்ணாங்கட்டி! அல்ரெடி செம கான்ட்ல இருக்கேன் பேசாமா வாஎன்று முன்னே வேக நடை போட,
 
டேய்! இன்னைக்கு மார்னிங் தான் அந்தப் பொண்ணைப் பார்த்தோம்இப்போ என்னடானா உன்கிட்ட பதில் வேணும்னு சொல்றா? அப்போ லவ் ப்ரோபசல் இல்லைனா வேறு என்னவாம்?” மீண்டும் தன் கேள்விகளால் துருவியெடுக்க,
 
லூசு மாதிரி பேசாத! நீ நினைக்குற மாதிரி இல்லைஇது வேறஎன்று கடுப்படிக்க,
 
வேரோ தண்டோஇப்போ என்ன விஷயம்னு தெரிஞ்சாகணும் இல்ல கிருஷ்ணாகிட்டயே நியாயத்தைக் கேட்போம்என்று சொன்னதும், விஷ்ணுவை முறைக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாது அங்கு வந்த கிருஷ்ணாவிடம் தான் பார்த்த அனைத்தையும் பற்றிக் கூறிவிட, இம்முறை தூவரகேஷை கண்டு புருவம் தூக்குவது கிருஷ்ணாவின் முறையாகிப் போனது.
 
என்னடா! விஷ்ணு சொல்றது மாதிரி லவ் ப்ரொபோசல் தானா??” என்று அவனைச் சீண்ட,
 
அதெல்லாம் இல்ல.. இந்த லூசு ஏதோ உளறுறான்.. நீ வேற எதும் கற்பனை பண்ணிக்காத!என்று கிருஷ்ணாவை பார்த்து சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட,
 
விஷ்ணுவோ கன்பார்ம் இது காதல்ல தான் முடியப் போகுது! காலம் காலமா காதலுக்கான முதல் இன்க்ரீடியன்ட்டே மோதல் தானேஎனக் கிருஷ்ணாவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம் முணு முணுக்க,
 
டேய்! உனக்குக் கட்டம் சரியில்லைனு நினைக்குறேன்அவன் காதுல மட்டும் விழுந்துச்சு அப்புறம் இருக்கு உனக்கு வேடிக்கைஎன்றான் கிருஷ்ணா.
 
என்னடா! ரொம்பத் தான் பயம் காட்டுறஎனக்கென்ன பயமா?? சமாளிக்க முடியலைனா டக்குனு கால்ல விழுந்துட மாட்டேன்அவன் சொல்லப் போவதை கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா விஷ்ணுவின் கடைசி வரியில் அவனை நோக்கி கேவலமான பார்வையை வீசிவிட்டு அவனைப் பார்த்து துப்புவது போல் சைகை செய்ய,
 
உன்னை மாதிரி அவன் துப்புனாலும் துடைச்சு போட்டு போய்ட்டே இருப்பேன்என்னை யாருனு நினைச்சீங்க இதுகெல்லாம் அசர்ற ஆளா நான்.. முடியுமா? நடக்குமா?” என்று பில்டப் கொடுக்க, கிருஷ்ணா தலையில் அடித்துக் கொண்டான்.
 
இவர்களின் சம்பாஷனை எதுவும் அறியாதவனாய் சற்று தள்ளி கிடந்த நாற்காலியில் அமர்ந்து கைகளுக்கு ஒன்றை முட்டுக் கொடுத்தபடி, மேடை அலங்காரத்தைத் தன் ஐபோனில் படம் பிடித்துக் கொண்டிருந்தான் துவாரகேஷ்.
 
சிறிது நேரத்தில் வரவேற்பிற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக் குழுவின் கச்சேரி துவங்கி விட, மணமக்களும் மேடையேறிட சரியாய் இருந்ததுஅதன் பின் ஒவ்வொருவராய் அன்பளிப்புக் கொடுப்பதும், போட்டோ எடுப்பதுமாய் இருக்க அந்த இடமே விழாவிற்கான குதூகலம் நிறைந்து காணப்பட்டதுவந்திருந்த கூட்டத்தில் பாதிப் பேர் உணவருந்த சென்று விட, அடுத்ததாக நிகழினியும் அவளது தோழியர் கூட்டமும் வாழ்த்து தெரிவிக்க மேடையேறினர்.
 
சென்றவர்கள் பத்து நிமிடம் ஆகியும் கீழிறங்காமல் ஒருவருக்கொருவர் வாரிக் கொண்டு கேலி செய்து கலகலத்துக் கொண்டிருக்க, அவர்கள் வந்ததும் செல்லலாம் என்று நினைத்து அமர்ந்திருந்த துவாரகேஷின் முகத்தில் எரிச்சல் படர்ந்தது.
 
டேய்! இவளுங்க வருஷக் கணக்கான கதையைப் பேசிட்டு தான் இறங்குவாளுங்க போலயேநேரம் ஆகுதுடா சாப்பிட்டு கிளம்பணும் அப்போ தான் மார்னிங் சீக்கிரம் வர முடியும்என்று விஷ்ணுவிடம் பல்லை கடிக்க, அவனோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது மேடையில் நின்றிருந்த கன்னியர்களை நோக்கி காதல் அம்பு எய்த முயற்சித்துக் கொண்டிருந்தான்.
 
தன் கேள்விக்குப் பதில் வராது போகவே, பக்கத்தில் இருந்த விஷ்ணுவை நோக்கி பார்வையைத் திருப்பியவன் கடுப்பாகி அவனது தலையில் தட்ட, அதில் உணர்ச்சி பெற்றவனாய் என்னடா?” என்பதாய் புருவம் உயர்த்த, “என்ன பண்ணிகிட்டு இருக்க?” என்று கேட்டான் துவாரகேஷ்.
 
அது.. அது வந்து ஹான்ஸ்டேஜ் டெக்கரேஷன்லாம் செமயா இருக்குலடாஅதான் பார்த்துட்டு இருக்கேன்என்று சொல்ல,
 
டெக்கரேஷனை பார்த்து ரசிக்கிற மூஞ்சியைப் பாரு! கொஞ்சம் விட்டா நீ ஊத்துற ஜொள்ளுல என் ட்ரெஸ்ஸை நனைச்சிருப்ப…காது வரை வாயை பொளந்து பொண்ணுங்களைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு டெக்கரேஷனை பார்த்துட்டு இருந்தாராம்.. இதை நான் நம்பணும்
 
நீயும் பார்க்க மாட்ட! என்னையும் பார்க்க விட மாட்டஉன்கூடலாம் கல்யாண வீட்டுக்கு வரக் கூடாதுடா ஏதாச்சும் கோயில் பஜனைக்குத் தான் வரணும்நிம்மதியா சைட் அடிக்க விடுறானா? கிராதகன்என்று கடைசி வரியை மட்டும் மெலிதாய் முணு முணுக்க,
 
என்ன முணுமுணுக்குற! வா போய்க் கிஃப்ட்டை கொடுத்துட்டு கிளம்பலாம்நாம போனா தான் இறங்குவாளுங்க போலஅவங்களா வரட்டும்னு வெயிட் பண்ணா காலையில முகூர்த்தத்துக்குத் தான் போவோம்என்று விட்டு இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, விஷ்ணுவும் உடன் எழுந்து கொண்டான்.
 
ஸ்டேஜை நோக்கி செல்லும் போதே சற்றுத் தூரம் தள்ளி நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவை பார்த்து கையசைக்க, யாரோ உறவினர் ஒருவரிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணாவும் நண்பனின் கையசைப்பை கண்டு கொண்டு, “ஒரு நிமிஷம் மாமா! இதோ வர்றேன்என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.
 
நண்பர்களோடு மேடையேறியவன், தங்கையின் கணவனுக்குத் தன் நண்பர்களை அறிமுகம் செய்ததும், ஒருவருக்கொருவர் ஸ்நேகமாய்க் கை குலுக்கிக் கொள்ள, கொண்டு வந்த பரிசை கொடுத்து விட்டு மூவருமாய் மணமக்களுடன் போட்டோ ஒன்றை எடுத்து விட்டு கீழிறங்கினர்.
 
இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்று கொண்டிருந்தவனை கிருஷ்ணா! ஒரு நிமிஷம் இங்கே வந்துட்டு போ…” என்று அவன் தந்தை அழைக்கவும், ஒரு நிமிடம் தயங்கி நிற்க,
 
அப்பா கூப்பிடுறாருல போய் என்னனு கேளு! நாங்க சாப்பிட்டு கிளம்புறோம் மார்னிங் வந்துடுறோம்! எதும் ஹெல்ப்னா கால் பண்ணுஎன்று அவனை அனுப்பி விட,
 
சரிடா! பார்த்து ட்ரைவ் பண்ணுங்க.. மார்னிங் கொஞ்சம் சீக்கிரம் வரப் பாருங்க!என்று விட்டுத் தந்தையிடம் செல்ல, துவாரகேஷ், விஷ்ணு இருவரும் டைனிங் ஹாலிற்குச் சென்றனர்.
 
விஷ்ணுவிடம் பேசிக் கொண்டே, அங்குப் போடப்பட்டிருந்த மேஜை வரிசையில் உள் நுழைந்தவன், தனக்கு வலப்புறம் அமர்ந்திருந்த நிகழினியை உட்காரப் போகையில் தான் கவனித்தான்
 
தன்னருகே உட்காராமல் நின்று கொண்டிருந்த துவாரகேஷை பார்த்து உட்காருங்க பாஸ்! நான் ஒண்ணும் சில பேரை மாதிரி உர்ர்னு முறைக்க மாட்டேன் உட்கார்ந்து சாப்பிடுங்க…” காலையில் அவன் அவளைப் பார்த்து முறைத்ததை மனதில் வைத்து கூறினாள்.
 
காலையில் ரெயில்வே ஸ்டேஷன் வாசலில் வைத்து கிருஷ்ணா, அவளைத் துவாரகேஷின் பைக்கில் வர சொன்னதும்அவன் முகம் போன போக்கை நொடியில் கிரகித்தவள் தான் வருவது அவனுக்கு விருப்பம் இல்லை போல என எண்ணியவள் அவனுடன் வர மறுத்தாள். ஆயினும் இங்கு வந்த பின்பும் அவனது முறைப்பு தொடரவே, காரணமே இல்லாத கோபம் எதற்கு?? என்று நினைத்தவள் மனம் தாளாமல் அவனிடமே பேசி விடலாம் என்று முடிவுடன் தன் எண்ணத்தைக் கேட்டும் விட்டாள்பதில் தான் வந்தபாடாக இல்லை.
 
உட்காருங்க தம்பி! என்ன நின்னுட்டு இருக்கீங்க…” என்று பரிமாறுபவர் கேட்க, எதுவும் சொல்லாது அமர்ந்தான். ஹல்வா யம்மியா இருக்குஎன்று மூன்று விரல்களால் இலையில் நெய் வழிய இருந்த ஹல்வா துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அதன் சுவையைக் கண்களை மூடி ரசித்தவளை கண்டவன், அவனின் இதழ்களோரம் புன்னகை கீற்று நெளிந்தது.
 
அதை அவளுக்குக் காட்டாது மறைத்தவன் விறைப்புடனேயே சாப்பிட துவங்க, இடையில் ஒரு முறை துவாரகேஷின் புறம் திரும்பி பார்த்தவள் பின்பு அவளும் அமைதியாய் சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டாள்.
இரவு சுகன்யாவின் அறையில் நிகழினியும், சில உறவினர் பெண்களும் தங்கிக் கொள்ள, புது இடம் ஆகையால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நிகி, தாமதமாகவே உறங்கியிருந்தாலும், தினமும் நான்கு மணிக்கே எழுந்து பழக்கம் என்பதால் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள். சற்று நேரம் படுக்கையில் புரண்டவள், அதற்கு மேலும் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்து கொண்டாள்.
 
குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து விட்டு தற்போதைக்கு ஒரு காட்டன் சுடிதாரை அணிந்து கொண்டவளுக்கு, பசியெடுப்பது போல் தோன்ற மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள்.
 
ஆங்காங்கே உறவினர்களின் நடமாட்டம் இருக்க, மணமேடைக்கு இடதுபுறம் வைக்கப்பட்டிருந்த டீ கேனில் இருந்து டீயை பேப்பர் கப்புகளில் நிறைத்துக் கொண்டு அதைக் குடித்த வண்ணம் சிலர் நின்றிருக்க, இருந்த பசியில் நிகழினி தனக்கும் ஒன்றை எடுத்துக் குடித்தாள். அந்நேரம் அங்கு வந்த சுகன்யாவின் அன்னை என்ன கண்ணு! அதுக்குள்ள எழுந்துட்டியா?? உங்களை எழுப்பி விடணும்னு தான் வந்தேன்சுகன்யா எழுந்துட்டாளா?” என்று கேட்க,
 
இல்லம்மா! புது இடம்ல தூக்கம் வரலை அதான் எழுந்துட்டேன்என்று சொல்லவும்,
 
சரி கண்ணு! சுகன்யாவையும் எழுப்பி விட்டும்மாநான் அவங்க அத்தையை நலங்கு வைக்க ரெடியாகச் சொல்லிட்டு வர்றேன்என்றதும்,
 
எழப் போனவளிடம், “குடிச்சுட்டு போய் எழுப்பினா போதும் கண்ணு!எனப் பாதி டீ இருந்த கப்பை பார்த்து சொல்லி விட்டு மாடியேற, சரியென்பதாய் தலையசைத்தவள் ஒரே மடக்கில் மீதமிருந்த தேநீரை வாயில் சரித்து விட்டு அறைக்குச் சென்றாள்.
 
அறைக்குள் நுழைந்ததும் குட்மார்னிங் நிகி! எழுந்து ரொம்ப நேரமாச்சா?” என்று கேட்டபடி கைகளைத் தளர்த்திச் சோம்பல் முறிக்க, “ம்ம் ஆமா சுகன்! எப்போதும் எழுந்துக்குற டைம்க்கு முழிப்பு வந்துடுச்சுநீ ப்ரெஷ் ஆகு! நான் உனக்குக் குடிக்கக் காபி எடுத்துட்டு வர்றேன்என்ற நிகழினியை தடுத்தவள்,
 
நீ இருடி! எனக்கு இப்போ எதும் வேண்டாம்ப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்என்றுவிட்டு குளியலறையை நோக்கி செல்ல,
 
அந்த அறையோடு ஒட்டி இருந்த பால்கனி போன்ற அமைப்பில் நின்று கொண்டு அதிகாலை வேளையில் சாலையில் வாகனங்கள் சீறிக் கொண்டு செல்வதை வேடிக்கை பார்த்த வண்ணம் நின்று கொண்டிருக்க அதற்குள் சுகன்யாவும் வந்து விட, நலங்கு வைப்பதற்கு அழைக்க உறவினர்கள் வந்துவிட்டிருந்தனர். அதிலேயே ஒரு மணி நேரம் கழிந்திருக்க, அதன் பின் சுகன்யாவை அலங்காரம் செய்யத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு கிடைத்த இடைவெளியில் தானும் கிளம்பி இருந்தாள்.
 
சுகன்! இப்போவாச்சும் உனக்குக் குடிக்க எதாவது எடுத்திட்டு வரவாஎன்று அதிகாலையில் எழுந்தது பாதி, சடங்குகளில் அலைக்கழித்தது மீதியென வாடிப் போய் இருந்த தோழியின் முகம் கண்டு கேட்க,
 
இல்ல நிகி! எனக்கு இப்போ எதும் வேண்டாம்சாப்பிட்டா இன்னும் கொஞ்சம் தான் ஒரு மாதிரி ஆகிடும்என்று மறுக்க,
 
சொல்றதை கேளு சுகன்! எப்படியும் கல்யாணம் முடிஞ்சு மதியம் லஞ்சுக்கு தான் சாப்பிட டைம் கிடைக்கும்அது வரைக்கும் தாங்குவியா??? இப்போவே பாரு ஃபேஸ் எவ்வளோ டல் அடிக்குதுனுபேசாம நான் குடிக்க ஜூஸ் இல்லை லெமன் டீ எதாச்சும் வாங்கிட்டு வர்றேன்..என்று கூறி அறையை விட்டு வெளியேறியவள், சமையல் செய்யும் இடத்திற்குச் சென்று கையோடு வாங்கிக் கொண்டு வர, அவள் வழியை மறைத்தாற் போன்று வந்து நின்றான் அவன்.
 
எவன்டா அது இப்படி வழியை மறைச்சிட்டு வந்து நிற்கிறான்என்று மனதில் எண்ணியபடி நிமிர்ந்து நோக்க, தன் கைகளைக் குறுக்கே கட்டியபடி தலை சாய்த்து இதழ் நிறைந்த புன்னகையோடு நின்றிருந்த துவாரகேஷை கண்டவள் என்ன?” என்பதாய் புருவம் உயர்த்தினாள்.
 
முகத்தில் படர்ந்திருந்த வசீகரப் புன்னகையில் ஒரு சதவீதம் கூடக் குறையாது, ஒரு கை தன் பேன்ட் பாக்கெட்டினுள் தஞ்சம் அடைந்திருக்க, மற்றொரு கையை அவள் முன்பாக நீட்டி, ப்ரெண்ட்ஸ்?” என்று கேட்க, அவளோ அப்படியே அசையாமல் நிற்க,
 
ஹலோ???“ என்று அவள் முன் கையை ஆட்ட அவனது குரலில் பேட்டரி பொருத்தப்பட்ட பொம்மையாய் ஹான்என் என்ன கேட்டீங்க?” என்று முதலில் திணறி பின் தெளிவான குரலில் அவனைப் பார்த்து கேட்டாள்.
 
ப்ரெண்ட்ஸ்?” என்று மீண்டும் கேட்க, தன் கையில் இருந்த டம்ளரை வலது கைக்கு மாற்றி விட்டு அவன் நீட்டியிருந்த கரத்தை பற்றிக் குலுக்கியவள்,”என்ன திடீர்னு?” என்று புன்னகையோடு வினவ,
 
அதுவா.. நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன்நடந்த விஷயத்துல உன் மேல எந்தத் தப்பும் இல்லைஇன்பாஃக்ட் நானும் அதைத் தான் செய்ய நினைச்சுருந்தேன்பிகாஸ் முன்ன பின்ன தெரியாத பொண்ணை என் பைக்ல கூட்டிட்டு போறதுல எனக்குப் பிடிக்காது. ஆனாலும் அதை நீயே முதல்ல சொன்னதும் என் ஈகோ அடிப்பட்ட மாதிரி பீல் பண்ணிட்டேன். அதான் நேத்து அப்படிக் கோபமா நடந்துகிட்டேன்.. டெரிபிலி சாரி ஃபார் வாட் எவர் ஹேப்பன்ட்…” என்று வருத்தம் தெரிவிக்க,
 
அய்யோ விடுங்க..! உங்க மைன்ட் ஸ்டேட் புரியுது இட்ஸ் ஓகேஇப்போ தான் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே என்று புன்னகைக்க, அது துவாரகேஷையும் தொற்றிக் கொண்டது.
 
ஒரு வழியாய் சுகன்யாவின் திருமணமும் சிறப்பாய் நடந்து முடிந்து விட, மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்வதற்கு அனைவரும் ரெடியாகிக் கொண்டிருக்க, நிகழினியும் விடுதிக்கு செல்ல நேரமாகி கொண்டிருப்பதை உணர்ந்தவள், சுகன்யாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட,
 
நிகி! நாளைக்கு மார்னிங் தானே உனக்குச் செமினார்ஈவ்னிங் ப்ரீ தானே?” என்று சுகன்யா கேட்க,
 
ஆமா சுகன்! ப்ரீ தான்மும்பைக்குப் போறதுக்குப் பேக்கிங்ல எதும் ஹெல்ப் வேணுமா?” சுகன்யாவின் கணவன் மும்பையில் வேலை பார்ப்பதால், தானும் மும்பை கிளைக்கு மாற்றல் வாங்கியிருந்தவள் நாளை மறு நாள் போவதாக முன்பே கூறியிருக்க, அதை மனதில் வைத்து அதற்காக எதும் உதவிக்காகக் கேட்கிறாளோ? என்ற எண்ணத்தில் நிகழினி வினவ,
 
அதெல்லாம் இல்லடி! நாளைக்கு ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் *** ஹோட்டல்ல சின்னதா ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கோம்நீயும் வந்திடுஎன்று அழைக்க,
 
ம்ம் சரிஎன்றவள் வர வேண்டிய நேரத்தை பற்றிக் கேட்டு விட்டு, தங்கியிருந்த அறையில் இருந்து தனது லக்கேஜ் பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
 
மண்டபத்தை விட்டு வெளியில் வர, துவாரகேஷ், கிருஷ்ணா, விஷ்ணு மூவரும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். பேக்கும் கையுமாய் வந்து கொண்டிருந்தவளை கண்ட கிருஷ்ணா, “ நிகி! அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட?” என்று கேட்க,
 
பிஜி ஹாஸ்ட்ல்க்கு தான்! அல்ரெடி டைம் ஆகிடுச்சுஇப்போவே கிளம்பினா தான் சீக்கிரம் போக முடியும்இல்லைனா டிராபிக்ல மாட்ட வேன்டி வரும்என்று பதில் கொடுக்க,
 
நைட் வீட்டுல தங்கிட்டு காலையில போகலாம்லஇன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வீட்டுக்கு கிளம்பிடுவோம்உனக்குக் கம்பெனிக்கு என் கஸின் சிஸ்டர்ஸ் இருக்காங்க…என்று சொல்ல,
 
இல்லண்ணா! அது சரியா வராதுநாளைக்கு ஒரு செமினார் இருக்கு அதுக்குக் கொஞ்சம் ரெடி பண்ணனும்சோ கிளம்புறேன்.. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக்என்றதும்,
 
“DK! நிகியை கொஞ்சம் ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிடேன்டாநானே போய்டுவேன்.. இப்போ சுகன்யாவை அவங்க வீட்டுல கொண்டு போய் விடணும் அந்த நேரம் போய் நான் இல்லாம இருந்தா நல்லாயிருக்காது அதான் சொல்றேன்என்று கிருஷ்ணாவை துவாரகேஷிடம் தான் செல்ல முடியாததற்குத் தன்னிலை விளக்கம் கொடுக்க,
 
அவன் பதில் கூறும் முன் முந்திக் கொண்ட நிகழினி இல்ல வேணாம்! நான் பஸ்லயே போய்க்குவேன்எதுக்கு என்னால வீண் சிரமம்நான் கிளம்புறேன் பைஎன்று விட்டு கிளம்பிவிட,
 
துவாரகேஷோ நேற்று நடந்ததை மனதில் வைத்து தான் இன்று மறுத்து விட்டாளோ என்று நினைத்தபடி நின்றிருக்க,
 
கிருஷ்ணா தன் தோளை தொட்டு வாடா! உள்ளே போவோம்என்று அழைத்ததும் நிகியை பற்றிய நினைப்பை உதறியவனாய் நண்பர்களின் பின் சென்றான்.

Advertisement