Advertisement

நெஞ்சம் 2:

 

முகம் கழுவி, சுத்தப்படுத்திக் எளிய ஒப்பனை செய்து விட்டு தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து நிகழினி அமரவும், அவளது அலைப்பேசி ஒலிக்கவும் சரியாய் இருந்தது. அதை எடுத்துப் பார்க்க அவளின் தோழி சுகன்யா தான் அழைத்திருந்தாள்.

 

“ஹேய் நிகி! எங்க வந்துட்டு இருக்க??” என்று கேட்டதும், “இன்னும் ஹாஃப் அன் அவர் ஆகும்டி சென்ட்ரல் ஸ்டேஷன் ரீச் பண்றதுக்கு” என்று தோழிக்கு பதில் கூறினாள் நிகழினி.

 

“அப்போ சரி! நான் அண்ணனை உன்னை பிக்கப் பண்ண வர சொல்லிடுறேன்… நீ அவன் கூட வீட்டுக்கு வந்துடு சரியா?” என்று சொல்ல,

 

 நிகழினியோ அதை மறுத்தபடி, “இல்லை சுகன்! நான் நேரா பிஜி ஹாஸ்டல்க்கு போய்ட்டு ரெப்ரெஷ் ஆகிட்டு ஈவ்னிங் ரிஷப்ஷன்க்கு நேரா மண்டபத்துக்கு வந்துடுறேன்! “

 

“ஹேய்..! என்னடி விளையாடுறியா??? ஒழுங்கு மரியாதையா வந்து சேரு பார்த்துக்கோ… ஹாஸ்டல்ல போய் என்ன பண்ண போற??? இனி இப்படி ஒண்ணா இருக்குற சான்ஸ் கிடைக்குமோ கிடைக்காதோ?? இந்த ரெண்டு நாளும் என்கூடவே இருடி ப்ளீஸ்…”என்று கெஞ்ச, அதற்கு மேல் நிகழினிக்குமே மறுத்து பேச மனம் வரவில்லை.

 

“சரிங்க மேடம்..! இனி உங்க பேச்சுக்கு அப்பீல் இல்லை” என்று புன்னகைக்க,

“ஹ்ம்ம் தட்ஸ் மை கேர்ள்” என்றவள் தன் அண்ணனுக்கு அழைப்பதாக சொல்லி வைத்துவிட, ஜன்னலோரம் அமர்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிகி.

 

“மெல்ல சிரித்தாள்… என்னை உள்ளம் சரித்தாள்…” பாடல் ப்ளூடூத் ஹெட் போன் வழியே உருகி ஓட, அதை ரசித்தபடி சுற்றுபுறத்தில் இருந்த இரைச்சல்களை மறந்து தனது ராயல் என்பீல்டை போக்குவரத்து மிகுந்த சாலையில் லாவகமாக செலுத்திக் கொண்டிருந்த துவாரகேஷை, ஒலியெழுப்ப துவங்கிய அலைப்பேசி அவனின் ஓட்டத்திற்கு வேகத்தடை போட்டது.

 

வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி, பேன்ட் பாக்கெட்டில் இருந்த அலைப்பேசியை எடுத்து காதிற்கு கொடுத்தவன் “ம்ம் சொல்லு…” என்றதும்,

 

அந்த பக்கமிருந்து என்ன பதில் வந்ததோ, “சென்ட்ரல்க்கா?? என்ன விளையாடுறியா?” என்று குரல் உயர்த்த, அந்த பக்கம் கெஞ்சுவது துவாரகேஷின் முகச் சுழிப்பிலேயே தெரிந்தது.

 

“சரி சரி..! வந்து தொலையுறேன்… மார்னிங்கே அறுக்காத..!” என்று பதிலளித்தவன், சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி தனது பயணத்தை தொடங்க… அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஸ்டேஷனை அடைந்தவன், அங்கே பார்க்கிங் ஏரியாவில் நின்றிருந்த நண்பர்களின் அருகில் சென்று வண்டியை நிறுத்தினான்.

 

அங்கு நின்றிருந்த தனது நண்பன் கிருஷ்ணாவை முறைத்தபடி, “ஏன்டா! சன்டே அதுவுமா நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்க விடாம மார்னிங்ல இருந்து அங்க வா.. இங்க வான்னு ப்ளானை மாத்திட்டே இருக்க… மகனே உன்னை கொல்லப் போறேன் பாரு..!” என்று கடுப்படித்தபடி ஹெல்மெட்டை கழற்றி, கலைந்திருந்த தலைமுடியை ஒரு கையால் கோதிவிட்டபடி கேட்டான்.

 

“என்னை என்னடா பண்ண சொல்ற! எல்லா வேலையையும் கான்ட்ராக்ட்டா கொடுத்துடலாம்னு சொன்னா அந்த மனுஷன் கேட்குறாரா… அதெல்லாம் சரிப்படாது மொத்தமா அவங்க பொறுப்புல குடுத்தா ஏமாத்திடுவாங்க..அவங்க கேட்க கேட்க பொருளை வாங்கி கொடுத்தா தான் பணம் மிச்சமாகும்னு லாஜிக் பேசி என்னை படுத்தி எடுக்குறாரு…! இப்போவும் இந்தா இதையெல்லாம் வாங்கிட்டு வர சொன்னார்… அதான் ஹெல்ப்க்கு உன்னை கூப்பிட்டேன் அதுக்குள்ள நம்ம விஷ்ணு வந்துட்டான் சரினு கிளம்பி வந்தா… சுகன்யா போன் பண்ணி அவ ப்ரெண்ட் வர்றா பிக்கப் பண்ண சொன்னா.. அதான் உன்னை இங்க வர சொன்னேன்” என்று மூச்சு விடாமல் சொல்லி முடிக்க,

 

“பிக்கப்னு சொன்னதும் பல் இளிச்சுட்டு வந்துட்டியாக்கும்! உன்னை நம்பி அவ ப்ரெண்டை கூப்பிட்டு வர சொல்லிருக்கா பாரு..! கஷ்டகாலம்” என்று துவாரகேஷ் தலையில் அடித்துக் கொள்ள,

 

விஷ்ணுவும் “சரியா சொன்னடா! நிகி நிகினு அந்த பொண்ணுக்கு பேர் வச்ச அவங்க அப்பா அம்மா கூட இவ்வளவு தடவை கூப்பிட்டு இருக்க மாட்டாங்க… இங்க வர்றதுக்குள்ள என் காதை பஞ்சர் ஆக்கிட்டான்…” நொந்து கொண்டான்.

 

“ஆமா இன்னைக்கு உன் டீம் மெம்பர்ஸ் வொர்க் பண்ணிட்டு இருக்காங்க…நீ என்ன இங்க நின்னுட்டு இருக்க..! நாளைக்கு தானே ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்.. எல்லா வொர்க்கும் முடிஞ்சுதா? ”என்று துவாரகேஷ் கேட்க,

“ஹி ஹி நாளைக்கு தானே சப்மிட் பண்ணனும்… மதியம் நான் அவங்க கூட ஜாயின் பண்ணிக்குவேன்டா… வந்த இடத்துலயும் வேலையை பத்தி தான் பேசுவியாடா???” என்றவனின் குரலில் சலிப்பு தெரிய,

 

“வொர்க் தான் ஃப்ர்ஸ்ட்…”என மேலே ஏதோ கூற வந்தவனின் அலைப்பேசி குரல் கொடுக்க, அதை எடுத்தவன் விஷ்ணுவை முறைத்து கொண்டே “சொல்லுங்க” என்றதும்,

 

“சாரி சார்..! டிஸ்டர்ப் பண்ணினதுக்கு… நாங்க விஷ்ணு சாருக்கு தான் ட்ரை பண்ணோம்… அவர் அட்டென்ட் பண்ணலை… மார்னிங்கே சொன்னாரு நான் கொஞ்சம் பிஸி ஆப்டர்னூன் தான் வருவேன்னு.. இப்போ ஒரு டவுட் சார் அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு” என்று விஷ்ணு டீம் மெட் ரம்யா இழுக்க,

“ஆமா ஆமா..! விஷ்ணு சார் ரொம்ப்ப்ப்ப பிஸி தான் … நீங்க சொல்லுங்க ரம்யா என்ன டவுட்னு” என்று கேட்கவும், விஷ்ணுவிற்கு பக்கென்று ஆனது…

 

“சும்மாவே முறைப்பான்… இதுல இந்த ரம்யா எரியுற நெருப்புல ரம்மை ஊத்திட்டாளே… இனி குபு குபுனுல எரியும்” என்றவனின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் மாறியது… அதற்கு காரணமும் உண்டு… வேலை என்று வந்து விட்டால், துவாரகேஷ் நண்பன் என்று கூட பார்க்க மாட்டான்… அவ்வளவு கெடுபிடியானவன்… இன்னைக்கு, நாளைக்கு என்ற பசப்பு வார்த்தைகள் அவனிடம் பலிக்காது…இந்த குணத்தால் துவாரகேஷிடம் அடிக்கடி வாங்கி கட்டிக் கொள்வது விஷ்ணு தான்.

 

“டேட்டா பேஸ் கனெக்ட்டிவிட்டில எரர் காட்டுது சார்…இது மட்டும் லிங்க் ஆகிடுச்சுனா செவன்ட்டி ஃபைவ் பெர்சன்ட் வொர்க் முடிஞ்சிடும்” என்றதும், அதை ஸ்கீரின் ஷாட் எடுத்து தனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் படி கூறியவன், அடுத்த சில நிமிடங்களில் எங்கே தவறு என்பதை கண்டறிந்து அதை சரி செய்யும் முறையையும் அவர்களுக்கு அனுப்பி இருந்தான்.

 

“என்னடா இவன்! இப்படி நிமிஷத்துல ப்ராப்ளத்தை சரி பண்ணிட்டான்” என ஆச்சர்யம் குறையாத குரலில் விஷ்ணு, அருகில் இருந்த கிருஷ்ணாவின் காதை கடிக்க,

 

“அதனால தான் நாம இன்னும் டீம் லீடாக இருக்கோம்… அவன் ப்ராஜெக்ட் மேனேஜரா இருக்கான்..” என்ற கிருஷ்ணாவின் குரலில் சிறிதும் பொறாமை இல்லை.

 

“நமக்கெதுக்குடா அசிங்கமா மேனேஜர் போஸ்ட் எல்லாம்” என்று கவுண்டமணி பாணியில் விஷ்ணு சொல்ல,

 

“அங்க பாரு..! நீ சொன்ன சிங்கம் உன்னை பலி போடுறதுக்கு பாசமா பார்த்துட்டு இருக்கு”என்று கிருஷ்ணா விஷ்ணுவை பார்த்து நமட்டு சிரிப்பு ஒன்றை உதிர்க்க,விஷ்ணு திரும்பி பார்க்க துவாரகேஷோ விஷ்ணுவை முறைத்தான்.

 

“ஹேய்..! அந்த பொண்ணுக்கு போன் பண்ணி கேளுடா… எங்க இருக்கானு… சீக்கிரம் கிளம்புவோம்… நான் வேற ஆபிஸ் போகணும்… ப்ராஜெக்ட் ரிப்போர்ட் ரெடி பண்ணனும்.. எல்லாம் உன்னால தான்..” என்னவோ அவனது கையை பிடித்து வேலை செய்ய விடாமல் செய்தது போலான பாவனையோடு பேச, அதை கண்டு மற்ற இருவரும் “ஓவரா பொங்காதடா! வேலை மேல அக்கறை இருக்க மூஞ்சைப் பாரு” என்று கூறி சிரிக்க, விஷ்ணு அசடு வழிந்தான்.

 

அதற்குள் நிகழினியே கிருஷ்ணாவிற்கு அழைத்து, அவனிருக்கும் இடத்தை கேட்டுக் கொண்டு தானே அங்கு வருவதாய் கூற, அவனும் சரி என்பதாய் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய முற்பட,

 

“என்னடா..! உன் முகத்துல திடீர்னு ஆயிரம் வால்ட்ஸ் பல்ப் எரியுது… என்ன விஷயம்” என விஷ்ணு நூல் விட்டு பார்க்க,

 

விஷ்ணுவின் கேலியில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தை புரிந்து கொண்டவனாய் “ஹேய் லூசாடா நீ!  நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணுமில்லை” என்று பதிலளிக்க,

 

“நாங்க என்ன நினைக்குறோம்னு உனக்கு எப்படி ராசா தெரியும்! இதுவரை இப்படி ஒரு பிரகாசத்தை நாங்க பார்த்தது இல்லையே..!”என துவாரகேஷூம் விஷ்ணுவுடன் சேர்ந்து கொண்டு கேலியில் இறங்கினான்.

 

“என்னை அப்புறமா ஓட்டுங்கடா..! இப்போ கொஞ்சம் அடக்கி வாசிங்க… அவ முன்னாடி எதையாச்சும் பேசி என்னை டேமேஜ் பண்ணிடாதீங்கடா ப்ளீஸ்…” என்று கெஞ்ச துவங்க,

“நீ கரெக்ட் பண்ணவே ட்ரை செய்தாலும் நாங்க எதுவும் சொல்ல மாட்டோம் போதுமா..?” என்று சத்தியம் செய்யாத குறையாய் செய்து கொடுத்தான் துவாரகேஷ்.

கிருஷ்ணாவின் பின்னால் விஷ்ணு ஏறுவதை கண்ட துவாரகேஷ், “டேய்! அந்த பொண்ணு எதுல வருவா??” என்று கேள்வி தொடுக்க,

 

“அதுக்கு தானேடா உன்னை வர சொன்னேன்…“ என்று கிருஷ்ணா சொன்னதும் அதெல்லாம் சரிப்பட்டு வராது,

 

“டேய் விஷ்ணு! நீ என் கூட வா… அவன் அந்த பொண்ணை கூப்பிட்டு வரட்டும்” என்றான்.

 

“ஏன் சீட்டை பார்க் பண்ற மாதிரியாடா வண்டி வச்சுருக்க… இதுல கையில ரெண்டு பை வேற… என்னால முடியாது… கிடைச்ச கோல்டன் சான்ஸை மிஸ் பண்ணாதே மச்சான்” என்று துவாரகேஷை பார்த்து கண் சிமிட்ட,

 

“போடாங்” என்றவன் அடுத்து என்ன சொல்லியிருப்பானோ அதற்குள் “நிகி வந்துட்டா!” என்ற கிருஷ்ணாவின் குரல் இடைமறித்தது.

 

நிகழினி நெருங்கி இவர்களை நோக்கி வர, அவளிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு  கிருஷ்ணா “இவன் என் ப்ரெண்ட் தான் நிகி… நீ அவன் கூட வா… என்னோட பைக்ல கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் இருக்கு..” என்று சொல்ல,

 

பைக்கில் அமர்ந்திருந்தவனின் முகத்தை கண்டவள் என்ன நினைத்தாளோ, “இல்லண்ணா! நான் ஆட்டோல வர்றேன்” என்று சொல்ல துவாரகேஷின் முகம் இறுகியது.

 

தெரியாத நபருடன் வரத் தயங்குகிறாள் போல என்று நினைத்த கிருஷ்ணா அறியவில்லை அவள் அவனை தெரிந்ததினால் தான் வரவில்லை என்று!

“அப்போ ஒண்ணு செய்யலாம்… DK நீ என்னோட பைக் ரைட் பண்றியா??… நானும் நிகியும் உன் பைக்ல வர்றோம்” என்று கேட்க, வேறு வழியில்லாமல் வண்டியிலிருந்து இறங்கியவன், நிகிழினியை பார்த்து முறைத்துக் கொண்டே, கிருஷ்ணாவின் பைக்கை ஸ்டார்ட் செய்தவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

 

“என்ன நினைச்சுட்டு இருக்கா..??? இவளுக்கு என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதா..?? பெரிய இவ மாதிரி ஆட்டோவில் போய்க்குறேன் சொல்றா”என்று நிகழினியை பொறுமி தீர்த்தபடி இருந்தான் துவாரகேஷ்.

 

 

“ஹேய் நிகி..!  வா வா… எவ்வளோ நாள் ஆச்சு பார்த்து” என்று குதுகலமான குரலில் தோழியை வரவேற்றவள், அவளை அணைத்துக் கொண்டாள். சுகன்யாவும் நிகழினியும் கல்லூரியில் வேறு வேறு பாடப்பிரிவுகளில் படித்திருந்தாலும் இருவரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தனர். அங்கு தான் அவர்களது நட்பு மலர தொடங்கியது… இருவரும் பார்த்துக் கொண்டு வருடங்கள் நான்கை கடந்திருந்தாலும் கல்லூரிக்கால நட்பு சிறிதும் வீரியம் குறையாமல் இருந்தது.

 

நிகழினியின் திருமணம் அதாவது அவளது மொழியில் அந்த சம்பவம் நடைபெறுவதாக இருந்த போது சுகன்யா புனேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசி நேரத்தில் அவளால் வர முடியாது போகவே தோழியின் திருமணத்திற்கு செல்லாத வருத்தம் இருந்தது…உண்மையான அன்பு கொண்டவர்களின் ஆசையை கடவுள் சில நேரங்களில் ஈடேற்றி தருவார் போலும்.. சுகன்யா விஷயத்திலும் அது போலவே நடந்தது… அவள் கலந்து கொள்ளாத நிகழினியின் திருமணம் நடைபெறவே இல்லை.

 

“என்னடி! இப்படி மெலிஞ்சு கறுத்து போய்ட்ட…” என நான்கு வருட மாற்றம் கண்டு நிகழினியை பார்த்து கேட்க,

“பின்ன! உன்னை மாதிரி ஏசியிலயா நாள் முழுக்க உட்கார்ந்துருக்கேன்… இது என் உழைப்புக்கு கிடைச்ச கலர்டி… ஐ லவ் இட்” என்று புன்னகை ததும்பும் குரலில் கூறியவளின் முகத்தில் தான் எவ்வளவு பெருமிதம்!

 

“எவ்வளோ பெரிய பெரிய கம்பெனியில் இருந்து ஆஃபர் வந்துச்சு … எல்லாத்தையும் உதறிட்டு இந்த கஷ்டம் தேவைதானா??” என்று அங்கலாய்த்த தோழியின் கன்னத்தை தட்டியவள்,

 

“நீ சொல்ற அந்த ஆஃபர்ல ஒண்ணை செலக்ட் செய்து நான் வேலை செய்திருந்தாலும் இப்போ எனக்கு கிடைக்கிற திருப்தி இருந்திருக்காது சுகன்! மாதா மாதம் கிடைக்குற சம்பளத்துக்காக கடமையேனு தான் செஞ்சிட்டு இருந்திருப்பேன் … இப்போ பாரு விவசாயம், கம்பெனினு ஒரு நாள்ல ட்வென்டி ஃபோர் அவர்ஸ் பத்தாம சுத்திட்டு இருக்கேன்! இதை கேட்கும் போது என்னடா பெருமை அடிக்குறாளேனு தோணலாம்… பெருமை தான்! எல்லாம் என் உழைப்பால் உருவானது… அதை அய்யோ அப்படியெல்லாம் இல்லைனு தன்னடக்கமா இருக்குறோம்ன்ற பேர்ல ஜஸ்ட் லைக் தட் சொல்லிட்டு போக முடியாது என்னால… “ என்றவளை பிரமிப்பாய் பார்த்திருந்தாள் சுகன்யா!

 

மாலை வரவேற்பு விழாவிற்கு சுகன்யாவை அழைத்து செல்ல வந்திருந்த காரிலேயே நிகழினியும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தாள்.அழகு நிலைய பெண்கள் ஏற்கனவே அறையில் வந்து காத்திருக்க, சுகன்யாவின் அலங்காரம் செய்யும் படலம் ஆரம்பமானது… நிகழினி வீட்டில் இருந்து வரும் போதே தயாராகி வந்திருந்ததால் அழகுநிலைய பெண்கள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்… பின் அதுவுமே போர் அடித்துவிட, சுகன்யாவிடம் தான் வெளியே இருப்பதாக கூறிவிட்டு வந்து வெளியே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் அனைவரும் வரத் தொடங்க, சுகன்யாவின் க்ளாஸ் மேட்ஸ் சிலரும் வந்திருந்தனர். அவர்களும் நிகழினியை கண்டு விட்டு, ஒன்றாய் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, அப்போது தான் தன் நண்பன் விஷ்ணுவுடன் உள்ளே வந்த துவாரகேஷ் சத்தம் வந்த திசையில் பார்த்தவனின் கண்ணில் நடு நாயகமாக நிகழினி அமர்ந்திருக்க, அவளை சுற்றி தோழியர் கூட்டம் அமர்ந்து எதையோ ஸ்வாரசியமாக பேசுவதும் சிரிப்பதுமாய் இருப்பது பட, கடு கடுவென்ற முகத்தோடு சென்றுவிட்டான்.. அவன் வந்தது… தன்னை முறைத்து பார்த்தது எல்லாவற்றையும் நிகழினி கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

 

“ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்” என்று தோழியர் கூட்டத்திடம் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து வந்தவள், டைனிங் ஹாலின் நிலைப்படியின் அருகில் ஒரு காலை சுவற்றுக்கு முட்டு கொடுத்து, கையில் இருந்த ஃபோனை நோண்டியபடி நின்றிருந்தவனின் அருகில் சென்றாள்.

 

“ஹலோ பாஸ்..!” என்ற பெண்ணவளின் குரலில் நிமிர்ந்தவன் அருகில் நின்றிருந்த நிகழினியை கண்டதும் என்ன? என்பது போலான பார்வையை வீச, “உங்க கூட கொஞ்சம் பேசணும்… பேசலாமா???” என்று கேட்டாள்.

 

“என்னிடம் பேச இவளுக்கு என்ன இருக்கிறது” என்று மனதிற்குள் நினைத்தாலும் அப்படி என்ன பேசப் போகிறாள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குறு குறுப்பில் வெளியே சம்மதமாய் தலையை ஆட்டி வைத்தான்.

 

சற்று தள்ளி வந்ததும் “என்ன கோபம் உங்களுக்கு என் மேல??? நான் உங்களை வேண்டாம்னு சொன்னதா???” இல்லை நாம வேண்டாம்னு சொல்றதுக்கு முன்னாடி இவ முந்திக்கிட்டாளேன்ற கோபமா???” அவள் இப்படி நேரடியாய் கேட்பாள் என்று எதிர்பாராது தூவரகேஷ் அவளது கேள்வியில் அதிர்ந்து நின்றான்.

 

Advertisement