Advertisement

அத்தியாயம் 22:

கடலில் விழுந்த மழைத்துளி போல

உன் புன்னகை என் மனதில் விழுந்தது

என நீ நினைத்தாய் அது சிப்பிக்குள் விழுந்த

மழைத்துளி முத்தாய் மாறி ஒளிவிடுவதை போல்

ஒளிர்வதை என்று அறிவாயோ?

சென்னை மாநகரின் அந்த புகழ் பெற்ற கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிப்பொறியியல் சேர்ந்திருந்தாள் தனுஷா.முதல் நாள் கல்லூரிக்கு தனது வீட்டிலிருந்து கிளம்பி கல்லூரி பேருந்தில் சென்று கொண்டிருந்தாள். ஜன்னல் ஓரமான இடத்தில் அமர்ந்து கொண்டு மனம் முழுவதும் பரவி கிடந்த உற்சாகத்தோடும் புதிய உலகில் சஞ்சரிக்க போவது போலான எதிர்பார்ப்பு கலந்த குதுகலத்தோடும் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, பேருந்து கல்லூரிக்குள் நுழைந்து பார்க்கிங் லாட்-ல் சென்று நிற்கவும் அதன் அருகில் ஒரு பைக் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

பைக்கை தன் காலால் ஸ்டான்ட் போட்டு நிறுத்தியவன் ஒற்றை கையால் தலையில் இருந்த ஹெல்மெட்டை பைக் மிரரில் மாட்டிவிட்டு கலைந்திருந்த கேசத்தை சரி செய்தவாறு முகத்தை அங்கும் இங்கும் திருப்பி சரிபார்த்துக் கொண்டிருக்க, அவன் செய்வதையெல்லாம் ஜன்னல் வழியே புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டே இறங்கிய தனு, பேருந்தை தாண்டி இரண்டு எட்டு வைத்திருக்க, “டேய் இளா சீக்கிரம் இங்க வாடா” என்ற நண்பனின் குரல் கேட்டு “வர்றேன் டா” என்றபடி வேக எட்டுகளுடன் அவளை தாண்டி சென்று தன் நண்பர்களின் குழுவோடு ஐக்கியமானான் இளா.

படங்களில் காட்டப்படுவது போல் கல்லூரியில் ராகிங் நடக்கும் என நினைத்திருந்த தனுஷா அப்படி நடந்தால் என்ன செய்து சமாளிப்பது என்று நேற்று முழுதும் தன்னை தயார் படுத்தியது எல்லாம் வீணாய் போனது போல் அங்கு யாரும் யாரையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இவளுக்கு தான் சற்று பதட்டமாக இருந்தது.

ஒரு வழியாக வகுப்பறையை அடைந்த பின் தன் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டவள் அமைதியாய் இருந்துவிட முதல் நாள் ஆகையால் பெரிதாக எந்த வகுப்பும் நடைபெறவில்லை. ஒவ்வொரு பாட ஆசிரியரும் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.

அதன் பின் வழக்கமாக கல்லூரிக்கே உரிய வகையில் இருக்கும் விதி முறைகளை பற்றி விளக்கோ விளக்கென்று விளக்கி அனைவரின் காதுகளில் இருந்தும்  இரத்தத்தை வரவழைத்துக் கொண்டிருந்தனர்.

ப்ரெஷெர்ஸ் வெல்கம் பார்ட்டிக்காக அனைவரும் ஆடிட்டோரியத்தில் குழுமியிருக்க, ஸ்டூடண்ட்ஸ் வெல்கம் அட்ரஸ் கொடுப்பதற்காக எப்போதும் மூன்றாம் வகுப்பு மாணவர்களை அழைப்பது வழக்கம். ஆனால் இப்போது அவர்கள் ப்ராஜக்ட்டில் பிஸியாகி விட்டதால் இரண்டாம் வகுப்பு மாணவர்களை அழைக்கவும் இளா மேடையேறினான்.

ஏற்கனவே பேசுகிறோம் என்ற பெயரில் அனைவரும் ரம்பம் போட்டிருக்க, மறுபடியும் முதல்ல இருந்தா? என அனைவரின் முகத்திலும் கடுப்பும் எரிச்சலும் கிளம்ப, அதை கண்ட இளா சிரித்த முகத்துடன் “ ஹலோ ப்ரெண்ட்ஸ் ஐ வெல்கம் ஆல் ஆஃப் யூ பிகாஃப் அவர் காலேஜ். லெட் என்ஜாய் தி காலேஜ் டேஸ். கொஞ்சமே கொஞ்சம் படிக்கலாம் தப்பில்லை தேங்க்யூ” என்றபடி இறங்கிவிட, ஹப்பா இவனாவது அட்வைஸ் பண்ணாம சீக்கிரமா முடிச்சானே என்ற மகிழ்ச்சியில் மாணவர்களின் கரகோசம் ஒலித்தது.

நாட்கள் அதன் போக்கில் ஓட இளாவை சந்திக்க முடிந்த தருணங்களில் எல்லாம் தனுஷா அவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்து வைக்க, முதலில் ஏன் சிரிக்கிறாள் என்று புரியாமல் சென்றவன் அதன் பின் மரியாதைக்காய் தானும் புன்னகைத்து வைத்தான்.

அன்றொரு நாள் இளா அவனது நண்பர்களுடன் வந்து கொண்டிருக்க, எதிரே வந்த தனு இயல்பாய் அவனை கண்டு புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தான். அவள் கடந்து சென்றதும் இளாவின் நண்பர்கள் அவனை பிலு பிலுவென பிடித்துக் கொண்டனர்.

“ஹேய் மச்சான் இப்போ இங்க நடந்ததை பார்த்த?” என்று ஒருவன் வேண்டுமென்றே மற்றொருவனிடம் கேட்டு வைக்க,

அவனோ “அந்த கண் கொள்ளா காட்சியை நானும் பார்த்தேன்” என்று சொல்லி இளாவை பார்த்து நக்கல் தொனியில் சிரிக்க,

“டேய் லூசுத்தனாமா எதையாவது பேசி வைக்காதிங்கடா” என்று இளா சிடு சிடுத்தான்.

“பார்த்தியா மச்சான் நாம லூசாம்டா” என்று அதற்க்கும் இளாவை ஓட்டி வைக்க, இளாவின் முகம் போன போக்கை மற்றவர்களிடம் கண்சாடை காட்டிவிட்டு,

“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் தான் நாம கேட்டிருக்கோம் இங்கு புதுவித இராமயண சுயம்வரமே நடந்துச்சு இல்லைடா” என்றுவிட்டு மற்றவர்களுடன் ஹை-ஃபை அடித்துக் கொள்ள,

அந்த கூட்டத்தில் இருந்த ஒருவனோ எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாதவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு “புதுவித ராமாயணமா? என்னடா சொல்றிங்க” என்று கேட்டு வைக்க, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளாவோ “இப்போ இது ரொம்ப முக்கியம்” என பற்களை கடித்து வைத்தான்.

“ஆமா தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் பழசு. அவளும் சிரித்தாள் அண்ணலும் சிரித்தான் இது நம்ம மச்சான் கதை புதுசு” என்றுவிட்டு அனைவரும் சிரிக்க,

“டேய் நிறுத்துங்கடா நானும் அப்போதிருந்து பார்த்துட்டு இருக்கேன் ஓவரா ஓட்டுறிங்க அந்த பொண்ணு ஏதோ ப்ரெண்ட்ஷிப்பா சிரிச்சுது அதுக்கு போய் என்னவெல்லாமோ பேசுறிங்க” என்று கூற,

“எப்படி எப்படி ப்ரெண்ட்ஷிப்பாவா? கேட்டிங்களாடா சரிடா நீ சொல்ற மாதிரியே வச்சுக்கலாம் ஏன் இவனை பார்த்து சிரிச்சுருக்கலாம்ல என்று சுப்பிரமணியபுரம் பட ஸ்டைலில் சொன்னவன் இல்லை இவனை பார்த்தா ப்ரெண்ட்ஷிப் மூஞ்சியா தெரியாம பிள்ளை பிடிக்குறவன் மாதிரியா இருக்கு” என்று உடன் இருந்தவனை வார,

“ஹேய் இப்போ நீ அவனுக்கு விளக்கம் குடுக்கிறியா இல்லை என்னை அசிங்கப்படுத்துறியாடா” என்று அவன் தனக்காக வாதாட,

“ச்ச உன்னை போய் அசிங்கப்படுத்துவனாடா நீ தான் இந்த காலேஜ் சல்மான்கான் ஆச்சே” என்று அவனது கன்னத்தை தடவி கொஞ்சிவிட்டு செல்லமாக தட்ட,

“ஹேய் போதும்டா நான் கிளம்புறேன்” என்றுவிட்டு இளா அங்கிருந்து நகர, “ இளா வெட்கப்படுறியா மச்சான் ஆமானு மட்டும் சொல்லிடாதடா எங்க பிஞ்சு மனசு தாங்காது” என்றபடி அவன் பின்னே ஓடினர் அந்த நாரதர் கூட்டம் சாரி நண்பர் கூட்டம்.

அடுத்தடுத்த நாட்களில் இளாவும் தனுவை கவனிக்க ஆரம்பித்தான். வேறு யாரிடமும் அவள் இயல்பாய் பேசுவது போல் தெரியவில்லை. தன்னை பார்க்கும் போது மட்டும் தெரிந்தவனை போல் புன்னகை செய்வது ஏன் என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான். அதன் பின் புன்னகை செய்வது இருவருக்கும் தினசரி கடமைகளில் ஒன்றாகிவிட்டது.

ஒரு நாள் தவறினால் கூட முக்கியமான வேலையை மறந்தது போலான உணர்வில் தனுஷாவும், அவள் புன்னகையை காண இயலாத நாளில் அன்றைய தினமே முழுமை அடையாத உணர்வில் அவனும் தத்தளித்தனர்.

எதனால் இந்த உணர்வு என்று தனுஷா அறிய முற்படவே இல்லை. அதை அறிய இளா முற்பட்ட போது கிடைத்த பதிலில் அவன் இரவு தூக்கத்தை தொலைத்தான். எப்போதடா விடியும் காலையில் கல்லூரிக்கு செல்வோம் என ஏங்க ஆரம்பித்தான்.

நாட்களின் ஓட்டத்தில் புன்னகை இயல்பான பேச்சாக உருவெடுத்தது. மறந்தும் தன் மனதை தனுஷாவிடம் வெளிப்படுத்த முயலவில்லை. தான் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாளோ இப்போதிருக்கும் சுமுக நிலையும் போய்விடுமோ என்ற நினைவில் சில நாட்களுக்கு இதை ஒத்திப்போடலாம் என்ற முடிவிற்கு வந்தான்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த போது முதல் இரண்டு வருட மாணவர்களும் இணைந்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வதற்கென சுற்றுலா ஒன்றை கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

அன்று மாலை அனைவரும் கல்லூரியில் குழுமி அதன் பின் அங்கிருந்து சுற்றுலா செல்வதென முடிவெடுத்திருந்தனர். இரவு உணவை மட்டும் கொண்டு செல்லலாம் அடுத்த வேளைகளுக்கு அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றும் யோசித்திருந்தனர்.

ஆட்டம் பாட்டம் என்று பேருந்து அதிரும் வண்ணம் இளமை பட்டாளங்களின் துள்ளலோடு சுற்றுலா செல்ல போகும் ஆர்வமும் தொற்றிக் கொண்டு அவர்களை குத்தாட்டம் போட வைத்தது.

இரவு உணவிற்காக ஒரிடத்தில் நிறுத்தி கொண்டு வந்த உணவுகளை தாங்களே பரிமாறிக் கொள்ள தனுஷா தன்னுடைய உணவை பரிமாறும் போது இளா அதை மறுத்துவிட அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மற்றவர்களின் உணவை அவன் விரும்பி உண்ணும் போது தன்னுடைய உணவை மட்டும் மறுத்ததை அவளால் ஏனோ இயல்பாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு வழியாக புக் செய்திருந்த ஹோட்டலில் செக்-இன் செய்து ரெப்ரெஷ் செய்துவிட்டு ஒவ்வொரு இடமாக சுற்றி பார்க்க கிளம்பினர். தனுஷாவிற்கு குளிர் ஒத்துக்கொள்ளாமல் எழுந்ததிலிருந்தே தலைவலியெடுக்க இருந்தும் அதை பொருட்ப்படுத்தாமல் தன் தோழிகளுடன் இணைந்து கொண்டாள்.

அவளது சோர்ந்த முகம் கண்ட அவளது தோழி சுசி “ஹேய் தனு என்னாச்சுப்பா டல்லா இருக்க” என்று கேட்க, “அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா” என்று சொன்னதும்,

“நேற்று நைட் டின்னர்க்கு பிறகு தான் நீ இப்படி இருக்க” என்றுவிட்டு தன் குறு குறு பார்வையால் துளைக்க,அவளது பார்வையே அவள் தன்னை கண்காணித்திருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொன்னதும்” நத்திங் மா எனக்கு ஜில்னஸ் ஒத்துக்கலை லைட்டா ஹெட் ஏக் தட்ஸ் இட்” என்றுவிட்டு அவளிடம் இருந்து தப்பிப்பது போல் முன்னே சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து ஒரிடத்தில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட, அந்நேரம் அங்கு வந்த இளா தனு அவ்வாறு அமர்ந்திருப்பதை கண்டு அவளருகில் சென்றவன் “சி தனுஷா என்னாச்சு”  சின்னு என்று சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்திவிட்டு கேட்க,

அவன் மேல் இருந்த கடுப்பில் “ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட, அதற்குள் அவர்கள் அருகில் வந்த தனுஷாவின் தோழியர் கூட்டம் “ஹேய் தனு என்ன தலை ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டதும் அதை புரிந்து கொண்டவன் போல் பக்கத்தில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று மாத்திரையை வாங்கி வந்து அவர்களிடம் தனுஷாவிற்கு கொடுக்குமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவனது செயலில் அவன் மேல் இருந்த கோபம் சற்றே வடிய அவன் வாங்கி தந்த மாத்திரையை விழுங்கி விட்டு சுற்றுலா தொடர்ந்தது. எதனால் எந்த உரிமையில் அவன் மேல் கோபம் கொள்கிறோம், அவனின் கவனிப்பில் அக்கறையில் மனம் ஏன் லேசாகிறது என்று அவள் அறியவே முற்படவில்லை அப்படி அறிந்திருந்தால் பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்.

இளா மூன்றாம் வருடத்திலும் , தனுஷா இரண்டாம் வருடத்திலும் காலடி எடுத்து வைத்திருந்திருந்தனர். இளாவின் மனதில் தனுஷாவின் மேல் காதல் அதிகரித்ததுக் கொண்டே போக, தனுஷாவோ அதை இனம் கண்டு கொள்ளவில்லையே தவிர அவளுக்கும் இளாவுடனான இயல்பான பேச்சும் பார்க்கும் போது பூக்கும் சிறு புன்னகையும்  பிடித்தே இருந்தது.

காதல் வந்தால் வயிற்றில் ஆயிரம் பட்டாம் பூச்சி பறப்பது போல் இருக்கும் என்று சிலர் சொல்லும் போது சிலருக்கோ அந்த குறு குறுப்பு வயிற்றை கலக்குவது போல தோன்றும். ஒவ்வொருக்கும் அவர்கள் தங்கள் காதலை உணரும் தருணமும் அது வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் வெவ்வேறானதாக இருக்கும். அப்படி தான் இங்கு இளா , தனுவின் நிலையும் இருந்தது.

அந்த கல்வியாண்டின் நிறைவில் கல்லூரி விழா ஒன்றை ஏற்பாடு செய்ய மாணவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் நோக்கோடு சில பல விளையாட்டுகளும் போட்டிகளும் நடத்தப்பட இருந்தது.

பாட்டு போட்டிக்கான ஆர்கனைசிங் கமிட்டி ஹெட்டாக நன்றாக பாடக்கூடிய இளாவை நியமித்திருக்க, தனுஷா தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தாள். தனுஷா சோலோ சாங்கிற்கும், இளா ஒரு சோலோ சாங்கிற்கும், பதிவு செய்திருந்தான்.

கல்லூரி விழா கலைகட்ட தொடங்கியிருந்தது. அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க இந்த நிகழ்வு தான் தன் காதலுக்கு மறுப்பை ஏற்படுத்த போகிறது என்று அறியாமல் இளாவும் மிகவும் உற்சாகத்தோடு வலம் வந்தான். வகுப்பு வாரியாக மாணவர்கள் பங்கேற்க, தனுஷா மேடையேறினாள்.அவளுக்கு மிகவும் பிடித்த பாடலான ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சித்ராவின் மயக்கும் குரலில் வெளிவந்த பாடலான, மலர்கள் கேட்டேன் வனமே தந்தன தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை தனுஷா பாட அதில் உருகியே கரைந்தான் இளா.

அவனது முறை வந்த போது தன் ஒட்டு மொத்த காதலையும் குரலில் தேக்கி ஏ.ஆர் ரஹ்மானின் இசையையே தன் காதலை வெளிப்படுத்தும் ஊடகமாக எடுத்துக் கொண்டு,

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்

இன்று வசப்படவில்லையடி

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு

உருண்டையும் உருலுதடி

காத்திருந்தால் எதிர்ப்பார்த்திருந்தால்  

ஒரு நிமிஷமும் வருஷமடி

கண்களெல்லாம் எனை காண்பது போல்

ஒரு கலக்கமும் தோன்றுதடி

சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி

நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் உந்தன் வார்த்தையில் உள்ளதடி

தனுஷாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு பாட அவளை தவிர அவள் இருகில் இருந்தவர்கள் இளாவின் பார்வை மாற்றத்தை கண்டு கொண்டனர்.

கல்லூரி விழா முடிந்ததும் அவளை சூழ்ந்து கொண்ட தோழியர்கள் “ஹேய் என்னடி எங்கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சுட்ட” என்று பூடகமாக பேச, அதை புரியாதவளோ “என்னப்பா என்ன மறைச்சேன்” என்று கேட்டு வைக்க,

“இந்த பூனையும் பால் குடிக்குமானு முகத்தை வச்சுக்கிட்டு நீ என்னடானா பால் என்ன பிரமாதம் பீரே அடிப்பேன்ற ரேஞ்சுக்கு எல்லாம் செய்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிச்சா நாங்க நம்பிடுவோமா?” என்று சொல்லிவிட்டு கொல் என்று நகைக்க, தனுஷாவிற்கோ தர்ம சங்கடம் ஆகிவிட்டது.

அவள் அமைதியாய் நிற்க அதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவர்கள் “ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துட்டு என்ன பண்ணிருக்கா பாருங்கடி இவ சீனியர்ல அவன் ஒருத்தன்கிட்ட மட்டும் பேசும் போதே எனக்கு டவுட் தான் ஆனாலும் “என்று அவர்களுக்கு அப்படி நடக்கவில்லை என்ற ஆதங்கத்திலோ இல்லை வகையாக மாட்டிவிட்டவளை சும்மா விட மனம் இல்லாமலோ எதை எதையோ பேசி அவளை வைத்து அவர்கள் பொழுது போக்கி கொண்டிருக்க, அவர்கள் யாரை பற்றி பேசுகிறார்கள் என்று தெரிந்து போனதும் மனம் நொந்து போனாள்.

இவ்வளவு நாள் அவளை தனு என்ற சொல்லுக்கு மறுவார்த்தை பேசாதவர்கள் இன்று பீர் குடிக்கும் பூனையாம், ஊமைக்கோட்டானாம் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்று மனதிற்குள் பொருமினாள். அன்று இரவு முழுதும் அவளுக்கு தூக்கமே வரவில்லை இனி தன்னை ஒருவரும் எந்த ஒரு தப்பான வார்த்தையும் சொல்லும் அளவிற்கு நடந்து கொள்ள கூடாது என்ற உறுதிமொழியை எடுத்த பின்னே அவளால் நிம்மதியாக கண் மூட முடிந்தது.

இவளின் நிலைக்கு எதிர்மாறாய் இருந்தது இளாவின் நிலை. மனம் முழுதும் காதல் நிறைந்திருக்க, அதை வெளிப்படுத்தும் த்ராணி அற்றவனாய் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். இந்த காதல் தான் எந்த மாதிரியான உணர்வு அடக்கி வைக்க வைக்க பாரம் கூடிக்கொண்டே போனாலும் மனதின் ஒரத்தில் ஒருவித சுகத்தை தருகிறது என்ன ஒரு முரண்பாடு என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் மனதில் எங்கோ கேட்ட பாடலில் இருந்த கவிஞரின் வார்த்தைகள் இப்போதிருக்கும் தன் சூழ்நிலைக்கு ஏற்றதாக இருப்பது போல் தோன்றியது.

இந்த காதல் என்ன ஒரு பாரமா?

இது பேறு காலம் இல்லா கர்ப்பமா?

காதலை மறைத்தால் கணம் தாங்காமல்

என்னுயிர் செத்து போகும் இல்லையா?

காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால்

காதலே செத்து போகும் இல்லையா?

என்ன ஒரு அழுத்தமான வரிகள் மனம் அந்த கவிஞனை பாராட்டியது. நாளை மறுநாள் தேர்வுகள் ஆரம்பமாகிறது. நாளைக்குள் எப்படியாவது அவளிடம் தன் மனதை சொல்லலாம் என்று நினைத்திருக்க, அவளோ மறுநாள் கல்லூரிக்கே வரவில்லை. அடுத்து அடுத்து முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இருக்கும் போது இரண்டாம் மாணவர்களுக்கு விடுமுறை இப்படியாக மாறி மாறி தேர்வுகள் நடைபெற தனுஷாவை சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது.

அன்று தனுஷாவிற்கு கடைசி தேர்வு. இன்று என்ன ஆனாலும் சரி அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்பது போல் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தவனின் பைக் சாலையில் சற்றே சறுக்கிவிட பேலன்ஸ் தவறி கீழே விழுந்தவனின் நெற்றியை வண்டியின் ஹேண்டில் பதம் பார்த்தது. அதை சட்டை செய்யாமல் கல்லூரிக்கு விரைந்து வர அப்போது தான் தேர்வு முடிந்து ஒவ்வொருவராக வெளியே சென்று கொண்டிருந்தனர்.

தனுஷாவை தேடி கண்களை சுழல விட்டவன் அந்த பெரிய காரிடாரில் ஓரமாய் இருந்த டேபிளில் இருந்த தன் பேக்கை எடுத்து சரிபார்த்து கொண்டிருந்தவளை நோக்கி வேகமாக நடை போட்டான்.

அவள் அருகில் சென்று நிற்க, தன் முன் நிழலாடுவதை கண்டு நிமிர்ந்தவளின் பார்வையில் நெற்றியில் இருந்து வழிந்த ரத்தமே கண்ணில் பட சற்றே பதறினாள். அது நீடித்ததும் ஒரு நொடியே அதற்குள் தன் முகத்தை சரி செய்து கொண்டவள் பேக்கை எடுத்துக் கொண்டு நகரப் போக,

அவளது பதட்டத்தில் மனம் குளிர்ந்தவன் அவள் நகர ஆயத்தமானதும் அவள் முன் கைகளை நீட்டி தடுக்க, அவனை ஏறிட்டவளின் கண்கள் கோபத்தை காட்ட,

இதற்கு மேல் தாமதிக்க விரும்பாதவனாய் “ஐ “ அவன் தொடங்கிய நேரம் அவனை முடிக்க விடாமல்  கை காட்டி தடுத்தவள் “எதுவும் சொல்ல வேண்டாம் என்ன சொல்ல போறிங்கனு எனக்கு தெரியும். எனக்கு அது தேவையில்லை” என்றுவிட்டு நகர,

“தனுஷா” என்று அவன் அழைத்ததும் திரும்பியவள் வழக்கமாக எல்லோரும் சொல்றதை சொல்றேனு நினைக்காதிங்க நான் உண்மையை தான் சொல்றேன் என்றுவிட்டு “நான் நட்பா பழகினதை நீங்க தப்பா நினைச்சுட்டிங்க. இதுனால எனக்கு தான் கெட்ட பேர் ப்ளீஸ் இனிமே என்னை தொந்திரவு செய்யாதிங்க” என்றுவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவன் அவள் சொல்லிவிட்டு சென்றதை கிரகிக்கும் முன்பே அவள் சென்றிருக்க தொடர போனவனை தொலைப்பேசியின் ஒலி நிறுத்த, அதை எடுத்து காதிற்கு கொடுத்தவன் அவன் தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதை கேட்டதும் தன் கடமையை உணர்ந்தவனாய் அங்கிருந்து சென்றுவிட்டான்.

நடந்ததை கூறி முடித்ததும் “ஏன்டா அவங்க அப்படி சொல்லிட்டு போயிருக்காங்க எந்த நம்பிக்கையில் நீ கல்யாணம் பண்ற அளவுக்கு வந்த” என்று விஷ்வா கேட்க,

“அவ என்னை காதலிக்குறான்ற நம்பிக்கையில் தான்” என்று இளா கூற,

“என்னடா சொல்ற” என்று புரியாதவனாய் புலம்ப, அவனை பார்த்து புன்ன்கைத்தவன் “டேய் அவ நீங்க தப்பா நினைச்சுட்டீங்க. எனக்கு கெட்ட பேர்னு சொன்னாளே தவிர எனக்கு உங்களை பிடிக்கலை எனக்கு உங்க மேல காதலென்ற உணர்வு வரலைனு ஒரு வார்த்தை கூட சொல்லலை” என்று சொல்ல, “அட ஆமா” என்று விஷ்வா அசடு வழிந்தான்.

“என்னவோடா நீங்க நல்லா இருந்தா சரி தான் “ என்று சொல்ல,

“அதை ஏன்டா சாபம் குடுக்குற மாதிரி சொல்லி வைக்குற பாவி” என்று அவன் வயிற்றில் இளா குத்த,

“அடேங்கப்பா சாபம் குடுத்துட்டாலும் முதல்ல தங்கச்சியை சமாதனம் பண்ற வேலையை பாருடா அதை விட்டுட்டு என்னை சொல்ல வந்துட்டான்” என்று சொல்ல, “அதை நான் பார்த்துக்குறேன் நீ மூடிட்டு இரு” என்று விட,

“நல்லதுக்கே காலம் இல்லைடா சாமி. சரிடா நான் கிளம்புறேன் ஒரு நாள் தங்கச்சியை கூட்டிட்டு வீட்டுக்கு வா” என்று சொல்லி நக்கலாக ஒரு பார்வை பார்க்க, “மவனே என்கிட்ட அடி வாங்காம நீ போக மாட்ட போல” என்று இளா முறைக்க, “எஸ்.கேப்” என்றவாறு விஷ்வா கிளம்பிவிட, இளாவும் தன் வேலையில் கவனம் செலுத்தலானான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“ஏன்டி தனு இவ்வளவு நடந்துருக்கு ஒரு நாள் கூட நீ மூச்சு விட்டதே இல்லை சரியான அமுக்குணி டி” என்றதும், தனுவின் முகம் மாற,

அதை கண்டு கொண்ட வெண்பா “சரி சரி உடனே மூஞ்சை எட்டு முழத்துக்கு தூக்கி வைக்காதே” என்று சொல்ல, அப்போதும் முகம் மாறாமல் இருந்தவளை கண்டு தன்னையே குட்டிக் கொண்டவள்,

“ஹேய் என்ன இப்படி இருந்துகிட்டு ஜூஸ் வாங்கி தராம டகால்டி வேலை காட்டலாம்னு நினைக்குறியா? ஒழுங்கு மரியாதையா ஒரு மாதுளை அன்ட் சாத்துக்குடி ஜூஸ் வாங்கி தராம நான் இங்கிருந்து நகரமாட்டேன்” என்று சொன்னவனளின் முக பாவங்களை கண்டு தனு சட்டென்று சிரித்துவிட,

“சரியான வாட்டர் டேங்க்டி எவ்வளவு ஜூஸ் ஊத்துனாலும் தாங்குவ போல” என்று தன் பங்குக்கு அவளை வாரி விட்டு  அவள் கேட்டதை வாங்கி குடுத்துவிட்டு கிளம்பும் போது “ தனு நீ சொன்னதெல்லாம் சரி தான் ஆனால் சஜன்கிட்டயும் பேசி தெளிவு பண்ணிடு அப்போ தான் தியா லைஃப் சரியாகும்” என்று சொல்ல, “புரியுதுடி கண்டிப்பா பேசுறேன்” என்று சொல்லிவிட்டு ,இருவரும் கிளம்பினர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அறைக்குள் நுழைந்து அனன்யாவிடம் “நான் சொன்னதெல்லாம் ரெக்கார்ட் பண்ணி ரீடிங் நோட் பண்ணிங்களா?” என்று கேட்க, “யெஸ் சார் பட் ஒரு சின்ன டவுட்” என்று பயந்து பவ்யமாக சொல்ல,

“டவுட் தானே அதை ஏன் கொலை பண்ணிட்டேன் சொல்ற ரேஞ்சுக்கு பயந்து பயந்து சொல்றிங்க” என்று கேட்டு புன்னகைக்க,

“என்னடா இது கரும்பாறை சிரிக்குது” என்று நினைத்தவள் தன் கையில் திறந்திருந்த பேனாவின் முனை கொண்டு லேசாக கையை குத்த வலிக்கவும் இது நிஜம் தான் என்றுவிட்டு அவனை சற்று உற்று பார்க்க,

“என்ன மனசுக்குள்ள திட்டி முடிச்சாச்சா?”என்று அவன் கேட்டதும் அதிர்ந்தவள் “இல்லை அது வந்து” என்று இழுக்கவும் “கூல் கூல் சாரி அன்னைக்கு ரொம்ப திட்டிட்டேன் எனக்கு வேலையில அந்த மாதிரி டிஸ்டர்ப் பண்ணினா பிடிக்காது. சோ டோன்ட் ரீபிட்  ஓகே” என்று புன்னகைக்க, “சாரி சார் ஐ வோன்ட்” என்று கூறி அவளும் புன்னகைக்க,

அந்த நேரம் அன்றைய ரிப்போர்ட்களை ரிஷியிடம் சப்மிட் செய்ய வந்த அருணின் கண்களில் இருவரும் சிரித்துக் கொண்டிருந்த காட்சி பட முகத்தை சுழித்தவன் “என்னை பார்க்கும் போது மட்டும் அழுத மூஞ்சியோட திரிவா இப்போ பாரு இவன்கிட்ட பல்லை காமிச்சிட்டு இருக்கா” என்று அவள் தன்னால் தான் அழுதாள் என்ற காரணத்தை மறந்தவனாய் காதலனுக்கே உரிய பொறாமை குணத்தோடு ரிஷியை பார்த்து வைத்தான்.

வேலையை முடித்துக் கொண்டு வெளியே சென்றவன் இவகிட்ட எதுக்கு நான் டிரான்ஸ்ஃபர் வாங்கின விஷயத்தை சொல்லணும் என்ற மிதப்போடு சென்றான்.

 

Advertisement