Advertisement

அத்தியாயம் 31:

இருளை கிழித்து வெளிவரும்

கதிரவனின் ஒளி போல உன் மனதில்

இருக்கும் குழப்பத்தை கிழித்தெறிந்து

என் காதலெனும் ஒளியை உன்னில்

பரவ செய்வேன் என்னுயிரே!

கல்லூரியை அடைந்த சஜன் எக்ஸாம் முடிவதற்காய் வெளியில் தனது காரில் காத்திருக்க, மாணவர்களும் ஒவ்வொருவராய் வெளியில் வரத் தொடங்கினர். பத்து நிமிடங்களில் அந்த இடமே வெறிச்சோடி போக தியா மட்டும் இன்னும் வராததை கண்டு, “இன்னும் என்ன பண்றா? எல்லாரும் வந்துட்டாங்க” என்று மேலும் இரண்டு நிமிடங்கள் காத்திருக்கலானான்.

அதன் பின்பும் அவள் வராமல் இருக்க, “அன்னைக்கு மாதிரி மரத்தடில படுத்து தூங்கிட்டு இருக்காளோ?” என்று நினைத்தவனின் மனம் அன்றைய நாளின் நினைவிற்கு பயணிக்க இதழோரம் புன்னகை அரும்பியது.

“சரி எதுக்கும் உள்ளே சென்று பார்ப்போம்” என்று முடிவெடுத்துக் கொண்டு கேம்பஸை ஒரு சுற்று சுற்றி வர பலன் தான் பூஜ்யமாக இருந்தது. அவள் தான் வீட்டில் இருக்கிறாளே அது தெரியாதவனாய் சஜன் காலேஜையே வலம் வந்து கொண்டிருந்தான்.

“ஒரு வேளை உடம்பு சரியில்லாம போயிருக்குமோ? அதான் சீக்கிரம் போயிட்டாளோ? அப்படி தான் ஏதாவது இருக்கும்” என்று கேள்வியையும் பதிலையும் தானே கூறிக் கொண்டவன், காரை வீடு நோக்கி செலுத்தினான்.

வீட்டிற்குள் நுழைந்தவன் நேராக மாடிக்கு ஏற போக, அவனை கண்ட கயல் “சஜன் என்னடா இந்த நேரம் வீட்டுக்கு வந்திருக்க? எதும் வேலையா வந்தியா?” என்று கேட்க,

“சும்மா தான்மா” என்று சொல்லிவிட்டு நகரப் போனவனை பிடித்துக் கொண்டார் கயல்.

“வந்ததும் தான் வந்த வரும் போது தியாவை கூட்டிட்டு வர்றதுக்கு என்னடா உனக்கு? இப்போ தான் அவளும் வந்தா? வெயில்ல வாடி வதங்கி போய் வந்திருக்கா? வர வர உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லைடா?” என்று பொரிந்து தள்ள,

உடம்பு சரியில்லாத காரணத்தால் தான் முன்னரே சென்று விட்டாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவள் சற்று முன் தான் வந்தாள் என்ற தகவல் வேண்டுமென்றே செய்திருக்கிறாள் என்பதை உணர்த்த, சுர்ரென்று கோபம் தலைக்கேற, கயல்விழி திட்டியது வேறு மேலும் அவனது கோபத்தை ஏற்றிவிட, விறு விறுவென்று மாடியேறினான்.

கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் தன்னிடம் எந்த பதிலும் சொல்லாது வேகமாக மாடியேறியவனை பார்த்தவர் “இந்த பையன் ஏன் தான் இப்படி இருக்கானோ?” என்று முனகியவாறு சென்றார்.

அறைக்கதவை திறக்க, அங்கு ஷோபாவில் கால் நீட்டி அமர்ந்து கொண்டு, மாத இதழை வாசித்துக் கொண்டிருந்தவளின் முன் சென்று சஜன் நிற்க,

கண்கள் சிவக்க கோபத்தோடு நின்று கொண்டிருந்தவனை கண்டு அதிர்ந்தவள், அடுத்த நொடியே “தியா பயப்படாதே” என்று கந்த சஷ்டி கவசத்தை சொல்வது போல் மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லி தன்னை திடப்படுத்திக் கொண்டவள் அவனை நேர் பார்வை பார்க்க,

“எப்போ வந்த?” என்ற அவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் வெளிப்பட, சற்றும் தயக்கமில்லா குரலில் “இப்போ தான் வந்து ஃபைவ் மினிட்ஸ் இருக்கும்” என்றாள்.

“என்னை பார்த்தா உனக்கு கேனைப்பையன் மாதிரி இருக்கா? ஆஃப்டர் நூன் வந்து பிக் பண்ணிக்குறேனு சொல்லிட்டு தான போனேன் நீயா அதுக்கு முன்ன கிளம்பி வந்தா என்ன அர்த்தம்?” என்று சீற,

“வர வேண்டாம்னு சொல்ல தான் பார்த்தேன் அதுக்குள்ள நீங்க கிளம்பிட்டீங்க” என்று சொல்ல,

“அதை எனக்கு இன்பாஃர்ம் பண்ணனும்ன்ற பேஸிக் நாலெட்ஜ் கூட இல்லையா? உன்னை தேடி பைத்தியக்காரன் மாதிரி அங்கே திரிஞ்சுட்டு இருக்கேன் இங்க மஹாராணி ஹாயா மேகஸின் படிச்சுட்டு இருக்கீங்க” என்று குத்தலாக பேச,

எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தவளை கண்டு எரிச்சல் எழ, “எதாவது கேட்டா உடனே வாயை பெஃவிகால் போட்டு ஒட்டிடு தப்பி தவறி வாயை திறந்து பேசிட்டா உலகம் அழிஞ்சிரும்ல.இந்த வீட்டுல நிம்மதியா இருந்தே ரொம்ப நாளாச்சு எப்போ பாரு எதையாவது பண்ணி தலைவலி வர வைக்க வேண்டியது “என்றவனின் பேச்சு மனதை ரணப்படுத்த,

“என்னை தேடி உங்க நிம்மதி ஏன் போகணும் என்னை தேட சொல்லி நான் சொல்லலையே? நான் யாரு உங்களுக்கு?  இருந்தாலும் தொலைஞ்சு போனாலும் நீங்க கவலைப்பட போறது இல்லை” என்று அழுகையோடு சொல்ல,

“அடிச்சு பல்லை ஒடைச்சுடுவேன் ராஸ்கல். பாவம்னு விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டே போற? எப்போ பாரு லூசுத்தனாமா பேச வேண்டியது. உங்கிட்ட பேசினா எனக்கு தான் பி.பி ஏறும் உங்கிட்ட பேசுறதே சுத்த வேஸ்ட்” என்று விட்டு சாப்பிட கூட செய்யாமல் கிளம்பி சென்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இளா தனது நண்பன் ஹரீஷிடம் இருந்து காரை வாங்கி வந்திருக்க அதில் அனைவரும் காலையிலேயே கிளம்பி அவர்களது குல தெய்வம் கோவிலுக்கு வந்திருந்தனர்.

நேற்றிலிருந்து இளாவின் பார்வை அனுவையே தொடர்ந்து கொண்டிருந்தது ஏதோ ஒன்று தன் தங்கையிடம் குறைவது போல் அவனின் மனம் உணர்த்த அவளிடம் தனியே பேசுவதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்தான்.

அந்த நேரம் சாலா “இளா பொங்கல் வைக்க தேவையானது எல்லாம் கார்ல இருக்கு எடுத்துட்டு வாடா” என்று சொல்ல,

“நானும் வர்றேன்” என்றபடி எழுந்த தனுவிடம் “வேண்டாம் நீ இரு நானும் அனுவும் போய் எடுத்துட்டு வர்றோம்” என்று சொல்ல, தனுவின் முகம் வாடி விட,

“இவ ஒருத்தி என்ன ஏதுனு தெரியாம முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கா” என்று மனதில் நினைத்தவன், இப்போதைக்கு அனுவிடம் பேசுவது முக்கியமானதாக பட அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

கொஞ்ச தூரம் தள்ளி வந்த பிறகு, இளா அனுவிடம் “அனு ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க,

“என்ன?” என்பது போல் அவனை பார்க்க

அதற்குள் சாலா “அங்க என்ன பேசிட்டு இருக்கீங்க சீக்கிரம் சாமான்களை எடுத்துட்டு வாங்க” என்று சத்தமிட,

தேவையானதை எடுத்துக் கொண்டவன், அனுவிடமும் பாதியை தந்துவிட்டு “இதை கொண்டு போய் குடுத்துட்டு வா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

அவனது பேச்சின் உறுதியே அவளை கலவரப்படுத்த, பொருள்களையெல்லாம் கொண்டு போய் கொடுத்தவள், தனுவிடம் “அண்ணி அண்ணனுக்கு விஷயம் தெரியுமா?” என்று ரகசியமாக வினவ,

அனு எதை பற்றி கேட்கிறாள் என்று புரியாத தனுஷா “என்ன விஷயம் அனு?” என்று கேட்க,

“அண்ணி அதான் நானும் உங்க அண்ணனும் விரும்புறதை சொல்றேன்.”என்று கேட்க,

“தெரியாதுனு தான் நினைக்குறேன் அனு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா என்கிட்ட கேட்டிருப்பாரே” என்றதும்

“உஃப்ப்ப்ப்” என்று பெருமூச்சு விட்டவள், “ஓகே அண்ணி இனி நான் சமாளிச்சுக்குறேன்” என்று விட்டு இளாவை தேடி சென்றாள்.

“என்ன அண்ணா பேசணும்” என்று நிமிர்வாகவே கேட்க,

அவளது அண்ணா என்ற அழைப்பை குறித்துக் கொண்டான். அதற்கு காரணமும் இருக்கிறது அவர்கள் இருவரும் பேசும் போது ஒரு நாளும் அனு இளாவை மரியாதையாக அழைத்ததில்லை. அவள் கவலையாக இருக்கும் போது மட்டுமே அண்ணா என்ற அழைப்பு வரும் மற்ற நேரங்களில் எல்லாம் தடியா? வாடா போடா என்று தான் அழைப்பாள். அப்படியே அழைத்தாலும் அதற்கு முன் டேய் என்ற மரியாதையான வார்த்தையை போட்டு டேய் அண்ணா என்று தான் அழைப்பாள்.

“அனு நானும் நேற்றுல இருந்து பார்க்குறேன் ஏதோ வித்தியாசம் உங்கிட்ட தெரியுது” என்றதும்,

“என்ன தெரியுது? என்று கேட்க, “அதை நீ சொன்னா தான தெரியும் அதான் கேட்கிறேன் சொல்லு என்னனு?” என்று தன் நிலையிலேயே நிற்க,

“எந்த பிரச்சனையும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்?”

“பிரச்சனையானு கேட்கவே இல்லையே நீயா சொல்ற எந்த பிரச்சனையும் இல்லைனு அப்போ ஏதோ ஒண்ணு இருக்கு?” என்ற அவனின் கூர்மையான பார்வையை கண்டதும் நெஞ்சம் பட படக்க,

“ஹலோ ப்ரதர் நீ போலீஸ்னு ஒத்துக்குறேன் அதுக்குனு உன் போலீஸ் வேலையை என்கிட்ட காட்டுறியா? நீ நினைக்குற மாதிரி ஒண்ணும் இல்லை தேவையில்லாம உன்னை நீயே குழப்பிக்காம வா அம்மா தேடப் போறாங்க” என்றுவிட்டு ஓட்டமும் நடையுமாய் அங்கிருந்து நகன்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் “ என் வாழ்க்கையை மட்டும் பார்த்துட்டு உன்னை கவனிக்காம விட்டுட்டேனாடா? இந்த அண்ணன் சுயநலமா இருந்துட்டேனோ?” என்று தன்னை தானே கடிந்து கொண்டவன்,

“இந்த அண்ணன்கிட்டயே பொய் சொல்லிட்டு போற? உன்னை பத்தி எனக்கு தெரியாதா? ஏதோ ஒண்ணு இருக்கு கூடிய சீக்கிரம் அது என்னனு தெரிஞ்சுகிட்டு சரி பண்றேன்” என்று மனதிற்குள் உறுதி எடுத்து கொண்டவனாய் கோவிலை நோக்கி நடை போட்டான்.

பொங்கல் வைத்துவிட்டு அதை எடுத்துக் கொண்டு சாமி சன்னதிக்கு சென்றவர்கள் பூஜைக்கு சொல்ல, இளா தன் தாயிடம் “அம்மா நேற்று குடுத்தேனே அதை சாமி பாதத்துல வச்சு பூஜை செய்துடலாமா?” என்று கேட்க,

“நல்ல வேளை தம்பி நியாபகப்படுத்துன ஏதோ யோசனையில் மறந்தே போயிட்டேன் அனு உன் பேக்கில் இருக்கும் பாரு அதை எடுத்து அண்ணன்கிட்ட கொடு” என்று சொல்ல,

“நீங்களே உங்க கையால ஐயர்கிட்ட குடுங்கமா” என்றதும் சற்று தயங்கியவர் “இல்லை கண்ணா நான் அது..வந்து சரிப்படாது” என்றவரிடம்

“குடுங்கம்மா ஐயர் காத்திட்டு இருக்கார் பாருங்க” என்றவனின் குரலில் கொடுத்தே ஆக வேண்டும் என்ற அர்த்தம் பொதிந்து இருக்க, அவரே ஐயரிடம் கொடுத்தார்.

பூஜை செய்து கொண்டு வந்ததையும் தன் தாயின் கையால் வாங்கி அந்த தாலி செயினை கடவுளின் சந்நிதியில் தனுஷாவின் கழுத்தில் போட்டவன், குருக்கள் நீட்டிய தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் வைத்தான்.

இதை தனு எதிர்ப்பார்க்கவே இல்லை. ஆனந்த அதிர்ச்சியில் நின்றிருந்தாள் என்றே சொல்ல வேண்டும் இருட்டறையில் நடந்த திருமணம் இன்று கடவுளின் முன் அவன் அணிவித்ததன் மூலம் ஒளி பெற்றதாகவே எண்ணினாள். அவளது மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

இளாவை ஏறிட்டு பார்த்தவளின் கண்கள் கலங்கி இருக்க, அவளது மனநிலையை புரிந்து கொண்டவனாய் அவள் கைகளோடு தன் கரத்தை இணைத்து இறுக்கி கொண்டான்.

அன்று மாலை தன் அன்னையின் அறைக்கு சென்றவன், “அம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

“சொல்லு கண்ணா என்ன பேசணும்” என்று கேட்க,

“அனுக்கு ரெஷிடன்ஷியல் இன்டர்ன்ஷிப்க்கு சென்னை போட்டுருக்கதா சொன்னா நீங்களும் சென்னை வந்திடுங்க.” என்று சொல்ல,

“அது சரி வருமா? நான் இங்கேயே இருந்துக்கிறேனே? ஆளில்லாம வீட்டை போட்டு வச்சா பாழாயிடும்” என்றவரிடம்,

“அது சரி தனியா இருந்து என்ன பண்ண போறிங்க நீங்களும் அனு கூட சென்னை வர்றிங்க அவ்வளவு தான்! வேணும்னா மாதம் ஒரு நாள் ஆள் விட்டு இந்த வீட்டை க்ளீன் பண்ண சொல்லிக்கலாம் அனு ட்ரைனிங் முடிக்கட்டும் கொஞ்ச நாள் கழிச்சு அப்படியே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடலாம் என்ன சொல்றிங்க” என்று சொல்ல,

“நீ சொல்றதும் சரி தான் அப்படியே பண்ணிடலாம்” என்றவர் “குத்தகைக்கு விட்ட நிலத்தை நம்ம ராமசாமி ஐயா கிரயத்துக்கு கேட்குறாரு பேசாம அதை குடுத்துடலாமா இளா?” என்று கேட்க,

“குடுத்துடுவோம்மா இதை பார்க்க நேரம் எங்க இருக்கு. இனிமேல் என்கூட வந்து நீங்க ரெஸ்ட் எடுங்க அது போதும் எல்லாம் நான் பார்த்துக்குறேன். நாங்க நாளைக்கு கிளம்புறோம்மா” என்றான்.

“இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாமேப்பா”

“இல்லைம்மா கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு இன்னும் பத்து நாள்ல தான் நீங்க சென்னை வந்திடுவீங்களே அப்புறம் என்னம்மா சரிமா காலையிலேயே எழுந்தது அசதியா இருக்கும் போய் தூங்குங்க” என்றுவிட்டு தனதறைக்கு சென்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அலுவலகம் சென்ற சஜனுக்கு மனம் முழுதும் சஞ்சலமாக ஏதோ ஒரு குழப்பம் உருவாகி எதிலேயும் கவனம் செலுத்த விடாமல் அவனை அலைக்கழித்தது. எவ்வளோ திமிர் இருந்தா நான் யாரு உங்களுக்குனு கேட்பா? ஏன் யாருனு தெரியாம தான் இவ்வளோ நாள் என்கூட என் வீட்டுல இருந்தாளா? என்ற யோசனைகளின் பாதையில் சென்றவனின் மனம் சடன் பிரேக் போட்ட வண்டியை போல நின்றது கிரீச் என்ற சத்தம் மட்டும் தான் வரவில்லை.

அதன் பின் எவ்வளவோ தன்னை வேலையில் ஆழ்த்திக் கொண்ட போதும் மீண்டும் மீண்டும் நான் யாரு உங்களுக்கு? என்ற தியாவின் கேள்வியே பி.ஜி.எம் போல் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதற்கு மேல் தாங்காது நேராக விஷ்வாவை பார்க்க அடையார் காவல் நிலையத்திற்கு சென்றான்.

விறு விறுவென்று உள்ளே சென்றவனை தடுத்த காவலர் “சார் யாரை பார்க்கணும் நீங்க பாட்டுக்கு உள்ளே போறிங்க” என்றவரிடம்,

“மிஸ்டர். விஸ்வாவை பார்க்கணும் சஜன் வந்திருக்கேனு சொல்லுங்க” என்றதும்,

இரண்டு நிமிடத்தில் வந்தவர் “சார் வர சொன்னாங்க போங்க” என்று அனுமதி தந்ததும் உள்ளே செல்ல, “ஹே சஜன் கம் கம் வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்” என்று தொடங்கியவனை முடிக்க விடாது “நீ முதல்ல என் கூட வா” என்று இழுக்காத குறையாய் அவன் கை பிடித்து அழைத்து சென்றவனை கண்டு “எங்கடா கூப்பிட்டு போற” என்றவனை கண்டு கொள்ளாது அழைத்து செல்வதிலேயே குறியாய் இருந்த சஜனிடம் “ஹே வெயிட் டா அட்லீஸ்ட் இன்பாஃர்ம் பண்ணிட்டு வர்றேன்” என்று அங்கிருந்த ஹெட் கான்ஸ்டபிளிடம் “கொஞ்சம் வெளிய போறேன் எதும்னா கால் பண்ணுங்க” என்றுவிட்டு அவன் பின் சென்றான்.

எதுவும் பேசாமல் அமைதியாக கார் ஓட்டிக் கொண்டிருந்த சஜனை உற்று பார்த்தவன் பின் அவனாய் சொல்லட்டும் என்று நினைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே வர நேராக கடற்கரையில் கொண்டு போய் நிறுத்தினான் சஜன்.

கடற்கரை மணலில் அமர்ந்து அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாவிடம் திரும்பியவன் “விஷ்வா நான் அப்பா ஆகிட்டேன்டா” என்று சொல்ல,

சஜன் சொன்னதும் விலுக்கென்று திரும்பியவன் “ஹே மச்சான் இவ்வளவு சந்தோஷமான விஷயத்தை லேட்டா சொல்ற இடியட்” என்று அவன் தோள்களில் குத்தியவன் “கங்க்ராட்ஸ் டா” என்றவன் சஜன் முகத்தை பார்த்து “அதுக்கு ஏன்டா முகத்தை இப்படி வச்சுருக்க?” என்று கேட்க,

“எனக்கு ஒரு டவுட் விஷ்வா?” என்று சஜன் சொல்ல, “ஹே மச்சி இந்த விஷயத்துல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லைடா எடக்கு மடக்கா எதாவது கேட்டுறாத?” என்று சொல்லி சூழ்நிலையை சகஜமாக்க,

“ம்ப்ச் அது இல்லைடா ஃப்பூல் தியா யாருடா எனக்கு?” என்று கேட்க,

இவன் என்ன லூசா என்பது போலான பார்வையை சஜன் மேல் வீசியவன் “ஏன்டா உனக்கே இது அநியயாமா தெரியலை?”

“என்னடா சொல்ற?” என்று சலிப்புடன் வினவிய சஜனை கண்டு கடுப்பானவன்,

“நொன்னை சொல்றாங்க டேய் அந்த புள்ளைக்கு தாலியை கட்டி பத்தாத்துக்கு ஜிங்க் ஜிக்கா எல்லாம் முடிச்சுட்டு இப்போ குழந்தை வர போற நேரத்துல அவ யாருனு கேட்டா என்னடா சொல்ல?”

“அது இல்லைடா” என்று நிறுத்தியவன் பின் தனக்கும் தியாவிற்கும் இடையில் நடந்தவைகளை ஒரு சிலவற்றை விட்டு விட்டு மற்றதை கூறியவன் “இப்போ சொல்லு அவ யாரு எனக்கு?” என்று கேட்க,

இவ்வளவு நடந்தும் மச்சான் காரியத்துல மட்டும் கண்ணா இருந்துருக்கானே என்று நினைத்தவன் “டேய் விஷ்வா எப்போ உனக்கு கல்யாணம் ஆகி ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவன் அதை வெளியில் சொல்லவில்லை பின் சஜனிடம் யார் வாங்கி கட்டுவது என்று எண்ணியவன்,

“தியாவை விரும்புறியா சஜன்?” என்று பட்டென்று கேட்டுவிட, பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருந்தவன் “ஒரு மனுஷனுக்கு லைஃப்ல இரண்டு லவ் வருமாடா?” என்ற சஜனின் கேள்விக்கு “ஹா ஹா ஹா என்று சிரித்தவன் எனக்கு வந்த லவ்க்கெல்லாம் கணக்கே இல்லை என்னை மாதிரி ரியல் லைஃப் எக்ஸாம்பிளை உன் பக்கத்துலேயே வச்சுகிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா?

சஜனின் முறைப்பில் அடங்கியவன் “மச்சி இந்த உலகத்துல ஒரு லவ் மட்டும் தான் அதுக்கு பிறகு லைஃப் இல்லைனு நினைச்சா யாருக்கும் கல்யாணமே ஆகாதுடா? லவ் எல்லாரோட லைஃப்லயும் வரும். சில பேருக்கு அது சந்தோஷத்தை அள்ளி தரும் சிலருக்கு அது கையில் கிடைக்காமலே போகும் அப்படி ஆகும் போது எனக்கு கிடைக்கலை என் வாழ்க்கையும் அவ்வளவு தானு நினைச்சு ஒரே இடத்துல நின்னுட்டோம் வை வாழ்க்கை மரத்து போய் கசக்க ஆரம்பிச்சுடும். தேங்குன தண்ணி எப்படி யாருக்கும் உதவாம அழுக்கு படிஞ்சு போகுமோ அது போல ஆகிடும் இதே அடுத்த கட்டத்துக்கு ஓடுனேனு வை அது உனக்கு மட்டும் இல்லாம உன்னை சுத்தி இருக்கவங்களுக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். நீ சொல்றதை வச்சு பார்க்கும் போது உனக்கு தியா மேல லவ் இருக்கு இல்லைனா அவ கேட்ட ஒரு கேள்விக்கு இப்படி ரியாக்ட் பண்ண மாட்ட? இன்னொன்னு சொல்லவா எங்க குழந்தை தான் உனக்கு முக்கியம் அவ இல்லைனு நினைச்சுப்பாளோனு தான் நீ குழந்தை வரப்போற சந்தோஷத்தை கூட அவகிட்ட வெளிப்படுத்தாம இருக்க” என்று விஷ்வா சொல்ல,

மனதில் இருந்த குழப்பம் கொஞ்ச கொஞ்சமாக நீங்கி தெளிவடைவது போல் இருக்க, “அப்போ தியாவை லவ் பண்ணா தப்பில்லைனு சொல்றியா?” என்று சஜன் கேட்டு வைக்க,

“டேய் வேண்டாம் மவனே கொலை வெறி ஏத்தாதே அவனவன் லவ் பண்ண பொண்ணு கிடைக்காம காய்ஞ்சு போய் கிடக்குறான் உனக்கு லவ் பண்ற பொண்ணு அதுவும் வொய்ஃப்பா பக்கத்துல இருக்குன்ற திமிரு இந்த மாதிரி பேசுனேனு வை என்னை மாதிரி இருக்க பசங்க சாபம் உன்னை சும்மா விடாதுடா? ஓடி போய்டு” என்று சொல்ல,

விஷ்வா சொன்னதை கேட்டு சிரித்தவன் அவன் எதிர்பார்க்காத நேரம் அவனை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு “தேங்க்ஸ் மச்சி ஆட்டோ பிடிச்சு போய்டு பை” என்றுவிட்டு காரை நோக்கி ஓட,

“டேய் துரோகி விட்டுட்டா ஓடுற உனக்கு இருக்குடா என்கிட்ட மாட்டமையா போவே அப்போ பார்த்துக்குறேன் உன்னை” என்று விட்டு கன்னத்தை தடவிக் கொண்டவன், “இவன் கொடுத்ததை ஒரு பொண்ணு குடுத்துருந்தா நானும் திருப்பி குடுத்து ஜெக ஜோதியாய் இருந்திருக்குமே” என்று கனவில் மிதக்க,

“கனவு காணாம போய் எதாவது கேஸை கண்டுபிடிடா விஷ்வா” என்று போகிற போக்கில் சஜன் சொல்ல

“டேய் சஜன் சகுனி மாதிரி நல்லா இருந்த பையன் மனசை கலைச்சு இப்படி ஏங்க வச்சுட்டு ஏன்டா சொல்ல மாட்ட?  என் செனோரீட்டா எங்க இருக்காளோ? ம்ஹூம்” என்றவாறு புலம்பியபடி அங்கிருந்து கிளம்பினான் விஷ்வா.

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement