Advertisement

அத்தியாயம் 28:

தன் ஒளிப்பிழம்பால் சுட்டெரிக்கும் சூரியன்

அதே ஒளியை நிலவுக்கு தந்து

நம்மை குளிர்விப்பது போல் ஒரு நாள்

உன் கோபத்தை மறந்து உனதன்பினில்  

எனை குளிர்விப்பாய் என்ற நம்பிக்கையில் நான்!

தியாவின் ஸ்டடி லீவ் முடிய இன்னும் இரண்டு நாள் மட்டுமே பாக்கி இருந்தது. அன்று காலை சமையலறையில் கயல்விழியுடன் பேசிக் கொண்டே காபி அருந்தி கொண்டிருந்த தியாவிடம் கயல் “தியா இந்த காபியை கொண்டு போய் சஜன்கிட்ட குடுத்துட்டு வந்திடு” என்றதும் “அய்யோ நானா?” என்று அதிர்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்ட,

“என்னாச்சு இப்படி பேயறைஞ்ச மாதிரி நிற்குற” என்று கேட்க, ஏதும் பதில் சொல்லாது நின்றவளை தோள்களை பிடித்து உலுக்க, அதில் நினைவிற்க்கு வந்தவள், “ஹாங் என் என்ன அத்தை” என்று கேட்க,

“காலையிலேயே என் பையன் கூட கனவா?” என்று உண்மை நிலை அறியாது தியாவை கிண்டல் செய்ய,

“ஆமா அது ஒண்ணு தான் குறைச்சல் அப்படியே கனவு கண்டுவிட்டாலும் கொஞ்சுவான் பாருங்க கனவிலேயும் மூஞ்ச தூக்கி வச்சுட்டு தான் திரிவான்” என்று மனதிற்குள் முணு முணுத்தவள், வெளியே ஹி ஹி என்று இளித்து வைக்க,

“அப்போ நான் சொன்னது சரி தான்” என்று அவர் தியாவை கேலி செய்ய, அவரிடம் இருந்த காபி கப்பை வாங்கி கொண்டவள், மேலே தங்கள் அறைக்கு செல்ல,

“ஈஸ்வரா அவன்கிட்ட வாங்கி கட்டிக்காம வந்திடணும்” என்ற வேண்டுதலை வைத்துக் கொண்டே, கதவை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

சஜன் இருக்கிறானா என்று கண்களால் ஒரு முறை ரூமை வலம் வந்தவள் அவன் இருக்கும் சுவடு இல்லாது இருக்க, அவனை பார்க்காமல் வந்துவிட வேண்டும் என்று வைத்த வேண்டுதலை மறந்தவளாய்  “எங்க போனான்” என யோசிக்க, அங்கு மெத்தையில் மேல் இன்று அணிவதற்கான சஜனின் உடை எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

இன்க் ப்ளூ நிற சார்ட்டும், கீரீம் கலர் பேண்ட்டையும் பார்த்தவள், “சும்மாவே கண் அவனை விட்டு விலகாது இதுல இப்படி ட்ரெஸ் பண்ணா நான் என்னடா பண்ணுவேன்” என்று மனதிற்குள் அவனிடம் முறையிட,

அதற்கு மனசாட்சியோ “உனக்கு நேரம் நல்லா இருக்கு அதான் நீ வரும் போது அவன் ரூம்ல இல்லை எங்க போனானோ சீக்கிரம் இங்க இருந்து போய்டு” என்று எச்சரிக்கை மணியடிக்க,

“எங்க போயிருக்க போறான் இங்க தான் எங்கேயாவது உம்மனா மூஞ்சி முகத்தை உர்னு வச்சு முறைச்சு பார்த்துட்டு இருப்பான்” என்று சொல்லியவாறு திரும்ப,

அங்கு சஜன் தன் மார்புக்கு நடுவே கைகளை குறுக்கே கட்டியபடி இவளை முறைத்து பார்த்துக் கொண்டிருக்க, தியாவோ “அய்யோ இவன் எப்போ வந்தான் தியா உனக்கு கட்டம் சரியில்லை டி சார்ட்ன் (சனி) காட் உங்கூட செல்பி எடுக்குற நெருக்கத்துல நிற்கிறாரு” என்று முனகிவிட்டு அவனை கடந்து செல்ல முற்பட,

அவள் கைகளை பிடித்து நிறுத்தியவன் “இங்க பாரு என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு இந்த ஜாடை பேசுறது கிண்டல் பண்ற வேலையெல்லாம் எங்கிட்ட வைச்சுக்காதே அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன். கெட் அவுட் ஆஃப் மை ரூம்” என்று உறும,

இவ்வளவு நேரம் மனதிற்குள் கவுன்டர் கொடுத்துக் கொண்டு இருந்தவள் அவனின் கோபம் தாங்காது கண்கள் கலங்க வெளியேறியவள் “அவன் ரூமாமே அப்போ எனக்கு எந்த உரிமையும் இல்லையா?” என்று வேதனை அடைந்தவள் கீழே செல்ல,

அவளின் கலங்கிய முகத்தை கண்ட கயல் “என்ன இந்த பொண்ணு போகும் போது சிரிச்சுட்டு தான போனா இப்போ என்ன இப்படி வந்து நிற்குறா?” என்று யோசித்துக் கொண்டிருக்க,

கடுமையை பூசிக் கொண்ட முகத்தோடு கீழிறங்கி கொண்டிருந்த மகனை கண்டவரின் மனம் சடுதியில் “தியாவின் முகம் வாடலுக்கு தன் புத்திரன் தான் காரண கர்த்தாவாக இருக்க வேண்டும்” என்பதை கணக்கிட்டவர்,

நேரே அவனிடம் சென்று “சஜன் என்னடா இதெல்லாம்” என்று கேட்க, அவர் எதை பற்றி கேட்கிறார் என்று புரியாத சஜனோ “என்னமா” என்று சலிப்போடு வினவ,

“தியா முகமே சரியில்லை” என்று சொல்ல, “அதுக்கு? நான் என்ன பண்ண?” என்று கேட்டதும்,

“நீ ஏதோ சொல்ல போய் தான் அவ அப்படி இருக்கா?” என்று சொல்ல, “அம்மா திஸ் இஸ் டூ மச் நான் ஒண்ணும் சொல்லலை”

“எனக்கு தெரியாத உர்ணு மூஞ்சை வச்சுகிட்டு எதும் சொல்லியிருப்ப இல்லனா இவ்வளவு நேரம் சிரிச்சுட்டு இருந்தவ இப்போ கலங்கி போய் இருப்பாளா?” என்று கேட்க,

தியா தான் ஏதோ சொல்லியிருக்கா என்று பற்களை கடித்தவன் “அம்மா ப்ளீஸ் எனக்கு லேட் ஆச்சு பை “என்று விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அலுவலகம் செல்ல தயாராகி விட்டு நேரம் ஆகி விட்டதால் அவசர கதியில் காலை உணவை எடுத்து வயிற்றுக்குள் நிரப்பி கொண்டிருந்தாள் தனுஷா.

அந்நேரம் அவளது தொலைப்பேசி ஒலிக்க சட்டென்று எழுந்தவளின் கை பட்டு டேபிள் மேல் இருந்த சாம்பார் இருந்த பாத்திரம் அப்படியே அவள் மேல் அபிஷேகம் செய்யப்பட “அடக் கடவுளே அல்ரெடி டைம் ஆயிடுச்சே” என்று வேக வேகமாக சென்று மாற்றுடை அணிந்து வந்தாள்.

அங்கு இளா கிளம்புவதை கண்டு,

“செழியன் ஒன் மினிட்” என்றவாறு படிகளில் தட தட என்று ஓடி வர “ஹேய் வெயிட் பண்றேன் மெதுவா வா” என்று சொன்னதும் அவனது அக்கறையில் மனம் மகிழ்ந்தவள் அவன் முன் மூச்சு வாங்க நின்றபடி “ரொம்ப லேட் ஆயிடுச்சு கொஞ்சம் என்னை ஆபிஸ்ல ட்ராப் பண்றிங்களா?” என்று கேட்க,

ஏதோ சொல்ல வாயெடுத்தவனை “ப்ளீஸ் ப்ளீஸ் செழியன்” என்று இறைஞ்ச அவளது கெஞ்சல் அவனை ஏதோ செய்ய, “ஓகே கதவை லாக் பண்ணிட்டு வா வெளிய வெயிட் பண்றேன்” என்று கூற, “தேங்க்யூ” என்றபடி சென்றவளை கண்டவனின் இதழ்க்கிடையில் புன்னகை தோன்றி மறைந்தது.

இளா பைக்கை ஸ்டார்ட் செய்ததும் , பின்னால் ஏறி அமர்ந்தவள் அவனது தோளில் கை வைக்க சட்டென்று திரும்பி அவன் பார்த்த பார்வையில் கைகளை எடுத்தவள் “ரொம்ப தான் கை வச்சா தேய்ஞ்சுடுவானா?”என்று முணு முணுத்தவள், பைக்கில் இருந்த கம்பியை ஆதரவாக பிடித்துக் கொண்டாள்.

அண்ணனுடன் பல முறை பைக்கில் சென்றிருக்கிறாள் தான் ஆனால் இன்று இளாவுடனான பைக் பயணம் மனதில் இதமான உணர்வை தர அதை ரசித்துக் கொண்டே வந்தாள்.

போக்குவரத்து நிறைந்த சாலையில் சென்று கொண்டிருக்க, வழியில் இருந்த திருமண மண்டபத்தில் வைக்கபட்டிருந்த சவுண்ட் பாக்ஸில் இருந்து “பார்த்த முதல் நாளே” என்ற பாடல் காற்றில் மிதந்து வர, கனவில் மிதந்தாள் தனுஷா.

புன்னகை ததும்ப ஏதோ உணர்வில் இருந்தவளை சைடு மிரரில் கண்ட இளா “கனவு கண்டது போதும் ஒழுங்கா பிடிச்சுக்கோ எங்கேயாவது விழுந்து வச்சு என் உயிரை வாங்கிடாதே” என்று சிடு சிடுத்தபடி சொல்ல,

அவனது கடுகடுத்த பேச்சில் மனம் சுணங்கியவள் அவன் சொன்னதை சற்றே அசை போட அடுத்த நொடியே அவளது முகம் நூறு வால்ட்ஸ் பல்ப் –இன் பிரகாசம் வெளிப்படுத்தியது. ஆக நான் விழுந்து எனக்கு ஏதும் ஆச்சுனா அவனுக்கு உயிர் போற அளவு வலிக்குமா? என்று அவனது பேச்சிற்கு அர்த்தம் கண்டறிந்தவளின் மனம் சந்தோசத்தில் குத்தாட்டம் போட்டது.

அதற்க்குள் அலுவலகம் வந்துவிடவே பைக்கை நிறுத்தி விட, இன்னும் இறங்காது இருப்பதை கண்டவன் “ஆபிஸ் வந்திடுச்சு” என்றபடி ஹாரனை ஒலிக்க விட அதில் கனவு கலைய திரு திரு என்று முழித்தவள் அப்போது தான் அலுவலகம் வந்து விட்டதை உணர்ந்தவள் வண்டியிலிருந்து இறங்கி “தேங்க்ஸ் செழியன்” என்று கூற, “வெல்கம்” என்றபடி அங்கிருந்து பறந்தான் இளா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்றைய கன்சல்டேஷன் ஹவர்ஸ் முடிந்ததும் ரிலாக்ஸ்டாக அமர்ந்த அருணின் மனம் அனுவையே சுற்றிக் கொண்டிருந்தது. அன்று தான் நடந்து கொண்டது தவறு என்று மூளை உணர்த்தினாலும் அவளிடம் தனக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதை எப்படி வெளிப்படுத்துவது என்று அறியாது ஒரு வேகத்தில் அவள் இதழை தீண்டியிருந்தான்.

அதன் பின் அவள் எப்படி உணர்ந்தாளோ? வேதனைப்பட்டிருப்பாள் என்று இப்போது வருந்தி கொண்டிருந்தவனின் மொபைல் ஒலிக்க மஹி தான் அழைத்திருந்தாள்.

“ஹலோ மஹி எப்படி இருக்க?” என்று கேட்க, “ஃபைன் ப்ரோ நீ எப்படி இருக்க?”என்று பரஸ்பரம நல விசாரிப்புகளுக்கு பின் “ப்ரோ மேரேஜ் போட்டோஸ் வந்திடுச்சு நாம எடுத்துகிட்ட போட்டோஸ் மெயில் பண்ணிருக்கேன்” என்று சொல்ல,

“ஓகே மா செக் பண்றேன் அப்புறம் நீ எப்போ ரீஜாயின் பண்ண போற?” என்று கேட்க, “நெக்ஸ்ட் வீக் ஜாயின் பண்ணனும்” என்றவளிடம்,

“ஓ சூப்பர் என்ஜாய் ஜீவா பக்கத்துல இருக்காரா? அன்னைக்கு சரியா பேச முடியலை” என்று கேட்க,

“இதோ கொடுக்கிறேன்” என்றுவிட்டு”ஜீவ் அருண் ப்ரோ பேசணுமாம்” என்று ஜீவாவிடம் தர, சிறிது நேரம் பேசிவிட்டு”ஓகே ஜீவா என் ஜாய் பண்ணுங்க அப்புறம் பேசலாம்” என்று சொன்னதும் “பை அருண்” என்று வைத்து விட,

மெயிலை ஓபன் செய்து மஹி அனுப்பியிருந்த போட்டோஸ்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தவனின் கண்கள் மஹியும் அனுவும் இருந்த போட்டோவை பார்த்ததும் அதிலேயே நிலைபெற்றிருக்க, அனுவின் புகைப்படத்தை மட்டும் பெரிதாக்கி அதையே ரசித்துக் கொண்டிருந்தான்.

இளைத்த உடலுடன், சிந்திய புன்னகை கண்களை எட்டாது வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு இருந்தவளை கண்டவனின் மனம் பிசைய, மெல்ல அவளது முகத்தை வருடியவன் “என்னால தானே நீ இப்படி இருக்க? அனு ஐ ம் சாரிடி எனக்கு புரியுது நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனு ஆனாலும் நான் ஏன் அப்படி பிகேவ் பண்றேனு எனக்கே தெரியலை” என்று புகைப்படத்தை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான்.

அவனின் புலம்பல்களை நிறுத்துவதற்கென்றே பேஷன்ட் ஒருவர் காத்திருப்ப தாக செவிலியர் ஒருவர் வந்து சொல்ல, சற்று நேரம் தன் உணர்வுகளை ஒதுக்கி வைத்தவனாய் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மாலை வேளையில் கடற்கரை மணலில் அமர்ந்து கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த வெண்பாவை ரசித்துக் கொண்டிருந்தான் வினோத்.

“வினோத் இப்படி இங்க உட்கார்ந்திருக்கது ரொம்ப நல்லா இருக்குல” என்று கேட்க,

“இல்லை நல்லாவே இல்லை” என்ற வினோத்தின் பதிலில் அவன் புறம் திரும்பியவள் “ஏன்” என்ற கேள்வியை கண்களால் வினவ,

அதை புரிந்து கொண்ட வினோத் “இப்படி மூன்றடி நீ தள்ளி உட்கார்ந்திருக்கது நல்லாவே இல்லை” என்று சொல்ல, அவன் சொல்ல வருவதை அவள் கிரகிக்கும் முன்னரே அவளது இடையில் கை கொடுத்து தன்னருகில் இழுத்துக் கொண்டான்.

“இப்போ தான் அமர்க்களமா இருக்கு” என்று கூறி அவளை பார்த்து கண்சிமிட்ட,

“என்ன வினோத் இது ப்ப்ளிக் பிளேஸ்ல இப்படி பண்றிங்க” என்று கண்களை உருட்ட

“இப்படி உன் கோழி முட்டை சைஸ் கண்ணை உருட்டாதே அப்புறம் நான் எதாவது எசகு பிசகா பண்ணிட போறேன்” என்று சொன்னதும் அவள் முகம் சிவந்துவிட, இருந்தும் அதை மறைத்தவளாய் “இப்போ தள்ளி உட்கார போறிங்களா இல்லையா?” என்று கேட்க,

“சரி நீ உட்கார்ந்து கடலை ரசிச்சுட்டு இரு நான் கிளம்புறேன்” என்று எழ முயற்சிக்க,

அவனது கை பிடித்து தடுத்துவள் “சரி சரி உட்கார்ந்து தொலைங்க” என்று சலிப்பாக சொன்னாலும் அவனின் அருகாமையை அவளின் மனம் ரசிக்க தான் செய்தது.

“ஹான் இது தான் என் டார்லிங்க்கு அழகு” என்றவாறு சலுகையாக அவள் தோள்களை சுற்றி கை போட்டுக் கொள்ள,

அவனது கைகளை பார்த்தவள் அவனை பார்த்து முறைக்க, அவனோ அவளை பார்த்து கண்சிமிட்ட முறைக்க முயன்ற வெண்பா சிரித்துவிட அவனும் அவளுடன் இணைந்து கொண்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திராமல் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க, ஒவ்வொருவரின் வாழ்வும் ஒவ்வொரு திசையில் பயணித்ததுக் கொண்டிருந்தது.

தனுஷா வேலை செல்ல தொடங்கியிருக்க இளாவும் எக்ஸ்.மினிஸ்டர் சீதாராம் கேஸ் பற்றிய விவரங்கள் சேகரிப்பதில் மும்முரமாய் ஈடுபட்டிருக்க, இவர்கள் இருவரும் சந்தித்து கொள்வதே காலை உணவு வேளையிலும் இரவு உணவு வேளையின் போதும் என்றானது.தனுவின் மனம் இளாவின் மேல் உள்ள காதலை கொஞ்ச கொஞ்சமாய் உண்ர தொடங்கினாலும் அதை வெளிப்படுத்த முயலவில்லை. அதை இளாவும் எதிர்ப்பார்க்கவில்லை

இவர்கள் இப்படியிருக்க, சஜன் தியாவின் நிலையோ அதற்கும் மேல் இருந்தது. இரவு சஜன் வரும் வரையில் முழித்திருப்பவள் அவன் ரெப்ரெஷ் செய்து வருவதற்குள் உணவை எடுத்து வைத்துவிட்டு சென்று விடுவாள். காலை அவன் எழும் முன் எழுந்து சமையலறையிலோ பூஜை அறையிலோ தஞ்சம் அடைந்து விடுவாள். இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் மற்றவர்களுக்கு தெரிந்துவிடாமல் இருவரும் கனகச்சிதமாக விளையாடினர்.

இவ்வாறு சென்று கொண்டிருந்த போது சஜன் ஒரு கான்ஃப்ரன்ஸ் விஷயமாக மும்பை வர செல்ல வேண்டி இருக்க அதை சிவப்பிரகாசத்திடம் சொல்லிய போது “எத்தனை நாள் சஜன் அங்க இருக்கணும்” என்று கேட்க

“எப்படியும் ஃபோர் டூ ஃபை டேஸ் இருக்கும் டாட் நான் நாளைக்கு ஈவ்னிங் கிளம்பணும்” என்று சொல்ல,

“சரி அப்போ ரெண்டு பேருக்கும் ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிடு” என்று சொல்ல,

“ரெண்டு பேரா? யாரை சொல்றிங்க” என்று புரியாது சஜன் வினவ,

“என்னடா? புரியலையா உனக்கும் தியாக்கும் தான் சொல்றேன்” என்றதும்,

“அப்பா என்ன விளையாடுறிங்களா? நான் போறது பிஸினஸ் விஷயம் அங்க அவளை கூப்பிட்டு போய் என்ன பண்றது அதெல்லாம் வேண்டாம்” என்று கூறுபவனை கூர்ந்து பார்த்தவர்,

“என்ன பேசுற சஜன் கல்யாணம் ஆனதுல இருந்து தியா காலேஜ் அதை விட்டா வீடுனு இருக்கா? ரெண்டு பேரும் அப்படியே ஜாலியா போயிட்டு வாங்க அது உங்க மனசுக்கும் கொஞ்சம் ரிலீஃப்பா இருக்கும்” என்று சொன்னவரிடம் எதும் பேசாது, அவன் அறைக்கு செல்ல,

உள்ளே நுழைந்த சஜனை கண்டதும் அறையை விட்டு வெளியே செல்ல முயன்ற தியாவை அழைத்தவன் கீழே அவனும் தந்தையும் பேசியதை அவளிடம் சொன்னவன் “எனக்கு இதுல விருப்பம் இல்லை என்ன பண்ண்ணும்னு உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்” அவ்வளவு தான் என்பது போல் சென்று விட,

தியா சிவப்பிரகாசத்திடம் வந்தவள் “மாமா உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்” என்றதும்,

“என்னம்மா சொல்லு என்ன விஷயம்” என்று கேட்க,

“மாமா அவங்க என்னை மும்பைக்கு வர சொல்லி சொல்றாங்க ஆனா எனக்கு இன்னும் ஒரு எக்ஸாம் இருக்கு அதான் நான் போகலை மாமா நீங்களே சொல்லிடுங்களேன் நீங்க சொன்னா கேட்பாங்க”

“நான் தான் மா கூப்பிட்டு போக சொன்னேன். உனக்கு தான் இன்னும் எட்டு நாள் லீவ் இருக்கே அஞ்சு நாள்ல ரிட்டன் வந்திடலாம் எக்ஸாமும் நீ எழுதிடலாம் அப்புறம் என்னமா இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக்கோ மா உங்களுக்கும் அது ஒரு சேஞ்சா இருக்கும்” என்று சொன்னவரை கண்டு புன்னகைத்தவள்,

“எனக்கு மட்டும் ஆசையில்லையா? நான் வாங்கி வந்த வரம் அப்படி” என்று மனதிற்குள் நொந்தவள்,

“நீங்க சொல்றது புரியுது மாமா எக்ஸாம் வச்சுகிட்டு என்னால அங்க என்ஜாய் பண்ணவும் முடியாது அதுமட்டுமில்லாம எக்ஸாம்ல ரிஸ்க் எடுக்கவும் விருப்பம் இல்லை மாமா ப்ளீஸ் நீங்க அவங்ககிட்ட சொல்லுங்க” என்று கோர்வையாய் சொல்லி முடிக்க,

“சரி மா நீயே இப்படி சொல்லும் போது இதுல நான் சொல்ல என்ன இருக்கு அவன்கிட்ட பேசுறேன்” என்றதும், “தேங்க்ஸ் மாமா” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இதோ சஜன் கிளம்பி சென்று ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. சந்தோஷமாக பேசி கொள்ளாவிட்டாலும் அவனுடன் இருப்பதே நிம்மதியாக உணர்ந்த தியாவிற்கு அவனில்லாத இந்த ஐந்து நாட்களை தள்ளுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இன்று அவனை காண போகிறோம் என்ற உணர்வு புத்துணர்வை கொடுக்க, காலையிலேயே கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தவளிடம் “தியா சாப்பிட்டு போம்மா” என்று அழைத்த கயல்விழியிடம் “இல்லை அத்தை கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிடுறேன்” என்று விட்டு கிளம்பி சென்றாள்.

அவள் சென்று அரை மணி நேரம் கழித்து வீட்டு தொலைப்பேசி அடிக்க அதை எடுத்த கயல் விழி “ஹலோ” என்றதும்,

மறுபக்கம் இருந்து “அம்மா தியா உங்க மருமகள் தானே அவங்க கீழே விழுந்து தலையில அடிபட்டிருக்கு இங்க எஸ்.எஸ் ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கோம் கொஞ்சம் வாங்க” என்று சொல்ல,

“அய்யோ தியாக்கு என்னாச்சு என்று பதறியவரிடம் “அம்மா பயப்படாதிங்க தலையில லைட்டா கல் குத்தி இருக்கு பெரிசா ஒன்ணும் இல்லை நீங்க வாங்க அதுவரை நான் இருக்கேன்” என்று வைத்துவிட, சிவப்பிரகாசத்தை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்லவும் இங்கு சஜன் வரவும் சரியாய் இருந்தது.

உள்ளே வந்தவன் யாரும் இல்லாது வீடே அமைதியாய் இருக்க, “எல்லோரும் எங்க போனாங்க, இவளையும் ஆளை காணோம்” என்று முணு முணுத்தபடி தந்தையின் மொபைலுக்கு தொடர்பு கொள்ள, “ஹலோ அப்பா எங்க இருக்கீங்க” என்று கேட்க,

“சஜன் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்டா வந்து” என்று சொல்ல வந்தவரை இடையில் தடுத்து, “என்னாச்சுப்பா யாருக்கு என்ன?” என்றவனின் குரலில் பதட்டம் அப்பட்டமாய் வெளிப்பட,

“தியா” என்று ஆரம்பிக்க அப்போதும் இடையிட்டு “அவளுக்கு என்னப்பா” என்று அவனை மீறி அவளுக்கு என்னானதோ என மனம் பதை பதைக்க,

“சஜன் ரிலாக்ஸ்டா முழுசா என்னை சொல்ல விடு” என்று சொல்ல,

“ம்ம்” என்று சுரத்தே இல்லாமல் வெளிவந்த சஜனின் குரலை கேட்டவர் “சஜன் நீ அப்பாவாக போறடா, நானும் உங்க அம்மாவும் தாத்தா பாட்டி ஆகப்போறோம் என்றவரின் வார்த்தையில் மகிழ்ச்சி கொப்பளிக்க,

“வாட்?” என்ற கூவலோடு அதிர்ந்து நின்றான் சஜன்.

                                                       செனோரீட்டா வருவாள்.

Advertisement