Advertisement

அத்தியாயம் 27:

தன் இணையை தொலைத்து விட்டு

செய்வது அறியாது இருளில் தனியாய்

தத்தளிக்கும் நிலவினை போல நானும்

தத்தளிக்கிறேன் பிரிவெனும் துயரில்

என் உயிரோடு கலந்துவிட்ட உனை நீங்கி!

சஜன் தியாவையே பார்த்துக் கொண்டிருக்க, ஏதோ ஒரு உருவம் தன் முன் நிழலாடுவது போல் தோன்றிய உணர்வில் சட்டென்று கண்களை திறந்த தியா அங்கு நின்றிருந்த சஜனை கண்டதும் அதிர்ந்தாள். படக்கென்று காதில் மாட்டியிருந்த இயர் பீஸை உருவியவள் அங்கிருந்து மெல்ல நகர போக அவளுக்கு முன் விரைந்தவன் கதவை லாக் செய்து விட்டு அவளை உற்று நோக்கி கொண்டிருக்க, தியாவிற்கோ உடலெல்லாம் நடுங்கியது. அவளது நடுக்கம் அவனுக்கு கோபத்தை வரவழைக்க, “உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

அவளோ அவன் சொல்ல வருவதை கேட்காமல் “இல் லை நா நான் போகணும்” என்று திக்கி திக்கி பேசியவாறு கதவை நோக்கி செல்ல, அவள் கைகளை பிடித்து இழுத்தவன் “நானும் பார்த்துட்டே இருக்கேன் ரொம்ப ஓவரா தான் போற என்ன என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்கா?” என்று அடிக் குரலில் உறும

“நான் அப்படி சொல்லலை” என்று சொன்னவளின் கைகளை அழுத்தமாய் பிடித்து இறுக்கியவன்,

“வாயை திறந்து சொல்லலை ஆனா நடந்துகிறது அப்படி தானே இருக்குது” என்றவனிடம், “கை கையை விடுங்க” என்று முனகியவளின் முகத்தில் தென்பட்ட வலி உணர்வை கண்டவன் தனது பிடியை தளர்த்தினான்.

“நானே குற்ற உணர்ச்சியில் தவிச்சுட்டு இருக்கேன் நீ என்னமோ இரண்டு நாளா கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டுற உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க” என்று சீற,

“ஓ குற்ற உணர்ச்சி தோன்ற அளவுக்கு ஆயிடுச்சு எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை கடவுளே நான் அப்படி என்ன பாவம் பண்ணேன்” என்று மனதிற்குள் புழுங்கியவள் வெளியில் மௌனமாய் இருக்க,

இவ்வளவு பேசுறேன் வாயை திறக்குறாளானு பாரு என்று நினைத்தவன், “அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என்று கேட்க,

“ப்ளீஸ் விடுங்க எனக்கு இதை பற்றி பேசி என்னை கஷ்டபடுத்திக்க விருப்பம் இல்லை” என்றுவிட்டு அவனை சுற்றி நகர போனவளின் முன் கை நீட்டி தடுத்தவன்,

“என்னடி ஏதோ நான் பிளான் பண்ணி உன்னை கஷ்டப்படுத்துன மாதிரி பேசிட்டு இருக்க எனக்கு இருக்க டென்சன் போதாது இது வேற ச்சை எல்லாம் என் தலையெழுத்து” என்று பல்லை கடித்தான்.

அதற்கும் அமைதியாய் இருந்தவளை கண்டு சீறிய கோபத்தை அடக்கியவன் “இனிமே என் கண் முன்னால வந்து நின்ன நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது போ” என்று சொல்ல,

“இப்போ நான் கண் முன்னால் இருக்கது கூட பிடிக்கலையா உங்களுக்கு” என்று நினைத்தவள் அவனிடம் மட்டும் எதையும் வெளிப்படையாக பேசாது தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியேறினாள் தியா.

தியா அங்கிருந்து சென்றதும் இருந்த கோபத்தை எல்லாம் சுவற்றில் குத்தி வெளியேற்றியவன் “எவ்வளவு திமிர் ச்சை இன்னைக்கு பேசி தெளிவு படுத்திக்கணும்னு இருந்தேன். இவகிட்ட பேசி கூட கொஞ்சம் டென்சன் ஏறுனது தான் மிச்சம்” என்று முணு முணுத்தவன் அமர்ந்து தன் கண்களை மூடிக் கொண்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்று இரவு இளா கடையில் வாங்கி வந்திருந்த உணவை பிரித்து உண்ண தொடங்கிய போது தனுஷாவும் தனக்கான பிளேட்டை எடுத்துக் கொண்டு அவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் சாப்பிட தயாராக,

இளாவும் அதை கண்டும் காணாதது போல் உணவை உண்பதில் மும்முரமாய் இருக்க, அவனை திசை திருப்பும் பொருட்டு “க்கும்” என்று செறுமினாள்.

அப்போதும் அதை சட்டை செய்யாது இருந்தவனின் தலையிலேயே இரண்டு போட வேண்டும் என்ற நினைப்பை அடக்கியவளாய், மீண்டும் ஒரு முறை “க்கும் க்கும்” என்று செறும,

வாயிற்கு கொண்டு வந்த உணவை நிறுத்தியவன் “தண்ணியை குடிக்க வேண்டியது தானா? எதுக்கு இப்போ சத்தம் போட்டுட்டு இருக்க” என்று சொல்லிவிட்டு உணவை வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தான்.

“தண்ணியை குடிக்கணுமா? அதை மூஞ்சியில ஊத்தலாம்னு தோணுது” என மனதிற்குள் நினைக்க, அவளது நினைப்பை படம் பிடித்தவனாய் “நான் முகம் கழுவிட்டு தான் வந்தேன் உன் மூளை தான் யோசிச்சு யோசிச்சு சூடா இருக்கும் பேசாம தலையில ஊத்திக்கோ சூடாவது குறையும்” என்று விட்டு எழுந்து கொள்ள, அவளுக்கோ அய்யோவென்றிருந்தது.

அவசர அவசரமாய் கை கழுவி விட்டு வந்தவள் “செழியன் ஒண்ணு சொல்லணும்” என்றாள்.

“ம்” என்ற ஒற்றை வார்த்தையில் அனுமதி கொடுக்க, “சொல்லுனு வாயை திறந்தா சொன்னா கொட்டுற முத்தை எடுத்து நான் வச்சுக்குவேணாக்கும்” என்று முனகியவள்,

“ஒரு மாதத்துக்கு முன்னாடி வேலைக்கு அப்ளை செய்திருந்தேன். நாளைக்கு இன்டெர்வியூக்கு வர சொல்லி மெயில் பண்ணிருக்காங்க போகட்டுமா?” என்று அனுமதி கேட்டவளை ஆச்சர்யத்தோடு பார்த்தவன், பின்பு “சரி போ” என்று விட்டு படுத்துக் கொண்டான்.

என்னடா இது என்று தான் அவளுக்கு நினைக்க தோன்றியது முன்னாடி போனாலும் முட்டுறான் பின்னாடி வந்தா உதைக்குறான் எப்படி தான் இவனை சரி கட்டுறதுனு தெரியலையே என்று பெருமூச்சு விட்டு புலம்பியபடி அறைக்குள் சென்று விட்டாள்.

காலையில் எழுந்து அவசர அவசரமாக தனது வேலைகளை முடித்துக் கொண்டு நேர்முகத் தேர்விற்காக கிளம்பியவள், தனது சான்றிதழ்களை எல்லாம் சரி பார்த்து அடுக்கி கொண்டிருக்க, அந்நேரம் இளாவும் அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான். என்றைக்கும் விட அன்று சீக்கிரமாகவே கிளம்பியவனை கண்டவள் அவனை ஏன் என்ற கேள்வியோடு பார்க்க, அவனோ அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

ஏதும் சொல்லாமல் வெளியேறியவனை பார்த்தவளின் மனதில் ஏமாற்றம் ஏற்பட வாடிய முகத்துடன் திரும்ப, “சின்னு” என்று திடீரென்று கேட்ட குரலில் சட்டென்று திரும்ப, “ஆல் தி பெஸ்ட்” என்றவன் வேகமாய் வெளியேறினான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மருத்துவமனைக்கு கிளம்பியவன் தன் தந்தையோடு உணவை உண்டு கொண்டிருந்தவனின் தொலைப்பேசியில் ரிமைன்டர் ஒலி எழுப்ப அதை எடுத்து பார்த்தான் அருண்.

“மஹி மேரேஜ்” என்று திரையில் தெரிய “அய்யோ இதை எப்படி மறந்தேன்” என்று தன்னை கொட்டி கொண்டவன் நல்ல வேளை ரிமைன்டர் போட்டு வச்சோம் இல்லை அவ என்னை உண்டு இல்லைனு பண்ணிருப்பா என்று நினைத்துக் கொண்டிருக்க, அவன் மனமோ “அனு வருவாளா?” என்று ஒரு நிமிடம் எதிர்ப்பார்க்கவும் செய்தது.

“என்னப்பா சாப்பிடாம என்ன யோசனை?” என்று கேட்ட தந்தையிடம்,

“கோயம்புத்தூர்ல என் கூட வேலை பார்த்த பொண்ணுக்கு நாளைக்கு கல்யாணம்ப்பா ரொம்ப க்ளோஸ் பா எப்படி மறந்தேனு தெரியலை”

“என்னப்பா க்ளோஸ்னு சொல்ற அப்போ போறது தானா முறை போயிட்டு வாப்பா” என்று சொல்ல,

“ஆமாப்பா அவாய்ட் பண்ண முடியாது கண்டிப்பா போகணும். இன்னைக்கு மேனேஜ்மென்ட்ல லீவ்க்கு சொல்லிடுறேன் சரிப்பா லேட் ஆச்சு நான் கிளம்புறேன்”

“சரிப்பா பார்த்து போ அப்படியே தனும்மாகிட்டயும் பேசிடு இன்னைக்கு ஏதோ இன்டர்வியூனு சொல்லுச்சு” என்று நியாபகப்படுத்த, “சரிப்பா அங்கே போயிட்டு பேசிடுறேன் நீங்க ரெஸ்ட் எடுங்க வெயில்ல அலையாதிங்க” என்று விட்டு கிளம்பினான்.

மஹியின் திருமணத்திற்க்கு முந்தையை இரவு கிளம்பிய அருண் விடியற்காலையில் வந்து சேர்ந்தான். பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த ஹோட்டலில் ரூம் புக் செய்து விட்டு அங்கு தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டான்.

திருமணம் பத்து மணிக்கு தான் மணி இப்போது தான் ஐந்தை தொட்டிருந்த்து. “சரி ஒரு குட்டி தூக்கம் போடலாம்” என்று நினைத்தபடி மெத்தையில் சரிய, வேலையின் களைப்பு மற்றும் பயணம் செய்த்தில் வந்த அலுப்பின் காரணமாக கண்மூடிய இரண்டே நிமிடத்தில் தூக்கம் அவனை தழுவிக் கொண்டது.

திருமண மண்டபம் நேர்த்தியாக அலங்கரிக்கபட்டு பிரம்மாண்டமாய் காட்சியளித்தது. வாசலில் வருபவர்களை வரவேற்கவென அழகான பெண் பொம்மைகளும், ஆண் பொம்மைகளும் நிறுத்தபட்டிருந்தன.

அருண் உள்ளே வர “ஹேய் அருண் கம் ஹியர்” என்று அவன் உடன் புரிந்தவர்கள் அழைக்க அவர்களிடம் செல்ல அங்கிருந்த ரிஷியை அப்போது தான் கண்டான் அருண்.

“இவனும் இங்க தான் இருக்கானா” முணு முணுத்தபடி எல்லோரிடமும் பேசி கொண்டிருக்க, ரிஷியும்”ஹாய் ட்யூட் ஹவ் ஆர் யூ” என்று கேட்க, “நீ இருக்கும் போது நான் எப்படிடா நல்லா இருக்க முடியும்” என முனகிவிட்டு “ஐ ம் ஃபைன் ஹவ் டு யூ டூ” என்று சம்பிராதயமாக கேட்டு வைத்தான்.

அப்போது அங்கு வந்த மஹியின் அப்பா “அருண் தம்பி எப்போ வந்திங்க? பாப்பா உங்களை தான் சொல்லிகிட்டே இருந்துச்சு வருவீங்களோ மாட்டீங்களோனு” என்று கேட்க,

“இப்போ தான் அங்கிள் வந்தேன் அது எப்படி நம்ம மஹி கல்யாணத்துக்கு வராம இருப்பேன்.”

“சரி தம்பி வந்தா உங்களை பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்துச்சு போங்க அந்த ரூம்ல தான் இருக்கா” என்று அவர் கூற,என்ன தான் தங்கையாக பழகி இருந்தாலும் ஒரு பெண்ணின் அறைக்கு சென்று எப்படி பார்ப்பது என்று அருண் தயங்க, அவனது தயக்கத்தை புரிந்து கொண்டவராய், “என்ன தயக்கம் தம்பி வாங்க நான் கூப்பிட்டு போறேன்” என்று அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அருணும் அவர் பின் சென்றான்.

மணமேடைக்கு வலது புறம் இருந்த அறைக்கு சென்று கதவை தட்ட “பாப்பா” என்ற தந்தையின் குரல் கேட்டதும் கதவை திறக்க எழுந்தவளை “மஹி மேம் நீங்க இருங்க நான் போய் திறக்குறேன்” என்றபடி கதவை திறந்தாள் அனு.

“பாப்பவை பார்க்க தம்பி வந்திருக்கு” என்று சொல்ல, அவர் சொன்னதை மனதிற்க்குள் ஒரு முறை சொல்லி பார்த்ததும் “பாப்பவை பார்க்க தம்பி வந்திருக்கா” அனுவிற்கு சிரிப்பு வந்தது.

அவளது சிரிப்பு அவனை தொட்டதோ சட்டென்று அவரின் முதுகு பக்கத்தில் இருந்து எட்டி பார்க்க, அவனை கண்டதும் அனுவின் சிரிப்பு ப்ரேக் அடித்தாற் போல் நின்றது. வழியில் இருந்து விலகி அவர்கள் உள்ளே வர வழி விட்டதும் தன் தோழிகளை அழைத்துக் கொண்டு “அப்புறம் பார்க்கலாம் மஹி மேம்” என்று விட்டு வெளியேறிவிட அருணின் முகமோ சிவந்து போனது.

“நான் இருந்தா இருக்க மாட்டாளோ?” என்று மனம் அவளை சாடிக் கொண்டிருக்க, “அருண் ப்ரோ எப்படி இருக்க? வருவியோ மாட்டியோனு நினைச்சுட்டே இருந்தேன்” என்று சொல்ல, “வராம இருந்தா என்னை சும்மா விடுவியா? பத்ரகாளியா மாறிட மாட்ட”என்று சொல்லி சிரித்தான்.

“யூ அப்போ வராம இருக்கலாம்னு வேற நினைச்சுருக்க உன்னை” என்று அவன் தோளில் இரண்டு அடி போட,

“அடிப்பாவி உன் கல்யாணத்துக்கு வந்தா என்னை மாவு கட்டு போட அனுப்பி வச்சுருவ போலயே அப்பா என்னா அடி” என்று அவனும் அவளை கிண்டல் செய்ய, “ஹேய்” என்று அவள் அவனை ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கை, “சரி சரி நான் வெளிய இருக்கேன் பேலன்ஸ் இருக்க மேக் – அப்பை போட்டுகிட்டு ஜீவாவோட சேர்த்து எங்களையும் பயமுறுத்த வந்து சேரு” என்று அவளை வாரி விட்டு வெளியேறினான் அருண்.

வெளியேறிய அருணின் கண்கள் அனுவை தேட அவளை பார்த்தவனின் கண்களில் தேடிய பொருள் கிடைத்த பின் ஏற்படும் திருப்தி சற்றும் இல்லாமல் கோபத்தில் கண்கள் சிவப்பேறியது.

அங்கு அனுவும் ரிஷியும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க, அவர்களை முறைத்தவாறே வந்து கொண்டிருந்தவனின் பார்வை அனுவின் மனதை சில்லிட வைத்தது. இருந்தும் சளைக்காமல் ரிஷியிடம் பேச, அவர்களின் பின் வரிசையில் சென்று அமர்ந்த அருணின் பார்வை அனுவையே துளைத்துக் கொண்டிருந்தது.

காலை உணவிற்கான பந்தி பரிமாறப்பட, மற்றவர்கள் “வாங்க சாப்பிட்டு வரலாம்” என்று அழைக்க எல்லோரும் பந்தி நடக்கும் அறைக்கு செல்ல முற்பட அனு மட்டும் செல்லாமல் அமர்ந்திருக்க, அதை கண்டு அருண் புருவம் சுருக்க,

அதற்குள் ரிஷி அனுவின் அருகில் வந்தவன் “ஹேய் அனு வாட் ஹேப்பன்ட் கம் லெட்ஸ் கோ”என்று அவளை அழைக்க, “இல்லை ரிஷி யூ கோ ஐ ம் நாட் ஹங்கர் நவ்” என்று மறுக்க, “நோ நோ யூ ஹவ் டூ இஃப் யூ நாட் கம் தென் ஐ ஆல்சோ வோன்ட்” என்று அவனும் அவள் அருகில் அமர்ந்து விட, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அருணின் பி.பி எகிறியது.

ரிஷி அமைதியாய் இருக்க வேறு வழியில்லாமல் “ஒகே லெட்ஸ் கோ ரிஷி” என்று எழுந்து கொள்ள, “தட்ஸ் குட்” என்று விட்டு ரிஷி முன் செல்ல, அனுவும் அருணும் பின் தொடர்ந்தனர்.

உணவு அறையில் விருந்தினர்களின் கூட்டம் அலை மோத சுற்றும் முற்றும் கண்களை சுழல விட்ட ரிஷி வேறு எங்கும் இடம் ஃப்ரீயாக இல்லாததை உணர்ந்தவன், மூன்று பேர் அமர மட்டுமே இடம் மிஞ்சியிருக்க,

“அருண் ஷல் வீ சிட் ஹியர்” என்று கேட்க, இவ்வளவு நேரம் கடு கடுப்பில் இருந்த அருண் ரிஷி கேட்டதும் “அனு அருகில் அமரலாம் என்ற உள்ளூர தோன்றிய மகிழ்ச்சியில் “ஓ யெஸ்” என்று பதில் சொல்ல,

“ஓகே தென் யூ கோ ஃப்ர்ஸ்ட்” என்று அருணை முன்னே போக சொல்லிவிட்டு அடுத்து ரிஷியும் அனுவும் அமர்ந்து கொள்ள, அருணுக்கு அப்படியே ரிஷியின் முகத்தில் ஓங்கி ஒன்று விட்டால் என்ன என தோன்றியது. “இவளாவது சொல்றாளானு பாரு சரியான கல்லுளி மங்கம்மா மாதிரி நிற்குறா. டேய் அருண் உனக்குனு எல்லாம் வந்து சேருதுங்கடா” என்று தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்தான்.

ஒருவழியாக உணவை முடித்துக் கொண்டு செல்ல அங்கு திருமணத்திற்கு முந்தையை சடங்குள் நடைபெற தொடங்கியது. கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற ஐயரின் குரல் ஒலிக்க, ஜீவா மஹியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

அருணும் அனுவிடம் பேச முயற்சி செய்ய ரிஷியோ அனுவின் அருகிலேயே இருந்தான். அனுவின் மனமோ கலங்கி இருந்த்து. அருணின் பார்வை தன்னை துளைப்பது போல் உணர்ந்தவள் அதற்கு மேல் அங்கிருக்க முடியாது போக “எக்ஸ்கியூஸ் மீ” என்று ரிஷியிடம் சொல்லிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேற அவளை தொடர்ந்து வந்த அருண் அனுவின் கைபிடித்து இழுத்து கொண்டு கார் பார்க்கிங் அருகில் இருந்த சிறிய ஸ்டோர் ரூமினுள் சென்றான்.

“அருண் சார் என்ன பண்றிங்க யாராவது பார்த்தா தப்பா நினைக்க போறாங்க” என்று நகர போனவளை தடுத்துவன்,

“என்னடி சார் மோர்னு இன்னொரு தடவை அப்படி சொன்ன கன்னம் பழுத்துடும் நியாபகம் வச்சுக்கோ” என்று சொல்ல,

அவளோ பதில் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “என்ன முறைக்குற ஏன் இப்படி இருக்கனு நானும் பார்த்துட்டு தானே இருக்கேன்” என்று சொல்ல, “என்ன பார்த்தீங்க” என்று தெனாவட்டாக கேட்டாள்.

“நீ சாப்பிட வரலைனு சிணுங்குற நீ வந்தா தான் நான் போவேனு அவன் கெஞ்சுறான் தட்ஸ் குட் தம்ளர் குட்னு பல்லை காட்டுறான் நீயும் லெட்ஸ் கோனு அவன் கூட போற” என்று வார்த்தையால் சாட,

“என்ன சந்தேகமா?” என்ற அவளின் கேள்வி அவன் மனதை அறுக்க, “ச்ச என்னடி பேசுற சந்தேகம் தான் உன் மேல இல்லை அவன் மேல உன் பக்கத்துல உட்கார விடாம பண்றதுக்கு அவன் யாருடி” என்று கேட்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் “அவன்கிட்ட ரொம்ப பேச்சு வைச்சுக்காதே” என்றான்.

“நான் யார்கூட பேசணும் பேசக் கூடாதுனு சொல்ற உரிமை உங்களுக்கு இல்லை” என்று அனுவும் காட்டமாய் பேச,

“என்ன சொன்ன எனக்கு உரிமை இல்லையா?” என்று சீறியவன் அவளை சுவரோடு சாய்த்து அவள் முகத்திற்கு அருகில் தன் முகத்தை கொண்டு வந்து “என் கண்ணை பார்த்து சொல்லு எனக்கு உரிமை இல்லையா?” என்று கேட்க,

அவளோ அமைதியாய் அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவளின் பதிலை எதிர்பார்த்தவனுக்கு அவளின் அமைதி சற்றே கோபத்தை தூண்ட,

“என்ன பதில் சொல்லு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்னு நான் எடுத்துக்குறது” என்று கேட்க, அவன் கண்களை நேராய் சந்தித்து “இல்லை உரிமை இல்லை நான் ரிஷி கூட பேச தான் செய்வேன் போதுமா?” என்று சொல்லி முடித்த மறு நொடி அவளது இதழ்களை சிறை செய்திருந்தான் அருண். அவளை விட்டு விலகியவன் ஏதும் பேசாது வெளியேறிவன் நேராக மணமக்களுக்கு தன் சார்பில் கொண்டு வந்திருந்த கிஃப்டை கொடுத்தவன் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றான்.

அருண் விலகியதும் அங்கேயே அமர்ந்தவளின் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிய, “உங்களை கோபப்படுத்தணும்னு தான் இதெல்லாம் செய்தேன்.நான் உங்கிட்ட வேற எதிர்ப்பார்த்தேன் அரு ஆனால் நீங்க கடைசி வரை அதை சொல்லவே இல்லை. இப்பவும் நீங்க புரிஞ்சுக்கவே இல்லை” என்று நினைத்தவள், கண்களை துடைத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாது வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.

 

Advertisement