Advertisement

அத்தியாயம் 26:

உன்னிடம் இருந்து என்னை மறைத்துக்

கொள்ள கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடினேன்.

இருந்தும் உன் கையில் சிக்கிக் கொண்ட போது

அது எப்படி சாத்தியம் என்று என்னை நானே

கேட்டு குழம்பி போனேன்; கட்டப்பட்டது என் கண்கள் தான்

உன்னுடையது அல்ல என்பதை மறந்து!

அன்று வெகு சீக்கிரமாகவே சஜன் வீட்டிற்கு வர ஆச்சர்யம் கொண்ட கயல் “என்ன சஜன் இன்னைக்கு மழை வரும் போலயே” என்று கேட்க, அவனிருக்கும் மன நிலையில் அவரது கிண்டலை கூட புரிந்து கொள்ளாதவனாய் “ஹாங் என்னம்மா என்ன சொன்னீங்க” என்று கேட்க,

“அது சரி என்னாச்சு டா உடம்புக்கு எதும் சரியில்லையா?” என்று கேட்டவர் தாய்க்கே உரிய பரிதவிப்பில் அவனது நெற்றியில் கை வைத்து பார்க்க,

“அப்படிலாம் ஒண்ணும் இல்லமா லைட்டா தலைவலி எனக்கு ஒரு கப் காபி கொடுங்க” என்று விட்டு கிச்சனையே பார்க்க,

“இதோ இப்போ கொண்டு வர்றேன்” என்றபடி சமையலறைக்குள் நுழைய, அவர் சென்றதும் பொறுமை இழந்தவனாய் அவனும் கிச்சனுக்குள் சென்று பார்க்க அங்கும் தியா இல்லை.

“என்ன சஜன் ரொம்ப தலை வலிக்குதா? என்றும் கிச்சன் பக்கம் வராத மகன் இன்று உள் வரை வந்திருப்பதை கண்டு தலை ரொம்ப வலிப்பதால் காபிக்காக வந்ததாக நினைத்துக் கொண்டு கேட்க,

“சும்மா தான் வந்தேன் மா” என்றவன் வெளியே வந்து வரவேற்பறையில் இருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டான்.

கயல் கொடுத்த காபியை ஒரே வாயில் சரித்தவன் “அம்மா எல்லோரும் எங்க” என்று கேட்க,

“என்னடா ஏதோ பத்து பதினைந்து பேர் இருக்க மாதிரி கேட்குற? வீட்டுல இருக்கதே நாலு பேரு. உங்க அப்பா அஷோஷியேஷன் மீட்டிங்னு காலையிலயே போனார் இன்னும் வரலை” என்று விட்டு எழுந்து கொள்ள,

தான் கேட்பவளை பற்றி ஒன்றும் சொல்லாமல் செல்லும் தாயை கண்டு தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் “இல்லைமா வீடே அமைதியா இருக்கேனு கேட்டேன்” என்று சொல்ல,

“என்னடா ஆச்சு உனக்கு இன்னைக்கு? புதுசு புதுசா என்னலாமோ கேட்குற” என்றவர் அவனை பார்க்க,

“தோணுச்சு அதான் மா கேட்டேன்” என்று விட்டு நாலே தாவலில் தனதறைக்குள் சென்று மறைந்தான்.

ரெப்ரெஷ் செய்து விட்டு “எங்க தான் போயிருப்பா” என்று நினைத்துக் கொண்டே கீழே வந்தவன் மீண்டும் கிச்சனையையும் தோட்டத்தையும் பார்த்துக் கொண்டே இருக்க,

மகனின் பார்வையையும் வந்ததிலிருந்து அவன் நடந்து கொண்டதையும் கணக்கிட்டு பார்த்தவர் “ அடப்பாவி இதுக்கு தானா? இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வர்ற” அவனது தவிப்பை உணர்ந்தவராய் அவனருகில் வந்தவர்,

“தியாவை தேடுறியா? அருண் வந்திருந்தான் அதான் அவன் கூட அவங்க வீட்டுக்கு போயிருக்கா இதை கேட்கவா இப்படி தயங்கி நிற்குற நல்ல பிள்ளைடா நீ” என்று அவர் சென்று விட,

அறைக்குள் வந்தவன் “நான் என்ன நிலைமையில் வீட்டுக்கு வந்திருக்கேன் இவ என்னடானா அவ அண்ணன் கூட அங்கே போயிருக்கா?” என்று முணு முணுத்தவன்,

அதற்கு மேல் காத்திருக்க முடியாதவனாய் மொபைலை எடுத்து தியாவிற்கு அழைத்தான்.

அங்கு தியாவை சுற்றி அனைவரும் குழுமியிருக்க சஜனின் அழைப்பை ஏற்பதை தவிர வேறு வழியில்லாது போக, அதை எடுத்தவள் “ஹலோ” என்று கேட்பவருக்கு வலிக்குமோ என்பது போல் சொல்ல,

“ஹலோ” என்று அவனும் என்ன கேட்பது என்று தெரியாமல் சொல்லி வைக்க,

“ம்ம் சொல்லுங்க” என்ற அவளின் பதிலை கேட்டதும் “எப்போ வருவ?” என்றான்.

“சீக்கிரம் வந்திடுவேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட, அவனும் ஒன்றும் சொல்லாது விட்டு விட்டான்.

தியா போனை வைத்ததும் அருகில் இருந்த தனு அவசர அவசரமாய் தனது கைப்பையில் இருந்து மொபைலை எடுத்து பார்க்க அந்தோ பரிதாபம் இளாவிடம் இருந்து ஒரு மெசேஜ் கூட வரவில்லை.

“நீ அவனை படுத்துன பாட்டுக்கு உனக்கு போன் பண்ணி விசாரிப்பானு வேற ஆசையா? அட போடி” என மனசாட்சியும்  அவளுக்கு எதிராய் குரல் கொடுக்க,

“பண்ணாட்டா போறான்” என்று பதில் சொன்னாலும் சிறு வலி உள்ளுக்குள் எழவே செய்தது.

சஜன் தியாவின் வரவிற்காக காத்திருக்க அவளோ கயல்விழிக்கு அழைத்து “அத்தை இன்னைக்கு ஒருநாள் எங்க வீட்டுல இருந்துட்டு நாளைக்கு வரட்டுமா? ப்ளீஸ்” என்று கெ(கொ)ஞ்ச,

மகன் அவளை தேடுவது தெரிந்தாலும் அவளது ஆசையை மறுக்க மனமில்லாதவராய் “சரிடா இருந்துட்டு வா” என்று விட, “ஹப்பாடா இன்னைக்கு எப்பிடியோ தப்பிச்சோம்” என்று முணு முணுத்துவிட்டு தன் தந்தை அண்ணனுடன் பொழுதை கழிக்க தயாரானாள்.

இரவு வெகு நேரமாகியும் அவள் வராததை கண்ட சஜனுக்கு தியாவின் மேல் கோபம் பற்றிக் கொண்டு வர “என்ன தெனாவட்டு நானே செய்ததை நினைச்சு மனசு நொந்து போய் இருக்கேன் ஆனா அவ என்னை அலட்சியப்படுத்துறா இதை நான் சும்மா விட போறதில்லை நாளைக்கு வா உன்னை பேசிக்குறேன்” என்று மனதிற்குள் கறுவியவன் மெத்தையில் சரிய, ஆனால் தூக்கம் தான் வந்த பாடாக இல்லை. வெகு நேரம் கழித்தே உறங்கினான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இரவு தனுஷா வீட்டிற்க்குள் நுழையும் போது இளா முன்னரே வந்திருந்தான். காலையில் அவனின் செய்கையில் கடுப்பாகி இருந்தவள் இவ்வளவு நேரமாகியும் தன்னை தேடவில்லையே என்ற கோபமும் ஒன்று சேர, “எப்படி சட்டமா உட்கார்ந்து டி வி பார்க்குறான் பாரு சரியான திமிர் பிடிச்சவன் காலையிலயே ஒருத்தி போனாளே இவ்வளவு நேரமாச்சு எங்க போனா என்ன ஏதுனு கேட்போம்னு இல்லை வாயை பிளந்து டி வி பார்த்துட்டு இருக்கான்” என்று சற்று உரக்க அவனுக்கு கேட்கும்படி முணு முணுத்துவிட்டு செல்ல,

இளாவோ செவிடன் காதில் சங்கு ஊதியது போல் அதை பற்றி அலட்டி கொள்ளாமல் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தான்.

மேலே சென்று ரெப்ரெஷ் செய்து கொண்டு கீழே வந்தவள், நகைச்சுவை காட்சி ஒன்றை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இளாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,

அவளது பார்வையை கண்டு கொண்டவன் “க்கும்” என்று செறும, அதில் நினைவிற்கு வந்தவள் காலையில் இருந்து இப்போது வரை அவனது செயல்கள் மனதில் படமாய் விரிய கடுப்பானவள்,

“கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருக்கா? எங்க இருக்கேன் எப்போ வருவேனு ஒரு போன் பண்ணி உன்னால கேட்க முடியாதோ?” என்று கேட்க,

இளாவோ அவள் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது போல் அதை பற்றி கவனிக்காது இருக்க,

“ஹலோ காது என்ன செவிடா? உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்“ என்று  டி.வியை மறைக்கும் வண்ணம் அவன் முன் வந்து நிற்க,

நிதானமாய் அவள் புறம் பார்வையை திருப்பியவன் “ எல்லாம் கேட்குது. போக தெரிஞ்சவளுக்கு வீட்டுக்கு வர தெரியாதா? போகும் போது சொல்ல தோணலை? நான் மட்டும் ஏன் கேட்கணும். உன் இஷ்டம் எங்க வேணுமோ போ வா நான் ஒண்ணும் சொல்லலை கொஞ்சம் நகரு டிவி மறைக்குது” என்று விட,

அப்போதும் நகராமல் நின்று கொண்டிருக்க “ச்சை இந்த வீட்டுல நிம்மதியா டிவி கூட பார்க்க முடியலை” என்று முனகி விட்டு டிவியை ஆஃப் செய்தவன் தனது போனை எடுத்து நோன்டி கொண்டிருக்க,

அவளது பொறுமை காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்தது கொண்டிருந்த நேரத்தில் அவனது இந்த பேச்சும் செயலும் அவளை மேலும் கோபம் அடைய செய்ய டீ-பாயில் இருந்த தலையணை பெட்ஷீட்டை “போடா” என்று அவன் மேல் தூக்கி எறிய,

“நானே எடுக்கணும்னு நினைச்சேன் எடுத்து குடுத்ததுக்கு தேங்க்ஸ்” என்று சொல்லி அவளை மேலும் கடுப்பேத்தி விட்டு ஷோபாவில் படுத்துக் கொள்ள,

“இப்போ என்ன தான் செய்யணும்னு சொல்ற செழியன்” என்று தனு அவனது ஊதாசினத்தை தாங்காது கேட்டு விட,

“லைட் மட்டும் ஆஃப் பண்ணிடு” என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காலையில் எழுந்தவளின் மனம் எந்த ஒரு பாரமும் இல்லாது காற்றில் பறக்கும் சிறகினை போல லேசாக இருக்க அந்த மனநிலையே இயற்கையான உற்சாகத்தை கொடுக்க, துள்ளி எழுந்தாள் அனன்யா.

குளித்து முடித்தவள் லேவன்டர் நிறத்தில் எம்ராய்டரி செய்யப்பட்டிருந்த சல்வாருக்குள் தன்னை நுழைத்துக் கொண்டவள் தயாராகி கீழே வர, அப்போது தான் பூஜை அறையில் இருந்து வெளிப்பட்ட சாலா,

“அனும்மா ரொம்ப நாளுக்கு பிறகு இன்னைக்கு தான் உன் முகம் பளிச்சுனு இருக்கு பார்க்கவே சந்தோஷமா இருக்கு என்ன விஷயம்டா” என்று கேட்டவரின் முகமும் மலர்ந்திருக்க,

“ச்ச இவ்வளவு நாளா நாமளும் வருத்தப்பட்டுகிட்டு அம்மாவையும் கஷ்டபடுத்திருக்கோமே “என்று தன்னையே கடிந்து கொண்டவள்,

“ஹா ஹா அப்படியா சாலா எல்லாம் என் உடன் பிறந்தவன் அதான் உன் மகனை பார்க்க போற சந்தோஷம் தான்” என்று சொல்ல,

ஒரு நிமிடம் இளாவின் மேல் இருக்கும் வருத்ததை மறந்தவராய் “என்ன சொல்ற அனு உங்க அண்ணன் வர்றேனு சொன்னானா?” என்று ஆவலாய் கேட்க,

“ம்ஹீம் இல்லை இனி தான் வர போறான் அவனை நீங்க தான் கூப்பிட போறிங்க” என்று சொல்ல,

நீ பேசுவது புரியவில்லை என்ற பாவனையை அவர் அனு மேல் செலுத்த “என்னமா மறந்துட்டீங்களா? பங்குனி உத்திரம் வருது நாம கோவிலுக்கு போகணும்ல அண்ணன் இல்லாம எப்படி அதை தான் சொன்னேன்”

அனு சொன்னதும் தான் அவருக்குமே அது நியாபகம் வர ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தது விட, “அம்மா என்ன எதுவும் சொல்லாம போறிங்க” என்றபடி அவர் பின்னே வால் பிடித்துக் கொண்டு செல்ல,

“நீயே சொல்லிடு உன் அண்ணனுக்கு” என்று சொல்ல,

“அம்மா இன்னும் அண்ணன் மேல கோபம் போகலையா?” என்று கேட்டதும்,

“இருக்க தான் செய்யுது இல்லைனு பொய் சொல்ல மாட்டேன்” என்று விட்டு காலை உணவை அனுவிற்கு பரிமாற,

“அம்மா அதான் அண்ணியும் அண்ணனை ஏத்துகிட்டு வீட்டுக்கு வந்திட்டாங்களே அப்புறமும் என்னமா?” என்று அனு கேட்க,

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் உணவு பரிமாறுவதிலேயே கண்ணாக இருக்க,

அவர் முகத்தையே சற்று பார்த்துக் கொண்டிருந்தவள் அண்ணன் வரப் போறானு சொன்ன போது அம்மாவின் ஆவலான முகம் நியாபகம் வர அவரால் வெகு நாட்களுக்கு கோபத்தை இழுத்து பிடிக்க முடியாது என்று அறிந்தவளாய்,

“சரி காலையிலயே அம்மாவை டென்சன் பண்ண வேண்டாம். ஈவினிங் வந்து பொறுமையா எடுத்து சொல்லலாம் அதான் இன்னும் நாள் இருக்கே” என்று நினைத்தவள் காலை உணவை முடித்து கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

கல்லூரிக்குள் நுழைந்தவளை கண்ட அவள் தோழி “என்னடி அனு உன் முகத்துல நூறு வால்ட்ஸ் பல்ப் எரியுது” என்று சொல்ல,

“அது அப்படி தான்” என்றபடி நழுவ முயன்றவளை தடுத்து நிறுத்தியவள்,

“ஹேய் எங்க எஸ்கேப் ஆகுற என்ன யாருகிட்டையும் லாக் ஆகிட்டியா?” என்று கேட்க,

சட்டென்று முகம் வாடிவிட அடுத்த நொடியே அதை வெளியில் தெரியாமல் மறைத்தவள், அவளை திசை திருப்பும் பொருட்டு “ஹே ஸ்வேத் அங்கே பாரேன் அந்த செடியில பூ பூத்திருக்கு வா அது பக்கத்துல போய் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்” என்று சொல்ல,

அதை கேட்டதும் செல்ஃபி பிரியை ஸ்வேதா துள்ளி குதிக்க, அவளின் மகிழ்ச்சி கண்டு தானும் சிரித்தவளாய் அவளை இழுத்துக் கொண்டு சென்று செல்ஃபிக்களாய் எடுத்து தள்ள,

அதில் இருந்த போட்டோவை எடுத்து தனது வாட் –அப் மற்றும் ஹைக் கணக்கில் டிஸ்ப்ளே பிக்சராக செட் செய்தவள் “ஃபிலீங் ஹேப்பி” என்ற ஸ்டேட்டஸை போட்டு விட்டு தன் வகுப்புறைக்கு சென்று விட,

காலையில் தியாவை அவளது வீட்டில் இறக்கி விட்டு விட்டு தனது வேலையில் ஜாயின்ட் செய்தவன் தனதறைக்கு வந்து அமர, அப்போது மொபைலில் தகவல் வர தன் மொபைலை எடுத்து வாட்ஸ் அப்பை ஓபன் செய்து அனுவின் ப்ரொஃபைலை பார்த்த அருணினின் முகமோ கடுமைக்கு மாறியது.

“ஹோ மேடம்க்கு சந்தோஷமா இருக்காமா? அது சரி அவளுக்கு என்ன அவ சந்தோஷமா தான் இருப்பா?” என்று சிடு சிடுத்தவன் அடுத்த நொடி அனுவிற்கு போன் செய்தான்.

முதல் அழைப்பு எடுக்கப்படாமல் இருக்க, போனை கூட அட்டன்ட் பண்ண மாட்டாளா? என்று விட்டு போனை டேபிளில் வைத்து விட்டான். ஐந்து நிமிடம் கழிய என்ன தோன்றியதோ மீண்டும் விடாமல் இரண்டாம் முறையும் அழைத்தான்.

இம்முறையும் கடைசி ரிங்கில் எடுக்கபட “ஹலோ” என்று சற்று உயர்ந்த குரலில் சொல்ல,

“ஹலோ அருண் சார் வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் என்ன திடீர்னு கால் பண்ணியிருக்கீங்க எனிதிங் இம்பார்ட்டென்ட்” என்று கேட்க,

அவளது குதூகலமான குரல் அவனுக்கு எரிச்சலை தர “என்ன மேடம் ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க போல” என்று அந்த ஹேப்பியில் சற்றே அழுத்தம் தர,

“ஆமா சார் கஷ்டப்படுத்துற விஷயத்துல இருந்து என்னை நானே விலக்கிட்டேன் அப்புறம் என்ன ப்ராப்ளம் வர போகுது சார் சோ நான் ரொம்ப ரொம்ப ஹேப்பி” என்று உனக்கு நான் சளைத்தவளல்ல என்ற தொனியில் அந்த ஹேப்பியில் அவளும் அழுத்தம் குடுக்க,

அதற்குள் அங்கு வந்த ரிஷி “அனு கம் ஹியர்” என்று அழைக்க, “ஓகே அருண் சார் ஐ ஹவ் சம் வொர்க் பை” என்று போனை கட் செய்து விட, அருண் தனது போனை அவனிற்கு முன் இருந்த மேஜையில்  வீசினான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சஜன் வழக்கமாக அலுவலகம் செல்லும் நேரத்தை கணக்கிட்டு தாமதமாகவே கிளம்பி வீட்டிற்க்கு வந்திருந்தாள் தியா. அவள் நினைத்தது போலவே சஜனும் அலுவலகம் சென்றிருந்தான். வாசலில் கார் இல்லாததை வைத்து “ஹப்பா கிளம்பிட்டான் போல இன்னைக்கும் எப்படியாவது தப்பிச்சுரணும் “ என்று நினைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்தவளை ஹாலில் அமர்ந்திருந்த சிவப்பிரகாசம் வரவேற்க “ வாம்மா தியா அப்பா எப்படி இருக்காங்க? தனியாவா வந்த?” என்று கேட்க,

“அப்பா நல்லா இருக்காங்க மாமா. இல்லை தனியா வரலை அண்ணா கொண்டு வந்து விட்டுட்டு போனான்” என்று சொல்ல,

“என்னம்மா இப்படியா வாசலோட அனுப்புறது உள்ளே கூப்பிட்டு இருக்கலாமே?” என்று கேட்க,

“நான் கூப்பிட்டேன் மாமா அண்ணா இன்னைக்கு தான் ட்யூட்டி ஜாயின் பண்றான் அதான் லேட் ஆயிடுச்சு இன்னொரு நாள் வர்றேன் அத்தை மாமாகிட்ட சொல்லிடுனு சொல்லிட்டு போயிட்டான்” என்று விளக்க.

“சரி மா கண்டிப்பா வர சொல்லு கல்யாணத்தோட பார்த்தது” என்று விட்டு,

“உனக்கு எக்ஸாம் வருதுல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு படி” என்று சொல்ல, “சரிங்க மாமா” என்று விட்டு கயலை தேடி நேரே கிச்சனுக்குள் சென்றாள்.

“தியா வந்துட்டியா வா வா ஒரு நாள் உங்க வீட்டுக்கு போனதும் எங்களையெல்லாம் மறந்துட்டியோனு நினைச்சேன்” என்று அவளை கேலி செய்ய,

“என்ன அத்தை ஒருநாள் போயிட்டு வந்ததுக்கா இப்படி சொல்றிங்க” என்று சிணுங்க,

“நான் சொல்லலைமா உன் புருஷன் தான் உன்னை காணோம்னு தவிச்சு போயிட்டான் “என்று நேற்று சஜன் நடந்து கொண்டதை அவளிடம் சொல்லி சிரிக்க,

தியா மனதில் “நல்ல வேளை தியா கிரேட் எஸ்.கேப் நேற்று அவன் தேடுனதுக்கு நீ மட்டும் மாட்டியிருந்த அவ்வளவு தான் நீ கைமா ஆகியிருப்ப” என்று நினைத்துக் கொண்டவள், வெளியே சிரித்து வைக்க,

“சரி தியா சாப்பிட்டியா? இன்னைக்கு பொங்கல் செய்தேன் சாப்பிடுறியா?” என்று கேட்க,

“இல்லை அத்தை நான் சாப்பிட்டு தான் வந்தேன் உங்களுக்கு கொஞ்ச நேரம் ஹெல்ப் பண்ணிட்டு  இருக்கேன்” என்று சொல்ல,

“ஹேய் உனக்கு எக்ஸாம் இருக்குல போய் படி உன் எக்ஸாம் முடியுற வரை உன்னை எந்த வேலையும் செய்ய விட கூடாதுனு உங்க மாமா ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டாச்சு ஓடு போய் படி” என்று அனுப்பிவிட,

எப்போதும் போல் இன்றும் அவர்களின் அன்பில் உருகியவளாய் “ம்ம் சரி அத்தை” என்று விட்டு  அறைக்கு சென்றாள்.

புக்கை திறந்தது தான் தெரியும் நேரம் அதன் போக்கில் ஓட மணி மதியம் பனிரெண்டை தொட்டிருந்தது. அதற்கு மேல் படிப்பது சலிப்பை தர மொபலை எடுத்து இயர் பீஃஸை காதில் மாட்டியவள் பிளே லிஸ்ட்டில் இருந்த பாடல்களை ஒலிக்க விட்டு கண் மூடி கேட்டுக் கொண்டிருக்க, அந்த நேரம் உள்ளே நுழைந்தான் சஜன்.

ஷோபாவில் கண்மூடி படுத்துக் கொண்டிருந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனதறைக்குள் சென்று வேறு உடைக்கு மாறியவன் அவளுக்கு அருகில் இருந்த நிலைக் கதவில் இரு கைகளை குறுக்கே காட்டியபடி சாய்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement