Advertisement

அத்தியாயம் 25:

நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை

உயிர்ப்பிக்கிறது என்று சொன்னதற்காகவா

இப்படி சொன்னாய் இனி நீயும் நானும் வேறு என்று

ஆனால் அது என்னை உயிர்ப்பிக்கவில்லையடி

உயிரோடு அல்லவா கொள்ளியிடுகிறது!

அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்ததும் கிளம்பி தயாரனவள் கீழே வர அங்கு இளா ஹாலில் அமர்ந்து செய்திதாளை புரட்டிக் கொண்டிருந்தான். அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு இளாவின் வாசம் வீட்டின் வரவேற்பறை என்றானது.

அவனை கண்டு கொண்டே கிச்சனை நோக்கி செல்ல இளாவோ குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவன் வருவதற்குள் காலை உணவை தயார் செய்தவள் டேபிளின் மேல் அடுக்கி விட்டு, தானும் இன்றைய தினசரியை புரட்டிக் கொண்டிருந்தாள்.

குளித்து தயாராகி வெளியே வந்த இளா நேராக கிச்சனுக்கு சென்று நேற்று தான் வாங்கி வந்திருந்த பிரட் பாக்கெட்டை பிரித்தவன் ஃப்ரிட்ஜ்லிருந்த ஜாம் டப்பாவை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்.

அதை கண்டவள் “உடம்பு பூரா திமிரு ஏன் நான் செஞ்ச சாப்பாட்டை துரை சாப்பிட மாட்டாங்களோ” என்று மனதிற்குள் அவனை காய்ந்தவள், அவன் எதிரே போய் நின்று “சாப்பாடு செஞ்சு வைச்சுருக்கது கண்ணுக்கு தெரியலையா?” என்று கேட்க,

அவனோ அறுசுவை உணவை சப்பு கொட்டி சாப்பிடுவது போல் அந்த காய்ந்து போன ரொட்டியை மென்று கொண்டிருக்க, தான் பேசுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மேலும் அவளை கடுப்பேற்ற, “சொல்றது காதுல விழலையா? இல்லை விழுகாத மாதிரி நடிக்கிறியா?”  என்று கேட்க,

அப்போதும் மௌனமாய் இருந்தவன் அங்கிருந்து நகன்று செல்ல, “ச்சை கொழுப்பு பிடிச்சவன் சாப்பிடாட்டா போ உனக்கு கொடுத்து வைச்சது அவ்வளவு தான்” என்று முணு முணுத்தவள் செய்து வைத்த உணவை தட்டிலிட்டு வாயில் போட்டவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்ப, “அவன் கிட்ட சொல்லிட்டு போக வேண்டாமா? “என்று உள்மனம் கேள்வி கேட்க, “ஆமா அவன் மட்டும் எல்லாம் சொல்லிட்டு தான் செய்யுறான் பாரு. இவன்கிட்ட ஏன் நான் சொல்லணும்” என்று நினைத்தவள் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடை போட்டாள்.

அவள் செல்வதை ஜன்னல் வழியே பார்த்தவன், கதவை பூட்டி விட்டு சாவியை எப்போது வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு, பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு அலுவலகம் நோக்கி சென்றான்.

வந்ததிலிருந்து ஒரு ஆட்டோ, பேருந்து என எதுவும் வராமல் நிழற்குடையில் காத்துக் கொண்டிருக்க, தூரத்தில் இளா வருவது தெரிந்ததும் அவன் தன்னை ஏற்றிக் கொள்வானா என மனம் எதிர்பார்க்க அவன் வந்து கொண்டிருந்த திசையையே நோக்கி கொண்டிருந்தாள்.

வேகமாக வந்து கொண்டிருந்த இளாவும் தனுவை கவனித்து விட, பத்தடி தூரத்தில் வரும் போது வண்டியின் வேகம் சற்றே குறைய, அதை கண்ட தனுவிற்கோ மனதின் ஓரத்தில் மகிழ்ச்சி தோன்ற, அவன் அவள் முன் வரும் போது வண்டியை நோக்கி ஓரடி எடுத்து வைக்க அவனோ விருட்டென்று பைக்கை கிளப்பி கொண்டு சென்றான்.

அவனின் ஊதாசினம் அவளை நெருஞ்சி முள்ளாய் குத்த “ எவ்வளவு அடாவடித்தனம் பண்றான். இதுக்கு முன்ன சின்னு மண்ணுனு கொஞ்சுனான் இப்போ என்னவாம்.” என்று மனதிற்குள் அவனை வசை பாடிக் கொண்டிருக்க, அப்போது அந்த பக்கம் வந்த ஆட்டோவில் ஏறிய பின்னும் மனம் சமாதானம் அடையவில்லை.

அவளது நிலை புரியாமல் “ஏம்மா எங்க போகணும்னு அப்போதிருந்து கேட்டுட்டு இருக்கேன் அமைதியாவே வர்ற” என்று ஆட்டோகாரரின் குரலில் நிமிர்ந்தவள்,

“யோவ் முதல்ல நீ ஒழுங்கா ரோட்டை பார்த்து ஓட்டு அப்புறம் எங்க போகணும்னு சொல்றேன்” என்று இருந்த எரிச்சலில் அவரிடம் வள்ளென்று விழ,

“அது சரி எனக்கு தேவை தான் காலையிலேயே நமக்குனு மாட்டுதுங்க பாரு” என்று அவர் முனக, “என்ன முணு முணுப்பு பெசன்ட் நகர் போய்யா” என்று விட்டு அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அலுவலகத்தில் நுழைந்த சஜனிற்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் அவனை அலைக்கழித்தது. நேற்று நடந்ததையே மனம் அசை போட என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போய் இருந்தான்.

அந்நேரம் உள்ளே வந்த வினோத் “சார் நேத்து மீட்டிங் போனீங்களே? எனி குட் நியூஸ்” என்று கேட்க, ஏற்கனவே நேற்றைய நிகழ்வுகளால் தத்தளித்துக் கொண்டிருந்தவனை வினோத்தின் கேள்வி மீண்டும் நடந்ததை நியாபகப்படுத்த, அதில் வெகுண்டவன், “இப்போ என்ன வேணும் உனக்கு? “என்று எரிந்து விழ,

“இல்லை சார் நேற்று” என்று அவன் மறுபடியும் இழுக்க, “வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் இட். இஃப் யூ ஹேவ் எனி அதர் வொர்க் கோ அன்ட் டூ இட்” என்று விட,

ஏதோ டென்சன் போலயே இது தெரியாம காலையிலயே சொந்த செலவுல நானே சூன்யம் வச்சுக்கிட்டேனே இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்த வினோத் நீ காலி டா என்று மனதிற்குள் முணு முணுத்தவன் “ஐ ம் சாரி சார்” என்று கேட்டு விட்டு வெளியேற முயன்றவனிடம், தான் பேசியது அதிகம் தான் என்று உணர்ந்தவனாய் “வினோத் ஒன் மினிட்” என்று சொல்ல,

“யெஸ் சார்” என்று அவன் அருகில் வர, “ஐம் சாரி வினோத் ஏதோ ஒரு டென்சன்ல கத்திட்டேன் ப்ளீஸ் டோன்ட் மைன்ட்” என்று சொன்னதும்,

என்னடா இது அதிசயமா இருக்கு சாரிலாம் சொல்றார் என்று நினைத்துக் கொண்டவன் “என்ன சார் நீங்க போய் சாரிலாம் கேட்டுகிட்டு இட்ஸ் ஓகே சார்” என்று வெளியேற,

அவனது மொபலை எடுத்தவன் தியாவிடம் பேசிவிடுமோ என்று அவள் எண்களை அழுத்த போனவன் பின் இல்லை போன்ல பேசுறது சரி வராது என நினைத்தவனாய் மொபலை டேபிளில் வைத்து விட்டு அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

வெளியேறிய வினோத்தின் முகத்தை கண்டே அவன் சஜனிடம் வாங்கி கட்டியிருக்கிறான் என தெரிந்து கொண்ட வெண்பா “என்ன காலையிலயே சூடான கவனிப்பு போல” என்றுவிட்டு அவனை பார்த்து நக்கலாய் சிரித்து வைக்க,

அவள் சிரிப்பதை கண்டவன் “சிரிக்கவா செய்யுற? உனக்கு இருக்குடி” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணு முணுத்தவன் தன் அறைக்கு சென்று இன்டர்காமில் வெண்பாவை ஃபைலை எடுத்து வர சொல்ல, “ஹ ஹா தெரியும்டா நீ கூப்பிடுவனு நாங்கெல்லாம் யாரு? இதுக்கெல்லாம் அசருவோமா” என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு அவன் கேட்டவற்றை எடுத்துக் கொண்டு வினோத் கேபினிற்க்கு சென்றாள்.

உள்ளே சென்றதும் வேலையை பற்றியே அவன் வெண்பாவிடம் கேட்டுக் கொண்டிருக்க வெண்பாவோ “என்ன நிஜமாகவே டென்சன் ஆகிட்டானோ?” என்று நினைத்தவள் கேட்டதற்க்கெல்லாம் வாய் தானாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் கண்களோ அவனையே அளவிட்டுக் கொண்டிருந்தது.

அவள் பார்ப்பதை கண்டு கொண்டாலும் அதை கவனிக்காதது போல் வினோத் பாவனை செய்ய, “சரி கோபமாக இருக்கான் போல் எதுக்கு வம்பு அமைதியாவே இருப்போம் “என்று முடிவெடுத்து விட்டு அதன் பின் அவளும் வேலையிலேயே கவனமாய் இருக்க,

“சரி வினோத் இதை நான் ரெடி பண்ணிடுறேன்” என்று விட்டு ஃபைலை எடுத்துக் கொண்டு, வெளியே செல்லும் முன் எட்டி வந்து அவளை பிடித்து சுவரோடு சாய்த்து தன் இரு கைகளால் அவளிற்க்கு அணை போட்டவன் “உனக்கென்ன அப்படி ஒரு சிரிப்பு? என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு” என்று கேட்க,

“உங்களை பார்த்தா நல்லா தான் இருக்கு” என்று சொல்லி கண்சிமிட்ட, அதில் மனம் குளிர்ந்தாலும்”ஹேய் பேச்சை மாத்தாதே எதுக்கு சிரிச்ச?” என்று விடாமல் அதையே கேட்க,

“ஏன் சிரிக்க கூடாதா? சிரிச்சா என்னவாம்” என்று அவளும் அவனுடன் மல்லுக்கு நிற்க, “சிரிச்சா என்னனா கேட்குற உன்னை என்ன பண்றேனு பாரு” என்று பொய் கோபம் கொண்டு அவளை முறைக்க, இதற்கெல்லாம் அசருபவளா வெண்பா “என்ன பண்ணுவீங்க” என்று அவனிடம் சொல்லிவிட்டு “சரியான பயந்தாங்கொல்லி” என்று முனகினாள்.

“என்ன சொன்ன பயந்தாங்கொல்லியா? இரு என்னை பார்த்து நக்கலா சிரிச்ச இந்த வாய்க்கு தண்டனை கொடுக்காம விட போறதில்லை” என்றபடி அவள் இதழ் நோக்கி குனிய,

“சஜன் சார்” என்று அவள் சொல்ல, அவள் அப்படி சொன்னதும் சட்டென்று அவளை விலக்கியவன் சஜன் இருக்கிறானா என்று பார்க்க, அவள் தன்னை ஏமாற்றி இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் “உன்னை” என்று அவளை பிடிக்க வர “ஹா ஹா பயந்தாங்கொல்லி” என்று அவனை சீண்டி விட்டு ஓடினாள் வெண்பா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தனு வீட்டிற்க்கு வரும் போது அங்கு அருணும் தியாவும் ஏற்கனவே வந்திருந்தனர்.உள்ளே சென்றவள் “அப்பா எப்படி இருக்கீங்க” என்று அவர் நலத்தை விசாரிக்க,

“நான் நல்லா இருக்கேன்டா? நீ எப்படி இருக்க தனியாவா வந்த மாப்பிள்ளை வரலையா?” என்று கேட்டதும், அவருக்கு பதில் சொல்லாமல் சட்டென்று திரும்பி தன் தமையனின் முகம் பார்க்க, அவனின் முகமோ கடுகு போட்டால் வெடித்துவிடும் அளவிற்க்கு கடு கடுவென்றிருந்தது.

“இல்லப்பா தனியா தான் வந்தேன்” என்றுவிட்டு, தியாவிடம் “எப்படி இருக்க தியா குட்டி “ என்று அவளையும் அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தியவள், அருணை பார்த்து “உனக்கு என் மேல கோபமா அண்ணா?” என்று கேட்க,

“ச்சை இல்லடா” என்று அவளை அணைத்து விடுவித்துவன் “சரி சரி நம்ம கச்சேரியை அப்புறம் வச்சுக்கலாம் முதல்ல சாப்பிடுவோம் எனக்கு ரொம்ப பசிக்குது” என்று தியா குதிக்க,

“கொஞ்சம் கூட நீ மாறவே இல்லைடி” என அவள் தலையில் செல்லமாக கொட்டிய தனு “நான் பரிமாறுறேன் நீங்க சாப்பிடுங்க” என்று விட, “நீயும் உட்காரு தேவையானதை நாமளே எடுத்துக்கலாம்” என்று அருண் சொல்ல,

“இல்லண்ணா நான் வரும் போது சாப்பிட்டு தான் வந்தேன்” என்று சொல்ல,

“பரவாயில்லை கொஞ்சமாவது சாப்பிடும்மா நாமெல்லாம் சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு” என்று தாமோதரன் சொன்னதும் அதை தட்ட முடியாதவளாய், அமர எல்லோரும் காலை உணவை முடித்துக் கொண்டு இத்தனை நாள் விடுபட்ட கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

மதிய உணவை தனுஷாவும் தியாவும் சேர்ந்து செய்ய, இயந்திரம் போல் வேலை செய்தாலும் தியா ஏதோ யோசித்துக் கொண்டிருப்பது போல் இருக்க முகத்தில் வாட்டமும் இருப்பது போல் தோன்ற,

“நேற்று சஜன் ஏதும் திட்டியிருப்பானோ? போகும் போது கோபமாய் இருந்தது போல் தானே இருந்துச்சு சரி பிறகு தியாவிடம் மறைமுகமாக கேட்கலாம்” என நினைத்தவள்,

சமையலை முடித்து விட்டு மதிய உணவையும் சந்தோஷத்திலும் அரட்டையிலும் முடிக்க “சரி அண்ணா நீ போய் ரெஸ்ட் எடு, அப்பா நீங்களும் தான் சாயங்காலம் நாம கோவிலுக்கு போகலாம்” என்று சொல்லிவிட்டு தியாவை அழைத்துக் கொண்டு தியாவின் அறைக்கு சென்றாள்.

“தியா எப்படி இருக்கடி” என்று கேட்க, தனுக்கும் சஜனுக்கும் இருக்கும் இடைவெளியை மற்றவர்களிடம் அம்பலமாக்க பிடிக்காமல் ஆம் மற்றவர்கள் தான் கணவன் மனைவிக்கு இடையில் பெற்றவர்களே அந்நியம் எனும் போது சகோதரியும் அது போல தானே! மலர்ந்த முகத்துடன் “நான் நல்லா இருக்கேன் கா” என்று புன்னகை ததும்ப சொல்ல,

அவளது புன்னகையை கண்ட தனு மனதில் “ஹப்பா நாம் நினைத்து போல் பிரச்சனை எதுவும் இல்லை” என்று நிம்மதி பெருமூச்சு விட்டவள்,

“இதை கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடி இதே போல் என்னைக்கும் நீ சிரிப்போட இருக்கணும்” என்று தங்கையை அணைத்துக் கொண்டாள்.

சிறிது நேரம் பொதுவாக பேசி கொண்டிருக்க, “அக்கா கொஞ்சம் டையர்ட்டா இருக்கு படுத்துக்கட்டுமா?” என்று கேட்க, “நான் ஒரு லூசு மொக்கை போட்டுட்டு இருக்கேன் நீ தூங்கு” என்று கதவை சாத்திவிட்டு வெளியேற, அருணின் அறையில் தொலைப்பேசி அடித்துக் கொண்டிருந்தது.

“அண்ணா எங்க போனான்” என்று அவன் அறையில் எட்டி பார்க்க, அங்கு அருண் இல்லாததை கண்டவள் போனை எடுக்க அருகில் செல்ல கால் கட்டாகி விட்டது.  “சரி அவனே வந்து பேசிக் கொள்ளட்டும்” என்று விட்டு வெளியேறுகையில் மீண்டும் மொபைல் ஒலிக்க, அதை எடுத்து பார்த்தவள் அதிர்ச்சி அடைய அனு தான் கால் செய்திருந்தாள்.

ஸ்கீரினில் அவளது போட்டோவை பார்த்ததுமே தனுஷாவிற்கு தெரிந்து விட்டது இளாவின் தங்கை தான் அண்ணன் காதலிக்கும் அனு என்று. அதற்குள் அருணும் பாத்ரூமிலிருந்து வெளிப்பட, “இங்க தான் இருந்தியா ரொம்ப நேரமா போன் அடிக்குது” என்று அவனிடம் நீட்ட,

யாரென்று பார்த்தவன் அனு என்றதும் அட்டன்ட் செய்யாமல் அதை தன் பாக்கெட்டினுள் வைத்துவிட, தனுவிற்க்கு எல்லாம் புரிந்து போனது. ஆக இளா மேல் இருக்கும்  கோபம் அனு மேல் பாய்கிறது என்று அறிந்து கொண்டவள், “அண்ணா ஏன் பேசலை அட்டன்ட் பண்ணு” என்று தூண்டிலை போட, அவனோ அதற்கு அமைதியையே பதிலாக தரவும் தனுவே தொடர்ந்தாள்.

“அண்ணா நான் ஒண்ணு சொல்றேன். உன்னோட கோபம் சரியில்லை இளா பண்ணினதுக்கு அனுவை தண்டிக்குறது சரியா? சொல்லு. எனக்காகனு சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. உனக்கு என் மேல பாசம் இருக்கு தான் இல்லைனு சொல்லலை அதுக்காக நீ மத்தவங்களை கஷ்டப்படுத்துறது சரியா? அதுவும் சம்மந்தமே இல்லாத அனுகிட்ட காட்டுறது நியாயமே இல்லை” என்று சொல்ல,

“இல்லை தனு” என்று ஆரம்பித்தவனை “ஒரு நிமிஷம் அண்ணா நான் சொல்லி முடிச்சுக்குறேன் என் பசிக்கு எப்படி நீ சாப்பிட முடியாதோ அதே போல் தான் நீ அனுகிட்ட காட்டுற கோபமும் லாஜிக் இல்லாது சோ பார்த்துக்கோ” என்று விட்டு நகர்ந்தாள்.

மீண்டும் மொபைல் ஒலிக்கவும் எல்லாம் இவளால் வந்தது என்று நினைத்தவன் போனை அட்டன்ட் செய்து “ஹேய் உனக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பாரு போன் பண்ணி டார்ச்சர் பண்ணிகிட்டு” என்று கடு கடுக்க, “ஹப்பா கத்தி முடிச்சாச்சா?” என்று அனு சொல்ல,

“என்னடி கொழுப்பா? வாய் ரொம்ப நீளுது” அருண் கோபப்பட, “ஆமா நீளூது வேணும்னா வந்து அளந்து எடுத்துட்டு போங்க” என்று சொல்ல,

ஒரு நிமிடம் அவளின் இதழின் மென்மை மனதிற்குள் தோன்றி சிலிர்ப்பை ஏற்படுத்த, அதை மறைக்க முயன்றவனாய்” ஹேய் இப்போ எதுக்கு இப்படி உயிரை வாங்குற” என்று கேட்க,

“சரி சரி கோபப்பட வேண்டாம் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்” என்க,

“சொல்லி தொலை” என்றவனிடம் , “நாம பிரேக்-அப் பண்ணிக்கலாம் இனி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். அதான் அதை சொல்லிடலாம்னு போன் செய்தேன்” என்றாள் அனு.

அவள் சொல்லியது அவன் மனதை ரணமாக்க “என் என்ன சொல்ற நீ” என்று தட்டு தடுமாற, “ஏன் சார் ஏன் பதட்டபடுறிங்க, எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்னு சொல்றேன் இனி உங்க வாழ்க்கையில் குறுக்க வர மாட்டேன்னு சொல்றேன்.உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேனு சொல்றேன் இப்போ புரிஞ்சுதா” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக சொல்ல, அருணுக்கோ அவள் சொல்ல வந்ததை கிரகிக்கவே சில நிமிடம் பிடித்தது.

“ஓகே மிஸ்டர். அருண் நீங்க மனசுல எதையும் வச்சுக்காதிங்க ஏன் சொல்றேன்னா என்ன இருந்தாலும் நாம ரிலேட்டிவ்ஸ் சோ எப்படியும் ஒருத்தருக்கொருத்தர் சந்திக்குற வாய்ப்பு அமையும். அப்போ மூஞ்சை திருப்பிட்டு போனா நல்லா இருக்காதுல அதான். ஓகே டேக் கேர் பை” என்று வைத்து விட, அனுவின் இந்த முடிவில் ஸ்தம்பித்து போனான். தனக்கு பிடித்தவர்களை வெறுக்கும் போது ஏற்படாத வலி அவர்களால் நாம் வெறுக்கப்படும் போது  ஏற்பட்டு மனம் ரணம் அடைவதை இப்போது உணர்ந்தான் அருண்.

 

Advertisement