Advertisement

அத்தியாயம் 21:

மழை வந்தால் வீசும் மண் வாசம்

வேண்டுமானால் மழை நின்றதும்

மறைந்து விடலாம் உன் மேல் நான்

கொண்ட நேசம் எனை விட்டு நீ

நீங்கினாலும் என் நெஞ்சில் ஓயாமல் வீசும்!

இளா அடித்ததை நம்ப முடியாமல் கன்னத்தில் கை வைத்தபடி அதிர்ந்து அவனை நோக்கி கொண்டிருந்தாள் தனுஷா. கோபப்படுவான் என்று நினைத்தாள் தான் ஆனால் கை நீட்டி அடிப்பான் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.அவளது அதிர்ந்த தோற்றம் தன்னை பாதிக்கவில்லை என்பது போல் கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தான் இளா.

“என்ன வார்த்தைடி பேசுற நான் அலையுறனா? ஹம்ம்ம் உன்னை மட்டுமே மனசுல நினைச்சுகிட்டு வாழ்ந்தா உன்கூட தான்னு காத்துட்டு இருந்தவன்டி நான் எனக்கு இந்த பேச்சு தேவை தான்” என்று சொல்ல,அவளோ அமைதியாக இருக்க அவனே தொடர்ந்தான்.

“நிஜமா சொல்லு உனக்கு என்னை பிடிக்கலைனு இன்னும் எத்தனை நாளுக்குடி இப்படி நடிக்க போற? உன்னை பொறுத்த வரை எல்லோருக்கும் நல்லவளா இருக்கணும். நல்ல மகளா, நல்ல அக்காவா, நல்ல தங்கச்சியா ஆனா நீ நீயா இருக்கிறது மட்டும் உன்னால முடியாது அப்படி தானே” என்று மூச்சு விடாமல் பேசிய இளாவின் பேச்சில் அனல் வீச ,

“நான் நல்லவளா தான் இருக்குறேன் உன்னை மாதிரி சுயநலம் பிடிச்சவளா இல்லை உன்னோட சுயநலத்தால பிடிக்காத வாழ்க்கைக்குள்ள என் தங்கச்சி தள்ளப்பட்டிருக்கா? இதுக்கு என்ன பதில் சொல்ல போற? ம்ம் சொல்லு அவளோட வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்ல போற?” என இன்று காலை தன் தங்கையிடம் பேசிய போது சஜன் அவளை திட்டியதை கேட்டதிலிருந்து தங்கைக்காக மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தவள் இளாவின் தொடுகையினால் வெகுண்டெழுந்தாள்.

ஆனால் அவள் தங்கையின் வாழ்வை பற்றி நினைப்பது போல தான் தன் வாழ்வும் இருக்கிறது என்பதை உணரவில்லையா? இல்லை அவளுக்கு அப்படி தோன்றவில்லையா? அது கடவுளுக்கே வெளிச்சம்.

“ஹேய் உன் தங்கச்சியை பற்றி உனக்கென்ன தெரியும் அவ ஒருத்தனை விரும்புறானு தெரியுமா? இல்லை அது சஜன்னு உனக்கு தெரியுமா?“ என்று கூற,

என்ன இது புது கதை என்பது போல் புருவம் உயர்த்தி இளாவை கேள்வியாக பார்க்க “அது சரி உனக்கு உன் மனசுல என்ன இருக்குனே தெரியலை இதுல அடுத்தவங்க மனசுல என்ன இருக்குனு எப்படி தெரிய போகுது” என்றான்.

“உனக்கு எப்போதும் ஐஎஸ்ஐ மார்க் குத்தினவளா இருக்கணும் எல்லோரும் தனு மாதிரி உண்டானு சொல்லணும். நான் மட்டும் உன்னை கடத்தி கல்யாணம் செய்யலைனா நீ அந்த சஜனை ம்ச்  அதை வாய் வார்த்தையா கூட என்னால சொல்ல முடியாது. நீ நல்லவளா இரு அதே சமயம் மனசுல இருக்க நியமான ஆசைகளை கூட உணர தவிர்த்துட்டு அப்படி என்ன நல்ல பெயரை வாங்க போற? இல்லை அந்த நல்ல பெயரை வச்சுதான் என்ன செய்ய போற? ஒரு **** பிடுங்க முடியாது.

ரோட்டுல போற பொண்ணை கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ண நான் ஒண்ணும் ரோக் இல்லை எனக்கு தெரியும் உனக்கு என் மேல காதல் இருக்குனு. இல்லைனு மட்டும் பொய் சொல்ல நினைக்காதே என்னை பார்க்கும் போது உன் கண்ணு சிரிக்குமே அதுல பொய்யில்லை எனக்கு ஏதும்னா நீ துடிச்சியே அந்த துடிப்பு பொய்யில்லை. இப்போ சொல்லு உன் மனசுல நான் இல்லையா? அன்னைக்கு மாதிரி வெறும் ப்ரெண்ட்ஷிப்னு சொல்லி உன்னையும் ஏமாத்தி என்னையும் ஏமாத்தாதே! ப்ரெண்ட்ஷிப்க்கும் லவ்க்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் இல்லை நான். நான் உன்னை கல்யாணம் பண்ணின நிமிஷத்துல இருந்து இப்போ வரை நீ உன் தங்கச்சி வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேனு என்கிட்ட சண்டை போட்டியே தவிர என் வாழ்க்கையை இப்படி பண்ணிட்டியேனு ஒரு தடவை கூட சொல்லலையே ஏன்? உன்னை சுற்றி நீ போட்டுருக்க வட்டத்தை விட்டு வெளிய வந்து உன் மனசை கேளு அது சொல்லும் உண்மையை” என்ற போது ,

தன்னை கண்டு கொண்டானோ என்று நினைத்தவள் அப்போதும் வாய் திறந்து பேசாமல் அமைதியா இருக்க, இந்த அமைதி தானே எல்லோரையும் படுத்தி எடுக்கிறது என்று நினைத்தவன்

“உன்னை உனக்கு புரிய வைக்குறதுல நான் தோற்று போயிட்டேன். எது நடந்தாலும் கண்டுக்காம போகுறதுக்கு நான் ஒண்ணும் ஜடம் இல்லை உணர்வுகள் இருக்கிற சாதரண மனுஷன் ஒவ்வொரு தடவையும் நீ என்னை ஒதுக்குறப்போ இங்க வலிக்குதுடி” என்று தன் நெஞ்சை சுட்டிக் காட்டியவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து தன் தலையை இரு கைகளால் தாங்கியவாறு அமர்ந்துவிட்டான்.

அவன் பேச்சில் இருந்த தவிப்பும் முகத்தில் தெரிந்த வேதனையும் தனுஷாவை சற்று ஆட்டம் காண செய்தது என்றே சொல்ல வேண்டும். என்ன தான் அவனை பிடிக்காது என்று மூளைக்குள் உருவேற்றிக் கொண்டாலும் அடிமனதில் அதை பதிய வைக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.

நீரில் அமுக்கி மறைத்து வைக்கப்பட்ட பந்து மீண்டும் மேலெழும்பும் என்பது எப்படி மறுக்க முடியாததோ அது போல் அடி மனதில் அவனுக்காய் இருக்கும் சில உணர்வுகளையும் மறைக்க முடியாது என்பதை அவள் நினைக்கவில்லை. நினைத்து போதோ காலம் கடந்திருந்தது. தியா சஜனை காதலித்தாள் என்பதை ஜீரணிக்கவே அவளுக்கு சில மணித்துளிகள் பிடித்தது.

தன் தங்கை அவள் விரும்பியவனை தான் கைப்பித்திருக்கிறாள் என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டவளின் மனம் சஞ்சலம் நீங்கி தெளிந்த நீரோடையாய் இருந்தது. அமர்ந்திருந்த இளாவின் அருகில் சென்றவள் “செழியன்” என்று அழைக்க,

சில வருடங்களுக்கு பிறகு அவள் அப்படி அழைத்ததில் சற்று மகிழ்ந்தவனின் மனம் நொடியில் இறுகி போனது. அவளின் இந்த மாற்றத்திற்கு காரணம் அறியாதவனா அவன்? தங்கையின் வாழ்வு சரியான பாதையில் என்று தெரிந்த பின்பு தான் இந்த மாற்றம் என்பதை அவன் உணர்வதற்க்கு விளக்கம் தேவையிருக்கவில்லை.

விருட்டென்று எழுந்தவன் “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே நான் மனுஷனா இருக்கனும்னு நினைக்குறேன் மிருகமா மாற்றிடாதே எப்போதும் என்னை புரிஞ்சுக்காம மனசை காயப்படுத்துறதையே வழக்கமாக வச்சுருக்க“என்றவன் தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டான்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சஜனின் அணைப்பில் இருந்த தியா தன் கண்களை நம்ப முடியாமல் அந்த தருணத்தை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்க, சட்டென்று தன் நிலையை உணர்ந்த சஜன் அவளை விலக்கி நிறுத்தினான்.

வாயில் போட போன மிட்டாய் தவறி கீழே விழுந்தது போல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த தியாவை கண்டவன் “என்ன இங்கேயே இருக்க போறதா ப்ளானா? வா சீக்கிரம்” என்றுவிட்டு தன் காரை நோக்கி வேக நடை போட அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாய் அவன் பின் சென்றாள்.

காரில் அமர்ந்து இருவருக்கும் இடையே மௌனமே நிலவ அதை கலைக்க விரும்பாமல் சஜன் காரை ஓட்டுவதில் கவனமாக இருக்க, தியாவோ ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரும் வீட்டிற்குள் நுழைய இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர் கயல்விழியும் சிவாவும். சஜனின் முகத்தில் சில நாட்களாய் குடியிருந்த இறுக்கம் இன்று சற்றே தளர்ந்தது போல் இருக்க தியாவின் முகத்திலோ பொலிவு தெரிய அதை கண்ட கயல் சீக்கிரம் அனைத்தும் சரியாகிவிடும் என்று நினைத்தவர் “சஜன், எங்க இருந்தா தியா” என்று கேள்வி கேட்க ஆரம்பித்த சிவாவை கைபிடித்து தடுக்க, திரும்பி தன்னை பார்த்த கணவரிடம் கண் ஜாடை காட்டிவிட்டு சஜன், தியா இருவரையும் சாப்பிட்டு விட்டு படுக்குமாறு சொல்லிவிட்டு தன் கணவனை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றார். அவர்கள் சென்றதும் இரவு உணவை முடித்துக் கொண்டு இருவரும் உறங்க சென்றனர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மருத்துவமனை கல்லூரி பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க, ரிஷியும் அருணும் ரவுண்ட்ஸ் முடித்துக் கொண்டு மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சியை பற்றி விளக்க ரிஷி சென்றுவிட அருணும் தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.

இருவரும் ஒன்றாக வேலை செய்தாலும் அருணுக்கு ஏனோ ரிஷியை பிடிக்கவில்லை. ரிஷி மிலிட்டரி மெடிக்கல் கேம்ப்பில் ஐந்து வருடங்கள் பணியாற்றிவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறான். அவனிடம் எப்போதும் இருக்கும் கடினத்தன்மையும், தனக்கு சரியென்று பட்டால் அதை செய்துவிடும் குணம் கொண்டவன். யாருடனும் அதிகமாக பழக மாட்டான் எவரையும் சற்று எட்ட நில் என்பதான அவனது பார்வை இவை எதுவுமே அருணுக்கு பிடிக்கவில்லை.

அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்தவரை வார்த்தைகளால் விலாசிக் கொண்டிருந்தான் ரிஷி. “என்ன பண்ணி வச்சிருக்கீங்க உங்களுக்கே உங்க ஆரோக்கியத்தின் மேல அக்கறை இல்லைனா நாங்க என்ன செய்ய முடியும் ம்ம்”

“இல்லை டாக்டர்” என்றவர்களை இடைமறித்தவன் “என்னது இல்லை நொல்லைனு சொல்லிட்டு இருக்கீங்க இந்த டெஸ்ட் எடுக்க சொல்லி ஒரு மாதம் ஆகுது. இப்போ வந்து அது செய்யுது இது செய்யுதுனு புலம்புனா என்ன பண்றது? நாங்க அட்வைஸ் தான் தர முடியும் உங்களை கண்காணிச்சுட்டே இருக்க முடியுமா?” என்று கத்த,

அந்நேரம் அங்கு வந்த அருண் நடந்ததையெல்லாம் பார்த்துவிட்டு “ரிஷி கூல் டவுன் அவங்களே ரொம்ப பயந்து போய் வந்திருக்காங்க இதுல நீங்க வேற கோபமாக பேசுறீங்க”என்று கேட்க,

“மிஸ்டர்.அருண் ப்ளீஸ் லெட் மீ ஹேண்டில் திஸ்” என்று சொல்லிவிட, அருணுக்கு முகத்தில் அடித்தாற் போல் ஆனது. உடனே அங்கிருந்து கிளம்புவதற்கு திரும்ப, அங்கு செயல்முறை வகுப்பில் இருந்த சந்தேகத்தை ரிஷியிடம் கேட்பதற்காக வந்த அனு நின்று கொண்டிருந்தாள்.

அவளை கண்டு கொள்ளாமல் அருண் வெளியேற, அவனை சீஃப் டாக்டர் அழைப்புதாய் ப்யூன் சொல்லவும், அவரை காண அவரது அறைக்கு சென்றான்.

“குட்மார்னிங் டாக்டர்” என்றபடி உள்ளே நுழைய, “குட்மார்னிங் அருண் ப்ளீஸ் பீ சீட்டட்” என்று சொல்ல அமர்ந்தவன் “கூப்பிட்டீங்களா சார்” என்று கேட்க,

“யெஸ் அருண். நீங்க கேட்டிருந்த டிரான்ஸ்ஃபர் வந்திடுச்சு சோ அதை இன்பாஃர்ம் பண்ண தான் கூப்பிட்டேன். நெக்ஸ்ட் வீக் நீங்க ஜாயின் பண்ணனும் ஃபைவ் டேஸ் ஜாயினிங் லீவ் இருக்கு நாளைக்கே ரிலீவ் ஆகுறதுனாலும் நோ ப்ராப்ளம்” என்றார்.

“தேங்க்யூ சார். இங்க கொஞ்சம் வொர்க் இருக்கு அதை முடிச்சுட்டு டே ஆஃப்டர் டுமாரோ ஐ வில் ரிலீவ் சார்” என்றவன் ட்ரான்ஸ்பர் ஆர்டரை வாங்கி கொண்டு தனதறைக்கு சென்றான்.

அன்று இரவு தனுஷாவிடம் கோபமாக பேசிவிட்டு சென்றவன் தான் இளா அதன் பின் வீட்டிற்கு வரவேயில்லை இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு நாட்களாய் வீட்டில் ஒற்றையாய் இருந்து வெறுத்துவிட யாரிடமாவது மனம் விட்டு பேசலாம் என நினைத்தவள் வெண்பாவிற்கு அழைத்தாள்.

“ஹலோ வெண் இன்னைக்கு நீ ஃப்ரீயா?” என்று கேட்க, “ஃப்ரீ தான்டி ஏன் கேட்குற” என்றாள் வெண்பா.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று தனு கேட்டதும், ”சரிடி அப்போ நான் வீட்டுக்கு வரவா” என்று கேட்க,

“வீட்டுக்கெல்லாம் வேணாம்டி வெளிய எங்கேயாவது மீட் பண்ணலாம்” என்றுவிட்டு தாங்கள் வழக்கமாக செல்லும் உணவகத்திற்கு வர சொன்னாள்.

“சரி தனு வந்திடுறேன்’ என்று வைத்துவிட, குளித்து கிளம்பியவள் இளாவிடம் சொல்லி விட்டு செல்வோமா? வேண்டாமா? என்று நினைத்துக் கொண்டிருந்தவள் சொல்லிவிட்டே செல்லலாம் என முடிவெடுத்து அவனுக்கு அழைக்க, இளாவோ கட் செய்து விட்டான்.

இரண்டு முறை அழைத்தும் எடுக்கப்படாமல் இருக்க, மெசேஜ் செய்து விடலாம் என்று நினைத்தவள் “ஐயம் கோயிங் அவுட் டூ மீட் வெண்பா.” என்று டைப் செய்து அனுப்பி விட்டாள். மெசேஜ் வந்த ஒலி கேட்டதும் அதை எடுத்து பார்த்தவன் “எதுனாலும் எங்கிட்ட சொல்லிட்டு செய்யுற மாதிரி இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்று முணு முணுத்து விட்டு அதை டெலிட் செய்தான்.

அந்நேரம் அவன் அறைக்குள் வேகமாக வந்த விஷ்வா “ இளா நீ இப்படி செய்வேனு நான் நினைக்கவே இல்லைடா” என்று வந்ததும் வராததுமாக பொரிய,

அவனை எதிர்பார்த்தவன் போல் “ஹே விஷ்வா முதல்ல உட்காருடா” என்று சொல்ல, அவனது நிதானமான செய்கை விஷ்வாவிற்கு எரிச்சலை உண்டு பண்ண, “உட்கார்ந்து விருந்து சாப்பிட வரலை இரண்டுல ஒண்ணு கேட்டுட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்று சாட,

“நானும் உனக்கு விருந்து போட உட்கார சொல்லலை இது என்ன உன் மாமியார் வீடா உன்னை உட்கார வைச்சு மாப்பிள்ளை மரியாதை செய்ய, ப்ர்ஸ்ட் உட்காரு அப்புறம் என்ன கேட்கணுமோ கேளு பதில் சொல்றேன்”

“ஓஹோ அப்போ எல்லாத்துக்கும் தயாரா இருக்கேனு சொல்லாம சொல்றியா?” என்றவன் அங்கு அமர்ந்து இளாவையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க,

“என்னடா கோபமா வந்த இப்போ என்னடானா என்னை சைட் அடிச்சுட்டு இருக்க அவ்வளவு அழகாகவா இருக்கேன்” என்று அங்கிருந்த சூழலை சகஜமாக்க முயல,

“இளா பீ சிரீயஸ். உன்னை நம்பி தானே சஜனை உன்கிட்ட போய் உதவி கேட்க சொல்லி அனுப்பி வச்சேன் ஆனா நீ” என்று ஒரு நண்பணுக்காய் இன்னொரு நண்பனிடம் வாதாட வந்திருக்கும் தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான் விஷ்வா.

“ஏன்டா யாரும் என் நிலையில இருந்து யோசிக்க மாட்றிங்க ஐந்து வருஷம் அவளோட நினைவுகள்ல வாழ்ந்துட்டு இருக்க நான் எப்படிடா அவளை இன்னொருத்தனுக்கு விட்டு கொடுக்க முடியும்” என்று சொல்ல,

“என்னடா சொல்ற ஐந்து வருஷமா அப்படினா நீ சொன்னது இவங்களை தானா?” என்று கேட்க,

“ஆம்” என்பதாய் தலையசைக்க, “ஹேய் உன் நிலையில இருந்து யோசிக்க சொல்ற நீ ஏன்டா சஜன் நிலையை யோசிக்காம போன? அன்னைக்கு அவன் என்கேஜ்மென்ட் ஆயிடுச்சுனு சொல்லி போட்டோ காட்டும் போது ஏன் அமைதியா இருந்த? அப்போவே சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் பிரச்சனை வந்திருக்காதே” என்று சஜன் காதலித்த விவகாரம் தெரியதவனாய் விஷ்வா பேச,

“எனக்கே அன்னைக்கு ஷாக் தான்டா. இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை அதைவிட தனு இவ்வளவு அழுத்தக்காரியா இருப்பானு” என்றவன் தன் கண்களை மூடிக் கொள்ள,

நண்பனின் வேதனையை கண்டு கலங்கியவன் “இளா” என்று அழைக்க, கண்களை திறந்தவன் “நான் செய்த்து தப்பு தான் என் காதலை காப்பாத்திக்க வேற வழி தெரியலை. சஜன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டே ஆகணும்னு எனக்கு தெரியாம இல்லடா ஆனா இப்போ போய் எப்படி ஆரம்பிக்கறது” என்று தயங்கியவனை கண்டு,

“ம்ம் கேட்டுத்தான் ஆகணும். கொஞ்சம் உன் கெத்தை இறக்கி வச்சுட்டு சீக்கிரம் அவனை பார்த்து பேசு” என்றவனை முறைத்த இளாவிடம்,

ஏன்டா தனுஷாவை காதலிக்குறேனு சொல்ற அவங்க சஜன் கூட கல்யாணம் பேசும் போது ஒத்துகிட்டு இருந்திருக்காங்க. நீ என்னடானா தியா சஜனை லவ் பண்றானு சொல்ற அது எப்படி உனக்கு தெரியும். என்ன தான்டா நடக்குது எனக்கு தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு” என்று கேட்க,

அவனை கண்டு மெலிதாய் புன்னகைத்தவன் “இல்லாத மூளையை ரொம்ப கசக்காத” என்றுவிட்டு தான் தனுஷாவை முதலில் சந்தித்த தருணத்தையும் தன் காதல் மலர்ந்த கதையை சொல்ல தொடங்கினான்.

வெகுநேரமாக பழச்சாறு இருந்த கிளாசில் ஸ்ட்ராவை விட்டு கலக்கியபடி குடிக்காமல் அமைதியாய் இருந்தவளை பார்த்துக் கொண்டே இரண்டாவது ஜூஸ் கிளாசை காலி செய்த வெண்பா “ஹே தனு இதுக்கு மேல என் வயித்துலயும் இடம் இல்லை அதை விட என் பர்ஸ்ல பணம் இல்லை” என்று சொன்னவளிடம்,

“ஏன்டி படுத்துற இன்னொரு வேணும்னா வாங்கிக்கோ நான் பே பண்றேன்” என்றவளை முறைத்தவள்,

“ஹோ ஸ்பான்சர் பண்றிங்களோ? ஹும்கும்” என்றவள் ஏதோ பேசணும்னு வர சொல்லிட்டு இப்படி அமைதியாய் இருந்தா என்ன அர்த்தம் இப்போ பேசப்போறியா இல்லையா? நான் கிளம்புறேன்” என செல்வது போல் பாவனை செய்ய,

“ஹே இருடி வீட்டுக்கு போய் என்ன வெட்டி முறிக்க போற” என்று அவளை கைப்பிடித்து அமர செய்தவள் “வெண் தியா சஜனை லவ் பண்ணிருக்காடி” என்று கூற, அதை கேட்டு அதிர்ந்தவள் “என்னடி சொல்ற” என்று கேட்க,

“ஆமா வெண் நீ கவனிச்சியா? பொண்ணு பார்த்துட்டு போன பிறகு தியா ரொம்பவே ஒடுங்கி போயிருந்தா அதுக்கு காரணம் எனக்கு இப்போ தான்டி தெரியுது. நல்ல வேளை அவளுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையே கிடைச்சுடுச்சு” என்றவளிடம், “அப்போ உனக்கு?” என்று கேள்வி கேட்டவளை பார்த்து “எனக்கும் தான்” என்றவளை வேற்று கிரகவாசியை பார்ப்பது போல் வெண்பா பார்க்க, “உனக்கு யாரு சொன்னா இதை தியாவா?” என்று கேட்க,

“அவ எப்படிடி சொல்வா? செழியன் சொன்னார்” என்று சொன்னவளை கண்டு மயக்கம் வராத குறையாய் ஆனவள் “தனு ஒரு ஜூஸ் சொல்லிடுடி நீ முழுசா சொல்லி முடிக்கும் போது நான் மயங்கி விழுந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை“என்றுவிட்டு

“முதல்ல உன் கதைக்கு வா? இளா சாரை எப்படி உனக்கு தெரியும் உங்களுக்குள்ள என்ன லிங்க்” என்று கண்ணடித்தவளை கண்டு தானும் இதழ்கிடையில் புன்னகைத்தவள் “நானும் செழியனும் ஒரே காலேஜ்” என்று சொல்ல, “என்னது ஒரே காலேஜ்-ஆ?” என்று அதிர்ந்தாள் வெண்பா.                    

செனோரீட்டா வருவாள்.     

Advertisement