Advertisement

அத்தியாயம் 19:

சுடு நீர் ஊற்றி செடி வளர்ந்ததாக

வரலாறில்லை அதனால் தான்

சுடும் கண்ணீர் சிந்தி வளர்த்த என் காதல்

காவியமானதோ?

தியாவை இறக்கி விட்ட பின் தன் அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சஜனின் மனம் முழுதும் தியாவை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் “ச்ச நான் எதுக்கு இப்போ தேவையில்லாம அவளை பற்றி நினைக்கணும் இவ ஏதோ ப்ளான் பண்றா நோ இனி அவ நினைக்குற மாதிரி நடந்துக்க கூடாது” என்று தன் தலையை உலுக்கி கொண்டவன் தன் வேகத்தை கூட்டி காரில் பறந்தான்.

அலுவலகத்தில் நுழைந்ததும் அவனை கண்டவர்கள் “அய்யோ இன்னைக்கு யாருக்கெல்லாம் மண்டகப்படி கிடைக்க போகுதோ” என்று மனதினுள் முணு முணுத்துக் கொண்டிருக்க,

அவர்கள் நினைப்பது சரியே என்பது போல் இறுக்கத்துடன் இருந்த சஜன் அவர்கள் சொல்லிய காலை வணக்கத்தை கூட மருந்துக்கும் புன்னகையில்லா சிறு தலையசைப்புடன் ஏற்றுவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

அப்போது உள்ளே வந்த வினோத் “சார் எக்ஸ் மினிஸ்டர். சீதாராம் செக்கரட்டரி போன் பண்றார் சார். மினிஸ்டர் உங்களை பார்க்கணும்னு சொன்னாராம்” என்று சொல்ல,

“சீதாராமா? அவர் எதுக்கு என்னை பார்க்கணும்னு சொன்னார். என்ன விஷயம்னு எதுவும் கேட்டியா?”

“நாம இன்னொரு ப்ரான்ச் ஓபன் பண்ற விஷயமா லேண்ட்க்கு குடுத்த ஆட் பார்த்துட்டு அதை பற்றி பேசணும்னு அவர் செகரெட்டரி சொன்னார்”

“ஓ சரி என்னைக்கு மீட் பண்ணலாம்னு கேட்டு டேட் பிக்ஸ் பண்ணுங்க” என்று முடித்துவிட, “ஓகே சார்” என்று விடைபெற்றான் வினோத்.

தன் அறைக்குள் வந்த வினோத் தனது மொபைலை எடுத்து பார்க்க, அவன் முகப்பு திரையாக வைத்திருந்த வெண்பாவின் படம் மாறியிருக்கவே வேகமாக கேலரியில் அந்த படத்தை தேட ஆனால் அந்த போட்டோ அழிக்கப்பட்டிருந்தது.

“எப்படி அழிஞ்சுது” என்று புருவம் சுருக்கி யோசித்தவன் முதலில் தான் செய்ய வேண்டிய வேலை நியாபகம் வர உடனே சீதாராமின் செயலாளருக்கு அழைத்து அவரிடம் பேசி சந்திக்க வேண்டிய தேதி பற்றி ஆலோசித்துவிட்டு வைத்தான்.

அப்போது தான் வெண்பாவிடம் தான் ரெடி செய்ய சொல்லிய கோப்பை பற்றிய நினைவு வரவும் அவளிடம் வாங்குவதற்காக அவளை தேடி சென்றவன் “ வெண்பா அந்த ஃபைல் ரெடி பண்ணிட்டீங்களா? அர்ஜென்டா வேணும் இன்னுமா அதை ரெடி பண்றிங்க” என்று கேட்க,

“ம்ம் பண்ணிட்டேன் சார் இந்தாங்க” என்று ஃபைலை அவனிடம் நீட்ட,

அவளிடம் எதுவோ குறைவது போல் தோன்றியதும் “ என்ன வெண்பா ஆர் யூ ஆல்ரைட்” என்று கேட்க, “அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்” என்று அமைதியாகிவிட,

சரி கொஞ்சம் என் கேபினுக்கு வாங்க “நேற்றைக்கான பேலன்ஸ் சீட் என் டேபிள்ல இருக்கு அதை வாங்கி டேலி ஆகுதானு செக் பண்ணி ஃபைல் செய்திடுங்க” என்று சொல்ல,

“கொஞ்ச நேரத்திற்கு முன் உங்க கேபினுக்கு வந்தேன் சார் நீங்க இல்லை டேபிள் மேல இருந்திச்சு எடுத்துக்கிட்டேன்” என்று சொன்னதும் அவன் மனதில் மணியடித்தது.

போனில் இருந்த மாற்றமும், அது டெலிட் செய்ததும் இவள் தான் என புரிய அவளிடம் எப்படி கேட்பது என்று தயக்கமாக இருக்க அவளையே கூர்மையாக பார்த்த வண்ணம் இருந்தான்.

அவனது குறு குறு பார்வையை தாங்க இயலாது இமைகளை தாழ்த்தியவள் தனக்கு முன் இருந்த சிஸ்டத்தின் மானிட்டருக்குள் தலையை நுழைத்துக் கொண்டாள்.

இப்போதைக்கு அவள் அசையமாட்டாள், என தோன்ற பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு அங்கிருந்து நகன்றான் வினோத்.

அவன் சென்று விட்டதை உணர்ந்தவள் சிறிது நேரத்திற்க்கு முன் நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தாள்.  வினோத் சொன்ன ஃபைலை ரெடி செய்து கொண்டு அவனது அறைக்கு செல்ல, அங்கே அவன் இல்லை என்று திரும்பியவளின் கண்ணில் தான் கேட்டுக் கொண்டிருந்த பேலன்ஸ் ஷீட் கண்ணில் படவே அதை எடுக்க டேபிளின் அருகில் சென்றாள்.

அந்த நேரம் பார்த்து வினோத்தின் மொபைல் அடிக்க எட்டி பார்த்தவள் “வினோத் சார் வந்து பார்க்கட்டும்” என்று அட்டன்ட் செய்யாமல் விட்டுவிட, அழைப்பும் நின்று போனது .

பேலன்ஸ்ஷீட்டை எடுத்துக் கொண்டு திரும்பிய நொடி அவள் கண்களில் முகப்பு திரையாக இருந்த தனது புகைப்படம் தெரியவே சட்டென்று எடுத்து பார்த்தவள் என்ன செய்வது என்று அறியாமல் அதை அழித்துவிட்டு வைத்து விட்டாள்.

அதன் பின் வினோத் பேசி விட்டு சென்றாலும் தன்னையே சுற்றி வரும் அவனது குறு குறு பார்வைகளும் ஏக்க பெருமூச்சும் அவளுக்கு எதையோ உணர்த்த அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.

அன்று தன் கவலையை வினோத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது இயல்பாய் அவன் கைகளை பிடித்துக் கொண்டது அவள் மனதிலும் அவன் இருப்பதை உணர்த்தியது.

அவனுக்கு பதிலாக வேறொருவன் அந்த இடத்தில் இருந்தால் அது போல் செய்திருப்போமா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் கிடைத்தது.

அவனது பார்வைகளும் அது உணர்த்திய செய்தியும் அவளுக்கும் பிடித்தே இருந்தது. இருந்தாலும் பெண்மைக்கே உரிய இயல்பான படபடப்பும் நாணமும் வந்து அவளை கட்டிப்போட அவன் முகம் பார்க்க முடியாமல் தவிர்த்தாள்.  

இந்த உணர்வோடு இனி தினமும் அவனை சந்திக்க வேண்டுமே என்ற நினைப்பு அவஸ்தையையும் அதே சமயம் ஒரு வித எதிர்ப்பார்ப்பையும் சேர்த்தே கொடுத்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கதவை தட்டும் சத்தம் கேட்டதும் தனது மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டவாறு தாமோதரன் “இதோ வர்றேன்” என்று குரல் கொடுத்துக் கொண்டே வாசல் கதவை திறக்க அங்கே இளா நின்றிருந்தான்.

இந்நேரம் அவனை எதிர்பார்க்காதவர் “வாங்க தம்பி” என்று அவனை உள்ளே அழைக்க, இளாவும் “ம்” என்று புன்னகையை சிந்திவிட்டு அவருடன் சென்றான்.

தான் பேச வந்ததை எப்படி சொல்லி ஆரம்பிப்பது என தெரியாமல் இளா அமைதியாக இருக்க தாமோதரன் “ என்ன சாப்பிடுறிங்க தம்பி” என்று கேட்க,

“இல்லை சார் ஒண்ணும் வேண்டாம் உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்” என்று சொல்ல,

“இதுல என்ன சிரமம் இருக்கு வேலைக்கு வர்ற அம்மா பிளாஸ்க்ல காபி தயார் பண்ணி வச்சுட்டு போயிருக்காங்க இருங்க எடுத்துட்டு வர்றேன்” என்று எழ முற்பட,

“நீங்க இருங்க சார் நான் எடுத்துட்டு வர்றேன்” என்றுவிட்டு தனுக்கும் அவருக்குமாய் இரு கப்புகளில் காபியை ஊற்றிக் கொண்டு ஒன்றை அவரிடம் குடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

“எதுவும் முக்கியமான விஷயமா? ஏன் கேட்குறேனா இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் தனும்மா பேசுச்சு நீங்க வரப்போறதை பற்றி சொல்லலையே அதான்”

“இல்லை நான் அவகிட்ட உங்கள் பார்க்க வரப்போறதை பற்றி சொல்லலை” என்ற இளாவின் பதிலும்,

மகளிடம் இளாவை பற்றி விசாரிக்கும் போது அவள் அதை தவிர்த்த விதமும் சந்தேகத்தை உண்டு செய்ய, தகப்பனாய் அவர் மனம் கவலை கொண்டது.

அவரது முகம் பிரதிபலித்த கவலையை கண்டு கொண்டது போல் “வேலைக்கு கிளம்பி வர்ற அவசரத்துல சின்னுகிட்ட சொல்ல மறந்துட்டேன் சொல்லியிருந்தா அவளும் வந்திருப்பா நான் தான் மறந்துட்டேன்” என்று சொல்ல, அவர் மனம் இளாவின் சின்னு என்ற அழைப்பைக் குறித்துக் கொண்டது.

“பராவாயில்லை தம்பி இன்னொரு நாள் பார்த்துகிட்டா போச்சு நீங்க வந்த விஷயம்” என்று இழுக்க,

“சார் நீங்க ஏன் எங்க கூட வந்து இருக்க கூடாது. தனியா இருந்து ஏன் கஷ்டப்படணும் அங்க வந்து இருங்க” என்று கேட்க,

அவன் அழைத்ததும் மனம் திருப்தி அடைய, “நீங்க கேட்டதே சந்தோஷம் தம்பி. நான் அங்க வந்து இருக்கிறது எல்லாம் சரிப்பட்டு வராது எனக்கு பார்க்கணும் தோணுச்சுனா வந்து பார்த்துட்டு போறேன். இல்லை உங்களுக்கு வரணும்னா தராளாமா வந்துட்டு போங்க ஆனா அங்கேயே இருக்கிறது சரிபட்டு வராது தப்பா நினைக்காதிங்க” என்று சொல்ல,

இளாவிற்க்குமே ஒரு நிலைக்கு மேல் அவரை வற்புறுத்த முடியாமல் “சரி சார் உங்களை கட்டாயப்படுத்த விரும்பலை. எந்த உதவினாலும் தயங்காம என்னை கூப்பிடுங்க இதுதான் என் நம்பர்” என்றுவிட்டு கிளம்பினான்.

அவன் கிளம்பியதும் இளா வந்து போன விவரத்தை மகளிடம் சொல்ல, “ச்ச நமக்கு கூட இந்த யோசனை தோணலையே” என்று தன்னை தானே கடிந்து கொண்டாள்.

அன்று இரவு இளா வரும் வரை விழித்திருக்க, கதவை திறந்து விட்டவளிடம் ஆச்சர்ய பார்வை ஒன்றை வீசியவன் ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

உடையை மாற்றி விட்டு கீழே வந்ததும் சாப்பிட ஏதாவது இருக்குமா என்ற தேடலுடன் சமையலறைக்குள் சென்றவன் ஹாட் பேக்கை திறக்க அதில் சப்பாத்தியும் பனீர் மசாலாவும் இருக்க “பரவாயில்லை என்ன தான் கோபம் இருந்தாலும் புருஷனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கணும்னாவது தோணியிருக்கே” என்றவாறு நான்கு சப்பாத்திகளை தட்டில் எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவன் ஒருவாய் வைக்க போக பாதியிலேயே நிறுத்தியவன் “நீ சாப்பிட்டியா” என்று அங்கு கர்மசிரத்தையாக செய்திதாளில் ஒவ்வொரு வரியையும் விடாமல் படிப்பது போலான பாவனையில் இருந்தவளிடம் கேட்க,

அவளோ பதில் சொல்லாமல் ஒரு தோள் குலுக்கலோடு மீண்டும் அந்த செய்தியோடு மூழ்கியது போல் இருந்துவிட. “உனக்கு ரொம்ப ஏத்தம்டி ஏன் வாயை திறந்து சொன்னா முத்து உதிர்ந்துருமோ” என்று முனகிவிட்டு உண்டு முடித்தான்.

அறைக்கு சென்று வெகு நேரமாகியும் அவள் வராமல் இருக்க கடுப்புடன் கீழே வந்து பார்க்க, தனுஷாவோ உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி விழுந்து கொண்டிருந்தாள்.

அப்போது தான் அவள் வராததன் காரணம் புரிய தனக்குள்ளே சிரித்துக் கொண்டவன் அவளை நெருங்கி தோள் தொட்டு எழுப்ப “ம்ச்சு” என்ற சிணுங்கலோடு மீண்டும் தூங்கி விழ இப்போது பலமாக தோளை தட்டினான்.

அதில் எரிச்சல் அடைந்தவள் கண்களை சிரமப்பட்டு திறந்து “இப்போ என்ன வேணும் உனக்கு சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணிகிட்டு இருக்க” என்று சொல்ல,

“எனக்கு என்னெல்லாமோ வேணும் அதெல்லாம் கேட்க முடியுமா? இப்போதைக்கு உள்ளே வந்து உன் தூக்கத்தை கன்டினியூ பண்ணு அது போதும்” என்று குறும்பு மின்ன சொல்ல,

அவனை பார்த்து முறைத்தவள் “எனக்கு தூக்கம் வரலை” என்றவாறு டேபிளில் இருந்த மேகசினை புரட்ட அவனும் அங்கு அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

புத்தகத்தின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை திருப்பி கொண்டே வந்தவள் கொட்டாவியை விட்டு விட்டு மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து திருப்ப ஆரம்பிக்க,

அவளது செயலில் பொறுமை இழந்தவன் உனக்கெல்லாம் அதிரடி தான் சரி என்று முணு முணுத்துக் கொண்டு அவளை அலேக்காக தூக்கியவன் அவள் திமிர திமிர அறைக்குள் கொண்டு வந்து இறக்கிவிட்டு “போய் தூங்கு” என்று சொல்லிவிட்டு கட்டிலின் மறுபக்கம் சென்று அமர,

“சரியான பொறுக்கி ராஸ்கல் எனக்கு வர்ற கோபத்துக்கு அப்படியே அவன் மூஞ்சியில்யே ரெண்டு குத்து குத்தணும்னு இருக்கு” என்று முனகியவள்,

போர்வையை எடுத்துக் கொண்டு கீழே விரிக்க ஆயத்தமாக அவளது செய்லை உணர்ந்தவன் “ஷப்பா இவளோட இம்சையா இருக்கு. இவளை சமாளிக்கிறதுக்குனே எக்ஸ்ட்ரா சாப்பிடணும் போல” என்று சலித்துக் கொண்டவன் அவள் தலையணையை எடுக்க கை நீட்டிய போது கைகளை பிடித்து தடுக்க “இப்போ கையை விட போறியா இல்லையா? நானும் அப்போதிருந்து பார்த்துட்டு இருக்கேன் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குற இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்” அவனிடம் இருந்து கைகளை உதற,

அவள் கோபத்தை ரசித்தவன் “சரி கூல் கூல் கீழே படுக்காதே தரை ஜில்லுனு இருக்கும் உனக்கு ஒத்துக்காது” என்று அக்கறையாக சொல்ல,

தனக்கு ஒத்துக் கொள்ளாது என்று அவளுக்குமே தெரிந்திருந்தாலும் அவன் சொன்னதை தான் கேட்கவேண்டுமா என்ற எண்ணம் வர அதுமட்டுமில்லாது அவனுடன் ஒரே கட்டிலில் படுக்க இயலாமல் “நான் படுக்குறேன் அதில உனக்கென்ன வந்துது” என்று சொல்லிவிட்டு கீழே படுத்துவிட்டாள்.

இளாவோ எப்படியும் ஐந்து நிமிடத்திற்கு மேல் தாங்கமாட்டாள் எழுந்துவிடுவாள் என்று நினைத்து அவளை பார்த்த வண்ணம் இருக்க

தரையின் குளுமை தூங்கவிடாமல் தொந்திரவு செய்ய வயிற்றிற்க்குள்ளே கால்களை நுழைத்துக் கொள்ள துடிப்பது போல் இருப்பதை கண்டவன், எழுந்து வந்து “சின்னு அதான் முடியலைல இப்போ எதுக்கு வீம்புக்கு படுத்துருக்க” என்று கேட்க,

தனுவோ அதையெல்லாம் காதில் வாங்காமல் படுத்திருக்க “இப்போ நீ எழுந்து மேல படுக்கலை உன்னை இறுக்கமாக கட்டிப்பிடிச்சுக்கிட்டு நானும் உன் கூடவே கீழே படுத்துப்பேன்.” என்று சொன்னதும் விழுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

“அது” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு வெளியில் தீவிரமான பார்வையோடு “நான் சொன்னா செய்திடுவேன் எனக்கு நோ ப்ராப்ளம்” என்று சொல்லி கண்சிமிட்ட,

“ராஸ்கல் இதுக்கெல்லாம் சேர்த்து நீ அனுபவிப்படா” என்று முனகிவிட்டு மெத்தையில் தடுப்புக்காக தலையணை ஒன்றை வைத்து விட்டு தலை வரை போர்த்திக் கொண்டு படுத்துவிட,

“தேங்க்யூ” என்றவாறு தானும் ஒரு ஓரமாய் படுத்துக் கொண்டான்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அருணின் மனம் முழுதும் அனன்யாவின் கலங்கிய முகமும் என்னை கொன்னுருக்கலாம் என்று அவள் சொன்னதுமே ரீங்காரமிட்டு அவனை அலைக்கழித்தது.

அவளது துயர் துடைக்க கைகள் பரபரத்தாலும் இளாவின் மேல் இருந்த கோபம் அதை செய்யவிடாமல் தடுக்க, இரு தங்கைகளின் வாழ்வு சரியாக வேன்டுமே என்ற எண்ணமே பிரதானமாய் இருந்தது. நாளை தனுவிடம் பேசி அவனை பற்றி விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

 

இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு வந்த சஜன் ஹாலில் அமர்ந்து புத்தகங்களுக்கு நடுவே பென்சிலால் தலையில் குட்டிக் கொண்டு கண்களை மூடி படித்துக் கொண்டிருந்த தியாவை கண்டு சிறிதாய் புன்னகைத்து விட்டு அறைக்கு சென்று ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தவன்

சாப்பிட உட்கார சேரை இழுக்க அந்த சத்தத்தில் திரும்பி பார்த்தவள் “அய்யோ இவங்க எப்போ வந்தாங்க லூசு மாதிரி கவனிக்காம இருந்திருக்கேனே” என்றபடி அவனை நோக்கி விரைந்தாள்.

அவசரமாய் தட்டை எடுத்து வைத்து பரிமாற அவனோ தனக்கு அருகில் இருந்த கவிழ்த்து வைக்கபட்டிருந்த தட்டை திருப்பி உட்கார் என்பது போல் கை நீட்ட வாய்விட்டு கேட்காவிட்டாலும் அவனது செய்கையே போதுமானதாய் இருக்க மறுக்காமல் அமர்ந்து உண்ண தொடங்கினாள்.

அமைதியாக உண்டு கொண்டிருக்க “ நீ நல்லா படிக்குற ஸ்டூடண்டா இல்லை பார்டர் பாஸ் கேஸா?” என்று கேட்க,

எதற்கு இந்த கேள்வி என்று புரியாமல் வாயிற்கு உணவை கொண்டு வந்த கை அப்பிடியே அந்தரத்தில் நிற்க, அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

“இல்லை படிக்கிறேன்ற பேர்ல ஆள் வர்றதை கூட கவனிக்காம தூங்கிட்டு இருந்தியே அதான் கேட்டேன்” என்று விட்டு உதட்டிற்கு வலிக்காத புன்னகை செய்ய,

அவனது சகஜமான பேச்சில் குளிர்ந்தவள் அவனுடன் வாயாட நினைத்து” யாரை பார்த்து இப்படி சொல்றிங்க நான் நல்லா படிப்பேன்” என்று சிறு குழந்தை போல் சொல்வதை கண்டு சிரிக்க,

“நீங்க நம்பலையா? நானெல்லாம் டிஸ்டிங்க்ஷனாக்கும் எங்க அக்கா கூட யூஜியில ஃப்ர்ஸ்ட் கிளாஸ் தான்.” என்று சொல்ல, அதை கேட்டதும் ஒளித்து வைத்திருந்த வேதனை பெருக்கெடுக்க பாதி சாப்பாட்டிலேயே கை கழுவியவன் நாலே தாவலில் வேகமாக அறைக்குள் சென்று விட்டான். தியாவோ தன்னை நொந்து கொண்டவாறு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement