Advertisement

அத்தியாயம் 18:

தெளிவாக ஓடும் நீரோடை

போலான என் வாழ்வில்

உன் வருகையினால் கல் எறிந்தாய்

அது  சலனமா? இல்லை சங்கீதமா

குழப்பத்தில் நான்!

காலையில் எப்போதும் பரபரப்பாக சுற்றிக் கொண்டு வீட்டையே ரணகளப்படுத்தி சிறகடித்து பறப்பவள் இன்றோ பத்து நாள் பஞ்சத்தில் அடிபட்டது போன்றதொரு சோர்வை பிரதிபலிக்க, நேற்று இரவு முழுதும் அழுததன் பயனாய்  முகம் மட்டும் செழிப்பாய் வீங்கியிருந்தது.

அவளை கண்ட விசாலாட்சி “அனு உடம்பு எதும் சரியில்லையா? முகம் எல்லாம் சிவந்து போய் இருக்கு” என்றவாறு நெற்றியில் கை வைத்து பார்க்க,

அன்னையின் கரிசனத்தில் இப்போதே அவர் மடியை கட்டிக் கொண்டு மனதிலுள்ள பாரத்தை இறக்கிவிட மாட்டோமா என ஏங்க அது தான் முடியாத ஒன்றாயிற்றே என்று நினைத்துக் கொண்டாள்.

அதுவும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் சொன்னால் ஏற்கனவே மனதால் நொந்து போய் இருப்பவரை மேலும் ரணப்படுத்த விரும்பாமல் தன் இயலாமையை எண்ணி கலங்கி கொண்டிருந்தவளின் கண்கள் தனக்குள் இருக்கும் ஈரத்தை வெளிகாட்டி தன்னை இளகிய மனதுக்காரனாய் காட்ட துடித்தது.

முயன்று வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவள், “ அப்படிலாம் ஒண்ணும் இல்லைமா? லைட்டா தலைவலி” என்று பொய்யை சொல்ல,

“தலைவலிக்குதுனு சொல்ற, ரெஸ்ட் எடுக்காம காலேஜ்க்கு கிளம்பி நிற்குற”

“இன்னைக்கு ஒரு ப்ராக்டிகல் எக்ஸாம்மா லீவ் போட முடியாது. டேப்லட் வாங்கி போட்டா சரியா ஆயிடும் நான் அங்க போய் பார்த்துக்குறேன்” என்று சொல்ல,

“சரி வா வந்து சாப்பிடு நான் ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு தர்றேன் குடிச்சுட்டு போ” என்று கூற,

“எனக்கு பசியில்லைமா நான் கிளம்புறேன் லேட் ஆயிடுச்சு” என்று நகரப் போனவளை,

“வெறும் வயித்தோட போனா கூட கொஞ்சம் தான் தலைவலி வரும் ஒழுங்கா சாப்பிடு” என்றவரிடம்,

“சரி அப்போ காபி மட்டும் குடுங்க போதும்” என்று வாங்கி குடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

கல்லூரியை அடைந்தவள் கயிறு அறுந்த பட்டம் இலக்கில்லாமல் பறப்பது போல கால்கள் ஆய்வகத்தை நோக்கி இழுத்து செல்ல மனமோ எதிலயும் கவனம் பதிக்காமல் நடை போட்டது.

காலையில் நடக்க போகும் அறுவை சிகிச்சைக்காக அவசரமாக ஆபரேஷன் தியேட்டர் நோக்கி சென்று கொண்டிருந்தவனின் மேல் மோதி நிற்க, இருவரும் இருந்த மனநிலையில் மோதிய பின் தான் சுதாரித்து நிமிர்ந்து பார்க்க பார்த்த நான்கு கண்களில் இரு கண்கள் தவறவிட்ட மூச்சுக்காற்றை மீண்டும் சுவாசித்தது போல் பரவசம் அடைய மற்ற இரு கண்களோ அனல் பார்வை வீசியது.

“அரு” என்று உதட்டுக்கும் வலிக்கா வண்ணம் அழைக்க, அவன் பார்த்த பார்வையில் உதட்டை அழுந்த பற்றிக் கொண்டாள். ஒருவரின் பார்வை கூட மற்றவர்களை குற்றும் உயிரும் குலை உயிருமாய் ஆக்க முடியும் என்பதை அந்த நிமிடம் உணர்ந்தாள்.

அங்கு நின்றிருக்க விருப்பம் இல்லாமல் அவளை கடந்து போக, சட்டென்று அவன் கைகளை பிடிக்க திரும்பியவனை “ப்ளீஸ்” என்று கண்களால் கெஞ்ச, “முதல்ல கையை எடு காலையிலயே டென்சன் பண்ணிக்கிட்டு ச்ச” என்று அவள் கையை உதறிவிட்டு சென்றவனின் பிம்பம் மறையும் வரை அங்கேயே நின்றிருந்தாள் அனு.

அதன் பின் இயந்திர கதியில் வகுப்புகளை அட்டன்ட் செய்தவள் கோபப்பட்டாலும் பரவாயில்லை பேசியே ஆக வேண்டும் இல்லாவிட்டால் மூச்சு முட்டி செத்தே விடுவோம் என்ற நிலைக்கு ஆளானாள்.

அவனுக்காக பார்க்கிங் ஏரியாவில் காத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த அருணோ அனு என்ற ஒருத்தி இருப்பதையே அறியாதவன் போல் தனது வண்டியை ஸ்டார்ட் செய்ய,

அன்றும் இதே போல் வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது தான் சாவியை பிடிங்கியதும் அதன் பின் அங்கிருந்த பூங்காவில் அருண் அவளை சமாதனப்படுத்தியதும் நினைவு வர “ இனி நீ கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடந்துக்க மாட்டேன்” என்று அருண் சொன்னதை நினைத்தவளின் உதடுகள் விரக்தியில் புன்னகைக்க,

அவன் அருகில் சென்றவள் “அரு ப்ளீஸ் ஏன் இப்படி செய்றிங்க அப்படி நான் என்ன தப்பு செய்தேன்” என்று கேட்க,

“நடந்தது எல்லாம் தெரிஞ்சிருந்தும் எப்படிடி உன்னால இப்படி கேட்க முடியுது ம்ம்” என்று பற்களை கடித்தவாறு கேட்க,

“இதுல என் தப்பு என்ன இருக்கு நீங்க பண்றது சரியா? கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்னோட பக்கம் இருக்க நியாயம் உங்களுக்கே புரியும்”

“ஆமாடி நீங்க எல்லாரும் நியாயம் அநியாயம் தெரிஞ்சவங்க தான். எனக்கு தான் தெரியலைனு தெரியுது இல்ல அப்போ என் பேசிட்டு இருக்க போ போய் வேலையை பாரு”

“என் அண்ணன் மேல இருக்க கோபத்தை ஏன் என் மேல காட்டுறிங்க” அது அவரை சற்று கோபத்தோடு பேசிக் கொண்டிருந்தவன் அவளின் அண்ணன் என்ற வார்த்தையில் கோபம் தலைக்கேற,

“பேசாமா போய்டு எனக்கு வர்ற கோபத்துக்கு எதாவது எக்கு தப்பா பேசிற போறேன்” என்று வார்த்தைகளை கடித்து துப்ப,

“நீங்களா அரு இப்படி பேசுறது. கொஞ்சம் என் நிலையில இருந்து யோசிச்சு பாருங்க. என்னை தவிர்க்குற ஒவ்வொரு நொடியும் மனசு எப்படி வலிக்குதுனு எனக்கு தான் தெரியும்.இப்படி நீங்க என்னை அவாய்ட் பண்றதுக்கு பதிலா என்னை கொன்னுருக்கலாம்” என்றுவிட்டு வேறு ஏதும் சொல்லாமல் தளர்ந்த நடையோடு சென்றவளை கண்டு கலங்கிய கண்களை ஒரு நொடிக்கும் மேல் தாமதிக்காமல் இயல்பாய் மாற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கண்விழிக்கும் போதே வயிற்றில் ஏதோ அழுத்துவது போல் தோன்ற மெதுவே கண்களை திறந்து பார்த்த தனு இளாவின் கைகள் தன்னை சுற்றி கிடைப்பதை கண்டு எரிச்சல் அடைந்தவள் கையை விலக்க முயற்சிக்க,

அவனோ கையில் இருக்கும் பொருள் நழுவும் போது விழுந்திடாமல் இருக்க, இறுக பற்றுவது போல் மேலும் தன் கைகளால் பிடித்துக் கொண்டான்.

வேண்டும் என்றே செய்கிறானோ என நினைத்தவள் சட்டென்று அவன் புறம் திரும்பி பார்க்க, அவனிடம் இருந்து வெளிவந்த சீரான மூச்சு அவன் தூக்கத்தில் இருக்கிறான் என்பதை உணர்த்த,

தன் இருகைகளால் பலம் கொண்ட மட்டும் எடுத்துவிட முயல, “ம்ஹூம் நகருவேனா என்றது” கடுப்பானவனள் “நல்லா தின்னு கொழுத்து போய் இருக்கான் என்ன கணம்” என்று முனகலை வெளியிட்டு விட்டு, இது சரிப்படாது என முடிவெடுத்தவளாய் விரலிலிருந்து இரண்டு இன்ச் வளர்ந்திருந்த கூரான நகம் தக்க சமயத்தில் கை கொடுக்க,  அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.

நகம் கீறியதில் முகம் சுழித்தவனாய் கையை சிறிது அசைக்க, விட்டால் போதுமென தன்னை விடுவித்துக் கொண்டாள்.

அவனது சிறையில் இருந்து தப்பித்து எழுந்தவள் எவ்வளவு தைரியம் இருந்தா மேல கை போட்ருப்பான் என்று பொருமிக் கொண்டிருந்தவளின் மூளையில் அப்போது தான் அவன் அருகில் எப்படி வந்தோம் என்பதே உரைக்க, ”இதுல என்ன சந்தேகம் இந்த ராஸ்கல் தான் தூக்கிட்டு வந்திருப்பான்” என கூறிய மனசாட்சியின் பதிலில் கோபமடைந்தவள் “ச்சை” என்றபடி வெளியேறினாள்.

அவள் முக பாவனைகள் புலம்பல்கள் அனைத்தையும் ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தவன் “ஏன்டி சின்னு கிள்ளவா செய்யுற இதுல ராஸ்கல்னு வேற சொல்ற இதோ வர்றேன்” என்றபடி குளியலைறைக்குள் சென்று மறைந்தான்.

கீழிருந்த அறையினுள் சென்று குளித்தவளுக்கு நேற்று சீக்கிரமே சாப்பிட்டுதால் பசியெடுக்க, “ச்ச நேற்று பசியில் அவன் செஞ்சு வைச்சதை சாப்ட்டுட்டோம் என்ன நினைச்சுருப்பான். இனி இப்படி செய்ய கூடாது நமக்கு தேவையானதை நாமளே செய்துக்க வேண்டியது தான்” என்று நினைக்க,

அவளது மனமோ “என்னடி ஏதோ டூர் கேம்ப்க்கு வந்த மாதிரி ஒரு ரியாக்ஷனும் காட்டாம இருக்க? அப்போ அவன் செய்ததுல உனக்கு கோபம் இல்லையா?” என்று தன் வாதத்தை தொடங்க,

“இருக்கு அவன் அப்படி பண்ணினதுக்கு சரியான பதிலடி குடுக்கமா விட மாட்டேன்” என்று பதில் சொல்லி தன்னை தேற்றி கொண்டவள் அறியவில்லை பதிலடியால் பாதிக்கப்பட போவது தான் என்று!

வயிற்றிற்க்கு உணவு ஈய பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்த்தவளின் கண்களில் நேற்று சமையல் செய்த அனைத்தும் கழுவ கிடக்க, “ச்ச் இவன் சாப்பிட்டு தட்டை நான் கழுவணுமா? நான் என்ன இவன் வீட்டு வேலைக்காரினு நினைச்சுட்டு இருக்கானா?” என்னால முடியாது அவனை என்ன செய்யுறேனு பாரு” என்று சொல்லியபடி திரும்ப,

கிட்சன் கதவின் நிலைப்படியோரம் சாய்ந்து நின்றவனை கண்டதும் அமைதியானவள் அவனது குறு குறு பார்வையை சந்திக்க திறனில்லாமல்

பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

அவளது செய்கைகளை கண்டு புன்னகைத்தவன் மெல்ல அவளை நோக்கி நெருங்கினான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் இவளின் இதயத்தில் திம் திம்மென்ற ஓசையை கொடுக்க, ஆதரவிற்க்கு சமையல் மேடையை பற்றிக் கொண்டாள்.

அவளை இடித்துவிடும் அளவிலான நெருக்கத்தில் வந்து நின்றவன்,”சின்னு” என்று கிசு கிசுப்பாய் கூற, அவளின் உடலோ ஒரு முறை தூக்கிப் போட்டது.

முயன்று அவனை முறைக்க, “என்ன பண்ணி வச்சுருக்க பாரு” என்று லேசாக தோள் உரிந்து இருந்த கையை அவள் முன் நீட்ட,

“அதுக்கு நான் என்ன பண்ண? நீ  மட்டும் அப்படி செய்யலாமா?” என்று கேட்க,

“எப்படி பண்ணேன் சொல்லு” மேலும் நெருங்க முயற்சிக்க, தன் கைகளை அவன் மார்பில் வைத்து தள்ள,

மார்பில் வைத்த கைகளை ஒரு கையால் சிறை செய்து, மற்றொரு கையால் அவளது முகத்தில் வலம் வந்தவன், “பிள்ளை பூச்சி மாதிரி இருந்தவ இப்போ ரொம்ப பேசுறடி. பேசுற இந்த வாய்க்கு சீக்கிரம் பூட்டு போடுறேன்” என்று கிரக்கமாய் கூறியவனின் பார்வை அவள் இதழ்கள் மீது பட்டு விலக, மெதுவே அவள் கைகளை விடுவித்தான்.

கைகள விடுவிக்கப்பட்டதும் அங்கிருந்து வேகமாக நகர்ந்தவளின் கையை பிடித்து இழுத்தவன் “வேலைக்காரி இல்லை என் பொண்டாட்டினு நியாபகம் இருக்கட்டும்” என்றவாறு அங்கிருந்து நகன்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நேற்று இரவு நடந்ததை நினைத்துக் கொண்டே எழுந்த தியாவின் மனம் சற்று மகிழ்ச்சியாகவே இருந்தது. தன் காதலை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை சிறிதாய் துளி விட்டிருந்தது.

அதே நம்பிக்கையுடன் இன்று கல்லூரி செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரம் எழுந்தவள் தயாராக கிளம்பியவள் சஜனின் அறையை எட்டி பார்க்க, அவனோ அங்கு இல்லை.

எழுந்ததும் அவனது முகம் பார்க்க ஆசை கொண்டவளின் மனம் காற்றில்லா பலூன் போல சுருங்க “ம்ஹும்” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

காலையில்யே எழுந்த சஜன் ஜாகிங் சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்து நொடி, ஹாலில் அமர்ந்திருந்த சிவப்பிரகாசம் “கொஞ்ச கொஞ்சமாய் இயல்புக்கு வர்றான் போலயே” என்று நிம்மதி அடைந்தவராய்,

“சஜன் நேற்றே உங்கிட்ட பேசணும்னு நினைச்சேன் ஆனா நீ லேட்டா வந்த போல, வேலை அதிகம் இல்ல?” என்று வேலையில் சற்று அழுத்தம் கொடுக்க,

தந்தை கண்டு கொண்டார் என்று அறிந்தவனாய் “ஆமா டாட் கொஞ்சம் அதிகம் தான்” என்று தானும் சளைத்தவனல்ல என்பதை நிரூபித்தான்.

அவன் மீது குற்றம் சாட்டும் பார்வை ஒன்றை வீசியவர் “ தியா இன்னையிலருந்து காலேஜ் போகட்டும்னு முடிவு பண்ணிருக்கோம் நீ என்ன சொல்ற” என்றார்.

“ஹா” என்று ஏளன புன்னகை ஒன்றை உதிர்த்தவன் “வாழ்க்கையை பற்றி முடிவு எடுக்கும் போதே என் ஓபினியன் கேட்கலை. இப்போ ஏன் கேட்குறிங்க “என்றவன்

“சாரி சாரி இப்போ கூட முடிவு பண்ணிருக்கோம்னு சொல்லிட்டீங்க நான் தான் என் அபிப்ராயம் கேட்குறிங்களோனு தப்பா நினைச்சுட்டேன். நீங்க எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க டாட் குட்” என்று கூறிவிட்டு எழுந்து கொண்டான்.

அறைக்குள் நுழைந்தவன் மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு செல்ல குளியலறை அருகில் சென்றவனின் காதில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க,  “ம்ச்சு” என்று சலித்துக் கொண்டவன் பெட்டில் போய் விழுந்தான்.

ஐந்து நிமிடம் காக்க வைத்துவிட்டு வெளியே வந்த தியா அங்கு மெத்தையில் கால் மேல் கால் போட்டு ஒரு கையை தன் தலைக்கு அணை கொடுத்து மற்றொரு கையால் கண்களை மூடியவாறு இருந்த தோற்றம் மனதை கொள்ளை கொள்ள, இப்போதே அவனது மார்பில் தஞ்சம் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க, மனம் குப்பென்று வியர்த்து போனது.

அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நொடி, தன்னை யாரோ உற்று பார்ப்பது போன்று தோன்ற சட்டென்று திரும்பியவன் பார்வை தியாவின் மேல் விழ தியாவோ இயல்பாக காட்டிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.

தோள்களை குலுக்கி கொண்டு அறைக்குள் நுழைந்தவன் மாற்று உடைய அங்கிருந்த ஸ்டாண்டில் போட்டு விட்டு திரும்ப, அங்கு தியா பயன்படுத்திய சோப்பின் நறுமணம் அறையினுள் சுற்றிக் கொண்டிருக்க, தன் அறையில் நுழைந்த அந்நிய வாசம் அவனை ஏதோ செய்ய, ஆழ முச்செடுத்து ஷவரை திறந்தவன் நாசி மட்டும் அந்த வாசனையை விடாமல் சுவாசிக்க அதற்கு மேல் அங்கு நிற்க முடியாதவனாய் சட்டென்று வெளியேறினான்.

ஈரத்தலையோடு வெளியேறியவனை கண்ட தியா புருவம் சுருக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாதவனாய் தன் அறைக்கு அருகில் இருந்த விருந்தினர் அறையின் குளியலைறைக்குள் நுழைந்து கொண்டான்.

தயாராகி கீழே வந்தவனை எதிர்கொண்ட சிவப்பிரகாசம் “தியாவை நீயே காலேஜில் கொண்டு போய் வீட்டு கூட்டிட்டு வந்திடு” என்று தகவல் போல் சொல்ல,

கோபம் கொண்டவன் “ஏன் அவளுக்கு போக தெரியாதா? இவ்வளவு நாள் நானா கொண்டு போய் விட்டேன்” என்று சொல்ல,

“இவ்வளவு நாள் அவ அந்த வீட்டு பொண்ணு இப்போ நம்ம வீட்டு மருமக உனக்கு பிடிச்சாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி அவ உன் மனைவி அது நியாபகம் வச்சுக்கோ அதனால நீ தான் கொண்டு போய் விடணும்” அவ்வளவு தான் என்றபடி நகர,

அவரது பேச்சு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் கடுப்பை மேலும் ஏற்ற அவரை நோக்கி நகரப் போனவனின் கையை பிடித்த கயல்விழி கெஞ்சும் பார்வை பார்க்க “ம்ச்ச்ச் சரி ஆனா எல்லா நேரமும் இதே மாதிரி என்னை கட்டி போடணும்னு நினைக்காதிங்க” என்று விட்டு வெளியேறியவனை தொடர்ந்து தியாவையும் அனுப்பி வைத்தார்.

காரில் ஏறியவன் ஆக்ஸிலேட்டரை முடியும் மட்டும் அழுத்தி தன் மனக் குமுறலை வெளிப்படுத்த, அங்கு வந்த தியா முன் கதவை திறக்க கை வைக்க, அவன் பார்த்த பார்வையில் பின்னால் ஏறிக் கொண்டாள்.

அவர்கள் இருக்கும் தெருவை கடக்கும் வரை இருவரிடமும் அமைதியே சூழ, முதலில் அமைதியை கலைத்த தியா ‘கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க” என்றாள் தனக்கே கேட்காத குரலில்.

அவனோ காரை செலுத்த சற்று உயர்ந்த குரலில் “வண்டியை நிறுத்துங்க” என்றான்.

“ஹே நடுரோட்டுல உன் இஷ்டத்துக்கு நிறுத்த சொல்வியா? இந்த அதிகாரம் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் புரிஞ்சுதா?”

“ப்ளீஸ் நிறுத்துங்களேன்” என்று சொல்ல, அவளது கெஞ்சல் அவனை அறியாமல் ஓரமாய் நிறுத்த வைத்தது.

“இப்போ என்ன வேணும் உனக்கு?” என்று கடிந்தவனுக்கு பதிலாக, காரை விட்டு இறங்கியவள் அவன் பக்கம் சென்று,

“டெய்லி என்னை இங்கேயே இறக்கி விடுங்க நானே போய்க்கிறேன் அப்போ தான் உங்களுக்கு கஷ்டம் இல்லை மாமாவுக்கும் தெரியாது. ஈவினிங் எக்ஸ்ட்ரா கிளாஸ் நான் தான் உங்களை வர வேண்டாம்னு சொல்லிட்டேனு மாமாகிட்ட சொல்லிக்குறேன்” என்று கூற,

அவளது பேச்சே தந்தையிடம் பேசியதை கேட்டுவிட்டாள் என உணர்த்த மேலும் அவள் சொன்னது ஏதோ செய்ய “பரவாயில்லை நானே விட்டு போறேன்” என்றான் தன் நிலையில் இருந்து இறங்கி.

“இல்லை நான் எதுவும் நினைக்கலை நீங்க போங்க பை” என்றவள் சாலையை கடந்து எதிரே இருந்த பேருந்து நிறுத்தத்தில் சென்று நின்று கொண்டாள்.

அவனை கஷ்டப்படுத்த கூடாது என்று அவள் நடந்து கொண்ட விதம் இதமான உணர்வை தந்தது. இந்த சிறு சிறு புரிதலுடன் கூடிய செயல்கள் தான் இருவரையும் இணைக்க போகிறது என்பதை இருவருமே அறியவில்லை!

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement