Advertisement

அத்தியாயம் 16:

நீ எனை மறுக்கும் ஒவ்வொரு

நொடியிலும் மறித்தாலும் மீண்டும்

எழுகிறேன் என்றாவது ஒரு நாள்

உன் கைகளில் எனை

ஏந்துவாய் என்ற நம்பிக்கையில்!

அலார்ம் அடித்த சத்தத்தில் கண்விழித்து பார்த்தவன் அங்கு அவனது சின்னு இருந்ததற்கான அடையாளம் ஒன்றுமே இல்லாததை கண்டு தலையில் தட்டிக் கொண்டவன் “ச்ச கனவா? அதானே பார்த்தேன் இப்போ அவளுக்கு என் மேல இருக்க கோவத்துக்கு என் மண்டையில் கல்லை எடுத்து போட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல” என்று நினைத்து பெருமூச்சு விட்டவன், நேரமாவதை உணர்ந்து படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

காலை கடன்களை முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த போது கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டதும் “காலையில யாரு வந்திருக்கா” என்றபடி கதவை திறந்தவன் அங்கு நின்றிருந்த தாமோதரனையும், தனுஷாவையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

கதவில் கைவத்து நின்றபடி இருக்க, தாமோதரன் தான் “தம்பி உள்ள போய் பேசலாமா?” என்று கேட்டார். அவர் கேட்டதும் தான் இவ்வளவு நேரம் அவர்களை வெளியில் நிற்க வைத்தது புரிய “சாரி சார் வாங்க உள்ள வாங்க” வாய் அதன் போக்கில் வரவேற்க, பார்வையோ தனுஷாவின் மேல் தான் இருந்தது. அவர்களை அமர செய்தவன் “என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்க,

“இல்லை தம்பி அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூற,

“கண்டிப்பா பேசலாம் முதல்ல எதாவது சாப்பிடுங்க” என்றபடி தானே கிட்சனுக்கு சென்று காபியை போட்டு கொண்டு அவர்களிடம் நீட்டினான்.

மரியாதை நிமித்தமாய் ட்ரேயில் இருந்த கப்பை தாமோதரன் எடுத்துக் கொள்ள, மற்றொன்றை தனுவிடம் நீட்டினான்.

அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்து முகத்தை வேறு புறமாய் திருப்பிக் கொள்ள, அதை கண்டு புன்னகைத்தவன் “மை ஸ்வீட் சின்னு” என்று முணு முணுத்துவிட்டு கையில் இருந்த ட்ரேயை அங்கிருந்த டீபாயில் வைத்தான்.அதன் பின் அங்கு அமைதியான சூழலே நிலவ, என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாய் இருந்தனர்.

எவ்வளவு நேரம் அமைதியாய் இருப்பது பேசித்தானே ஆக வேண்டும் என்று நினைத்தவராய் “தம்பி இந்த மாதிரி சூழ்நிலை வரும்னு நான் நினைச்சு பார்க்கவே இல்லை. நீங்க செய்த ஒரு விஷயத்தால பாதிக்கப்பட்டது நிறைய பேரோட வாழ்க்கை.

“சார் அது வந்து” என்று ஆரம்பித்த இளாவை தடுத்துவர் “இருங்க தம்பி நான் பேசி முடிச்சுக்குறேன்” என்று அவரே தொடர்ந்தார்.

“இதை பற்றி நிறைய பேசியாச்சு. இனி இதை சரி பண்ற வழியை பார்க்குறது தான் சரியான தீர்வுனு என் மனசுக்கு படுது. ஆனால் எந்த விதத்திலும் நான் தனும்மாவை கட்டாயப்படுத்தக் கூடாதுனு தான் அமைதியா இருந்தேன். அவ என்ன முடிவு எடுத்தாலும் ஒரு அப்பாவா அவளுக்கு சப்போர்ட்டாக இருக்கணும்னு நான் தீர்மானிச்சுருந்தேன். அவளே இப்போ ஒரு முடிவு எடுத்திருக்கா அதான் நாங்க இங்கே வந்தோம்” என்று வந்த காரணத்தை சொல்ல இளாவோ திக்குமுக்காடிப் போனான்.

ஆனால் மகளின் இந்த முடிவிற்கு தான் காரணம் என்பதை தாமோதரன் அறிந்திருக்கவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அண்ணனின் கோபத்திற்கான காரணத்தை அறிய வேண்டி கீழே இறங்கி வந்தவள் தந்தையின் அறையில் இன்னும் விளக்கெறிந்து கொண்டிருப்பதை கண்டதும் நேரே அவர் அறைக்கு சென்றாள்.

பாதி மூடியும் மூடாமலும் இருந்த கதவை திறந்தவளை தந்தையின் புலம்பலே வரவேற்றது. ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் கதவோரம் நின்றிருக்க, மகள் நிற்பதை அறியாத தாமோதரனோ தன் மனைவியின் புகைப்படத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.

“பார்த்தியா சங்கரி என் அதிர்ஷ்டமில்லா நிலையை? நேசித்த மனைவி இடையிலேயே சென்று விட்டாள். ஒரு அப்பாவா பிள்ளைகளை நான் தேற்றுவது போய் அவங்க தான் என்னை தேத்துனாங்க. நான் அவங்களை பார்த்துகுறது போய் அவங்க தான் என்னை பார்த்துக்கிட்டாங்க. ஒரு மகளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டோம்னு நினைச்சு சந்தோஷப்படுறதா இல்லை இன்னொருத்தியின் வாழ்வு கேள்விக்குறியாய் நிற்பதை பார்த்துட்டு அழறதானு எனக்கே தெரியலை. ஒரு தகப்பனா என் மகளோட வாழ்வை எப்படி சரி செய்யுறதுனு தெரியாம இருக்க என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு. இதையெல்லாம் பார்க்க கூடாதுனு தான் முன்னாடியே போய் சேர்ந்திட்டியா? “என்று மௌனமாய் கரைந்தவரை கண்டு, கண்ணீர் உகுத்தாள் தனுஷா. சத்தமில்லாமல் கதவை சாற்றிவிட்டு தனதறைக்கு திரும்பி விட்டாள்.

பேசாமல் எங்கேயாவது சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடலாமா? என யோசித்தவள் தான் சென்றுவிட்டால் தந்தையின் நிலை? இப்போது இருப்பதைவிட இன்னும் ஒடுங்கி போய்விடுவாரே என்று நினைத்தவள் உடனே அந்த யோசனையை கைவிட்டாள். வெகுநேரம் யோசித்தவள் மனதில் இது தான் இப்போதைக்கு சரி என்று முடிவெடுத்துக் கொண்டு உறங்கிப் போனாள்.

ஆனால் இது போனால் போகிறதென்றோ அல்லது வேறு வழியின்றி எடுத்த முடிவல்ல என்பதை அவள் அறியாமல் போனது தான் துரதிர்ஷ்டம்.

காலையில் அருணை ஒரு முக்கியமான சர்ஜரிக்கு உடனே கிளம்பி வருமாறு அழைக்க, அவசரம் புரிந்து அவனும் வருவதாய் சொல்லிவிட்டு தந்தையிடம் தகவலை சொல்ல அவரது அறைக்கு சென்றான்.

“அப்பா நாளைக்கு ஒரு முக்கியமான சர்ஜரி இருக்காம். உடனே என்னை கிளம்பி வர சொல்றாங்க” என்றதும்,

“என்னப்பா இன்னைக்கே கிளம்பணுமா?” கிளம்ப வேண்டும் என்று சொன்னால் மறுத்து சொல்லாமல் உயிரை காப்பாற்றுகிற பொறுப்பில் இருக்கப்பா நீ லேட் செய்யாதே உடனே கிளம்பு என்று சொல்லும் தந்தை இன்று தந்தை இவ்வாறு கேட்கவும்,

“என்னாச்சுப்பா ஏன் இப்படி கேட்குறீங்க” என கேட்க,

“இல்லைப்பா அந்த தம்பி தான் மன்னிப்பு கேட்குதே அதான் தனுஷா வாழ்க்கை பற்றி” என்றவரை தடுத்தவன்,

“அப்பா உங்ககிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன். இதுக்கு மேல இதை பற்றி பேச வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது,

தனுஷா அவர்கள் முன்னால் வந்து ட்ராவல் பேக்கை வைக்க, “என்ன தனும்மா நான் ஊருக்கு கிளம்புறது உனக்கெப்படி தெரியும் திங்க்ஸ் பேக் பண்ணி கொண்டு வந்திருக்க” எப்போது தனது உடைமைகளை பேக் செய்வது தங்கை தானே என்ற நினைப்பில் கேட்க,

“இது நீ ஊருக்கு போறதுக்கு இல்லை” என்றதோடு நிறுத்திவிட, இதற்கென்ன அர்த்தம் என்பது போல் பார்க்க,

“நான் போறதுக்கு அண்ணா” என்று சொல்ல, “நீ போறியா எங்க” என்று அருண் கேட்க, தாமோதரனும் அது தானே என்பது போல் பார்த்தார்.

“எனக்கு தாலி கட்டிருக்கானே என் புருஷன் அவன் வீட்டுக்கு தான்” என்று சொல்ல, இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“தனு என்ன உளர்ற? இப்போ எதுக்கு நீ அங்க போகணும்” என்று சொல்ல,

“உளறலை நிதர்சனத்தை தான் சொல்றேன். நான் போறது தான் முறை” என்க,

“என்ன மண்ணாங்கட்டி முறை நீ போக வேண்டாம். நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்று எகிற,

“அண்ணா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ. என்னை கொண்டு போய் அங்க விட்டுருங்க” என்று கூற,

ஜிவ்வென ஏறிய கோபத்தில் “யாரும் போய் விடமாட்டோம் நீயும் போக கூடாது” என கிட்டதட்ட கர்ஜித்தான்.

இப்படியே வாக்குவாதம் முற்ற, “நான் கிளம்புறேன் உங்க இஷ்டப்படி ஆடுங்க” என்றுவிட்டு கிளம்பிவிட்டான் அருண்.

ஒரு நாளும் இப்படி பேசியிராத தன் அண்ணனின் கோபம் கண்டு, கண் கலங்கியவளை ஆறுதலாக தன் தோள் சாய்த்தவர் “தனு இது நீயா எடுத்த முடிவு தானே? நான் உன்னை நினைத்து கவலைப்படுவேனோ என்று எனக்காக ஒண்ணும் இல்லையே” என்றவரை,

கண்டு கொண்டாரே என்ற நினைத்துவள் “இது நானா எடுத்த முடிவு தான்பா ஆனால் அண்ணன்…” என்றதும்,

இப்போ கோபத்துல இருக்கான்மா, என்ன சொன்னாலும் அவன் ஏத்துக்க மாட்டான். கொஞ்ச நாள் போகட்டும் அவனே புரிஞ்சுக்குவான் என்று சமாதனப்படுத்தியவர் இதோ மகளுடன் இளாவின் வீட்டிற்கும் வந்துவிட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சஜன் கம்பெனியில் நுழைந்ததில் இருந்து கண்ணில்பட்ட அனைவரிடமும் எரிந்து விழுந்தான். முதலாளியின் இந்த புதுமுகம் கண்டு அனைவரும் நடுங்கி போயிருந்தனர்.

வினோத்தும் “ அய்யோ இவரை எப்படி சமாளிப்பது? சும்மாவே அந்த எகிறு எகிறுவார். இதில் இப்போ கோபமா வேற இருக்காறே “ என்று நினைத்துக் கொண்டிருந்த அடுத்த நொடி அவனது டேபிளில் இருந்த இன்டர்காம் ஒலித்தது.

அதை எடுத்து “சொல்லுங்க சார் இதோ இப்போவே கொண்டு வர சொல்றேன் சார்” என்றபடி “ஷ்ப்பா என்னா காட்டம்டா சாமி. கோபத்துல போன் வயர் எறிஞ்சு போனாலும் ஆச்சர்யம் இல்லை” என்று முணு முணுத்துவிட்டு வெண்பாவின் கேபினை நோக்கி நடை போட்டான்.

அங்கு சென்று வெண்பா என்று அழைக்க, திரும்பிய அவளின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை. எப்போதும் கலகலவென இருக்கும் அவளின் இந்த முகம் கண்டு துடித்தவனாய் “ஹே வெண்பா என்ன ஆச்சு. ஏன் டல்லா இருக்க” என்று கேட்க,

“ஒண்ணுமில்லை வினோத் சார். நீங்க எதுக்கு கூப்பிட்டீங்கனு சொல்லுங்க” என்று கத்தரித்தார் போல் பேச,

தன்னை ஒதுக்குகிறாளே என்ற சிறு கோபத்தில் “இந்த **** கம்பெனி அக்கௌன்ட்ஸ் டீடைல் சரிபார்த்து ப்ரிண்டவுட் எடுத்து குடுங்க” என்று சொல்லிவிட்டு சென்றுவிட,

அரை மணி நேரத்தில் அதை எடுத்துக் வினோத்திடம் எடுத்துக் கொடுத்துவிட்டு உட்கார அடுத்த ஐந்தாவது நிமிடம் வினோத் அவளை அழைத்தான்.

அவன் அறையினுள் நுழைந்ததும் “வெண்பா என்ன பண்ணி வச்சுருக்கீங்க ம்ம் அப்படி உங்க கவனம் எதுல தான் இருக்கு? நீங்க பண்ணுன தப்புக்கு அவர் என்னை போட்டு காய்ச்சி எடுக்குறார். கணக்கு டேலி ஆகலை என்றது கூட பார்க்காம ப்ரிண்ட் அவுட் எடுத்துருக்கீங்க” என்று அவனும் சஜனிடம் டோஸ் வாங்கிய கடுப்பில் குரல் உயர்த்த,

இதுவரை மனதில் இருந்த கவலை சட்டென்று கண்ணீராய் உருவெடுக்க “சாரி சார்” என்றபடி வினோத்தை கண்டவளின் விழித்திரையை கண்ணீர் மறைத்து நிற்க, அவள் இப்படி நின்றதை கண்டு மனம் கூம்பியவனாய்,

“இட்ஸ் ஓகே வெண்பா. அதை திரும்ப செக் பண்ணிடுங்க” என்று அனுப்பி வைத்தான்.மீண்டும் சரிபார்த்து அதை சஜனிடம் காட்டி ஒப்புதல் வாங்கியிருந்த போது ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.

இடைவேளையின் போது வெண்பாவை அழைத்து கொண்டு கேன்டீன் சென்றவன் “என்னாச்சு வெண்பா காலையில இருந்து சோகமா இருக்கீங்க.  என்னை உங்க ப்ரெண்டா நினைச்சு சொல்லுங்க சொல்லக் கூடாதுனா சொல்ல வேண்டாம்” என்று சொல்ல,

யாரிடமாவது சொன்னால் லேசாக இருக்கும் என்று நினைத்தவள் “சொல்லக்கூடாதுனு ஒண்ணும் இல்லை வினோத் சார். தனு மேரேஜில் நடந்த குழப்பங்களெல்லாம் உங்களுக்கு தெரியும் தான?” என்று கேட்க,

“ஆமாம் தெரியும்” என்பதாய் அவன் தலையசைத்தான்.

அதன் பின் தனக்கும் தனுவிற்கும் நடந்த உரையாடலை சொல்ல தொடங்கினாள்.திருமண மண்டபத்தில் இளா வந்து பேசிவிட்டு போன பிறகு, கோபத்தில் இருந்தாள் தனுஷா.

“எவ்வளவு தைரியமா ஜோடி பொருத்தம் எப்படினு கேட்கிறான்” என்று புசுபுசுவென புகைந்து கொண்டிருக்க,

அவளது மனநிலை புரியாத வெண்பா அங்கு வந்து “ஹேய் தனு இப்போ தான் ஹீரோ வந்துட்டு போறாரு உங்கிட்ட பேசினாரா?” என்று கிண்டல் செய்ய,

“வெண்பா வேண்டாம் கிண்டல் பண்ணாதே. நானே செம கடுப்புல இருக்கேன்” என்று கூற,

“தனு நீ என்ன முடிவு பண்ணிருக்க, இப்போ அவர் எதுக்கு வந்துட்டு போனாருனு தெரியுமா?”

“எதுக்கு” என்று முறுக்கி கொண்டவளை கண்டு புன்னகைத்துவிட்டு,

“மன்னிப்பு கேட்டுட்டு உன்னை கூப்பிட்டு போகலாம்னு வந்தாராம். ஆனா அருண் அண்ணா கோபமா பேசி திட்டி வெளிய போக சொல்லிட்டாங்களாம்”

“ஓ” என்றவளை கண்டு பெருமூச்சு விட்டவள் அவளை சகஜமாக்கும் பொருட்டு சீண்டலாம் என எண்ணிக் கொண்டு,

“தனு நான் ஒண்ணு சொன்னேன் நியாபகம் இருக்கா? “என்று கேட்க,

“ம்ச்சு என்னடி” என்று சலித்துக் கொண்டவளை கண்டு,

“காதல் வேண்டானு சொல்றவங்களை தான் துரத்தும்னு. பார்த்தியா அண்ணாவோட காதல் உன்னை துரத்தி பிடிச்சுருச்சு” என்று சொல்ல

வெண்பாவிற்கு நேரம் சரியில்லை போலும் அவளது வாயில் சனி புகுந்து கொண்டு இப்படி பேச வைக்க,

அவள் சொன்னதும் கோபம் கொண்ட தனு “ யாருடி அண்ணன். காதல் துரத்துச்சு பிடிச்சுச்சுனு உளறிட்டு இருக்க. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் புரியும். உனக்கென்ன? இந்த விஷயம் குஷியா தான் இருக்கும். இங்க இருந்து போயிடு இருக்க கோபத்துல எதாவது சொல்லிட போறேன்” என்று விட , வெண்பாவொ விக்கித்து நின்றாள்.

நடந்ததை வினோத்திடம் கூறி விட்டு “சும்மா விளையாட்டுக்கு தான் சார் நான் சொன்னேன். ஆனா அவ” என்று மீண்டும் அழ ஆரம்பிக்க,

அவள் அழுவதை தாங்க இயலாதவனாய் அமர்ந்திருந்த சேரை அருகில் இழுத்து போட்டு கொண்டு அமர்ந்து கொண்டு “சரி விடு வெண்பா. நீ விளையாட்டுக்கு சொன்னாலும் அவங்க மனநிலையை யோசிக்கணும்ல ஏதோ கோபத்துல பேசியிருப்பாங்க. கொஞ்சம் நார்மல் ஆனதும் அவங்களே வந்து பேசுவாங்க விடுங்க சரியா” என்று சொல்ல, “ம்ம்” என்றவள் அவன் கைகளை இறுக பற்றிக் கொள்ள, இப்போது வினோத்திற்கு அவளது செயல் அவஸ்தையாக இருந்தது.

ஆர்டர் செய்த காபியை கொண்டு வந்து வைக்கவும், அப்போது தான் தான் இருக்கும் நிலை அறிந்தவளாய் சட்டென்று கைகளை உருவிக் கொண்டாள்.

காபி குடித்து முடிக்கும் வரை வினோத்தின் முகத்தை பார்க்காமல் கருமமே கண்ணாக இருக்க, இப்போது அவளது பாராமுகம் வினோத்திற்கு ஏமாற்றமாய் இருந்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தாமோதரன் தனுவை விட்டு விட்டு கிளம்ப தனுஷாவிற்க்கு ஒரு இனம் புரியா தவிப்பு மனதில் எழ தன் தந்தையின் கைகளை பற்றிக் கொண்டாள்.

அவளது உணர்வை புரிந்து கொண்டவராய் கைகளை அழுத்திக் கொடுத்தவர் “அப்பா அடிக்கடி வந்து பார்க்குறேன்” என்றவராய் அவளது தலையை கோதிவிட,

“சார் நான் வேணும்னா உங்களை ட்ராப் செய்யவா? “என்றவனிடம்,

“இல்லை தம்பி நான் ஆட்டோல போயிக்குறேன். அப்புறம்” என்றவரின் கையை பிடித்த இளா கண்களை மூடி திறக்க, “ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவராய்” அங்கிருந்து கிளம்பினார்.

அவர் சென்றதும் கதவை அடைத்துவிட்டு திரும்பியவன் கைகளை கட்டிக் கொண்டு அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்த தனுவின் அருகில் சென்றவன் “அன்னைக்கு சொன்னது தான் கோபத்துல கூட அழகா இருக்கடி சின்னு” என்றவன் முடிக்கும் முன் அவனது கன்னத்தில் அறைய,

“என்னடா அமைதியா இருந்தா உன் இஷ்டத்துக்கு பேசிட்டே போவியா? ம்ம் எவ்வளவு தெனாவட்டு உனக்கு? விருப்பம் இல்லாதவளை திருட்டுக் கல்யாணம் பண்ணி என் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய வலியை குடுத்துருக்க” என்று மீண்டும் அவனை அறைய ஓங்கிய கையை வளைத்து பிடித்தவன்,

“என்னடி சும்மா சும்மா விருப்பம் இல்லை விருப்பம் இல்லைனு சொல்ற, எங்கே என் முகத்தை பார்த்து சொல்லு உனக்கு என்னை பிடிக்காதுனு” என்ற கேட்டவனுக்கு, அவள் மௌனத்தையே பதிலாய் தர,

“இவ்வளவு நேரம் அந்த பேச்சு பேசுன? இப்போ ஏன் அமைதியா இருக்க சொல்லுடி உனக்கு என்னை பிடிக்காதுனு என் கண்ணை பார்த்து சொல்லு” என்ற போதும் மௌனமாய் தலை கவிழ்ந்திருந்தாள் தனுஷா.

 

செனோரீட்டா வருவாள்.

Advertisement