அத்தியாயம் 1:

உன் ஆழ்கடல் மனதிற்குள்

நுழைய நினைத்த எனக்கு அதில்

மூழ்கி உயிர் விடும் பாக்கியமும் கிட்டவில்லை

விட்டு விலகி கரையேறவும் மனமில்லை!

இளந்தென்றல் வீசிய அந்த இனிய காலைப் பொழுது மனதில் இதமான உணர்வை தோற்றுவிக்க பூஜை அறையில் கந்தசஷ்டி கவசத்தை கர்ம சிரத்தையாக பாடிக் கொண்டிருந்தாள் தனுஷா.மகளின் இனிமையான குரலில் ஒலித்த பாடலை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார் தாமோதரன்.

அப்போது அவரது தொலைப்பேசி ஒலிக்க அதை எடுத்து தன் காதிற்கு கொடுத்தவர் “சொல்லுப்பா தம்பி…. லீவ் கிடைச்சுதா..?”

“இல்லைப்பா…. திடீர்னு ஒரு எமர்ஜென்ஸி கேஸ் வந்திருக்கு… இப்போ என்னால் வர முடியாதுப்பா… வீக் என்ட்ல வர்றேன்…” என்றான் அருண்.

“தனுவும், தியாவும் நீ வருவனு நேத்துல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்காங்க… இப்போ நீ வரலைனு தெரிஞ்சா வருத்தப்படுவாங்களே..? அதிலேயும் தனுக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள்… அவகிட்டயே நீயே ஒருதடவை பேசிருப்பா…” என்றவர் தன் மகள் தனுஷாவை அழைக்க கடவுள் வழிபாட்டை முடித்துக் கொண்டு கற்பூர ஆரத்தி தட்டோடு தன் முன் நின்ற மகளை கண்டவருக்கு எப்போதும் தோன்றுவது போல் பெருமையாகவும் பிரம்மிப்பாகவும் இருந்தது.

அதே நினைவில் புன்னகையுடன் தனுஷா கையில் இருந்த ஆரத்தியை தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டவர் அதில் இருந்த திருநீற்றை எடுத்து மகளின் நெற்றியில் பூசிவிட்டு, தொலைப்பேசியை அவளிடம் நீட்ட அதை வாங்கியவள் “அண்ணா..! கிளம்பிட்டீயா..?” என்று எடுத்த எடுப்பிலேயே அவன் வருவதை பற்றி விசாரிக்க,

அதில் கவலையுற்றவன் தான் வரமுடியாது என்பதை எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்க அவனது மௌனத்தை புரிந்து கொண்டவனளாய் “அண்ணா…! வீக் எண்டுக்கு கண்டிப்பா வரணும் சரியா..? உன் வேலை அப்படி..? நீ ஃப்ரீயா இருந்தா வந்திருப்பனு எனக்கு தெரியாதா..? நீ வர முடியலைனு நினைச்சு கவலைப்படாதே…! உடம்பை பார்த்துக்கோ.. நல்லா சாப்பிடு..”

“சாரிடா…! கண்டிப்பா வீக் எண்டுக்கு வர்றேன்… தேங்க்ஸ்டா புரிஞ்சுக்கிட்டதுக்கு…”

“என்ன அண்ணா..? தேங்கஸ்லாம் சொல்ற… எனக்கு உன்னை தெரியாதா? சரி.. அதை விடு… அனன்யா அண்ணி எப்படி இருக்காங்க…உன் லவ் ட்ராக் எப்படி போயிட்டு இருக்கு..?”

“அவளுக்கு என்ன ரொம்ப நல்லா இருக்கா… எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு… ஹேய் அப்பா பக்கத்துலயா இருக்காங்க..?”

“அண்ணா..! நீ சரியான அலர்ட் ஆறுமுகம் தான்… ஹா ஹா நான் தள்ளி வந்து தான் பேசிட்டு இருக்கேன்… “

“ஹப்பா பயந்தே போயிட்டேன்… எங்க அந்த அறுந்தவாலு மேடம்..? இன்னும் சயனத்துல தான் இருக்காங்களோ..?”

“இந்நேரம் எழுந்திருச்சுருப்பா…. கீழே வந்து அப்பா மடியில படுத்து மறுபடியும் தூக்கத்தை கண்டினியூ பண்ணனும்ல…”

“ஹாஹா… சரிமா அவகிட்டையும் சொல்லிடு…. பார்த்து பத்திரமா இருங்க… எனக்கு ட்யூட்டிக்கு நேரமாச்சு நான் வைக்குறேன்…. நைட் கால் பண்றேன் பை தனு”

“ஓகே பை அண்ணா… டேக் கேர்..!” போனை கட் செய்துவிட்டு திரும்பியவள் தன் தந்தையின் கையில் இருந்த ஆரத்தி தட்டை வாங்க முயற்சிக்க,

அந்நேரம் “அப்பா..! எனக்கு…” என்றவாறு அருகில் வந்து அவர் கையால் விபூதியை பூசிக் கொண்டவள் அப்படியே அவர் மடியில் படுத்துக் கொண்டு தன் மீதி தூக்கத்தை தொடர முயற்சித்தாள் தியா.

“ஹேய் தியா..! எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…? குளிக்காமல் சாமி பிரசாதத்தை தொடாதேனு கேட்கவே மாட்டியா..?”

“காலையிலேயே உன் தங்கச்சியான இந்த சின்ன பிள்ளையை திட்டாதே தனும்மா… மீ பாவம்..!”

“வாய் மட்டும் காது வரைக்கும் கிழியுது…. குளிச்சுட்டு பொறுப்பா இருக்குறதுக்கு என்ன? இதுல நீ காலேஜ் போய் என்ன தான் படிக்குறீயோ..? முருகா..! அந்த கடவுளுக்கு தான் தெரியும்…”

“தனும்மா அவள் படிக்குறானு என்னைக்குடா சொல்லியிருக்கா..? வீட்டுல இருந்தா போர் அடிக்கும்னு டைம் பாஸ்க்கு காலேஜ் போறா… அப்படித்தானே தியா செல்லம்…” என தாமோதரன் தன் மகளை வார,

“அப்பா..! திஸ் இஸ் டூ டூ டூ மச்….. நீங்க அடிக்கடி கட்சி மாறுறீங்க… உங்க பேச்சு கா…”

“சரி தான் போடி… அப்பா எப்போதும் சரியா சொல்றவங்க சைடு தான்…. நான் உங்க கூட பழம்ப்பா….” என தனு தன் தந்தையிடம் ஹை-பை குடுத்துக் கொள்ள, அதில் வெறியான தியா “ஹேய் தர்பூஷணி..! உன்னை என்ன பண்றேன் பாரு…” என துரத்த ஆரம்பித்தாள்.

இருவரும் தாமோதரனை சுற்றி ஓடிக் கொண்டிருக்க தன் அக்காவை ஜெயிக்கும் மந்திரம் தெரிந்தவளாய் “ஆஆ ரொம்ப பசிக்குதே…! இதுக்கு மேல என்னால் ஓட முடியாது… “என்று நின்றுவிட

தங்கை பசி என்றதும் “அச்சோ… இருடா தியா ஒரு ஃபைவ் மினிட்ஸ்… தோசை ஊற்றித் தர்றேன்..“ என்றவாறு வேகமாக நடை போட்டவளின் கால்கள் நாற்காலியில் முட்டிக் கொள்ள பதறிய தியா “ஹேய் தனு..!” என ஓடிவந்தவள் தன் அக்காவை அமர வைத்து நீ உட்காரு நான் இன்னைக்கு பிரேக் ஃபாஸ்ட் ரெடி பண்றேன் என்றவளாய் கிட்சனுக்குள் நுழைந்தாள்.

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தாமோதரனின் விழிகளில் நீர் கோர்க்க சுவற்றில் மாட்டியிருந்த தன் மனைவி புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.

தாமோதரன் அரசு பொதுப் பணித்துறையில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்… இவரது மனைவி சங்கரி…. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் அருண், அடுத்து தனுஷா மூன்றாவதாக தியா. மகிழ்ச்சிக்கு குறைவே இல்லாமல் சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்வில் புயல் அடித்தது. தியாவிற்கு ஐந்து வயது இருக்கும் போது ஏற்பட்ட விஷக்காய்ச்சலினால் சங்கரி உயிர் பிரிந்தார். இந்த திடீர் இழப்பை எதிர்பார்க்காத தாமோதரன் நிலை குழைந்து போனார்.

அப்போது அருணுக்கு பத்து வயது, தனுஷாவிற்க்கு ஏழு. மூன்று குழந்தைகளை எப்படி தாயில்லாமல் வளர்க்க போகிறோம் என்பதே அவருக்கு கண்ணை காட்டி காட்டில் விட்டது போல் இருக்க சற்று குழம்பித்தான் போனார். மனைவி இல்லாத வாழ்வு கசந்து போக அவர் சென்ற இடத்திற்கே தானும் போய் விட வேண்டும் என காதல் கொண்ட மனம் அடித்துக் கொண்டாலும் தானும் இல்லாது போனால் மூன்று பிஞ்சுகளின் நிலையை நினைக்கவே உயிரை வேரோடு பிடுங்குவது போல் வலிக்க அவர்களுக்காகவாது வாழ வேண்டும் என்று உறுதி பூண்டவராய் மாற்றல் வாங்கி கொண்டு சென்னை வந்து சேர்ந்தார்.

தாயில்லா பிள்ளைகளின் வளர்ப்பு சற்று கடினம் என்பதை நினைத்தவருக்கு நாங்கள் இருக்கிறோம் நீங்கள் கவலைப் பட வேண்டாம் என்பதாய் தோள் குடுத்தனர் அருணும், தனுவும். சிறு வயது முதலே பொறுப்போடு தன் தந்தையுடன் உதவி செய்ய அவரது பாரம் பாதி குறைந்தது.

அருண் தனு இருவரும் எதையும் தங்களுக்குள் ஒளித்துக் கொண்டதில்லை. அண்ணன் தங்கை போல் அல்லாமல் நண்பர்களாகவே பழகுவார்கள். தியாவை தங்கள் குழந்தையை போலவே பார்த்துக் கொண்டனர். எனவே தியாவிற்கு ஒன்றல்ல மூன்று தாயாகிப் போனது.

காலமும் உருண்டோட அருண் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் கார்டியலிக் ஸ்பெஷ்லிஸ்டாக பணியாற்றி வருகிறான். தனுஷா தனது மேலாண்மை படிப்பை முடித்துவிட்டு கடந்த ஐந்து மாதமாக ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் பைனான்சியல் அட்வைசராக பணிபுரிந்து வருகிறாள். இன்று தான் அவளது மேலாண்மை படிப்பிற்கான பட்டமளிப்பு விழா.தியா தனுஷா படித்த அதே கல்லூரியில் முதல் வருடம் மேலாண்மை படிப்பை படிக்கிறாள்.

இருவரும் செல்ல சண்டைகளும், கொஞ்சல்களுமாய் காலை உணவை முடித்துக் கொண்டு இன்று தனுஷாவின் பட்டமளிப்பு விழா இருப்பதால் கல்லூரி செல்வதற்காக தயாராக தங்கள் அறைக்கு சென்றார்கள்.

தனுஷா தயாராகி கீழே வர அதே நேரம் தியாவும் தயாராகி வந்தாள். அழகு தேவதையென இருந்த இருவரையும் கண்ட தாமோதரனுக்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது.

தனுஷா நல்ல மாநிறம், அளவான உயரம், மிதமான உடற்கட்டுடன் செய்து வைத்த சிலையை போல இருப்பாள். அவளுக்கெனவே தைக்கப்பட்டது போல் இருந்த அந்த அடர் சிவப்பு நிறத்தில் தங்க ஜரிகையால் செய்யபட்ட வேலைப்பாடுகள் கொண்ட சல்வாரில் சிவப்பு நிற பூவைப் போல புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு சற்றும் குறையாத அழகுடன் அடர் ஊதா நிறுத்தில் சிகப்பும் தங்க நிறமும் கலந்து வேலைப்பாடு சல்வாரில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் தியா.  

இருவரையும் அருகில் அழைத்து அணைத்துக் விடுவித்தவர் “பார்த்து பத்திரமாய் போயிட்டு வாங்க.. “ என்று விடை கொடுக்க அவர்களும் ஆயிரம் முறை தந்தைக்கு பத்திரம் சொல்லி விடை பெற்று கல்லூரிக்கு சென்றனர்.

@@@@@@

டைனிங் டேபிளில் அமர்ந்து பேப்பரை படித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவசங்கரிடம் அதை பிடிங்கி வைத்தவாறே அருகில் அமர்ந்தார் கயல்விழி.

“எப்போ பார்த்தாலும் நியூஸ் பேப்பர் தானா..? அப்படி அதுல என்ன தான் இருக்கோ? அதான் மணிக்கொரு தரம் நியூஸ் சேனல் பார்க்குறீங்களே..?” என்று சலித்துக் கொண்ட கயல்விழியிடம்

“அட போம்மா…! என்ன தான் செய்தி கேட்டாலும் அதை எழுத்துப்பூர்வமா படிக்குறதே ஒரு அலாதி தான்…”

“என்ன மண்ணோ முதல்ல சாப்பிடுங்க… அப்புறம் பேப்பர் படிக்கலாம்..!” என்றவாறு உணவை பரிமாறியவரிடம்,

“சஜன் இன்னும் ஜாகிங் முடிச்சுட்டு வரலையா..?” என்றார்.

கயல்விழி பதில் கூறும் முன் அங்கு வந்து சேர்ந்த சஜன் ஆறடி உயரமும், உடற்பயிற்சியால் வலுவூட்டப்பட்ட உடற்கட்டும் அவனுக்கே உரிய ஸ்டைலுமாய் உயர்தர மாடலைப் போல் நின்றிருந்தான்.

“என்ன என் பெயர் அடிபடுற மாதிரி இருக்கு..?” என்று தன் தாயின் கழுத்தை கட்டிக் கொண்டவாறு வினவ,

“இன்னைக்கு ஃபங்ஷனுக்கு போகணும்னு சொன்னியே..? அதான் நேரம் வேற ஆகிட்டே இருக்கு.. ஆளை கணோமேனு பார்த்தேன்..!”

“ஃபங்ஷன் டென் ஒ கிளாக் தான் டாட்… இப்போ நைன் தான் ஆகுது… ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல ப்ரெஷ் ஆயிட்டு வர்றேன்…” என்றவாறு தன் அறைக்கு சென்றான் சஜன்.

சஜன் ரெடியாகி வருவதற்குள் நாம் இவர்களை பற்றி பார்ப்போம்.

தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட சிவசங்கர் சென்னையில் எஸ்.கே கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனியை நடத்தி வருகிறார். இவரது காதல் மனைவி கயல்விழி வீட்டு தலைவி. இவர்களது ஒரே வாரிசான சஜன் பொறியியல் படிப்பையும் மேலாண்மை படிப்பையும் முடித்து விட்டு தந்தைக்கு உதவியாய்  இருந்து கொண்டு தனக்கென ஒரு அடையாளமாய் ரிதம் என்கிற இன்டீரியர் டெக்கரேஷன் கம்பெனியை நடத்தி வரும் இளம் தொழிலதிபர். அவனது யுக்திகளும்,புது வித டிசைன்களும் அவனுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து தந்திருந்தது.

வெள்ளை நிற சர்ட் அணிந்து அதற்கு மேல் கறுப்பு நிற மேல் கோர்ட்டும் கறுப்பில் வெள்ளை நிற கோடுகள் வரைந்த டையும், கண்களில் சன் கிளாசும் அணிந்தவன் தலைக்கு செட் ஜெல்லை தடவி ஹேர் ஸ்டைல் செய்து கொண்டவன் கைகளில் தனது ஐபோன் 6S ஐ சுழற்றியவாறு படிகளில் இறங்கியவன் நேராக டைனிங் டேபிளில் வந்தமர்ந்தான்.

காலை உணவை பரிமாறிவிட்டு அவன் உண்பதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார் கயல் விழி.

அதை கண்டவன் “மிசஸ். சிவசங்கர் எதுக்கு இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கீங்க..?”

“ஹீம் என் பையன் அழகை ரசிச்சுட்டு இருக்கேன்…”

“நோ நோ..! என் ஃவைப் மட்டும் தான் என்னை சைட் அடிக்கணும்… நீங்க மிஸ்டர். சிவாவை மட்டும் சைட் அடிங்க…” என தன் அம்மாவை வம்பிழுக்க

“நீ சொல்லி தான் என் புருஷனை சைட் அடிக்கணும்னு ஒண்ணும் இல்லை.. சரியாடா செல்லம்..!”

“அப்படி சொல்லு கயல்.” என்றவாறு மனைவிக்கு ஹை-பை குடுக்க

“இந்த ஒல்டிஸ் தொல்லை தாங்கலைடா சாமி” என்று சஜன் சலித்துக் கொள்ள

“உனக்கு பொறாமைடா… வேணும்னா சீக்கிரம் கல்யாணத்திற்கு ஓகே சொல்லு அப்புறம் நீயும் என் மருமகளும் சேர்ந்து டூயட் கூட பாடுங்க…” என்று சிவசங்கர் கூற,

சிறிது நேரம் அமைதியானவன் “ டாட், மாம் எனக்கு லேட் ஆயிடுச்சு… சோ ஈவினிங் பார்க்கலாம் பை…” என்று தனது ஆடி காரை கிளப்பிக் கொண்டு பறந்தான்.

பெசன்ட் நகரை கடந்து சென்ற போது சிக்னலுக்காக காரை நிறுத்தியவன் சற்று நேரம் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து யாரையோ தேடிக் கொண்டிருந்த நேரம் கிரீன் சிக்னல் விழ பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு பட்டமளிப்பு விழா நடக்கும் கல்லூரியை நோக்கி விரைந்தான்.

வருவாள் செனோரீட்டா.