இரவு -9

ஆர்யன் கதவை படார் என்று சாத்திய சத்தத்தில் திடுக்கிட்ட மயூரி “இப்படி இன்னும் ரெண்டு வாட்டி சாத்தினால் போதும், கதவு டாட்டா பாய் பாய் சொல்லிட்டு போயிடும், பாவம் மார்னிங்கே என்ன டென்ஷனோ அவருக்கு“ என்றுவிட்டு அவள் வீட்டிற்குச் சென்று படுத்து தூங்கிவிட்டாள்.

இங்கு ஆர்யன் “யாரை நம்புரதுன்னே தெரியல, இந்த வயசுல உடம்ப கெடுத்துக்கணுமா“ என்று முனங்கியபடி டைனிங் டேபிளில் அமர, மாணிக்கம் டீயுடன் டீ கேக்கையும் எடுத்து வந்து கொடுக்க, அந்த டீ மற்றும் கேக்கை பார்த்த ஆர்யன்

“என்னப்பா இப்போல்லாம் டெய்லி கேக் சாப்பிடுறீங்க போல“ என்று கேக்கை எடுத்து சாப்பிட்டான். ஆர்யன் சாப்பிட்டதை ஆர்வத்துடன் பார்த்த மாணிக்கம்

 “கேக் எப்படி இருக்குப்பா நல்லா இருக்கா” என்று கேட்க, அதற்கு ஆர்யன்

 “ம்ம்ம் நல்லா இருக்குப்பா, ஆமா, நான் கூட நேத்தே கேட்கணும்னு நினைச்சேன், இந்த டீ கேக் எங்கே வாங்குகிறீங்க? டேஸ்ட் சூப்பரா இருக்கு“ என்று ஆர்யன் சொன்னதைக் கேட்டு முகம் பிரகாசிக்க, மாணிக்கம்

 “இந்த கேக் நான் தான் செய்ஞ்ச ப்பா“ என்று மாணிக்கம் சொன்னதைக் கேட்டு ஆர்யனுக்கு புரை ஏற, இரும்பியபடி

“என்னது, நீங்க பண்ணதா “ என்று வாயைப் பிளக்க, அதற்கு மாணிக்கம்

“நேத்து பண்ணது நான் இல்லை, அது அந்த எதிர்த்த வீட்டு மயூரி பாப்பா பண்ணது. இப்போ சாப்பிடுறல, அதுதான் நான் பண்ணது. நல்லா இருக்குல்ல? இந்த மயூரி பாப்பா தான் சொல்லிக் கொடுத்துச்சி” என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் செல்ல, ஆர்யன்

 “என்னது, அந்த பொண்ணு பேரு மயூரியா” என்று ஏதோ யோசித்தவனாக

“அப்பா… அந்த மயூரி பொண்ணு என்ன வேலை பார்க்குறாங்க“ என்று கேட்க, அதற்கு அவர் “ஏதோ கம்பெனியில் கேம்க்கு வரையிர வேலையாம் ப்பா“ என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க. ஆர்யன் மாணிக்கம் சொன்னதை வைத்து அவன் வேலை பார்க்கும் இடத்தில் வேலை பார்க்கும் மயூரியும் இந்த மயூரியும் ஒன்று தான் என்று கண்டுகொண்டான்.

பின் ஆர்யன் மனதில் “ சாரி கூட கேட்காம மெயில் போடும் போதே தெரியும் இந்தப் பொண்ணு இப்படித்தான் இருக்கும்னு, சரி அது நமக்கு எதுக்கு ,அனா அந்த போண்ண பத்தி அப்பா கிட்ட எப்படி சொல்ல “ என்று யோசித்தவன் பின்

“ அப்பவே சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவாரு நாம ஏன் இதை சொல்லி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு “என்று எண்ணியவனாக வேலைக்குக் கிளம்பச் சென்றான்.

மதியம் போல் எழுந்த மயூரி பாத்ரூம் சென்று முகம் கழுவி வர காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது “ யாராக இருக்கும் “ என்று யோசித்தபடி கதவைத் திறக்க மாணிக்கம் தான் வந்திருந்தார் கைகளில் பாத்திரங்களுடன். அவரைப் பார்த்து மயூரி

“ என்ன அங்கிள் கையில இத்தனை இருக்கு “ என்று பேசிக்கொண்டே இவள் இரண்டு பாத்திரம் வாங்கிக்கொண்டு உள்ளே டைனிங் டேபிளில் வைத்தாள். மாணிக்கம் “ இன்னைக்கு சிக்கன் பிரியாணி பண்ணேன் அதான் உனக்குக் கொஞ்சம் தரலாம்னு எடுத்து வந்தேன் ம்மா “ அதைக் கேட்டு மகிழ்ந்த மயூரி மாணிக்கம் எடுத்து வந்த பாத்திரங்களைத் திறந்து பார்க்க பிரியாணி, கத்தரிக்காய் கிரேவி, தயிர் பச்சடி, சிக்கன் வறுவல் அதோடு நெய் சொட்டச் சொட்ட பிரெட் அல்வா என்று இருக்க இவை அனைத்தையும் ஒன்று ஒன்றாகத் திறந்து பார்த்தவள் சந்தோஷத்தில் “ தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே….” என்று பாட்டுப் பாட அதைக் கேட்டுச் சிரித்த மாணிக்கம்

“நன்றி சொன்னது போதும் நீ சாப்பிடும்மா, சூடா இருக்கு பாரு.” அதற்குத் தலையாட்டியபடி மயூரி, “இதோ வந்துட்டேன் அங்கிள்,” என்று கைகழுவி வந்து அனைத்தையும் ரசித்து ருசித்து உண்டு முடித்தாள்.

“என்னதான் விதவிதமா ஹோட்டலில் சாப்பிட்டாலும் வீட்டுச் சமையல் ருசி வருமா? சாப்பாடு சூப்பர் அங்கிள்! அதுவும் பிரட் அல்வா நாக்கில் வச்சதும் கரையுது. பின்னிட்டீங்க அங்கிள்!” என்று பாராட்டு மழையில் மாணிக்கத்தைக் குளிப்பாட்டியவள், “எனக்காக உணவு தந்த தெய்வத்துக்கு நான் ஏதாவது பதிலுக்கு பண்ணணுமே?” என்று யோசிக்க, அதற்கு மாணிக்கம்,

 “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்மா,” என்று மறுக்க, மயூரி அவள் கன்னம் தட்டி யோசித்தவள் தலையில் பல்ப் எரிய,

“அங்கிள், உங்களை நான் வரைஞ்சி தரட்டுமா?” என்று ஆர்வமாகக் கேட்க, அதற்கு மாணிக்கம் வெட்கப்பட்டவராக,

“வேண்டாம்மா,” என்று மறுக்க, மயூரி முகம் சோகத்திற்குச் செல்ல, அதைப் பார்த்த மாணிக்கம், “சரி, வரைந்து தாங்க. ஆனால் என்னால ரொம்ப நேரம் ஒரே இடத்தில் உட்கார முடியாதே?”

“அதுக்கா யோசிக்கிறிங்க?” என்று சிரித்த மயூரி அவள் போனை எடுத்து மாணிக்கத்தைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, “இது போதும். நான் உங்களை வரைந்து முடித்ததும் சொல்றேன்,” என்று போனை காட்ட, மாணிக்கம், “சரிம்மா, அப்போ நான் கிளம்புறேன்,” என்று பாத்திரம் எடுத்துச் செல்லப் போக, அதைத் தடுத்த மயூரி, “காலிப் பாத்திரம் தர மாட்டேன். நாளைக்கு எதவது போட்டு தரேன் ,” என்று மாணிக்கத்தை அனுப்பி வைத்தவள்.

பின் வீட்டு வேலை செய்துவிட்டு “இன்னைக்கு கனவு எதுவும் வரலயே “என்று யோசித்தபடி கிளம்ப அவள் வீட்டின் பெல் மீண்டும் அடிக்க கதவைத் திறந்தாள். மாணிக்கம் தான் கையில் டீ கேக் மற்றும் டீயுடன் நின்றார்.

 “நானா செஞ்சேன்மா. நீங்க பண்ண மாதிரி டேஸ்ட்டா இருக்கான்னு பாருங்க” என்று நீட்ட, அதை வாங்கி சோபாவில் அமர்ந்து முதலில் டீயைத் தனியாகக் குடித்த மயூரி, “டீ எப்பவும் போல பெர்ஃபெக்ட் அங்கிள்” என்று சொல்லிவிட்டு, பின் டீ கேக்கை எடுத்து டீயில் முக்கிச் சாப்பிட,

 “ம்ம்ம்… வேற லெவல் அங்கிள்! நீங்க ஒரு குயிக் லேர்னர் அங்கிள்!” எனப் பாராட்ட, அதற்கு அவர், “அப்படின்னாமா?” என்று புரியாமல் கேட்க, மயூரி தலையில் தட்டியபடி,

“அது நீங்க கற்பூரம் மாதிரி வேகமாகக் கத்துகிறிங்கன்னு சொன்னேன் அங்கிள்” என்று சிரிக்க, அதைக் கேட்டு மகிழ்ந்த மாணிக்கம், “என் பையன் கூட நல்லா இருக்குன்னு பாராட்டினான்மா” என்று முகம் பிரகாசிக்கப் பேசினார்.

அவர் முகத்தைப் பார்க்க ஏதோ உருவங்கள் கண் முன் தோன்றி, “போயிடு மயூரி போ… ஓடு இங்க இருந்து ஓடு…” என்று காதுக்குள் சத்தம் கேட்டு மயூரி, அவள் காது கண்களை இருக்க மூடிக்கொண்டாள், அதை பார்த்த மாணிக்கம் திடீரென்று மயூரி இப்படி காதுகளை மூடி ஏதோ போல நடந்துகொள்வதைப் பார்த்து பயந்து, “மயூ பாப்பா என்ன ஆச்சு?” என்று அவள் தோள் தொட்டு உலுக்கினார்.

மாணிக்கம் சத்தம் கேட்டு அவளை அவளே நிலைப்படுத்திக்கொண்டு மயூரி கண்களைத் திறக்க, மாணிக்கம் பதற்றமான முகத்துடன் மயூரியைப் பார்க்க, மயூரி “ஒன்னும் இல்லை அங்கிள், லைட்டா தலை சுத்திச்சி. அது ஒன்னும் ஆகாது ” என்று சமாளிக்க, அவள் சமாளிப்பதைப் புரிந்துகொண்ட மாணிக்கம், “உடம்பைப் பார்த்துக்கொம்மா” என்று சொல்லிவிட்டு, பதட்டம் குறையாமல் மயூரியைப் பார்க்க, மயூரி மாணிக்கத்தை சாதாரணமாக மாற்ற நினைத்து,

“அங்கிள், நாளைக்கு நைட் நீங்க எதுவும் பண்ணாதீங்க. நீங்க இன்னைக்கு எனக்கு ட்ரீட் வைச்ச மாதிரி நான் உங்களுக்கு டின்னர் ட்ரீட் வைக்கிறேன். ஓகேவா?” என்று சிரிக்க,

மாணிக்கம் “உனக்கு ஏன்மா சிரமம்? அதெல்லாம் வேண்டாம்மா”

 “சிரமம்லா இல்லை அங்கிள். டின்னர் தானே? நீங்கள் எதுவும் சொல்லாதீங்க. நாளைக்கு நான் சமைத்துத் தருவதைத்தான் நீங்கள் சாப்பிடணும் ” என்று சொன்ன மயூரி, பின் ஏதோ யோசித்தவளாக, “உங்களுக்கு என்ன பிடிக்கும் அங்கிள்?” என்று கேட்க, அதற்கு மாணிக்கம் சிரித்த முகமாக,

“நீங்க என்ன சமைத்தாலும் நான் சாப்பிடுவேன்மா”

அதை கேட்டு சிரித்த முகமாக மயூரி “நீங்க சாப்பிடுவிங்க, என்க்கு தெரியும். ஆனா உங்க பையன்?” என்று மாணிக்கத்தைப் பார்க்க, அவர் “அச்சோ, அவனை மறந்துட்டேனே” என்று தலை சொறிய, அவரைப் பார்த்துச் சிரித்த மயூரி,

“அது சரி, பையனையே மறந்துட்டீங்களா?” என்று சிரிக்க, அதற்கு அவர்

“அவனும் என்ன மாதிரிதான்மா, குறை சொல்லாமல் சாப்பிடுவான்” என்று பேச்சை மாற்ற, மயூரி “ஆமா அங்கிள், உங்களுக்குப் பையன் மட்டுமா தானா?”

“இல்லை ம்மா, பொண்ணு ஒருத்தி இருக்கா. அவளுக்குக் கல்யாணம் ஆகி பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு இருக்காங்க ம்மா. என் பையன் ஆர்யன் இருக்கானே, அவன் நண்பனைத்தான் கல்யாணம் பண்ணி வச்சோம். இப்போ நல்லா இருக்கா .“

 “ஓ…. அப்போ நீங்க தாத்தா ஆகிடீங்கள? சூப்பர் சூப்பர். ஆமா, உங்க பொண்ணு பேரு என்ன?“ “என் பொண்ணு பேரு அதிதி. என் பையன் பேரு ஆர்யன். பொண்ணு பேங்கில் வொர்க் பண்றா. பையன் இந்த கம்பெனி, பேரு ஆ… ஜெ.எம். கேமிங் கப்பேனி இருக்கல அங்கே தான் வேலை பார்க்கிறான்.“ கம்பெனி பேரைக் கேட்டு அதிர்ந்த மயூரி,

“என்ன கம்பெனி பேரு சொன்னீங்க அங்கிள்?“ என்று கேட்க அதற்கு அவர் “அதான்ம்மா, ஜெ.எம். அதுவும் கேம் செய்ற கம்பெனியாம். என்னவோ படிக்கிற விஷயம் விட கேம் தான் அதிகமா இருக்கு இந்த காலத்துல “ என்று சலித்துக்கொள்ள,

மயூரி மனதில் “அங்கிளோட பையன் எங்க கம்பெனியிலயா வேலை பார்க்கிறானா? ஆமா, அவன் பேரு என்ன சொன்னாங்க? ஆர்யன், ரைட்?“ என்று யோசித்தவள்,

“இந்த பேரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே“ என்று யோசிக்க, மாணிக்கம் “சரிம்மா, நான் கிளம்புறேன். உனக்கு வேற வேலைக்கு மணி ஆகப் போகுது“ என்று சென்றுவிட்டு கிளம்பினார். இங்கு மயூரி, ஆர்யன் பேரை எங்கு பார்த்தோம் என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ளாத குறையாக யோசித்துக்கொண்டு இருந்தாள்.

நிலா வானில் பிரகாசித்தாலும் இரவின் இருளை அதனால் முழுவதும் விரட்ட முடியாமல் போக, அந்த இருளின் கருப்பு நிறத்திற்கு இனையாக அந்த கருப்பு நிற மாருதி கார் ஒன்று நெடுஞ்சாலையில் நிதானமாகச் சென்று கொண்டு இருந்தது. அந்தக் காருக்குள் ஒரு பெண் முகத்தில் கருப்பு மாஸ்க் ஒன்று அணிந்து கொண்டு, அதே கருப்பு நிறத்தில் சட்டை மற்றும் பாவாடை அணிந்து காரை மெதுவாக ஓட்டியபடி சாலை ஓரம் நோட்டம் விட்டுக் கொண்டு போக, அப்போது நெடுஞ்சாலை ஓரமாக ஒரு திருநங்கை கையில் பேக்குடன் அங்கு போகும் வண்டிகளுக்குக் கைகாட்டி சிக்னல் கொடுத்துக் கொண்டு நிற்க, இந்த கார் அந்தப் திருநங்கை பெண்ணிடம் சென்று நின்றது.

 காரைப் பார்த்த அந்தத் திருநங்கை வேகமாக கார் அருகே வந்து “ஆயிரம் தந்தா போதும்” என்று உள்ளே எட்டிப் பார்க்க, அங்கே உயரமாக ஓட்டுநர் இருக்கையில் ஒரு பெண் சுருள் சுருளான முடியை விரித்து விட்டபடி கண்ணில் மை தீட்டிப் பொட்டு வைத்து அமர்ந்திருந்தாள்.

ஆனை எதிர்பார்த்த அந்தத் திருநங்கை பெண் தயங்கி சாரி சொல்லப் போகும் முன், உள் இருந்த பெண் “எனக்கு ஓகே, வண்டியில ஏறுங்க” என்று மிக மெல்லிய குரலில் பேசினாள். அதைக் கேட்டு ஒரு நிமிடம் தயங்கி நின்ற அந்தத் திருநங்கை பின் “சரி” என்று ஏறி அமர்ந்து கொண்டாள்.