ஆர்யன் கட்டிலில் அவன் கண்கள் மீது இடது கை வைத்தபடி தூங்காமல் விழித்துத்தான் இருந்தான். மணி நள்ளிரவைத் தொட்டு விட்டும், இவனுக்கு உறக்கம் என்பது எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எண்ணம் முழுவதும் அவன் அப்பா கண்கலங்கி இவனைப் பார்த்தபடியே இருக்க, அதை நினைத்தபடி இருந்தவன் ஒரு மணி அளவில் முடிவு ஒன்றை எடுத்தவனாக. “நம்மைப் பத்தி யோசிக்கிறதை விட்டுவிட்டு அப்பா கிட்ட பழையபடி பேச ஆரம்பிக்கணும்” என்று முடிவெடுத்து உறங்கச் சென்றான். எவ்வளவு நேரம் கழித்து உறங்கினாலும் காலை ஐந்து மணிக்குச் சரியாக எழுந்துவிட்டான். எழுந்தவன் முகம் கழுவி வந்து சூரிய நமஸ்காரம் மற்றும் மூச்சுப் பயிற்சி என்று ஒரு மணி நேரம் யோகா செய்துவிட்டு, எப்போதும் செய்யும் உடற்பயிற்சி மட்டும் செய்யாமல் வேலைக்குக் கிளம்பி வெளியே வந்தான்.
காலையிலேயே ஆபீசுக்குக் கிளம்பி வந்த தன் மகனைப் பார்த்த மாணிக்கம் அவன் கையில் காபி கப்பை கொடுத்துவிட்டு “என்ன தம்பி இவ்வளவு சீக்கிரமா போறீங்க வேலைக்கு?“ என்று கேட்க அதற்கு ஆர்யன்
“அதுப்பா வேலை கொஞ்சம் அதிகம். அதான் சீக்கிரம் போறேன் நான் அங்கேயே சாப்பிட்டுக்கிறேன் ப்பா” என்று இயல்பாகப் பேச, அதில் சந்தோஷமான மாணிக்கம்
“சரிப்பா பார்த்துப் போயிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தார். ஆபீஸ் சென்ற ஆர்யன் வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்று எங்கும் நகராமல் வேலை செய்துகொண்டிருந்தான். ஆர்யன் நினைத்திருந்தால் அவன் டீம் மெம்பர்களை மட்டும் வேலை செய்யச் சொல்லிவிட்டு இவன் மேற்பார்வை மட்டும் செய்திருக்கலாம். ஆனால் அவன் அனைவரின் வேலைப் பளுவையும் குறைக்க வேண்டும் என்று எண்ணி அனைத்தையும் அவன் தலையில் இழுத்துப் போட்டுச் செய்ய, அதுவே இவன் டீம் மெம்பர்ஸ் இதுவரை இவன் உருவம் பார்த்துப் பயந்திருந்த பயத்தை விட்டுப் போக வைத்தது. அதன் விளைவாக அவர்களும் அவனுக்கு உதவ முன்வந்தனர்.
இங்கு மயூரி காலை தூங்கிக் கொண்டிருக்க, அவள் கனவில், லலிதா மற்றும் மயூரி ஒன்றாக நின்றபடி சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து கொண்டு இருக்க, மயூரி லலிதாவின் தோள் மீது சாய்ந்து நின்றிருந்தாள். இந்த முறை மயூரி நன்றாக வளர்ந்து பெரிய பெண் போல இருந்தாள். லலிதா மயூரியை அணைத்தபடி “ஒன்னும் ஆகாது மயூரி” என்று சொல்ல, அதற்கு மயூரி கண்கலங்கத் தலையசைத்தாள். அப்போது அங்கு வந்த இன்னொரு பெண்
“லலிதா… உன் சாக்லேட் கஸ்டமர் வந்துட்டார்” என்று சந்தோஷமாக பெங்காலியில் கத்திக் கொண்டு வர, லலிதா மயூரி இருவரும் ஒன்றாகத் திரும்பிப் பார்க்க, மயூரி கனவில் இருந்து எழுந்து அமர்ந்தாள். கட்டிலில் அமர்ந்த மயூரி டாக்டர் கொடுத்த மாத்திரை ஒன்றை போட்டுக்கொண்டு அவள் வரையும் அறைக்குச் சென்றாள்.
அங்கே அவள் அம்மாவின் கண் ஓவியம் அருகே லலிதாவின் ஓவியமும் வரையப்பட்டிருக்க, அங்கே சென்று பெயின்ட் பிரஷ் ஒன்றை எடுத்து அதை கருப்பு பெயிண்டில் முக்கி லலிதாவின் இடது கையில் பார்வதி என்று வரைந்து அதைத் தள்ளி நின்று சரி பார்த்தபடி
“உங்க பேர் லலிதாவா இல்ல லட்சுமியா” என்று யோசித்தவள், பின்
“நீங்க இன்னும் அங்கதான் இருக்கிறீங்களா? என்னை மட்டும் தப்பிக்க வச்சிட்டு நீங்க மாட்டிக்கிட்டிங்கல, இன்னும் கொஞ்ச நாள் எனக்காக வெயிட் பண்ணுங்க. உங்களைத் தேடச் சொல்லி நான் ஜெய் கிட்ட பேசி ஆளனுப்பிருக்டன். அவங்க உங்களை சீக்கிரமா கண்டுபிடிச்சிருவாங்க லட்சும்மா” என்று விட்டு அருகில் இருந்த அவள் அம்மாவின் கண்களைப் பார்த்து
“உங்களை எப்போ கண்டுபிடிக்கப் போறேனோ இல்லனா கண்டுபிடிக்க முடியாமலே போய்டுமோ எனக்கு பயமாக இருக்கு ம்மா” என்று அந்தக் காகிதங்களுடன் பேசிவிட்டு வெளியே வந்தாள்.
பின் மயூரி மாணிக்கம் சொன்ன அளவில் சமைத்துப் பார்க்க அது சரியாக இவள் உண்ணும் அளவு இருக்க சந்தோஷமான மயூரி மாணிக்கத்திற்காக டீ கேக் செய்தாள். அதைச் செய்து முடித்து மாணிக்கத்திற்குக் கொடுத்துவிட்டு சிறிது ஜெய்-க்கும் எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றாள்.
அங்கு ஆபீஸில் இவள் சென்றதும் முதலில் இவள் பார்த்தது ஆர்யனின் மெயிலில்தான் மயூரி ஆர்யன் மன்னிப்பு கேட்டு மெயில் அனுப்பி இருப்பான் என்று இவள் நினைத்து மெயிலைத் திறக்க அதிலோ மாறாக ஆர்யன் கோடிங் வேலை முடித்துவிட்டதாக மெயில் அனுப்பி இருந்தான்.
அதைப் பார்த்த மயூரி மெச்சுகரமாக “பரவாயில்லையே வொர்க் சொன்ன டைமிங்கில முடிச்சிட்டாங்க“ என்று பார்க்க அந்த மெயிலின் கீழே தனியாக நோட் என்று போட்டு ஸ்டோரி டீம் செய்த தவறினால்தான் அவன் அந்த மெயில் போட்டதாகவும் அதனுடன் அதுதானே ப்ரோசீஜர் என்றும் ஏதாவது இவன் தவறு செய்திருந்தால் அதற்கு அவனை மட்டும் தண்டிக்குமாறு மெயில் போட்டு இருக்க “ அதை படித்த மயூரி அதற்கு “ஓகே“ என்று மொட்டையாகப் பதில் ரிப்ளை செய்திருந்தாள்.
அந்த பதில் மெயிலை மறுநாள் பார்த்த ஆர்யனுக்கு இன்னும் மயூரி மேல் கோபம்தான் வந்தது. இதன் மத்தியில் மாணிக்கம் மற்றும் மயூரி சமையல் நண்பர்களாகவே மாறிவிட்டான, இப்படியே இரண்டு நாள் செல்ல புது கேமிங் ப்ராஜெக்ட் அதிகமாக வர மயூரிக்கு ஒரே நேரத்தில் இரண்டு கேமிங் ப்ராஜெக்ட்டை ஜெய் கொடுத்துவிட மயூரி ஜெய்யைப் பார்க்கும்போதெல்லாம் அடித்து கிள்ளி வைத்து அவள் கோபத்தை தணித்தால். மயூரிக்கு ஒன்றும் இப்படி ஒரே நேரத்தில் இரண்டு ப்ராஜெக்ட் செய்வது புதிது இல்லை அதனால் அவள் அதிக கஷ்டப்படாமல் வேலையை நன்றாகத்தான் பார்த்து வந்தாள்.
அன்று மயூரி எப்போதும் போல முட்டை பப்ஸ் செய்து கொண்டு இருந்தவள் திடீரென்று நினைவு வந்தவளாக “ நெக்ஸ்ட் மன்த் கிறிஸ்மஸ்க்கு நம்ம ஏன் ப்ளம் கேக் பண்ண கூடாது “ என்று யோசித்தவள் ஜெய்க்கு போன் போட அவன் போனை எடுத்ததும்
“ ஜெய் எனக்கு ரம் வேணும் ஆல் விட்டு வாங்கி வை நான் ஆபிஸ்ல வந்து வாங்குகிறேன் “ என்று சொல்ல அதைக்கேட்டு ஷாக் ஆன ஜெய்
“ஏ லூசு என்ன சொல்ற, எப்பவும் என்ன குடிக்காதன்னு சொல்லுவ அன இப்போ நீ குடிக்க ஆரம்பிச்சிட்டியா “ அதை கேட்ட மயூரி
“ ச்சி எரும புத்தி எங்க போகுது பாரு நான் கேக் செய்ய கேட்டேன் “ அதை கேட்டு ஆஸ்வாசம் ஆன ஜெய்
“ ஓ…. கேக்குக்கா அப்போ ஓகே நான் வாங்கி வைக்கிறேன் “ அதை கேட்ட மருநொடி மயூரி
“ சரி ஜெய் அப்போ நேர்ல பாப்போம் “ என்று வைத்து விட்டாள். ஜெய் சொன்னது போல அவன் ரம் வாங்கி வைத்து இருக்க அதை வாங்கி கொண்டு வீட்டுக்கு காலை டயர்டாக வந்து இறங்கிய மயூரி ஜெய் கொடுத்த ரம் பேப்பர் பேகில் இருக்க அதை ஒரு கையில் பிடித்தபடி மறு கையில் பேக் எடுத்தபடி அரை தூக்கத்தில் தள்ளாடியபடி வர அப்போது அந்த பேப்பர் பேக் ஈரமாக இருக்க அது கிழிந்து போய்விட்டது.
அதை பார்த்த மயூரி தலையில் அடித்தபடி “ ரெஸ்ட்ரூம்ல தண்ணில வச்சிட்டேன் போலயே “ என்று முனங்கியவள். அந்த கிழிந்த பேப்பர் பேகை தூக்கி போட்டு விட்டு கையில் ரம்மை அனைவரும் பார்க்க தூக்கி கொண்டு லிஃப்டில் ஏற அங்கே ஆர்யனும் அப்போது தான் ஜாக்கிங் முடித்து லிஃப்டில் ஏறினான். லிஃப்டில் ஏறியவன் மயூரியை ரம்மோடு பார்த்தவன் ஒரு நிமிடம் உறைந்து நின்றுவிட்டான்.
பின் மயூரி “ உள்ள வர்றீங்களா இல்லையா “ என்று சத்தம் போட்ட பின்னேயே நினைவு வந்தவனாக லிஃப்டில் ஏறினான். லிஃப்டில் மயூரி தலையை சாய்த்து நின்று கொண்டு இருக்க அவள் நின்ற கோலத்தை பார்த்த ஆர்யன் “ இவ்வளவு காலைல குடிச்சிட்டு வந்துருக்கா இந்த பொண்ணு, அப்போ அன்னைக்கும் போத தெளியாம தான் இந்த போண்ணு அப்படி நின்னுச்சோ, இது தெரியாம இந்த அப்பா இந்த பொண்ண போய் நல்ல பொண்ணுன்னு சொல்றாங்க “ என்று மனதில் நொந்தவனாக வாயில் எதையோ முணுமுணுத்தவாறு லிஃப்ட் நின்றதும் அவன் வீட்டுக்குள்ளே சென்று கதவை வேகமாக சத்தம் வரும்படி சாற்றினான்.