ஆறு வயது மயூரியை லலிதா தூக்கி மடியில் வைத்தபடி அவளிடம் இருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து கொடுக்க அதை கண்கள் மின்ன வாங்கிய மயூரி அதை அழகாகப் பிரித்து சாக்லேட்டில் பாதி இவள் சாப்பிட்டு மீதம் பாதியை லலிதாவிடம் நீட்ட அதை ஆசையுடன் வாங்கி லலிதா வாயில் போட்டுக்கொண்டாள்.
அதைப் பார்த்து சிறு சிரிப்புடன் மயூரி லலிதாவை விட்டு கீழே இறங்கி அந்த சாக்லேட் கவரை தரையில் வைத்து சிறு சிறு மடிப்பாக மடித்து அதை ஒரு அழகான பட்டாம்பூச்சி போலச் செய்து லலிதாவிடம் நீட்டி “லட்சுமி அம்மா, இது உங்களுக்கு என் கிஃப்ட்” என்று நீட்ட அதை வாங்கிப் பார்த்த லலிதா “இது உனக்கு யார் சொல்லித் தந்தது மயூரி?” என்று கேட்க, அதற்கு மயூரி “இது எங்க அம்மா சொல்லி கொடுத்தாங்க, எனக்கு பட்டாம்பூச்சினா ரொம்ப பிடிக்கும்னு ” என்று மயூரி பேசிக்கொண்டிருக்கும் போது காட்சிகள் மாற, ஒரு பெண் கை முழுவதும் கண்ணாடி வளையல் போட்டபடி அந்தப் பட்டாம்பூச்சியை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிச் செய்துகொண்டிருக்க, அந்தப் பட்டாம்பூச்சியை கண் இமைக்காமல் அருகில் இருந்து பார்த்த மயூரி “இத ஏன் அம்மா எனக்குச் சொல்லித் தர, நீயே எப்பவும் எனக்கு செஞ்சு தாயேன்?” அதற்கு மயூவின் அன்னை
“உனக்கு தம்பி இல்ல தங்கச்சி வந்துட்டா அவுங்களுக்கு நீ இதை பண்ணி தரலாம்ல விளையாட?” அதைக் கேட்டு தன் அன்னையின் பெரிய வயிற்றைப் பார்த்து அதன் மீது காது வைத்து
“பாப்பா, அக்கா சீக்கிரமா பட்டாம்பூச்சி கத்துக்கிட்டு உங்களுக்கு நான் செஞ்சி தரேன்” என்று பேசிக்கொண்டே தன் அன்னையின் முகத்தைப் பார்க்க, அதில் அந்தக் கண்ணைத் தவிர வேறு எதுவும் சரியாகத் தெரியா வில்லை, மயூரி அவரைப் கண்கள் கசக்கி மீண்டும் பார்க்க முயலும் போது அவள் தூக்கத்தில் இருந்து விழித்து அமர்ந்தாள்.
எழுந்து அமர்ந்தவள் திரும்பி அந்த பட்டாம்பூச்சி இருந்த பவுளைப் பார்த்து சிரித்தவள் “எனக்கு தம்பி இருக்காங்களா இல்ல தங்கச்சி இருக்காங்கல?” என்று யோசிக்கும்போது மீண்டும் தலை வலிக்க மாத்திரை எடுத்துப் போட்டுக்கொண்டவள்.
“அவங்க பார்க்க எப்படி இருப்பாங்க? என்ன மாதிரி இருப்பாங்களா? இப்போ படிச்சு ஒரு வேலைக்குப் போட்டு இருப்பாங்களோ? ஒரு வேலை நம்ம கம்பெனியிலேயே வேலை பார்த்தா என்ன அடையாளம் தெரிஞ்சிருக்கும்மா?” என்று பல யோசனைகளுடன் குளித்துவிட்டு கிச்சன் வர அங்கு பழம் காய் எல்லாம் காலி ஆகி இருக்க அதைப் பார்த்தவள் முதலில் ஆர்டர் செய்யலாம் என்று நினைத்தவள் பின் “ஒரு வாக் மாதிரி போயிட்டு வரலாம்” என்று சொல்லியபடி பேக் ஒன்று எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
தன் வீட்டைப் பூட்டியவள் லிஃப்டில் ஏற இவள் பின்னே மாணிக்கமும் ஏறினார். மாணிக்கம் மயூரியைப் பார்த்து சிரிக்க மயூரியும் பதிலுக்குச் சிரித்தாள். மயூரியிடம் மாணிக்கம் “என்னம்மா இன்னைக்கு லீவ்வா?” என்று கேட்க அதற்கு மயூரியும் “ஆமா அங்கிள்” என்று சொன்னதோடு நிறுத்தி கொண்டாள்.
பின் மாணிக்கமும் எதுவும் பேசவில்லை. லிஃப்ட் நின்றதும் ஒரு தலை அசைப்புடன் மயூரி வேகமாக முன்னோக்கிச் சென்று விட மாணிக்கம் பொறுமையாக நடந்து வந்தார். அவர்கள் அப்பார்ட்மெண்ட் அருகிலேயே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்க அதன் உள் முதலில் மயூரி நுழைய அவள் பின்னால் மாணிக்கமும் நுழைந்தார். உள்ளே வந்தவர் அவருக்குத் தேவையான பொருட்களை எடுத்தபடி காய்கறி மற்றும் பழங்கள் இடம் நோக்கி நகர அங்குதான் மயூரி நின்று தக்காளி எடுத்துக்கொண்டு இருந்தாள்.
அவளைப் பார்த்த மாணிக்கம் “இந்தப் பெண்ணும் கடைக்குத்தான் வந்திருக்கும் போல “என்று எண்ணியபடி இவரும் தக்காளி அருகே செல்ல அப்போது எதார்த்தமாக மயூரி எடுக்கும் தக்காளியைப் பார்த்தார் அவள் காயாக இருக்கும் தக்காளியை எடுத்துப் போட்டுக்கொண்டு இருக்க அதைப் பார்த்த மாணிக்கம் “ம்மா காயா எடுத்துட்டு இருக்க பாரும்மா “என்று அவர் சொல்ல திடீரென்று கேட்ட சத்தத்தில் திடுக்கிட்ட மயூரி யார் என்று பார்க்க அங்கு மாணிக்கம் நிற்பதைப் பார்த்து நிதானமானவள்
“ என்ன காய் அங்கிள் “ என்று புரியாமல் கேட்க அதற்கு அவர் “ சமையல் ருசியா வர நல்ல பழமான தக்காளி தான் வாங்கனும் “ என்று அவளிடம் இருந்த தக்காளியைப் போட்டு விட்டு இவர் பழமான தக்காளியாக எடுத்துப் போட அதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டாள் மயூரி.
பின் மாணிக்கம் அவருக்கும் எடுத்துக்கொண்டு மற்ற காய்களும் எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்று கிளாஸ் எடுக்க மயூரி செம்மையாக அதை உள்வாங்கி கேட்டுக்கொண்டாள். மாணிக்கம், மயூரி கூடையில் இருந்த நூடுல்ஸ், பாஸ்டா, ரெடிமேட் சப்பாத்தி ஜாம் போன்ற பொருட்களைப் பார்த்து விட்டு “இதெல்லாம் நிறைய சாப்பிடக் கூடாதுல்ல ம்மா “என்று அக்கறையுடன் கேட்க அதற்கு மயூரி
“ நல்லது இல்லதான் ஆன என் ஒருத்திக்கு இந்த ஃபுட் தான் வேஸ்ட் ஆகாமா வச்சிக்கலாம் ரைஸ் குழம்புன்னு சமைச்சுட்டா எல்லாம் நிறைய பண்ணிறன்னா வேஸ்ட் ஆகிடுது அங்கிள் அதான் இதான் சாப்பிடுறேன் “
அதைக் கேட்ட மாணிக்கம்” நான் சொல்லித் தர்றேன்ம்மா ஒருத்தருக்கு மட்டும் சமைக்கிற அளவு “ அதற்கு மயூரி
“ இல்லை பரவால்ல அங்கிள் உங்களுக்கு ஏன் கஷ்டம் “ என்று அவள் சொல்ல அதற்கு மாணிக்கம் “ கஷ்டம் லாம் இல்ல ம்மா “ என்று இருவரும் பேசியபடி ஒன்றாகப் பொருட்களை வாங்கிக்கொண்டு அப்பார்ட்மெண்ட்டிற்கு திரும்ப மாணிக்கம் டீ குடிக்க வரும்மாறு அழைக்க முதலில் தயங்கி நின்ற மயூரி பின் அவர் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்து மாணிக்கம் வீட்டிற்குச் சென்றாள்.
வீடு மிகவும் அழகாக இருந்தது. அதைச் சுற்றிப் பார்த்தபடி இருக்க மாணிக்கம் டீயுடன் வந்துவிட்டார். டீயை எடுத்துக்குடித்த மயூரி “வாவ் அங்கிள் டீ சூப்பரா இருக்கு எப்படி போட்டீங்க“ என்று கண்கள் விரியக் கேட்க, அதற்கு மாணிக்கம் “இஞ்சி ஏலக்காய் கொஞ்சம் தட்டிப் போட்ட டீ டேஸ்டா வரப்போகுது“
“ஓ… இஞ்சி ஏலக்காய் போட்டீங்களா“ என்று மீண்டும் அதன் வாசனையை உள்இழுத்துக்கொண்டு டீயைக் குடித்தவள்
“நீங்க சூப்பரா சமைக்கிறீங்க அங்கிள்“ என்று பாராட்ட “எல்லாம் என் மனைவி சொல்லித் தந்ததுதான்மா“
“உங்க வைஃப் சொல்லித் தந்து நீங்க கத்துக்கிட்டீங்களா“
“அது என் மனைவிக்கு என் பொண்ணு அதித்தி பிறந்த அப்பறம் அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடும்மா. அதான் நான் கூட மாட இருந்து உதவி செஞ்சிட்டு வேலைக்கு போவேன். அப்போ அவ சமைக்கிறதப் பார்த்து கத்துக்கிட்டதுதான்“
“ஓ… சூப்பர் அங்கிள் நீங்க. உங்க வைஃப்னா அவ்வளவு பிடிக்குமா உங்களுக்க்“
“ஆமாம்மா எனக்கு யாரும் இல்ல சொத்தும் அவ்வளவா இல்லன்னு தெரிஞ்சும் என்ன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டவம்மா. அவ என்ன நம்பி வந்த அவளை நான் நல்லா பாத்துக்கனும்ல ம்மா“ என்று தன் மனைவியின் படத்தை பார்த்து கலங்கிய விழியுடனும் உதட்டில் அரும்பிய சிரிப்புடன் இருந்தவரை பார்த்து மயூரி அமைதியாகி விட அதைக் கவனித்த மாணிக்கம் சூழலை சரிப்படுத்தும் விதமாக
“என் பையன் கூட என்ன மாதிரியே என் மனைவி கிட்ட இருந்து சமைக்க கத்துகிட்டான்மா. அவன் என்னை விட சூப்பரா சமைப்பான்மா.“
“என்னது உங்க பையன் சமைப்பாரா?“ “ஆமாம்மா அவன் செஞ்சா ருசியா இருக்கும் என் மனைவி கையில சாப்பிட்ட மாதிரி இருக்கும். அன அவன் இப்பல்லாம் சமைக்கிறது இல்லை ம்மா. வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கான்“ என்று மணியைப் பார்த்தவர் மயூரியிடம் “உனக்கு இந்த நூடுல்ஸ் மாதிரிலாம் நல்லா சமைக்க வருமா ம்மா?“ “ம்ம்ம்.. நல்லா சமைப்பேன் அங்கிள். ஏன் கேட்குறீங்க?“
“அது என் பையனுக்கு இந்த பாஸ்தான்னா பிடிக்கும். ஆனா எனக்கு அதை சமைக்கத் தெரியாது. அதான் கொஞ்சம் சொல்லித் தர்றியாம்மா“ என்று தயங்கித் தயங்கி கேட்க மயூரி
“இதை ஏன் அங்கிள் தயங்கித் தயங்கி கேட்குறீங்க? வாங்க நான் சொல்லித் தரேன்“ என்று மாணிக்கத்திற்கு பாஸ்தா சமைக்கச் சொல்லிக் கொடுத்து அதைச் செய்யவும் வைத்து இருவரும் அதை உண்டு முடித்தனர். பின் மயூரி “உங்க பையன் வந்தா இதே மாதிரி வேற பாஸ்தா பண்ணி இந்த கிரேவியோட மிக்ஸ் பண்ணி கொடுத்துருங்க“ என்று சொல்லி அவள் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
ஆர்யன் வீடு வரவே மணி பத்துக்கு மேல் ஆகிவிட மாணிக்கம் அதுவரை அவனுக்காக விழித்து தான் இருந்தார். ஆர்யன் வந்ததும் அவன் சோர்ந்து இருந்த முகம் பார்த்து “வேலை அதிகமாப்பா?” என்று கேட்க அதற்கு ஆர்யன் ஆம் என்பது போல தலை அசைத்து விட்டு சோபாவில் தலை சாய்த்து அமர்ந்து கொள்ள மாணிக்கம் வேக வேகமாக பாஸ்தா செய்து சூடாக ஆர்யனிடம் நீட்ட அதை பார்த்து அதிர்ந்த ஆர்யன் தட்டை வாங்கி உண்டு பார்க்க டேஸ்ட் மிகவும் அருமையாகவே இருந்தது.
அதில் ஷாக் ஆகி “அப்பா நீங்களா செஞ்சீங்க?” என்று அனைத்தையும் மறந்து பேசிவிட அதில் மாணிக்கம் கண்கலங்கி நின்றார். அவர் அப்படி நின்றதும் தான் ஆர்யனுக்கு அவன் பேசியது புரியவரை அதுவும் இல்லாமல் அவன் பேசுவதற்கு தன் அப்பா இப்படி ஏங்கியிருப்பார் என்றும் இப்போது தான் தெரிந்தது.
அதில் இவன் மனதில் சுருக்கென்று வலிக்க தன் அப்பாவை பார்த்து தொண்டை வலிப்பது போல் பிம்பம் எழுந்தாலும் அதை தள்ளி வைத்து விட்டு ஏழு வருடம் கழித்து “நீங்களாப்பா சமைச்சீங்க?” என்று மீண்டும் கேட்க அதற்கு மாணிக்கம் கண்களை துடைத்த படி “ஆமாம்ப்பா இந்த எதிர்வீட்டு பொண்ணு சொல்லி தந்தா” என்று மகிழ்ந்த முகத்துடன் சொன்னார். அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சி ஆர்யனையும் தொற்றிக் கொள்ள அவனும் மெலிதாக சிரித்த படி உண்டு முடித்தான்.