இரவு 59

பள்ளி சீருடை கசங்கியிருக்க, கையில் சாப்பாடு பையை தூக்கியபடி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தாள் ப்ரியா. மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ப்ரியா பள்ளி முடிந்தும் இவளை அழைக்க யாரும் வராமல் போக இவளே தனியே நடந்து வந்துகொண்டிருந்தாள். அந்த வயது குழந்தைகளுக்கான சுட்டித்தனம் சுத்தமாக இல்லை. முகம் சோர்ந்து போய் இருந்தது. சுற்றிலும் இவளை தாண்டி நடந்து செல்லும் இவள் வயது நிறைந்த குழந்தைகளை கண்களில் ஏக்கம் பொங்க பார்த்துக்கொண்டே நடந்து சென்றாள். வீட்டுக்கு செல்ல விருப்பம் இல்லாமல் ஏனோதானோவென்று நடந்துகொண்டிருந்தவளின் கால்கள் பூங்காவின் முன் நின்றது. உள்ளே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதை எட்டி பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா . அப்போது உள்ளே விளையாடிக்கொண்டிருந்த இவள் பள்ளி தோழி ஒருத்தி

 “ ப்ரியா…..” என்று கையாட்டி  அழைத்து,  “ வாடி… விளையாடலாம் “ என்று கத்தி கூப்பிட, அதில் முகத்தில் சிரிப்பு மலர வேகமாக முன்னோக்கி நடந்தவளின் காதில் “  ஸ்கூல் முடிஞ்சி நேரா வீட்டுக்கு வரத் தெரியாதா டி….ப்ரியா…. “ என்று தன் தாய் கத்தும் சத்தம் நினைவுவர தலையை மறுப்பாக அசைத்தபடி, வீட்டுக்கு ஓடி சென்றுவிட்டாள்.

அங்கே ஓடத்தொடங்கிய ப்ரியா அவள் வீடு முன் தான் வந்து நின்றாள். தன் வீட்டை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள், பொறுமையாக உள்ளே சென்று ஷூக்களை கழற்றிவைத்துவிட்டு பேகை அவள் அறையில் வைத்து, டிபன் பாக்ஸை சிங்க்கில் போட்டுவிட்டு முகம் கழுவி, உடை மாற்றி, என்று சமத்தாக நின்றாள் ப்ரியா . இவை அனைத்தும் அவள் அம்மா சொல்லிக்கொடுத்த பாடம் தான். ஆனால், சொல்லித்தந்த முறை.

ஒரு நாள் தெரியாமல் சேறு ஒட்டிய ஹூவுடன் உள்ளே வர அந்த கறை தரையில் படிந்து அழுக்காக இருந்தது அதை பார்த்த சின்ன பொண்ணு கம்பியால் அவள் காலில் சூடு வைத்துவிட்டாள். ஒரு வாரம் காலணி அணியாமல் அந்த காயத்தில் காய்ச்சல் வந்து மிக கஷ்டப்பட்டாள் பிரியா அதேபோல் பள்ளி தொடங்கி உணவு எடுத்து செல்ல ஆரம்பித்த சமயத்தில் ஒரு நாள் உணவு பெட்டியை எடுத்து வெளியில் வைக்காமல் மறந்துவிட்டதால் மறுநாள்  உணவு எதுவும் கொடுக்காமல் அதே உணவு பெட்டியை கொடுத்து அனுப்பியிருந்தார். மதியம் பசியோடு பாக்ஸை திறந்த பிரியா உள்ளே நேற்று மூடி வைத்த கொஞ்சம் உணவு நாற்றமடிக்க அப்படியே மூடி வைத்தவள் அன்று உண்ணவேயில்லை.

அதிலிருந்து தான் பிரியா அவளுக்கு தேவையான அனைத்தையும் அவளே செய்துகொள்ள தொடங்கினாள். ப்ரியா வேறு உடை அணிந்து ஹாலில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா அருகே சென்று நின்றாள். சோபாவில் அவள் உடல் அமர முடியாமல் நகர்ந்து அசைந்து அமர்ந்திருந்த சின்னப் பொண்ணு பிரியாவை பார்த்ததும் “வந்துட்டாயாடி..? பரவாள நேரத்துக்கு வந்துட்டா.. உள்ளே அங்கே காசு வச்சிருக்கேன் பார். போய் சூடா பஞ்சு வாங்கி வா…” என்று சொல்லவும், வேகமாக பிரியா சென்றுவிட, சின்னப் பொண்ணு எழுந்திருக்க முடியாமல் எழுந்து, உடலை லேசாக அசைத்து அசைத்து, பாத்ரூம் சென்று வந்தாள். திருமணம் அன்று சரியான உடல் எடையுடன் அழகாக இருந்த சின்னப் பொண்ணு வேலை எதுவும் செய்யாமல் நாள் முழுக்க கண்டதை கடையில் இருந்து வாங்கி சாப்பிட அதன் விளைவு உடல் எடை தங்கம் விலை உயர்வை விட வேகமாக அதிகரித்து இப்போது நூறு கிலோ தாண்டி சென்றிருந்தாள்.

இதை அனைத்தையும் தினகரன் கவனித்தாலும் எதையும் அவளிடம் சொல்லிக்கொள்ள மாட்டான். அவனுக்கு தன் மகள் ப்ரியா, அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் அதுவும் இந்த ராட்சசிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சுற்றி வருவான். தினகரன் அவன் இருக்கும் போது ப்ரியாவை எவ்வளவு  பார்த்து கொண்டாலும் அவன் வேலைக்கு செல்லும் நேரம் அடித்து விடுவாள் சின்னப் பொண்ணு.

இப்படியே நாட்கள் செல்லச் செல்ல பிரியா மற்ற குழந்தைகள் போல் சந்தோஷமாக இல்லாமல் பயத்திலேயே வளர்ந்தாள். அதை நினைத்தே தினகரனும் வருத்ததுடன் தான் சுற்றி வருவான் எங்கே தன் வாழ்க்கை போல் மகளின் வாழ்க்கையும் ஆகி விட்டு என்ற பயம்  தான்.

பஜ்ஜி வாங்கி வந்த ப்ரியா சமையலறை சென்று ஒரு தட்டில் பஜ்ஜியை வைத்து சின்னப் பொண்ணிடம் நீட்டினாள். அதை கையில் வாங்கிய சின்னப் பொண்ணு ஒரு பஜ்ஜியை எடுத்து சாப்பிட்டு பார்த்தவள் அதில் உப்பு சிறிது அதிகமாக இருக்க அதற்கு குழந்தை என்ன செய்வாள் என்று கூட யோசிக்காமல். அந்த தட்டோடு குழந்தை ப்ரியா  முகத்திலேயே வீசிவிட தட்டு சென்று அவள் நெற்றியில் பட்டு ரத்தம் வர தொடங்கியது.

ப்ரியா “ அப்பா…” என்று கத்தியபடி கீழே விழுந்து அழத் தொடங்க சின்னப் பொண்ணு “ ப்ச்… சரியான தலைவலி “ என்று எரிச்சலுடன் எழுந்து அவள் அறைக்குச் சென்று துணியில் தண்ணீர் நனைத்து, அவள் தலையில் வைத்து அழுத்தியவாறு “ உங்க அப்பா வரவரை இத அப்படியே பிடிச்சிக்கோ “ என்று வெட்டுப்பட்ட இடத்தில் துணியை வைத்து அழுத்த, ப்ரியா “ ம்ம்ம்… அம்மா…”என்று தேம்பியபடி அங்கேயே அமர்ந்துவிட்டாள். ஒரு மணி நேரம் சென்றபின் தினகரன் வீட்டிற்கு வந்தான். வந்தவன் கண்டது என்னவென்றால்  நேற்றுயில் துணியை வைத்தபடி சோபாவில் அரைமயக்கத்தில் இருந்த அவன் மகளை தான் .

அவள் நிலையை பார்த்து ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவரிடம் காட்டி , அவரிடம் திட்டு வாங்கி மூன்று தையல் போட்டு விட்டு வீடு திரும்பினர். ப்ரியா ஊசி போட்ட சோர்வில் தினகரன் தோளிலேயே தூங்கிவிட அவளை தூக்கியபடி உள்ளே வந்து பார்த்தான். வீடு இருட்டாக இருந்தது சின்னப் பொண்ணு நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளை ஒரு நிமிடம் வெறித்து பார்த்த தினகரன் மனமெங்கும் ஓடியது இதுவே “ இவளா… ஒரு அம்மாவா…”என்பது தான்.

பின் தன் மகளோடு அவன் அறையில் சென்று வீட்டில் இருந்த மாவில் மகளுக்கு தோசை ஊற்றி பால் கொடுத்து விட்டு இவன் வெறு வயிற்றோடு படுத்துக்கொண்டான். மறுநாள் ப்ரியாவுக்கு உடல் லேசாக சூட, தினகரன் “ இன்னைக்கு ஸ்கூலுக்கு  லீவ் போடுறியா ப்ரியா “ என்று குழந்தை முகம் பார்க்க, உடனே பயந்து எழுந்து அமர்ந்த ப்ரியா

“ இல்லைப்பா எனக்கு ஒன்னும் இல்ல நான் லீவ் போடல “ என்று பயந்து மறுக்க மனம் நொந்து போனான் தினகரன்.  பின் அவனே பள்ளியில் ப்ரியாவை விட்டுவிட்டு வேலைக்கு சென்றவனுக்கு வேலை ஓடவில்லை காலையில் சோர்வாக இருந்த ப்ரியாவின் முகமே கண் முன் வந்து போக, அரை நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு நேராக வீட்டிற்கு சென்றான் தினகரன்.

வீட்டில் காலையில் வந்து சமைத்துவிட்டு வீட்டைச் சுத்தம் செய்யும் பெண் அன்று சீக்கிரமாக கிளம்பிவிட சின்னப் பொண்ணு மட்டும் தனியாக கையில் சிப்ஸ் சாப்பிட்ட படி தொலைக்காட்சியில் தொடர் நாடகம் பார்த்து கொண்டு இருந்தாள். அப்போது திடீரென்று உடல் வியர்க்க தொடங்க நெஞ்சுப் பகுதி வலிப்பது போல் இருந்தது. நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்து கொண்டே போக, சின்னப் பொண்ணு பயந்து போனாள்..

பயந்த சின்னப் பொண்ணு எழுந்து வீட்டில் இருக்கும் போனை எடுக்க போக, அப்போது கதவை திறந்து கொண்டு தினகரன் உள்ளே நுழைந்தான். உள்ளே வந்த தன் கணவனை பார்த்து சின்னப் பொண்ணு “ ஏ….ஏ…ஏங்க, நெஞ்….. நெஞ்சு வலிக்கிது “ என்று பேச முடியாமல் பேசினாள்.

முதலில் சின்ன பெண்ணை அந்த நிலையில் பார்த்த தினகரன் அதிர்ந்து தான் போனான். பின் சுதாரித்துக்கொண்டு ஒரு நிமிடம் கண்கள் மூடி யோசித்தவன் பின் ஒரு முடிவு எடுத்தவனாக வீட்டில் இருந்த போனின் வயரை அறுத்துப்போட்டுவிட்டு சின்ன பொண்ணுவின் போனையும் எடுத்துக்கொண்டு வீட்டிக்கு பூட்டுப்பொட்டு விட்டு  பள்ளியை நோக்கி சென்றுவிட்டான்.

அங்கே பள்ளியில் ப்ரியா சோர்வாக அமர்ந்திருந்தவள் தன் தந்தையை பார்த்ததும் ஓடிச்சென்று அவர் கழுத்தை கட்டிக்கொள்ள தினகரன் பள்ளியில் சொல்லிவிட்டு பிரியாவைவை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றுவிட்டு பின் படம் பார்க்க அழைத்துச்சென்றவன் வீடு திரும்ப இரவு ஆகியிருந்தது.

பைக்கில் ப்ரியாவுடன் வந்து இறங்கவும் அவர்கள் வீடு இருட்டாக இருந்தது. எப்போதும் போல அம்மா சீக்கிரம் தூங்கிவிட்டாள் போல என்று எண்ணியபடி ப்ரியா கிழே இறங்கி நின்றாள். அப்போது தினகரன் கதவை திறந்து உள்ளே செல்ல அங்கே ஹாலில் தரையில் சின்ன பெண்ணு இறந்து கிடந்தாள். சின்ன பெண்ணை பார்த்தபடி தினகரன் மனதில் “ இன்னும் எத்தனை பாவம் வேணும்னாலும் நான் செய்றேன் கடவுளே, என் பெண்ணுக்கு இதுக்கு அப்புறம் ஆவது நிம்மதி கொடு “ என்று தினகரன் வேண்டியதுபோல அதன் பின்தான் ப்ரியா மற்ற குழந்தைகள் போல் சிரித்து வளரத் தொடங்கினாள்.

இவை அனைத்தையும் நினைத்தபடி அங்கேயே அமர்ந்திருந்த தினகரன் கண்களில் ஈரம் கசிய அந்த பள்ளியை வெறித்து பார்த்தபடி “ தேவி… எப்படி இருக்க தேவி…” என்று மெல்லிய குரலில் வாய்விட்டு சொல்லிக்கொண்டார்.

இரவு நேரம் வானத்தை வெறித்துப் படி இருந்த தினகரனுக்கு தேவியின் நினைவாகவே இருக்க

 “ப்ரியா ம்மா… ப்ரியா ம்மா…” என்று பேச முடியாமல் அவளை கத்தி அழைக்க அப்பாவின் குரல் கேட்டு அங்கே வேகமாக வந்த ப்ரியா

 “ டாக்டர் இவ்வளவு சத்தமா பேச கூடாதுன்னு சொல்லிருக்காங்க தானே அப்பா “ என்று அப்பாவை அதட்டிய  படி அவர் முன் வந்து நிற்க,  தினகரன் “ப்ரியா ம்மா….கொஞ்சம் மாணிக்கத்துக்கு போன் போட்டு தேவி எப்படி இருக்கான்னு கேட்டு சொல்றியா ம்மா “ என்று அவள் முகம் பார்க்க ப்ரியா சலிப்புடன் தலை அசைத்த படு போனை எடுத்து மாணிக்கத்திற்கு டயல் செய்தாள்.

ப்ரியாவிற்கு லட்சுமி மீது தினகரன் வைத்திருந்த காதல் தெரியும். இவர்கள் கதையை தினகரன் லட்சுமி நினைவு வரும்போதெல்லாம் அவளிடம் பேசியது பழகியது என்று அனைத்தையும் கதை போல சொல்லித்தான் வளர்த்தான். லட்சுமிக்கு பிடித்தது அவர் எப்படி இருப்பார் என்று அனைத்தையும் ரசித்துச் சொல்லிச் சொல்லி ப்ரியாவிற்கும் அவள் இது வரை பார்த்திராத லட்சுமியை மிகவும் பிடிக்கும். ஏன் சில சமயங்களில் அவரே நமக்கு அம்மாவாக வந்திருக்கக் கூடாதா என்று எண்ணும் அளவுக்கு மிக பிடிக்கும் லட்சுமியை.

தினகரன் கேட்டு கொண்ட படி மாணிக்கம் நம்பருக்கு போன் போட்டதும் அவருக்கு பதிலாக சரளா தான் போனை எடுத்தார். போனை எடுத்தவர் சொன்னதை கேட்டு அதிர்ந்தாள் ப்ரியா அவள் தந்தையை பாவமாக பார்க்க. ப்ரியாவின் அதிர்ந்த முகத்தை பார்த்த தினகரனுக்கு எதோ தவறாக நடந்திருப்பது மட்டும் தெரியவர பயத்தோடு தனது மகள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்.