தூக்கத்தில் இருந்து கண்ணில் கண்ணீர் வழிய எழுந்து அமர்ந்தாள் மயூரி. தலை வின் வின் என்று வலிக்க தலையைப் பிடித்தபடி தலைவலித்தால் டாக்டர் போடச் சொன்ன மாத்திரையைத் தேடி எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தாள். சிறிது நேரம் தலையில் கை வைத்தபடியே கண்களை மூடி அமர்ந்திருந்தவள் தலைவலி குறையவும் தான் தலையில் இருந்து கைகளை எடுத்து சாய்ந்து அமர்ந்தபடி அவள் கனவில் கண்டதை யோசித்துப் பார்த்தாள்.
“யார் அந்த லலிதா, எவ்வளவு யோசிச்சாலும் ஏன் அவுங்க முகம் நியாபகம் வரல ” என்று அந்த கலவையே நினைத்தபடி இருந்தாள். அப்போது அவள் லலிதாவிடம் தன் பெயரைச் சொன்னது நினைவுவர, “என் பேரு மயிலா, மயிலுன்னு பேர் இருக்குமா?” என்று யோசித்தவள், பின் அந்த பாமா என்ற பெண் பேசிய மொழி என்ன மொழி, இவளுக்கு எப்படி அந்த மொழி புரிந்தது என்று மூளையைக் கசக்கி, பின் இவள் ஆக்சிடென்ட் ஆகி கிடைந்த இடம் எங்கே என்று யோசிக்க, கல்கத்தா என்று நினைவு வந்ததும் அந்தப் பெண் பேசிய மொழி பெங்காலியா இருக்குமோ என்று எண்ணிய படி போனை எடுத்து யூடியூபில் பெங்காலி பாடல் ஒன்றை போட்டுவிட, அந்தப் பாடலின் சில வரிகளைத் தவிர மற்ற அனைத்தும் புரிய அதிர்ந்த மயூரி, “எனக்கு பெங்காலி புரியுது!” என்று வாய்விட்டுச் சொன்னபடி மீண்டும் கனவில் வந்த லலிதாவின் முகத்தை நினைவுக்குக் கொண்டுவர முயன்றாள்.
ஆனால் மீண்டும் தலைவலிப்பது போல் இருக்க, “இதுக்குமேல யோசிக்காத மயூ” என்று திரும்பி நேரத்தைப் பார்த்தாள் மணி மூன்றுதான் ஆகியிருந்தது. “அச்சோ, இன்னைக்கும் சீக்கிரமா முழிச்சிட்டேனா?” என்று புலம்ப, மயூரியின் வயிறு சத்தம் போட்டு அதன் இருப்பைக் காட்ட, வயிற்றைத் தடவிய மயூ, “பசிக்குதே…” என்று எழுந்து முதலில் பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவள் பின் நேராக கிச்சனுக்குத்தான் சென்றாள்.
கிச்சனில் பிரிட்ஜில் இருந்து ஆப்பிள் ஒன்றை எடுத்து அதை கழுவிவிட்டு அப்படியே கடித்து சாப்பிட்டபடி என்ன சமைக்கலாம் என்று யோசித்தபடி சிங்க்கைப் பார்க்க அங்கு காலை மாணிக்கம் பால் தந்த செம்பு இருக்க அதை பார்த்துவிட்டு “ இந்த செம்பை அங்கிள் கிட்ட கொடுக்கணும் ஆனா காலி செம்பை எப்படி தர? ஏதாவது அதுல போட்டு தரலாமா? என்ன போடலாம்?” என்று தீவிரமாக ஆப்பிளை கடித்து சாப்பிட்டபடி யோசிக்க அப்போதுதான் பருப்பு பாயசம் நினைவுக்கு வந்தது. உடனே அதை செய்ய எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு செய்யத் தொடங்கினாள். பருப்பு பாயசம் செய்யவேண்டும் என்று எப்போதிலிருந்தோ ஆசைதான் மயூரிக்கு. ஆனால் அவள் ஒருத்திக்கு மட்டும் எப்படி செய்ய? எங்கே அளவு அதிகமாகப் போட்டு வீணாகி விடுமோ என்றே பயந்து செய்யாமல் இருந்தாள். அதற்கு இன்றுதான் நேரம் வந்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் பாசிப்பருப்பை வேக வைத்து அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து ஏலக்காயைத் தட்டி சேர்த்து அது வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி வறுத்த முந்திரி திராட்சை என்று கடைசியாக அதையும் சேர்த்து வீடே மணக்க இறக்கி வைத்தாள். அதை பார்த்தவுடனேயே இவளுக்குப் பசி அதிகமாக அப்போதுதான் இவள் உண்ண மதிய உணவு எதுவும் செய்யவில்லை என்று நினைவு வர தலையில் தட்டியபடி “ சரி இன்னைக்கு மதிய சாப்பாடு ஆர்டர் பண்ணிக்கலாம் “ என்று போனை எடுத்து பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு செம்பில் அந்தப் பாயசத்தை ஊற்றி மாணிக்கத்துக்கு எடுத்துச் சென்றாள்.
இங்கு மாணிக்கம் வீட்டில் அனைத்துப் பொருட்களையும் அடுக்கி முடித்த பின் வேலை செய்த அனைவரையும் சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார். பின் அவரும் அவள் மகள் அதிதியும் மற்றும் அவள் கணவன் கிருபாவும் என்று மூவரும் உண்டு முடித்து பாத்திரம் அனைத்தையும் சுத்தம் செய்து அதையும் அனுப்பி வைத்துவிட்டு மாணிக்கம் சோபாவில் அமர்ந்தார். அவருடன் அதிதியும் அமர மாணிக்கம் “ கிருபா தம்பி எங்கேம்மா?” என்று கேட்க அதற்கு அவள் “ பசங்கள ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரப் போயிருக்காருப்பா.”
“இதுக்கு தான் சொன்னேன் இன்னைக்கு ஒரு நாள் பசங்களை லீவு போட வைன்னு இப்போ பாரு தம்பிக்கு தான் அலைச்சல்.“ என்று அதித்தியை கடிந்து கொள்ள “அப்பா அந்த ரெண்டு வாழுங்க இங்க இருந்திருந்தா இப்படி வீட்டு வேலை சீக்கிரம் முடிஞ்சி இப்படி உக்காந்துட்டு இருந்திருக்க மாட்டோம். நம்மள வேலை பார்க்க விடாம ஏதாவது சேட்டை பண்ணிட்டே இருந்திருப்பாங்க அவங்க ஸ்கூலுக்கு போனது தான் நல்லது.“ என்று சொல்லி அவள் போனை தேட மாணிக்கம் “ரூம்ல இருக்கான்னு பாருமா“ என்றபடி அவர் ஹாலில் தேட அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு மாணிக்கம் கதவை திறக்க மயூரி தான் நின்று கொண்டு இருந்தாள். அவளை பார்த்ததும் மாணிக்கம் “சொல்லும்மா மயூரி“ என்று அதே சிரிப்புடன் கேட்க மயூரி பாயசத்தை நீட்டியபடி “மார்னிங் பால் சூப்பர இருந்திச்சி அங்கிள், இந்தாங்க செம்பு“ என்று கொடுத்து விட்டு திரும்ப அப்போது தான் அவள் ஆர்டர் செய்த பிரியாணியும் சரியாக வர அதை வாங்கியபடி வீட்டுக்குள் சென்று விட்டாள்.
கையில் இருந்த பாயசத்தை பார்த்தபடி மாணிக்கம் உள்ளே வர அப்போது தான் அதிதியும் போனை கண்டுபிடித்தவளாக மாணிக்கம் கையில் இருந்த செம்பை பார்த்துவிட்டு “யார் ப்பா அது“ என்று வர, மாணிக்கம் “எதிர் வீட்டு பொண்ணும்மா மார்னிங் பால் கொடுத்த செம்ப காலியா எப்படி தரன்னு யோசிச்சி பாயசம் கொடுத்துருக்கா“ என்று காட்ட, அதித்தி “பரவாயில்லையே ப்பா எதிர் வீட்டுல உங்கள மாதிரி ஒரு பொண்ணு இருக்கு“ என்று சிரித்தபடி பாயசத்தை வாங்கி அதை டம்ளர்களில் ஊற்றி இருவரும் குடிக்க பாயசம் அவ்வளவு ருசியாக இருந்தது. அதை குடித்தபடி மாணிக்கம் “எதிர் வீட்டு பொண்ணு தனியாதான் இருக்கு நமக்காகதான் இந்த பாயாசம் கூட பண்ணிருக்கும் போல.“ அதற்கு பாயசத்தை குடித்தபடி அதித்தி “அது எப்படி சொல்றீங்க ப்பா? நமக்காக தான் போட்டுருப்பாங்கன்னு சொல்றிங்க ”
“அது அந்தப் பொண்ணு பாயசம் தரும்போதுதான் ஹோட்டல்ல இருந்து ஏதோ பார்சல் வந்துச்சு. அதை வச்சுதான் சொல்றேன். அதுவும் இல்லாம நைட் வேலை பார்க்குது அந்தப் பொண்ணு. இப்பதான் முழிச்சு செஞ்சிருக்கும் போல.” அதை கேட்ட அதித்தி “பரவாயில்லை, நல்ல பெண்ணா தான் இருக்கும் போல.” என்று பேசியபடி இருவரும் பாயசம் சாப்பிட்டனர்.
இங்கு ஆபிசில் ஆர்யன் அவன் டீம் வேலை பார்த்துக் கொண்டிருந்த கேமை ஒருமுறை மீண்டும் சரிபார்த்துக் கொண்டிருக்க, அதில் அந்தக் கேம் கேரக்டருக்கும் அதை வடிவமைத்த டீம் செய்த கேரக்டர் உருவத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்க, அதை பற்றி அவன் டீம் மெம்பர்களிடம் கேட்டான், அதற்கு அவர்கள் “அனிமேஷன் டீம்லதான் இப்படி கேரக்டர் பண்ணிக் கொடுத்தாங்க சார்.”
“அனிமேஷன் டீம் பண்ணா அதை செக் பண்ண மாட்டீங்களா?” என்று கடிந்துவிட்டு அனிமேஷன் டீமிற்கு கேரக்டரை மாற்றச் சொல்லி மெயில் அனுப்பிவிட்டான். அந்த மெயிலைப் பார்த்த அவன் டீம் மெம்பரில் ஒருவனான விவேக் “போச்சு போ சார், மேடம் பத்தி தெரியாம மெயில் அனுப்பிட்டாங்க. என்ன ஆகப் போகுதோ?” என்று புலம்ப, அதற்கு மற்றொருவனும் “பேசாம நீ போய்ச் சொல்லேன் மேடம் பத்தி சார் கிட்ட கோஞ்சம் அப்போவாவது மெயில்ல கேன்சல் பண்றாரா பார்ப்போம்.” என்று விவேக்கை அனுப்பி வைக்க, விவேக்கும் தயங்கித் தயங்கி ஆர்யனிடம் சென்று “சார்…” என்று அழைத்ததும் ஆர்யன் திரும்பிப் பார்த்த வேகத்தில் பயந்து விவேக் “நத்திங் சார்” என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டான்.
அவன் ஓடி வந்ததைப் பார்த்து அவன் அருகே அமர்ந்திருந்தவன் “என்னடா இப்படி அவரைப் பார்த்து பயப்படுற?” அதற்கு விவேக் “பயப்படாமல் வேற என்ன பண்ண? நான் போய் சார்னு கூப்பிட்டதுக்கே அவர் பார்த்த பார்வை இருக்கே, அவரைப் பார்த்தாலே நடுங்குதுடா” என்று பேசியபடி ஆர்யனைத் தான் இருவரும் பார்த்தனர்.
ஆர்யன் வயது 30, பார்க்க நல்ல உயரமாக ஆர்ம்ஸ் வைத்து பாடிகார்ட் போல இருப்பான். கண்ணில் கண்ணாடி, முகத்தில் மீசை தாடி மட்டும் இல்லாமல் அதோடு கடுமையும் எப்போதும் சேர்ந்திருக்கும். ஆபிஸில் இவனிடம் பலர் பேசவே பயப்படுவார்கள். ஆனால் அதை பற்றி எல்லாம் ஆர்யன் எப்போதும் கவலைப்பட மாட்டான் . இன்றும் இவர்கள் பேசுவதை கண்டு கொள்ளாமல் ஆர்யன் மெயில் போட்டுவிட்டு வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிட்டான். இங்கு மயூரி பிரியாணி சாப்பிட்டுவிட்டு சின்க்கில் இருந்த பாத்திரத்தை விளக்கி வைத்துவிட்டு துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு வீட்டைப் பெருக்கி என்று அவள் வேலையை அவளே முடித்து பின் குளிக்கச் சென்றாள். குளித்து வெளியே வந்தவள் ஃபிரிட்ஜில் வைத்த பருப்பு பாயசத்தை எடுத்துவிட்டு எப்போதும் போல பால்கனிக்குச் சென்று அமர்ந்துவிட்டாள். எப்போதும் போல சூரியன் அஸ்தமிப்பதைப் பார்க்க அதை பார்த்தும் போது எப்போதும் போல இதயத்தில் ஏற்படும் படபடப்பு இன்றும் தொற்றியது. அதை நீண்ட மூச்சு இழுத்து விட்டு அதை ஒதுக்கி வைத்து விட்டு சூரியனைப் பார்த்தபடி எப்போதும் கேட்கும் கேள்வியைக் கேட்டுக்கொண்டாள். “ஏன் நான் மட்டும் இப்படி இருக்க? என் அம்மா எப்படி இருப்பாங்க? என் அப்பா பேரு என்னவா இருக்கும்? நான் எப்படி கல்கத்தா போனேன்?” என்று எண்ணியபடி சிறிது நேரம் இருந்தவள் பின் அனைத்தையும் ஒதுக்கி வைத்தவளாக எழுந்து கண்ணாடி முன் சென்று நின்றாள்.
மயூரி வயது 26 அவ்வளவுதான். அவளுக்கே அவளைப் பற்றித் தெரியும். மற்ற எதுவும் அவள் நினைவில் இப்போது இல்லை. இதை நினைத்தபடி அவள் வின்பத்தை வருடி, அவள் கனவில் வரும் அவள் அம்மாவின் கண்களை நினைவுக்குக் கொண்டு வந்து, அதை அவள் கண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, “அப்பா மாதிரியாமா என் கண்ணு இருக்கும்?“ என்று கேட்டபடி அவன் முகத்தைப் பார்த்தாள். வட்ட முகத்தில் நெற்றியில் சிறு தழும்பு. ஒல்லியும் இல்லாமல் பருமனும் இல்லாமல் அளவான உடல். இனிப்பு அதிகமாக சாப்பிடுவதால் வந்த சிறு தொப்பை என்று அழகாக இருந்தாள். எப்போது அவள் அம்மா அப்பா நினைவு வந்தாலும் இப்படித்தான் கண்ணாடி முன் நின்று அவள் உருவத்தில் அவள் அன்னை தந்தையின் நிழலை தேடித் தேடித் தோற்று உடைந்து போவாள். இன்றும் அதையே செய்து உடைந்த மனதோடு ஆபிஸுக்குச் செல்ல. அங்கு வாசலிலேயே ஜெய் மயூரிக்காகக் காத்துக்கொண்டு இருந்தான்.